அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா? அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா?

 நேயன்

ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர், அம்பேத்கர் இந்திய கலாச்சார ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர்.

இது அந்தப் பித்தலாட்டப் பேர்வழியின் நான்காவது கண்டுபிடிப்பு (சிண்டுமுடிப்பு)

முதலில் இவர் இந்தியக் கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவாரா?

இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்: இந்தியாவை இனவழியாக, மொழிவழியாகப் பிரிப்பதை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர் அம்பேத்கர். ஆன்மிகக் கலாச்சார அடிப்படையில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் என்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு பொய்ச் செய்தியை _ புரட்டுச் செய்தியை இம்மோசடிப் பேர்வழி கூறியுள்ளார்.

ஆனால், உண்மையில் அம்பேத்கர் கூறியது என்ன?

“நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால் நாம் பெரிய மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதியினராகப் பிரிந்துபோன மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன. ஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. நாம் உண்மையில் ஒரு தேசியத்தை விரும்பினால் இவை அனைத்தையும் வென்றாக வேண்டும். (டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல், பாகம்_13, பக்கம்_127)

இந்து இராஷ்டிரம் என்று ஒன்று அமைந்தால் அது இந்த நாட்டின் மிகப் பெரிய சோகமாக அமையும் என்கிறார். இந்துமதம் --_ விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கு -_ பெரும் இடராகத்தான் இருக்கும்; கேடாகத்தானிருக்கும் என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவிற்கென்று ஒரு பொதுவான கலாச்சாரமே இல்லாத நிலையில், இந்துக் கலாச்சாரத்தை அம்பேத்கர் ஆழமாக நேசித்தார் என்பது அசல் பித்தலாட்டம் அல்லவா?

இந்தியாவில் தமிழருக்கு ஒரு பண்பாடு, ஆரியருக்கு ஒரு பண்பாடு, சீக்கியருக்கு ஒரு பண்பாடு, மராட்டியருக்கு, குஜராத்தியருக்கு, வங்காளிக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சாரம். இஸ்லாமியருக்கு ஒரு கலாச்சாரம், கிறிஸ்துவர்களுக்கு ஒரு கலாச்சாரம், சமணர்களுக்கு வேறு கலாச்சாரம், பவுத்தர்களுக்கு மாறுபட்ட கலாச்சாரம்.

உண்மை நிலை இப்படியிருக்க, இந்திய கலாச்சார ஒற்றுமையில் அம்பேத்கர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பது அயோக்கியத்தனமா? இல்லையா? மேலே சொன்னதுபோல பல கலாச்சாரம் இருக்கையில் இந்துக் கலாச்சாரம் என்பது எது?

இந்துக் கலாச்சாரத்தை அவர் ஏற்றுக் கொண்டிருந்தால், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் ஆண்களையும், பெண்களையும் ஒன்றுகூட்டி புத்த மதத்திற்கு எப்படி மாறியிருப்பார்? -_ மாற்றியிருப்பார்? பொய்ப் பிரச்சாரமே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அடிப்படை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?

இந்த மதமாற்றத்தில் இணைந்த 3 இலட்சம் பேரும் பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்பட்டு வந்தவர்கள் அல்லர்; இந்துமதக் கேட்டை அறிந்ததால் வந்தவர்கள்.

ஆனால், அன்றைக்கு இந்துத்துவாவாதிகளும், காஞ்சி சங்கராச்சாரியும் இந்து மதத்தை அழிக்க அந்நிய நாட்டார் ரூபாய் 9 கோடி செலவிட்டதாக வதந்தி பரப்பி அம்பேத்கரைக் கேவலப்படுத்தினர். இதை அண்ணா அவர்கள் 21.10.1956 ‘திராவிட நாடு’ ஏட்டில் விளக்கியுள்ளார்.

இந்துமதக் கேட்டைச் சகிக்க முடியாமல் ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, அநியாயத்தைப் பொறுக்க முடியாமல், இழிவு நீக்கிக் கொள்ள அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து பிரிந்து புத்த மதத்தை ஏற்றார்.

இதே காரணத்திற்காகத்தான் பெரியார் திராவிட நாடு கேட்டார். கடைசியில் தமிழ்நாடு தமிழருக்கு வேண்டும் என்று கேட்டார்.

ஆக, அம்பேத்கர் நோக்கமும், பெரியார் நோக்கமும் ஒன்றுதானே? இதில் என்ன வேறுபாடு?

