சனி, 31 டிசம்பர், 2016

நீதிக்கட்சியின் நூற்றாண்டுச் சிந்தனை ‘இந்தியன் எக்ஸ்பிரசில்’ சிறப்புக் கட்டுரை

"தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில்  22.11.2016 அன்று வழக்குரைஞரும், திமுகவின் செய்தித் தொடர்பாளரு மான மனுராஜ் சண்முகசுந்தரம் ‘சீர்திருத்தத்தின் நூற்றாண்டு’ என்று தலைப்பிட்டு "தமிழ்நாட்டின் முன் னேற்றங்களில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" என்று கட்டுரை வடித் துள்ளார். அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு, தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழ் நாட்டின் முன்னேற்றம், தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள், தமிழ்நாட்டில் பார்ப்பனியம், ஜாதியம், மெட்ராஸ் பிரசிடென்சி எனும் சென்னை மாகாணம், தமிழ்நாட்டின் ஜாதியம் உள்ளிட்ட இவைபோன்றவைகளில்  குறிப்பிடத்தக்க அளவில் திராவிடர் இயக்கம் பங்களிப்பை ஆற்றியுள்ளது.

முதல் கூட்டம்

20.11.1916 அன்று சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் சர் பிட்டி.தியாகராயர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

சென்னை மாகாணத்திலிருந்து முன்னணியில் இருந்த பார்ப்பனர் அல்லாத வணிகர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், நில உடை மையாளர்கள் மற்றும் அரசியல்வாதி கள் ஒன்றிணைந்து அக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

அந்தக் கூட்டத்தின் மூலமாகவே திராவிடர் இயக்கம் பிறந்ததாக வரலாற்றாசிரியர்களில்  பெரும்பான் மையோர் குறிப்பிடுகின்றனர். தமிழ் நாட்டின் அரசியலில் நூறாண்டு களுக்கு உரிய செயல்திட்டத்தை அமைத்துக்கொடுத்த கூட்டமாக திகழ்ந்ததுடன், விளிம்புநிலையில் உள்ள மக்களை நாடுமுழுவதுமிருந்து ஒன்றிணையச் செய்தது.

பிரிட்டிஷார் ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்கள்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்களுக்கு உரிய விகிதாச்சாரத்தைவிட அதிக அளவில் இடம்பெற்றிருந்தார்கள். அதன்மூல மாக கீழ்ஜாதியினர் என்று ஒதுக்கும் முறைக்கு வழிவகுக்கப்பட்டது.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம்

பிற்படுத்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி 1916ஆம் ஆண்டில் அரசியல் அதி காரங்களைப் பெற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதேநாளில், பின்னாளில் நீதிக்கட்சி என அறியப் பட்ட சவுத் இந்தியன் லிபரல் பெட ரேசன் (தென்னிந்திய நல உரிமை சங்கம்) தோற்றுவிக்கப்பட்டது.

1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணத் தேர்தலில் புதிய இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுததப்பட் டது. அப்போது நீதிக்கட்சி பெரும் பான்மை பெற்று வெற்றி பெற்றது.

நீதிக்கட்சி ஆட்சி  சாதனைகள்

நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அரசு வேலைவாய்ப்புகளில் நாட்டி லேயே முதல்முறையாக  பல்வேறு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு அளிக் கும் ஆணையாக  1921ஆம் ஆண்டில் வகுப்புரிமைக்கான அரசாணை எண் 613 நிறைவேற்றப்பட்டது.

அரசாணை நிறைவேற்றப்பட்ட தோடு, பெண்கள் சட்டமன்ற வேட் பாளராக நிற்கும் உரிமையை வலி யுறுத்தி, நீதிக்கட்சி அரசால் இந்திய அரசு சட்டம் 1919 இல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்ட மன்ற உறுப்பினராக டாக்டர் முத்து லட்சுமிரெட்டி தேர்ந்தெடுக்கப்பட் டார்.

மதத்தின் பெயரால் உள்ள ஜாதிய வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும் வகை யில், மற்றுமொரு சட்டம் இயற்றப் பட்டு இந்து கோயில்கள் அரசின் கட் டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

நீதிக்கட்சி அரசின் முதல் காலக் கட்டத்தில் இதுபோன்று தொலை நோக்குடன் முன்னேற்றங்கள்,  அடக் கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் பெறுவதற்கான வழிவகை காணப் பட்டது.

நீதிக்கட்சி ஆட்சி நடைபெற்ற நேரத்தில் அதே கருத்துகளுக்கு இணை யாக, ஆனால், தனியே பெரியார் ஈ.வெ.இராமசாமி அடக்குமுறைகளைக் கையாளும் சக்திகளுக்கு எதிராக போராடிவந்தார்.

