புரட்டு இமாலயப்புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்டு இமாலயப்புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 அக்டோபர், 2019

ஹிந்திப் புரட்டின் நோக்கம் - தமிழரை அடிமைப்படுத்துவதே! - 15

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


15.5.1938 அன்றைய


"குடி அரசு" எழுதுவதாவது:-


நம்நாட்டுப் பார்ப்பனீயமானது "தோலைக் கடித்து, துருத் தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது'' என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது.

பார்ப்பனீயப் போராட்டம்


தமிழ் மக்களில் எவருடைய ஆட்சேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லட்சியம் செய்யாமல் ஒரே அடியாய் சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்' என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது. தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித் தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன் புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது.

தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்


தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால் தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோ கமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம் மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல் மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ் வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல் பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிரிகளுக்கு உதவி


அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தா பனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டி யவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட் கின்றோம்.

மாஜி மந்திரிகள் என்ன செய்கிறார்கள்?


வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத் தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது. இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடு மையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.

தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன?


மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளை யும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம். இனி அடுத்தாற்போல் தமிழன் என்ற காரணத் தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுது வோம். இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கிரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்ப தாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்.

காங்கிரஸ் தமிழர்கள் நிலை என்ன?


மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங் கிரஸ்தான்' என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறு வளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கிய தையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போ மானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக் காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும். ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல் இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரி விக்கவுமே இதை எழுதுகிறோம்.

தமிழன் செய்ய வேண்டியதென்ன?


தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும். ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதை யும் தாங்கள் யோசனை செய்வதற்கு முன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம் பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன் மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி?


அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் சிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத் மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும் - தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மை யாய் கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தமிழன் நிலைமை


தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந் தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு "மோட்சத்தில் இடம்'' தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அர்ப்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் "பாவத்துக்கு'' மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக ஆகிவிட்டான்.

- தொடரும்

- 'விடுதலை', 17.5.1938

- விடுதலை நாளேடு, 9. 10. 19

பண்பாடு சமற்கிருத மயமாக்கப்படுதல்- 16

சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் குறித்து டாக்டர் க.த.திருநாவுக்கரசு உரை


பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - அதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், டாக்டர் க.த.திருநாவுக்கரசு (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை) உரை வருமாறு.

இந்திய நாட்டில் பல்வேறு வகைப் பண்பாடுகள் உள்ளன. பண்பாடு என்பதனை எளிதில் விளக்க இயலாது. அறிவுத் துறைகள் பலவற்றிலும், எது பண்பாடு? எனும் வினாவிற்கு வெவ்வேறு வகையான விளக்கங்கள் தரப் பட்டுள்ளன. எனினும், எல்லாத் துறைகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு பொதுவான விளக்கத்தைத் தருவதற்கு முயல லாம்.

பண்பாடு


இக்காலத்தில் வரலாறு என்பது, ஓர் இனத்தின்-நாட்டின்- நாகரிகத்தினை விளக்குவதாக, பண்பாட்டினைப் படம்பிடித் துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்று வரலாற்றுப் பேரறிஞர் அர்னால்டு டாயின்பி மொழிந்துள்ளார். இங்கே சுட்டப்பட்டும் இரு சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ளுவோமானால், நம்முடைய நோக்கத்தை நன்கு வெளிப்படுத்த இயலும்.

உலக வாழ்க்கையில்-புறவாழ்வில் மனிதன் அடைகின்ற வியத்தகு முன்னேற்றங்கள், பெறுகின்ற பேறுகள் போற்றிப் பின்பற்றப்படுகின்ற நாள் வண்ணம், இன்பம் தரும் பகட்டு மிகு வாழ்க்கை வசதிகள் போன்ற யாவும் நாகரிகத்தின் கூறுகள் ஆகும்.

வாழ்க்கையில், மனிதன் முழு நிறைவை அடைவதற்கு முயலும் முயற்சியின் பயனாக அமைவது பண்பாடு. முழு நிறைவான வாழ்க்கை இனிமையும், ஒளியும் உடையதாக அமையும். முழு நிறைவான வாழ்க்கையைப் பெற மனிதர் கள் ஒன்றாகக் கூடி வாழ்வதால் உருவாகும் சமூக அமைப்பு களின் இயல்புகளாக அமைவது பண்பாடு. சமூகங்கள் பல சேர்ந்து ஒரு சமுதாயமாகப் பின்னிப் பிணைந்து இயங்கும்பொழுது, உருவாகும் வாழ்க்கை நெறி, பழக்க வழக்கங்கள், கலையுணர்வு, ஆட்சி அமைப்புகள், சிந்தனை முதிர்ச்சி ஆகிய அனைத்தும் இணைந்து ஒருவகைச் சமுதாய சிந்தனையாக வெளிப்படுவதே பண்பாடு எனலாம்.

