திங்கள், 22 ஜூலை, 2024

அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்

 



ஞாயிறு மலர்

என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய ‘ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய முடியும்.

தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து அடைந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை, ஆடம்பர, உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் லாபத்தையும் எதிர்பார்த்தோ வந்தவளல்ல, அல்லவே அல்ல!

என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரும் பணக்காரத் தன்மையில் இல்லை என்றாலும், போதிய கவுரவமும் – மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில், கஷ்டம் இன்னதென்று தெரிந்துகொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்குப் போதிய வசதியான அளவிற்கு ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது, மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத் தகுதியுடைய நிலையில் இருந்ததுதான். சிறுவயது முதல் என் தந்தையாரால் சுயமரியாதை கருத்துபட வளர்க்கப்பட்டு தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அவரோடு பழகி, அவரது கருத்துக்களாலும் கொள்கையாலும் கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதை செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப் பணிபுரியச் சேர்ந்தவளே தவிர வேறில்லை. 1948லிருந்து என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் – அன்று முதல் இன்று வரை என் செயல்கள். நடவடிக்கைகள், வாழுகின்ற முறைகள், அய்யா மறைவிற்குப் பிறகும், என் போக்கு. தன்மை – இவைகளெல்லாம் எப்படிப்பட்டவை என்று என்னைப் பொறுத்தவரையில் என்றும் ஒளிவு மறைவு இல்லாத ஒரே சீரான தன்மையில் தான் இருந்து வருகிறேன். எந்தவிதமான புதிய மாற்றங்களுக்கும் அவசியமில்லை என்பதையும் உணருகிறேன்.

தந்தை பெரியார் அவர்கள் தனது இயக்க இலட்சியங்கள் – கருத்துக்கள். பணிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக செய்துள்ள ஏற்பாடுகள். நாட்டு மக்களிடத்தில் அவர் கொண்டுள்ள உண்மையான அன்பின் பிடிப்பையும் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது தனக்கென என்று ஒன்றும் வைத்துக் கொள்ளாமல் பொது நன்மைக்கே. பயன்படும் வகையில் தக்க முறையில் ஏற்பாடு செய்து தனக்குப் பின்னால் பயனுறும் வகையில் செய்துள்ள அந்நற்செயல் மற்ற எவரும் சாதாரணமாய் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட தன்னலமற்ற தியாகமும் அன்பு உள்ளமும் கொண்ட ஒரு உத்தமரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பணிபுரிய வந்த என்னை சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கத்திற்காக ஒரு ஏற்பாடு என்ற கவலையினால் தனது வாழ்க்கைத் துணைவி என்று. எதிர்ப்பு ஏளனம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அறிவித்தார்கள்.
சில சமயங்களில் சுபாவ குணத்தால் எனக்கும் பிடிவாதம், அர்த்தமற்ற கோபம் இவைகளால் ஏற்படுகிற தொல்லைகளை எல்லாம் அன்போடு சகித்து, அவர் சகித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டு, தனது மனநிலைக்கு ஒத்தவாறு என்னையும் மாற்றி அமைத்துப் பக்குவமான நிலையை அடையச் செய்தார்கள்.
அவர்களது காலத்திற்குப் பிறகு எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதி எனக்குத் தெரியாமல் சில ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தது பல ஆண்டுகள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது.

அந்த ஏற்பாட்டின்படி எனக்குத் தனிப்பட்ட வாழ்வுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட, கிடைத்துள்ள சொத்துக்களையும், அதன் மூலம் வரும் வருமானங்களையும், அய்யா அவர்கள் காட்டிய வழியிலேயே அய்யா அவர்களைப் போன்றே, பொது மக்களுக்கே உபயோகப்படும் தன்மையில், நான் நல்ல வண்ணம் சிந்தித்து ஒரு ஏற்பாட்டினைச் செய்வது என்ற திடமான முடிவுக்கு வந்து, சென்ற 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் சேதி “Periyar Maniammal Educational and Charitable Society” என்ற பெயரால் ஒரு அறக்கட்டளை (Trust) ஏற்படுத்தி தக்கபடி. முறையாக. சட்டரீதியாக அதற்குச் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து முடித்து விட்டேன்.
தலைவர் பெரியார் அவர்கள் பிறந்த வீட்டை. (அது எனக்கே உரியதாய் சட்டப்படி இருந்தபோதிலும்) என்றென்றும் அவர் வீடாகவே’ வைத்திருக்க ஒரு அரிய வாய்ப்பு ஏற்பட்டது.

சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற அய்யா அவர்களது 96ஆவது பிறந்தநாள் விழாவின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர். ஈரோட்டில் அய்யா அவர்கள் பிறந்த இல்லத்தை தமிழ்நாடு அரசுக்கு அளிக்கும்படியும், அதை அரசு சார்பான நினைவுச் சின்னமாக நிறுவ தமது அரசு முடிவு செய்துள்ளது என்றும் அறிவித்து கேட்டுக் கொண்டதே அவ்வாய்ப்பாகும். அந்த மேடையிலே நான். நமது முதலமைச்சர் அவர்களிடம் அந்த வீட்டை ஒப்படைப்பதாக அறிவித்தேன்.
நமது தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அய்யா நினைவுச் சின்னமாக அழகுபடச் செய்யப்பட்டு, மக்கள் பார்த்து மகிழும் வண்ணம், காலம் உள்ள அளவு நிலைத்து நிற்கும்படியான அரும் பெரும் ஏற்பாடுகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பொதுமக்கள் பார்வைக்கு அய்யா அவர்களின் பிறந்த நாளில் திறந்து வைக்கப்படுகிறது.

(‘விடுதலை’ – 23.9.1975)

அன்னையாரின் தலைமை தாங்கும் ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு


 தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்பு போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையிலிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கழக வீரர்கள் உணவுக் கோளாறு, அதிக ரத்தவயிற்றுப் போக்கினால் சரியான சிகிச்சை அளிக்காததால் மாண்டனர். அவர்களை காவல் துறையினர் சிறைக்கு உள்ளேயே புதைத்து விட்டனர். அவர்களது உறவினர்களுக்குக் கூட உடல்களை தரவில்லை! இந்தச் செய்தி அறிந்த மணியம்மையார் அவர்கள் கொதித்தார். அவசரமாக திருச்சி செல்ல முயன்றோம்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் பிளைமவுத் கார் வைத்திருந்தார். அவரும் வந்தார். அவருடைய காரில் அம்மாவும், நானும் உடனே திருச்சி சென்றோம். அம்மா இதனை அறிந்தவுடன் எப்படியும் இதற்கு பரிகாரம் தேடிட உடனே முனைந்தார். அதே காரில் சென்னை திரும்பி, மருத்துவமனையிலிருந்த அய்யாவை சந்தித்தார். அய்யா ஆணைப்படி, அன்றைய முதலமைச்சர் காமராசரை அவரது இல்லத்தில் நேரே சந்தித்து “இது தர்மமா? இறந்த எங்கள் தோழர்களின் உடல்களைக் கூட எங்களிடம் ஒப்படைக் காமல் உள்ளேயே அனாதைப் பிணங் களைப்போல் புதைத்து விடுவதா?” என்றெல்லாம் கொதித்துக் கேட்டவுடன், அவர் மிகவும் அதிர்ச்சியுடன், “அம்மா! நான் உடனே தவறை சரிப்படுத்தச் சொல்கிறேன், சங்கடப்படாதீர்கள்” என்று சமாதானம் சொன்னார். அம்மா திருச்சி திரும்புவதற்கு முன் பெரியார் மாளிகை முன் பெரிய கூட்டம். அவர்களை நானும் மற்ற இயக்கத் தோழர்களும் சமாதானப்படுத்தி வைத்திருந்தோம்.

