புரட்டு இமாலயப் புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரட்டு இமாலயப் புரட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா? -56

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

12.3.2020  அன்றைய தொடர்ச்சி

எனவே, ஆரியவர்க்கத்தார் தங்கள் நிலையை உயர்த்த, தங்கள் செல்வாக்கைப் பாதுகாக்க இந்த 20ஆம் நூற்றாண்டிலே, இவ்வாறு பச்சையாக சரித்திரத்திற்குப் புறம்பானதும், தங்களுக்கு அதைக்குறித்து சிறிதும் அறிவோ, ஞானமோ, இல்லாததுமான காரியத்தை சொல்லத் தயங்கவில்லையானால், அந்நாளில் சூதுவாதற்ற நம்மவர்களை - திராவிடர்களை என்னென்ன சொல்லி ஏய்த்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கக் கோருகிறோம்.

இதுவரை மூர்த்தியார் தங்கள் சமஸ்கிருத மொழியின் பெருமைகளைக் குறித்துக் கூறியதைக் கவனித்தோம். இனி தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் என்ன சொல்லுகிறார் என்பதை சிறிது கவனித்தால் ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த எத்தகைய முறையைக் கையாளுகிறார்கள் என்பது புலனாகும் என்று கருதுகின்றோம். சென்ற மாதம் 31ஆம் தேதியில் திருநெல்வேலி எம்.டி.டி. இந்து காலேஜ் சமஸ்கிருத ஆரம்ப விழாவில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் “சமஸ்கிருதத்தின் பெருமை களைக் குறித்துப் பேசுகையில் சமஸ்கிருதம் இறந்துபோன பாஷையென்று சொல்வதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் உயிருள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமஸ்கிருதம், ஆரிய மொழி (இது நாம் சொல்லும் பெயரல்ல. ஆங்கில இலக்கணாசிரியர்களே சமஸ்கிருதம் ஆரிய வர்க்கத்தைச் சேர்ந்தது என வகுத்திருக்கின்றனர்) இறந்துபோன மொழியென்றும், ஆரிய துவேஷிகளோ, பார்ப்பன துவேஷி களோ, சுயமரியாதைக்காரர்களோ, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களோ சொல்லுவதாக யாரும் எண்ணவேண்டாம். மொழி ஆராய்ச்சியாளர்களே, மொழிக்கு இலக்கணம் எழுதினவர்களே அவ்வாறு  கூறியிருக்கின்றனர். எம்மொழி பழைய எழுத்துச் சுவடியில் அதாவது எழுத்து வழக்கில் மட்டுமிருக்கிறதோ அதற்கு இறந்த மொழியென்றும், எம்மொழி எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலுமிருக்கிறதோ அதற்கு உயிருள்ள மொழிகள் எனவும், ஆராய்ச்சியாளர் வகுத்திருக்கின்றனர். ஆங்கிலத் தில் அதைக் குறித்து எழுதியிருப்பதை  அப்படியே வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். அதாவது,

“A living language is one which is used in common speech. A language which has ceased to be spoken but is found in writings of the Past is a Dead Language. Sanskrit and Latin are dead Languages " என எழுதப்பட்டிருக்கிறது.

இறந்த மொழிக்கு உள்ள லட்சணம், இன்னது இந்த லட்சணத்தை உடைய மொழிகள், இறந்த மொழிகள் என்று சொல்லுகையில், “நான் அவ்வாறு சமஸ்கிருதத்தை இறந்த மொழியென்று சொல்லுவதைக் கண்டிக்கிறேன். சமஸ்கிருதம் இறந்த மொழியன்று” என்று சொல்லி காரணம் கூறாமல் ஆத்திரப்பட்டுக் கண்டிக்க முன்வருவதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறோம்.

இதுவரை சமஸ்கிருதம் இறந்த மொழி என்று சொல்லப்பட்டு வந்திருக்க, அதைப்பற்றிச் சிறிதும்கவலை கொள்ளாது, இன்று மட்டும்  இவர் இவ்வாறு ஆத்திரங்கொள்ளக் காரணம் என்ன என்றால், திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள், சமஸ்கிருதம் இறந்த மொழியென்று சொல்லி வருவது மறைக்கப்படாவிட்டால், “இறந்த மொழியாகிய சமஸ்கிருதம் இந்நாட்டிற்கு என்ன அவசியம்? அதற்கு ஏன்  ஒவ்வொரு  உயர்தரக் கலாசாலைகளிலும் தனிப் பண்டிதரும் அதற்கு கரிக்குலத்தில் அதாவது பாடத் திட்டத்தில் தனி இடமும் கல்லூரிகளில் சமஸ்கிருத பேராசிரியர்களும் என்று கருதி அதை ஒழித்து விடுவார்கள்” என்ற அச்சத்தைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

அதோடு நின்றார் இல்லை ஆச்சாரியார். சமஸ்கிருதம் தெரியாத இந்தியனுக்கு எந்நாட்டிலும் மதிப்பில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது எவ்வளவு விஷமுள்ள ஆணவமான பேச்சு என்பதை எண்ணிப்பார்க்கக் கோருகிறோம். இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் உலகத்தினரால் மதிக்கப்படவேண்டும் எனக் கருதினால்தானே சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். அதனால்தான் திருவாரூர் ஜஸ்டிஸ் மாநாட்டில் திராவிடன் தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும், தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளக் கூடாதென்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

எனவே, ஆச்சாரியார் வாதப்படி இந்தியன் என்று எவன் தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறானோ, எவன் தன்னை உலகோர் மதிக்க வேண்டுமென எண்ணுகிறானோ அவன்தான் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமென்பதும், திருவாரூர் மாநாட்டு தீர்மானப்படி, திராவிடர் என்று சொல்லிக் கொள்கிற வனுக்கு சமஸ்கிருதம் தெரியவேண்டிய அவசிய மில்லையென்பதும் நன்கு விளங்கும்.

இதிலிருந்தாவது ஆரியவர்க்கத்தினர், தங்கள் மொழி யைக்  குறித்து எவ்வளவு உயர்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், தமிழ் மொழியையோ அல்லது வேறு மொழி களையோ குறித்து எவ்வளவு தாழ்வு கொண்டிருக்கின்றனர் என்பதையும், எண்ணிப் பார்க்கவே கோருகிறோம். கடைசியாக, ஆரியத்திற்கு இந்நாட்டிலே சாவுமணி அடித்தாய் விட்டது என்பதை ஆரியவர்க்கத்தினர் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டனர் என்பதையும், அதன் காரணமாக சரித்திரத்திற்கும், உண்மைக்கும் புறம்பானதும் பொருத்தமற்றதுமான காரியங்களைச் சொல்லி எப்படியாவது ஆரிய ஆதிக்கம் நிலைக்க அருமுயற்சிகள் எடுத்து வருகிறார்கள் என்பதையும், இப்பொழுதே திராவிடர்கள் விழிப்பாயிருந்து மக்களுக்கு அவ்வப்போதே உண்மையை விளக்கி, சரித்திர ஆதாரங்களை எடுத்துக்காட்டி ஆரிய சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமென்பதும் விளங்குகிறது அல்லவா? என்று கேட்கிறோம்.

இதைச் செய்ய ஒவ்வொரு திராவிடரும் முன் வருவார்களாக

- விடுதலை நாளேடு 17 3 20

வெள்ளி, 13 மார்ச், 2020

சமஸ்கிருதம் உயிருள்ளதா?

குடிஅரசு,  08.09.1940-லிருந்து...

இந்தி மொழி கட்டாயப் பாடமாக திராவிட நாட்டில், காங்கிரஸ் (ஆரிய) மந்திரிகளால் புகுத்தப்பட்ட காலையில், இந்தி ஆரிய வர்க்க மொழியென்றும், அம்மொழி கட்டாயப் பாடமாக சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுமேயாகில், திராவிடச் சிறுவர்கள், எதிர் காலத்தில், திராவிடக் கலை, நாகரிகம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளை மறந்து ஆரியத்திற்கே அடிமையாய் விடுவார்கள் என்றும், மக்களின் வாழ்க்கையைத் திருத்துவதற்கு ஒரு ஒழுங்குபடுத்துவதற்கு கல்வியைத் திருத்தியமைத்தால் போதும் என்றும், அதை இன்று ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் கண்கூடாகப் பார்க்கலாம் என்றும், எனவே, இந்திமொழி கட்டாயப் பாடமாக புகுத்தக்கூடாதென்று கூறி மறுத்து வந்தது எவ்வளவு உண்மையானது என்பதை  சமீபகாலமாக இந்(திராவிட) நாட்டிலுள்ள ஆரிய வர்க்கத்தினர் சாஸ்திரிகளும், ஆச்சாரிகளும் பேசிவருவதும், அறிக்கைகள் விடுவதும் நன்கு விளக்கும்.

ஆரிய ஆதிக்கத்தை ஆரிய செல்வாக்கை இந்நாட்டை விட்டு விரட்டியடிக்க, குழி தோண்டிப் புதைக்க திராவிடர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தூங்கினவன் தொடையில் கயிறு திரிப்பது இனி செல்லாது என்பதை உணர்ந்துதான் ஆரிய வர்க்கத்தார், அதை நிலைநிறுத்த வேறு வழி செய்தால் பலிக்காது என்று கருதி மொழியின் மூலமாக இஞ்சக்‌ஷன் செய்ய முனைந்திருக்கின்றனர்.

நாம் ஒன்று மிகைப்படுத்தியோ, அல்லது அவர்களைப் போல் கற்பனை செய்தோ கூறுவதாக யாரும் கருதவேண்டிய தில்லை. நாம் சொல்வது எவ்வளவு ஆதாரமுடைய தென்பது இந்நாட்டில் பத்திரிகைகள் படிப்போர்களுக்கு நன்கு தெரியவரும். அவர்கள் ஒரு நாளும் நாம் சொல்வதை மறுக்க முன்வரார் என்றே கருதுகிறோம். உதாரணத்திற்காக இரண் டொருவர் பேசியதை மட்டும் எடுத்துக் காட்டினால் வாசகர்கள் உண்மையை உணர்ந்துகொள்ள முடியுமெனக் கருதுகிறோம். சென்ற 2ஆம் தேதி சென்னையில் பச்சை யப்பன் கல்லூரி சமஸ்கிருத மாணவர் சங்க ஆதரவில் நடை பெற்ற ஒரு கூட்டத்தில் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் பேசுகை யில், “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் வளர்ச்சியும் பெருமையும் ஏற்பட்டதென்று நான் கூறுவேன்” என்று கூறியிருக்கிறார்.

நியாயப்படி இவர் சொல்லியிருக்க வேண்டியது, “தமிழுக்கு சமஸ்கிருத சம்பந்தம் ஏற்பட்டதினால்தான் இழிவும், சிறுமையும் ஏற்பட்டிருக்கிறதென நான் கூறுவேன்” என்பதாகும். இதற்குத்தான் என்று கட்டாய இந்திப் போர் இந்நாட்டில்  துவக்கப்பட்டதோ அன்று முதல் நாளது வரை சமஸ்கிருத மொழியால், தமிழ் மொழி எந்தெந்த வகைகளில் வளர்ச்சி குன்றி பெருமையிழந்து சிறுமையுற்றிருக்கிறதென்று ஆதாரங்களுடன் தமிழ்ப் பேராசிரியர்கள் முதல் பண்டிதர்கள் ஈறாகக் கட்டுரைகள் வெளியிட்டும், பிரசுரங்கள் பிரசுரித்தும், வாதங்கள் நடத்தியும் வந்திருக்கின்றனர் என்பதை வாசகர் கள் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறோம்.

சமஸ்கிருத சம்பந்தத்தினால்தான் தமிழ் மக்களை, ஒரு சாதாரண கலியாணப் பத்திரிகையைக் கூட சமஸ்கிருத மொழிக் கலப்பில்லாமல் எழுதமுடியாத நிலைக்குக் கொண்டு வந்து விட்டதென்றால், இதை யாரும் மறுக்க முன்வருவார் என்று நாம் நம்பவில்லை. இத்தகைய நிலைமை உலகில் வேறு எந்நாட்டிலேனும் இருப்பதாக இவர் சொல்ல முன் வருவாரா என்று கேட்கிறோம். ஒரு ஆங்கிலேயன் ஆங்கிலத்தில் கலியாணப் பத்திரிகையை எழுதவும், ஒரு பிரஞ்சுக்காரன் பிரஞ்சு மொழியில் எழுதவும், ஒரு ஜப்பானியன் ஜப்பானிய மொழியில் எழுதவும் முடியாத நிலையிலும் இருக்கிறானா என்று எடுத்துக்காட்ட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

இன்று பள்ளிக் கூடங்களில், கணிதம். பூகோளம், சரித்திரம், ரசாயனம், பவுதிகம் ஆகியவைகளில் வழக்கி லிருந்து வரும் எண்ணற்ற சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்று எந்த தமிழ் மகனாவது  ஒப்புக்கொள்வானா என்று கேட் கிறோம். இவை களுக்கு தமிழ் மொழியில் சொற்கள் இல்லாது ஒழிந்துவிட்டனவா? இல்லை. எல்லாவற்றிற்கும் இருக் கின்றன. அப்படியிருந்தும் ஏன் சமஸ்கிருத மொழிச்சொற் களை உபயோகித்து வருகின்றனர் என்றால், சமஸ்கிருத மொழிக்கு உயிரைக் கொடுத்து தமிழ்ச் சொற்களை வழக்கிலி ருந்து மறையச் செய்ய வேண்டும் என்ற சூழ்ச்சியைத் தவிர, வேறு என்னவாயிருக்க முடியும் என்று கேட்கிறோம்.

இவ்வாறு தமிழ் மொழியின் சொற்களை சொல் வழக்கிலிருந்து மறையச் செய்து அவ்வெழுத்துக் கொண்ட சமஸ்கிருத மொழிச் சொற்களை வளர்ப்பதுதான் தமிழ் மொழி வளர்ச்சியடைவதும் பெருமையடைவதும் என்ப தற்கு அறிகுறியா என்று கேட்கிறோம்.

எனவே, சமஸ்கிருதமொழிக் கலப்பால் தமிழ்மொழி எவ்வகையிலும் வளர்ச்சி பெறவோ, பெருமையடையவோ இல்லையென்பதும் அதற்கு மாறாக தமிழ் மொழி சிதைவுற்று அதன் பண்டைய பெருமையெல்லாம் அழிவுற்றுமிருக்கிறது என்பதும் விளங்கும்.

ஒரு மொழி, மற்றொரு மொழியுடன் சம்பந்தம் கொள்வதால் சம்பந்தம் கொள்ளும் மொழி கேடுறாது, சிதைவுறாது என்று கூறும் மூர்த்தியாருக்கு இரண்டு மொழிகளைக் குறித்து எவ்வளவு ஞானம் - அறிவு இருக்கிறது என்று முதலில் ஒரு வினா எழும். அந்த வினாவுக்கு  அவரது பேச்சிலே விடையிருக்கிறது. அதாவது, “நான் தமிழில் ஒரு நூல்கூட வாசித்ததில்லை. சில நாவல்கள் மட்டுமே படித்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் எனக்கு கொஞ்சம் பரிச்சயம் உண்டு” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது செப்டம்பர் 3 ஆம் தேதிய சுதேசமித்திரன் 5 ஆம் பக்கம்  3 ஆம் கலம் தலைப்பிலிருந்து 9 ஆம் வரியிலிருந்து 4, 5 வரிகளில் காணக்கிடக்கிறது.

எனவே, ஒரு மொழியின் கலப்பால் மற்றொரு மொழி கெடாது என்று கூறும் - வாதிக்கும் வாதம் நியாயமானதா நியாயமற்றதா என்பது ஒரு புறமிருந்தாலும் வாதிக்க அவருக்கு அருகதையிருக்கிறதா என்பதை முடிவு கட்டும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறோம். இவ்வாறு, முன்னுக்குப்பின் சம்பந்தமில்லாமல் பேசிவருகிறார்களே, அதையும்  பத்திரிகை களில் பிரசுரித்து வருகிறார்களே யென்றால், அது நம்மவர்களின் ஏமாளித்தனத்தை அல்லாது வேறு எதைக் காட்டுகிறதென்று கேட்கிறோம். ‘தட்டிக்கேட்க ஆள் இல்லையேல் தம்பி சண்டப்பிரசண்டன்தான்’ என்று நாட்டிலே சொல்லுவார்கள். அவ்வாக்கு இன்று இவர்களுக்குத் தான் பொருத்தமாயிருக்கிறது. இவ்வாறு முரணாகப் பேசிவருவதை இமைகொட்டாமல் மக்கள் கேட்டுக் கொண்டிருந்த தினால்தான் சிறிதும் சரித்திரத்திற்கும் உண்மைக்கும் மாறாக கம்பன் சமஸ்கிருதத்தில் சிறந்த பண்டிதர் எனக் கூறியிருக்கிறார்.

கம்பன் சிறந்த சமஸ்கிருத பண்டிதர் என்று எந்த ஆதாரத்தின் மீது மூர்த்தியார் கூறுகிறாரோ நாமறியோம். கம்பனுக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த இராமாயணத்தை சமஸ்கிருத பண்டிதர்கள் வாசித்து விளக்க, அதைக் கேட்டு கம்பர் தமிழில் எழுதினார் என்று இராமாயணத்திலே சான்று இருக்கிறது. அதை மூர்த்தியார் பார்த்ததில்லையா? எவ்வாறு பார்த்திருக்க முடியும்? அவருக்குத்தான் தமிழில் சில நாவல்களைத் தவிர, வேறு எந்த நூலும் தெரியாதே, அப்படியிருக்க, அதை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்?

தொடரும்....

- விடுதலை நாளேடு, 12.3.20

சனி, 29 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 48

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

சமுதாயம் என்றால் என்ன?

சமுதாயம் என்பது மனித இனம்தான் கூட்டு வாழ்க்கை வாழ்வதற்கென்று தன்னை ஒத்த மனிதர்களுடன் (உருவத் தில், மனநிலையில்) அமைத்துக்கொண்ட ஓர் அமைப்பாகும். தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் ஏற்ப ஏற்றுக் கொண்ட ஓர் அமைப்பாகும். எனவே, சமுதாயம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், அதைச் செயல்படுத்த ஏற்றுக்கொண்ட ஆணைகள் அத்து ணையும் கொண்டது எனலாம்.

இவைகள் ஏற்பட மனித இனம் ஒரு மொழி, மக்கட் தொகை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்கின்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படி அமைகின்ற அமைப்பானது அந்தக் குழு மக்களுக்குரிய உரிமைகளை, உடைமைகளைக் காப்பாற்றக்கூடிய வலுவு டையதாகவுமிருக்க வேண்டும். எனவே, அந்தச் சமுதாயம், அந்த மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகள், தேவைகள், எண்ண ஓட்டங்கள் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

உலகில் பல சமுதாயங்கள் தோன்றுவதற்கும், மொழிகள் ஏற்படுவதற்கும் மேலே கூறியவைகள்தாம் காரணமாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

தமிழ்ச் சமுதாயம் மிகப் பழமையானதொரு சமுதாயமாக அறிஞர்களால் கருதப்படுகிறது.

பன்னெடுங்காலத்துக்கு முன் ஆஸ்திரேலியா, ஆப் பிரிக்க கண்டங்களை உள்ளிட்டு நில நடுக்கோட்டுப் பகுதி யில் நிலவிய இலமூரியா கண்டத்தின் ஓர் பகுதியாக, தென் னிந்தியா, தமிழகம் விளங்கியது.

ஆரியர்கள் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திரா விடர்கள் வாழ்ந்தனர். அவர்களது பண்பாடு பரவி இருந்தது என்று பேரா. ஏ.சி. ஹாடன் கூறுகிறார்.

வரலாற்றில் உயர்வளமான சிந்து சமவெளி நாகரிகம்-திராவிட நாகரிகமென பல வரலாற்றுப் பேராசிரியர்கள் அறுதியிட்டுக் குறிப்பிடுகிறார்கள். எனவே, 5000 ஆண்டு களுக்குமுன் தமிழினம் சிந்து முதல் பஃறுளி ஆறுவரை பரவியிருந்த ஒரு தனி இனம் எனக்கொள்ளலாம். சிறப்பான நாகரிகத்தையும், செம்மொழியையும் பெற்றிருந்த ஓர் இனமாக தமிழினம் வாழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கிலும் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் வட வேங்கடம் தென்குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் (தொல்-சிறப்புபாயிரம்) என்றும், 12-ஆம் நூற்றாண்டில் எழுந்த நன்னூல் காலத்தில் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கெல்லையின் எனக் குறுகியது. இன்று வேங்கடத்தையும் பறிகொடுத்துக் கூனிக்குறுகி வாழ்கின்ற நிலையிலுள்ளது.

