காணொலியில் தமிழர் தலைவர்
கலி.பூங்குன்றன்
‘‘நீதிக்கட்சி ஆட்சி (திராவிடர் ஆட்சி) நூற்றாண்டும் அதன் தொடர் தாக்கங்களும்'' எனும் தலைப்பிலான காணொலி நிகழ்ச்சி நேற்று (19.12.2020) மாலை 6.30 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றிட, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அறிமுகவுரை வழங்கிட, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். அமெரிக்கா உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கேட்டு மகிழ்ந்தனர்.
இது ஒரு முக்கிய நிகழ்வாகும். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் ஆட்சி (திராவிடர் ஆட்சி) 1920 டிசம்பர் 17 ஆம் தேதி சென்னை மாநிலத்தின் பொறுப்பை ஏற்றது.
1920 முதல் 1937 ஆம் ஆண்டு வரை அவ்வாட்சி சாதனை மணம் வீசும் சரித்திரப் பூக்காடாகவே பரிணமித்தது.
குறிப்பாக சமூக நீதியில் அதன் சாதனை இன்றுவரை (குறிப்பிட்ட சில ஆண்டுகளைத் தவிர) ஒவ்வொரு ஆட்சியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் தாக்கமும், சமூகத்திலும், அரசியலிலும், ஆட்சியிலும் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது - வருகிறது - இனியும் அது தொடரவே செய்யும்.
திராவிடர் கழகத் தலைவரின் நேற்றைய காணொலி உரை என்பது இவற்றின் மய்யப் புள்ளியில் சுழன்றது என்றே சுருக்கமாகக் கூறலாம்.
தொடக்கத்தில் நீதிக்கட்சிக்கும் தமக்கும் உள்ள உறவை தொடர்பைத் தன்னிலை விளக்கமாகக் கூறினார்.
1944 ஆம் ஆண்டில்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சி சேலத்தில் பெயர் மாற்றம் பெற்றது.
அப்பொழுது அவருக்கு வயது 11. ஆனால், பத்து வயது முதற்கொண்டே இயக்க ஈடுபாடு - தந்தை பெரியார் கொள்கைமீது பற்றுதல் என்னும் சங்கிலி அவரைப் பிணைத்ததாலும் - இயல்பாகவே நீதிக்கட்சியின் அங்கம் ஆகிவிட்டார். சிவப்பு வண்ணத்தின் நடுவே வெள்ளை நிறத் தராசு கொடியையும், புலி, வில், கயல் பொறிக்கப்பட்ட கொடியையும் தாங்கித் தாம் நடைபோட்டதைத் தெரிவித்தார்.
திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டின் இடைவெளியில், அம்மாநாட்டு மேடையில் 11 ஆம் வயதில் கடலூர் சிறுவன் வீரமணி யாக முழக்கமிட்டவர் என்ற முறையிலும், அந்த நீதிக் கட்சியின் நீட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் என்ற தகுதியிலும், நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு நிகழ்வில் சிறப்புரையாற்றுவது மிகப் பொருத்தம்தானே!
அவருடைய உரையில் முக்கியமாக நிறுவியது. 1916 இல் தோன்றி 1920 இல் ஆட்சிப் பீடம் ஏறிய நீதிக்கட்சியின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது என்பதற்கான ஆதாரங்களை எடுத்துக் கூறினார்.
1937 வரையிலும் சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி யின் ஆட்சி பட்டொளி வீசிப் பறந்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகாலம் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி)யின் ஆட்சி.
அந்த ஆட்சியைப் பொருத்தவரை நீதிக்கட்சி யையோ, கொள்கையையோ ஏற்காத ஆட்சியே. அவர் காலத்தில்தான் 2500 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. இந்தி புகுத்தப்பட்டது. சமஸ்கிருதத்தை படிப்படியாகப் புகுத்தவே முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசியதுண்டே-
திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லாத அந்த ஆட்சி தாக்குப் பிடிக்க முடியவில்லை. இடையிலேயே வெளியேறியது.
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி வந்தது. அவர் ஆட்சியிலும், திராவிட இயக்கத்தின் சமூகநீதி கொள்கையில் மாற்றமில்லை. இன்னும் சொல்லப்போனால், ஓமாந்தூராரை தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்றே பார்ப்பனர் அழைத்தனர். அவர் ஆட்சிக்காலத்தில்தான் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டைகளையும் கடந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நாகபூஷணம் சோமசுந்தரம் என்ற தமிழர் முதன்முதலாக நுழைய முடிந்தது (1948).
