செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழர் தலைவர் கி.வீரமணி கைது பட்டியல்



1956இல் ராமன் படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1960இல் தேசப்படத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

1974இல் இராவணலீலா போராட்டத்தில் கைதானார்.

31.01.1976 முதல் 23.01.1977 வரை மிசா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

31.10.1977 இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டி கைதானார்.

நாகம்மையாரைப்பற்றி அவதூறு எழுதிய ஆஸ்தான கவி கண்ணதாசனை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தியதற்கு 22.03.1979 
முதல் 04.04.1979 வரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1981இல் மனுதர்ம சாத்திரத்தை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
16.03.1982இல் இஸ்மாயில், சோமசுந்தரம் கமிஷன்களின் பரிந்துரைகளை அமலாக்கக் கோரி கோட்டை முன் மறியல் செய்து கைதானார்.

23.01.1983இல் ஜெயவர்த்தனேவிற்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

09.08.1984இல் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி இந்திராகாந்தி வீட்டு முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆகஸ்டு 15 அய் (1984) துக்க நாளாகக் கருதி திருச்சியில் கருப்புக்கொடி ஏற்றியதற்கு கைது செய்யப்பட்டார்.

ஈழத்தில் ராணுவத்தை அனுப்பச் சொல்வது முட்டாள்தனமானது என்று கூறிய துணைக் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு 07.09.1984இல் சென்னையில் கருப்புக் கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்டார்.

13.12.1984இல் தமிழக மீனவர்களை சிங்களக்கடற்படை வேட்டையாடுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மறியல் செய்து கைதானார்.

22.09.1985இல் இரயில் நிலையங்களில் இந்தி எழுத்துக்களை அழித்துப்போராட்டம் நடத்தியதற்கு கைது செய்யப்பட்டார்.

காவிரி நீருக்காக திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் செய்து 30.10.1985 முதல் 05.11.1985 வரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கல்வித்திட்ட நகல் எரித்ததற்கு 22.06.1986 முதல் 04.07.1986 வரை சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

07.10.1986 இல் டில்லியில் மண்டல் குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

20.02.1987இல் ஈழத் தமிழர் பிரச்சினைக்காக கப்பல் மறியல் செய்து தூத்துக்குடியில் கைதானார்.

01.06.1987இல் ஈழத் தமிழருக்காக ரயில் மறியல் செய்து சென்னையில் கைதானார்.

02.08.1987இல் ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்த நகல் எரித்து சிறை சென்றார்.

ஈழம் பற்றிய பொய்ப்பிரச்சாரம் செய்த தொலைக்காட்சி நிலையம் முன் மறியல் செய்ததற்கு 26.10.1987முதல் 04.11.1987 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

25.01.1988இல் இந்தியக் குடியரசு நாள் விருந்தினராக வந்த ஜெயவர்த்தனேயை எதிர்த்து கொடும்பாவி எரித்து வீடுதோறும் கருப்புக்கொடி ஏற்றச் சொல்லி போராட்டம் செய்து கைதானார்.

21.03.1988இல் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்து மதச் சார்பின்மைக்கு மாறாக ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியிடம் செல்லும் குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டி சென்னை கிண்டியில் கைதானார்.

10.09.1988இல் விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டுவை சந்திக்கச் செல்கையில் கைதானார்.

08.11.1988இல் தீண்டாமை, சதி ஆதரவாளர் பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவி எரித்ததற்கு கைது செய்யப்பட்டார்.

01.08.1989 இல் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி தமிழகம் எங்கும் அஞ்சலகங்கள் முன் மறியல் செய்ததால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

10.10.1990அல் மண்டல் குழுப் பரிந்துரையை தடை செய்த உச்சநீதிமன்ற ஆணையை எரித்து கைதானார்.

09.11.1991இல் காவிரி நீர் மண்டல் குழு பிரச்சினைகளுக்காக தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு கருப்புக்கொடி காட்டியதற்கு கைது செய்யப்பட்டார்.

20.01.1992அல் கர்நாடகத் தமிழருக்காக சென்னை அண்ணாசாலை அஞ்சலகம் முன் மறியல் செய்து கைதானார்.

30.04.1992இல் காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கக் கோரி திருவாரூர் அஞ்சலகம் முன் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

06.12.1992இல் தடையை மீறி இராவணலீலா விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தி புதுவையில் கைதானார்.

10.02.1993இல் சென்னை இரயில் நிலையங்களில் இந்தி அழிப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

23.04.1993இல் சென்னையில் மண்டல்குழுப் பரிந்துரையை அமலாக்கக்கோரி மறியல் போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

01.09.1993இல் 69 சதவீதத்தை முடக்கும் உச்சநீதிமன்ற ஆணையை எரித்தற்காக கைது செய்யப்பட்டார்.

02.12.1994இல் இந்தி திணிப்பு மற்றும் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து சென்னையில் மறியல் செய்ததற்கு கைது செய்யப்பட்டார்.

31.08.1995இல் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது சென்னை புதுப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் 25.09.1995இல் தமிழகத்தில் 69 சதவீத இடஓதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்ற ஆணையை எரித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

23.08.1996இல் சமூகநீதிக்கு விரோதமாக தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடும்பாவியை எரித்ததற்கு 15 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

29.12.2000இல் அமைனத்து சாதியினரும் அர்ச்சகராக உரிமை கோரி இந்து அறநிலைய அலுவலகம் முன்பு மறியல் செய்து தஞ்சையில் கைதானார்.

09.12.2004இல் சமூக நீதி கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நாடாளுமன்றம் முன் மறியல் செய்ய முயன்றபோது கைதானார்.
சென்னையில் 01.02.2006 அன்று அனைத்து சாதியினர் அர்ச்சகராக உரிமை கோரி மறியல் செய்து கைதானார்.

01.11.2006இல் தமிழ்நாடு அய்.ஏ.எஸ் அதிகாரிகளை அவமதித்ததற்கு நீதிபதி முகோபாத்யாயா மன்னிப்பு கேட்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் முன் மறியல் செய்து கைதானார்.

23.09.2008இல் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க ரயில் மறியல் செய்து கைதானார்.

29.12.2008இல் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் முறை திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் செய்து கைதானார்.

02.09.2009இல் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்புக்காக ரயில் மறியல் செய்து கைதானார்.

05.06.2010இல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட கோரி சென்னையில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கி.வீரமணி 46 ஆவது முறையாக சிறை சென்றார்.

15.10.2012 அன்று நெய்வேலியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராத கருநாடகத்துக்கு நெய்வேலி மின்சாரத்தை வழங்க கூடாது என்று நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தி 
47முறையாக சிறை சென்றார்

5.3.13: டெசோ சார்பில் இலங்கை தூதரகத்தின் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் கி.வீரமணி 48-ஆவது முறையாக கைது செய்யப் பட்டார்.

12.3.13: ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக டெசோ சார்பில் தமிழகம், புதுவையில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று சென்னை அண்ணாசாலையில் நடந்த மறியலில் ஈடுபட்டு 50-ஆவது முறையாக தமிழர் தலைவர் கி.வீரமணி கைது செய்யப்பட்டார்.


பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி...

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால்,  ' அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்' என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார். அப்பொத்தகமும் 100 படிகள் என்னிடம் விலைக்கு வாங்கினார். சிலமுறை அவர் கூட்டத்திற்குத் தலைமைதாங்கியுமிருக்கிறேன். 

ஒருமுறை நான் காட்டுப்பாடியிலிருக்கும் போது எனக்கு வருவாய் இல்லையென்று தெரிந்து என் வீடு தேடி கொஞ்சம் பணம் கொடுக்கவந்து நான் ஊரில் இல்லாததால் அக்கம் பக்கத்திலுள்ளவரிடம் செய்தியைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

பின்பு நான் திருச்சிராப்பள்ளி சென்றிருந்த போது நண்பருடன் சேர்ந்து பெரியாரைக் காணச் சென்றேன். அவர் என்னைத் தனியாய்த் தம் மாளிகைக்கு உள்ளே அழைத்து இருநூறு உருபா நன்கொடையாகத் தந்தார். அது ஒரு சிறு தொகையே யாயினும் பிறரிடத்தில் பெறும் ஈராயிரத்திற்குச் சமம் என்பது அவர் சிக்கனத்தை யறிந்த அனைவரும் உணர்வர்.

நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களொடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலராட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும் குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தாணியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை. 

கலப்புமணம் , பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை  விட்டு விட்டு எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது பண்டத்தை விட்டு விட்டுப் படிவத்தைப் பற்றுவதேயாகும். 

தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையாபுரிகளுடன் கூடிக்கொள்வதும் தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங்களுடன் ஒத்துழைப்பதும் மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும் பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா. 

பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது பெரியார் விழாக்கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்து கொள்வதும் விடிய விடிய சொற்பொழிவாற்றுவதும் பெரியார் படிமைக்கு மாலையணிவதும் பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்? 

இது காறும் தமிழ்நாட்டில் தமிழர்க்கு மூவேறு  வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர் அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவார். தம் சிறு கொள்கைக்கு வெற்றி பெறவே விழாவைப் பெருவியப்பாகக் கொண்டுள்ளனர். 

அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரும் பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப் 
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள் 
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய் 
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர் 
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
மூவர் குறிக்கோள் முடிபும் ஒன்றே
அடிமை யொழித்த வல்லதை எழுத்தின்
வடிவை யொழித்தல் பெரியார்க் கில்லை
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத் 
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார் 
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.

>>> மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.
செந்தமிழ்ச்செல்வி ஏப்பிரல் 1979

தொடரும்......
- திருவாரூர் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பதிவு, 23.6.20

ஞாயிறு, 14 ஜூன், 2020

கீழ்வெண்மணி படுகொலையைப் பெரியார் ஆதரித்தாரா?

பதில்கள் - 1

வெண்மணி படுகொலையின் போது பெரியார் அமைதி காத்தார் என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

கீழ்வெண்மணி படுகொலையின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக இருந்தாரா?

இதற்கான பதிலைத் தெரிந்துக் கொள்வதற்கு முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். "கலவரச் சூழல் குறைய முத்துராமலிங்கம் கைது செய்யப்பட வேண்டும்", என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தவர் பெரியார்.

கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற் சங்கம்' என்கிற அமைப்புத் திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. 

சாணிப்பால் கொடுப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற வன்கொடுமைகளைத் திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட் தோழர்களும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்குக் கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கான கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பில் சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

மேலும் "தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்" என்று அப்போது இருந்தது. அன்றைக்குப் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இன்று வேலைக்குப் போனால், அடுத்த நாள் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். எந்த உத்திரவாதமும் கிடையாது. அப்படி வேலை மறுக்கப்பட்டால் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டம் உறுதி செய்தது. அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணை ஆட்களுக்கு இருந்து வந்தது. அது பெரியாரின் கோரிக்கையால், திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது.

டிசம்பர் 25, 1968 இரவு கீழ்வெண்மணியில் கலவரம் நடந்து, 44 பேர் உயிரோடுக் கொளுத்தப்பட்ட போது, பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.  

டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டில் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக இது அறியப்படுகிறது. அதனால் உடனடியாக பெரியார் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. 

ஆனால் பிறகு ‘கீழ்வெண்மணியைத் தடுப்பது எப்படி?’ என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை எழுதினார் பெரியார். 12.01.1969 அன்று செம்பனார் கோவிலில் நடந்த கூட்டத்தில் கீழ்வெண்மணி கலவரம் பற்றி பேசுகிறார். பொதுவாகக் கூலி உயர்வுப் போராட்டங்களைப் பெரியார் ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள் பங்குதாரர்கள் ஆவதே முக்கியம் என்பதே அவரின் நிலைப்பாடு.

- தோழர் தியாகு
பதில்கள் - 2

எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித் தகராறு என்பது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்.(குடிஅரசு 01.10.1933)

"நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” (பகுத்தறிவு - 02.12.1934)

"முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்" (1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானம்)

இந்த அடிப்படையிலேதான் போராட்டத்தை முன்னிருந்து நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்தார். இருந்தாலும் திராவிடர் கழகத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கீழ்வெண்மணி மக்களுடன் தொடர்ந்து இயங்கி வந்தனர். இது தொடர்பான சட்ட நடவடிக்கைக்குப் போராடி வந்தனர்.

கலவரத்தைப் பற்றி விசாரிக்க தனி நபர் கமிஷன் போட்டிருந்தார் அன்றைய முதல்வர் அண்ணா. அதற்குக் கணபதியா பிள்ளை கமிஷன் என்று பெயர். திராவிட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நிறைய தோழர்கள் சாட்சியம் சொன்னார்கள்.

கீழ்வெண்மணியை சார்ந்த முனியன் என்பவர் கீவளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குற்ற எண் : 327/68 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கோபால கிருஷ்ண நாயுடு உட்பட 106 பேரைக் காவல்துறைக் கைது செய்தது. 

கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு 1970 இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ணா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தார்.

- தோழர் தியாகு
பதில்கள் - 3

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4 வருடங்கள், 3 மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன், கோபால கிருஷ்ண நாயுடு மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

கவனிக்க: பெரியார் 1973 டிசம்பரில் இறந்துவிட்டார். அவருக்குக் கோபால கிருஷ்ண நாயுடு கீழ் நீதி மன்றத்தில் தண்டனை பெற்றதும், மேல் முறையீடு செய்ததும், ஜாமீனில் வெளி வந்ததும் மட்டுமே தெரியும். மேல் முறையீட்டு விடுதலை அவரின் மறைவுக்குப் பின் நடந்தது. எனவே கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு அவர் ஆதரவளித்தாக சொல்வது எங்குமே பொருந்தாது. 

இன்னொரு முக்கிய விசயம், ஜாமீனில் வெளிவந்த கோபால கிருஷ்ணன் நாயுடு, பெரியாரை சந்திக்கக் கீவளூர் வந்த போது பெரியார் “என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிறாரோ அத கோர்ட்ல சொல்ல சொல்லு. அவரையெல்லாம் பார்க்கவே பிடிக்கலை. அவரைக் கண்ணாலே பார்க்க விருப்பமில்லை. போகச் சொல்லு," எனக் கூறி சந்திக்க மறுத்து விட்டார். இதைக் கணபதியா கமிசனில் சாட்சியம் அளித்த நாகை எஸ்.எஸ்.பாட்சா பதிவு செய்துள்ளார்.

கோபால கிருஷ்ண நாயுடு விடுதலை ஆன சில ஆண்டுகளுக்குப் பிறகு தியாகிகள் நினைவிடத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைத் தொடர்பாக காவல் துறை 12 பேரைக் கைது செய்தது. அதில் 9 பேர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். அதில் கைதான ‘காவலாக்குடி மதி' இன்னும் உயிரோடு இருக்கிறார். குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் சீரிய முயற்சியால்தான் வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆக கலவரத்திற்கு முன்பும், பின்பும் திராவிடர் கழகமும், பெரியாரும் ஒரு போதும் ஆதிக்கச் சாதியினர்க்கு ஆதரவாக இல்லை!

- தோழர் தியாகு
- தொகுப்பு : வி.சி.வில்வம்

இலண்டன் அமெரிக்க கருப்பர்களுக்காக போராடிய பெரியார் !

வெள்ளி, 12 ஜூன், 2020

ஆண் - பெண்' பெரியார்!



ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுநர் கார்டிலியா ஃபைன் என்பவர் ‘‘பாலினம்பற்றிய பொய் நம் பிக்கை'' எனும் நூலை எழுதியுள்ளார்! ஆண் - பெண் ஆகியோரிடையே உள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் அவர்களை வளர்க்கும் முறை தான் என்றும், பிறப்பின் இயல்பு அல்லவென்றும் அந் நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண்ணுக்கு இடையில் பெரும் அளவிலான நரம்புச் செயல்பாட்டு வேறு பாடுகள் மட்டுமே இருக்கலாம் என்றும் அந்நூல் கூறுகிறது.
இதே கருத்தை சிகாகோ மருத்துவப் பள்ளியில் உள்ள விசி எலியட் என்பவரும் தெரிவிக்கிறார். ‘அறிவு வேற்று மையைக் குழந்தைகள் முன் னோர்கள் அல்லது பெற்றோர் களிடம் இருந்து பெறுவ தில்லை. அறிவை அவர்கள் வளர்ப்பிலேயே பெறுகிறார் கள், கற்கிறார்கள்.
ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி எவ்வாறு வளரவேண் டும் என எதிர்பார்த்து நாம் வளர்க்கிறோமோ அதற்குத்தக அவர்கள் உருவாகிறார்கள். ஆம், சிறுவர் - சிறுமியர், ஆண்கள் - பெண்கள் வேறு பட்டவர்கள். ஆனால், இந்த வேற்றுமைகளில் மிகப்பெரும் பாலானவை மிகக் குறைந்த அளவானவை.
‘ஆண்கள் செவ்வாய்க் (மார்ஸ்) கோளில் இருந்து வந்தவர்கள்; பெண்கள் வெள்ளி (வீனஸ்) கோளில் இருந்து வந்தவர்கள் எனும் அளவிற்கு அந்த வேற்றுமை கள் இல்லை' என்கிறார் விசி எலியட்.
இவ்வளவும் வெளிவந்தது ‘விடுதலை' ஏட்டில் அல்ல - ஓர் ஆங்கில நாளேட்டில்.
இதில் அடுத்துவரும் கடைசிப் பத்திதான் முக்கியம்.
அது இதோ:
Here we must recollect what Periyar said that the Male and Female Children should not be brought up in different ways considering the small differences found between them, but they should be brought up in same manner providing same food, dress, education, sports games and work to both of them.
‘The Times of India', 17.8.2010
உடல் உறுப்புகளில் உள்ள ஒன்றிரண்டு வேற்றுமை களைக் கொண்டு ஆண் - பெண் குழந்தைகளை வெவ் வேறு வகையில் வளர்க்கக் கூடாது என்றும், ஒரே வகை யான உணவு, உடை, கல்வி, விளையாட்டு, வேலை முத லியவற்றை அவர்கள் பெற வேண்டும் என்று பெரியார் ஈ.வெ.ரா. வற்புறுத்தியதை நினைவு கூர்க என்கிறது அந்த ஆங்கில ஏடு.
‘‘பெற்றோர்கள் தங்கள் பெண்களைப் பெண் என்று அழைக்காமல், ஆண் என்றே அழைக்கவேண்டும் - உடை களை ஆண்களைப் போலவே கட்டுவித்தல் வேண்டும். ஆணா - பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியாத மாதி ரியில் தயாரிக்கவேண்டும்.''
- தந்தை பெரியார்
‘குடிஅரசு', 15.9.1946)

-விடுதலை நாளேடு, 29.5.20
- மயிலாடன்

செவ்வாய், 2 ஜூன், 2020

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 16

June 2, 2020 • Viduthalai • 
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