பெரியாரின் வைக்கம் போராட்டம்
சுயமரியாதை இயக்கம் தோற்றம்

1925ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சிவன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தெருவில்  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்கு உரிமை கோரி போராட்டம் நடை பெற்றது. அப்போராட்டத்தை நடத்திய தந்தை பெரியார் வெற்றி பெற்றார். நாடுமுழுவதும் தந்தை பெரியாரின் வெற்றி குறித்து பேசப்பட்டது.

மேலோட்டமாக இல்லாமல் ஆணிவேரை நோக்குகின்ற சிந்தனை, செயலுடன் தந்தைபெரியார் தொடங் கிய சுயமரியாதை இயக்கம் நிறுவப் பெற்றது.

ஜாதிமறுப்பு (கலப்பு மணம்) மணத்தை பெரியார் "ஜாதியற்ற திருமணம்" என்று குறிப்பிட்டு அதற்காக பாடுபட்டார்.   பெண்கள் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் விதவைத் திருமணம் ஆகிய வற்றுக்காக பாடுபட்டார். அவருடைய கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பும், தீவிர ஆதரவும் இரு வகைகளிலும் இருந்தன.

1937ஆம் ஆண்டில் இந்தியை சென்னை மாகாண அரசு திணித்தது. அப்போது நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்த்தன.

ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த பிரபலமான தலைவரான தந்தை பெரியார் 1938ஆம் ஆண்டு டிசம்பரில் நீதிக்கட்சியின் தலைவ ரானார்.

திராவிடர் கழகம் பெயர் மாற்றம் 

21.8.1944 அன்று நீதிக்கட்சியின் 16ஆவது மாநாடு சேலத்தில் நடை பெற்றது. அம்மாநாட்டில் நீதிக்கட் சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தென்னிந்திய மொழிகளைப் பேசக் கூடியவர்களை உள்ளடக்கி, இன அடையாளத்துடன் திராவிடர் கழகம் என்று அமைப்பின் பெயர் மாற்றப் பட்டது. மேலும், திராவிட நாடு பிரிவினைக்கான கோரிக்கையும் வலுப்பெற்றது.

சமூக மாற்றங்களுக்கான அளப்பரிய பணியை திராவிடர் கழகம் ஆற்றிவந்த நேரத்தில், திராவிடர் கழகத்திலிருந்து தனியே ஒரு குழு சி.என்.அண்ணா துரை தலைமையில் பிரிந்தது.

திமுக தோற்றம்

விடுதலை பெற்ற இந்திய நாட்டின் அரசியலில் நேரடியாக ஈடுபட்டது. அரசியலில் ஈடுபட்டு, ஆட்சி நிர் வாகத்தைக் கைப்பற்றி சமூக சீர்திருத் தங்களை செய்யும் வகையில்  1949 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1967ஆம் ஆண்டில் திமுக அரசு அமைத்ததிலிருந்து இன்றுவரையிலும் தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்த திட்டங்கள் மாநில அரசின் நிர்வாகத் தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

திமுக அரசின் சாதனைகள்

1967ஆம் ஆண்டில் திமுக அரசால்  ஜாதி ஒழிப்பு மற்றும் மத சடங்கு களின்றி நடைபெற்றுவந்த சுயமரி யாதை திருமணங்களுக்கு சட்டப்படி யான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாணம் என்பது "தமிழ்நாடு" என மாற்றம் பெற்றது.

1989ஆம் ஆண்டில் பெண்களுக்கு சம உரிமை  (சொத்துரிமை) வழங்க சட்டம் இயற்றப்பட்டது.

1998ஆம் ஆண்டில் பல்வேறு ஜாதி யினரையும் இணைத்த குடியிருப்பு களாக "சமத்துவபுரங்கள்" அமைக்கப் பட்டன.

2006ஆம் ஆண்டில் கோயில்களில் அர்ச்சகர்கள் ஆவதில் உள்ள ஜாதியத் தடைகளை அகற்றும் வண்ணம் சட்டம் இயற்றப்பட்டது.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், மகப்பேறு உதவித்திட்டங்கள், பெண் கள் சுய உதவிக்குழுக்கள் என பல்வேறு திட்டங்கள் திராவிடர் இயக்கக் கொள்கைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படுத்தப்பட்டன.

இன்று திராவிடர் இயக்கம் அதன் நூற்றாண்டில் உள்ளது. திராவிடர் இயக்கத்துக்கு அனைவரும் நன்றி செலுத்திட கடமைப்பட்டவர்கள் ஆவோம்.