இந்த வரையறையைக் கருத்தில் கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல் அமைப்புகள், வாழ்வியல், சமூக நிலை, சமயவுணர்வு, கலை வளர்ச்சி போன்றவற்றை மதிப்பிடுவதே இந்த ஆய்வரங்கின் நோக்கமாகும்.

சமற்கிருத மயமாக்குதல்


கடந்த இருபது ஆண்டுகளாக, இந்திய அறிவரங்கில், சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரைப் பலர் பயன்படுத்துவதை அடிக்கடி நாம் கேள்வியுறுகிறோம். சமற்கிருத மயமாக்குதல் என்பதற்கு என்ன பொருள்? இந்தப் பாரத நாட்டில் எல்லாவற்றையும் சமஸ்கிருத மொழி வழிப்பட்ட பண்பாட்டின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, மானிட இயல் (Anthropology) அறிஞர்கள் சூட்டியுள்ள புதுமைப் பெயரே சமஸ்கிருத மயமாக்குதல் என்பதாகும்.

இந்தியாவில் சமற்கிருத மொழி வழிப்பட்ட நாகரிகமும் பண்பாடுமே சிறந்தவை. மற்ற மொழி வழிப்பட்ட பண்பாடு கள் எல்லாம் காட்டுவாழ் மக்களின் வாழ்க்கை நெறிகள். அவை யாவும் மட்டமானவை; கடுமையும் கொடுமையும் நிறைந்தவை; அவற்றில் உயர்ந்த சிந்தனைக்கும், கவர்ச்சிமிகு கலைகளின் வளர்ச்சிக்கும் இடமே கிடையாது எனும் எண்ணப்போக்கின் அடிப்படையில் எழுந்ததே இக்கருது கோளாகும்.

எனவே, இந்தியப் பண்பாட்டின் தலையூற்றாய் விளங் குவது சமஸ்கிருத மொழிவழிப்பட்ட பண்பாடு. அதனுடைய தாக்கத்தினாலேயே, இந்தியா முழுமையும் நாகரிகமும், பண்பாடும் வளர்ச்சியுறத் தொடங்கியதுஎனும் கருத்தை நிலைநாட்ட முயலுவதே சமற்கிருத மயமாக்குதலின் அடிப் படை நோக்கமாகும்.

கிரேக்கர்கள் பண்டைக்காலத்தில், தாங்கள்தான் உலகி லேயே நாகரிகம் அடைந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று கூறினர். இதைப் போன்றே, சமற்கிருத மொழிப் பண்பாட்டாளர்கள், மற்றவர்களை மிலேச்சர்கள் எனும் சொல்லால் சுட்டினர்.

மிலேச்சர்களையும், காட்டுமிராண்டிகளையும் நாகரிகம் அடையச் செய்ததையே சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடரால், இக்கால அறிஞர்கள் சுட்டுகின்றனர்.

இதனால், புலனாவது யாது? சமற்கிருத மொழிவழிப்பட்ட பண்பாட்டை உடையவர்களே, உலகிற்கு - சிறப்பாக இந்தி யாவிற்கு நாகரீக ஒளியைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள்; சமற்கிருத மொழியாளர் இந்தியாவிற்கு வராமல் போய் இருந்தால், இந்தியா இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடா கவே இருந்திருக்கும் எனும் தன்முனைப்பு வாய்ந்த எண் ணப்போக்கை வெளிப்படுத்துகிறது.

ஆரிய மயம்


சென்ற நூற்றாண்டு முதல் இந்த நூற்றாண்டின் இடைப் பகுதி முடிய, உலக அறிஞர்களின் சிந்தனையில் ஆரிய மயமாக்குதல் (Aryanization) எனும் கருத்து நிலை வீறுடன் விளங்கியது.