இந்திப் பெயர் அழிப்பு போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாதப் போக்கை உணர்ந்த பெரியார் உத்தியை மாற்றிக் காட்டினார். 1955 ஆகஸ்டு 1 அன்று இந்திய தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இப்போது அரசாங்கத்திற்கு வந்தது சிக்கல். ஏற்கெனவே பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் போராட்டத் திற்குப் பெயர் கொடுத்திருந்தார்கள். அவர்களைக் கைது செய்து வழக்குப் போட வேண்டும் அல்லது மொழி விஷ யத்தில் அரசாங்கம் இறங்கி வர வேண்டும். காமராஜரை தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்தார் பெரியார். தனது ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க தமிழகத்தில் இந்தி இனி தேர்வுக்குரிய பாடமாக இருக்காது என்று அறிவித்தார் முதல்வர் காமராஜர். அதாவது இந்தி படிப்பார்கள் மாணவர்கள், ஆனால் பரீட்சை எழுத மாட்டார்கள். 1967 வரை இந்த நிலை இருந்தது, அண்ணா முதல்வரானதும் அதுவும் ஒழிந்தது. இப்படி பிராமணியத்தின் மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில்தான் சரியான அடி கிடைத்தது.
ராமன்படம் எரிப்புப் போராட்டம்
1956ல் ராமன் படத்தை எரித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் பெரியார். ராவணன் கொடும்பாவியை வடக்கே எரிப்பார்கள். இவர் போட்டியாக ராமன் படத்தை எரித்தார். ராவணனை சகல கேடுகளின் பிம்ப மாக ஆக்கி, அவனது எரிப்பை நியாயமான செயலாகப் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருந்தார்கள் பிராமணிய வாதிகள். இவரோ அதை மாற்றப் பார்த்தார். பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி சொல்லி வைத்து நிலை நிறுத்தப்பட்ட விஷயத்தை இவர் சிதைக்க முனைந்தார். வால்மீகி ராமாயணத்திலிருந்து ராமனின் உண்மை முகத்தை வெளிப்படுத்தப் பார்த்தார். இதே ஆண்டில் அவர் பேசிய பேச்சு இது
“ராமாயணம் அவரவர் ஜாதிகளையும் பிரிவுகளையும் தானே காட்டுகிறது? ஒரு இடத்தில் அனுமார் ராமன் காலில் விழுகிறான். ராமன் அனுமானைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். நீயோ ஒரு பிராமணன், நான் ஷத்திரியன். என் கால்களில் நீ வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் என்று கூறுகிறான். ராமன் அயோத்தியிலிருந்த காட்டுக்குப் புறப்படும் சமயம் ‘என் பணத்தையும் சொத்துக்களையும், என்னிடத்தில் இப்பொழுது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்’ என்பதாகச் சொல்கிறான். சீதை ‘என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்துவிட்டுப் போனால் புண்ணியம்‘ என்பதாகச் சொல்லுகிறாள். சூர்ப்பனகை ‘என்னைத் திருமணம் செய்து கொள்’ என்று கேட்கும்பொழுது ‘நீ ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி. எப்படித் திருமணம் செய்து கொள்வது? என்று கூறுகிறான். ஒரு இடத்தில் தாடகை மகனை லட்சுமணன் கொன்றுவிட்டு ராமனிடம் இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு ராமன் ‘சூத்திரனைத்தானே கொன்றாய்? அதனால் பாவமில்லை, கவலையை விடு’ என்று கூறுகிறான். சம்பூகன் ஒரு சூத்திரன். தவம் செய்ய உரிமையில்லை என்று ராமன் கூறி கண்டங்கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணா சிரம தர்மம் தாண்டவமாடுகிறது. இப்படி இருக்கும் ராமா ணயத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன தப்பு?”
ராமன் பெயரைச் சொல்லி பின்னாளில் பிராமணிய வாதிகள் மிகப்பெரிய கலவரங்களை உருவாக்கி, அரசி யல் ஆதாயம் அடைந்ததை நினைக்கும் போது அந்தப் புனித பிம்பத்தை உடைக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பெரியார் முயன்றது வரலாற்றில் குறிக்கத் தக்கது. இத்தகைய துணிச்சலான செயலை இந்தியாவில் வேறு யாரும் அவரது காலத்தில் செய்ததாகத் தெரியவில்லை.
“பிராமணாள் ஹோட்டல்” ஒழிப்பு
அந்த நாளில் ஹோட்டல் என்றாலே பிராமணர்களால் பிராமணர்களுக்காக நடத்தப்படுபவையாகவே இருந் தன. பெயரும் “பிராமணாள் ஹோட்டல்” என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு சட்டபூர்வமாகத் தீண் டாமை ஒழிக்கப் பட்டிருந்தாலும், சகல ஜாதியினருக்கும் உணவு விற்போம் என்று சொல்லி கடை நடத்த உரிமம் பெற்றிருந்தாலும் பெயர் என்னவோ “பிராமணாள் ஹோட்டல் ”தான்! இது வெளிப்படையான பிராமணிய மாக இருந்தது. இப்படி பெயர் இருக்கக் கூடாது, அதை நீக்க வேண்டும் என்று சொல்லி 1957ல் மறியல் போராட்டம் நடத்தினார் பெரியார். இங்கே மாமிச உணவு கிடைக்காது, மரக்கறி உணவே கிடைக்கும் என்பதைச் சுட்டவே இந்தப் பெயர் என்றார்கள் ராஜாஜி உள்ளிட்ட பிராமணிய வாதிகள். அப்படியென்றால் மரக்கறி உணவுக் கடை என்றே போடலாமே என்று பதில் அறிக்கை விடுத்தார் பெரியார். அந்த அறிக்கையில் (9-5-1957 விடுதலை) இப்படிக் குறிப்பிட்டார். “இப்போது இங்கு உரிமை பற்றிய தகராறு இல்லை, சொல்லைப் பற்றிய தகராறுதான் இருக்கிறது. அந்தச் சொல் மற்றவர்களை (திராவிடரை) இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று சொன்னால் ஏன் அதை மாற்றிவிடக் கூடாது என்றுதான் கேட்கிறேன்? இதற்காக ஏன் தகராறு நடக்க வேண்டும்? இந்தத் தகராறை விஷமத்தனம் என்று கூறுவதானால் இதை எதிர்ப்பதை அயோக்கியத்தனம் என்றுதானே கூற வேண்டும்? ஓட்டல் முதலாளிகளும், பார்ப்பனப் பத்திரி கைகளும் பிராமணாள் என்று போட்டுக் கொள்ளத் தங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதாக ஒரு வார்த் தையும் சொல்லவில்லை, ஒரு குறிப்பும் காட்டவில்லை. அதனால் அதை எடுத்துவிடச் சொல்லுவது சட்ட விரோ தமோ, உரிமை விரோதமோ ஆவதில்லை”.
இதுவும் வெற்றிகரமாக முடிந்த ஒரு போராட்டமாகும். தமிழ்நாட்டில் அநேகமாக அனைத்து “பிராமணாள் ஹோட்டல்களும்” விரைவில் மறைந்தன, அதாவது அந்தப் பெயர் மறைந்தது. சென்னை திருவல்லிக் கேணியில் ஒரு ஹோட்டல் முதலாளி மட்டும் மிகப் பிடி வாதமாக இருந்தார். அங்கு விடாமல் தி.க.வினர் பன் னாட்கள் மறியல் செய்து, கைதானார்கள். முதலில் மறியல் செய்தது பெரியார். சுமார் 1500 பேர் வரைக் கைதாகி மாதக்கணக்கில் சிறைத்தண்டனை பெற்றார்கள்.
அரசியலமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம்
ஜாதிக்குப் பாதுகாப்பளிக்கும் இந்திய அரசியல மைப்புச் சட்டப் பகுதியை, அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நவம்பர் 26ல் எரிப்பது என்று முடிவு செய்தார் பெரியார். 1957 நவம்பர் 26ல் நடைபெற்ற இந்த எரிப்புப் போராட் டத்தில் சுமார் பத்தாயிரம் தி.க.வினர் பங்கு கொண்டார்கள். அதில் 2884 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு மாதக்கணக்கு முதல் ஆண்டுக்கணக்கு வரை தண்டனை தரப்பட்டது. சிறையிலே இருவர் உயிர் இழந்தனர், நோயுடன் விடுதலையாகி சில நாட்களிலேயே 20 பேர் மாண்டார்கள். நீண்டகாலத் தண்டனை பெற்றதால் வாழ் வில் பலர் நலிவுற்றார்கள். ஜாதி ஒழிப்புக்காக இப்படியொரு போராட்டம் நடத்தி, இத்தனை பேர் சிறையில் வாடியது இதுவே இந்தியாவில் முதல் நிகழ்வாக இருக்கலாம்.
“இந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு தந்திருக்கிறான். அடிப்படை உரிமைகள் என்ற பகுதியில் அவனவன் ஜாதிப்படி வாழ, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ள, ஜாதியை நிலைக்க வைக்க அரசாங்கம் பாது காப்பளிக்கிறது. இந்தச் சட்டத்தை ஏற்படுத்தியவன் காங்கிரஸ்காரன்தான். அதுவும் நமக்கெல்லாம் வோட் வராததற்கு முன்னே ....... இந்திய அரசமைப்புச் சட்டக்குழு உறுப்பினர்கள் - 1) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் (பார்ப்பனர்) 2) டி.டி. கிருஷ்ணமாச்சாரி (பார்ப்பனர்) 3) என். கோபாலசாமி அய்யங்கார் (பார்ப்பனர்) 4). கே.எம். முன்ஷி (பார்ப்பனர்) 5) டாக்டர் அம்பேத்கர் (ஆதி திராவிடர்) 6) முகமது சாலுல்லா (முஸ்லிம்)... ‘சூத்திரர்’ என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல், 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும்கூட விலை கொடுத்துவிட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்“
அப்படியெல்லாம் அந்த இரு இனங்களுக்கு கூடுதல் சகாயம் தரப்படவில்லை என்பதை அறிவோம். ஆனால் சூத்திரர்களுக்கு - பிற்படுத்தப்பட்டோருக்கு - துரோகம் இழைக்கப்பட்டது என்பது உண்மைதான். திருத்தியமைக் கப்பட்ட நகல் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியது இந்த ஆறு பேர்தான், அதில் நால்வர் பிராமணர்கள் என்பது உண்மைதான். ஆனால், அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதலோடுதான் இது சட்டமானது. இதில் “அடிப்படை உரிமைகள்” எனும் பகுதியில் இந்தியக் குடிமக்களுக்கு மத உரிமை தரப்பட்டுள்ளது என்பதையும், சரத்து 26இல் ஒவ்வொரு மதப் பிரிவும் “தனது மத விவகாரங்களைப் பொறுத்தவரை தானே நிர்வகித்துக் கொள்ளலாம்“ என்று கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிவோம். இது சகல மதங்களுக்கும் பொருந்தக் கூடியது. சிக்கல் எதில் வந்தது என்றால் இந்து மதத்தைப் பொறுத்தவரை அதன் ஓர் அம்சமாகச் சாதியத்தை நீதி மன்றங்கள் ஏற்றது. அப்படித்தான் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக முடியும் என்பதை அவை அங்கீகரித்து வந்தன. இதை மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தது அல்லது உரிய விளக்கங்கள் தர வேண்டியிருந்தது. இதன்பால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த எரிப்புப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்.
.- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 15

May 31, 2020 • Viduthalai • 
பிராமணியத்திற்கு இரட்டை அடி. ராஜாஜி பதவி இழந்தார்,  வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