நாட்டில் உள்ள பிற மாநிலங்க ளிடையே ஒப்பிடும்போது,  தமிழ்நாடு மனித வளர்ச்சிக்கான அடையாளத் துடன் திகழ்ந்து வருகிறது.

நூறாண்டு சாதனைகளின் சாட்சி

திராவிடர் இயக்க சாதனைகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் மாபெரும் மாற்றங்களுக்கான சாட்சியங்களாக இருக்கும்.

ஜாதி மற்றும் கவுரவம் என்கிற பெயரால் நடைபெறுகின்ற குற்றங்கள், மத வெறி மற்றும் சமூக வேற்றுமைகள் அண்மைக்காலமாக தலைதூக்கி வருகின்றன.

திராவிடர் இயக்கத்தின் எதிர்காலம் செழிப்பாக இருந்திட, இன்றைய  தலைவர்கள் சமுதாயத்தின் பொது நன்மை கருதி கொள்கைகளை முன்னிறுத்திட வேண்டும்.

இன்னமும் திராவிடர் இயக்கம் அதன் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு காரணம், நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினர் (பார்ப்பனர் அல்லாதார்)  ஒன்றி ணைந்து சமூக மாற்றங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களுடன் வரலாறு படைத்துள்ளார்கள் என்பதுதான்.
-விடுதலை ஞா.ம.,26.11.16

வெள்ளி, 30 டிசம்பர், 2016

முத்துலட்சுமி ரெட்டி மசோதா

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் பொட்டறுப்பு மசோதா விஷயமாக அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டுமென்று சென்னை சர்க்கார் கேட்டுக் கொண்டதற் கிணங்க திரு. ஈ. வெ. ராமசாமியார் சென்னை சட்ட சபை காரியதரிசிக்கு அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது)

1. இந்துப் பெண்களை இந்து ஆலயங்களில் பொட்டுக் கட்டுவதினால் அவர்கள் விபசாரம் செய்யும்படி தூண்டப்படுகிறார்கள்.

2. பண ஆசையினால் தேவதாசிகள் விபசாரம் செய்வதினால் அவர்களது வாழ்க்கை இயற்கைக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் இருக்கிறது. இந்த விபசாரிகளால் மேக வியாதிகள் பரப்பப்படுவதினால் அந்நோய் அந்நியர்களுக்கு  பரவாமல் தடுக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.

3. டாக்டர். முத்துலட்சுமி மசோதாவின் நோக்கம் விபசாரத்தை அடியோடு ஒழிப்பதல்லவானாலும் விபசாரம் விருத்தியாவதற்குள்ள ஒரு முக்கியமான வழியை அடைப்பதுதான் அதன் நோக்கம். விபசாரத்தை அடியோடு ஒழிக்கத்தக்கவாறு இந்திய சமூகம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.

வெளிநாட்டு நிலைமையும் இவ்வாறே இருந்து வருகிறது. பணத்துக்காகப் பெண்கள் விபசாரம் செய்வதைத் தடுக்க சட்டம் இயற்றும் காலம் இன்னும் வரவில்லை. ஆனால், சமயத்தின்பேரால் மதக் கடமை யாகப் பெண்கள் விபசாரம்  செய்வதைத் தடுக்க நாம் முன்னாடியே சட்டம் இயற்றி இருக்கவேண்டும்.

தற்காலச் சட்டப்படி 18 வயதிற்குப் பிறகு பொட்டுக் கட்டப்படும் பெண்களுக்கும்கூட இளவயது முதலே பெற்றோராலும், வளர்ப்போராலும் விபசாரம் செய்யத் தூண்டப்பட்டும், தயார் செய்யப்பட்டும் வருகிறார்கள். பொட்டுக்கட்டி விபசாரம் செய்வது மோட்ச சாதனமான தென்றும், பணம் சம்பாதிக்க நல்லவழி என்றும், சிறுவயது முதலே அப்பெண்களுக்குப் போதிக்கப்பட்டு வருகிறது.

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தாமல் சட்டம் ஏற்படும்வரை பெற்றோரும், வளர்ப்போரும் அவர்களை விபசாரம் செய்யப் பழக்கிப் பணம் சம்பாதிக்கத்தான் செய்வார்கள்.