மதமாற்றத்தைத் தீர்வாக அம்பேத்கர் எண்ணினார்; தனிநாடு தீர்வாக பெரியார் எண்ணினார். ஆனால், இருவரும் வெறுத்தது இந்து மதக் கொடுமையை, இழிவை, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தைத்தானே! கொள்கையில் ஒன்றாய் இருந்து பாதையில் வேறு. இதில் என்ன முரண்பாடு உள்ளது?

எல்லாவற்றையும்விட ஒரு முதன்மையான கருத்தை இங்கு நாம் அறிந்தோம் என்றால், இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எப்படிப்பட்ட திரிபு பேர்வழி, திசைதிருப்பும் பேர்வழி, அயோக்கிய சிகாமணி என்பதைத் தெளிவாய் விளங்கிக் கொள்ளலாம்.

அது என்ன முதன்மையான கருத்து?

அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறுகிறாரே... உண்மை என்ன தெரியுமா?

பொதுவான இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும், வரலாற்று ரீதியாக ஆரிய பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என்று ஒவ்வொன்றும் தனக்கென தனிப் பண்பாடுகளைக் கொண்டிருந்தன என்கிறார் அம்பேத்கர்.

(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு_3, பக்கம்_267)

இந்தியப் பண்பாடு என்று ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்று அம்பேத்கரே ஆணித்தரமாக அறிவித்துவிட்ட பின் அவர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாக நேசித்தார் என்பது அயோக்கியத்தனமா? _ இல்லையா? சிந்தித்துப் பாருங்கள்!

தந்தை பெரியார் மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார். அம்பேத்கர் ஆதரிக்கவில்லை என்று இந்த ஆர்.எஸ்.எஸ். பேர்வழி கூறும் கூற்று மிகவும் தவறானது.

1953ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பேத்கர்,

“இந்த மண்ணில் பூர்விகக் குடிகளின் (மண்ணின் மக்களின்) கருத்துகளை மதிக்கும் வகையில் மாநில அரசமைப்பு இருக்க வேண்டும். மொழி உணர்வைவிட ஜாதி உணர்வு உயர்ஜாதியினரிடம் அதிகம் இருப்பதால், மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும்’’ என்று ஆந்திர மாநிலச் சிக்கல் பற்றிப் பேசுகையில் கூறினார்.

ஆக, அம்பேத்கர் இந்திய கலாச்சாரத்தை ஆழமாய் நேசித்தார் என்பதும் பொய்; மொழிவாரி மாநிலத்தை எதிர்த்தார் என்பதும் பொய். இந்தப் பொய்க் கூற்றின் அடிப்படையில் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் முரண்பாடு இருந்தது என்பதும் மோசடி என்று தெளிவாய் விளங்கும்!

ஆக, இருவரும் மொழிவாரி மாநிலம் வேண்டும் என்றனர். பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் முழக்கம் வைத்தார். பின்னர் அதைக் கைவிட்டு எல்லா மக்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை என்றார். இதில் என்ன தேச விரோதம் உள்ளது? எல்லாம் மக்கள் நலனுக்காகத்தானே!

- உண்மை இதழ், 16-31.8.19

திங்கள், 2 டிசம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (32): அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

நேயன்

உங்கள் மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும் இந்தியத் தலைவராக அம்பேத்கர் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள்.                    

(குடிஅரசு 10.2.1935)

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லோரும் நாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும் நாங்கள் இந்துக்கள் அல்லவென்றும் தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.          

(குடிஅரசு 13.1.1945)

தோழர் அம்பேத்கர் இம் மாகாண தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் இன்று போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக விளங்குகிறார். அரசியல் எதிரி எது சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாது, தம் கருமமே கண்ணாகச் செய்கையில் இறங்கிவிட்ட அவரைக் கண்டு, காங்கிரஸ் மட்டுமல்ல... பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமென்ன?

(விடுதலை 27.7.1946)

ஜின்னாவும் டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காண முடியும்? டாக்டர் அம்பேத்கர், நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக்கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக்கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக்கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

(விடுதலை 23.11.1946)

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால், அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை மாத்திரமல்ல, அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தாங்கள் படிப்பதைத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்துதான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லிவந்தார்.

(விடுதலை 7.12.1956)

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்பொழுது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.                                                             

(விடுதலை 7.12.1956)

அம்பேத்கர் மக்களுக்கு வழிகாட்டுபவர். சாதி, மத குறைபாடுகளை மனதில் பட்டதைத் தைரியமாக எடுத்துக்கூறி வந்தார். சுயநலம் இல்லாமல் பாடுபட்டவர். இந்தியா முழுவதும் விளம்பரம் பெற்றவர். அவர் தம்முடைய மக்களுக்குப் பவுத்த மதத்திற்குப் போகும்படி வழிகாட்டியிருக்கிறார். இங்கும் பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக் கொடுத்தார். அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

(விடுதலை 7.12.1956)

டாக்டர் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்து எவை எவைகளை நம்பவில்லை என்று சொன்னாரோ, எவை எவைகளையும் செய்யமாட்டேன் என்று சொன்னாரோ, அவைகளையெல்லாம் நாம் இப்போதே நம்புவதில்லை.