   1951 - 52   1952 - 53   (ஆச்சாரியார் மெடிக்கல் கல்லூரிகள்      உத்தரவுப்படி)
பார்ப்பனர்   -   63  -  104 
ஜாதி இந்துக்கள்  -   130  -  56
மற்றவர்கள்   -   125 -  158
எஞ்சினியரிங் கல்லூரிகள் 
பார்ப்பனர்  -   85 - 177
ஜாதி இந்துக்கள்   -  138  -  50
மற்றவர்கள்   -  370 -  37
“அதாவது பார்ப்பனர்கள் 48%. இதற்கு முந்திய ராஜியத்தில் பார்ப்பனருக்கு 23% தான் கிடைத்தது. பார்ப்பனர் 100க்கு 3 பேர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கட்டும்‘’
உயர் கல்வித்துறையில் இப்படி வருணாசிரமத்தைத் திட்டமிட்டு புகுத்திய ராஜாஜிதான் தொடக்கக் கல்வி யிலும் கை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இடைநிலைக் கல்வியிலும் திருகுதாளம் செய்திருந்தார். “விடுதலை” யில் (10.6.53) வந்த ஒரு செய்தி அந்த உண்மையைச் சொன்னது.
“எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 31 என்று அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் 100க்கு 42 ஆக இருந்தது. இந்த ஆண் டில் குறைந்ததற்குக் காரணம் என்ன? சென்ற ஆண்டில் ‘செலக்ஷன்’ என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அக்கிரகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது”.
பன்வாடை என்றால் வடிகட்டும் துணி, அதைக் கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள், அதனால்தான் இந்த ‘செலக்ஷன்’ முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது இந்த எடு, பள்ளியில் சேருகிற சகலரையும் பரீட்சை எழுத அனுமதிப்பதில்லை இந்த முறை. இடையிலேயே எதோவொரு அளவுகோலை வைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள், இப்படிப் பலரது வாழ்வும் பாழாக்கப்பட்டது. இப்படித்தான் பள்ளி யில் சேர்ந்தவர்களில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்து போனது. இப்படியாகப் பல வகைகளிலும் சூத்திரர்கள் - பஞ்சமர்களின் கல்வியைப் பாழாக்குகிற வேலையில் இறங்கியிருந்தது ராஜாஜி சர்க்கார், சுதந்திர இந்தியாவில் பிராமணரல்லாதாரின் கல்வி உரிமையை வெட்டுகிற பல கட்டாரிகளைக் கண்டு பிடித்து வீசினார் பக்கா பிராமணியவாதியாகிய ராஜாஜி.
முடிவில் அடிமரத்தில் வெட்டரிவாளை வீசினார். 1953 ஜூன் 18  முதல் குலக்கல்வித் திட்டத்தை நடை முறைப் படுத்தியே விட்டார். முதலில் மைனர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்குத்தான் இந்தக் கல்வி முறை என்று சொல்லி வந்தவர், இப்போது மேஜர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றார். ஆக, கிராமப் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் இந்தக் கல்வி முறை! இதிலேயே ஓரவஞ்சனை தெரிந்தது. நகர்ப்புறத்தாருக்கு ஒருவகைக் கல்வி, கிராமப்புறத்தாருக்கு வேறுவகைக் கல்வி! நகரத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 6 மணி நேரம் தினம் படிப்பார்கள், கிராமத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 3 மணி நேரம் மட்டுமே படிப்பார்கள்! இதென்ன கொடுமை? கல்லூரி அனுமதியிலும், படிப்பிலும் கிராமத் துப் பிள்ளைகளால் நகரத்துப் பிள்ளைக ளோடு எப்படிப் போட்டி போட முடியும்? நகரத்து உயர்சாதி மாணவர்களே முன்னேறிக் கொண்டு போவார்கள். பச்சையான பிராம ணியம் ராஜாஜியின் இச்சையாக வெளிப்பட்டது.
குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது
இப்படிப்பட்ட சூழலில்தான் ஜூலை 14 அன்று சட்டசபை முன்பு மறியல் போராட்டம் நடத்தியது தி.க. “விடுதலை” ஆசிரியர் குருசாமி, வ. வீராசாமி எம்.பி., 6 பெண்கள் உள்ளிட்ட 80 பேர் கைதானார்கள். ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு நின்று இவர்களுக்கு ஆத ரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து ராஜாஜி வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது தி.மு.க. அதற்கும் முன்னதாக அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட் டார்கள். அந்தச் செய்தியையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது “விடுதலை”.
தி.மு.க. வின் மும்முனைப் போராட்டத்தில் தூத்துக் குடியில் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 9 பேர் அநியாயமாகப் பலியானார்கள். 50 பேர்க ளுக்கு மேல் படுகாயம் பட்டார்கள். பல நூறு பேர் கைதா னார்கள். இதையும் ஆவேசத்தோடு வெளியிட்டது. “விடு தலை” என்பது மட்டுமல்லாது, இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து பெரியார் வலுவான அறிக்கையும் வெளியிட்டார். தி.க.விலிருந்து தி.மு.க. பிரிந்து போனதிலிருந்து இரு அமைப்புகளுக்கும் இடையே இயல்பாகவே மிகுந்த கசப்புணர்வு இருந்தது. ஆனால் குலக்கல்வி எதிர்ப்பு எனும் பொது விஷயத்தில் பெரியார் தி.மு.க.வின் போராட்டத்தையும் உற்சாகத்தோடு ஆதரித்தார் என்பது குறிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஜூலை 24அய் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார் பெரியார். அன்று சென்னை கடற்கரை யில் பெரியார் முழங்கினார். அவரது பேச்சைக் கேட்க லட்சம்பேர் கொண்ட ஊர்வலம் நடைபோட்டது என் கிறது “விடுதலை” (25-7-53). குலக்கல்வித் திட்டம் வாபஸ் பெறப்படும் வரைப் போராட்டம் ஓயாது என்றார் அந்தச் சமூகப் போராளி.
மெய்யாலும் ஜூலை 20 முதல் தமிழகத்தின் பல ஊர்களிலும் பல பள்ளிகள் முன்பு மறியல் கிளர்ச்சி நடை பெற்றது. இதற்கு மாணவச்சிறார்களும் ஒத்துழைத்தார்கள். நூற்றுக்கணக்கான தி.க.வினர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டது என்றது “விடுதலை” (28-7-53).
இப்படிப்பட்ட பின்புலத்தில்தான் குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடக் கோரும் தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. முன் மொழிந்தவர் கம்யூனிஸ்டு கேபி. கோபாலன். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 138 வாக்குகளும், எதிராக 138 வாக்குகளும் பதிவாயின; சமநிலை. சபாநாயகர் சிவஷண்முகம்பிள்ளை தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்து அதைத் தோற்கடித்தார். அப்படியும் விடவில்லை எதிர்க் கட்சியினர். இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து, நிபுணர்கள் குழுவின் பரிசீலனைக்கு விடுமாறு கூறியது. இது காங்கிரசிலிருந்த அதிருப்தியாளர் களுக்கும் வசதியாக இருந்தது. ஆகவே தீர்மானத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும், பாதகமாக 137 வாக்குகளும் விழுந்து தீர்மானம் நிறைவேறிவிட்டது.
அரசுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி கோரியது. இதற்கு முதலமைச் சரின் பதில் என்ன தெரியுமா? “அது ஒரு சிபாரிசுதானே தவிர வேறல்ல” என்று சொன்னார். இது சர்வாதிகாரப் போக்கு என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் நாகிரெட்டி, கல்யாணசுந்தரம், கே.பி. கோபாலன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் - 1953 அக்டோபர் 1இல் தமிழகத்திலிருந்து ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. இனி ஆங்கிலம் தெரிந்தவர்தான் சென்னை மாநிலத்திற்கு முதல்வராக இருக்க வேண்டும் எனும் தேவையில்லாமல் போனது. மொழிவழி மாநிலம் அந்நியமொழி தெரியாத வரும் ஆட்சிக்கட்டில் ஏறும் வாய்ப்பை உருவாக்கியது. தமிழ்நாடு காங்கிரசுக்குள் காமராஜர் ஆதரவு கோஷ்டியினர் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு அதற்கு ஏதுவாக இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் காமராஜருக்கு ஆதரவு பெரு கியது. தான் பதவி விலகுவதாக 1954 ஜனவரியிலேயே கூறினார் ராஜாஜி, அப்படியாகவே மார்ச்சில் விலகவும் செய்தார். ஏப்ரலில் முதல்வராகிப் போனார் காமராஜர். அடுத்த மாதமே குலக்கல்வித் திட்டம் ரத்துசெய்யப்பட்டது. பெரியாருக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது; பிராமணியத்திற்கு இது இரட்டை அடி. ஒருபுறம் ராஜாஜி பதவி இழந்தார், மறுபுறம் வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது.
இந்தித் திணிப்புக்கும் அடி
இதற்கிடையில் 1952 ஆகஸ்டு 1, 1953 ஆகஸ்டு 1ல் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்தைத் தார் கொண்டு அழிக்கும் கிளர்ச்சியை நடத்தி யிருந்தார் பெரியார். அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி இந்தப் போராட்டம் பலம் பெறக் கூடாது என்று கிளர்ச்சியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் இருந்தார். 1954 ஆகஸ்டு 1 வந்தது. இப்போது காமரா ஜர் முதல்வர். இவரும் இது விஷயத்தில் ராஜாஜியின் வழி நடந்தார். இந்தி எதிர்ப்பு தீக்கனல் தமிழ்நாட்டில்தான் அணையாமல் காக்கப்பட்டு வந்தது. இது சங்பரிவாரத்தின் - அதன் அரசியல் பிரிவான ஜனசங்கத்தின் - ஏக இந்தி மொழிக் கொள்கைக்கு நேர் எதிரான நிலைபாடு என் பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 14