4. மைனர் பெண்களுக்கு பொட்டுக்கட்டக் கூடாதென்று ஏற்கெனவே சட்டம் ஏற்படுத்தி, மதவிதிகள் அப்போதே மீறப்பட்டு விட்டது. எனவே இம்மசோதா விஷயத்தில் மதத்துக்கு ஆபத்து என்னும் வாதத்தைக் கிளப்ப இடமே இல்லை. பருவமடைந்த பெண்களுக்குப் பொட்டுக்கட்ட சாஸ்திரத்தில் அனுமதி இல்லை.

ஆதலால், சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக்கட்டைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. டாக்டர். முத்துலட்சுமி மசோதா விரும்பும் சீர்திருத்தம் இந்து சமுக சுயமரியாதையை உத்தேசித்து எவ்வளவோ காலத்துக்கு முன்னாடியே அமலில் வந்திருக்க வேண்டும். எனவே அம்மசோதாவை நான் பூர்ணமாக ஆதரிக்கிறேன்.

- குடிஅரசு - கடிதம் -30.03.1930
-விடுதலை,5.7.14

வியாழன், 22 டிசம்பர், 2016

நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

--

சென்னை, நவ. 21- நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில்  நேற்று (20.11.2016) மாலை சென்னை பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி தலைமையில் செயலாளர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்றார்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொருளாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு

தென்னிந்திய சைவ சித்தாந்த பதிப்பக உரிமையாளர் முத்துக்குமாரசாமிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் அரு.இலட் சுமணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கவிஞர் நந்தலாலா அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்தார்.
சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வ.இரா.சே.சம்பத் அவர் களுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

5 நூல்கள் வெளியீடு

விழாவையொட்டி புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை கோ.குமாரசாமி எழுதி தென் னிந்திய சைவ சித்தாந்த பதிப்பகத்தாரால் முதலில் பதிப்பிக் கப்பட்டு, தற்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முயற்சியால் திராவிடர் கழக வெளியீடாக Ôதிராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர்Õ (வாழ்க்கை வரலாறு) நூல்  நூலை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் அரு.இலட்சு மணன் அவர்கள் வெளியிட பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

சரித்திர நாயகர்கள் நூல் வரிசையில் பானகல் அரசர் குறித்த நூலை உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் அரு.இலட்சுமணன் அவர்கள் வெளியிட, பொறியாளர் தகுதி திவாகர் பெற்றுக்கொண்டார்.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் 24 ஆவது தொகுப்பாக பொருளாதாரம் என்கிற தலைப்பிலான நூல், புதிய கல்விக் கொள்கையா? நவீன குலக்கல்வித்திட்டமா? என்கிற தலைப்பிலான நூல், தந்தை பெரியார் குறித்த ஆங்கில நூல் ‘PERIYAR not a figure from the PAST, but BEACON of the FUTURE’ 
(காந்தியின் பேரன் கோபால்கிருஷ்ண காந்தி) ஆகிய நூல்களை சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வ.இரா.சே. சம்பத் வெளியிட பேராசிரியர் ப.அரங்கசாமி பெற்றுக்கொண் டார்.

நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப் பட்ட 5 நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.385. விழாவையொட்டி ரூ.300க்கு வழங்கப்பட்டது.

5 நூல்களையும் உரிய தொகை கொடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கழகத் தோழர்கள், பார்வை யாளர்கள் ஏராளமானவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மயிலாடுதுறை கோ.குமாரசாமி எழுதிய திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் புத்தகத்தை அறிமுகப் படுத்தி கவிஞர் நந்தலாலா உரையாற்றினார்.
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் அரு.இலட்சும ணன் நீதிக்கட்சி தோன்றியதால்... எனும் பொருளில்  சிறப்பு ரையாற்றினார்.

சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வ.இரா.சே.சம்பத் நீதிக் கட்சி தோன்றியிராவிட்டால்... எனும் பொருளில் சிறப்புரை யாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவின் நிறைவு சிறப்புரையாற்றினார்.

விழா முடிவில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய துணைத் தலைவர் முனைவர் த.ஜானகி நன்றி கூறினார்.

நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொறுப்பாளர்கள் விழா ஏற்பாட்டினை வெகு விமரிசையாக செய்திருந்தார்கள்.