(விடுதலை 28.12.1956)

இந்த ஜாதி முறையைக் கண்டித்ததவர்கள் இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டைவிட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கயில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர். உடனே, அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்களுக்குச் சலுகையில்லை, வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவன் இப்பொழுது திரும்பி வரப் பார்க்கிறான். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்றுபோட்டு ஒழித்துவிட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்துமணிவரை படித்துக் கொண்டிருந்தார். படுக்கைக்குப் போனார். பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர, எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்று போட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே!  

(விடுதலை 4.11.1957, 8.9.1961, 4.5.1963)

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது.

மதம் ஒழியாதவரை, கடவுள் ஒழியாதவரை சாதியும் ஒழியாது என்றார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.            

(விடுதலை 20.11.1958)

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர். அதற்காக உயிர் வாழ்ந்து தொண்டாற்றியவர் மற்றும் பலர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்கள் என்றால் அவர்கள் எல்லாரும் அதன் பெயரால் வயிற்றை வளர்த்தவர்களே ஆவர்.

(விடுதலை, 6.3.1961)

அம்பேத்கரின் தொண்டு என்ன, எப்படிப்பட்டது என்றால், இந்தியாவிலேயே சிறந்த மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்திக் காட்டியவர். நான் வாயால் கொளுத்த வேண்டும் என்றேன். அம்பேத்கர் எரித்தே காட்டினார்.

(விடுதலை 6.3.1961)

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை நீங்கள் திறந்து வைக்கும்படி பணித்துள்ளீர்கள். இது எனக்கு மிகவும் பிடித்தமான சங்கதியாகும். டாக்டர் அம்பேத்கர் நாட்டில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கும் வண்ணம் மேல்ஜாதியார் கொடுமையை எல்லாம் எடுத்து விளக்குபவர். காந்தியையும் காங்கிரஸையும் ஜாதி ஒழிப்புக்கு இடையூறாக இருப்பது கண்டு கண்டித்துப் பேசியவர் ஆவார். காந்தியார் எந்த விதத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவர் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர் என்று கூறியவர். இந்து மதக் கொள்கையைக் கண்டு அதை நம்மால் ஒழிக்க முடியாவிட்டாலும் அந்த மதத்திற்கே முழுக்குப் போட்டுவிட்டு 3 லட்சம் மக்களுடன் புத்த மதத்தில் சேருவது என்று முடிவு பண்ணிக்கொண்டு சேர்ந்தவர். இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால், அவர் இன்னும் பல இலட்சம் மக்களைப் புத்த மார்க்கத்தில் சேரும்படி செய்து இருப்பார்.

(விடுதலை 4.5.1963) 

(தொடரும்...)

-  உண்மை இதழ், 16-31.3.19

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (31) : அம்பேத்கரை உயர்வாகப் பாராட்டிய தந்தை பெரியார்!

நேயன்

அண்ணல் அம்பேத்கரை தந்தை பெரியார் எந்த அளவிற்கு ஏற்றிப் போற்றி எழுதினார் என்பதற்கு கீழ்க்கண்டவற்றைப் படித்தாலே எவரும் எளிதில் அறியலாம்.

1925ஆம் வருஷத்திலே இந்த நாட்டில் ‘சுயமரியாதை இயக்கம்’ தோன்றியது. இந்த நாட்டிலே மதத்தை எதிர்த்து, மற்ற பேதங்களை எதிர்த்துக் காரியம் செய்வதென்றால், அவ்வளவு கஷ்டமல்ல; மக்களுக்குள் நீண்ட நாட்களாகவே அந்த உணர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்பதால். ஆனால், வடநாட்டில் அப்படியல்ல.

வடநாட்டில் இருக்கிற இந்த பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ‘சூத்திரன்’, ‘பஞ்சமன்’ என்றால் ஏதோ ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ பட்டம் என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிற மக்கள் வாழும் நாடு அது. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆனால், அங்கேயே 1927, 1928லேயே அம்பேத்கர் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசியிருக்கிறார். நாசிக்கில் கூடிய ஒரு மாநாட்டில் இராமாயணத்தைப் போட்டுக் கொளுத்தியிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)

1930லே என்று நினைக்கிறேன். ‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு. இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லீம் ஆகவேண்டும்; நானும் முஸ்லீம் ஆகப் போகிறேன்’ என்று அவர் சொன்னார்.