ஆரியர்கள் (நடு) ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, கொஞ்சம் கொஞ்சமாக வடக்கிலேற்பட்ட படையெடுப்புகளின் காரண மாகத் தென்னகம் நோக்கி இடந்தேடியும், மன்னர்களின் ஆதரவைப் பெற்றும் தமிழகத்தில் குடும்பங் குடும்பமாக குடியேறினார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆரியர்கள் தமிழர்களுடன் போரிட்டதாக வரலாறில்லை. அவர்கள் ஊடுருவி, அடுத்துக்கெடுத்து, ஆரியக் கூத்தாடி அரசர்களை வீழச்செய்து, தங்களுக்கும் தங்கள் மொழிக்கும், கலாச்சா ரத்துக்கும் ஏற்றத்தைப் பெற்றார்கள். சமூகத்தில் பல மாறுதல் களைப் படிப்படியாக உண்டாக்கி உண்டு கொழுத்து வாழ்ந் தார்கள் - வாழ்கிறார்கள் என்பதும் வரலாறு மெய்ப்பிக்கும் பேருண்மை, கி.மு. 600க்குப் பிறகே வடநாட்டு ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறியிருக்க வேண்டும்.

சமணமும், பவுத்தமும், மூண்டெழும் காட்டுத் தீப்போல் தமிழகத்தில் பரவியதைக் கண்ட ஆரியப் பார்ப்பனர்கள் தம் வைதீக நெறியைத் தமிழகத்தில் பரப்ப வேண்டுமென தமிழகத்தில் நுழைந்தனர். அவர்களின் பெயரே அதைக் குறிப்பதாக உள்ளது. பார்ப்பனர்களில் பெரும்பான்மையினர் பிருகத்சரணர் என்பர். அதற்குப் பொருள் பெரும்பயணர் எனக்கொள்ளலாம். பெரும் பயணத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டில் குடியேறி யாதும் ஊரே யாவரும் கேளீர் என வாழ்ந்த தமிழனை ஏமாற்றி ஏற்றங் கொண்டனர். ஏற்றங் கொண்டோர் இன்றுவரை புலிவேடம் போடுகிறார்கள்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? என ஆராய்வதுதான் இக் கட்டுரையின் நோக்கம். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகதப் பேரரசை ஆண்ட நந்தர்கள் தமிழகத்தின் மேல் படை யெடுத்தனர். பின்னர் மகதப் பேரரசைக் கைப்பற்றி மவுரியப் பேரரசு ஆட்சி புரியத் தொடங்கிற்று. அன்றிலிருந்து ஆரியப் பார்ப்பனர்களின் குடியேற்றமும், ஊடுருவலும் தொடர்ந்து ஏற்பட்டன எனலாம். இக்குடியேற்றம் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நிகழ்ந்திருக்கலாம் எனப் பேராசிரியர் கே.எம். பணிக்கர் கருதுகிறார்.

மொழிக் கலப்புகள்; பண்பாட்டு ஊடுருவல்களால் பல தமிழ்ப் பெயர்கள் சிதைந்தும், மறைந்தும் போய்விட்டன. அவற்றுக்கேற்ப வடமொழிப் பெயர்களும், சொற்களும் வழங்கலாயின. அதன் விளைவாக ஆரிய நாகரிகம் தமிழகத் தில் வேரூன்றி பரவத் தொடங்கியது.

கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிவு கூட இல்லாத ஆரியர்களுக்கு அரசியல், சமூகவியல், பொருளியல், ஞான இயல் ஆகியவைகளில் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா?

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரிகத் தையும் மறந்தான். தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான் என்று தந்தை பெரியார் அவர்கள் சேலத்தில் 3-9-1939இல் குரல் எழுப் பினார்கள்.

தமிழ்நாட்டில் பலகாலமாக சமற்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் தேவ பாஷை எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம் சாத்திரம் ஆகி யவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும், பயன்படும் என்றுகாட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மை கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள். விடுதலை (15-2-1960)

திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுத்தி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்க ளுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும் படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகி விட்டது (விடுதலை 27-11-1948).

என தந்தை பெரியார் அவர்கள் வடமொழியின் கலப் பால், ஆரிய கலாச்சாரத்தின் கலப்பால் ஏற்பட்ட தீங்கினை நாட்டுக்கு எடுத்துரைத்தார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரியமாயையில் கூறு கிறார்கள்: ஒரு காலமிருந்தது. தமிழர்கள் ஆரியரை நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாக கருதியக் காலம், ஆரிய இனம் வேறு எனும் எண்ணம் மங்காதிருந்தக் காலம். ஆரியத்தைக் கேலிக்கூத்தாக கருதியக் காலம்.

இன்றோ ஆரியரைப் போன்ற புத்திக்கூர்மை நடையுடை பாவனை, ஆசார அனுஷ்டானம், பூசை புனஸ்காரம் இருப் பதே தமிழருக்கு சீலத்தையும் சிலாக்கியத்தையும் தந்திடும் என்று தவறான கருத்து தழைத்துக் கிடக்கிறது. காலம் முளைக்கச் செய்த இந்தக்கள்ளி படர்ந்திருப்பதாலேயே நாச நச்சரவுகள் இங்கு நடமாடி தமிழர் சமுதாயத்தைத் தீண்டி தீய்த்து வருகின்றன.

பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரன் சரிந் ததும், கலை கறையானதும், நிலைகுலைந்ததும் ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை உலகு தெரிந்துகொள்ளவில்லை. ஆரியர்-திராவிட இனத் தினரிடையே கருத்திலே போதை மூண்டிட செய்துவிட்டுப் பிறகு கீழே உருட்டி விட்டனர். திராவிடன் ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தைத் தாங்கும் சுமை தாங்கியானான், சோர்ந்தான், சுருண்டான். இந்த சூட்சுமத்தை அறியாதார் தமிழர் வரலாறு அறியாதாரே.

இந்தியாவில் ஆரிய ஆட்சி என்ற நூலில் ஹாவல் எழுதுகிறார். ஆரிய மதக் குழியிலே வீழ்ந்ததால், அறிவு, ஆற்றல், ஆண்மை, மானம் எனும் பண்புகளை திராவிடன் இழக்க வேண்டி நேரிட்டது.

தமிழ் முழக்கம் என்ற நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை எழுதுகிறார், (பக்கம் 75) திராவிடம் என்ற பெயர் வடமொழியில் தமிழையே குறிப்பது. வட நூலாசிரி யரான குமாரியபட்டர் தம் காலத்தில் இக்குழுவில் திராவிடம், ஆந்திரம் என இரு பகுதிகளே இருந்தன எனக் குறிப்பர். கன்னடம், மலையாளம், துளு முதலிய மொழிகள் தம்முள் ஒத்து தமிழையே சார்ந்தும் நிற்கின்றன என்று காட்டுவார் கால்டுவெல்.

வகுப்பு பாராட்டாத தமிழரை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றிருந்த தமிழரை நான்கு வருணமாகப் பிரித்து அதில் நாலாயிரம் ஜாதியை உண்டாக்கி தமிழனை என்றென்றும் ஒன்றுபடாமல் செய்துவிட்டனர் ஆரிய பார்ப்பனர்கள்.

ஆரியர்கள் இலக்கியத்தில் நுழைந்து தங்கள் கொள்கை களைப் புகுத்திவிட்டனர். இடைக்கால நூலான கம்ப இராமா யணம் கொள்கையளவில் தமிழினத்திற்கு ஏற்புடையவை அல்ல. பார்ப்பனீயத்துக்கு கருவியாக பயன்பட்டிருக்கிறது. கவர்ச்சியான கவிதையில் ஆரிய நஞ்சு கலக்கப்பட்டுள்ளது. அவைகளால் வருணாசிரம தர்மங்கள் மூடப்பழக்க வழக்கங் கள் புகுத்தப்பட்டு தமிழின் தனித்தன்மைகள் அழிக்கப் பட்டன. எனவேதான் தந்தை பெரியார் கலாச்சார, பண்பாட்டு புரட்சிகளையெல்லாம் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தினார் கள்.

சிந்து சமவெளி நாகரிகம் ஒரு உள்நாட்டு நாகரிகம் என்ப தில் சந்தேகமில்லை. அதன் வேர்களும், கிளைகளும் தென் னிந்தியாவில் காணப்படுகிறது. அது திராவிட நாகரிகமும், தென்னிந்திய கலாச்சாரமும் என்று பல அறிஞர்கள் கருது கின்றனர். (நேரு-இந்தியாவின் கண்டுபிடிப்பு-பக்கம்-72)

ஆரியர்கள் படையெடுப்பு சிந்து சமவெளி நாகரிகத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் நேர்ந்திருக்க வேண்டு மென்கிறார் நேரு இந்து என்ற சொல் பழமை இலக்கியங்களில் காணப்படவில்லை. (பக்கம்-74).

ஜாதி பாகுபாடுகள் ஆரியர்கள் திராவிடர்களிடையே கலப்பு ஏற்படாமலிருக்கச் செய்த செயல்பாட்டுத் திட்டம். (பக்-85)

இந்தியாவில் பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கண்டுபிடித்த ஆயுதம்தான் ஜாதி. அதனால் அவர்கள் தங்களை பலம் பொருந்திய மேலாதிக்கக்காரர்களாக ஆக்கிக் கொண்டார்கள். (பக்-86)

மகாபாரதக் கதை வடபுலத்தில் ஆரியர்கள் இந்தியாவின் ஒற்றுமை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட முயற்சியே! அன் றைய நிலையில் ஆரியர்கள் விந்தியத்துக்கு வடக்கேதான் ஆதிக்கம் பெற்றிருந்தனர். இராமாயணம் ஆரியர்கள் விந்தி யத்துக்கு தெற்கேயும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய தைக் குறிப்பிடுவதுதான் (பக். 107)

மேலும் கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் எப்படி ஆரி யர்கள் திராவிடர்களிடையே ஊடுருவல் செய்தார்கள், இது ஓர் கலாச்சார அடிப்படையில் ஏற்பட்டதென்பதையும் குறிப் பிடுகிறது. அதில் சமூகத்தில் ஜாதி பாகுபாடுகளை ஏற்படுத் துவதையும் குறிப்பிட்டுள்ளது. (பக். 110)

ஜாதி பாகுபாடுகள் இந்திய சமூகத்தின் கழுத்தை நெரிக் கும் அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவிதி என்று சொன்னால் மிகையா காது. (பக். 121) அது இந்தியாவில் முன்னேற்றத்தைத் தடுத்து, தேக்க நிலையை உண்டாக்கியது.

குப்த பேரரசு பார்ப்பனர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை மய்யமாகக் கொண்டு இந்தியா முழுமையும் அரசோச்சியது. (பக்கம்-137)

மதத்தையும் ஆத்மீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அமைக்க அன்றைய பேரரசுகள் தீவிர மாக உழைத்தன. அவைகளை பார்ப்பனீயம் (Brahminism) எனலாம். அதனடிப்படையில் இந்து (Hinduism)  என்பது தேசியத்தின் (Nationalism) சின்னமாகிவிட்டது. (பக்-138)

அடிக்கடி வட இந்தியாவில் ஏற்பட்ட படை எடுப்புகளின் விளைவாக ஆரியர்கள் தெற்கு நோக்கி குடிபெயர்ந்து தென்னிந்தியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டனர். (பக்-140)

எனவே இந்திய சமூக அமைப்பு ஜாதீய பாகுபாடுகளைக் கொண்ட அமைப்பாக பார்ப்பனர்கள் தங்களது சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் செய்துகொண்டார்கள். தாங்கள் அரசுகளில் நுழைந்து வடமொழியையும், வர்ணாஸ்ரம தர்மத்தையும் செயல்படுத்த அரசர்களை பணிய வைத்தார்கள் என்பது தேற்றம்.

ஒரு நாட்டில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டுமானால், அந்தச் சமுதாயத்தினுடைய மொழி அழிக்கப்பட வேண்டும். மொழியை அழிக்க சமுதா யத்தினுடைய பண்பாடுகள், நாகரிகம், கலை, பழக்கவழக் கங்கள் அழிக்கப்பட வேண்டும். அதை ஆரியப் பார்ப்ப னர்கள் செய்தார்களென்பதை நேருவின் கண்டுபிடிப்பு கருத் துகள் வலியுறுத்துகின்றன. தமிழ்நாட்டில் பார்ப்பனீயம் நிலை நாட்டப்பட்டது.

தொடரும்

- விடுதலை நாளேடு 11 2 20

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்க்கை சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 50

பேராசிரியர் தி. இராமதாஸ் எம். ஏ. பி.எல்.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரி யர் தி.இராமதாஸ் எம்.ஏ.பி.எல். ஆற்றிய உரை வருமாறு:

13.2.2020 அன்றைய தொடர்ச்சி...

எனவே, வடமொழியில் பார்ப்பனரால் எழுதப்பட்ட வேத, ஸ்மிருதிகள் தமிழ் நாட்டில் ஏறக்குறைய 2300 ஆண்டுகளாகச் செயல்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம். கல்வி கற்றால் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும், வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி; மீறிக்கற்றால் சிரச்சேதம் செய்ய வேண்டுமென விதி செய்யப்பட்டு இராமாயணத்தில் சம்பூகவதம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வடமொழியால் தமிழ் எந்த அளவு பாழ்படுத்தப்பட்டது என்பதை தந்தை பெரியார் பிறந்து, தமிழ் மொழி (இயல், இசை) போராட்டம் துவங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட திருமண அழைப்பிதழ்களே சான்று பகரும்.

ஸ்ரீ லக்ஷிமி வேங்கடேச பிரசன்னஹ விவாஹ சுப முஹூர்த்தப் பத்திரிகா.

மகா-ள-ள-ஸ்ரீ...................... அவர்களுக்கு உபயகுசேலபரி. நாளது வருஷம்......................................................தேதி ஆதித்தவாரம் ஸ்வாதி நக்ஷத்திரங் கூடிய சுபயோக சுபதினத்தில் ............................. மணிக்குமேல் ............................ உள் சிம்ஹ லக்கினத்தில் எனது ஜேஷ்ட குமாரத்தி சௌ...........................யை கிராமத்திலிருக்கும் மிராஸ்தார் மகா-ள-ள-ஸ்ரீ..................... கனிஷ்ட குமாரர் சிரஞ்சீவி..........................கன்னிகாதானஞ் செய்து கொடுப்பதாக நிச்சயிக்கப்பட்டு  சுப முஹூர்த்தம் எனது கிரஹத்தில் நடக் கிறபடியால் தாங்கள் இஷ்டமித்திர பந்து ஜன குடும்பேதராய் விஜயஞ்செய்து வதூரர்களை ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.

தங்கள் விதேயன் -

சமற்கிருதம் 75, தமிழ் வார்த்தைகள் 20 கொண்டதுதான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதப்பட்ட இத் திருமண அழைப் பிதழ். இதற்கு மணிப் பிரவாளய நடை என்று பெயர். இன்றும் பார்ப்பன செய்தித்தாள்கள் இந்த நடையைத்தான் ஆங்கிலச் சொற்களும் சேர்த்துக் கையாளுகின்றன.

இன்றைக்கும் சங்கராச்சாரி தமிழை நீச பாஷை என்று தான் குறிப்பிடுகிறார். கோயில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்கிற விதிகளும் கர்ப்பகிரு ஹத்தில் பார்ப்பனன்தான் செல்லலாமென்கிற விதியும் உள்ளது.

இன்றும் சங்கராச்சாரியார் நடத்தும் மடங்களில், பள்ளிக ளில் சமற்கிருதம் தான் பயிற்றுவிக்கப்படுகிறது-பார்ப்பனப் பிள்ளைகளைத் தவிர சூத்திரப்பிள்ளைகளுக்கு அக்கல்விச் சாலையில் இடமில்லை என விதி ஏற்படுத்தியுள்ளனர். பார்ப்பான்தான் சங்கராச்சாரி ஆகலாம்.

பெரிய சீர்திருத்தக்காரர் எனப்படும் தமிழ்நாட்டு வைணவ சமயத் தலைவர் இராமானுசர் தாம் இயற்றிய நூலை வடமொழியிலேயே எழுதினார். 74 பார்ப்பனர் களையே குருமார்களாக்கிச் சென்றார். இன்றைய வரையிலும் பார்ப்பனர்கள்தாம் குருமார்களாகலாம்.

கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் விளைத்த குழப்பத்தாலும் பல்லவர்கள் படையெடுப்பாலும் தமிழகம் அல்லற்பட்டு நின்றது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் வேதக் கல்வியையும், சமற்கிருதக் கல்வியையும் இணைத்து சமயத்துக்கும் ஆட்சிக்கும் சமற் கிருதமொழி காஞ்சியில் பல்லவர்களால் பயன்படுத்தப்பட்டது.

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே    (குறுந். 40)

என்று வாழ்ந்த தமிழனை, அவனது கொள்கையை, கோட்பாடுகளை, பழக்க வழக்கங்களை கைநழுவ விட்டு, கோவலன் கண்ணகி இவ்விருவரின் பெற்றோரும் மண நிகழ்ச்சி காண மகிழ்ந்து மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி டத் தீவலம் வந்த காட்சியைச் சிலம்பில் காண்கிறோம்.

பல்லவர் காலத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாதாபியைப் படையெடுத்து அங்கிருந்து கொணர்ந்த கணபதி இன்று எங்கும் நிறைநாதமாய், தெரு முனைகளில் எல்லாம் காட்சியளிக்கக் காண்கிறோம்.

மணவிழாவில் தாலி கட்டியதாகச் சங்க காலத்தில் சான்றுகள் கிடையா. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் தான் காணப்படுகிறது.

பார்ப்பனர் சிலப்பதிகார காலத்திலேயே ஏற்றம் பெற்றனர் என்பதற்கு கண்ணகி மதுரைமீது தீயை ஏவியபொழுது பார்ப்பனர்மீது செல்ல வேண்டாமெனக் கூறியதாகத்தானே உள்ளது. (சில. 21-53). சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அய்ம்பெருங்குழுவில் புரோகிதர் இடம் பெறுகின்றார்.

மேலும், தமிழகத்துச் சிந்தனையாளர்களாகிய சித்தர் களும் வெறுத்தனர், மறுத்தனர். நால்வருணம் ஆச்சிரமம் முதலாம் நலின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை வினை விளையாட்டே ஜாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம், சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம் என்றெல்லாம் கடிந்துள் ளனர். பார்ப்பனர்களுக்கு அரசு ஆதரவாக இருந்ததால் வெற்றிபெறவில்லை.

டாக்டர் கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் பண்பாடும் எனும் நூல் : பக்கம் 153இல் ஆரியரால் விளை விக்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சியாலும், களப்பிரர்களால் நேர்ந்த அரசியல் புரட்சியினாலும் தமிழர் வாழ்வு சீர்குலைந் தது. அவர்களுடைய மொழிக்கும், நூல்களுக்கும், கலை களுக்கும், பண்பாட்டுக்கும் தீரா இன்னல்களும், இடையூறு களும் நேர்ந்தன. தமிழை வளர்த்த சங்கமும், தமிழ்க் கலை யும் அழிவதற்கு நெருக்கடி ஒன்று தோன்றிற்று என்கிறார். உதயேந்திரம் செப்பேடு-நந்திவர்மன் 108 பார்ப்பனர்களுக்கும் உதயசந்திர மங்கலம் என்கிற ஊரை நந்திவர்மனுடைய படைத் தலைவன் வடநாட்டிலிருந்து பார்ப்பனரைக் கொணர்ந்து குடியேற்றினான் என்று கூறுகிறது. அவர்களின் பெயர்களெல்லாம் வடமொழியில் உள்ளன.