May 30, 2020 • Viduthalai •
'கணபதி ஒழிக', 'உருவ வழிபாடு ஒழிக' என லட்சம் குரல்கள் முழக்கம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'

பிள்ளையார் பிறப்பு பற்றிய புராண ஆபாசங்களை எல்லாம் சுட்டிக்காட்டிய பெரியாரின் ஏடு ஒரு முக்கிய மான, நியாயமான வாதத்தை வலுவாக முன்வைத்தது - “வடநாட்டில் இராவணனுக்கு கொடும்பாவி கட்டி இழுத்து நெருப்பு வைத்துக் கொளுத்தவில்லையா? தென்னாட்டில் சூரன் திருவிழாவில் சூரன் பொம்மைத் தலையை வெட்டி வெட்டித் தெருவில் வீழ்த்திக் கொண்டே போவதில்லையா? இராவணனும் சூரபத் மனும் யார்? மற்றும் சமணர்களைக் கழுவேற்றுகிற உற்சவத்தில் சமணர் உருவை ஆசனத்தில் கழுவேற்றித் தெருவில் தொங்கவிடவில்லையா?
சமணர்கள் யார்? சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் சூர்ப்பநகையின் இளநீருக்கும் பெரிதான முலையை இலக்குவன் இரம்பத்தைக் கொண்டு அறுப் பதாக 6 அடி உருவம் பூஜை செய்யப்படுவதில்லையா? சூர்ப்பநகை யார்? இந்தக் கணபதியே தன் தம்பி சுப்பிரமணியம் ஒரு அந்நியப் பெண்ணைப் பலாத்காரம் செய்ய, அவள் தப்பி ஓட அவளை விரட்டிப் பிடித்து ஒப்பவைக்க யானை உருவெடுத்துப் போய் விரட்டிப் பலாத்காரமாய்ப் படிய வைக்கவில்லையா? அந்த வள்ளி யார்? இவையெல்லாம் பொய்யானால் இந்த பொம் மையும் கடவுள் என்பது பொய்யாகட்டுமே. இவை யெல்லாம் மெய்யானால் மெய்யாகவே இந்தக் கணபதி கடவுள் ஒழிந்து மண்ணோடு மண் ஆகட்டுமே”.
அரக்கர்கள்- அசுரர்கள் எனப்பட்டவர்கள் பிராம ணிய மதத்தை- வாழ்வுமுறையை எதிர்த்தவர்கள் என் பதை அறிவோம். தங்களை எதிர்த்தவர்களை அன்று வதம் செய்ததை இன்றும் நினைவுபடுத்திக் கொண் டாடுகிறார்கள் பிராமணியவாதிகள். அப்படி அவர்கள் கொண்டாடும்போது அவர்களது தலைவர்களை, அந்த உருவங்களை உடைத்து நாம் ஏன் கொண்டாடக் கூடாது என்பதுதான் பெரியாரின் வாதமாகும். தர்க்கரீதியாகச் சரிதான். ஆனால், பிராமணியம் இடைப்பட்ட காலத்தில் தங்களது எதிரிகளை அநீதிகளின் மொத்த உருவமாகவும், தங்கள் தலைவர்களை கடவுளின் அவதாரங்களாகவும் சித்தரித்து, அப்படியாகவே மக்கள் மனதில் நிலைநிறுத்தி விட்டது. அதனால்தான் ராவணன், சூரபத்மன், சமணர் கள், சூர்ப்பநகை ஆகியோரைச் சிதைக்கும் போது வெகுமக்கள் ரசிப்பதும், ராமன், சுப்பிரமணியன், கணபதி ஆகியோரைக் கடவுளர்களாகத் துதிப்பதும் நடக்கிறது. இந்தச் சூழலில் பிள்ளையார் பொம்மை உடைப்பு என்பது ஓர் அதிரடி வைத்தியமாகவே இருந்தது. ராஜாஜி மந்திரிசபை நடந்ததும், அதன் சில அடாவடித்தனங்களுமே இதற்கான புறவியல் நியாயங்களைத் தந்து வெகுமக்களை பரபரப்பாகப் பேச வைத்தது. அதேநேரத்தில் வைதீகர்கள் சிலர் பதிலடித் தாக்குதலிலும் இறங்கினார்கள்.
மே 27 அன்று சென்னையில் “ஹிந்து” அலுவலகம் துவங்கி “சுதேசிமித்திரன்” அலுவலகம் வரை ஆயிரத் துக்கும் குறையாத பிள்ளையார் சிலைகள் உடைக்கப் பட்டன. இதற்குத் தலைமை தாங்கியவர் “விடுதலை” ஆசிரியர் குருசாமி. இப்படித் தமிழகத்தின் பல ஊர்க ளிலும் இந்த உடைப்புப் போராட்டம் நடந்தது. திருச்சியில் அதை நடத்தித் தந்தவர் பெரியார். இதை “விடுதலை” ஏடு (28-5-53)
இப்படி வருணிக்கிறது- “15,000 க்கு மேற்பட்டோரைக் கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. லட்சம் பேர்களுக்கு மேற்பட்ட மாபெரும் கூட்டம் கணபதி ஒழிக’, உருவ வழிபாடு ஒழிக’ என லட்சம் குரல்கள் முழக்கம் செய்தன. பெரியார் விளக்கவுரை ஆற்றினார். அது - நாம் என்னமோ சாமி இல்லை என்று சொல்லுகிறோம் என்பதாகப் பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் கூறுகிறேன், திராவிட கழகத்தார் என்றைக்காவது சாமி இல்லை என்று சொல்லியிருக்கிறார்களா? அல்ல. சாமி, கடவுள் இல்லை என்று கருதுகிறவர்கள்தான் கழகத்திலே அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படும் என்றா சொல்லியிருக்கிறோம், இல்லையே. திராவிட கழகத்தவர் ஏதாவது சொல்லுவார்கள் என்றால் எது சாமி?’ என்று கேட்பார்கள். நீ சொல்லுகிறாயே குழவிக் கட்டை நீ காட்டுகிறாயே குழவிக் கல் இதுவா சாமி? என்று கேட்கிறோம் இவைகள் சாமிகள் அல்ல வெறும் களிமண், வெறும் கல் என்று கூறுகிறோம். மற்ற மதத்தவர்களுக்குக் கடவுள் இல்லையா? இருக்கிறது. அவர்கள் எல்லாம் ஒரு கடவுளை வணங்குகிறார்கள். இங்கு மட்டும் பல கடவுள் களை வைத்துக் கொண்டிருக்கிறோம் பிள்ளையார் உடைப்பு என்பதனால் இருக்கிற 1000 கடவுள்களுக்கு மேற்கொண்டு இனியாவது புதுக் கடவுள்கள் தோன்றாமல் இருக்கட்டுமே’’
அந்த 1953இல் எல்லாம் பெரியார் கடவுள் மறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிராமணிய எதிர்ப்பை முன்னிறுத்தியே பிள்ளையாரை உடைத்தார். கணிசமான வெகுமக்களின் ஆதரவு இந்தப் போராட்டத்திற்கு கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். தனது கைத் தடியால் பிள்ளையார் உருவங்களைப் பெரியார் உடைத்த போது அங்கு பெரும் கிளர்ச்சி அலை ஏற்பட்டது.
பிராமணியவாதிகளுக்கு பெருங் கோபம் எழுந்தது. அவர்கள் சில இடங்களில் பெரியாரின் படத்தை - கொடும்பாவியைக் கொளுத்தினார்கள். திருச்சியில் பெரியார் வீட்டைக் கொளுத்தவும் முயன்றார்கள். ஆங் காங்கே தி.க.வினர் கடுந்தாக்குதலுக்கு ஆளானார்கள். “என்படத்தைக் கொளுத்தியதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? கொளுத்தட்டுமே, இன்னும் வேண்டு மானால் அந்தக் காரியத்துக்கு நானே பணம் தருகிறேன்” என்றார் பெரியார்.
குலக்கல்வி அமுலாக்கம் தீவிரம் இதற்கிடையில் குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்துவதில் தீவிரமாக இருந் தார் ராஜாஜி. காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜ ரையோ, தனது கல்வி மந்திரியையோ, காங்கிரஸ் எம். எல்.ஏ க்களையோ அவர் கலந்து கொள்ளவில்லை. தானடித்த மூப்பாக இது விஷயத்தில் செயல்படத் துவங்கினார். கேட்டால் இப்படி பதில் சொன்னார்- “இந்தக் கல்வி முறையைப் புகுத்தியதற்கு நானே பொறுப் பாளி, யாரையும் நான் கேட்கவில்லை. ஏனென்றால் சங்கரரும், ராமானுஜரும் யாரையும் கேட்டு எந்தக் காரியத்தையும் செய்ததில்லை. கேட்க ஆரம்பித்தால் நாலு யுகமானாலும் செய்ய முடியாது” (விடுதலை 31-5-53). பிராமணியத்தின் அகந்தையை இதில் தெளிவாகக் காணலாம். ஜனநாயக காலத்திலும் ராஜாக்கள் காலத்து நடைமுறையைப் பின்பற்ற மாகாண முதல்வர் நினைத் தார்.
ஏற்கெனவே தொழிற்கல்வியில் பிராமணர்களுக்கு ஏற்றம் தந்து, பிராமணரல்லாதாருக்குத் துரோகம் செய்கிற வேலையைச் செய்திருந்தது ராஜாஜி அரசு. இது பற்றிய சில விபரங்களை வெளியிட்டு “விடுதலை” (6653) முக்கிய மானதொரு தலையங்கத்தை எழுதியது “கம்யூனல் ஜிஓ என்ற வகுப்புரிமை முறையானது அல்லாடிஇனத்தினால் அரசியல் சட்டம் மூலமாகவும், பிறகு நீதிமன்றத்தின் மூலமாகவும் தூக்கிவிடப்பட்டவுடனே இங்கிருந்த திரா விட காங்கிரஸ் மந்திரிகள் ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். எஞ்சினியரிங் - மெடிக்கல் எனும் இருவிதத் தொழிற் கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பொறுக்கி எடுக்கும் போது நேர்முக உரையாடல் (பேட்டி தேர்வுக்கு 150 மார்க் என்று கொண்டு மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்கு கின்ற மார்க்கை இந்த மார்க்குடன் கூட்டி வகுத்துச் சராசரி கண்டுபிடித்து அதன் மூலம் பொறுக்கியெடுத்தனர். ஜாதி வெறியரான ஆச்சாரியார் முதலமைச்சராக வந்ததும் தமிழரின் உயர்தரத் தொழிற்கல்விக்குத் தூக்குப் போட்டு விட்டார். அதாவது மேற்கண்ட பேட்டி (Interview) மார்க்கை 150லிருந்து 50 ஆகக் குறைத்துவிட்டார்’.
சென்னை மாகாணத்திலிருந்த வகுப்புரிமை அர சாணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன வுடன் பிராமணரல்லாதார் நலனைக் காப்பாற்ற நேர் காணல் முறைக்கு அதிக மதிப்பெண் கொடுத்து அந்தப் பகுதி மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு. ராஜாஜி மந்திரிசபை அமைத்ததும் அதிலும் கை வைத்தார். அந்த மதிப்பெண்ணை அதிரடி யாய்க் குறைத்தார். இதன் விளைவு என்னவென்றால் பிராமணப் பிள்ளைகளுக்கு கூடுதல் இடங்களும், பிராம ணரல்லாதார் பிள்ளைகளுக்கு குறைந்த இடங்களும் கிடைத்தன. அந்த விபரத்தையும் கொடுத்தது தலை யங்கம். அது -
- தொடரும்