அப்போது, தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாக) போகக்கூடாது. குறைந்தது ஓர் இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மதிப்பான். இல்லாவிட்டால் தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லீம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவு பற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லீம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா?’ என்பதாகக் கிளப்பி விடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன். (‘விடுதலை’ 16.5.1952)

உள்ளபடி சொல்லுகிறேன் இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்று விட்டார்கள். ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெற முடியவில்லை. அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. இன்று மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன்.  1930 முதலே எனக்கு அவரைத் தெரியும். நமது ‘குடிஅரசு’ ஏட்டில் என்னென்ன கருத்துக்கள் வருமோ அவைகளை எல்லாம் அவர் பேசியிருக்கிறார். நமக்கு ஏற்ற நண்பர் என்பதை எண்ணி அவரை நான் பாராட்டி வந்தேன். நமது ‘குடிஅரசி’ல் அவரைப் பாராட்டி எழுதியதைப் பார்த்துத்தான் தாழ்த்தப்பட்டவர்களே அவரை உணர்ந்தார்கள். (‘விடுதலை’ 20.6.1972)

மறைந்த பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவைகளைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதியாகவும் பலமாகவும் இலட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் ‘கீதை’ என்பதை ‘முட்டாள் உளறல்’ என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல, பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ, அதே அபிப்பிராயம்தான் எனக்கு இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் உண்டு. (‘விடுதலை’ 22.02.1959)

பர்மாவில் நடந்த உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘என்ன இராமசாமி, நாம் இப்படிப் பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள், நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம்’ என்றார்.

நான் சொன்னேன், ‘ரொம்பச் சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால், தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறேன். இந்துக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும், இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்துகொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும், ‘நீ அதைச் செய்யக் கூடாது’ என்று தடுக்க உரிமை  கிடையாது. ஆனால், நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால், அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே, நான் வெளியில் இருந்துகொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்’ என்பதாகச் சொன்னேன்.

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று மாத்திரம் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லிவருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார். (‘விடுதலை’ 22.2.1959)

நான் பம்பாயில் சுற்றுப் பயணம் செய்தபோது ‘அகில இந்திய முஸ்லீம் லீக்’ தலைவர் ஜனாப் முகமது அலி ஜின்னாவையும், ஆதி திராவிட சமூகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்து சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம் விட்டுத் தாராளமாகச் சம்பாஷித்தேன்.

நாங்கள் காங்கிரஸின் ஆரம்பம் முதல் அரசியல் நிர்வாகத் திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரசைப் பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தவையாக இருந்தன. நாங்கள் மூவரும் காங்கிரசின் செல்வாக்கினால் ஏற்படும் தீங்குகளை அகற்ற ஒன்றுகூடி முயற்சிப்பதென முடிவு செய்தோம். (‘குடிஅரசு’ 26.1.1940)

கட்டாய இந்தி சம்பந்தமாக என் கருத்துக்களை ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் ஆதரித்தனர். கட்டாய இந்தித் திட்டம், நம் கலைகளுக்கு விரோதமாக, பிராமண மதத்தையும், கலைகளையும் பலப்படுத்தி விஸ்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமென்று நான் அபிப்பிராயப்படுவது போன்றே, ஜனாப் -ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் அபிப்பிராயப்பட்டனர். நான் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்ட விஷயமாகப் பிரஸ்தாபித்தபோது ஜனாப் ஜின்னா அவர்கள், ‘நீங்கள் என் பூரண ஆதரவைப் பெறுவீர்கள்’ என்று கூறினார். இவ்விஷயத்தில் டாக்டர் அம்பேத்கரும் என் அபிப்பிராயத்தை ஆதரித்தார். (‘குடிஅரசு’ 26.1.1940)

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.3.19

சனி, 30 நவம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா?

நேயன்

அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை என்பது எதிரிகளின் அடுத்தகுற்றச்சாட்டு.

அம்பேத்கர் அவர்கள், இந்து மத சாஸ்திரங்கள் பற்றி கூறியவற்றை சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர, மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்று கூறியே தனது தீர்வை முன்வைக்கிறார்.

‘பகவத் கீதை முட்டாளின் உளறல்’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.

அப்படியிருக்க அதற்கு முரணான செய்திகளை இவர் கூறுவது உண்மைக்கு மாறானது.