உலக வரலாற்றில் சிறந்தவை, உயர்ந்தவை, போற்றத் தக்கவை, முன்னேற்றத்திற்கு வழிகாட்டுபவை எனக் கருதப்பட்ட நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்துமே ஆரியருக்கு உரியவை என்று நம்பப்பட்டது. இதனால், எல்லாரும் இந்தியப் பண்பாட்டை, ஆரியப் பண்பாடு என வும், இசுலாமியர் வருகைக்கு முற்பட்ட இந்திய அரசுக ளையும், ஆட்சிகளையும் ஆரியரின் ஆட்சி (Aryan Rule) என்றே குறிப்பிட்டனர். இதைத்தான், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை எனும் பெயரால் அழைத்தார்.

இந்திய வரலாற்றின் தொடக்கக் காலத்தில் ஆரியரும், ஆரியர் அல்லாதவரும் பேரளவிற்குக் கலந்து உறவாடியதன் மூலம், புதியதொரு பண்பாட்டினை உருவாக்கினர் என்ப தில் யாருக்கும் அய்யம் இருக்காது. ஆனால், அந்தக் கலப்பின் விளைவாக உருவான புதிய பண்பாட்டில் உள்ள முனைப்பான தலைமைக் கூறுகள் யாவும், ஆரியருக்கு உரியனவாகும்; அவர்களுடைய மொழியே காட்டுமிராண்டி மொழிகளாக இருந்து வந்த பழங்குடி மக்களின் மொழிகளை அழித்து, அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டது; அல்லது அவற்றை எழுத்து வடிவம் பெற்று, இலக்கிய வளர்ச்சி அடையுமாறு செய்தது! என்பது பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்தாகும்.

இந்நிலையில், ஆரிய மயமாக்குதல் எனும் பெயரினை ஏன் கைவிட்டுவிட்டு, சமற்கிருத மயமாக்குதல் எனும் புதிய திருப்பெயரை அறிமுகப்படுத்தினார்கள்? எனும் எண்ணம் எழுவது இயல்பாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, இரண்டாவது உலகப் போரினால் மனித இனம் பட்ட அல்லலாகும். ஆரியர்களே உலகில் ஆளப் பிறந்தவர்கள்? எனும் இட்லரின் (Hitler) இனவெறியே, அப்போர்  உண்டா வதற்கு மூலகாரணம் என்பதை யாவரும் உணர்ந்தனர். இதனால் யுனெஸ்கோ (UNESCO) நிறுவப்பட்டதும், உலகின் பல பகுதிகளில், இனம் என்பது ஒரு பொய்க்கதை (Race is a myth) எனும் பொருள்பற்றி மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இவற்றின் முடிவாக, உலகில் எங்குமே கலப்பற்ற-தூய்மையான-இனம் ஒன்று கூட இன்று இல்லை என்று அறிஞர்கள் முழங்கினர்.

மற்றொரு காரணம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தோன்றியமையாகும். இந்த இயக்கத்தின் நோக்கையும் போக்கையும் கண்டு, உள்ளார்ந்த தன்னல நோக்கம் கொண்டவர்கள் அஞ்சினர். இதனால் ஆரியராவது-திராவிடராவது? எனும் கருத்தைப் பரப்பத் தொடங்கினர். பிராமணர்கள் ஆரியர் அல்லர்; தமிழர்களே எனும் கருத்தைப் பரப்ப முயன்றனர்.

இதன் விளைவாகவே, மொழிவழிப் பண்பாடு பற்றிய எண்ணப் போக்கினை இந்திய அறிஞர்கள் வளர்த்தனர். இந்த நிலையில், பிறப்பால் பிராமணரும் இந்திய மானிட இயல் அறிஞருமான டாக்டர் எம்.என். சிறீநிவாசன், சமற் கிருத மயமாக்குதல் எனும் தொடரைத் தம்முடைய இந்திய கிராமங்களின் நிலை சிறப்பாக கூர்க்கு கிராமங்கள் எனும் ஆய்வேட்டில் 1956 அளவில் பயன்படுத்தினார். இப்புதுமை யான பெயர், உலக அரங்கில் மிக விரைவாகப் பரவியது. இதனால் சமற்கிருத மயமாக்குதல் எனும் தொடர் பெரு வழக்கிற்கு வந்தது.

பெரிய-சிறிய மரபுகள்


இந்திய மானிட இயல் அறிஞர் படைத்த இப்பெயரை ஏற்றுப் போற்ற, அமெரிக்கர்கள் தயங்கினர். இதனால், புதியதொரு பெயரை அவர்கள் படைத்து வழங்கலாயினர்.