1952 முதல் பொதுத் தேர்தலில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அய்க்கிய முன்னணி வெற்றி பெற்றது. தந்தை பெரியாரின் ஆதரவோடு கம்யூனிஸ்டுகள் பெரும் வெற்றி பெற்றனர்.
ஆனாலும், கொல்லைப்புறம் வழியாக ராஜாஜி நுழைந்து காமன் வீல் கட்சியைச் சேர்ந்த மாணிக்கவேல் நாயக்கர் போன்றவர்களை காங்கிரசுக்கு இழுத்து பதவி கொடுத்து ஆட்சியை அமைத்தார்.
முதன்முதலாகக் கட்சி தாவலுக்கு வித்திட்டவர் ராஜாஜிதான். ஆனாலும், ராஜாஜியால் முழு வாய்தா காலம் ஆட்சியைத் தொடர முடியவில்லை.
ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடி
அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்யவேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியார் தலைமையில் தமிழகமே திரண்டு எழுந்து எதிர்த்தது, வேறு வழியில்லாமல் பதவியை விட்டு விலகிச் செல்ல நேர்ந்தது.
ஆம். திராவிட இயக்கக் கொள்கைக்கு மாறான - அதன் தாக்கம் இல்லாத ஆட்சியால் தொடர முடியவில்லை.
அடுத்து காமராசர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சி நீதிக்கட்சியின் - திராவிடர் ஆட்சியின் சமூக நீதியின் தாக்கம் உள்ள ஆட்சியாகவே அமைந்திருந்தது. ஆச்சாரியார் மூடிய ஆறாயிரம் பள்ளிகளைத் திறந்ததோடு புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.
தந்தை பெரியார் காமராசரைப் பச்சைத் தமிழர் என்று அழைத்தார். 'கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை' என்று பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் எழுதும் அளவுக்கு நிலைமை சென்றது. அந்த வகையில் காங்கிரசு ஆட்சியானாலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் அவரிடம் இருந்ததால் ஆட்சி மக்களிடம் நல்ல பெயரை எடுத்தது.
காமராசருக்குப் பின்னர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. செய்தியாளர்கள் முதல் அமைச்சர் அண்ணாவைப் பார்த்து கேட்டார்கள். '1957இல் தேர்தலில் போட்டியிட்டு, ஒரு பத்தே ஆண்டு காலத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே!' என்று கேட்டனர்.
முதல் அமைச்சர் அண்ணா மிக அழகாக அடக்கத்தோடு பதில் சொன்னார்.
"நீங்கள் சொல்லுவது தவறு. நீதிக்கட்சி என்பது எங்களின் பாட்டன்; நான் அதன் பேரன். 1916இல் தோன்றிய நீதிக்கட்சியின் நீட்சி தான், தொடர்ச்சிதான் தி.மு.க. - அதுதான் இப்பொழுது ஆட்சி அமைத்துள்ளது" என்று கூறினார்.
அண்ணாவுக்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி! நீதிக் கட்சியின் சமூகநீதிக் கொள்கையில் அவருக்கி ருந்த பற்றுதலும், பிடிப்பும் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை.
திராவிடர் இயக்கம் தான் அவரின் மூச்சாக இருந்தது.
‘விசிட்டர்‘ ஆனந்த் என்பவர் கலைஞர் அவர்களைப் பேட்டி கண்டார்.
கேள்வி: சுமார் 60 வருடங்களாக தமிழ்நாட்டில் பல ரூபங்களில் இருக்கும் திராவிடர் இயக்கம் தமிழகத்திற்கு என்ன சாதித்து இருக்கிறது?
கலைஞர் பதில்: "நீங்களும் நானும் இப்படி ஒன்றாக உட்கார்ந்து பேசுகிறோமே, இதுதான். மக்கள் பிற்படுத்தப்பட்ட வர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் இந்த நாட்டிலே இருந்து வந்தது. வெள்ளைக்காரர்கள் காலத்திலேகூட மேல் ஜாதிக்காரர்களுக்குத் தான் வேலை வாய்ப்புகளும், கல்வி வாய்ப்புகளும் எல்லாம் கிடைத்தன.
இந்த நிலையிலிருந்து மாற, திராவிட சமுதாயத்திற்கு குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் முன்னேற்றுவதற்காக நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் தோன்றிற்று" (‘விசிட்டர்‘, 1.9.1979) என்றார் கலைஞர்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பல முரண்பாடுகள் என்றாலும், சமூக நீதிக்கு எதிராகப் பொருளாதார அளவுகோல் ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கடும் போராட்டத்தால், அது பின்வாங்கப்பட்டு பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 50 விழுக்காடாக உயர்ந்தது அவரின் ஆட்சிக் காலத்தில்தான்.