தந்தை பெரியாரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும் சரி, யார் எதைக் கூறினாலும் அதிலுள்ள உண்மையை அறிந்து சரியானதை ஏற்க வேண்டும், மற்றதைத் தள்ள வேண்டும் என்றே கூறியுள்ளனர். பிறர் கூறும் நல்லவற்றை ஏற்கக் கூடாது என்று பெரியார் என்றைக்கும் சொன்னதில்லை.

பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு சூழலில், பல காரணங்களுக்காகக் கூறிய செய்திகளை கத்தரித்துக் காட்டி இந்த ஆள் மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முயல்வதே இதன்மூலம் வெளிப்படுகிறது. மாறாக, பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நோக்குடையவர்கள். அவர்களின் அணுகுமுறையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயல்வது ஏமாற்று வேலையாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அயல்நாட்டுக் கருத்துகள் நமக்குத் தேவையில்லை. புத்தர் கூறியவற்றிலே எல்லாம் இருக்கிறது என்று கூறியவர் அம்பேத்கர். நம் நாட்டு சிந்தனைகளே நமக்குப் போதும். அதிலுள்ள அநீதிகளை ஒழித்தால் போதும் என்பதற்கு அம்பேத்கர் கூறியவற்றை இவர் எடுத்துக்காட்டி, இந்து மத சாஸ்திரங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதுபோல் காட்ட முனைவது மோசடியாகும். இந்து மதத்தை இந்து சாஸ்திரங்களை ஒழிக்க இருவருமே தீவிரங் காட்டினார். இருவருக்கும் இதில் வேறுபாடு இல்லை.

“இரட்டைப் பேச்சுகளை அம்பேத்கர் பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ரா. பேசினார்.” என்பது இவர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு!

தந்தை பெரியார் பற்றிய உயர் மதிப்பீடுகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யார் என்ன நினைப்பார்கள், என்ன விமர்சனம் வரும் என்பதற்கு ஏற்ப பேசாதவர். மனதிற்குச் சரியென்று படுவதை ஒளிவுமறைவு இன்றி பேசுவார். போராட்ட முறையில்கூட வெளிப்படையாகவே நடப்பார். இவை அவரது இன எதிரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க, அவதூறாய்ப் பேசுவதே கொள்கையென செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியரான இந்த நபர் திட்டமிட்டு திசைதிருப்பவே ஆதாரமில்லாமல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பெரியார் மீது சொல்லியுள்ளார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது அம்பேத்கருக்கும் இயல்பு. ஆக கொள்கை, எழுத்து, பேச்சு, செயல்பாடு என்று இருவரும் ஒத்த இயல்புள்ளவர்கள். அப்படியிருக்க இருவருக்கும் நேர் எதிரியான இந்த ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அம்பேத்கருக்கும் பெருமை சேர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, ஒத்த நோக்குடையவர்களின் தொண்டர்களைப் பிரித்து பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளும் ஒரு மோசடி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டுகள்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி திராவிடர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்வெண்மணியில் கொளுத்திக் கொல்லப்பட்டதை ஈ.வெ.ரா. கண்டிக்கவே இல்லை. கூலி உயர்வு கேட்கும் போராட்டத்தை தாழ்த்தப்பட்டோர் செய்யக் காரணமானவர்களையே கண்டித்தார். இது நியாயத்திற்கு எதிரான அவரது மனநிலையைக் காட்டுகிறது என்று பெரியார் மீது குற்றஞ் சாட்டுகிறார் இந்த ஆள்.

ஆனால், இவர் கூறுவது போன்று பெரியார் கூலி உயர்வு கேட்கச் சொன்னவர்களைக் கண்டித்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

28.12.1968 விடுதலையில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள், பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.

இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும், ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதும் நீதிபதிகளே 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கண்டித்துக் கவலைப்படுகிறார்.

‘விடுதலை’யிலும் அது பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் கூலி உயர்வு கோரிக்கையைக் கண்டித்ததாக இல்லை.

இச்சம்பவத்தையும், அது அரசாங்கத்தின் கையாலாகாத நிலையாலும், ஆதிக்கவாதிகளாலும் நடைபெறுவதையும் கண்டிக்கிறார். இதில் என்ன இரட்டை நிலை? இதில் என்ன தலித் விரோத நிலையுள்ளது? தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் போராடியதை அம்பேத்கர் பாராட்டுகிறார். தலித் மக்களும் பாராட்டுகிறார்கள். தலித் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பு, பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் கூறியுள்ளனர். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்.காரர் எதற்கு இதைப் பேசுகிறார்?

