கருஞ்சட்டையும் தடை உத்தரவும்
பெரியார் ஈ.வெ. ரா. அறிக்கை
கருஞ்சட்டை பற்றி சர்க்காரின் தடை யுத்தரவு சம்பந்தமாகப் பெரியார் ஈ வெ. ராம்சாமி அடியிற் கண்ட அறிக்கையை விடுத்துள்ளார்.
‘நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள்ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டுமென்று வேண்டுகோள் விட்ட தானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவு நீக்கிக்கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்கு ஆகும். இதைக் கழக அங்கத் தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும் ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.
இந்தப்படியாக, கருஞ்சட்டை அணி பவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ, எந்த வித ரிஜிஸ்டரோ, சேனை போன்ற உடையோ, யூனிபாரமோ, அணிவகுப்போ, ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஓர் சேனைக்கோ, படைக்கோ, உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.
இருப்பினும் சென்னை அரசாங்கம் இதை ஒரு அமைப்பாகக் கருதிச் சட்ட விரோதமாக்கியிருக்கின்றது என்ற போதிலும், நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவது போல் இது விஷயத்தில் நம் கழக அங்கத்தினரும் திராவிடப் பொது மக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும், சமாதானமுமாய் நடந்துவர வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்குமானால் அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த உத்தரவினால் நமக்குள் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாகக் கருத வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.’
ஈ.வெ. ராமசாமி – சென்னை, 4-3-1948.
“திராவிட நாடு ” (அண்ணா) 7-3-1948 தலையங்கம்
தடை உத்தரவு
திராவிடப் பெருங்குடி மக்கள் பல காலமாகச் சமுதாயத் துறையில் மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் முறையில், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாரும் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் ரிெயார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன் பேரில் இப்போது சில காலமாகத் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பலர், தங்கள் குறைபாட்டைத் தெரிவிக்கும் முறையில் கருப்புச் சட்டை அணியும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதனை, இப்போது சர்க்கார் ‘சட்ட விரோத ஸ்தாபனம்’ என்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கருப்புச் சட்டைக்கென ஒரு தனி ஸ்தாபனமே கிடையாது. திராவிடர் கழகத் திட்டங்களிலும் கருப்புச் சட்டை அணிவதை ஒரு ஸ்தாபனமாகக் கொள்ள வேண்டுமென்ற விதியும் கிடையாது. திராவிடர்கள் தங்களுக்குள்ள குறைகளைத் தெரிவிக்கும் முறையில், கருப்புச் சட்டை அணிவதை ஒரு அடையாளமாகக் கொள்ள வேண்டுமென்பதே அதன் நோக்கமாகும்.
கருப்புச் சட்டை அணிபவர்களுக்கென ஒரு தனிப் பயிற்சி முகாமோ. படை அணி வகுப்போ, ஆயுதம் தாங்கும் முறையோ, பலாத்கார முறைகளைக் கையாள வேண்டு மென்ற திட்டமோ எதுவும் கிடையாது.
திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் கருப்புச் சட்டை போட்டுக்கொள்ள வேண்டுமென்று, பெரியார் அவர்கள் எப் போது சொன்னாரோ, அன்றே சர்க்காருக்கும் இது சம்பந்தமாக எல்லாம் தெரிந்தே இருக்கும். ஆனால், இவ்வளவு காலமும் சர்க்கார் அது சம்பந்தமான நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல், இப்போது திடீரென்று கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு ‘ஸ்தாபனம்’ இருப்பதாகவும், அது, சட்ட விரோதமானதென்றும் கருதும்படியான நிலைமை ஏற்படக் காரணம் என்ன என்பது தெரியவில்லை.
