தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 டிசம்பர், 2020

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் பக்தர்களைப் புண்படுத்தவா?

சனி, 14 செப்டம்பர், 2019

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும் - சென்னை உயர்நீதிமன்றத்தின் உயரிய தீர்ப்பும்!

 பெரியாரின் கடவுள் மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றத்தின் உயரிய தீர்ப்பு குறித்து  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களில் அவர் தந்த கடவுள் மறுப்பு வாசகங்களான

கடவுள் இல்லை! கடவுள் இல்லை!

கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்;

கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.

கடவுள் இல்லை; கடவுள் இல்லை

இந்த வாசகங்களைப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே 1967 முதல் திறக்கப்பட்ட பல சிலைகளின் கீழே பீடத்திலோ, பக்கத்தில் தனிக் கல்வெட்டு களாகவோ வடிக்க ஆணையிட்டார் - தனது தொண்டர்களுக்கும், சிலை அமைப்பாளர் களுக்கும்.

அவ்வாசகங்களைக் கொண்ட சிலைகள் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர் களே கலந்துகொண்டு, சிலை திறக்க வேண்டும் ஏன்?'' என்பதுபற்றி மிக விளக்க மாகவும் உரையாற்றியுள்ளார்கள். அவ்வுரை கள் பதிவு செய்யப்பட்டும் (ஒலி நாடாக்களில்) உள்ளன.

உயர்நீதிமன்றத்தில்  அழிவழக்கு ஒன்று!


திடீரென்று தெய்வநாயகம் என்கிற ஒருவரால் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது - இச்சிலை பீட வாசகங்களை அகற்றக் கோரி; அதைத் தமிழக அரசு பொருட்படுத்தி பதில் அனுப்பவில்லையாம்! அதன்மீது பொது நல வழக்கு என்ற தலைப்பில் அழி வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத் தில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை (என்னை) எதிர் மனுதாரராகக் கொண்டு தாக்கல் செய்தார்.

அதில் தந்தை பெரியார் நாத்திகர் அல்ல. அப்படி கடவுள் மறுப்பு வாசகங்களை   அவர் சொல்லவில்லை. அவருக்குப் பின்னர் தலைமை யேற்ற வீரமணிதான் இந்தக் கடவுள் மறுப்பு வாசகங்களைப் போட்டு, கடவுள் பக்தர்களை மனம் புண்படும்படிச் செய்துள்ளார்; எனவே, பெரியார் சிலை பீடங்களில் உள்ள வாசகங் களை அகற்றிட உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டும்'' என்று வாதிட்டார்!

நமது கழக சார்பில், மூத்த வழக்குரைஞர் டாக்டர் தியாகராஜன், த.வீரசேகரன், ஜெ.துரை ஆகியோர் வாதிட்டனர்.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே, கடவுள் மறுப்பாளர். காரணம், ஜாதியை -தீண்டாமையை கடவுள்தான் உருவாக்கிய தாக மதமும், சாஸ்திரங்களும் கூறுகின்றன! எனவே, கடவுளை ஒழிக்காமல் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?

ஜாதி ஒழிப்புக்கு, கடவுள் மூடநம்பிக்கை ஒழிப்பு தேவையாக உள்ளதால் கடவுள் கற்பனை எப்படி அறியாமையால் -முட்டாள் தனத்தில் முளைத்து, அதை வைத்து சுரண்டிப் பிழைக்கும் அயோக்கியத்தனத் தால் (அண்மையில் அத்திவரதர் படுத்தார், எழுந்து நின்றார் என்று 40 நாள்களில், எத் தனை கோடி கொள்ளை, எவ்வளவு வி.அய்.பி. பாஸ் ஊழல், தெரிந்ததே) பரப்பப் பட்டு, காட்டுமிராண்டிப் பருவ அறிவு நிலை உள்ளவர்களால் (Primitive) வணங்கப்படு கிறது என்பதை விளக்கும் அறிவியல் ரீதி யாக - விளக்கப்படும் காரண காரிய விளக்க மேயாகும்' என்பதை தந்தை பெரியார் அவர் களே பல மேடைகளில் விளக்கியுள்ளார்!