தலித்துகளை பஞ்சமர்களாக்கி, தீண்டத்தகாதவர்களாக்கி, கல்வியைப் பறித்து இன்றளவும் கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு தலித் நலம் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

(தொடரும்...)

 - உண்மை இதழ், 1-15.10.19

புதன், 4 செப்டம்பர், 2019

அம்பேத்கர் - பெரியார் சந்திப்பு



30.9.1944 - குடிஅரசிலிருந்து... -

இந்திய மத்திய அரசாங்க நிர்வாக அங்கத்தினர்  டாக்டர் அம்பேத்கர் அவர் களின் விருப்பத்திற்கு இணங்கி பெரியார் ஈ.வெ.ராமசாமி சென்னை சென்று தனது வரவைத் தெரிவித்துக் கொண்டார்.

டாக்டர் அவர்கள் 12 மணிக்கு வந்து சந்திப்பதாக தெரிவித்து விட்டு சரியாய் 12 மணிக்கு பெரியார் ஜாகைக்கு வந்து சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டுச் சென்றார்.

பேச்சின் முக்கிய சாரம்:

சேலம் மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகவும், அதற்கு ஆகவும், அவை யாவும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதற்கு ஆக பெரியாரைப் பாராட்டுவதாகவும், பட்டம் பதவியாளர்களும், பணக்காரர்களும், பதவியே கருமமாய்க் கருதுபவர்களும் முன்னணியிலிருந்து நடத்தப்படும் கட்சி எதுவும் இக்காலத்தில் பயன்தராதென்றும், அவர்களைப் பின் அணிக்குத் தள்ளியது இக்கட்சிக்குப் புத்துயிரளித்தது போல ஆயிற்றென்றும்,

பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதின் திட்டங்களில் நம் வகுப்பில் பார்ப்பனருக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன? எதை ஒழிப்பதற்கு அல்லது என்ன நடப்பை மாற்றுவதற்கு என்று குறிப்பிடும் திட்டங்கள் நடைமுறைகள் இல்லாததாலேயே பாமர மக்களிடத்திலும் அறிவாளிகளிடத்திலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மதிப்பில்லாமல் போன தோடு, பார்ப்பனர், இக்கட்சியாரை உத்தி யோக வேட்டைக்காரர் என்று சொல்லுவதை பாமர மக்களும் வெளியிலுள்ள அறிஞர்களும் நம்பும்படி ஏற்பட்டு விட்டதென்றும், இதனாலேயே கட்சி 1937இல் வீழ்ச்சியுற வேண்டியதாயிற்று என்றும், சேலம் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியை எல்லா இந்தியக் கட்சியாக ஆக்கக் கூடியதாகுமென்றும், எதிர் காலத்தில் இது தலைசிறந்து விளக்கக் கூடியதாக ஆகிவிட்டதென்றும் கூறினார்.

சேலம் தீர்மானம் பிடிக்காததால் கட்சியை விட்டுப் போகிறேன் என்பவர்களைப்பற்றியும், வீண் குறை கூறிக் கொண்டு தங்கள் காரியம் பார்த்துக் கொண்டிருப்பவர்களை பற்றியும் கவலைப்படாமல் பாமர மக்களுடையவும் வெளிநாட்டு மக்களுடையவும் ஆதரவு பெறவும் சர்க்கார் கவனிக்கவும் உருப்படியான காரியம் செய்யவும் நீங்கள் பார்க்க வேண்டும் என்றும், சந்தர்ப்பப்பட்டால் மற்ற ஆள்களுக்கும் இதை வெளிப்படையாய் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றும் சொன்னார். ஜஸ்டிஸ்கட்சி எல்லா இந்தியக் கட்சியாக ஆக இப்போது நல்ல சமயமும், நல்ல வேலைத் திட்ட தீர்மானங்களும் இருப்பதால், துணிந்து தைரியமாயும் இந்தியா பூராவும் சுற்றி  வேலை செய்யும்படியும் ஆங்காங்குள்ள தனது நண்பர்களுக்கு எழுதியும் தன்னால் ஆன அளவுக்கு ஒத்துழைத்தும் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

கடைசியாக திராவிடஸ்தானையும் பாகிஸ்தானையும் ஒன்றாக கருதியது தப்பு என்றும், அதன் தத்துவம் வேறு; இதன் தத்துவம் வேறு என்றும், அது முஸ்லிம் மெஜாரிட்டி உள்ள இடத்திற்கு மாத்திரம் பொருத்தமானதென்றும், திராவிடஸ்தான் இந்தியா பூராவுக்கும் பொறுத்தமான தென் றும், பிராமணியம் இந்தியா முழுமையும் பொறுத்த விஷயமென்றும், திராவிடஸ் தானில் தங்களையும் வேறு மாகாணக் காரர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார் என்பதாகத் தெரிகிறது.