நூல்களைப் பெற்றுக்கொண்டவர்கள்

சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, புதுவை  பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் மு.ந.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, பேராசிரி யர் ப.அரங்கசாமி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், வெங்கடேசன், விழிகள் வேணுகோபால், தங்க.தனலட்சுமி, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, வடசென்னை மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மருத்துவர் க.வீரமுத்து, பெரியார் பிஞ்சு சேகுவேரா அறிவில் பொய்யாமொழி உள்பட ஏராளமான வர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து நூல் களைப் பெற்றுக் கொண்டார்கள்
கலந்துகொண்டவர்கள்

, திராவிட இயக்க எழுத்தாளர் ஆய்வாளர் க.திருநாவுக் கரசு, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் திருக் குறள் பாசுகரன், மேனாள் மேயர் சா.கணேசன், புலவர் வெற்றியழகன்,  கவிஞர் கண்மதியன், வெள்ளையாம்பட்டு சுந்தரம், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாநில மாணவரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை,  மணவழகர் மன்றம் கன்னியப்பன், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் கி.சத்தியநாராயணன், பொருளாளர் கு.மனோகரன், வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள்  ஆர்.டி.வீரபத்திரன், மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், அரக்கோணம் நகரத் தலைவர் சோமசுந்தரம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, சி.வெற்றிசெல்வி, வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி, ம.வீ.அருள்மொழி, வட சென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, அரும்பாக்கம் சா. தாமோதரன், தமிழ்செல்வன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தி.செ.கோபால், பா.கோபாலகிருஷ்ணன், தாம்பரம் நகர செய லாளர் சு.மோகன்ராஜ், அனகை ஆறுமுகம், விஜய்ஆனந்த், தமிழினியன், வெற்றிவீரன், கு.ஜீவா, பெரியார்மாணாக்கன், பூவை செல்வி, உடுமலை வடிவேல், அம்பத்தூர் சிவக்குமார், ஏழுமலை, முத்துக் கிருஷ்ணன், இராமலிங்கம், செஞ்சி ந.கதிரவன், கருத்தோவியன், பெரு.இளங்கோ, தொழிலாள ரணி நாகரத்தினம், கூடுவாஞ்சேரி ராசு, பழனிபாலு, வளர் தொழில் ஜெயகிருட்டிணன், ராமாவரம் ஜனார்த்தனன், மனோகரன், பழைய வண்ணை விக்னேசுவரன், ஊரப்பாக்கம் பொய்யாமொழி, வினோத் குமார், அர்ச்சுனன்,  பெரியார் பிஞ்சுகள் வீ.கணியன் பூங்குன் றன், இன்சொல்,  அருந்தமிழ், பெரியார்செல்வன்  உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

நாங்கள் நீதிபதியானது திராவிட இயக்கத்தால் தான்!"

மின்சாரம்

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நீதிக்கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா வரலாற்றுச் சிறப்புடன் - அது தோற்றுவிக்கப்பட்ட அதே தேதியில் (20.11.2016) நடைபெற்றது.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் (20.11.2016) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பெருமைப்படுத்திய மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பாளர் டாக்டர் ஏ.ஆர். இலட்சுமணன் அவர்கள் "நாங்கள் நீதிபதியானது திராவிட இயக்கத்தால் தான்!"  என்று பெருமிதமாக சொன்னார்.

ஏதோ அழைத்தார்கள் பங்கு கொண்டோம் என்பதற்காக பேசப்பட்ட கருத்தோ - தகவலோ அல்ல. நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் சென்னை மாநிலத்தின் நிலை என்ன?

அய்.சி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கு இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஏக காலத்தில் தேர்வுகள் நடந்த வேண்டுமென்று கிளர்ச்சி செய்தபோது 1916ஆம் ஆண்டில் சென்னை நிருவாக சபை உறுப்பினராக இருந்த சர் அலெக்சாண்டர் கார்ட்யூ பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முன் சாட்சியம் அளித்தபோது, அவ்வாறு ஏகக் காலத்தில் நடத்தப்பட்டதால்,  ஒரு சிறு சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்களே அப்பரீட்சையில் அதிகமாக வெற்றி பெறுவார்கள். சிவில் சர்வீஸ் பிராமணமயமாகி விடும்.

மற்றும் மாகாண சிவில் சர்வீசுக்கு 1892 - 1904 வரை நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பார்ப்பனர்கள் என்று கூறினார். அதே காலத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 21 பேர்களில் 17 பேர் பிராமணர்கள். 140 துணை ஆட்சியாளர்களில்(Deputy  Collectors) 77 பேர் பிராமணர்கள், 30 பேர் பிராமணரல்லாதார், பாக்கிப் பேர் முகமதியர்கள், இந்தியக் கிறித்தவர், அய்ரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்.