சிறை அதிகாரிகள் பெரியார் மாளிகைக்கு வந்து ‘இருவர் உடலையும் வாங்கிக் கொள்ளுங்கள்‘ என்றார்கள். நாங்கள் அவர்களது உறவினர்களை அழைத்துச் சென்று வாங்கி வந்து பெரியார் மாளிகையில் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைத்திருந்தோம். அம்மா சென்னையிலிருந்து திரும்பிய பின்பே இறுதி ஊர்வலம்; அடக்கம் என்றோம். புதைக்கப்பட்ட அவ்விருவரது உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, சிறை அதிகாரிகளால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது! சிறை நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து கழகத் தோழர்கள், பொதுமக்கள் ஆத்திரம் கொப்பளிக்க அலை அலையாய் பெரியார் மாளிகை முன்பு சேர்ந்து கொண்டேயிருந்தனர்.
காவல் துறை அதிகாரிகளுக்கு நிலைமை கட்டுக்கடங்காது சென்று விடுமோ என்ற அச்சம் உலுக்கியதால், அவர்கள் உடனே உடல்களை எடுத்துப் பக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து விடுங்கள் என்று, வழக்குரைஞர் வேதாச்சலனாருக்கு வற்புறுத்தலைத் தந்தனர். அவரும் தலை அசைத்து காவல் துறையினரின் குரலாகிவிட்டார். கழக தோழர்களோ உடன்படவில்லை. நானும் மற்ற தோழர்களும், பிடிவாதமாக அம்மா திரும்பி வந்த பிறகே இறுதி ஊர்வலம்.

அதுவும் காவிரிக் கரை சுடுகாட்டு மைதானம் வரை ஊர்வலம் நகர் முழுவதும் செல்லும் என்றோம். ஒரே பரபரப்பு. கொந்தளிப்பு. அம்மா வருவதற்குள் வேதாச்சலனாரின் நெருக்கடி வற்புறுத்தலால் ஊர்வலம் புறப்பட்டு திருச்சி தில்லை நகர் திருப்பம் வரும் போது அம்மா வந்துவிட்டார். எனக்கு நிம்மதி பெருமூச்சு. கடமை இனி அவருடையது. அவரது தலைமையில் ஊர்வலம் மிகப் பிரமாண்டமாக காந்தி நகர் மார்க்கெட் வழியே பெரிய கடைவீதி வழிச் செல்ல முயன்ற போது தலைமை காவல் அதிகாரி உட்பட வந்து தடுத்தனர். அம்மாவோ இசையவில்லை. ‘அனைவரும் அப்படியே உட்காருங்கள்’ என்றார். அதைக்கண்டு காவல் துறையினர் நெருங்கி அவர்களைத் தடுக்காமல் விட்டுவிட்டனர். இறுதி ஊர்வலம் நேரே சுடுகாட்டினை அடைந்தது. பல லட்சக்கணக்கான மக்கள் ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு சாலையில், -கடை வீதியில், இருமருங்கிலும் நின்று மரியாதை செலுத்தினர்.
அது திருச்சி வரலாற்றில் ஒரு குறிப்பிட்டதொரு மனித உரிமைப் போராட்ட நிகழ்ச்சி. அன்னை மணியம்மையார் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதை உலகறியக்கூடிய வாய்ப்பும் தலைமை தாங்கக்கூடிய தனித்தகுதியும் அவருக்கு உண்டு என்பதை இக்கட்டான அந்த நிலைமையை சமாளித்த விதமே காட்டியது.


ஆசிரியர் கி.வீரமணி,
அய்யாவின் அடிச்சுவட்டில், பாகம் – 1

அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு

 



அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு ‘வடமேற்குடியான்’ என்பவர் 1974இல் ‘உண்மை’ ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன.

“சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்றுக் கோளாறு. இதையறியாத நண்பர்கள் உப்புமா தருகிறார்கள். பெரியாரும் வேண்டாமெனச் சொல்ல மனமின்றி அள்ளி வாயில் போடுகிறார். அதைப் பார்த்துவிட்டு மணியம்மையார் ஓடிவந்து வாயில் போட்டதைத் துப்பும்படி கெஞ்சுகிறார். அய்யா குழந்தையைப் போல் அடம் பிடிக்கிறார். அம்மா தாய் போல் கடிந்து கொள்கிறார். அவர் துப்பும் வரை விடவில்லை. பிறகு மருத்துவர் சொன்னபடி சூடான பானம் கொண்டு வந்து கொடுக்கிறார்.”