குறிப்பு : இதற்கு முன்பே பம்பாயில் டாக்டர் அம் பேத்கர், தந்தை பெரியார் அவர்கள் சந்தித்து, அவரது தலைமையில் பேசியுள்ளார். தந்தை பெரியாருக்கு விருந்தும் அளித்துள்ளார் டாக்டர் அம்பேத்கர்.

- விடுதலை நாளேடு, 31 .8 .19

வியாழன், 6 டிசம்பர், 2018

நாணயத்தின் இரு பக்கங்கள்!



டாக்டர்அம்பேத்கர்அமெரிக் காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலிருந்து இந்தியாவிற்கு - தனது சொந்த மாநிலமான பம் பாய்க்குத் திரும்பிய பின், தன் பிள்ளை, தன் வீடு, தன் சுற்றம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு சுயநலவாழ்வுவாழாமல்,ஒடுக்கப் பட்ட சமுதாய மக்களின் சமத்துவத் திற்கும், சம உரிமைக்கும், சம வாய்ப் புக்கும் திட்டமிட்டே செயலாற்ற அமைப்புகளை உருவாக்கினார்.

குரலற்ற (ஊமையர்களின்)வர்களின் குரல் (மூக் நாயக்) என்று மராத்தி மொழியில் அவர் நடத்திய ஏட்டில், 1924இல் தெற்குத் திருவிதாங்கூர்ராஜ்யத்தில் இருந்த வைக்கம் என்ற ஊரில், உள்ள மகாதேவர்கோயிலின்நான்குவீதி களிலும், ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப் பட்ட மக்களாகிய ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்ற கீழ் ஜாதியார் என்று ஆக்கப்பட்டவர்கள் தெருக்களில் நடக்கக் கூட உரி மையற்று இருந்த நிலையில், அதனை எதிர்த்து அங்கிருந்த அன்றைய காங்கிரசு தலைவர்கள் சத்தியாகிரகத்தை - மறியலைத் துவக்கினர்; அவர்களை அவ்வரசு கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்; அவ்வறப்போரினை ஒடுக்கி விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் தான், தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் என்ற நிலையில், சிறையில் வாடியவர்களின் கடிதம் கண்டு, உடனே அங்கே சென்று வைக்கம் சத்தியாகிரகத்தை முன்னெடுத்துச் சென்று தொடர் போராட்டமாக்கினார். இருமுறை சிறையும் சென்றார் பெரியார். அவர் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய சமூகப் புரட்சி வர லாற்றில்இப்போராட்டம்தான்முதல் பெரும்போராட்டம்.மனித உரிமை களைப்பெறுவதற்குநடத்தப்பெற்ற போராட்டம். காந்தியார் தந்தை பெரியாரின் இப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனாலும் தந்தை பெரியார் முன்வைத்த காலை பின் வைக்கவில்லை. தந்தை பெரியார்தம் இப்போராட் டத்தினை அறிந்த டாக்டர் அம் பேத்கர் அவர்கள், அவர் அப்போது நடத்திய மூக் நாயக் ஏட்டில் பின்வருமாறு எழுதினார் என்ற செய்தியை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

...மிகவும் குறிப்பிடத்தக்க போராட்ட நிகழ்வொன்று 1924-ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கத்தில் பார்ப்பனர் அல்லாதார் தலைவரான ராமசாமி நாயக்கர் நடத்திய போராட்டம்தான் அது. வைக்கத்தில் உள்ள கோவி லைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத்தகாதோர் நுழையக் கூடாது எனும் வழக்கத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமாகும்; போராட்டம்ஏற்படுத்தியதார்மீக தாக்கமும், சரியானது செய்திடப்பட வேண்டும் என்ற நினைப்பும் வைதீகப் போக்குடைய இந்து மதத்தவரிடம் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. குடிமைப் பொறுப் பும், புத்திசாலித்தனமும் இணைந்து உணரப்பட்டதால் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் தீண்டத் தகாதோர் நடந்துசெல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அம்பேத்கர் இத்தகைய நிகழ் வுகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். மகத் குளம் - இறங்கும் போராட்டத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தமது பத்திரிகையில் வைக்கம் போராட்டத் தைப்பற்றி மிகவும் உருக்கமாக மன தைத் தொடும் வகையில் தலை யங்கம் தீட்டியிருந்தார். இவை குறிப் பிடத்தக்க நிகழ்வுகளாக அமைந்தன என்று எழுதப்பட்டுள்ளது.