பார்ப்பனராக இருந்தாலும் ஜெயலலிதா ஆட்சியில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று திராவிடர் கழகத்தின் முயற்சியால் சட்டப் பாதுகாப்பு - 76ஆவது சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்ட வணையில் இடம் பெறச் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. அரசு அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. திராவிட இயக்கக் கொள்கையில் பிடிப்பு இல்லாத நிலையில் வரும் தேர்தலில் ஆட்சியை இழக்கும் நிலைதான்.
இவற்றையெல்லாம் அடுக்கடுக்காக எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்.
அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையத்தான் போகிறது. நூறாண்டுக்கு முன் 1920இல் தொடங்கப்பட்ட அந்தத் திராவிட இயக்க நீதிக்கட்சியின் சிறப்பான ஆட்சியின் தாக்கத்துடன் அது செயல்படும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
திராவிட இயக்கத்திற்கு தேர்தல் வெற்றி - தோல்விகள் மாறி மாறி வரலாம். ஆனாலும் வெற்றியாலோ, தோல்வியாலோ, நிர்ணயிக்கப்படும் இயக்கமல்ல திராவிடர் இயக்கம். ஒரு தேர்தலில் தி.மு.க. வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றதுண்டு. பீனிக்ஸ் பறவை போல வெற்றி சிறகடித்துப் பறக்கவில்லையா? சாதனைகளைக் குவிக்கவில்லையா?
"வெற்றி பெற்றால் அண்ணா வழி, வெற்றி பெற வில்லையானால் பெரியாரின் வழி" என்று மானமிகு கலைஞர் அவர்கள் சொல்வதுண்டு.
இந்த இரு நிலைகளும் திராவிட இயக்கக் கொள்கை வழி தானே, வெற்றி பெற்ற நிலையில் சமூக நீதி, பாலியல் நீதி, இந்தி-சமஸ்கிருத எதிர்ப்பு, பண்பாட்டுப் பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு ரீதியில் திட்டங்கள் என்ற முத்திரைகள் பதிக்கப் பட்டதா இல்லையா?
முதல் அமைச்சர் அண்ணா குறுகிய காலம் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அவரின் உடல் நிலை பாதிப்பு நம்மிடமிருந்து அவரைப் பிரித்தது. ஆனாலும் அந்தக் குறுகிய கால கட்டத்தில், திராவிட இயக்கக் கண்ணோட்டத்தில் அவர் கல்வெட்டாய்ப் பொறித்துச் சென்ற முத்தான மூன்று சாதனை களை சரித்திரத்தின் வாய்கள் பேசிக் கொண்டு இருக்கு மல்லவா!
(1) தாய்த் திருநாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.
(2) சுயமரியாதைத் திருமணம் செல்லுபடி சட்டம்.
(3) தமிழ் நாட்டில் இந்திக்கு இடம் இல்லை, தமிழும் - ஆங்கிலமும் மட்டும்தான் இங்கு.
இதுபற்றி அண்ணா சொன்னார். "திமுகவின் இந்த மூன்று சாதனைகள் மீது எங்களுக்குப் பின்னால் ஆட்சிக்கு வருவோர் யாராக இருந்தாலும் கை வைக்க முடியுமா? அது முடியாத வரைக்கும் இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம்" என்ற அர்த்தமிக்க வார்த்தைகளை உதிர்த்துள்ளாரே!
திராவிட இயக்கம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. அது காலத்தின் கட்டாய கடமையை நிறைவேற்ற வந்த தேவையின் அவசியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.
(வளரும்)
- காணொலியில் தமிழர் தலைவர்
டில்லி வரை திராவிட இயக்கத் தாக்கம்!
மறைந்த பாபு ஜெகஜீவன்ராம் 'நானும் ஒரு திராவிடனே!' என்று சொன்னதும், 'தந்தை பெரியார் கனவு நிறைவேறியது' என்று மத்திய அரசு துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில்
2 7 விழுக்காடு இடஒதுக்கீடு எனும் 'சமூகநீதிக் காவலர்' பிரதமர் வி.பி. சிங்கின் பிரகடனமும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்பின்போது "வாழ்க பெரியார், வெல்க திராவிடம்!" என்று எழுப்பிய முழக்கமும் - திராவிட இயக்கத்தின் தாக்கம் அல்லவா!