சமஸ்கிருத வழிப்பட்ட எண்ணப் போக்கையும், வாழ்க்கை முறையையும் இணைத்து, பெரிய மரபு (Great Tradition) எனும் பெயரால் சுட்டினர். வடமொழியின் தாக்கத்திற்கு இரையாகாத பிற மொழிகளின் எண்ணப் போக்கையும், பண்பாட்டையும் சிறிய நெறி  (Little Tradition)  எனும் பெயரால் குறிப்பிடலாயினர். பெரிய மரபாக மாற்றுதல் என்பது இவர்கள் சமற்கிருத மயமாக்குதலுக்குக் கொடுத்த பெயராகும்.

இன்று மேற்கு நாட்டு அறிஞர்களுள் பலர், பெரிய நெறி, சிறிய நெறி எனும் தொடர்களையே பயன்படுத்துகின்றனர். ருஷிய, ஆசிய நாடுகளின் அறிஞர்களே சமற்கிருத மயமாக் குதல் எனும் தொடரினைப் பயன்படுத்துகின்றனர். இவ்விரு பெயர்களும், பண்பாட்டைச் சமற்கிருத மயமாக்குதலையே உணர்த்துகின்றன.

ஆனால், நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்று அறிஞர்கள், ஆரிய மயமாக்குதல் எனும் தொடரையே, தொடர்ந்து பயன்படுத்தியுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 10 .10 .19

வியாழன், 3 அக்டோபர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 14

1.10.2019 அன்றைய தொடர்ச்சி...


புராண விஷம்


இவைகளை எல்லாம் நீங்கள் ஊன்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மனதில் பல தலைமுறைகளாகப் படிந்துவிட்ட களிம்பை - புராண விஷயத்தை நீக்கிக் கொள்ளாவிடில் நாம் எவ்வகையிலும் வாழமுடியாது. வேத மத புராணக் கடவுள்கள் பற்றிய ஆபாசக் கருத் துக்களை மனத்திலிருந்து அகற்றினாலன்றி சிறிதும் முன்னேற்றமடைய முடியாது. இவைகளே நமது வாழ்வுக்கு வளப்பமாக முடியாது. நம் பெண்களுக்கும் அறிவு - பகுத்தறிவு ஏற்பட வேண்டும். கடவுள், தேவங் களினால் நமக்கு இதுவரை ஏற்பட்ட நன்மைதான் ஒரு துளியேனும் என்ன? துன்பங்கள், தாழ்வுகள் தவிர வேறென்ன கண்டோம்?

விபசாரம் - மோசடி - கொள்ளை


விபசாரம், மோசடி, கொள்ளை இவைகளைத்தானே வேதங்களும், மதங்களும் கடவுள்களும் போதிக் கின்றன. ஒரு அங்குலமாவது, இவைகளைக் கொண்டு நாம் முன்னேற முடிந்ததா? ஏமாற்று வேஷம் போட்டுப் பிழைக்கலாம். ஏமாற்றுவேஷம் வெளிப்படின் உதை படலாம் என்பது தவிர வேறெந்த வகையிலாவது முன்னேற்றத்துக்காக நாம் கண்ட மார்க்கமென்ன? திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பகுத்தறிவுவாதி கள் என்று சொல்லிக் கொள்ளுவோரில் பெரும்பாலோர் இன்னும் வேஷதாரிகளாகத்தானே இருந்து வருகிறார் கள்? யாரும் காணாதபோது விபூதி பூசுவது, வெளியே வரும்போது அழித்து விடுவது, உருவக்கோவில்களுக் குச் செல்லுதல், திருவிழா, பண்டிகை கொண்டாடுதல் இவைகளை இன்னும் அனுஷ்டித்து வருகிறார்கள் என்றால் மற்றவர்கள் சங்கதியை நாம் எப்படிக் குறை கூற முடியும்? இதற்கு நிவாரண வழிதான் என்ன?

பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை தப்பினாலும் தப்பலாம்; வேதம், மதம் கடவுள் ஆகிய இந்தப் பாம்பு களின் பிடிப்பில் விழுந்தால் தப்ப முடிவதில்லையே!