நீதி இலாகாவிலும் நிலைமை இவ்வாறாகவே இருந்தது. 1913இல் பணியில் இருந்த 128 முன்சீப்புகளில் 93 பேர் பிராமணர், 25 பேர் பிராமணரல்லாதார், பாக்கிப் பேர் முகம்மதியர், இந்தியக் கிறித்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் என்று சென்னை நிருவாக சபை உறுப்பினர் அலெக்சாண்டர் கார்ட்யூ அதிகாரப் பூர்வமாக எடுத்து வைத்த புள்ளி விவரங்களைக் கருத்தூன்றிக் கவனித்தால், மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி டாக்டர் ஏ.ஆர்.எல். அவர்கள் தெரிவித்த கருத்தில் தெறித்த உண்மையின் கனபரிமாணம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிடுமே! (நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் நீதிக் கட்சியின் தாக்கத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியானவர் பங்கு கொண்டதன் அருமைப் புரிகிறது)

உயர்நீதிமன்றத்தில் முதல் இந்தியர் நீதிபதி யார் என்றால் சர்.டி. முத்துசாமி அய்யர்தானே.

முதல் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் வக்கீல் பார்ப்பனர் அடுத்த ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாவது தானே சரித்திரம் சொல்லும் சங்கதி.

அப்படிப்பட்ட சூழலில் 1912ஆம் ஆண்டில் டாக்டர் சி. நடேசனார் அவர்களால் விதையூன்றப்பட்டு 1916 நவம்பர் 20இல் பிரசவம் ஆன இயக்கம்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்று அழைக்கப்பட்ட நீதிக்கட்சி.

டாக்டர் சி. நடேசனார், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் தாரவாத் மாதவன் நாயர் (டாக்டர் டி.எம். நாயர்) ஆகிய மூன்று மாமணிகள் சேர்ந்து உருவாக்கிய இந்த  நீதிக்கட்சிக்குத் திராவிடர் இனம் வாழும் காலம் தொட்டு நன்றிக் கண்ணீர் உகுத்து மலர் மாலை சூட்டி மகிழ வேண்டும். திராவிடர் இயக்கமான அந்த நீதிக்கட்சியின் நீட்சிதான் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் - அரசியல் வடிவமான தி.மு.க. நேற்றைய விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.எல். அவர்கள் தொடக்கத்திலேயே இதுபற்றிக் குறிப்பிட்டார்கள்.

நீதிக்கட்சியின் குறிக்கோளை நீதிபதி அவர்கள் மிக நேர்த்தியாகக் குறிப்பிட்டார்.Justice for all, and injustice to none " "எல்லோருக்குமான நீதி - எவருக்கும் இழைக்கப்படாத அநீதி!" - நீதிபதி அல்லவா - செறிவான கருத்தினை சரியான பொறுக்கி எடுக்கப்பட்ட சொற்களாம் தேன் குப்பியில் குழைத்துக் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

அக்கட்சி நடத்திய ஏடுகள் எல்லாம் பட்டியலிட்ட நீதிபதி அவர்கள், அக்கட்சியின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் அதன் விளைவுகளையும் எடுத்துக் கூறினார். பஞ்சமர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்கும் உரிமை, பொதுக் கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை, பேருந்துகளில் பயணம் செய்யும் உரிமை, கல்விக் கூடங்களுக்குச் சென்று கல்வி கற்கும் உரிமைகள் எல்லாம் நீதிக்கட்சி ஆட்சியால் கிடைக்கப் பெற்ற அரும் பலன்கள் என்று பட்டியலிட்டுக் காட்டினார்.

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த நிபந்தனையை நீக்கியவர் அன்றைய சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் பானகல் அரசர் என்பதையும் நினைவூட்டினார். இந்து அற நிலைய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் பானகல் (ராமராயநிங்கர்) ஆட்சியில்தானே!

அன்றைக்கு நீதிக்கட்சி இன்றைக்குத் திராவிடர் கழகம் இவற்றின் செயல்பாட்டால் தான் நாம் நாமாக இருக்கிறோம். ஒரு கால கட்டம் இருந்தது, குறிப்பிட்ட பிரிவினர்தான் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினர்.

'இந்த இயக்கம் இல்லை என்றால் நாங்கள் எல்லாம் நீதிபதிகளாக ஆகி இருக்க முடியுமா?' என்று உணர்வு பூர்வமாக மாண்பமை நீதிபதி அவர்கள் குறிப்பிட்டபோது அரங்கமே அதிரும் வகையில் கரஒலி எழுந்தது. (நன்றி உள் ளவன் தான் மனிதன்; நன்றி  இல்லாதவன் புழுப் பூச்சிக்குச் சமம் என்றவர் தந்தை பெரியார் 'குடிஅரசு 23.10.1943)