பாபாசாகிப் அம்பேத்கர், தந்தை பெரியார் இருவரது பார்வையும் சமூக விடுதலையை நோக்கியே இருந்தது ஆகையால் தான் இருவரையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுகிறோம்.

இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் (1956).

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 6.12.18

புதன், 18 ஏப்ரல், 2018

டாக்டர் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் - 14
(ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்)



தந்தை பெரியார்

“தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு; இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லிம் ஆகவேண்டும்; நானும் முஸ்லிம் ஆகப்போகிறேன்’ என்று அவர் சொன்னார். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள்.

அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாகப்) போகக்கூடாது; குறைந்தது ஒரு இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும்; அப்போதுதான் முஸ்லிமும் மதிப்பான். இல்லாவிட்டால், தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லிம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவுபற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லிம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா?’ என்பதாகக் கிளப்பிவிடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன்.

அதற்கப்புறந்தானே _ பயந்துகொண்டு, ஆதித் திராவிட மக்களுக்கு காங்கிரஸ்காரர்களும் ஏதோ நன்மை செய்வதாக வந்தார்கள்! ‘மதம் மாறுவேன்’ என்ற மிரட்டிய தோழர் அம்பேத்கர் அவர்கள் ஆதித் திராவிட மக்களுக்குப் பெரும் அளவுக்கு நன்மை செய்து கொடுத்திருக்கிறார். உள்ளபடி சொல்லுகிறேன், இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்றுவிட்டார்கள்; ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெறமுடியவில்லை; அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார்.

இன்னும், தோழர் அம்பேத்கர் அவர்களின் தைரியத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இலண்டனில் காந்தியார், ‘நான் இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று  சொன்னபோது, ‘நீங்கள் எங்கள் இனத்தின் பிரதிநிதியல்ல’ என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார். காந்தியார் திரும்பவும், ‘இந்திய மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்’ என்று சொன்னவுடன், அம்பேத்கர் அவர்கள், ‘பத்துத் தடவை சொல்லுகிறேன், நீங்கள் எங்கள் பிரதிநிதி அல்ல என்று; திரும்பத் திரும்ப வெட்கமில்லாமல் பிரதிநிதி என்று சொல்லுகிறீர்கள்; நீங்கள் உங்களுடைய மகாத்மா பட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்’ என்பதாகச் சொன்னார். காந்தியார் பேசாமல் உட்கார்ந்துவிட்டார். பின்பு, இந்நாட்டுப் பத்திரிகைகள் அம்பேத்கரைக் கண்டபடி தாக்கின. ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அவருடைய தைரியத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்லுகிறேன். அவர் மந்திரியாக இருக்கும்போது ஒரு தடவை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் பேசும்போது, ‘கீதை_முட்டாள்களின் பிதற்றல்’ என்று சொன்னார். கீதைக்கு இந்த நாட்டில் எவ்வளவு விளம்பரம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காந்தியாரிலிருந்து, ஆச்சாரியாரிலிருந்து _ பெரிய பெரிய அய்க்கோர்ட் ஜட்ஜுகள், இன்னும் பெரிய மனிதர்கள் என்பவர்களெல்லாம் கீதையைப் புகழ்வதே வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல; கீதைக்கு வியாக்கியானம் கூறுவது, கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது என்பது ஒரு மதிப்பு, கவுரவம் என்பதாக இந்த நாட்டில் இருக்கிறது.  அப்படிப்பட்ட பெரும் விளம்பரமான நிலையிலிருக்கிற கீதையை, ‘முட்டாள்களின் பிதற்றல்’ என்று அம்பேத்கர் சொன்னார். முட்டாள்களுடையது என்றாலே மோசம்; அதிலும் அந்த முட்டாள்களுடைய பிதற்றல் என்று கீதையை மிகவும் இழிவுபடுத்திக் கூறினார். யார் யாரை இதுபோய்ப் பாதிக்கிறது பாருங்கள்! அவர் அந்தப்படி பேசியபின் பார்ப்பனப் பத்திரிகைகள் அவருடைய பேச்சுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல், ‘ஒரு மந்திரியாய் இருப்பவர் இப்படியெல்லாம் பேசலாமா?’ என்று எழுதின. அவ்வளவுதான் அவைகளால் முடியுமே தவிர, அவர் சொல்லுவதை எப்படி எந்த ஆதாரத்தின்மீது மறுக்க முடியும்?
- - ‘விடுதலை’, 16.05.1952

- உண்மை இதழ், 1-15.4.18