இது போலப் பெரியாரைக் கண்காணித்து வந்த அன்னையார் கழகத் தொண்டர்கள், அய்யாவை எவ்வாறு ‘அய்யா’ என்றோ ‘தந்தை பெரியார்’ என்றோ குறிப்பிடுகிறார்களோ அதுபோலவே அம்மாவும் அய்யா அவர்கள், பெரியார் அவர்கள் என்றே குறிப்பிட்டார். என் கணவர் என்று எப்போதாயினும் தவிர்க்கவியலாத சூழ்நிலையில் தான் குறிப்பிட்டிருப்பார்.

அம்மா குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர்


தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை. என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும், தளபதி வீரமணி அவர்களாலும் எடுக்கப்பட்டு பெரியார் திடலில் நாங்கள் இருவரும் கலந்து பேசினோம்.

இளமைக் காலந்தொட்டு இலட்சியப் பிணைப்பால் ஆழமாக வேரூன்றி இருந்த நட்பு எங்கள் இருவரையும் கண்ணீர் வடிக்கச் செய்தது. பேராசிரியர் அவர்கள் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர்களான மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், சி.வி.எம்.அண்ணாமலை ஆகியோர் அன்று மேற்கொண்ட மிகச் சிரமமான பணி வெற்றி அளித்து, நானும் நாவலரும் செயற்குழுக் கூட்டத்திற்குச் சென்றோம். எங்களின் பதவி விலகல்களை திரும்பப் பெற வேண்டுமெனச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. செயற்குழு முடிவை அறியவும், எங்கள் அறிவிப்பைக் கேட்கவும். சென்னை அரசினர் தோட்டம் சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்திற்கு முன்னால் பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தின் மத்தியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு அதில் ஏறி நின்று நானும், நாவலரும் பேசினோம்.

(‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞர் மு.கருணாநிதி மூன்றாம் பாகம் – பக்கம் 91 )

அம்மா குறித்து அண்ணா கூறினார்


 “அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக்

கட்டிக் காத்து அவரை நோயின்றி
உடல் நலத்தோடு பாதுகாத்து
வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்”
இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே:
“அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்லாது அய்யா அவர்கள் இவ்வளவு ஆற்றல் பெற்று வாழவும் வைத்திருக்கிறது.”
“அய்யா அவர்களிடம் நான் வந்து சேர்ந்தபோது இப்போது எனக்கு எனன் வயதோ அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு – இப்போது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ அதையும்விட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன.

உலகில் “நாத்திக இயக்கத்தை தலைமையேற்று நடத்திய முதல் பெண்” – அன்னை மணியம்மையார்



                                                                       முனைவர்

                                                          அதிரடி க.அன்பழகன்

மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்

தொன்மைத் திராவிடர் இனத்தின் உயர் நாகரிகமும் – உன்னத வாழ்வியலும் – ஏற்றமிகு பண்பாடும் – எழுச்சிமிகு சிறப்புகளும் சீர்கெடக் காரணமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்கொண்டு, களங்கண்டு, போராட உதித்த திராவிடர் இயக்கத்தின் உயிர்க்காற்றாய் – ஒப்பற்ற இலட்சியக் கொள்கையின் ஊற்றாய் தோன்றிய தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று – அய்யாவின் நிழலாக பணியாற்றி – அய்யாவிற்குப் பின் அவரிடத்தை தலைமை ஏற்று நடத்திய திராவிடர் இயக்கத்தின் தாய் அன்னை மணியம்மையரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024.

நூற்றாண்டு கண்ட இயக்கமாம் திராவிடர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னை மணியம்மையார் நூற்றாண்டு கடந்து 105ஆவது பிறந்த நாள் காண்கிறார்.
வேலூரில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் திரு.கனகசபை – பத்மாவதி ஆகியோரின் மகளான காந்திமதி என்ற பெண்தான் பின்னாளில் கே.அரசியல் மணி என்றும், கே.ஏ.மணி என்றும் அழைக்கப்பட்டார். திரு.கனகசபை அவர்களின் குடும்ப நண்பர் “அண்ணல் தங்கோ” அவர்கள்தான் இவருக்கு பெயர் மாற்றம் செய்தார்.
தநதை பெரியார் தனக்கு உதவியாளராக பணியாற்ற – உடல் நலம் மற்றும் கழகப் பணிகளை கவனிக்க ஒருவர் முழு நேரப் பணியாளராக தேவைப்படுகிறார் என்ற செய்தியறிந்த கழகத் தொண்டர் கனகசபை தனது மூத்த மகள் மணியம்மையாரை (கே.அரசியல் மணி) பெரியாரிடம் ஒப்படைத்தார்.