ஒரு சமுதாயம். தனக்குள்ள குறைகளைக் தெரிவிக்கக் கூடாதென்ற முறையில் ஒரு சர்க்கார் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாயின், அதனை ஜனநாயக அடிப்படையைக் கொண்ட சர்க்கார் என்று எப்படி கூற முடியும்? ஒரு சமுதாயம், தன்னுடைய குறைகளை எடுத்துக்காட்டி, அவைகளை நிவர்த்தி செய்து கொள்வது கூடத் தவறு என்பதைத் தானே சர்க்காரின் இந்த தடை உத்தரவு எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இல்லையேல், எந்தவிதமான பலாத்காரச் செயலை யும் அடிப்படையாகக் கொள்ளாத கருப்புச் சட்டையினர்மீது சர்க்கார் நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?
கருப்புச் சட்டை அணிவது என்பது ஒரு ஒழுங்கு முறை; அதாவது தாங்கள் திராவிடர்கள், தங்களுடைய குறைகள் போக்கப்படவேண்டும், அவை போக்கப் படும் வரையில் துக்க அறிகுறியாகக் கருப்புச் சட்டை அணிந்துகொள்ள வேண்டுமென் பதைத் தவிர, கருப்புச் சட்டை அணிவதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றா லும், இதனை சர்க்கார் – ‘ஒரு சட்ட விரோத மான ஸ்தாபனம்’ என்று கருதக்கூடிய அளவுக்குக் கருப்புச் சட்டை அணிவதைப் பற்றிச் சர்க்கார் தெரிந்திருக்கிறதென்றால். யாரோ சொன்னதைக் கேட்டுக்கொண்டு, இந்தக் காரியத்தைச் சர்க்கார் செய்திருக்கிற தென்று பொருள்படுமேயன்றி, உண்மை யாகவே சர்க்கார் கருப்புச் சட்டையைத் திராவிடர்கள் ஏன் அணிய முற்பட்டனர் என்பதனை அறியவோ, அல்லது அதன் அமைப்பு முறை எப்படி, என்னென்ன காரணங்களுக்காக அந்த முறை ஏற்பட்டதென்பதைத் தெரிந்து அதன்படி இந்தத் தடை உத்தரவை விடுத்துள்ளதென்று கூறவோ முடியாது.
பெரியார் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கருப்புச் சட்டை அணிவதன் காரணத்தை வெளிப்படை யாகக் கூறியுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்ட காரணத்தையே, சுருப்புச் சட்டையைத் திராவிடர்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்று சொன்ன காலத்திலும் பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.
ஒரு பெரும் பொறுப்பைத் தன் மீது போட்டுக் கொண்டு, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள ஒரு சர்க்கார் விஷய விளக்கம் இல்லாத முறையில் எதேச்சதிகார மனப்பான்மையோடு காரியங்களைச் செய்வது, பொது மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இழப்பதற்கு அடிகோலுவதாகவே முடியும்.
எனவே, சர்க்காரின் இந்தப் போக்கைக் கண்டு, திராவிடர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, அமைதி குறைவுக்கும் கிளர்ச்சிக்கும் இடமளிக்காமல், தங்களுடைய பெரு தன்மையைக் காட்டிக்கொள்ள வேண்டு மென்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.
பெரியார் வீடும், “குடி அரசு” ஆபீசும்
சோதனை யிடப்பட்டது
3-3-1948 இரவு ஈரோட்டில், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் அவர்கள் – வீட்டைப் போலீசார் சோதனையிட்டுச் சில புகைப் படங்களை எடுத்துச் சென்ற தோடு, “குடிஅரசு” ஆபீசையும் சோதனை போட்டுச் சில பைல்களையும் எடுத்துச் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் சோதனை
3-3-1948இல் பெரிய காஞ்சிபுரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் வி. கண்ணப்பர் அவர்களையும், தோழர் C.V.M.அண்ணாமலை அவர்களையும், உள்ளூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், சப்-இன்ஸ்பெக்டரும் சில கான்ஸ்டேபிள்களுடன் சந்தித்து, நகரிலுள்ள திராவிடர் கழகங்களைச் சோதனையிட்டு, கருப்புச் சட்டை சம்பந்த மான ரிக்கார்டுகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டுமென்று கேட்டார்கள். அவர்கள் ஆட்சேபனையில்லை என்று கூறவே, புத்தேரித் தெருவிலுள்ள திராவிடர் கழகத்தையும், பிள்ளையார்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், சின்ன காஞ்சிபுரம் திராவிடர் மறுமலர்ச்சி கழகத்தையும் சோதனையிட்டுக் கருப்புச் சட்டைகளையும், கழக ரசீதுப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
திராவிடர் ஆராய்ச்சிக்
கழகத்தில் சோதனை
சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள திராவிடர் ஆராய்ச்சிக் கழகமும் சோதனையிடப் பட்டு, கழக மினிட் புத்தகத்தைத் தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பா அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றனர்.