தான் இந்த நிலைக்கு உயர்ந்தது குறித்தும் ஒரு தன்னிலை விளக்கத்தை அளித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வீராசாமி அவர்களின் தந்தையார் ஒரு நாட்டு வைத்தியர். தேவக் கோட்டையில் நாங்கள் இருந்த தெருவில்தான் வசித்து வந்தார். அவர் மகனான வீராசாமி அவர்கள் நான் படித்த பள்ளியில் தான் படித்தார். அப்பள்ளியின் பழைய மாணவன் சங்க செயலாளர் என்ற முறையில் நீதிபதி வீராசாமி அவர்களை நான் அழைத்திருந்தேன். அப்பொழுது எங்கள் வீட்டில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

அப்பொழுது என் தந்தையாரிடம் நீதிபதி கேட்டார்! "உங்கள் மகன் இலட்சுமணன் பி.ஏ., பி.எல். என்று போடப் பட்டுள்ளதே அவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?" என்று கேட்டார். அவன் எங்களின் மூத்த பையன் 16 ஊர்களில் எங்களுக்கு வியாபாரம் இருக்கிறது. அதைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்று என் தந்தையார் கூறியபோது சென்னைக்கு அனுப்புங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன் பேரில் சென்னை சென்றேன். இதுவே என் வாழ்வில் திருப்பம்!

நீதிபதி அவர்களின் வழிகாட்டுதல்படி வழக்கறிஞர் ராமானுஜம் அவர்களிடம் ஜூனியராக பணியாற்றினேன்; தி.மு.க. ஆட்சியில்  அரசு வழக்கறிஞரானேன். 1990இல் உயர்நீதிமன்ற நீதிபதியானேன். எட்டரை ஆண்டுகள் தமிழ்நாட்டிலும் பின்னர் கேரளம், ராஜஸ்தான், ஆந்திரம் முதலிய மாநிலங்களில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பிறகு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதியாக இருந்து, ஓய்வுக்குப் பிறகு சட்ட ஆணையத்தின் தலைவ ராகவும் பணியாற்றியுள்ளேன்.  பெரும்பாலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குத்தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்; ஆனால் தலைமை நீதிபதியாக இல்லாதிருந்த நிலையில் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டேன்.

சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்து 32 பரிந்துரை களை சமர்ப்பித்தேன் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டார்.

தனது பணியில் மன நிறைவு அடைந்த ஒன்றைக் குறிப் பிட்டார். முல்லைப் பெரியாறு அணை பற்றியது அது. அந்தக் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் நான் அங்கம் வகித்தேன். அந்தக் குழுவில் அய்வர் இடம் பெற்றிருந்தனர். பல முறை அணையைப் பார்வையிட்டு அணை பலமாகவே உள்ளது. 132யிலிருந்து 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற எங்களின் பரிந்துரை ஏற்கப்பட்டது.

152 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ளவும் வாய்ப்பு இருக் கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் எட்டு மாவட்ட மக்களுக்குத் தண்ணீர் வழங்கிய திருப்தியுடன் இன்று வரை இருக்கிறேன் என்று குறிப்பிட்ட நீதிபதியவர்கள் 1,36,000 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறேன். எனது பல தீர்ப்புகள் சட்ட நூல்களில் பதிவாகி இருக்கிறது என்று பெருமைப் பொங்க குறிப்பிட்டது நமக்கும் பெருமை தானே!

ஒரு தமிழனின் பெருமை மற்ற தமிழனுக்கும் பெருமை என்ற உணர்வை ஊட்டியவர் அல்லவா நமது தந்தை பெரியார்.
ராஜஸ்தானில் அவர் தலைமை நீதிபதியாக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டினார். திராவிடர் கழகத் தோழர்கள் டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்கள் - அவர்கள் ராஜஸ்தானில் நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது எனது அலுவலகத்துக்கு வந்தார்கள்.

எனது உதவியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. கருப்புச் சட்டை அணிந்தவர்கள் பெருந் திரளாக கூடியிருக் கிறார்களே என்ற பயம் ஒரு பக்கம். என்னிடம் ஓடி வந்து சொன்னார் என் உதவியாளர்.

நான் புரிந்து கொண்டேன் வந்தவர்களில் ஒரு சிலரை வரவழைத்துப் பேசினேன். வேண்டிய உதவிகளைச் செய்யச் சொன்னேன்.

தனி ரயிலில் அவர்கள் ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலையில் ரயிலில் தண்ணீர் நிரப்பப்படவில்லை என்ற தகவலை என்னோடு தொடர்பு கொண்டு தெரிவித்தபோது, எனது உதவியாளர் மூலம் ரயில்வே பொது மேலாளருடன் தொடர்பு கொண்டு, உடனே தண்ணீரை நிரப்புச் செய்தேன் என்றார். ஊர் திரும்பியதும் அவர்கள் மறக்காமல் எனக்கு நன்றியும் தெரிவித்தார்கள். கடைசியாக முத்தாய்ப்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைப்பற்றி அவரின் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.