தந்தை பெரியார் தனது இயக்கத்தின் எதிர்காலப் பணி சிறப்புடன் தொய்வின்றி நடைபெற – தனது சொத்துகளை அறக்கட்டளையாக்கி அதன் வழி இயக்கம் இலக்கு நோக்கி இயங்கிடச் செய்ய விரும்பினார். தனது வாழ்விணையர் நாகம்மையாரும் – அவர்களுக்குப் பிறந்த பெண் மகவும் மறைவுற்ற சூழலில், அன்னை மணியம்மையாரை தனது சட்டப்படியான வாரிசாக்கி – அதன் மூலம் தனது சொத்துகள் யாவையும் இரத்த உறவு சொந்தங்களுக்குச் சேராமல் பாதுகாத்து இயக்கச் சொத்தாக்கினார். இலட்சியப் பணிக்கு சொந்தமாக்கினார்.
திருமணம் என்ற ஏற்பாட்டால் நடைபெற்ற இக்காரியம் ஒரு இயக்கத்தின் தொடர் பணிக்கு வித்தானது. ஆனால், அன்னை மணியம்மையார் மிகப் பெரும் இழிவுப் பட்டங்களை சுமந்திட இடமானது. அவையனைத்தையும் தாங்கிக் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் தலைவருக்கு – திராவிடர் இனம் மானமும் அறிவும் பெற போராடும் ஒரு புரட்சியாளர்க்கு பணி செய்யும் வாய்ப்பும் – அவரது பேரியக்கத்திற்கு காப்பாளராக இருக்க தனக்குக் கிடைத்திட்ட மிகப் பெரும் பொறுப்பும் பெருமைக்குரியது என்றெண்ணி பணி தொடர்ந்தார்.
தந்தை பெரியாரை காப்பதில் ஈன்ற தாயாகவும் – நலம் பயப்பதில் செவிலித் தாயாகவும் ஈடற்ற தொண்டு செய்து தொண்டின் சிகரமாக விளங்கினார் அன்னை மணியம்மையார்.
தாய் – தந்தை இல்லாத நிர்க்கதியாய் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கி – அறிவூட்டி வாழ்வில் ஒளி பெற குழந்தைகள் காப்பகம் உருவாக்கி அய்யாவின் மனித நேயத் தொண்டிற்கு மகுடம் சூட்டினார். தொண்டறத்தின் உச்சந் தொட்டார்.

அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமை ஏற்கும் பெரும் பொறுப்பேற்றார். அய்யாவின் வேண்டுகோளை ஏற்று இயக்கம் காக்க “திருமணம் என்ற ஏற்பாட்டிற்கு” தன்னை ஒப்படைத்திட்ட அன்னை – அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமையேற்று காக்கும் அரணாகவும் – இயக்கத் தொண்டர்களை இயக்கிடும் ஈடில்லாத் தலைமையாகவும் விளங்கினார்.

அம்மா தலைமையேற்ற காலத்தின் அளவு சில ஆண்டுகள்தான் என்றாலும் – வரலாற்றுச் சிறப்புமிக்க களங்கள் கண்ட காலமாக இயக்க வரலாற்றில் நிற்கிறது.
ஆரியக் கூட்டம் இராமலீலா எனும் பேரால் திராவிடப் பேரரசர் இராவணன் மற்றும் கும்பகர்ணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்திடும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த அன்னை மணியம்மையார் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் – பெரியார் திடலில் இராவண லீலாவை நடத்தி இராமன். இலட்சுமணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தி – இனமானம் காத்திடும் களமாடி – இந்திய ஒன்றியத்தின் இரத்த ஓட்டத்தையே நிறுத்திக் காட்டிய பேராற்றல் மிக்க வீராங்கனை அன்னை மணியம்மையார் ஆவார்.