கருஞ்சட்டைக்குச் சர்க்கார் தடை உத்தரவு
பல இடங்களில் சோதனை
(7-8-1948 திராவிட நாடு)
2-3-1948இல் சென்னை சர்க்கார், இம் மாகாணத்திலுள்ள கருஞ்சட்டை ஸ்தாபனத்தையும், ராஷ்ட்ரிய சேவாதளத்தையும் தடை விதித்து, கிரிமினல் சட்ட திருத்தத் தின் 16ஆவது பிரிவின்கீழ் அறிக்கை விட்டுள்ளனர்.
நகரில் சோதனை
சென்னை சுங்குராமச் செட்டித் தெரு 6ஆம் எண்ணுள்ள கட்டிடத்தில் இருக்கும் “திராவிடன்” பத்திரிகாலயத்தைப் போலீசார் 2-3-1948 மாலை 4-30 மணிக்கு சோதனையிட்டு, சில கடிதங்களையும், “திராவிடன் ” பத்திரிகைப் பைலையும் எடுத்துச் சென்றனர்.
பார்க் டவுன், பொம்மு செட்டித் தெருவிலுள்ள தோழர் C.D.T.அரசு அவர் கள் வீட்டையும், வண்ணாரப்பேட்டை மாடசாமி நாடார் தெருவில் இருக்கும் தோழர் K.அண்ணாமலை அவர்கள் வீட்டையும், வட சென்னைத் திராவிடர் கழகத்தையும்,மயிலாப்பூர், பிராடீஸ் தெருவிலுள்ள தோழர் M.K.தங்கவேலர் அவர்களுடைய வீட்டையும். பெரிய மெட்டு ஏகாம்பர குமரகுரு தெருவிலுள்ள தோழர் K.ஆரியசங்காரன் அவர்கள் வீட்டை யும், சைதாப்பேட்டை, கூத்தாடும் பிள்ளை யார் கோயில் தெருவிலுள்ள திராவிட இளைஞர் கழகத்தையும் போலீசார் சோதனையிட்டு, சுருப்புச் சட்டைகளையும்,கழக மினிட் புத்தகங்களையும் எடுத் துச் சென்றனர்.
கோவில்பட்டியில்
2.-8- 1948இல் காலை 4 மணிக்கு D.S.P. அவர்களும், சர்க்கின் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டேபிள்களும் கோவில்பட்டியி லுள்ள திராவிடர் கழகர் செயலாளர் தோழர் S. அருணாசலம் வீட்டையும், தோழர் வள்ளமுத்து பால்ராஜ் வீட்டையும் சோதனை செய்து, திராவிட கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
மதுரையில்
3-3-1948இல் மதுரையிலுள்ள திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளைச் சோதனை செய்ததோடு, தோழர்கள் செந்தியப்பன், எஸ் முத்து, எஸ். பழனிவேலு, கே.எஸ். இராசமான், எம். எஸ். இராமய்யா, ஆ. சங்காய்யா. தங்கராஜ். ல.வ.கிருஷ்ணன் ஆகியோரைப் போலீஸ் அழைத்துச் சென்று, கருப்புச் சட்டை சம்பந்தமாக விசாரித்த பின்னர் விட்டு விட்டனர் என்று தெரிகிறது.