கி.பி. 4-9ஆம் நூற்றாண்டு

தமிழகத்தில் வடமொழியும் ஆரிய சமயங்கள், தத்து வங்கள் ஆகியவையும் புராணங்களும் பெருமளவில் நுழைந்து தமிழர்களின் சமுதாய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன என வரலாறு கூறுகிறது. தமிழர்தம் பண்டைய பண்பாடுகளையும், அய்ந்திணை வாழ்வையும், இசையையும் மறந்து சங்க நூல்களில் காட்டிய அறத்தையும், வாழ்க்கை முறைகளையும் கைநழுவி விட்டனர். சமூகத்தில் குலப்பிரிவுகளும், பார்ப்பனீய மேம்பாடும், வடமொழியின் ஏற்றமும், தமிழ்மொழிக் கலப்படமும் தமிழரின் சமுதாயத்தில் தொடர்ந்து 500 ஆண்டுகள் துறைதோறும் ஏற்பட்டதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

கடைக் கழகக் கால அளவிலேயே தமிழ் அரசர்கள் பலர் மானச்சூடு தணிந்தவர்களாய், பார்ப்பனர்க்கு அடிபணிந்து வணங்கி, மட முடவர்களாகவும் மத மடையர்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சோழ, பாண்டிய, பல்லவர் காலச் சமூக வாழ்க்கை காட்டுகிறது. ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில் (63ஆம் பாடல்) பார்ப்பார்க்கு அல்லது பண்பு அறிந்திலையே என்று பாடி யுள்ள நிலையும், சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத் தான் என்னும் மன்னனை தாமரைபல் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவன் நின் முன்னோரெல்லாம் பார்ப்பனர் நோவனசெய்யலர் (புறம் 43) என்று குறித்தமையும் காண்க.

பாண்டியர்கள் தம் பெயருக்கு முன்னர் மாறவர்மன், ஜடாவர்மன் என்றும், சோழர் தம் பெயருக்கு முன்னர் ராஜகேசரி, பரகேசரி என்றும் பெயர் சூட்டிக்கொண்டு ஆரிய அடிமையாக அரசோச்சினர். யாகங்கள் செய்து பார்ப்பனர் களுக்குத் தானம் வழங்கினர். ஆரியர்களை தம் அரசவையில் ஆலோசகர்களாக, ராஜகுருவாக, புரோகிதர்களாக, மந்திரி களாக அமர்த்திக் கொண்டனர். வேத நெறி தவறாமல், மனு நீதி தவறாமல் அரசோச்சினார்கள் என்று பார்ப்பனர்களால் புகழப்பட்டார்கள். மனுநீதி என்றால் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பொருள்.

எனவே, ஆரியர்கள் நுழைவால் தமிழ்ச் சமுதாயம் சமற்கிருத மயமாக்கப்பட்டதோடல்லாமல் தன்னுடைய நாகரிகப் பண்பாட்டுகளையும் இழந்தது என்பதுதான் வரலாறு. இந்தியப் பாரம்பரியம் - மிஸீபீவீணீஸீ மிஸீலீமீக்ஷீவீtணீஸீநீமீ க்ஷிஷீறீ.மிமி-றிணீரீமீ 29இல் உள்ளதை ஆதாரமாக எடுத்துக் கூறுகிறேன்.

“Kautilya, the stern realist made no distinction between a dancer and a prostitute. The same rule apply to an actor, dancer ..................... that those who teach prostitutes, female slaves .................... and the art of attracting and captireating the minds of others shall be endowed with maintanence from the state.”

ஆண்டவன் பெயரால் ஆலயங்களை அமைத்து அங்கு கலையின் பெயரால் ஆடலழகிகள், பாடலழகிகளை கவர்ச்சிப் பொருளாக வைத்து மக்களின் மனதை கொள்ளை கொள்ளவும் கவர்ந்து ஈர்க்கவும் தேவதாசி முறையை கௌடில்யர் அரசு முறையாகக் கையாண்டார் எனக் கூறப்படுகிறது.

அதே வெளியீடு அதே புத்தகத்தில் முதல் பாகம் பக்கம் 3-இல் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் சமற்கிருதத்தையும், அதனுடைய பழமை, பழக்க வழக்கங்களும் காப்பாற்றப்பட வேண்டும்; இல்லை யேல் இந்தியாவின் ஒருமைப்பாடு சரிந்து வீழும் என்கிறது.

அதனால்தான் இன்றைய வரையில் பார்ப்பனீயம் தேசீயம் என்ற பெயராலும், தேசத்தின் ஒற்றுமை என்ற பெயராலும் வர்ணாஸ்ரம தர்மத்தையும் வடமொழி சமற்கிருதத்தையும் அரசியல் சட்டத்தில் சங்கராச்சாரியின் ஆசியுடன் பிரிவு 25இல் புகுத்தி தமிழன் என்றென்றைக்கும் ஆரிய அடிமையாக வாழவேண்டும் என்று விதிகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த அடிமைத்தளையிலிருந்து விடுபடாமல் தமிழன்-தமிழினம்-தமிழ் மொழி வாழமுடியாது என்பது உறுதி. 3000 ஆண்டு அடிமைத்தனத்தை ஓர் அறுபது ஆண்டுக்காலத்தில் ஆட்டங் காணச் செய்த தந்தை பெரியாரின் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கை-கோட்பாடுகளை நிறைவேற்றி னால்தான் தமிழினம் மீளும்; இன்றேல் என்றைக்கும் அடி மைக்குழியில் நிலையாக வாழும்.

அரசியற் சிந்தனை மூன்றுடன் தொடர்புடையது. (1) மனிதனின் பண்புகள், செயல்கள், (2) புற உலகுடன் அவனது உறவு-வாழ்வின் பொருளாகவும் குறிக்கோளாகவும் அவன் கொள்வது, (3) இவ்விரண்டின் விளைவாகத் தோன்றுவதாகிய, மனிதன் பிற மனிதருடன் கொள்ளும் கூட்டுறவு. இவற்றுள் மூன்றாவது அரசின் ன்மை, நோக்கம், செயற்பாடு ஆகியன குதுப் பேசுவதாகும். ஏனெனில் மனதின் அவனது குறிக் கோள், அவனுடைய சமூகத் தொடர்புகள், செயற்பாடுகள் ஆகியன ஒன்றோடொன்று உறவுடையவை.

இக்கட்டுரை நிறைவு

-  விடுதலை நாளேடு 28 1 20

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 46

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

30.1.2020 அன்றைய தொடர்ச்சி

14.         சங்கப் பாடல்கள் பல்வேறு காலங்களில் இயற்றப் பட்டவை. அவற்றின் தொடக்கக் காலம் தெரியவில்லை; கி.மு. இரண்டாயிரம் ஆகக்கூட இருக்கலாம்; ஆனால் அவை இன்றைய வடிவில் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்பது நடுநிலை ஆய்வர் கருத்து. அப்பொழுதே வேதியக் கருத்துகளும் நடப்புகளும் தமிழகத்தில் நுழைந்திருந்தன, அறிமுகமாயிருந்தன. இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே (புறம் 6) என்றும், பார்ப்பார்க் கல்லது பணிபு அறிய லையே (பதிற்றுப்பத்து 63) என்றும் அரசனே பணி புரியும் நிலைக்கு மறை ஓதிகள் உயர்ந்துவிட்டனர். (இங்கு சொல்லப் படும் பார்ப்பனர் தமிழரே என்றும், மறைகள் தமிழில் இருந்தவையென்றும் கூறுவார் உண்டு.) வேள்விகள் செய்து வெற்றியும் பெருமையும் பெறவேண்டும் என்ற ஆசை தமிழ் மன்னர்களைப் பற்றிக்கொண்டதால், அறுதொழில் அந்தணர் அறம் புரிந்தெடுத்த தீயொடு விளங்கும் நாடன் (புறம் 397) சுட்டப்படுவதையும், பெருநற்கிள்ளி எனும் சோழன் ராச சூயம் வேட்டனன் என்றும், முதுகுடுமிப் பெருவழுதி எனும் பாண்டியன் பல்யாகச்சாலை என்றும் சிறப்பு முன் அடைகள் பெறுவதையும், புரையில் நற்பனுவல் நால் வேதத்து அருஞ்சீர்த்தி (புறம் 15) பேசப்படுவதையும் காண்கிறோம்.

15.         வேதங்களும், வேள்விகளும் பார்ப்பனர்களும் மேல்மட்டச் செல்வாக்குப் பெற்றபின்பு, அச்செல்வாக்குக் கீழ் மட்டம் வரை பரவுவது அல்லது விரவுவது இயல்புதானே! வேதியச் செல்வாக்கு என்றால் கூடவே சமற்கிருத மொழியும் செல்வாக்குப் பெறுகிறது எனப்பொருள். மரபு வழியாகச் சமற்கிருதம் கற்ற பார்ப்பனர்கள் ஒலி நுணுக்கம் சற்றும் சிதையாமல் வேத மந்திரங்களை ஓதினாற்றான், அவற்றிற் குரிய பயன் கிட்டும் என்பது இந்து மதத்தினரால் இன்றும் வற்புறுத்தப்படுகிறது. இதன் விளைவு என்ன? செல்வாக்கான இடங்களில் தமிழ் தள்ளப்படுகிறது ; வடமொழி வரவேற்கப் படுகிறது. செல்வாக்குள்ள மேல் மட்டத்தாருக்கு வளவாய்ப்பு கள் இருப்பதால், அவர்களுடைய ஆதரவு பெற்றவர்கள், போற்றிய வடமொழி வளர்வதற்கான ஏந்துகள் ( வசதிகள் ) பெருகின.

16. தென்னவருக்குரிய நாட்டில் வடவாரிய மொழி செல்வாக்குப் பெறுவதால் ஏற்படும் சமுதாயத் தீங்கை உணர்த்த அறிஞர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர் களில் ஒருவரே இளங்கோவடிகள்! முடியுடை மூவேந்தர்கள் ஆண்ட தமிழரின் மண்ணை முழுவதும் இணைத்துக் காட்டி யதோடு, அவர்களின் முந்தைய நிலமான இலங்கையை ஆண்ட கயவாகு மன்னன் தமிழ் நில மங்கைக்கு கோயில் எழுப்பியதைப் பெருமையோடு குறிப்பிடும் கவிஞர், தென்புலத்தில் மட்டுமன்றி வடபுலத்திலும் தமிழ் பழிக்கப்படு வதை அனுமதிப்பது இனவீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும் என அறிந்த காரணத்தால், அவ்வாறு செய்த கனக-விசயர் மீது படையெடுத்து வென்ற செய்தியைச் சிறப்பித்துப் பாடினார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்த களப்பிரர் தாக்குதலைத் தொடர்ந்து, தென்மொழியும் பண்பாடும் ஏற்றத்தை இழந்து, தமிழின உணர்வு மங்குவதற்கு முன் அக்காலத்தில் அஃது இறுதியாக ஒளி வீசியதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இருப்பினும், மொழி இன உணர்களை உள்ளடக்கியும், ஆரிய வடமொழி ஆதிக்கம் குறித்து மறைமுகமாக எச்சரித்தும் காவியம் இயற் றிய சேரனின் இளவல், நால்வேத நடைமுறைகள் செல்வாக் குப் பெறுவதைத் தடுக்கவேண்டும் என சுட்டிக்காட்டத் தவறிவிட்டார் என்பது வருந்தத்தக்கதே! அறிஞரும் பாவ லரும் இவ்வாறு குறைபட நடந்துகொண்ட காரணத்தாலும் பிற காரணங்களாலும் வருண தருமப் பரவலுக்கான சமற்கிருத மயமாக்கம், பல்லவர் காலத்திலும் விசய நகர, நாயக்க பாளையக்கார மற்றும் பிற குறுநில மன்னர் ஆட்சியிலும் செழித்தோங்கி நின்றது.

17.         சமற்கிருத மயமாக்கத்தின் மிகப் பெருங்கொடுமை தமிழ் புறக்கணிக்கப்பட்டதும், தமிழினத்தாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதும் ஆகும். தமிழக வரலாறு மக்களும் பண் பாடும் எனும் நூலில் பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம்பற்றி டாக்டர் கே.கே. பிள்ளை இவ்வாறு எழுதுகிறார்: உழைப் பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்க செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவை யாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும் தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வமிசங்களை யும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் ஜாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதையே தம் சீரிய கடமை எனக் கூறும் மெய்கீர்த்தி களைப் புனைந்துகொண்டனர். ஆரியப் பழக்க வழக்கத்தைப் பாராட்டிக்கூறும் சாஸ்திரங்களும், புராணங்களும் எழுந்தன. அவற்றைப் பிராமணர் பயில்வதற்கென அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர். (பக்கம் 318) மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணருக்கு மட்டும் வடமொழிப் பயிற்சியை அளித்து வந்தன. தமிழ் இலக்கிய இலக்கணம் பயிற்றிவரவில்லை. அப்பள்ளிகளில்  புராணங்கள், இதிகாசங்கள், சிவதருமம், சோமசித்தாந்தாத்தம், இராமதனுச பாடியம், பிரபாகரின் மீமாம்மிசை, வியாகரணம் ஆகிய வடமொழி இலக்கிய இலக்கணங்களையே பிராமணர்கள் புராணங்களில் பயின்று வந்தனர். (பக்கம் 320)

18. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று என ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் போன்ற மன்னர்களும், சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பதுபோன்ற கருத்தைப் புலவர்களும், பொருட்பாலில் இறைமாட்சி எனும் முதல் அதிகாரத்தை அடுத்து நான்கு அதிகாரங்களில் கல்வியறிவின் தேவையை வலியுறுத்திய அறநெறியாளர் வள்ளுவரும் பிறந்த நாட்டில், அந்த மண்ணுக்குரிய மக்களுக்கே கல்வியை மறுக்கும் வேதனைக் காலமும் இடையில் வந்தது விந்தையே!

19.         முறைசார் (formal) கல்விக்கான வாயில்கள் சூத்திர பஞ்சமனுக்கு அடைபட்டன எனில், முறைசாரா (non-formal) கல்விக்கான வாய்ப்புகளேனும் இருந்தனவா எனக் காணவேண்டும். களப்பிரருக்குப்பின் பல்லவர் தொடங்கி அய்ரோப்பியர் ஆட்சி வரை  இடைப்பட்டது இந்திய வரலாற்றில் ஒரு நம்பிக்கைக் காலம் (age of faith) ஆகும். மதவழிச் சாத்திர சம்பிரதாய சடங்குகளுக்கான மந்திரங்கள், தோத்திரங்கள் முதலியன போற்றப்பட்டன. வடமொழி தேவபாஷை எனப் போற்றப்பட்டது. பிற, நீசபாஷை அல்லது பைசா மொழி என ஒதுக்கப்பட்டன. இறைவழிபாடு, சமயத் தேவைகள் ஆகியவற்றின் வழியே முதலிடத்தைப்பற்றிக் கொண்ட பின்பு, பிற துறைகளிலும் வடமொழியே வளம் சேர்க்கும் வாய்ப்புக்கள் பெற்றது. சிற்பம், ஓவியம், கட்டிடக் கலை, கணிதம், வானநூல், மருத்துவம் முதலியத் துறைகளில் கிட்டத்தட்ட அனைத்து நூல்களையும் சமற்கிருதத்திலேயே ஆக்கும் ஏற்பாடுகள் இருந்தன. வெகு மக்களின் மொழி புறக்கணிக்கப்பட்டது. மேற்கூறிய துறைகளில் உழைப்பவர்கள் தமிழர்கள், அந்தத் துறைகளின் அறிவைத் தருபவர்கள் வடமொழியாளர்கள் என்ற நிலை உருவாகிவிட்டது. சூத்திரத் தமிழர்கள் வருணதருமப்படி, சமற்கிருத சாத்திரங்களைக் கற்கக்கூடாது. ஆகையால், தாங்களாகவே அறிவைப் பெருக்கிக் கொள் ளலாம் என்றால் அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது. தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம், பெரிய புராணம், இராமாயணம், பாரதம் என்பனவற்றுடன் இரு குரங்கின் கையொடித்து சாறுபிழியும் மருத்துவ இரகசியம், மாட்டுவாகடம், மனையடி சாத்திரம் என்ற வகையில் தமிழ் நொண்டி நடை போட்டது. (இரு குரங்கின் கை, முசுமுசுக்கை) உழைக்கும் மக்களின் மொழியில் அறம், ஆன்மீகம், அறிவு, பொருள், கலை தொடர்பாக நூல்கள் பெருகுவதற்கான வாய்ப்பைத் தரக்கூடிய ஆட்சியாளர்கள் வடமொழி வேதி யர் வயப்பட்டுவிட்டதால், சூத்திரப் பஞ்சமரின் மொழிகள் வளம் பெற்று வளருவது தடைப்பட்டது. ஆட்சியாளர் ஆதரவு பெற்றுச் செழித்துக் கொழுத்த சமற்கிருதத்தைக் கற்க சூத்திர பஞ்சமருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்நிலை அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. பத்தொன் பதாம் நூற்றாண்டில் மராத்தியத்தில் சதாரா பகுதியை ஆண்ட அரசர் பார்ப்பன எதிர்ப்புக்கு அஞ்சி இரவு நேரங்களில் பயில வேண்டியிருந்தது. ஆம், அரசருக்கே அப்படியொரு நிலை! மலையாள மொழியின் இணையற்ற மறுமலர்ச்சிப் பாவலர் குமாரன் ஆசான். இந்துமத தர்மத்தின்படி ஆளப்பட்ட திருவாங்கூரில் சமற்கிருதம் கற்க அனுமதிக்கப்படவில்லை; பெங்களூர் சென்று அவர் பயின்ற பள்ளியில் அவர் ஒருவரே பார்ப்பனர் அல்லாதவர்; பல இடர்களுக்கு இடையே பயின்ற அவரைத் தேர்வு எழுத வேதியர் கூட்டம் அனுமதிக்கவில்லை; சமற்கிருதத் தேர்வெழுதாமலேயே பெங்களூரை விட்டு வெளியேறினார். மாமேதை டாக்டர் அம்பேத்கர் உயர் நிலைப்பள்ளியில் சமற்கிருதம் படிக்க அனுமதிக்கப்படவில்லை; மாற்றாக பாரசீக மொழி பயின்றார்!

தொடரும்

- விடுதலை நாளேடு 4 2 20

சனி, 1 பிப்ரவரி, 2020

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் - 45

பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கு.வெ.கி. ஆசான் ஆற்றிய உரை வருமாறு:

1.            உரிமை வாழ்வே வாழ்வு; உரிமை வேட்கை மனிதனுக்கு இருக்கும் தனி இயல்பு; உரிமை விழைவின் விளைவு சமனியச் சமுதாயம்; நாணயம் ஒன்றின் இரு வேறு பக்கங்களைப் போல், உரிமையும் சமனியமும் ஒரு நிலையின் இரு அடிப்படைக் கூறுகள். உரிமையை வேண்டாதவர் சமனியத்தைப் பெறுவதில்லை; சமனியம் அற்ற இடத்தில் உரிமை நிலைப்பதில்லை.

2.            இயக்கம் உலக இயல்பு. இயக்கத்திற்குத் தக ஏற்படும் சமுதாய மாற்றத்திற்கு ஈடுகொடுப்பவர்களே சமனிய உரிமை வாழ்வைப் பெற முடியும்; மற்றவர்கள் பின்தங்கி விடுவர். முற்போக்கான மாற்றத்தை மேற்கொள்ள அறிவுத் தெளிவும் அதற்கான கல்வியும் தேவை.

3.            நாகரிக வாழ்வில் நாளும் மேன்மையடைய, உடலையும் உள்ளத்தையும் வளர்க்க வேண்டியிருப்பதால், அவ்வளர்ச்சிக்கு ஆதாரத் துணையாகும் கல்வியைப் போற்றிப் பெறவேண்டியது, இன்றியமையாதது ஆகிறது. கல்வியும் அறிவும் பெறாதவர்கள் மாறுதலுக்குத் தக முன்னேறாமல் பின்தங்கிவிடுகிறார்கள். பின்தங்கித் தேங்கியவர்களை, முன்னேறியவர்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் முடிகிறது. இதனால் சமுதாயப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஏற்றம் பெற்றவர்கள் தாழ்ந்துவிட்டவர்களின் உரிமையைப் பறித்து சுரண்டுகிறார்கள். இதன் விளைவு என்ன? ஜெனிவாவில் பிறந்து பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சு நாட்டில் வாழ்ந்த அறிஞன் ரூசோ சொன்னதுபோல், கட்டற்றதாகப் பிறப்பெடுத்த மனித இனம் இப்பொழுது எங்கும் கட்டுண்டு கிடக்கிறது. தன்னுடைய சமுதாய ஒப்பந்தம் எனும் நூலில் இக்கருத்தைக் கூறும் ரூசோ, இதற்குத் தீர்வு காணக் கல்வியின் தேவையை அறிந்த காரணத்தினாலோ என்னவோ, ஆய்மீல் (Emile) எனும் நூலில் புதுமைக் கல்வித் திட்டம் ஒன்றை 1762இல் வகுத்தளித்தான்.