அய்யா உயிருடன் வாழ்ந்த காலத்தில் 1957இல் ஜாதியை ஒழிக்க – ஜாதியை அங்கீகரிக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்திட பெரியார் ஆணையிட்ட போர்க்களத்தில் கலந்துகொண்டு சிறையேகி சிறையிலேயே மறைந்திட்ட பட்டுக்கோட்டை இராமசாமி – மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் புதைக்கப்பட்ட உடல்களை போராடிப் பெற்று திருச்சி மாநகரில் மிகப் பெரும் வீர வணக்கப் பேரணி நடத்தி, இந்தியாவையே திணறடித்த வீராங்கனை அன்னை மணியம்மையார்.
அய்யா மறைவிற்குப் பின் தன் பெயரிலிருந்த பெரியார் கொடுத்திட்ட விவசாய நிலங்களை விற்று – அறக்கட்டளையில் சேர்த்து – தஞ்சையில் இயங்கிடும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கிட காரணமானவர்தான் நம் அன்னை மணியம்மையார். அதன் நீட்சியாகத்தான் நமது இயக்கத்தின் அறப்பணி – கல்விப்பணி பல்கலைக்கழகமாக இன்று ஓங்கி வளர்ந்து உயர்கல்வியில் உயர்ந்து நிற்கிறது.

தந்தை பெரியாரின் பெரும்பணியை தன் அரும்பணியால் சிறக்கச் செய்த – பெரியாரை பல்லாண்டு காலம் வாழச் செய்த பேராற்றல் கொண்ட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 105ஆம் பிறந்த நாளில், பெரியார் வழி நடந்திட்ட அவரது தொண்டறம் வென்றிட சூளுரைப்போம்.

அன்னை மணியம்மையாரும் – கஸ்தூரிபா காந்தியும் – கோரா

 



காந்தியாரின் இந்திய விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் கணிசமான பங்கு வகித்தவர்கல்தூரிபா காந்தி என்பதை வலியுறுத்தும் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. ‘கஸ்தூரிபாவின் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான இந்த ஆங்கிலப் புத்தகத்தை தென்னாப்பிரிக்காவில் பிறந்த அவரது பெயரன் அருண்காந்தி என்பவர் எழுதியுள்ளார். 295 ரூபாய் விலையுள்ள ‘பெங்குவின்’ இந்தியா வெளியிட்டுள்ள இப்புத்தகம் குறித்த அதுல் சதுர்வேதி என்பவரின் அறிமுகக் கட்டுரையை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு 30.7.2000 ஞாயிறு சிறப்பிதழில் வெளியிட்டுள்ளது.

வரலாறு போற்றும் பெருமகன்களின் வெற்றிக்குப் பின்னணியாக அவர்தம் துணைவியர் இருந்தாலும். இன்னாரின் துணைவி இவர், இவர்களுக்கு இத்தனை பிள்ளைகள் என்பது தவிர வேறு எந்தக் குறிப்பும் இடம் பெறுவதில்லை. பண்டித நேருகூட இதற்கு விதி விலக்கல்ல என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது அந்த நாட்டு மக்கள் பார்சி இனத்தவரை மட்டுமே நாகரிகமானவர்களாகக் கருதினர் என்பதற்காக பார்சி பாணியில் உடையணிந்தது – இன வேற்றுமையை எதிர்த்து கணவரது கட்டளைப்படி சிறைச்சாலை ஏகியது – தீண்டத் தகாதாருடன் அமர்ந்து உணவருந்தியது – சம்பாரனில் காந்தியாருடன் இணைந்து மக்களிடையே சேவையாற்றியது – 1918இல் கைரா எனும் கிராமத்திலுள்ள பெண்களுக்கு சத்தியாகிரகத்தின் தத்துவங்களை எடுத்துரைத்தது – கூட்டங்களில் பேசி நிதி திரட்டியது – பிற்படுத்தப்பட்ட இனமான ராணிபராஜ் சமுதாயத்தினரின் இரண்டாவது மாநாட்டுக்குத் தலைமை ஏற்று அவர்களை குடிப் பழக்கத்தை விட்டொழிக்க வைத்து – கதர் நூற்பை ஏற்க வைத்தது.
1930இல் அரசியல் சீர்திருத்தங்களுக்கான ராஜ்கோட் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது. 1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி, கைதாகி விட்டதால் உரை நிகழ்த்த முடியாமல் போன காந்தியாருக்குப் பதிலாக, பொதுக் கூட்டமொன்றுக்குச் செல்லும்போது தானும் கைதானது. இரண்டாண்டுகளுக்குப் பின்னர் புனே நகரில் காவலில் இருந்தபோது முடிவடைந்தது – போன்ற செய்திகள் அப்புத்தகத்தில் இடம் பெற்று நீண்ட காலப் புறக் கணிப்புக்குப் பின்னர் கடைசியாக கஸ்தூரிபாவுக்குத் தரப்பட வேண்டிய அங்கீகாரம் அவரது பெயரனாலேயே தரப்பட்டு விட்டது என கட்டுரையாளர் முத்தாய்ப்பு வைத்திருக்கிறார்.