திருச்சியில்
2-3-1948 இரவு. திருச்சியிலுள்ள ஜில்லாத் திராவிடர் கழகக் காரியதரிசி தோழர் எஸ். பிரான்ஸிஸ் வீட்டை ரிசர்வ் போலீசார் சோதனையிட்டு. கருப்புச் சட்டைகளும், அங்கத்தினர்கள் சேர்க்கும் பாரங்களையும் எடுத்துச் சென்றனர்.
பொன்மலையில்
2-3-1948இல் இரவு 12-மணிக்கு பொன் மலைத் திராவிடர் வாலிப கழக அங்கத்தினர் தோழர் கைலாசம் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர்.
சேலத்தில்
3-3-1948இல் சேலம் D. S. P. அவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டையிலுள்ள சுய மரியாதைச் சங்கத்திற்கு வந்து, கருப்புச் சட்டை சம்பந்தமான ரிக்கார்டுகள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை யிட்டதில், அது சம்பந்தமாக ஒன்றுமே இல்லையென்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டு போய் விட்டனர்.
அரிசிப்பாளையத்தில்
3-3-1948இல் சேலம் அரிசிப்பாளையத்திலுள்ள திராவிடர் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், அங்கு எந்தவிதமான ரிக்கார்டுகளும் கிடைக்கவில்லையென்று ரிப்போர்ட் எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
விருதுநகரில்
3-3-1948இல் விருதுநகரிலுள்ள தோழர்கள் ஏ. வி. பி. ஆசைத்தம்பி. என். ராமசாமி. வி. ஏ. எம். வெள்ளையப்பன், பி. இரத்ன சாமி ஆகியோர்களின் வீடுகளைச் சோதனையிட்டதில், தோழர்கள் ஆசைத் தம்பி. இராமசாமி ஆகியோர் வீடுகளி லிருந்து மட்டும் சில கடிதங்களைக் கைப் பற்றிச் சென்றனர்.
கடலூரில்
3-3-1948இல் கடலூர் ஓ.டி. யிலுள்ள பகுத்தறிவுக் கழகத்தைச் சோதனையிட்ட போலீசார், கழகத் தலைவர் தோழர் எம்.கே. வேலு அவர்கள் பெயரையும், செயலாளர் தோழர் பி. ஏ. இளங்கோ அவர் கள் பெயரையும் குறித்துக்கொண்டு சென்றனர் .
வேலூரில்
4-3-1948இல் வேலூரிலுள்ள தோழர்
வி.திருநாவுக்கரசு அவர்கள் வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, சில கருப்புச் சட்டைகளை எடுத்துச் சென்றதோடு, தோழர் சி.பி. சின்னராசு அவர்கள் வீட் டையும் சோதனையிட்டு, கருப்புச்சட்டை யையும், “தீப்பொறி” பத்திரிகையையும் எடுத்துச் சென்றனர்.
செங்கற்பட்டில்
4-3-1948 செங்கற்பட்டிலுள்ள தோழர் எம்.சின்னையாஅவர்கள் வீட்டை போலீசார் சோதனையிட்டு, அங்கு எதுவும் கிடைக்காமல் போகவே, பிறகு தமிழர் உணவு விடுதியிலுள்ள ஒரு அறையைச் சோதனையிட்டதில், ஒரு கருப்புச் சட்டையையும் சில புத்தகங்களையும்’ எடுத்துச் சென்றனர்.
சோழவந்தானில்
4-3-1948இல் சோழவந்தானிலுள்ள தோழர் T. ஆவுடையப்பன் அவர்கள் வீட்டில் போலீசார் சோதனையிட்டதில் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆலந்தூரில்
4-3-1948இல் ஆலந்தூரிலுள்ள திரா விடர் கழகச் செயலாளர் தோழர் எம். கண்ணப்பன் அவர்கள் வீட்டைச் சோதனையிட்டதில், போலீசார், கருப்புச் சட்டைகளையும் கழகக் கொடிகளையும் சந்தாப் புத்தகங்களையும் எடுத்துச் சென்றனர்.