4.            உரிமை, சமனியம், இயக்கம், மாற்றம், முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி எனும் வகையில் சுழலும் மனித வாழ்வில் அச்சாணியாக அமைவது கல்வி. ஏனென்றால் உரிமை முதலான அனைத்திற்கும் விளக்கம் தரும் அறிவு அதனால் பெறப்படுகிறது. இவ்வளவு முகாமையான கல்வியைப் பேணும் இனம் வாழும், உயரும்; பேணாத சமுதாயம் வீழும்; தாழும்! கடந்த சுமார் ஆயிரத்து அய்நூறு ஆண்டுகட்கு மேலாகத் தமிழர் தமக்குரிய கல்வியைத் துறந்ததால், இழந்ததால் வீழ்ச்சியுற்றனர். அப்படி அவர்கள் கல்வியைத் துறந்தது ஏன் எனும் வினாவிற்கு விடை காண, சமற்கிருத மயமாக்கம் எனும் போக்கினைத் தெரிவது பயன் தரும்.

5.            சமற்கிருத மயமாக்கம் எக்காலத்தில், ஏன் நிகழ்ந்தது? தமிழாக்கத்தைப் பொறுத்தவரை சங்க காலத்தில் சிறிதே தலைகாட்டிய சமற்கிருத மயமாக்கம், களப்பிரர் இடையீட்டிற்குப்பின், பல்லவர் காலம் முதல் அய்ரோப்பியர் ஆட்சி தொடங்கும் வரை மெல்ல மெல்லப் பரந்த அளவிலும் ஆழமான முறையிலும் இங்கு கால்கொள்ள முற்பட்டது. செல்வாக்கோடு நிலவியும் வந்தது. அய்ரோப்பிய - ஆங்கிலேய புதிய கல்வி நிருவாக சமூக அமைப்பின் தாக்கத்தாலும், இந்நாட்டில் தோன்றிய மறுமலர்ச்சி, தன்மானப் பகுத்தறிவு இயக்கங்களாலும் அதன் பிடி மெல்லத் தளர்ந்து வருகிறது. இன்னும் மறைந்து வரவில்லை.

6. ஆரியர், இந்தியாவிற்கு வருவதற்கு முன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வாழும் இடத்தின் அடிப்படையில் வாழ்க்கை முறையும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனத் தொழில் அடிப்படையில் சமூக அமைப்பும் பகுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஆரியர் வருகைக்குப்பின், வருண தருமத்தின் அடிப்படையில் பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடுகள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டன. ஆரிய, திராவிடர் இடையே நாளடைவில், குருதிக்கலப்பு ஏற்பட்டாலும், பிறப்பின் அடிப்படையில் சலுகைகள் அனுபவித்தவர்கள், பார்ப்பன ( பிராமண ) மேலாண்மையின் கீழ் அமைந்த ஜாதி ஏற்பாட்டின் மேல்-கீழ் படிநிலைகளை விட்டுவிடாமல் உறுதியாக நிலைப்படுத்துவதற்கான சமய, சமூக, அரசியல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்கள். சமற்கிருத மயமாக்கம் என்பது இந்த ஏற்பாடுகளின் ஒரு வடிவமே ஆகும்.

7. சமூகவியல் அறிஞர் எம்.என். சீனிவாசன் அவர்கள், சமற்கிருத மயமாக்கம் என்னும் பொருள்படும் Sanskritization என்னும் சொல்லை ஆக்கினார் என்பர். அவர் எப்பொருளில் அச்சொல்லை பயன்படுத்தியிருப்பினும், சமற்கிருத மய மாக்கம் எனும் சொற்றொடரை இக்கட்டுரையில் பயன் படுத்தும் பொருளை வரையறை செய்தல் முறையாகும். பண்டிதப் பார்ப்பனச் சிறுபான்மையர்கள் மதம், சாத்திரம், சடங்கு, பழக்க வழக்கம், கலை, இலக்கியம் போன்றவற்றைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களின் மனங்களை நல்ல கல்வி அறிவு பெறாத, தெளிவற்ற மயக்க நிலையில் நிறுத்தி, அவர்களை என்றும் பாமரர்களாகவே வைத்து, சூத்திர பஞ்சமராகத் தாழ்த்தி, ஆட்சியாளரின் வலிமையைத் துணை கொண்டு, சமூகப் பொருளாதார மேலாண்மையை நிலைப் படுத்திக்கொள்ள உதவும் ஒரு பண்பாட்டு ஏற்பாடுதான் சமற்கிருத மயமாக்கம் ஆகும்.

8.            சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பின் ( A particular frame -work) முகம் ஒன்றாகச் சமற்கிருத மயமாக்கம் அடைகிறது. உழைப்பிற்கு உரிய மதிப்பளிக் காமையும் பிறப்பின் அடிப்படையில் ஜாதி உயர்வு-தாழ்வு கற்பிப்பதும், வெகு மக்களின் கல்வியையும், மொழியையும் புறக்கணித்து அவர்களை ஒதுக்குவதும், கருத்தையும் காரியமாற்றுதலையும்,  (Theory and Practice) வெவ்வேறு பகுதியினருக்கு உரியனவாகப் பிரித்து அமைத்தலும் இந்துமதம் எனப்படுவதின் நடப்புக்கூறுகள் ஆகும். வருண தருமம், சதுர்வருணியம், பிராமணியம், சனாதன தருமம், வைதிக மதம், சண்மதம் போன்ற பெயர்களால் பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில் அழைக்கப்படும் இந்து மதத்திற்குத் தெளிவான கோட்பாடுகள் இல்லை என்பதோடு, முரண்பாடான கோட்பாடுகள் இருப்பினும், மேற்சொல்லப் பட்ட சமுதாயத் தாழ்வு நடைமுறைகள் அந்த மதத்துடன் அன்றும் இன்றும் பிணைந்தே இருக்கின்றன.

9.            இந்த நடைமுறைகளை நிலைப்படுத்திக்கொள்ளப் பின்பற்றப்படும் ஏற்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தவையாயினும், அவற்றின் உள்நோக்கத்தைப் பாமரர் பல காலம் புரிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டனர். ஸ்மிருதிகளாகிய வேதங்களை இறையளிப்பு எனவும் ஆய்விற்கு அப்பாற்பட்ட ஆதார ஏற்புகள் எனவும் கொண்டு அவற்றை அடியொற்றி வந்தனவாகப் போற்றப்படும் ஸ்மிருதிகளாகிய தரும சாத்திர இதிகாசங்கள் புராணப் புனைவுகளின் மூலம், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் கொள்கை, மாற்றமுடியா தெய்வீகத்தன்மைத்து என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. உபநயனம் செய்து பூணூல் அணிவித்து சமற்கிருத மந்திரம் ஓதுவித்து, இருபிறப்பாளர் (துவிஜர்) ஆக்குதல், தீமூட்டி வேள்வி செய்தல், ஜாதித்தொழில் நிர்ணயித்தல், குடியிருப்புப் பகுதிகளை ஒதுக்குதல், தெருவில் செல்லுதல், கோயில் நுழைவு, ஏரி, குளம், கிணறு ஆகிய பொது இடங்களைப் பயன்படுத்துதல், ஆடை அணிகலன்கள் அணிதல், கல்வி பயிலுதல், பண்டிகை, திருவிழா, வழிபாடு, சடங்கு, சம்பிர தாயம், பழக்க வழக்கம் போன்றவற்றை வகைப்படுத்துதல், மேற்சொன்ன நடப்புகளிலும் அமைப்புகளிலும் காணப்படும் பிளவுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் நியாயப்படுத்தக் கதைகளைப் புனைந்து நம்பவைத்தல், அதற்குத்தக ஆன்மா, மறுபிறப்புக் கோட்பாடுகளைத் திணித்தல் போன்ற எல்லாவற்றிலும் வேதியச் சதுர்வருணிய ஜாதிய வழிசார்ந்த பார்ப்பனிய மேலாண்மையும், பிறப்பினடிப்படை மேல் கீழ் சமூகப்படி நிலைகளும் கவனமாகப் பாதுகாக்கப்படுவதைக் காணலாம்.

10.         நாயம், சமனியம், விழுமிய மனித இயல்புகளுடன் இணக்கம் என ஆக்கம் சேர்க்கும் சீரிய சமூக நெறிமுறைகள் செழுமையடைந்து நிலைபெற்று உறுதிப்படுவதற்குக் கல்வி அறிவு அடிப்படைத் தேவையாகும். மாறாக, சீரிய சமூக நெறிமுறைகளை மறுத்து ஒதுக்கும் சதுர்வருணிய மனுதரும அமைப்புகளும் கொள்கைகளும் நீடிக்கவேண்டுமெனில் பொதுக் கல்வியை இல்லாமல் செய்து, பாமரர்கட்கு அறிவுத் தெளிவு வராமல் கவனித்துக்கொள்ள வேண்டும். சமற்கிருத மயமாக்கப்பட்ட முறையின் மூலம் வெகுமக்களை, உழைப்பாளர்களை, படிக்காத, தெளியாத மூடநம்பிக்கையா ளர்களாகப் பல நூற்றாண்டுக் காலம் வைத்திருக்க முடிந்தது.

11.         சமற்கிருத மயமாக்கம் கல்வியை எப்படி மறுத்தது? பாமரர்களை அறிவுத் தெளிவு அற்றவர்களாக எப்படி ஆக்கியது?

சிறு வயதிலும், இளமையிலும் சமுதாயத்தால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதற்குப் பழக்கப்பட்ட வகையில் குறிப்பிட்ட ஆசிரியர்களிடம் அதற்கான கூடங்களில் (இடங்களில் ) பயில்வது முறைசார் ((Eommal) கல்வியாகும். இத்தகைய வாய்ப்பினை விரும்பியோ, விரும்பாமலோ பெறாதவர்கள், அறிவை வளர்த்துக்கொள்ளும் வேட்கையில், ஏடுகளைக் கொண்டோ, கேள்வி ஞானத்தின் வழியோ, பட்டறிவின் மூலமாகவோ பயில்வது முறைசாராத (Non-Eommal) கல்வியாகும். இந்த இருவகைக் கல்வி வாய்ப்பு களும் சமற்கிருத மயமாக்க நெறியில் மறுக்கப்பட்டன.

12. பாட்டாளி மக்களாகிய சூத்திரரும் பஞ்சமரும் கற்கக்கூடாது என்பது வேதிய மனுதருமச் சமுதாயச் சட்டம். அதற்குத்தகவே இராமாயணத்தில் சம்புகனின் தலையை இராமன் கொய்து விடுகிறான். மகாபாரதத்தில் ஏகலைவன் கட்டைவிரலை துரோணன் கட்டணமாகப் (குரு தட்ச ணையாகப்) பெறுகிறான். ஆக உழைப்பாளிகளான வெகுமக்கள் கற்றுக்கொள்ள இந்துமத அரசு அனுமதிக்க வில்லை; ஆசிரியர்களும் கற்றுத்தர முன்வரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டபின், இந்தக் கொள்கை மாற்றப்பட்டதாயினும், அவர்களின் நேரடி ஆட்சிக்குட்படாத, இந்துமதக் கொள்கையின்படி ஆளப்பட்ட திருவிதாங்கூர், கொச்சி போன்ற சிற்றரசுகளில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட தாழ்ந்த ஜாதியார் எனப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், அனுமதிக்கப் பட்டாலும் தொல்லைகட்கு ஆட்படுத்தப்பட்டார்கள் என்பதையும் தற்கால வரலாறு தெரிவிக்கிறது.

13.         ஒரு இனத்தின் விலைமதிக்க முடியாத உளவியல் கருவியாக, ஆன்மீகச் செல்வமாக, மனங்களைப் பிணைக் கும் உணர்வுப் பசையின் கொள்கலனாக, அறிவுத் தேக்கத்தைப் புதுப்பித்து நிறைக்கும் கருத்து ஓடையாக இலங்குவது மொழியெனில் அது மிகையன்று. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழியை ஒவ்வொரு இனமும் போற்றிப் பாதுகாத்து உயர்த்தி, அதனால் தானும் உயர்வு பெறல்வேண்டும். அவ்வாறு செய்யாத இனம் நாகரிகப் பண்பாட்டு நிலையில் வளர்ச்சி குன்றியதாக அறிவுத் தெளிவு குறைந்ததாக நின்றுவிடும். இந்த உண்மையை நன்கு அறிந்த பார்ப்பனக்கூட்டம், பண்பாட்டு வழியான தங்களின் சமூகப் பொருளாதார மேலாண்மையை (ஆதிக்கத்தை) தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகச் சமற்கிருதத்திற்கு உயர்வான நிலையையும், மக்கள் புழங்கும் மொழிகட்கு அடுத்த நிலையையும் ஏற்படுத்தி வைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்றும் இருக்கின்றனர்.

தொடரும்

- விடுதலை நாளேடு 30 1 20

செவ்வாய், 28 ஜனவரி, 2020

வேத மொழியும் பேத நிலையும் - 44 -கரூர் பி.ஆர்.குப்புசாமி பி.ஏ., பி.எல்.,

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

வேதமொழியும், பேத நிலையும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கரூர் பி.ஆர்.குப்புசாமி (பி.ஏ., பி.எல்.,) ஆற்றிய உரை வருமாறு:

மனிதகுல வரலாற்றில் சமூக பேதநிலை ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஏற்பட்ட பேதத்தால் ஏற்றம் பெற்றோர், ஏய்க்கப்பட்டு வாடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரை என்றும் தலைதூக்காவண்ணம் ஏற்பாடுகள் செய்வதும் காணக் கூடியதே.

ஆனால், பேத நிலையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கானோரே இயல்பாக ஏற்று அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம் என்பதுபோல் இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சிகரமான சமுதாய அமைப்பைப் பிற நாடுகளில் காணுவது அரிது.

திட்டமிட்டு ஏற்படுத்திய இப் பேத நிலையை இயல்பு எனப் பாதிக்கப்பட்டோரே எண்ணி, அவ்வாறே செயல்பட்டு, அவர்கள் மேம்படச் செய்யப்படும் சமுதாய மாற்ற முயற்சிகட்கு, அவர்களே முட்டுக்கட்டையாகச் செயல்படும் விந்தை வேறு எங்கும் இவ்வளவு நீண்ட காலம் இருப்பதைக் காணமுடியாது.

இங்குள்ள பேதநிலை, மாந்தரின் சிந்தனைமுறை, சமுதாய வாழ்நிலைகள், அனைத்து கலாச்சார அம்சங்கள், ஆயிரம் படிப் பொருளாதார அமைப்புகள் என அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கச் செய்யப்பட்டுள்ளது.

இப்படி உள்ள அமைப்பை கவனித்தால், வடமொழி இப் பேத நிலையின் உச்சாணிக் கொம்பில் உள்ளோரின் பயன் கருவியாகப் பயன்பட்டு வந்ததை-வருவதை-காணலாம்.

அம்மொழி வேதமொழி எனப்பட்டது வேதம் எனில் மறைக்கப்பட்டது (மறை) என மறைமலை அடிகளார் விளக்கினார்.

ஏற்றத்தாழ்வான சமூகத்தை நடத்த மறைக்கப்பட வேண் டியவை-ஏற்றம் பெற்றோருக்கு-ஏராளமாகி விடுகின்றன.

அப்படி மறைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டு தங்களுக்கென மேல்தட்டார் வைத்துக்கொண்டு, கீழோர்க்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவற்றைப் பார்த்தால், வடமொழி எப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பேதநிலை சமூகத்தில் மேல்தட்டுக் கருவியாகவும் செயல்பட்டு வந்தன, வருகின்றன என்பது விளங்கும்.

மாந்தர் பெயரை எடுத்துக்கொண்டால் ரமேஷ், ஆர்த்தி, சத்யா, சிந்து, ஜலஜா, ஷைலஜா, பிந்து, ப்ரியா-இவை மேல்தட்டுப் பெயர்கள்.

மண்ணாங்கட்டி, வீரன், மாறன், கருப்பன், குப்பன் இவை சாமான்யருக்குள்ளவை.

ஆண்டைகளின் கடவுள் பெயர்களோ சுகுந்த குந்தாளம்பிகை, பாலகுஜாம்பாள், பர்வதவர்த்தினி, ரிஷபர், தக்ஷினேஷ்வரர் இப்படி.

அடிமைகளின் தேவதைகளோ பரட்டத் தலைச்சி, மாசடச்சி, கருப்புராயன், சூரக்கொம்புடையார், கத்தரிக்காய் சித்தன் இப்படி.

ஊரை எடுத்துக்கொண்டாலோ அக்ரஹாரமா, வசதிபுரியா, வறுமைப் பகுதியா எனப் பேரே கூறி நிற்குமே!

மகாதானபுரம், ஆண்டான்கோவில், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் இவை போன்றவை ஆண்டைகள்-அக்ரஹாரம்.

மேட்டுப்பட்டி, வெட்டுக்காடு, பூலாங்காடு, பெரும்பள்ளம் இப்படி வரும் பள்ளத்தில் வீழ்ந்தோர் குடி இருப்புகள் - சேரிகள் !

மேட்டுக்குடியினர் குலங்களோ, வாதுல, பரத்துவாஜ, நைத்ருவகாஷ்யப கவுண்டின்ய, சச்மர்ஷண, ஹரித, விஷ்வாமித்ர என வரும்.

நம்மவர் குலங்களோவெனில் பெருங்குடி, காடை, பண்ணை, அந்துவன், செங்கண்ணன் என்பதாக வரும்.

அவாள் பாடுவது ஸங்கீதம், நம்மவர் வேலைக்காட்டில் மகிழ்ந்திருக்கும் வேளையில் படிப்பதுகூட ஒப்பாரி.

வீட்டிற்குள்ளே அவர்கள் ஆடும் ஆட்டம் பரம பதஸோபனம் போன்றவை. தாழ்நிலை மக்கள் ஆடுவதோ பல்லாங்குழி, தாயக்கரம் போன்றவை.

வீட்டுக்கு வெளியில் மேலவர் ஆடுவது பரத நாட்டியம், பாகவத மேளம், நம்மவர் ஆடுவது சதிர், தட்டுக்கரம், ஒயில் கும்மி.

அவர்கள் பிரவசனம், கதாகாலஷேபம் நடத்துவர். பள்ளத்தில் வீழ்ந்தோரோ குன்னுடையான் பாட்டு, முத்துப்பட்டன் கதை, அதிகப்பட்சம் பவளக்கொடி !

பெருங்கோவில்களில் பட்டர்கள், புரோகிதர்கள், சிறு கோவில்களில் பண்டாரம், பூசாரி.

அவர்களுக்கு பஜகோவிந்தம், கீதகோவிந்தம்.

பிறருக்கு வாங்கலம்மன் தாலாட்டு மாரியம்மன் ஊஞ்சல் போன்றவை. அவர்கள் பாராட்டுவது தர்மிஷ்டன், பரோபகாரி, சுந்தரபுருஷன், நாரீமணி, அபிநய சுந்தரி இப்படி.

மற்றவரோ நல்லவன், வல்லவன், வீரன், தீரன் இப்படி.

மேட்டுக்குடித் திட்டலோ, கர்மி, லோபி, துஷ்டன் இப்படி.

தமிழ் குடிமக்களோ! திருட்டுப்பயல், குருட்டுப் பயல், முட்டாள், காட்டுப்பயல் இப்படி.

அங்கே நாடகம்

இங்கே கூத்து

அங்கே ஸபா

இங்கே மைதானம்

உயர் குடியினர்க்கு புண்யாஹவசனம், ஆயுஸ் ஹோமம், சத்ருஸங்கார யாகம், சஷ்டியப்தபூர்த்தி போன்ற சடங்குகள்.