உலக அறிஞர்கள் ஏன் உலக அறிஞர்கள், நிபுணர் கள் என்று படிப்புக் காரணமாக, அறிவுத் திறமை காரணமாகப் பாராட்டப்படும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார், ஏ.ராமசாமி முதலியார், ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் இவர்களால் இந்தப் பிடிப்புகளில் இருந்து இம்மியும் விலக முடியவில்லையே! திராவிடர் கழக அனுதாபிகள் எனப்படும் இவர்களது போக்குகளும், புத்தியுமே இப்படி என்றால் சாதாரணமாக இருப்பவர் களைப்பற்றி என்ன சொல்லமுடியும்? நம்முன் கற்ற வர்கள் எனப்படுவோர்க்குத் தேர்தல் என்றால், எதை விட்டுக்கொடுத்தேனும் கொள்கை, மனசாட்சி, நேர்மை இவைகளில் எதைப்பற்றியும் கவலைப்படாது, எப்படி யாவது தேர்தலைச் சமாளித்தாக வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்றாகவேண்டும் என்றுதானே தோன்று கிறது? நல்லதொரு சமுதாயம் அநியாயமாக, வீணாகக் கெட்டுப்போகிறதே என்று யார் கவலைப்படுகிறார்கள்?

மாற்ற வேண்டும்


இவைகள் எல்லாம் அதாவது வேதம், மதம், புராண, கடவுள் பற்றிய, நமது பழங்கால முதற்கொண்டு இருந்து வரும் மனப்பான்மை, அடிமைப்புத்தி மாற்றமடைய வேண்டும்; இவைகள் தானே இலக்கியம், நாடகம், சினிமா முதலிய எல்லாத் துறைகளிலும் புகுந்து பெரும் இடையூறாக இருந்து வருகின்றன? ஆகவேதான், மாற்றம் வேண்டும் இல்லையேல் முன்னேற்றத்திற்கு மார்க்கம் இல்லை என்று கூறுகிறேன்.

மற்றபடி, எனக்கு வேறு யாருடனும் விரோதமே கிடையாது. வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளினால் என் மக்கள் நாசமாகி வருகிறார்கள், இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடிமைப் படுத்தப்படு கிறார்கள், சுரண்டப்படுகிறார்கள் என்று கூறுகிறேன். இவ்விதம் நான் சொல்லுவதும் அதற்காக ஏதோ என்னால் முடிந்த அளவு செயலாற்றுவதும், செயலாற்ற மக்களிடை பிரசாரம் செய்து தூண்டிவிடுவதும் பிடிக்க வில்லையானால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் சொல்லட்டுமே ஒரே வார்த்தை ஆரிய வேதம், மதம், புராணம், கடவுள்கள் இவைகளுக்கும் திராவிட மக்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று. அதைவிடுத்து பிரசாரத்தின் மீது காய்வார்க ளேயானால், இனியும் நாம் சும்மா இருப்பதில் பய னில்லை. மாதம் ஒருபடி முன்னேற்றம் கண்டோம் என்ற முறையில், மாதமொரு பண்டிகை திருவிழா என்றிருப்பதுபோல் மாதம்தோறும் ஏதேனும் ஒரு புராணத்தை எரித்தல், விக்கிரகத்தை உடைத்தல் முதலிய நடவடிக்கைகளில் இறங்கியே ஆகவேண்டும். நம்மீது புகுத்தப்பட்ட புராண நூல்களை எரிப்பதாலும், விக்கிரகங்களை உடைப்பதாலும் புராணங்கள் அனைத்தும் அழிந்துவிடும். விக்கிரகங்கள் கூண்டோடு மறைந்துவிடும் என்று நான் கூற வரவில்லை. இதைப் பார்த்த மக்களுக்கு, ஏன் எரிக்கிறார்கள்? ஏன் உடைக் கிறார்கள் என்ற கேள்விகள் பிறக்கும். அதுசமயம் புராணக் கடவுள்களின் ஆபாசங்களை எடுத்துரைத்து, இவைதானா எங்களுக்கு வழிபாட்டு நூல்களும், கடவுள்களும் என்போம் - விமோசனம் பிறக்காது போகுமா பார்ப்போம்.

தோழர்களே! நான் இதுவரை சொன்னதில் ஏதாவது, சிறிதாவது நியாயம் உண்மை இருக்கிறது என்று உங் களுக்குத் தோன்றினால், உங்கள் வீட்டில் மாட்டி யிருக்கும் கடவுள்களின் உருவப்படத்தை எடுத்து எறி யுங்கள்! நெற்றியில் சாம்பல் மண் இடாதீர்கள்! உருவக் கடவுள் உள்ள கோவில்களுக்குச் செல்லாதீர்கள்! துரோ கம், வஞ்சகம் செய்யாதீர்கள்! உண்மை பேசுங்கள்! மக்களை ஏய்க்காதீர்கள்! அதுதான் கடவுள் தொண்டு!.

- தொடரும்

- விடுதலை நாளேடு, 3 .10. 19