துறையூரில்
3-3-1948இல் துறையூரில் தோழர்கள் தூ.வி. நாராயணன் அவர்கள் வீட்டையும், டி. எம். பாலசுந்தரம் வீட்டையும், கு.கிருஷ்ணசாமி வீட்டையும், டி.ஆர். வீரண்ணன் வீட்டையும் சோதனையிட் டனர்.
திருப்பூரில்
3-3-1948இல் திருப்பூர்த் திராவிடர் கழகத்தைப் போலீசார் சோதனையிட்டு, அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று எழுதிக்கொண்டு போய் விட்டனர்.
திண்டிவனத்தில்
4-3-1948 திண்டிவனத்திலுள்ள திராவிடர் கழகத்தையும், தோழர்கள் அப் பாண்டகாதன், பழனி ஆகியவர்கள் வீடுகளையும், சோதனையிட்டு கழக சம்பந்தமான புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.
வாணியம்பாடியில்
போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனது பரிவாரத்துடன் வாணியம்பாடி ‘திராவிடர்கழகம் கட்டிடத்தில் சோதனை செய்தார். அவ்விடமிருந்து யாதொன்றும் பறிமுதல் செய்யப்பட வில்லை. அதன் பிறகு மாலை 5 மணிக்கு தோழர் சி.கோவிந்தராஜன் வீட்டில் சோதனை போடப்பட்டதில் ஒன்றும் வில்லை. கிடைக்க
விழுப்புரத்தில்
விழுப்புரம் டாக்டர் தியாகராசன் வீடு – போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மூவர், போலீஸ் கான்ஸ்டேபிள் சிலருடன் சோதனை இடப்பட்டது. கழக சம்பந்தமான ரசீதுகள், சில கடிதங்கள், மாநாட்டு சம்பந்தமான குறிப்புகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். 1-15 மணி நேரம் சோதனையிட்டார்கள். நடராசன் வீடு சோதனை இடப்பட்டது; ஒன்றும் கிடைக்கவில்லை.
ப.நடராசன் வீடும் சோதனையிடப்பட்டது.
இராசிபுரத்தில்
3-3-1948 இரவு சுமார் 7 மணிக்கு இராசிபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், ‘பெரியார் மாளிகை” என்ற வீட்டுக்கு வந்து இயக்க கமிட்டி உறுப்பினர்கள் யார் யார் என்பதை விசாரித்துச் சென்றார்.
சேலம் குகையில்
சேலம் – குகை திராவிடர் கழகத்தை 3-3-1948இல் சேலம் நகர போலீஸ் அதிகாரி கள் சோதனையிட்டனர். இயக்க புத்தகங் களும் பத்திரிகைகளும் மட்டும் இருந்தன. ஒன்றும் எடுத்துக்கொண்டு போகப்பட வில்லை.
தர்மபுரியில்
தருமபுரி நகர திராவிடர் கழக தலைவர் திரு.
பி.பொன்னுசாமி வீட்டையும், அச்ச கத்தையும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
திராவிடர் கழக மினிட் புத்தகத்தையும் சில கழக மீட்டிங் விளம்பரத் துண்டு களையும் எடுத்துச் சென்றனர்.
சிதம்பரத்தில்
4-3-1948 காலை 8-மணிக்கு சிதம்பரம் திராவிடர் கழகத்தை சோதனை செய்வ தாய் போலீசார் ‘டவுன் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எம்.கே.சுந்தரம் வீட்டையும், பக்கத்தில் 4 மைலில் உள்ள சாலியந் தோப்பு கிராமத்தில் சிதம்பரம் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. கிருஷ்ணசாமி வீட்டையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் போதிய சகாக்களுடன் வந்து சோதனைபோட்டு, விசாரித்துச் சென்றார்கள். யாதொரு ஆட்சேபகரமான பொருளும் கிடைக்கவில்லை.