தாழ்குடியினருக்கோ மிளகாய் சுற்றிப்போடல். நெய்விளக்கு வைத்தல், முடி கயிறு கட்டல், கம்பளி கட்டல் போன்ற சடங்குகள்.

வசதி வர்க்கமோ, க்ஷேத்திராடணம் போகின்றனர். வறிய மக்களோ குலக்கோயில் சென்று கும்பிட்டு மீள்கின்றனர்.

மேட்டுக்குடியினர்க்கு பிடிப்பது தோஷம். பள்ளத்து மக்களுக்கு அடிப்பது எசவடம்.

அசிங்கமான அர்த்தங்கள் இருப்பினும் கேசவன், லிங்கம் என வடமொழியில் பெயர் வைத்துவிட்டால் தெரிவதில்லை.

அழகன், முல்லை, வெண்ணிலா, அன்பழகன், வழுதி, அல்லி என்பவற்றிற்குத் தற்போது வரவேற்புக் குறைகிறது.

புதுக்கவிதை, பொங்கிவரும் மக்களது நியாய ஆவேசத்தை அள்ளி வந்தாலும், பொறுக்கமுடியாத அளவு வடமொழி மோகத்தில் மூழ்கிவிட்ட விபத்து எப்படி நடந்தது அங்கே? சுகயுகம், ஞானி, யாத்திரைகள், சுயாகம், யாகங்கள், தரிசனம், பிரிய்லங்கள், பரீட்சை, புஷ்பம் இப்படி ஆயிரம்!

சாமான்யரின் தமிழ் கவிதை சப்பிடும்போது, ஏற்றக்குடியினர் செல்வாக்கு விரியும் இடதுசாரி இயக்கம், வாய்ப்பை நழுவவிடாமல் வடமொழியைத் திணிக்க வகை செய்துவிட்டதுபோலும் !

குற்றம் தாழ்குடித் தமிழ்ப் பற்றாளரின் மீதே!!

இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களில், வெள்ளைச்சட்டை தரித்து வெளிச்சம் போட்டு வாழ வாய்ப்புக் கிடைத்தவரில் பெரும்பாலோர் (அவர் எந்த ரக சமதர்ம இயக்கத்தவராயினும்கூட) வடமொழி மோகிகளாக மாறி வருகின்றனர்.

மேட்டுக்குடியினர் நாகரிகமே மேற்கொள்ளத் தக்கது என எப்போதுமே தனம் படைத்தோர் நடந்துவந்தனர். இன்று புற்றீசல் போல் புறப்பட்ட புதுப்பணக்காரர்கள் அனைவரும் வடமொழி நேயராகத் தங்களை ஆக்கிக் கொண்டுள்ளார்கள். அதன்மூலம் அவர்கள் கல்ச்சர்டு  (Cultured) ஆகிறார்களாம்!

சினிமாக்காரர்கள் இந்த வடமொழி மோகம் மக்களிடையே வர அதிகம் காரணமாகி விட்டனர். அவர்களின் அழுகிய வாழ்வும் அழகிய வடமொழிப் பெயர்களால் மறைக்கப்படுகிறதோ! சினிமா தொடர்பான ஆண், பெண் அனைவரின் பெயர்களையும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டவும், உற்பத்தியாகும் பண்டங்கட்கு சூட்டவும் ஆன ஒரு திருக்கூத்து நடந்தேறி வருகிறது. பெரிதெல்லாம் வடமொழியே! சிறிதெல்லாம் தாய்மொழியே!

குறுக்குவழியில் பணம் சேர்த்துவிட்டவன், நமஸ்காரம் என்று கூற விழைகிறான்; வணக்கம் அவனுக்குக் கசக்கிறது.

கலப்படம் செய்துவந்த பணத்தால் கட்டப்படும் பெரிய உணவு விடுதிக்கும், தங்கும் விடுதிக்கும் பெயர்கள் ஸ்வர்க்கா, ஸ்வப்ணா, சொர்ணா, ஸ்வாகதம் முதலியன. அங்கு அதிகாலையில் வைக்கப்படும் இசை ஸுப்ரபாதம்.

கள்ளத்தால் விளைந்த காசைக்கொண்டு கட்டிய அரங்குக்குப் பெயர்கள் சவிதா, ஸ்ரீலேகா, அலங்கார், பிரீதா, ரம்யா, ரூபா.... இப்படி.

கொள்ளை அடிக்கும் குழுமங்கட்குப் பெயர்கள் கீதாலயா, அரவிந்த், ஸ்நேகா, சவும்யா, திவ்யா, ஸ்வரூப், பூமிகா, க்ரீயா இப்படி.

இது புதிதல்ல! அன்று பார்ப்பனரைப் பார்த்து மன்னர்களும், நிலப் பிரபுக்களும் கலாச்சாரம் பெற்றார்கள்.

இன்று பனியாக்கள் அதைச் செய்கிறார்கள்.

புதிய ஊரமைப்பில் பங்களா முகப்பில் உள்ள பெயர்களைப் பாருங்கள் - க்ரூபா, கீதா நித்யாலயா வகையறா.

என்றும் அக்கிரஹார இல்லங்களில் வடமொழிப் பெயர் தாங்கிய முகப்பைத்தாம் பார்க்கலாம்.

இன்று அதைப் புது வசதிப் பொதிவயிறர்கள் தம் போஷ் ஏரியாவில் (Posh area) உள்ள புதிய அரண்மனைகளுக்கு வைத்துக் கொள்கின்றனர்.

85, 90 விழுக்காடு சாமான்யர் குலங்கட்கு திருமணத்திற்கு வடமொழி மந்திரம் சொல்லும் புரோகிதர் கிடையாது. ஆனால் துட்டு சேர்ந்துவிட்ட காரணத்தினாலேயே புத்தி கெட்டு அய்யரை வைத்து விவாஹம் செய்துகொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

இதிலும் சினிமாத்தனம் போகவில்லை. எந்த சினிமாவிலும் அய்யரே திருமணத்தை நடத்தி வைக்கிறார் - வடமொழி மந்திரம் கூறி!

ஆதிக்கம் செலுத்தும், சுரண்டும் கூட்டத்தின் கருவியாக எப்படி வடமொழி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் உள்ளது என்பதை இங்கு ஓடும் ஓட்டத்தில் மட்டுமே சுட்டிக் காட்டினோம்.

இன்று அந்த மேட்டுக்குடி மக்களால், வஞ்சிக்கப்பட்ட சாமான்யர் எப்படித் தங்கள் தாய்மொழிகளை மறக்கடிக்கப் பட்டு, வடமொழி மோகம் கொள்ளுமாறு, பார்ப்பன-பணக்காரக் கூட்டுச் செய்துவருகிறது என்பதையும் நாம் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

சமூக பேத நிலைமையை ஒழிப்பது என்பதில், சமற்கிருத ஆதிக்கத்தை ஒழிப்பதும் அடங்கும் என்பது மேற்கூறியவற்றால் தெற்றென விளங்கும்.

இந்த ஒழிப்புப்போர் நெடுங்காலம் நடந்துதான் வருகிறது.

தன்மான இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவை வடமொழி மரபுகளையும், வடமொழிப் பெயர்களையும், வடமொழிமூலம் திணிக்கப்பட்ட வாழ்முறைக் கோட்பாடு களையும் எதிர்த்து அழிக்கப் போராடுகின்றன.

அதற்கு அப்பாற்பட்டாலும்கூட சாமான்யர், சமற்கிருத மயமாகும் தன்மைகளைப் பலமுறைகளில் தடுத்து நிறுத்த அல்லது ஒழித்துக்கட்டும் காரியங்களை எக்காலத்திலும் செய்தே வந்துள்ளனர். வடமொழிப் புராணங்கள் மூலம் ஏற்றம் பெறும் கடவுள்களைவிட மக்கள் தங்கள் குல தெய்வங்களைத்தாம் முதல்நிலைத் தெய்வங்களாக வைத்துள்ளனர்.

3000 ஆண்டுகளாக மன்னர்களும், பலரக பிரபுக்களும், தனவேந்தர்களும், எல்லா வகைக் கலை, இலக்கிய வடிவங்கள் மூலமும் முயன்று பெருமைப்படுத்தி வைத்துள்ள வடமொழி மதச் சொற்கள் மக்களால் எப்படிப் பரிகாசமாகப் பயன்படுத்தப்படுகின்றன பாருங்கள் !

நாமஞ்சாத்திவிட்டான் !

கோவிந்தா ! கோவிந்தா !!

பஜனை(!) செய்யப்போயிட்டான் !!!

அய்ந்தாம் வேதம் !

தலையணை மந்திரம்

இப்படிப் பலப்பல.

ஆனால், சாமான்யர் தம் குல தெய்வம் தொடர்பான சொற்களைக் கொச்சைப்படுத்தினால் பொறுப்பதில்லை.

எனவே, வடமொழி-அதன் தொடர்பான நம்பிக்கைகள் எதிர்ப்பு என்பது மக்களிடையே உள்ளார்ந்து இருக்கின்றன.

என்றும் பேதநிலையை நிலைநாட்டப் பயன்படும் வடமொழியை, இன்று இந்தியாவில் பார்ப்பன-பணக்கார ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு வளர்க்க முயல்கின்றன என்பதை நாம் அறிவோம்.

எனவே, மக்களின் மேலே காட்டிய வடமொழி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களைச் செயலில் இறங்கச் செய்வது நம் கடமை ஆகும்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 42

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (ஷிணீஸீsளீக்ஷீவீtவீsணீtவீஷீஸீ) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

 

14.1.2020 அன்றைய தொடர்ச்சி...

சமற்கிருதச் சொற்கள் தமிழில் வரும்போது அவற் றைத் தமிழ் மயமாக்கிச் சேர்த்துக்கொள்வதற்கு தற்சமம், தற்பவம் என்னும் நெறிகள் தமிழ்மொழியில் உள்ளன. இத்தகைய நெறிமுறைகள் பிறமொழிச் சொற்கள் சமற் கிருதத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்போது கையாளப்படு வதாகத் தெரியவில்லை. ஆகவே, பிறமொழிச் சொற்கள் சமற்கிருதத்தில் கலந்துள்ளமைபற்றித் தெளிவாக அறிய இயலாமல் போகிறது.

பழந்தமிழ்ச் சொற்கள் இருக்கவும் அதற்கு இணை யாகச் சமற்கிருதச் சொற்களைப் படைத்து புதியதாகப் படைக்கப்பட்ட சமற்கிருதச் சொற்கள் தாம் மூலமானவை எனக் காட்டும் முயற்சி கண்டிக்கத்தக்கது. பெரிய புராணத்தைப் பின்பற்றி உபமன்னிய பக்த விலாசம் என்னும் நூலைச் சமற்கிருதத்தில் இயற்றி, இதுதான் பெரிய புராணத்துக்கும் முற்பட்டது என்று கூறல் தவறு. இவ்வாறு செய்யும் முயற்சியில் தவறு ஏற்படும்போது இம்முயற்சிகளின் போலித் தன்மை வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிறுதொண்டர் என்னும் பக்தர் தப்ர பக்தா என மொழிபெயர்க்கப்படுகிறார்.  சிறுதொண்டர் என்பதன் கருத்து வயதில் குறைந்தவரானாலும் திறமை யில் பெரியவர் என்னும் கருத்தாகப் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. இக்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்பம் என்னும் பொருள்பட தப்ர பக்தா என்னும் மொழி பெயர்ப்பு உள்ளது. சிறிய பெருந்தகையார் என்று ஞானசம்பந்தரைச் சேக்கிழார் கூறும் குறிப்பு இக்குற்றத் தைத் தவிர்ப்பதாக உள்ளது.

இவ்வாறே நெல்லையப்பர் செஞ்சாலிவாடி ஈசுவரர் என்றும், நெய்யாடியப்பர் கிருதபுரி ஈசுவரர் என்றும், மழபாடி வயிரத்தூண் வஜ்ர தம்பேசுவரர் என்றும் அழைக்கப்படும் வழக்கத்தை நோக்கலாம். அஞ்சொலாள் என்னும் பெயர் மாயூர திருப்பதிகத்தில் காணப் படுகிறது. இது அஞ்சல் என்று ஆகி பிறகு இச்சொல்லே அபயாம்பிகை (அபயம் தருபவள்) என வழங்குவதாயிற்று. இவ்வாறே வடிவுடை நாயகி காந்திமதியாகவும், ஏலவார் குழவி சுகந்த குந்தளாம்பாளாகவும், சொன்ன வாறு அறிவார் யுக்த வேதீஸ்வரராகவும், அறம் வளர்த்த நாயகி தர்ம சம்வர்த்தனியாகவும் வழங்கப்படுகிறார்கள். திருப்பழனம் எனப்படும் தலம் பயணம் என மருவி, இதற்கு இணையான சமற்கிருதச் சொல் (வயல் என்பதைக் குறிக்காமல்) பயணம் என்பதைக் குறிக்கும் பிரஸ்தானபுரம் என்று வழங்கப்படுகிறது.

இறைவனைக் குறிக்கும் சொற்களைப்போல மனித னைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறு சமற்கிருத மாற்றம் பெற்றது. கருணாகரன் என்னும் சொல் கருணாஹரன் என்று தவறாக எழுதும்போது கருணைக்குக் காரணமா னவன் என்னும் பொருள் மாறி கருணையைக் கொல் பவன் என்னும் பொருள் உண்டாகிறது. திருநெல்வேலிப் பேருந்து நிலையத்துக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையேயுள்ள பாலத்தை ஒரு தனி மனிதரே ஆங்கில ஆட்சிக் காலத்தில் தம் தாயின் அறிவுரைப்படி, தமக்கு அப்போது கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுச் சீட்டுப் பணத்தைக் கொண்டு கட்டினார் என்னும் செய்தி சொல் லப்படுகிறது. தற்போதும் அங்குள்ள பாலம் சுலோசன முதலியார் பாலம் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் திருமண நல்லக்கண்ணு முதலியார் என்று அழைக்கப் படும் சுலோசன முதலியார் என்று உள்ளது என்னும் செய்தியை நெல்லை சைவப் பெரியார் சி.சு. மணி அவர் கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே, நல்லக்கண்ணு என்று அழைப்பதைவிட சுலோசனன் என்று அழைப்பதில் பெருமையிருப்பதாகக் கருதியிருப்பது தெரிகிறது.

சைவ சித்தாந்த தத்துவத்தைப் பொறுத்தமட்டில் தொல்காப்பியம் முதலிய சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டுமே வளர்ந்தது என ஒருசாரார் நிறுவ முயன்றுள்ளனர். மெய்யின் அகரமொடு சிவணும் என்பது முதற்கொண்டு தொல்காப்பியச் சூத்திரங்களைக் கொண்டு மட்டும் விளக்க முயலலாம். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்று உள்ள பெயர் களே சைவ சித்தாந்த இறை, உயிர், தளை கருத்துகளை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. மெல்லெழுத்து களின் வகைகளான வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை உயிர்களின் வகைகளைக் குறிக்கின்றன.

எழுத்துகளை ஒலிக்கும்போது இலக்கணத்தால் குறிக் கப்படும் எடுத்தல், நலித்தல், படுத்தல் என்னும் முறைகள் உலகத் தோற்றல், நிலை, இறுதி என்பவற்றைக் குறிப்பன வாகக் கொள்ளலாம். வ, ய என்னும் எழுத்துகள் உடம் படுமெய் என குறிக்கப்படும். இது இரு உயிர்களை இணைப்பது, பிறப்பை அழிப்பது என்னும் பொருளில் ஆளப்படுகிறது. வ, ய என்னும் எழுத்துகள் தூல, சூக்கும பஞ்சாக்கரத்தில் அருளையும், உயிரையும் முறையே குறிப்பதை நாம் நோக்கலாம். வினை என்னும் சொல்லே சைவ சித்தாந்த இரு வினையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. பா. வே. மாணிக்க நாயகர் எழுதிய “The mystical aspect of  Tamil alphabets” என்னும் நூலில் தமிழ் எழுத்துகளுக்கும் சைவ தத்துவத்துக்கும் இடையே உள்ள உறவு தெளிவாக்கப்படுகின்றது.

ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி..... இக்கிரமத் தென்னும் இருக்கு என்னும் மெய்கண்டாரின் விளக்கம் ஏகம் சத், விப்ரா பஹீதா வதந்தி என்னும் இருக்குவேத மொழிக்கு விளக்கமாக உள்ளது. மேலும், மன்னுசிவன் சந்தியில் மற்றுலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் என்னும் பகுதியும் நோக்கத்தக்கது. இது போன்ற பகுதிகளுக்கு தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட இயலாது.

இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்ன? ஏற்கெனவே கலந்துவிட்ட ஆரிய, திராவிடப் பண்புகள் சைவ, வைணவ மெய்ப்பொருளியலாகக் காணப்படு கின்றன. தற்போதைய நிலையில் இக்கலப்பை நீக்கவோ, மறுக்கவோ இயலாது. ஆனாலும், விழிப்பின்மையால் முன்பு ஏமாந்ததுபோல் ஏமாறாமல், நம் பண்பாட்டுக்கு உரிய நலத்தை நாம் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.

- விடுதலை நாளேடு 21 1 20

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 43

மதுரை ஆதீனகர்த்தர் லோககுரு திருப்பெருந்திரு மகாசந்நிதானம் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பர மாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய உரை வருமாறு:

 

உலகத்தில் உள்ள மொழிகள் இரண்டாயிரத்திற்கும் மேலாகப் புதிது புதிதாகத் தோன்றிவருவதை மொழி வரலாற்றாசிரியர்கள் ஆய்வரங்கங்களில் எடுத்துரைத்து வருகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கருத்தில் உடன்பாடு உள்ளது. அதுவே முதன்முதலில் மனித இனம் பயின்ற இலெமூரியாக் கண்டத்தில் கடல்கோள் அழிவிலிருந்து விடுபட்டுத் தமிழகத்தில் இன்றும் விளங்கிவரும் வழக்கத்தில் இருந்துவரும் மொழி என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள்.

அந்த மொழியே, தொன்மை மொழி, முதன் மொழி, தென்மொழி, உலகத்தின் தாய்மொழி-தமிழ்மொழி என்று போற்றியுரைக்கப்படும் மொழி ஆகும்.

பிற இடங்களில் மனித நாகரிகம் தோன்றி மொழி வழக்கம் இருந்ததை ஆய்ந்திட்ட வல்லுநர்கள் வியக்கின்ற செய்தி ஒன்று உண்டு. மொழி வழக்கம் உருப்பெற்றிட இலக்கணம், இலக்கியம் வகுக்கப்படல் வேண்டும். முதலில், ஆனால், மற்ற சீன, கிரேக்க, அசிரிய நாகரிக வரலாற்றில் அவ்வாறு இலக்கணம், இலக்கியங்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் பிறக்கு முன்னரே, தமிழர்கள் அகத்தியம், தொல்காப்பியம் என்ற அரிய இலக்கண இலக்கியக் கருவூலங்கள் படைத்திருந்தனர்.

திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் ஒருவரைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். காலம் வழி ஆராய்ச்சியில் நமக்கு அண்மையில் இருக்கின்றவர் இந்தத் தெய்வப் புலவர்தாம்.

தொல்காப்பியத்திற்கு உரை வழங்கியவர்களிலும், திருக்குறள், நன்னூல் மற்றும் சங்க கால இலக்கியங்கள் முதலான படைப்புகளை ஆராய்ந்தவர்களில் சிலர் அவற்றிற்கு வடமொழிச் சாயத்தினை ஏற்றி இடைச்செருகல் வேலைகளைச் செய்தபோதுதான், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும் மூத்த தமிழ்க் குடியினர் வஞ்சப் புகழ்ச்சி, பொய்யுரைத்தல், நன்றி மறத்தல், கயமை, களவு, பிளவு, மனக்கசப்பு, அழுக்காறு, அடுத்தவர் வாழப்பொறாமை ஆகிய தீய பண்புகளை - அவற்றின் மொத்த உருவமான ஆரிய இனத்தார்களிடம் அடையாளங் கண்டுகொள்ளத் தொடங்கினர்.

ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியே உருவாகக் கொண்டு தமிழர்களைப் பிரித்தாளும் முயற்சியில் முன்னேறி இன்று வரையிலும் இன் தமிழர்களின் இதய உணர்வுகளைச் சிதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக தென்மொழி, வடமொழி என இரு வேறுமொழி, நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைத்தரம், இனம் அடிப்படையில் பிறக்கலாயின. சமய உணர்வுகள் சமற்கிருதம் என்னும் அந்த வடமொழியோடு பிறந்தன என்பதை மற்றவர்களும் நம்பினர். தென்புலத்தார் கடன்களைப் புரோகிதர்களே குத்தகை எடுத்துக்கொண்டதைச் சமய வரலாறு காட்டும்.

தூய தெளிந்த நீரைப் பாசம் மூடிக் கவர்ந்தாலும், சிறிது விலக்கினால் நீர் தெளிந்த நீர்தான் - பாசம் அழுக்குப் பாசம்தான் என்று தெரியவருவது போலத் தமிழ் செந்தமிழாகவே தனித்து நிற்கும் - ஆரியம் அழுக்கு மொழியாக அருவறுக்கப்படும் என்று காலத்தால் உணரமுடிந்தது.

புலவர்கள் உச்சிமேற்கொள்ளும் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் தமிழ் மொழியைச் சிதைக்கும் சதிக்கு உடன்பட்டார்களோ என்ற அய்யப்பாடு எழுந்தது. தந்தை பெரியார் இதை அஞ்சாமல் எடுத்துச் சொன்ன பெருந்தகை ஆவார். ஆரிய மாயை என்ற அழுக்குப் பாசத்தை அறவே அகற்றப் பாடுபட்டுச் சிறப்பெய்திய தமிழ்ப் பெரியார்களுள் முதலாக நின்றவர் மறைமலை அடிகள், அருட்பிரகாச வள்ளலார் அதற்கு முன்னரே மணிப்பிரவாள நடை, அதற்கு முன்னரேயும் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்க முயற்சிகள் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியவர், அந்தப் பெருமைக்கு உரியவர் யார் என்று வரலாற்றின் அடிச்சுவட்டில் பின்னோக்கிச் சென்றால், வடமொழிக் கொடுமைகளைக் களையெடுக்க வந்த ஒரு ஞானப் பெருமகனைப்பற்றி நன்கு அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அந்த ஞானப் பெருமகன் தமிழர் சமயமான சைவ சமயத்தினைப் பரப்பிட வந்தவர். சீர்காழியிலே ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு தோன்றியவர். தமிழர்கள் வழிபட்ட முருகக் கடவுளின் மறு தோற்றமே அருள் திருஞான சம்பந்தராவார். தமிழ் ஞானசம்பந்தப் பெருமான் என்று அடியவர்களால் வழிபடப் பெற்ற அந்த ஞானவள்ளல் தமிழ் மாலைகள்-திருமுறைகள்-தமிழில் மட்டுமே சூட்டி இறைவனை மகிழ்வித்தார். பிறப்பில் அந்தணராக இருந்த அவர் தன்னைத் தமிழோடு இணைத்து இறை மொழி-மறைமொழி தமிழே; சமற்கிருதம் அல்ல என்று நிலைநாட்ட நாற்பத்து அய்ந்து இடங்களில் தன்னைக்குறித்து தமிழ்ஞான சம்பந்தர் என்று எடுத்து இயம்பி, நாளும் நற்றமிழில் நமசிவாய நாதனின் திருநாமத்தைப் பாட வந்ததாக , தெய்வத் தமிழிசை ஓதுவதற்கு வந்ததாகக் கூறிக் கொள்ளுகின்றார். இதை அவரது பக்திரசமிக்க பாடல்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை மெய்நெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமசி வாயமே

என்று தமிழ் முழக்கம் செய்கிறது.

வேதங்கள் நான்கு. ஆனால், அவை கூறும் மெய்ப்பொருளியல் உண்மை, தமிழில் திருவைந் தெழுத்தாகத் துதிக்கப் பெறுகின்ற நமசிவாய மந்திரமே. அன்பு செலுத்தி இறையருளால் ஆட்கொள்ளப் பெறவல்ல தகுதியை ஆரிய (அரு) மறைகளையும்விடத் தமிழ்த் திருமுறைகள்தாம் மிகுதியாகக் கொண்டு இலங்குகின்றன. மெய்விதிர்ந்து கண்ணில் நீர்சுரக்க வைக்கும் அருட்தன்மை வாய்ந்தது என்பதை அவர் விளக்குகின்றார். வடமொழியில் வழங்கிவந்த நான்முகக் கடவுளால் உண்டாக்கப் பெற்ற தாகக் கூறப்பெறும் நான்கு வேதங்களையுங்கூடச் சாடியதில் அவர் அஞ்சியதில்லை என நாம் அறிய முடிகிறது.

அந்தணர்கள் சிறுவயதில் உபநயனம் செய்து அதன் மூலம் தமது மொழிவளர்ச்சியினை நிலைநாட்டச் செவியறிவு மூலமாகவோ, ஏட்டில் எழுதியோ கண்ணுங் கருத்துமாக இருந்துவருவது இன்றும் நாம் கண்கூடாக அறியக் கிடப்பதாகும். தமிழ்ஞான சம்பந்தர் அதை வெறுத்து வடமொழி ஆதிக்கம் பரவினால் ஆபத்து என்று கருதினார் என்பது மட்டுமன்று, அவர் வேத முறைப்படி உபநயனமும் செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அந்த ஞானப் பெருமகனுக்கே தீங்கு விளைவிக்க முனைந்த சமணர்களைத் தமிழ் மந்திரங்களால் வென்ற வரலாறு நாடறிந்த ஒன்று.

தமிழர்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாக ஆரியப் பார்ப்பனர்கள் இன்று இருபதாம் நூற்றாண்டிலும் தீவிரமாக எதிர்ப்புக் காட்டிப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்கின்றார்கள். சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக என்ற கோட்பாட்டில் அருள் ஞானம் சுரக்கும் மதுரை ஆதீன பீடத்தில் எழுந்தருளி ஆட்சி செய்யும் நம்மை இக்கால அரசியல்வாதிகளில் ஒருசிலர் ஆரிய மாயையில் சிக்குண்டு தமிழ்த் திருஞானசம்பந்தர் வழிவந்த சமய நெறிகளுக்குக் கேடு விளைவித்து வருகின்ற செய்தி யினையும் நாடறியும். ஏன் உலகமே இந்தப் போராட்டத்தைக் கண்டு கொண்டுதான்  இருக்கிறது. ஒளிவுமறைவின்றிச் சொல்லப்போனால் இலங்கைத் தமிழர்களுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட ஒரு சமயத் தலைவர் மதுரை ஆதீனகர்த்தர் என்று உண்மையிலேயே பரந்த மனப்பான்மையுடன் பாராட்டுவதைவிட்டு மவுனம் சாதித்து வருகிறார்களே இந்துமதத் தலைவர்கள்-அதற்குக் காரணம் யார்? சமயநெறிகள் சமற்கிருத வெறியாளர்களிடம் புகுந்தமையால் தானே?

தமிழர் இறவா வரம் பெற்றவர்கள் என்று அதற்காகத் தற்புகழ்ச்சி பாட வரவில்லை. ஆனால், ஏமாந்து எல்லாவற்றையும் இழந்துவிட்ட இனம் என்று தமிழைப் பழித்து ஒருவன் சொல்வானேயானால், அவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று புரட்சிக் கவிஞர் பறையறைந்தாற் போல நாமும் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற கருத்தை மய்யமாகக் கொண்டுதான் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்படலாமா என்று ஆய்வு செய்ய நேர்ந்துள்ளது.

தமிழர் இனமான உணர்வைக் கட்டிக் காத்து இத்தலைமுறையில் தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடியதை யார் மறக்க முடியும்? யார் மறுக்க முடியும்?

ஆரியக் கொடுமைகளைத் தகர்க்க முன்வராவிட்டாலும் அதைத் தடுக்கக் களம் புகுந்த திராவிடர் கழகத்தவர்களுக்குத் தடையாக இருக்காதவர்கள் என்று குரல் கொடுத்து 1947ஆம் ஆண்டிலேயே திருவண்ணாமலை உரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ் மொழியில் திருவள்ளுவர், கபிலர், அவ்வை முதலான சிறந்த அறிவாளிகளாகிய அவர்களையும் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனருக்கும் பிறந்தார்கள் என்று சொன்னார்கள். அத்தகைய ஆரியர்களின் கையாளான விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகிவிடாதீர்கள்.

(திருவண்ணாமலை, 1947)

தமிழச்சிகளைத் தாசிகளாகவும் அவர்களுக்குப் பிறந்த மக்களை தாசர்களாகவும் வருணித்த வர்ணாசிரமக் கோலம், தர்மம் என்ற ஆரியக் கொள்கையைச் சாயம் வெளுக்க வைத்தவர் தந்தை பெரியார். தமிழ் மொழியிலிருந்தே அனைத்தும் பிறமொழியினர் களவாடிக் கொண்டனர் என்று குற்றம் சாட்டினார். சாதாரணமாக அரிசி என்று நாம் கூறும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் அரிசோ என்று கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலேயே மாறியதை ஆதாரமாக எடுத்து, இதுபோன்று எண்ணற்ற சான்றுகளை நம்மால் தரமுடியும்.

தந்தை பெரியார் சொன்னதுபோல இனமானப் பணிகளால் தமிழனது உயர்வை நிலைநாட்டி வரும் நம்மைப் போன்ற தலைமைப் பொறுப்பாளர்கட்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதுதான் நமது கருத்தாகும். துணிந்த துணிபு என்று உறுதிகூறி நிறைவு செய்கிறோம்.

- விடுதலை நாளேடு 23 1 20

செவ்வாய், 14 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 41

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருளை அறியவேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது. சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவ சமய, மெய்ப்பொருள் இயலில் ஏன் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவத்தில் ஏற்படுவதற்குக் காரணமானவர்கள் யார்? அதன் சூழ்நிலை யாது?

நம் நாட்டில் தற்போது காணப்படும் ருத்திர-சிவ வழிபாடு வேத காலத்தில் உள்ள ருத்திர வழிபாடும் அதற்கு முன்பே இங்குள்ள திராவிடர்களிடம் காணப்பட்ட சிவ வழிபாடும் சேர்ந்துள்ள வழிபாடு ஆகும். கோயிலோ, உருவ வணக்கமோ ரிக் வேதத்தில் இடம்பெறவில்லை. வேள்வியே ஆரிய வழிபாட்டின் மையமாக இருந்தது. சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மை கி.மு. 2500 முதல் கி.மு.1500 வரை எனக் கருதப்படுகிறது. அம்மை வழிபாடும் சிவ வழிபாடும் சிந்துவெளி மக்களை ஆட்கொண்டது. சிவபெருமானின் பண்டைய வடிவம் என்று ஆய்வாளரால் கருதப்பெறும் இலச்சினையில், அவர் விலங்குகள் சூழப் பதுமாசனத்தில் அமர்ந்திருக்கிறார். பசுபதியாகவும், மகா யோகியாகவும் பரமசிவனைக் கருதும் மரபு அந்நாளிலேயே நிலைபெற்றதற்கு இது சான்று. (பசுபதி-விலங்குகளின் தலைவன் - ஆன்மாக்களின் தலைவன் என்று பின்னாளைய சாத்திரம் பொருள் கண்டது.) சிவபிரானை மூன்று முக முடையோராக முத்திரையில் காண்கிறோம். இதிலிருந்து அவரை முக்கண்ணராகக் கருதும் கொள்கை வளர்ந்தது எனலாம். ரிக் வேத ருத்திரனும் சிந்துவெளிச் சிவனும் ஒன்று சேர்ந்தனர் என்பது எவ்வாறு புலனாகிறது?

ருத்திரன், சிவன் என்ற சொற்களின் வேர்ச் சொல்லில் ஒற்றுமை தெரிகிறது. ரிக் வேதம் ஐஐ 1.6.இல் சாயனர் ருத் என்னும் சொல்லுக்கு ருத்-துக்கம் துக்க ஹேது வா பாபாதிஹி தஸ்ய த்ராவயிதா ஏதான் நாமகோ தேவோசி என்று விளக்கம் தருகிறார். துன்பம் அல்லது அதற்குக் காரணமான பாவத்தை நீக்குபவர் என்பது இதன் பொருள். சித்தாந்த கௌ முதி என்னும் நூல் சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் மெலிதாக்குதல் என்று கூறுகிறது. சித்தாந்த கல்ப த்ருமா என்னும் நூல் இந்தச் சொல்லை மேலும் விளக்குகையில் பாவத்தை மெலிதாக்குபவர் என்று கூறுகிறது. ஆகவே ருத்திரவழிபாடும் சிவவழிபாடும் இணைந்து தற்போது உள்ள சிவ வழிபாடாக மலர்ந்தது எனக் கருதலாம்.

திராவிட-ஆரிய பண்பாட்டின் கலப்பினால் ருத்திர-சிவ வழிபாடு தோன்றியபோது, திராவிடரிடமிருந்து மூடநம்பிக் கைகள் ஆரியரிடம் சென்றிருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். தென்னிந்திய சைவத்தின் தோற்றமும் தொன்மை வரலாறும் என்னும் நூலில் சி.வி. நாராயண அய்யர் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் நியதி இல்லை; ஏனெனில், ஆரியரிடமே போதிய மூடநம்பிக்கை ஏன் இருந்திருக்கக் கூடாது? என்று கேட்கிறார்.

“It is not necessary to suppose that the Aryan religion was in any manner influenced by non-Aryan superstitions for there was nothing to prevent the Aryan themselves from having superstitions.”

C.V. Narayana Ayyer, “Origin and early History of  Saivism in South India”. University of  Madras, 1974 p.9.

ஆகவே, இரு நாகரிகங்கள் பழகும்போது ஏற்படும் மாற்றத் தால் சமற்கிருதத்தின் செல்வாக்கு திராவிடப் பண்பாட்டில் ஏற்பட்டது.

இந்த இரு பண்பாடுகளின் கலப்பில் இரு நாகரிகங்களின் சிறந்த பண்புகளும் (ஒன்று சேர்த்தலின் மூலம்) பாதுகாக்கப்பட வேண்டும் என்று சில சான்றோர் எண்ணினர். அவர்களில் திருமூலர், திருஞான சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும்

உணர்த்து மவனை யுணரலு மாமே

ஆரியமும் தமிழும் உடனல்கி காரிகையார்க்குங்

கருணை செய்தானே

என்பவை திருமூலர் திருமொழிகள், திருமூலர் தமிழ்ப் பண்பாட்டுடன் ஆகமப் பண்பாட்டை இணைத்து முதலில் இக்கலப்புக்கு வழிகோலியவர். இரண்டாவது மேற்கோளில் உடன் என்றதனால் ஆரியத்தினின்றே ஞானநூற் கொள்கைகள் தமிழிற்கு வந்தன என்று கொள்ளுதல் பொருத்தமில்லாதது என்பது புலனாகும். மேலும், தமிழ்ச் சொல்லும் வடச்சொல்லும் தாள்நிழற் சேர தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிட மோவார் என்று வரும் திருஞானசம்பந்தர் திருவாக்குகளையும் நோக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் திருமூலருக்கு அடுத்து இரு நாகரிகக் கலப்பை இறுக்கி, சைவ சமயத்தை நிலை நிறுத்தியவர். கவுணிய குலத்தில் தோன்றியவர் என்பதை விடாமல் கூறுவதோடு தன்னைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று பலமுறை தொடர்ந்து அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டவர். தாம் அந்தணராகப் பிறந்து, சமற்கிருதம் நன்கு கைவரப் பெற்றவராக இருந்தும் தீந்தமிழிலே 383 பதிகங்கள் பாடியதிலே மட்டும் கருத்தைச் செலுத்தியவர். சமற்கிருத மொழியில் அவர் நூல் எழுதியதாகக் காணப்படவில்லை. மேலும், பதி, பசு, பாசம் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதுடன் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்த முயல்வதை தேவாரத்தில் கண்டுகளிக்கலாம்.

விளையாதது ஓர் பரிசில் வரு பசுபாச வேதனை ஒண் தளையாயின தவிரவ் வருள் தலைவன் என்னும் திருமுதுகுன்றப் பதிகத்தில் தலைவன், தளை, விளையாதது என்னும் சொற்களின் வழக்கத்தைக் காணலாம். மெய்கண்டாரால் சைவ சித்தாந்தத்தின் சிறப்புக் கொள்கையாகப் போற்றப்படும் அத்துவிதக் கொள்கையின் கருவை அழகு தமிழில் ஞானசம்பந்தர் கூறுவதை இங்கு நோக்கலாம்.

ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம்அவை அய்ந்தாய்

ஆறார்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய்

வேறாய்உடன் ஆனான்இடம் வீழிமிழ லையே

இறைவன் உயிர் உலகோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இருத்தலை இப்பாட்டு அழகாக விளக்குகிறது.

திருநாவுக்கரசர் எவ்வாறேனும் கயிலை சென்று இறைவனைக் காணவேண்டும் என்று முயல, அவருக்குத் திருவையாற்றுக் காட்சியையே கயிலைக் காட்சியாகத் தந்தருள்கிறார் இறைவன். திருஞான சம்பந்தர் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருக்காளத்தியிலிருந்தே திருக்கேதாரம் போன்ற தலங்களைப் பாடி, இருந்த இடத்திலிருந்தே இறைவனைப் பார்க்க வேண்டிய தன்மையை விளக்குகிறார். மேலும், அந்தண முறைப்படி உபநயனம் ஞான சம்பந்தருக்குச் செய்வித்து வேதம் ஓதும் உரிமையை உமக்குத் தந்தோம் என்று அந்தணர்கள் கூற, திருஞான சம்பந்தர்,

துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்திலும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்று

அஞ்ச வுதைத்தன அஞ்செ ழுத்துமே

என அந்தணர் அந்தியில் ஓதும் மந்திரத்தைவிட அய்ந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை ஓதுகிறார். அப்பர் பெருமானும் சூரியனை வழிபடும் காயத்ரி மந்திரத்தைவிடச் சூரியனுக்கும் அடிப்படையாக கடவுள் வணக்கமே சிறந்தது என்பதை,

அருக்கன் பாதம் வணங்குவார் அந்தியில்

அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ

இருக்கு நான்மறை யீசனையே தொழும்

கருத்தினை நினையார் கன்ம னவரே

என்னும் தேவாரத்தால் தெரிவிக்கிறார். தமிழ் ஆரியப் பண்பாடுகள் கலந்த சைவ சமயத்தின் உயிர்க்கொள்கையான ஓர் இறைக் கொள்கை இரு பண்பாடுகளின் கலப்பினும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

சேக்கிழார் அடிகளும் இவ்வாறு வைதிகச் சைவ சமயத்தின் கலப்புத் தன்மையை உறுதிப்படுத்தி சைவ சமயத்தின் பெருமையை நிலைப்படுத்துகிறார். அவ்வாறு செய்யும்போது வேதநூல் என்பது காலத்துக்கேற்ப மாறக்கூடிய உலகியல் நிலையைத் தெரிவிப்பது என்றும், என்றும் நின்று நிலவக் கூடியது நிலவு மெய்ந்நெறிச் சிவநெறி என்றும் கூறுகிறார்.

உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்

நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்

என்பது சேக்கிழார் வாக்கு.

திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் பற்றிக் கூறும்போது வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க என்று அருள்வதுடன், திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் அயல் வழக்கின் துறையைச் செழுந்தமிழுக்கு வெல்லும்படி அமைகிறது என்று அறைகின்றார்.

திசையனைத்தின் பெருமை எலாந் தென்றிசையே வென்றேற

மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல

அயல்வழக்கின் துறைவெல்ல

அசைவினில் செழுந் தமிழ் வழக்கே

இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நலைபெருக - என்பது சேக்கிழார் அருள்வாக்கு.

ஆரிய-திராவிடப் பண்பாட்டுக் கலப்பால் ஏற்பட்ட நன்மை பயக்கும் இந்நிலை ஒரு பகுதி. இதன் மற்றொரு பகுதி இரு பண்பாட்டுக் கலப்பினால் தமிழரின் விழிப்பின்மையால் தமிழுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவையும் குறிப்பிட வேண்டும். இதற்குச் சமற்கிருத மொழியாளரின் ஏமாற்றுதல் காரணம் என்று கூறினாலும் தமிழரின் ஏமாறும் தன்மையே முக்கியக் காரணம் என்று கூறலாம். ஏமாறுபவன் இல்லை யெனில், ஏமாற்றுபவனின் செயல் செல்லாதல்லவா? இப்பகுதி யைப் பார்க்கும்முன் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குழுக் களுக்கும் திராவிட மொழிக்கும் உள்ள உறவை நாம் நோக்கலாம்.

சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்கம், இலத்தீனம், அனலடோனியம் என்னும் மொழிகள் இக்கூட்டத்தைச் சேர்ந்த மொழிகள், ஆங்கிலம் ஹ, க்ஷ, ஊ எனவும், கிரேக்கம் ஆல்பா, பீட்டா, காமா எனவும், ஹீப்ரு மொழி ஆலெப், பேத், கிமெல் எனவும் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளன. ஆனால், இதே இந்தோ-அய்ரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த சமற்கிருதம் இவ்வாறு கொள்ளாமல் அ, ஆ, இ என்று தமிழ்மொழி போன்று ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளது. இதனால் சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பியக் குடும்ப மொழிகளைச் சேர்ந்தாலும் கிரேக்கம், இலத்தீனம் போன்ற மொழிகள் இந்தோ-அய்ரோப் பியக் குடும்ப அமைப்பில் அய்ரோப்பிய மொழிகளால் அதிகம் பாதிக்கப்பட, சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய அமைப்பில் இந்திய (குறிப்பாக திராவிட) மொழிகளால் அதிகம் தாக்கம் பெற்றிருக்கிறது என்னும் உண்மை புலனாகும்.

இக்கூற்றை வலியுறுத்துவது போன்று Encyclopaedia Britanica 9-MtJ Volume-“Indo-European language”என்னும் தலைப்பில் பக்கம் 438இல் காணப்படும் கருத்தைக் குறிப்பிடலாம்.

In prehistoric times most branches of  Indo-European were carried into territories presumably or certainly occupied by speakers of non-Indo - European languages, and it is reasonable to suppose that these languages had some effect on the speech of the new comers. For the lexicon, that is indeed demonstrable in Hittite and Greek, at least.

It is much less clear, however, that these non-Indo-European languages affected significantly the sounds and grammer of the Indo-European languages that replaced them. Perhaps the best case is India, where certain grammatical features shared by Indo-European and Davidian languages appear to have spread from Dravidian to Indo-European rather than vice versa.

For most other branches of Indo-European languages any attempt to claim prehistoric influence of non-Indo-European languages on sounds and grammer is rendered almost impossible because of ignorance of the non-Indo-European languages with which they might have been in contact”

“Many or most of the desya words are indeed derivable from Sanskrit, but some are of  Dravidian origin e.g. akka (sister). atta (father’s sister), appa (father), Ura (Village) pulli (tiger)...... Whatever the judgement on any individual word, it is clear that Indo-Aryan did borrow from Dravidian and this phenomenon is important in considering  a group of sounds that sets Indo-Aryan apart from the rest of the Indo-European”.

இந்த நீண்ட ஆங்கில மேற்கோளை இங்கு கூறுவதற்குக் காரணம் எவ்வாறு சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கிறதோ, அதேபோன்று தமிழ்மொழியினால் சமற்கிருதம் நன்மை அடைந்துள்ளது என்று காட்டுவது தான்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 14 1 20

சனி, 11 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(3) -40

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

வைணவர் தந்த தமிழ்ச் சொற்செல்வம்

வைணவ உரையாசிரியர்கள் தங்கள் கருத்துகளை விளக்குவதற்கு மிகுதியாக வடசொற்களைப் பயன்படுத்திய போதிலும் அவற்றில் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், வடசொற்கள் இடையே கலந்து கிடக்கும் அத்தனித் தமிழ்ச் சொற் களைச் சலித்தெடுக்க விடாமுயற்சியும் அயரா உழைப்பும் வேண்டும். தமிழுலகிற்குப் பல வடசொற்களுக்கு நிகரான செந்தமிழ்ச் சொற்களும் தொடர்களும் அவ்வுரை களில் இருக்கின்றன என்பதே தெரிந்தபாடில்லை. இவ்வுண்மை யினைத் திருப்பாவை யுரை, அருளிச் செயல் ரஹஸ்யம் என்னும் இருநூல் களில் வடசொற்களுக்கு நிகராக வழங்கப் பட்டுள்ள தமிழ் வழக்குகளைக் கொண்டு நன்கு தெளியலாம்.

இத்தகு தமிழ்ச் சொற்களைக் கையாளும் வைணவ சமயப் பெருமக்கள் வடமொழி விரவிய நடையினை மேற்கொண் டதற்குக் காரணம் முன்னர்ச் சொன்னது போல் தத்துவ உலகில் வடமொழிச் செங்கோல் ஓச்சியதே ஆகும். மேலும், வைணவ சைவ சமயச் சான்றோர்கள் தமிழையும் வடமொழியையும் உறவுமொழிகளாகக் கொண்டனரே தவிரப் பகை மொழி களாகக் கருதவில்லை. தத்துவம் பற்றித் தமிழில் வடமொழிச் சார்பின்றி நூல்கள் தோன்றவில்லை என்பதும் கருதத்தக்க ஒன்றாகும். ஆழ்வார்கள் பாசுரங்களின் துணையால் தெளிந்த மறைக் கருத்துகளைக்கூட இராமானுசர் வடமொழியிலேயே சொல்லவேண்டிய அளவுக்கு வடமொழியானது தத்துவ உலகில் தலைநிமிர்ந்து நின்றது என்பது கசப்பாக இருந்தாலும் வரலாறு சொல்லும் உண்மையாகும்.

இதுகாறும் கூறியவற்றால் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே ஆரிய நாகரிகம் தமிழ் நாகரிகத்தோடு கலந்தது என்பதும், அதன் விளைவாக ஆரியக் கூறுகள் மிகுந்த தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றன என்பதும், வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் விளக்கப்பட்டன; சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார்கள் பாசுரங்களிலும் சுட்டப்பெறும் ஊர், பெருமான், பெருமாட்டி ஆகியவர் களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழியாக மாற்றப் பெற்றன என்பது தெளிவாகிறது; தோத்திரங்களிலும் சாத்திரங்களிலேயே வடமொழிக் கலப்பு மிகுதி என்பதும், அதற்குக் காரணம் தத்துவ உலகில் வடமொழியின் செல்வாக்கு என்பதும் விளக்கப்பட்டன. வைணவ ஆசிரியர்கள் வடசொற்களுக்கு நிகரான நல்ல தமிழ்ச் சொற்களைத் தம் நூல்களில் வழங்கியுள்ளனர் என்பது தெரிய வருகின்றது. சைவத் திருமுறைகளிலும் திவ்வியப் பிரபந்தத்திலும் காணப்பெறும் தமிழ்ப் பெயர்களையும் பிற தமிழ் வழக்குகளையும் மக்களிடம் பரப்புவதே சமயத்துறையில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதாகும். அவ்வகையில் பணி மேற்கொள்வது பயன் விளைப்பதாகும்.

அடிக் குறிப்பு:

1.            வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

தொல். எச்சவியல். சூ. 5.

2.            மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

தொல்: அகத்திணையியல் சூ. 5.

3.            மருத நிலத் தெய்வமாகிய வேந்தன் அரச தெய்வ மாகிய சிவபெருமானோ அல்லது விண்ணவர் தெய்வமாகிய இந்திரனோ என்பது விளங்கவில்லை. நெய்தல் நிலத் தெய்வ மாகிய வருணன் ஆரியத் தெய்வமோ, தமிழ்த் தெய்வமோ என்னும் அய்யப்பாடு நிகழற்பாலது. வண்ணன் என்பது பாடமாயின் அது தமிழ்த் தெய்வத்தையே குறிப்பதாகும். இந்திரன் திராவிடக் கடவுளெனில் இன்றிறன் என்பது இந்திரனென மருவிற்றென்க.

கா.சு. பிள்ளை, தமிழர் சமயம், பக்கம்-58

தேவநேயன், தமிழர் மதம், பக்கம்-29-33

4.            வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்

கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி

சிலம்பு, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை அடி 141-142.

திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த

பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, அடி 34-35.

5.            திருநாவுக்கரசர் தேவாரம் 6,

திருமறைக்காடு 5.

6.            பெருமாள் திருமொழி 1:4.

7.            பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட புராணம் 70..

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

-  விடுதலை நாளேடு, 9.1.20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(2) - 39

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இப்பெயர் மாற்றங்கள் நிகழ்வதற்குத் திருக்கோயில் ஆட்சிமுறையில் ஆரியர்கள் இடம்பெற்றமையும், ஆட்சியாளர்கள் வடமொழியை மதித்து வளர்ப்பவர்களாக இருந்தமையும் முக்கியமான காரணங்கள் எனலாம். காலப்போக்கில் பாமர மக்களிடையே வடமொழியே தெய்வத்தோடு பேசுவதற்கு ஏற்ற மொழி என்னும் தவறான எண்ணம் எப்படியோ வேர்கொண்டது. அதனால், தங்களுக்குப் புரியாத மொழியில் திருக்கோயில்களில் வழிபாடு நிகழ்த்துவதைப் பெருமையாகக் கருதினர்.

தோத்திரமும் சாத்திரமும்

சமய நூல்களில் தோத்திரங்களாக இருப்பவற்றில் நல்ல தமிழ் காணப்படுகிறது. ஆனால், சமய முடிவுகளை விளக்கும் சாத்திரங்களில்தாம் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலையினைக் காணலாம். சைவத் திருமுறைகள் இனிய எளிய இசைத்தமிழில் அமைந்துள்ளன. ஆனால், சமய முடிவுகளைப் பேசும் பதினெண் சாத்திரங்களும் அவற்றின் உரைகளும் வடமொழிக் கலப்பு மிக்கன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் தேனாய்ப் பாலாய்த் தித்திக்கும் தமிழில் அமைந்திருக்க அதன் உரைகளும், விசிட்டாத்துவைத முடிவுகளைக் கூறும் சாத்திரங்களும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன.

தோத்திரங்கள் நல்ல தமிழிலும் சாத்திரங்கள் வடமொழி விரவிய நடையிலும் அமைந்துள்ளமைக்குக் காரணம் உண்டு. தோத்திரங்கள் இறைவனை நினைந்து கசிந்து உருகிய உருக்கத்தைத் தெரிவிப்பன; உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்துவன. அப்பாடல்கள் மற்றச் சமயத்தவர்களோடு வாதிடுவதற்கும் இறைவனின் தலைமைத் தன்மையினை நிலைநாட்டுவதற்கும் துணைக் கருவிகளாக அமையலாம். ஆனால், அவை அந்நோக்கத்திற்காக எழுந்தவை அல்ல, சாத்திர நூல்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவை. அவை தங்கள் சமய முடிவுகள் பிற சமய முடிவுகளினும் மேம்பட்டவை என அறிவார்ந்த திறத்தால் நிலைநாட்ட முயலுபவை.

தத்துவ உலகில் வடமொழியின் மேலாண்மை

இந்திய தத்துவ உலகின் பொதுமொழியாக வடமொழியே நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. அத்துவைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் தங்கள் கருத்துக்களை விளக்குவதற்கு முதல்நூலாகக் கொண்டது வடமொழியில் உள்ள வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்தைத்தான். இம் மூவகைக் கோட்பாட்டினரும் தங்கள் கருத்துக்கேற்பப் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் கண்டனர், அத்துவைதப் போக்கில் ஆதிசங்கரரும், துவைதப் போக்கில் மத்வரும், விசிட்டாத்துவைதப் போக்கில் இராமானுசரும் பேருரை வரைந்தனர். இம்மூன்று கோட்பாடுகளையும் மறுத்துச் சிவாகமங்களின் துணைகொண்டு பிறிதொரு கோட்பாட்டை வலியுறுத்துவது சைவ சித்தாந்தம். வேதக் கருத்துகளை விளக்குவதற்கு கருவிகளாக அமைந்துள்ள சிக்கை, வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் முதலியவற்றைப் பற்றிய நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. ஆதலின் சாத்திரக் கருத்துகளை விளக்கும்போது வடமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது எளிமையாகவும் வசதியாகவும் அமைந்தது.

மேலும், சாங்கியர், புத்தர், சமணர் முதலானோரின் சமயக் கருத்துகளும் வடமொழியில் இருந்தமையால் அவர்களோடு கட்சியாடவும் அது பொதுமொழியாக இருந்தது. இக்காரணங்களால் சாத்திரங்களில் வடசொற்கள் மிகுந்த அளவில் கலப்பது தவிர்க்க இயலாத ஒன்றாயிற்று. பொதுமக்களுக்கு அரிய சாத்திர உண்மைகளை விளக்கும்போது வடமொழி கலந்து சொல்லும் போக்கே மேற்கொள்ளப்பட்டது. நல்ல தமிழில் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விசிட்டாத்துவைத வெளிச்சத்தில் விளக்க முற்பட்ட உரையாசிரியர்கள் வடமொழி கலந்த நடையினை மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம் அவர்கள் வேதத்தில் முங்கிக் குளித்து மணலெடுத்தவர்களாய்த் திகழ்ந்தமையாகும். சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்த சிவஞான முனிவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறைபோயவராய் இருந்தபோதிலும், தூய தமிழில் உரை வரையாமல் வடசொற்களைத் தற்சம விதிப்படி தமிழாக்கி வழங்குவதனைக் காணலாம்.

சமயக் கணக்கர்கள் தங்கள் கொள்கைகளை நிலைநாட்டுவதில் முனைந்து நின்றார்களே தவிர, மொழித் தூய்மையில் கருத்துச் செலுத்தினார்கள் அல்லர். இதனால் இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்களையும் கூட விடுத்து வடசொற்களைப் பயன்படுத்தினர். இதனைக் கீழ்வரும் சான்றுகள் வலியுறுத்தும்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 7 1 20

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம் - 38

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி)

தமிழ்த்துறைத் தலைவர், கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இரு நாகரிகக் கலப்பு

தமிழர் வாழ்வில் பிற துறைகளைக் காட்டிலும் சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றிலேயே வடமொழியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது. தொல்காப்பியனார் காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே தமிழினத்தோடு ஆரிய இனம் கலக்கத் தொடங்கிற்று. அக்கலப்பு மொழியிலும்கூடப் பரவத் தொடங்கித் தவிர்க்க இயலாத நிலையினை அடைந்தது. அதனா லேயே வடசொற்களை வட எழுத்துக்களை நீக்கித் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்தி ஆளலாம் என்று தொல்காப்பியனார் இலக்கணம் வகுத்துள்ளார்.(1) இவ்விரு நாகரிகங்களும் சில நூற்றாண்டுகள் ஒருசேர வழக்கத்திலிருந்து பின்பு மெல்ல மெல்லக் கலந்து தம்முள் சிலவற்றை இழந்தும் ஏற்றும் ஒரு புதுநெறி யாகவும் பொதுநெறியாகவும் உருவெடுத்தன. இம் மாற்றத்தின் தாக்கம், தமிழர்களின் அக-புற வாழ்க்கை களில் இருத்தலைவிடச் சமய மெய்ப்பொருளியல் வாழ்க்கையிலேயே மிகுந்த அளவில் இருத்தல் காணக்கிடக்கிறது.

ஆரியத் தெய்வங்கள்

இரு நாகரிகக் கலப்பின் விளைவாக, ஆரியர் வழிபட்ட தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம் பெறலாயின. பண்டைத் தமிழ்ப் பழங்குடி மக்களில் முல்லை நில மக்கள் மாயோனையும், குறிஞ்சிநில மக்கள் சேயோனையும், மருத நில மக்கள் இந்திரனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும் வணங்கினர் என்கிறது தொல்காப்பியம்.(2) இக்கடவுளர்களுள் மாயோனும், சேயோனுமே தமிழர்களால் வழிபடப்பட்ட தமிழ்க் கடவுளர்கள். இந்திரனும், வருணனும் ஆரியக் கடவுளர்கள் ஆவர். இந்திரன், வருணன்பற்றி வேறு பட்ட ஊகங்களை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.(3) எனினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரத்தைத் துணையாகக்கொண்டு ஆராய்ந் தால், வேந்தன் என்பது வேதங்களில் இடம் பெற்றுள்ள இந்திரனே என்பது வெளிச்சமாகும். பூம்புகாரில் இந்திரனுக்குக் கோட்டம் அமைத்திருந்ததனையும் இந்திர விழா பல நாட்டினரும் வந்து காணும் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றதனையும் சிலம்பும் மணிமேகலையும் தெரிவிக்கின்றன.(4) வேந்தன் ஆரியத் தெய்வம் என்று விளங்குவதால் வருணனையும் ஆரியத் தெய்வம் என்று கொள்வது பிழையாகாது. குறிஞ்சி நில மக்களால் வழிபடப்பட்ட மாயோன், சேயோன் ஆகியவர்களோடு முறையே ஆரியர்தம் கடவுளராகிய விட்டுணுவும் சுப்பிரமணியனும் ஒன் றாக்கப்பட்டனர். பண்டைத் தமிழரிடையே காணப் பெறாததும் வேதகாலத் தொடக்கத்தில் உருத்திரனாக முகிழ்த்துக் காலப்போக்கில் சிவனாக உருவெடுத்தது மாகிய சிவவழிபாடு தமிழர்களிடையே வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவ்வாறு தமிழ்க் கடவுளரோடு ஆரியக் கடவுளர்கள் ஒன்றுபடுத்தப்பட்டு ஆரியக் கூறுகள் மேலோங்கிய தெய்வங்கள் தமிழர் சமயத்தில் இடம்பெற்றன.

இறை வழிபாட்டில் ஆரியக் கூறுகள்

இறை வழிபாட்டிலும் ஆரியர்களின் வழிபாட்டு முறை இடம் பெறலாயிற்று. தமிழர் இறை வழிபாட்டில் மலர் தூவிப் போற்றுதல், நெல் தூவுதல், மணியடித்தல், இசைக்கருவிகள் முழங்குதல், கொம்பு ஊதுதல் முதலிய நிகழ்ச்சிகள் இருந்து உள்ளன. இதனை,

"யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு

நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது"

(முல்லைப் பாட்டு - 3-10)

"நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

இமிழிசை அருவியொடு இன்னியங் கறங்க

உருவப் பல்பூத் தூஉய்"

(திருமுருகாற்றுப்படை 239-241)

"கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி"

(திருமுருகாற்றுப்படை-246)

என்னும் சங்கச் செய்யுட் பகுதிகள் தெரிவிக்கின்றன. தெய்வங்களுக்கு வேள்வி செய்யும் பழக்கமும், நெருப்பில் தெய்வத்தை வழிபடுதலும் தமிழர்க்குரிய வழிபாட்டு முறைகள் அல்ல; அவை ஆரியர்களால் தமிழரிடைப் புகுந்தவை. இவ்வழிபாட்டு மாற்றங்கள் சங்க காலத்துக்கு முன்பே தமிழர் வாழ்வில் நிகழ்ந்தன. சங்க கால மன்னர்களே இவ்வாறான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு உள்ளனர். பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோர் பெயர்களே அவர்கள் வேள்விகள் பல எடுத்தமையைத் தெரிவிக் கின்றன.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

(குறள்-259)

என்னும் திருக்குறளும் வேள்விகள் பெருவழக்காக இருந்ததனைச் சுட்டுவது அறியலாம்.

இறைவன் முன்னே நின்று மந்திரங்களைச் சொல்லும் வழக்கமும் ஆரியர் வழிபாட்டு முறையே என்பதனைத் திருமுருகாற்றுப்படை கொண்டு உணரலாம். முருகன்பால் புலவன் ஒருவன் அவன் திருப்பெயர்களை அடுத்தடுத்துச் சொல்லி வழிபடும் நிலையினைப் பழமுதிர்சோலையில் காண்கிறோம். ஆனால், திருஏரகத்தில் வழிபாடு செய்யும் அந்தணர்கள் முருகனைக் குறித்த மந்திரத்தை அவன் திருமுற்றத்தில் முணுமுணுத்து நிற்பதனைப் பார்க்கிறோம்.