தலைமை - தத்துவம் - இயக்கம்! திராவிடர் கழகத்தை மய்யப்படுத்தி பேராசிரியர் அருணன்! - 13


May 29, 2020 • Viduthalai • 
சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'


சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணை இருந்த போதே மிக உயர்ந்த பதவிகளில் பிராமணர்களே இருந்தார்கள். மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 2.7 சத வீதமே. ஆனால், “விடுதலை” (14-4-51) சுட்டிக் காட்டியது” சீப் இஞ்சினியர்கள் 3 பேர், மூவரும் பார்ப் பனர்கள். சூப்பிரடென்டிங் இஞ்சினியர்கள் 9 பேர், ஒன்பது பேரும் பார்ப்பனர்கள், எக்சிகியுடிவ் இஞ்சினியர் கள் 45 பேர், அதில் 33 பேர் பார்ப்பனர்கள்”. அரசு நிர் வாகத்தின் முக்கிய பதவிகளில் மட்டுமல்ல தொழில் நுட்பக் கல்வியிலும் பிராமணர்களே ஆளுகை செலுத் தினார்கள் என்பதையும் இது புரிய வைக்கிறது.
முன்சிப் பதவி கேட்டு ஒருவர் வழக்குத் தொடுத்தாரே அந்த நீதித்துறையில் கூட இப்போதும் உயர் மட்டத்தில் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். “விடுதலை” (174-51) எடுத்துக் காட்டியது - “சென்னை அய்கோர்ட் 14 ஜட்ஜுகளில் 7 பேர் பார்ப்பனர்கள்”
அரசியலமைப்புச் சட்டத்திற்கு திருத்தம்
இப்படி கருத்தளவிலும் செயலளவிலும் பெரியாரின் தி.க. ஒரு விடாப்பிடியான போராட்டத்தை நடத்திய காரணத்தால்தான் மாகாண, மத்திய அரசுகள் காரியத்தில் இறங்கின. 1951 ஏப்ரலில் மத்திய அரசுக்கு சென்னை சர்க்கார் எழுதிய கடிதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அதே மாதத்தில் வகுப்புவாரி அரசாணையை ஆதரித்தும், அதைக் காக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரி யும் சென்னை மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதற்குப் பிறகுதான் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்ட நடவடிக்கையில் இறங்கினார் பிரதமர் நேரு.
“பிற்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்வது வகுப்புவாத நோக்கமாகாது, சட்ட நுணுக்கச் சிக்கலைத் தீர்க்கத்தான் திருத்த மசோதாக்கள் - பிரதமர் நேரு விளக்கம்“ என்கிற செய்தி 19.5.51 தேதியிட்ட “விடுதலை” யில் இடம் பெற்றது. தங்களது எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாக கல்வி, வேலைவாய்ப்பில் உயர் சாதி யினர் இடம் பெறுவது வகுப்புவாதம் இல்லை, இந்த அநீதியைப் போக்க இடஒதுக்கீடு செய்வதுதான் வகுப்பு வாதம்! - இப்படித்தான் அன்று பிராமணியம் வாதம் செய் தது. இந்தப் பொல்லாத்தனத்தை பிராமணர் குலத்தில் பிறந்த பிரதமர் நேருவே நிராகரித்தது சமூக நீதி சக்திகளுக்கு - குறிப்பாக பெரியாருக்கு - கிடைத்த ஒரு மகத்தான வெற்றி.
சமூக சீர்திருத்தத் துறையில் பெரியாரின் வெற்றிகள் பலப்பல. அவற்றில் எல்லாம் தலையாயது இந்த அரசி யலமைப்புச் சட்டத் திருத்தத்தை இந்திய மக்களுக்குப் பெற்றுத் தந்தது. இது முழு தேசத்திற்கும் கிடைத்த பரிசு. இந்தத் திருத்தத்திற்குப் பிறகுதான் சென்னை மாகாண வகுப்புரிமை அரசாணை தப்பியது என்பது மட்டுமல்லாது பிற மாகாணங்களிலும் அத்தகைய ஆணைகள் தப்பின அல்லது அவை பிறப்பிக்கப்பட்டன. முடிவில் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மத்திய அரசிலேயே அது அமுலானது. இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது இந்தத் திருத்தம்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி 1952இல் நடந்த தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. நரியைப் பரியாக்கியது போலச் சிறுபான்மையைப் பெரும்பான்மையாக்க தந்திரசாலி ராஜாஜியை முதல்வ ராக்குவது என்று முடிவு செய்தார்கள். தேர்தலில் நிற்காது ஒதுங்கியிருந்த அவரை மேலவை உறுப்பினராக்கி முதல் வர் நாற்காலியில் உட்கார வைத்தார்கள். “கொல்லைப்புற வழியில் பதவியைப் பிடித்தவர்” எனும் அவப் பெயருக்கு ஆளானார் ராஜாஜி.
அதுமட்டுமல்ல, இந்தியாவின் மிக உயர்ந்த பதவி யாகிய கவர்னர் ஜெனரல் பதவியையே அனுபவித்தவர் ஒரு மாகாணத்தின் முதல்வர் பதவியில் உட்காரக் கூச்சமில்லாமல் சம்மதித்தார். பலித்தவரை லாபம் என நினைக்கிற பிராமணியவாதிகள் இதையெல்லாம் பார்ப்ப தில்லை. கலெக்டர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்ற வர் கர்ணம் வேலையை ஒப்புக் கொண்டது போல இருக் கிறது என்று நயம்படக் கேலி செய்தார் பெரியார். இது பற்றியெல்லாம் கவலைப்படாது பிறகட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்து சிறுபான்மையைப் பெரும்பான்மை யாக்கி கனஜோராய் ஆட்சி நடத்தி வந்தார் ராஜாஜி. எத்தகைய ஆட்சி?
ராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்