தந்தை பெரியாரின் விளக்கம்


"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?என்ற தலைப்பில்,சர்வ வல் லமை உள்ள கடவுள், தானே தோன்றியவன் என்பது உன் நம்பிக்கையானால் கற்பிக்கப் பட்டவன் என்று நான் சொல்லும்போது நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும். கோபப் படுவது உங்கள் நம்பிக்கைக்கே விரோத மானது அல்லவா?'' என்பது போன்ற கேள்வியைக் கேட்டு மடக்கியதோடு, நல்ல அறிவு விளக்கமும் தந்துள்ளார். இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அடாவடித்தனமாக வீரமணிதான் அவர் காலத்தில் இப்படி பெரியார் கருத்துக்கு மாறாக இந்த வாசகங்களைப் போட்டார் என்று வழக்குப் போட்டதை, மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இரு தரப்பு வாதங்கள்,  ஆவணங்களை அலசி விவரித்து 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில்,

நீதிபதிகள் தீர்ப்பு


1. தந்தை பெரியார் கூறியதே கடவுள் மறுப்பு வாசகங்கள். கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றபின் உருவாக்கி இணைத்தது அல்ல.

2. கடவுள் உண்டு என்று கூற உரிமை ஒருவருக்கு உள்ளபோது, அதை மறுத்துக் கூறும் கருத்துச் சுதந்திரம் மற்றவருக்கும் உண்டு. இந்திய அரசியல் சட்டத்தின் கருத் துரிமை - 19 ஆவது பிரிவு - அடிப்படை ஜீவா தார உரிமையாகும். அதைப் பறிக்க முடியாது. (இந்தத் தீர்ப்பு வழங்கிய நாள்: 4.9.2019)

தந்தை பெரியாரின் கொள்கைகளை ஒவ்வொருவரும் நன்கு அறிவர். அவர் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கி, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சமூகநீதி - இவைகளுக்காகப் பாடுபட்டு வந்தார்; திராவி டர் கழக இயக்கம் அதையே தொடருகிறது.

கடவுளும், மூடநம்பிக்கைகளும் ஜாதி யும், பெண்ணடிமையும்'' சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிராக இருப்பதால் கடவுள் மறுப்பையும் சொல்ல அவர்களுக்கு அந்த உரிமை உண்டு.

தந்தை பெரியார் கொள்கைகளைத்தான், வீரமணி தலைமையில் இயங்கிவரும் திராவி டர் கழகம் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறது எனத் தீர்ப்பில் தெள்ளத் தெளி வாகக் கூறியுள்ளனர்!

இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்த நடுநிலைத் தீர்ப்பும் ஆகும்!

வழக்குப் போட்டவருக்கு நன்றி!


இப்படி ஒரு வழக்குப் போட்டு இக்கொள் கையை வருங்காலத்தில் திரிபுவாதம் செய்ய முடியாதபடி, சென்னை உயர்நீதிமன்றமே கூறி, ஆணியடித்துள்ள வாய்ப்பை ஏற்படுத் தித் தந்த வழக்குப் போட்டவருக்கு நமது நன்றி! வாதாடிய வழக்குரைஞர்களுக்கும் அதற்குப் பிறகே நம் நன்றி!

உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில்

பொய்யும் புரட்டும் பலியாகும்

- பட்டுக்கோட்டையார்


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.9.2019

 

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?




கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்; பரப்பியவன் அயோக் கியன்; வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளு கிறார்கள், துள்ளிக் குதிக்கிறார்கள். அப்பாவிகளையும், கூலிகளை யும் பிடித்து நம்மீது ஏவிவிடுகிறார்கள்.

பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன் - போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவதுதான்.

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக் கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என் பதை ஒப்புக்கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய், ஆத்திரப்படு கிறாய்.  நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம் ஆதாரம் என்ன?

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக் கப்பட்டது என்கிறாயா? அல்லது அது ஒருவனால் கண்டு பிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது கடவுள் யாராலும் உண் டாக்கப்படாமல், யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதை, கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்?

மற்றும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத் தானே கோபம், ஆத்திரம் வரவேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்றுதானே அர்த்தம்?

அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்றுதானே கருத்தாகிறது?

இப்போது நீ நினைத்துப் பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா? (கிரியேஷனா?) (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதா? (இன்வென்ஷனா?) (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? (நேச்சரா) (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள்.

நான் சொல்வதன் கருத்து - கடவுள் கண்டு பிடிக்கப் பட்டதுமல்ல; தானாகத் தோன்றியதுமல்ல; முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை, அதாவது கடவுளை, ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக்கொண்டாலோதானே கடவுளை உண் டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்?

நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல; தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது என்பதுதான் இன்று கடவுள் நம்பிக்கைக் காரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

ஆகையால், நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.

இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ அவனுக்கும், கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக் கியதனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும்தான் கோபம் வரவேண்டும் - அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

- ஈ.வெ.ரா

'உண்மை', 14.3.1970

- விடுதலை நாளேடு, 8.9. 19

வியாழன், 5 செப்டம்பர், 2019

பெரியார் சிலைகளின் பீடங்களில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி: 4.9.2019 தீர்ப்பு!



பெரியார் சிலை பீடங்களில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றவேண்டும் என்று தெய்வநாயகம் என்பவரால் தொடுக்கப் பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (4.9.2019) தள்ளுபடி செய்யப்பட்டது.

தெய்வநாயகம் என்பவர் பெரியார் சிலை பீடங்களில் பொறிக் கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அதன்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக் கொன்றைத் தொடுத்தார் (2017).

பெரியார் சிலைப் பீடங்களில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

மேலும் ‘‘பெரியார் சிலைப் பீடத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை பெரியார் சொன்னது கிடையாது. வீரமணியே தன் விருப்பப்படி அதனை இடம்பெறச் செய்துள்ளார்'' என்றும் உண்மைக்கு மாறாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகிய நீதிபதிகளின் அமர்வு விசாரணை நடத்தியது.

குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, நீதிபதிகள் வழக்கினைத் தள்ளுபடி செய்தனர்.
- விடுதலை நாளேடு, 5.9.19

திங்கள், 26 மார்ச், 2018

ஜாதி பற்றிய உச்சநீதிமன்ற இரண்டு தீர்ப்புகளும் கழகத்தின் நிலைப்பாடும்!

நம் நாட்டு உச்சநீதிமன்றத்தில் இம்மாதம் இரண்டு முக்கியத் தீர்ப்புகள் வந்துள்ளன. அவை நமது சமூகத்தில் நிலவும் ஜாதி, வர்ணதர்மத்தினை அப்படியே படம்பிடித்துக் காட்டும் தீர்ப்புகள் ஆகும்!
ஒன்று, கேந்திரிய வித்தியாசாலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து வேலைபார்த்த ஒருவர், அதுவும் அப்பள்ளியின் துணை முதல்வராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ‘அகர்வால்’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர். தாம் திருமணம் செய்து கொண்டது, தாழ்த்தப்பட்ட ‘தலித்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர் என்பதைக் காட்டி அப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியது செல்லாது என்றும், ஜாதி என்பது (இந்து மத தர்ம முறைப்படி) பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதும், ஜாதியை பிறப்பின் மூலம் தவிர வேறு எவ்வகையிலும் மாற்றிட முடியாது என்றும் ஓங்கி அடித்து அத்தீர்ப்பினை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சந்தான கவுடா ஆகிய இருவரும் கூறியுள்ளனர்!

இந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் ஆரிய பார்ப்பன சனாதன- வேத மதமான அதன் வர்ணாசிரமத்தின்படி பிறப்பினை வைத்துதான் ஜாதி நிர்ணயிக்கப்படுகிறது. மற்றபடி வேறு எந்த தகுதியினாலும் அல்ல. எவ்வகையிலும் ஒருவர் ‘ஹிந்துவாகப் பிறந்தவர்’ தனது ஜாதியை மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுவது உலகில் வேறு எந்த சமூகத்திலும் உண்டா என்று கேட்டாரே தந்தை பெரியார் அதற்குப் பதில் உண்டா? ஒருவர் மதம் மாறிடலாம்; ஆனால், ஜாதியை மாற்றிட முடியாது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த மத மாற்றத்தால்கூட, கிறித்துவம், சீக்கியம் போன்றவற்றில் தனது ஜாதிய அடையாளத்தை அப்படியே வைத்துக் கொண்டுதான் மதமாற்றம் நடைபெற்றுள்ளது என்பதற்குச் சான்று, அந்த மதங்களைத் தழுவிய பிறகும்கூட அங்கே தங்கள் ஜாதி அடையாளத்தை, குறீயீட்டினை அழித்துக் கொள்ளாமல் பாதுகாப்பது, சுடுகாடு வரைக் கொண்டு செல்வது மிகுந்த வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதல்லவா?