சமயச் சான்றோர்களின் மொழிக் கொள்கை

நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல இடங் களுக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை யும் இறைவியையும் தேமதூரத் தமிழில் நாவினிக்கப் பாடிப் பரவினர். அவர்கள் தமிழையும் வடமொழி யையும் ஒப்ப மதித்தவர்கள். அவர்கள் பாடிய இறை வனைக் குறித்த புராணச் செய்திகள் பல வடமொழி நூல்களில் இருந்தமையும், அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பாடியமையும் இவ்வாறு இரு மொழி யையும் மதித்துப் போற்றும் போக்கினை அவர்களுக்கு அளித்தன.

இதனாலேயே,

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (5)

என்று திருநாவுக்கரசரும்,

"அந்தமிழ் இன்பப் பாவினை

அவ்வட மொழியை" (6)

என்று குலசேகரப் பெருமாளும் இறைவனைப் பாடுகின்றனர். இவ்விரு மொழிகளையும் இறைவன் திருவருள் அரண்மனைக் கதவுகளைத் திறக்கும் பொற் சாவிகளாகக் கருதியவர் சேக்கிழார். ஆதலால் மறையினைப் பாடும் திருவாயினை உடைய சிவபெருமான் நம்பி ஆரூரரிடம் தன்னைத் தமிழால் பாடி வழிபடுமாறு பணிப்பதாகத் தெரிவிக்கிறார்.

"மற்றுநீ வன்மை பேசி

வன்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பின்

பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்;

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார் (7)

என்பது பெரிய புராணம்.

இவ்வாறு சமயம் வளர்த்த சான்றோர்களால் இரு மொழிகளும் ஒத்த நிலையில் - ஒரு நிலையில் வைத்துப் போற்றப்பட்ட போதிலும் தமிழர்களின் செல்வாக்குத் தாழ்ந்து வடமொழியாளரின் செல்வாக்குத் திருக்கோயில்களில் மேலோங்கிய காலத்தில் தமிழின் நிலை தாழ்ந்தது. திருநாவுக்கரசர் போன்ற பெருமக்கள் திரு முற்றத்தில் நின்று செம்மேனியம்மானைக் கண்குளிரக் கண்டு கரைந்து உருகிப் போற்றிநின்ற தில்லையில் திருமுற்றத்தில் தமிழுக்கு இடமில்லாத நிலை உருவாயிற்று. வடமொழியில் இறைவனைப் போற்றி மலர் வணக்கம் செய்யும் வழிபாட்டு முறை நிலைகொண்டது. திருக்கோயில்களைச் சூழ்ந்திருந்த தமிழ் மணம் மெல்ல மெல்ல அகன்றது.

தமிழ்ப் பெயர் மாற்றங்கள்

திருமுறை ஆசிரியர்களும், ஆழ்வார்களும் தங்கள் பாடல்களில் திருத்தலங்களின் அருமையான தமிழ்ப் பெயர்களையும், இறைவன் இறைவியர்க்கு வழங்கிய தமிழ்ப் பெயர்களையும் குறித்துச் சென்றுள்ளனர். அவையெல்லாம் வடமொழியாக்கப்பட்டன. அவ்வட மொழிப் பெயர்கள் வடமொழிப் பற்று மிக்கவர்களால் பெருவழக்காக்கப்பட்டன. காலப்போக்கில் தமிழ்ப் பெயர்கள் ஏட்டளவில் நிற்க வடமொழிப் பெயர்கள் வழக்கில் நிற்கலாயின.

திருத்தலப் பெயர்கள் வடமொழியாக்கப்பட்ட மைக்குச் சான்றுகள் :

தமிழ்ப் பெயர்   வடமொழிப் பெயர்

ஆய்ப்பாடி -   கோகுலம்

குரங்காடுதுறை  -  கபிஸ்தலம்

குடமூக்கு  -  கும்பகோணம்

சிங்கவேள்குன்றம் -  அகோபிலம்

திருவெஃகா   -  யதோத்காரி சந்நிதி

(சொன்னவண்ணம் செய்த

பெருமாள் திருமுற்றம்

பெரும்புலியூர்    -    வியாக்ரபுரி

மயிலாடுதுறை   -   மாயூரம்

மறைக்காடு    -  வேதாரண்யம்

முதுகுன்றம் (பழமலை)-   விருத்தாசலம்

வேங்கடம்   -   வேங்கடாசலம்

இவ்வாறே இறைவன் பெயர்களும், இறைவி பெயர்களும் வடமொழியாக்கப்பட்டன.

தொடரும்

- விடுதலை நாளேடு 2 .1 .20

இசையுலகில் வடமொழி ஆதிக்கம்- 36

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் சேலம் எஸ்.ஜெயலட்சுமி  அவர்கள் உரை வருமாறு.

17.12.2019 அன்றைய தொடர்ச்சி...

இசையுலகில் முன்னரே கூறியபடி சாமவேதம் தான் ஆரம்பம் என்ற கொள்கை இருப்பினும் வடமொழியில் இன்று அகப்படும் சாமவேதத்தில் இசைக்கூறுகள் ஒன்றுமில்லை என்பதையும், இந்த வேதங்களுக்கு முன்பாகவே தமிழ் நான்மறைகள்   இருந்திருக்கக்கூடும் என்பதையும் பார்த்தோம். தமிழிசையில் ஆதியிசைகள் பதினோராயிரத்துத் தொள்ளாயிரம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் யாவும் இசையைப் பற்றிய ஏராள மான குறிப்புகளைத் தருகின்றன. பரதம் என்ற தமிழ் நூல் ஒன்று இருந்து இறந்தமை தெரிகிறது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில் கூறுகின்றார். நாட்டிய நன்னூல் கடைபிடித்து என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் நாட்டிய நூல் வடமொழியில் உள்ள நாட் டிய சாத்திரமாக நிச்சயம் இராது என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டார். ஏனெனில் நாட்டிய சாத்திரத்தில் வட மொழி வல்லார் கூறிக்கொள்வதுபோல் அத்துணைச் செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சிலப்பதி காரத்தை எடுத்துக்கொண்டாலோ அதனுள் வரும் சிற்சில குறிப்புகளே ஒரு இசைக்களஞ்சியம் ஆகும் அளவுக்கு இருக்கின்றன என்பது நமக்குப் பெருமை யைக் கொடுக்கத்தக்கது.

சங்க இலக்கியங்களில் காணப்படும் பலதுறைச் செய்திகளைப் பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நாம் தமிழின் உண்மையான உயர்வை உணர முடியும். முதலாவது, தமிழ் எவ்வளவு ஏற்றமு டையது என்பதைத் தமிழர்களாகிய நாமே புரிந்து கொள்ளவில்லை. அப்படியிருக்கப் பிறமொழியினர் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்! பிற மொழியினர் தமிழின் ஒப்பற்ற பெருமையைத் தெரிந்து கொள்வதற்கு நாம் தமிழில் உள்ள அரிய சொற்களை, செய்திகளை திறமையான ஆய்வுடன் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ஆங்கிலத்திலும், அய்ரோப்பிய மொழிகளி லும், பிற இந்திய மொழிகளிலும் நூல்களை வெளியிட வேண்டியது மிகமிக அவசியம். இந்த நோக்கோடு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி நூல்களை இயற்றினார்கள் என்றால் அது மிகவும் வரவேற்கத்தக்கது.

இசையுலகில் நமது இந்திய இசை அதுவும் தென் னாட்டிசை மிக நுட்பமானதாகவும் பண்பட்டதாகவும் விளங்கிவருகிறது. வடஇந்திய இசையும் பண் அல்லது இராகம் என்ற அடிப்படையில் (Malodic System)  ஆனதே என்றாலும் நுண் சுரங்களை நமது தமிழ்நாட்டு இசையைப்போல் இவ்வளவு அதிகமாகக் கையாள் வதில்லை. உலக இசைகளில் ஆர்மோனியத்தில் அமைந்துள்ளது போல் பன்னிரண்டு அரைச்சுரங்களே (Twelve Semi Tones) கையாளப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு இசையில் காற்சுரங்கள், அரைக்காற்சுரங்கள் என்று பல நுண்சுரங்கள் இராகங்களில் பொன்னில் பதித்த வைரங்கள் போல் மிளிர்ந்து காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற இசையின் இலக்கணத்தை ஆராய்தல் பொருட்டு இந்தியாவிற்கு வரும் மேனாட்டு இசைப் பேராசிரியர்கள் இங்குள்ள வடமொழி நூல்களை ஆராய்கிறார்கள். இங்கு இசைக்கப்படும் இசைக்கும் இந்நூல்களில் காணப்படும் இலக்கணத்திற்கும் ஒரு விதச் சம்பந்தமுமில்லையே என்று திகைக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இசையின் அடிப்படை இலக் கணங்கள் தமிழிலேதான் இருக்கிறது. வடமொழி மய மாக்கும் முயற்சியில் பிற மொழியினரால் சொற்களைத் தான் வடமொழியாக்க முடிந்தது. ஆனால் அந்த சொல் லின் அடிப்படை மரபை, இலக்கணத்தை அவர்களால் அசைக்கமுடியவில்லை. இடபம் என்ற சொல்லை ரிஷபம் என்று ஆக்கினர். காந்தாரம் என்பதைக் காரந் தாரம் என்று ஆக்கினர். பண்பெயர்களை மாற்றியமைத் தார்கள். கலை என்பதை கலா என்றார்கள். பரதம் என்ற தமிழ்ச்சொல்லை வடசொல் என்றார்கள். நாட்டியம் என்பதை நாட்யம் என்று ஆக்கினார்கள். திருவிடம் என்பதை திராவிடம் என்றார்கள். தமிழில் மெய்யெ ழுத்து முதலாக வராது என்ற காரணத்தில் இச்சொற்கள் வடமொழிச் சொற்கள் என்று கூறினார்கள்.

கி.பி. 12 ஆவது நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தமிழிசை மரபும் பாணர் வரன்முறையும் சீராகவும் சிறப்பாகவும் இருந்துள்ளன.  பின்னர்த் தமிழ்நாட்டு முடிமன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஒப்பற்ற பாணர் மரபும் தமிழிசையின் வடிவமும் பிறமொழிகளின் பெயர்வழியே வேரூன்ற ஆரம்பித்தன. தமிழ்நாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. திருமறைக்காடு - வேதாரண்யமாயிற்று: திருவெண்காடு சுவேதாரண்ய மாயிற்று. பெரியகோயில் பிருஹதீஸ்வரமாயிற்று.

தேவாரத் திருமுறைகளில் நூற்றிமூன்று பண்களைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.  தெய்வச் சந்நிதி களிலே இசையோடும் தாளத்தோடும் யாழ், குழல், வீணை, மொந்தை, முழவம் ஆகிய இன்னிசைக் கருவிகளோடு தெய்வீகப்பாக்கள் பாடப்பட்டன. பண் சுமந்த பாடல்கள், நாடெங்கும் மக்களை இசையிலும் பக்தியிலும் பிணைத்தது. நடனக்கலை கோயிலில் வழிபடும் தெய்வம் வீதியிலே புறப்பட்டபோது நவசந்தி நிருத்தங்களாக ஒப்பற்ற கலையழகோடு தெய்வத்தின் முன்னிலையிலும் மக்கள் கண்டுகளிக்கும்படியாகவும் ஆடப்பட்டன. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் சிற்பக் கலையையும் இசையையும் நடனத்தையும் மற்றும் பல கவின் கலைகளையும் ஈடு இணையற்ற முறையிலே பராமரித்துப் பாதுகாத்து வந்தன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று சுந்தரமூர்த்தி அடிகள் சம்பந்தரைப் போற்றிப் பாடினார். சமயத்தைப் பரப்புவதைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதே சிவ நெறிச் செல்வர்களின் நோக்காக இருந்தது. ஆகம சாத்திரம் திராவிடப் பண்பாடேயாகும் என்று சுநீதி குமார் சாட்டர்ஜி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறி யுள்ளார்கள். இக்கலைகள் இன்றைக்கும் இங்கு தமிழ் நாட்டிலே சிறந்தோங்கி இருப்பதே நமக்குப் பெரும் சான்றாகும்.

எவ்விதமோ பலகுறுக்கு வழிகளிலே தமிழர்களை வஞ்சித்துத் தமிழ் மரபாகிய நம்முடைய பண்பாட்டை நம்முடையது அல்ல என்று நாமே நம்பும்படியாக ஒரு சாரார் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். பல தமிழ்ச் சொற்களை நமது புலவர்களே நம்முடைய தில்லை என்றும் மறுத்துக் கூறும் நிலைக்கும் நாம் வந்துள்ளோம். கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தெலுங்கு, கன்னடம், வடமொழி ஆகியவற்றில் இசை பற்றிய பல நூல்கள் பாடல்கள் வந்துள்ளன. அவை எதிலும் நமது பண்டைய இசை முறைக்கு உகந்த இலக்கணங்கள் காணப்படவில்லை. ஒவ்வொன்றும் தாறுமாறாகப் பல கொள்கைகளைக் கூறிக்கொண்டு, ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இன்று கர்நாடக இசை என்பது தமிழிசையே அன்றி வேறில்லை. இரா கங்களின் பெயர்களை மாற்றி எவருக்கும் ஒன்றும் புரியாதவாறு நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணி யுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள் செய்வதெல்லாம், இந்நூல்கள் சரியான, உண்மையான தகவல்களைத் தரவில்லையே என்று புலம்புவதுதான். கர்நாடக இசை அடிப்படை இலக்கணம் ஏதும் கூறாமல் சரிகமபதநிச என்றால் ஆரோகணம் சநிதபமகரிச என்றால் அவரோ கணம் என்று கூறிவிட்டு இசைப்பயிற்சியை ஆரம்பிக் கின்றன, சரிகம முதலிய ஏழிசை எப்படிப் பிறந்தன? இவற்றின் இயல்பு என்ன? எங்ஙனம் பண்கள் பிறந் தன? அதற்கு அடிப்படை இலக்கணம் என்ன என்பது பற்றி எவ்விதச் செய்தியும் இல்லை. சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரம் என்று நூலை மிகச் சிறப்பாகக் கூறுவர் வடமொழி ஆதரவாளர்கள். அந்தச் சாரங்க தேவர் தேவாரவர்த்தனீ என்ற தேவாரத்தில் காணப் படும் பண்களைக் குறிப்பிட்டுள்ளார். பன்னிரெண்டு சுரங்களுக்கு 22 சுருதிகள் (காற்சுரம் அல்லது அலகு என்று தமிழிசை கூறும்) என்ற ஒரு தவறான கொள்கை யைப் பரப்பி இசையுலகில் எல்லையற்ற குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளார் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கருணாமிருத சாகரம் என்ற அரிய சிலப்பதிகார ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்த 22 சுருதி என்பது 12 அரைச்சுரங்கள் 24 அலகுகளாக ஆகின்றபடியால் இரண்டு சுரங்கள் இணை, கிளை முறையில் அமைந்துள்ளவற்றை ஒவ் வொரு அலகு குறைத்துப் பாடும் முறையால் இக்கருத்து ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இலக்கணம் சிலப்பதிகாரத்தின் மூலம் நமக்கு கிடைக் கிறது. பல அரிய இசைத் தமிழ் நூல்கள் இறந்தமையால் நமக்கு இவ்விதம் பெரும் இடையூறு ஏற்பட்டது. தமிழிசையின் வளத்தையும் மேன்மையையும் பார்க் கும்போது கர்நாடக இசையெல்லாம் மிகவும் பிற்பட் டது; ஏன், தாழ்வுற்றது என்றும்கூடச் சொல்லலாம்.

பிழையா மரபின் ஈரேழ் கோவையை

உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி

என்று இளங்கோவடிகள்  இசை இலக்கணத்தைச் சிலப்பதிகாரக் காவியத்தில் நாம் செய்த பெரும்பேற்றால் பொதிந்து வைத்தாரோ நாம் பிழைத்தோமோ; பன்னிரு சுரங்களைப் பன்னிரண்டு இராசி வீடுகளில் அமைத்து சுரங்களினூடே பகையும் நட்பும் உறவும் பின்னிப் பிணைக்க ஒன்பது சுவைகளையும் அள்ளிச் சொரியும் நமது இசையிலும் பண்களிலும் காணப்படும் பெருமித மும் ஆனந்தமும் நெகிழ்ச்சியும்தான் என்னே! உலகி லேயே இவ்வளவு வளம்பெற்ற இசைமரபு எங்கும் கிடையாது. பரதநாட்டியத்தின் காணங்கள் கூத்து வகை கள் யாவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன. சிலம்பில் காணப்படும் அளவு செய்திகள் வடமொழி பரதநாட்டிய சாத்திரத்தில் காணப்படவில்லை. ஆகவே யாரிடமிருந்து யார் கடன் வாங்கியிருக்கக்கூடும் என் பதை நாம் நன்கறியலாம்.

எந்த நூலை எடுத்தாலும் வடமொழியில் அந்நூலை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு வடமொழி நூல்தான் மூலம் என்று சொல்வது ஒரு வழக்காக இருக்கிறது. நல்ல காலம்! சிலப்பதிகாரத்தை எவரும் மொழிபெயர்க்கவில்லை. அதாவது மொழிபெயர்க்க இயலவில்லை என்று தெரிகிறது.

திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்கள், சிலப்பதிகாரக் காவியம் இளங்கோவடிகளால் அவர் காலத்திலேயே செய்யப்பட்டது. இது வேறு எந்த மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது என்று எவராலும் எவ் விதத் திலும் சொல்லமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறு கின்றார்.

ஆரியர் வருகை என்று சொல்லப்படும் காலத்திற்கு முன்பு திராவிட சம்பந்தமான ஒரு நாகரிகம் இந்தியா முழுவதும் பலுசிஸ்தானம், வங்காளம் வரை பரவியிருந்ததாக பானர்ஜி முதலிய வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். ஆகவேதான், நாம் இன்று காஷ் மீரத்திலும், இமயத்திலும், ஒரிஸ்ஸாவிலும், வங்காளத் திலும் நமது பண்பாட்டின் சுவடுகள் காணப்படுவதைக் காண்கிறோம். பல திராவிடச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் வங்காள மொழியில்கூடக்  காணப்படுகிறது என்று கூறுகிறார் பண்டர்கர் என்னும் அறிஞர்.

ஆரியர்களுடைய வருகைக்கு முன்னர் வட இந்தியாவிலே திராவிட மொழி பரவியிருந்தது என்ற உண்மை இங்ஙனம் உறுதியாயிற்று. வட இந்திய பிராந்திய மொழிகளை ஆராய்ந்து பார்க்கும்போது இவ்வுண்மை தெற்றெனப் புலனாகிறது. வடமொழிச் சொற்கள் தொடர்கள் நிரம்பியிருக்கும் வங்காள மொழிகூடப் பெருவாரியான திராவிடச் சொற்களைக் கொண்டதாகவும் மொழி ஒற்றுமை உடையதாகவும் இருக்கிறது. அதைவிட அதிசயமானது இந்தி மொழி யிலும் திராவிடச் சொற்களை நிறையக் காணமுடியும் என்ற உண்மைதான். ஒரு காலத்தில் வட இந்தியா முழு வதிலும் திராவிட மொழியே வழங்கிவந்தது என்பதைப் பற்றி எந்தவிதமான அய்யமும் கொள்வதற்கில்லை. பி.ஆர். பண்டர்கர் இந்தியாவின் பண்டைய வரலாறு என்ற சொற்பொழிவு (பக்கம்5) Quotation on Tamil and Tamil Culture compiled by R.Madhivanan Thainadu Pathipagam 1981).

இசைமூலமாகவும் இசைப் பண்பாட்டின் மூலமா கவும் தமிழிசைக்கும் தமிழிசை இலக்கணத்திற்கும் இணையான இசைக்கலை உலகில் வேறெங்குமில்லை என்பதை நிலைநாட்டலாம் என்பது எனது தாழ்ந்த கருத்து. தமிழ் நூல்களில் உள்ள ஒப்பற்ற உண்மைகளை அழியா மரபுகளைத் தமிழர் நன்கு அறிந்து உவக்கும் வண்ணம் தமிழிலும், பிற மொழியினர் உணர்ந்து கொள்ளும் வண்ணம் பிற மொழிகளிலும் நூல்களினை உருவாக்கித் தருவதே நமது தலையாய கடன் என்று எனது பணிவான கருத்தை தமிழறிஞர்கள் முன் விண்ணப்பம் செய்கிறேன்.

- டாக்டர் சேலம் எஸ். ஜெயலட்சுமி

- விடுதலை நாளேடு 19 12 19