கஸ்தூரிபா காந்திக்குக் கிடைத்துள்ள மிக மிகக் காலந்தாழ்த்த அங்கீகாரத்தைப் பார்க்கும்போது அறிவுலக ஆசான் – இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதநேயக்காரர் தந்தை பெரியார் பெண்ணுலகுக்கும் பெண்ணுரிமைக்கும் தந்த முக்கியத்துவமும், பெண்தான் ஒரு குடும்பத்திற்கும். ஒரு சமுதாயத்திற்கும், ஏன் ஓர் இயக்கத்துக்கும் தலைமை தாங்க ஏற்றவர் என்பதை தன் வாழ்நாளிலேயே உலகுக்கு எடுத்துக் காட்டியவர் என்பதை அறிய, பெரியார் தொண்டர்களாகிய நமது உள்ளங்களெல்லாம் பூரிக்கிறது.
கள்ளுக்கடை மறியல் – ஒத்துழையாமை இயக்கம் இரண்டையும் நிறுத்துங்கள் என காங்கிரசார் கோரிக்கை வைத்தபோது அது என் கையில் இல்லை – தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்மணிகள் (நாகம்மையாரும் கண்ணம்மையாரும்) இடம்தான் உள்ளது என்று பதிலளித்தவர் காந்தியார். அதுவும் 1920களிலேயே.
அய்யாவுக்குப் பின், கழகத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் மணியம்மையார் அல்லவா? அதுவும் 1975, தொடக்கம் 1978ஆம் ஆண்டு முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் அம்மா அவர்கள் அவசர நிலையைச் சந்தித்தார்கள். ‘இராவண லீலா’ நடத்தி வடபுலத்தை அலற வைத்தார்கள்.

1973 டிசம்பர் 24ஆம் தேதி அய்யா மறைவுக்குப் பின்னர் கழகத் தலைமைப் பொறுப்பு ஏற்பு.

1974 – டிசம்பர் 25ஆம் நாள் சென்னை பெரியார். திடலில் ‘இராவண லீலா’ நடத்தி கைது – கழக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

1976 செப்டம்பர் 9ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் ஆறு மாத சிறை. அதே ஆண்டில் செப்டம்பர் 16ஆம் நாள் பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு முதல் நாள், திடீரென்று கைது செய்யப்பட்டு, இரண்டு நாள் கழித்து விடுதலை.

1977 ஏப்ரல் 25ஆம் நாள் இராவண லீலா வழக்கில் அம்மாவுக்கும் தோழர்களுக்கும் விடுதலை.
அதே ஆண்டு அக்டோபர் 30 அன்று தமிழ்நாடு வந்த மேனாள் பிரதமர் இந்திரா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காகக் கைது.

1978 மார்ச் மாதம் 16ஆம் நாள் மாரடைப்பு நோயால் முடிவு என அன்னை மணியம்மையார் அவர்களின் போராட்ட வரலாறு தமிழ்நாட்டுப் பத்திரிகைகளால் பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாட்டு மக்களால் பரவலாக நன்கறியப்பட்ட செய்திகளாகும்.

தன் வாழ்நாளிலும் தனது காலத்துக்குப் பிறகும் பெண்களுக்கு உரிய இடத்தைக் கொடுத்த பெருமை தந்தை பெரியார் ஒருவருக்குத்தான் உண்டு!