ஆதியில் இத்தாலியிலிருந்து வந்து மதமாற்றம் செய்த கிறித்துவப் பாதிரிகளும் மதம் மாற்றத்திற்கு ஆசை காட்டும்போது, “உங்கள் ஜாதிக்குப் பங்கமிராது’’ என்று சில உயர்ஜாதிப் பார்ப்பனர்களை மதம் மாறச் செய்ய இப்படி ஓர் உத்தியைக் கையாண்டதினால்தான் இங்கே அங்கேயும் இந்தத் தொற்றுநோய் வந்தது! (இதற்கு அதாரம் உள்ளது)

ஜாதிக் கொடுமை, ஜாதிவெறி என்பது வேறு ஜாதிகளைச் சேர்ந்த இருவர், வயது வந்த இருவர் _ ஒருவரை ஒருவர் புரிந்து காதலித்துத் திருமணம் செய்தாலும் அந்த ஜாதியைச் சேர்ந்த பெற்றோர்கள்கூட, ஜாதிவெறியால் அவர்கள் முன்பிருந்த பாசத்தைக் கொன்றுவிட்டு பிறகு அப்பிள்ளைகளை _ பெண்களைக் கூலிப்படை மூலம் கொல்வதோ அல்லது ஜாதிப் பஞ்சாயத்துக்களில் தண்டனை தருவதோ  கூடாது; இவை சட்டவிரோதம் என்றும் மற்றொரு தீர்ப்பில் கூறியதோடு, இந்த “கவுரவக்கொலை’’ காப்பஞ்சாயத்து  (Cast Panchayats - ‘Kap Panchayats’) என்பவற்றைக் கண்டித்து, ஜாதி மறுத்து திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு தரவேண்டும். சட்டப் பாதுகாப்பு உட்பட என்று கருத்தடங்கிய தீர்ப்பும் (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றொரு நீதிபதி) தந்து வரலாறு படைத்துள்ளார்கள்.

‘ஹிந்து மதத்தைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே என்ற கிளிப்பிள்ளைக் கேள்விக்கு நமது பதில் _

கேள்வி மூலம்தான்!

ஜாதி, வர்ணதர்மம் இதில் _ வேத சனாதன பார்ப்பன மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தில் தத்துவப்படி உள்ளது?
ஹிந்து வேதங்களில் _ புருஷாந்தம் _ ரிக் வேதத்தில், கீதையில், மனுதர்மத்தில், இராமாயணத்தில், மஹாபாரதத்தில் _ மற்ற 18 புராணங்களில் எல்லாம் (இவைதான் ஜாதியைத் தூக்கிப் பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கும் அஸ்திவாரங்கள்) உள்ளதே!

‘ஹிந்து லா’வை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்டத்திலும் ஜாதி பாதுகாக்கப்படுகிறதே; அதைச் சுட்டிக்காட்டிதானே 60 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் 1958 நவம்பர் 26ஆம் தேதி அதன் நகலைக் கொளுத்தி, ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் போராட்டத்தை நடத்தி, இன்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதன் மூலம், அதன் பேதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடும் உணர்வை ஊட்டியுள்ளார்!

தந்தை பெரியாரின் பணியும், திராவிடர் கழகம் செய்யும் பணியும் எத்தகைய பிறவி பேதம் அகற்றும் பெரும் பணி என்பது இப்போது புரிகிறதா?

- கி.வீரமணி,
ஆசிரியர்.

-  உண்மை இதழ், 1-15.2.18