1953 கல்வியாண்டு துவங்குகிற வேளையில் ஒரு புதுவித ஆரம்பக் கல்வி பற்றிப் பேச ஆரம்பித்தார் ராஜாஜி. இதன்படி இதுவரை ஆறு மணி நேரமாக இருந்த பள்ளி நேரம் மூன்று மணி நேரமாகக் குறைக்கப்படும். மீதி மூன்று மணி நேரம் பிள்ளைகள் அப்பன் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை இப்படிக் கூறியது - “சங்கீதம், உடற்பயிற்சி, இயற்கை, கைத்தொழில் முதலிய பாடங்களைச் சொல்லித் தர வேண்டியதில்லை. பள்ளியில் பயிலாத காலங்களில் காலையிலோ மாலையிலோ பிள்ளைகள் தங்கள் பெற் றோர் ஈடுபடும் பயிர்த் தொழிலிலோ அல்லது கைத் தொழிலிலோ ஈடுபட வேண்டும். எல்லாப் பெண்களும் தத்தம் வீட்டு வேலையிலோ, வீட்டார் செய்யும் வேலையிலோ ஈடுபட வேண்டும்”.
சுற்றறிக்கையின் இந்த வாசகங்கள் “விடுதலை” (5-5-1953) தலையங்கத்தில் உள்ளன. சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாட்டில் விவசாய மந்திரி டாக்டர் கன்னகவுடா பேசிய பேச்சும் அதில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளது. அது - “இளையவர்களாகிய நீங்கள் படிப்பு முடிந்தவுடன் உத்தியோக வேட்டையாடுவதைக் கைவிட்டு நவீன முறைப்படி பால் பண்ணைகள் நடத்தி அதிகமாகப் பால் உற்பத்தி செய்ய வேண்டும். கிராமப் பிள்ளைகள் காலையில் கல்வியும் மாலையில் அவரவர் குலத் தொழிலும் செய்ய வேண்டும் என்ற ராஜாஜி அவர் களின் புதிய கல்வித் திட்டத்தை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்”.
யாதவ மாணவர்களிடம் போய் பால்பண்ணை நடத்தச் சொன்னார் மந்திரி! உத்தியோக வேட்டையை உயர்சாதிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள்! சூத்திரர் களும் பஞ்சமர்களும் அவரவர் குலத்தொழிலைப் பார்த் தால்தான் சுதந்திர இந்தியாவிலும் உயர் சாதியினர் சொகு சான அரசாங்க உத்தியோகங்கள் பெறமுடியும் என்பதே பிராமணியத்தின் கணக்காக இருந்தது. இதற்கு “புதிய ஆரம்பக் கல்வித்திட்டம்“ என்பது ராஜாஜி அரசாங்கம் கொடுத்திருந்த பெயர். ஆனால், அது உண்மையில் குலக் கல்வித் திட்டமே என்பது மந்திரியின் பேச்சிலிருந்தே நிச்சயமானது. இப்படியாக அது அப்போதே “குலக்கல்வித் திட்டம்“ எனும் பொருத்தமான நாமகரணத்தைப் பெற்றது.
இந்தத் திட்டத்தால் மாணவர் சேர்க்கை இரு மடங் காகும், இது ஷிப்ட் சிஸ்டமே என்பது போல நியாயப் படுத்தினார் ராஜாஜி. பள்ளிகளை அதிகமாகத் துவக்கி, புதிய ஆசிரியர்களை நியமித்து ஆரம்பக் கல்வியைப் பரவலாக்குவதற்குப் பதிலாக இப்படியொரு குறுக்கு வழி காட்டினார். 5 வயதிலிருந்து 11 வயது வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களின் படிப்பு நேரத்தைப் பாதியாகக் குறைத்தால் மீதி நேரத்தில் என்ன செய் வார்கள்? சின்னஞ்சிறுவர்கள் அவர்கள், விளையாட்டுப் புத்தி இருக்கும், விளையாட்டில்தான் அந்த நேரத்தைச் செலவழிப்பார்கள். இதற்கு ராஜாஜி காட்டிய மாற்று வழிதான் சிறுவர்கள் அவரவர் குலத் தொழிலைச் செய்ய வேண்டும் என்றது. இதைவிடக் கொடுமை  சிறுமிகள் வீட்டு வேலை செய்ய வேண்டும் என்றது. பெண்கள் என்றால் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு எனும் பிராம ணியக் கோட்பாடு அரசாங்க உத்தரவாகவே வெளிப் பட்டது.
பிள்ளையார் உடைப்பு போராட்டம்
இப்படி ராஜாஜி அரசு குலக்கல்வித் திட்டத்தை அமுலாக்கும் வேலையில் இறங்கியிருந்த காலத்தில்தான் பெரியார் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தார். புத்தர் பிறந்த தினமாகிய மே 27அய் விடுமுறை நாளாக அப்போதுதான் சர்க்கார் அறிவித்திருந்தது. இந்த தினத்தை தனது போராட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தார் பெரியார். இது பற்றிய பெரியார் அறிக்கை இப்படிக் குமுறியது - “சூத்திரர்களுக்கு கல்வித் துறையில் ஒரு அளவுக்குப் பெரிய கிளர்ச்சி மீது சிறிது உரிமை இருந்தது. அதுவும் ஆச்சாரியார் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது. . . அடிப்படைக் கல்வி என்னும் பேரால் தகப்பன் தொழிலை, பரம்பரைத் தொழிலைப் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது”. (விடுதலை 6-5-53)
ராஜாஜி அரசின் குலக்கல்வித் திட்ட அறிவிப்புப் பின்னணியில் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் உத்வேகம் பெற்றிருந்தது. இதற்கு அவர் தேர்ந்தெடுத்த தினமும் அர்த்தமுள்ளதாக இருந்தது. நாத்திகத்தை முன்னிறுத்தி அவர் பிள்ளையாரை உடைக்கவில்லை. புத்த மதத்திற்கு பிராமணிய மதம் மோசம் என்றே விஷயத்தை முன்வைத்தார். இந்த அளவுக்கு பெரியார் அம்பேத்கரோடு ஒன்றுபட்டார். “புத்த ஜெயந்தி கொண் டாட (கணபதி) பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்” என்றது “விடுதலை” ஏடு.
- தொடரும்