84 வயதிலும் ஓயாது உழைத்துக் கொண்டு இருக்கிறார். நான் மிகவும் மதிக்கும் தலைவர் நமது தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள்.

ஒரு முறை தஞ்சாவூர் வல்லம் பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். அப்பொழுது பெரியார் சிலையைத் திறக்கக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு பெரியார் சிலை¬த் திறந்து வைத்தேன்.

என்னிடம் சிலர்கூட அப்பொழுது கேட்டார்கள். பெரிய பதவியில் இருக்கக் கூடிய நீங்கள் பெரியார் சிலை¬த் திறக்கச் செல்லுகின்றீர்களே என்று கேட்டனர். 'அட போங்கய்யா அவர் இல்லை என்றால் நாம் இல்லை' என்று அவர்களிடம் சொன்னேன் என்று மேனாள் நீதிபதி அவர்கள் சொன்ன பொழுது கூடியிருந்த ஒவ்வொரு பார்வையாளரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

நான்காம் வகுப்பைக்கூட சரியாகப் படித்து முடிக்காத ஒருவர்  கடைகோடி மனிதர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதி வரை உள்ளங்களில் நீக்கமற நன்றி மலராக மணந்தார் என் றால், இந்தச் சாதனைக்கும் பெருமைக்கும் உரிய உலகத் தலைவர் தந்தை பெரியார் அன்றோ! அந்தத் தலைவர் மறைந்த 43 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் நாள் தோறும் நினைக்கப்படுகிறார் - போற்றப்படுகிறார். ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்றால் நம் அய்யாவுக்கு நிகர் அய்யாவே!

" திராவிடர் இயக்கம் தோற்காது
நூற்றாண்டில் திருப்புமுனையைக் காணும்!"
-தமிழர் தலைவர் திடமான கருத்துகள்

1) நீதிக்கட்சி எந்த காரணத்திற்காகத் தோற்றுவிக்கப் பட்டதோ, அதற்கான காரணங்கள் இன்னமும் இருக்கின்றன.
இன்னும் ஜாதிப் போதை, மதப் போதை, பதவிப் போதை, பணப் போதை என்ற போதைகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்குத் தந்தை பெரியாரின் தத்துவ மருத்துவம் தேவைப்படுகிறது.

2) திராவிட தத்துவம் வீழ்ந்தது என்று சிலகாளான்கள் கூறலாம்; திராவிட இயக்கத் தத்துவம் தேர்தல் முடிவுகளால் முடிவு கட்டப்படுவதில்லை அதன் இலட்சியப் போக்கும் விளைவுகளுமே முக்கியமானது.

3) ஆய்வாளர் சரஸ்வதி எழுதிய நூலிலிருந்து (Minority in Madras State Group interest in modern politics (1974),  
வரலாற்றுத் துறைப் பேராசிரியர் என். சுப்பிரமணியம் (பார்ப்பனர்தான்) ஆகியோர் எழுதிய நூல்களிலிருந்து அந்தக் கருத்தை நிறுவினார் கழகத் தலைவர்.

1920, 1923, 1926 ஆகிய தேர்தல்களில் நீதிக்கட்சி வெற்றி அடைந்த நிலையில் அதற்குப் பின் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததுண்டு.

அதன் தோல்விகளுக்கும் பல காரணங்கள் உண்டு. பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் தான் காரணம்  என்று ஆய்வாளர் சரஸ்வதி கூறுகிறார்.

நீதிக்கட்சி ஆளும் பொறுப்பில் இருந்தபோது எதிர்க்கட்சியினர் பார்ப்பனர்களாக இருந்தனர். அடுத்து எதிர்க்கட்சியில் பார்ப்பனர்களோடு, பார்ப்பனர் அல்லாதாரும் இடம் பெற்றனர்.

பார்ப்பனர் அல்லாதார் இல்லாமல் தாங்கள் மட்டும் எதிர்க்கட்சியாக இருப்பது எடுபடாது என்பது அவர்களின்  யூகம் - யுக்தி.

1937 தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது நீதிக்கட்சி 86 இடங்களில் வெறும் 12 இடங்களில் தான் வெற்றி என்றாலும் பார்ப்பனர் ஆதிக்கம்  பெற்று பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் அழிந்து விட்டது என்று  சொல்லும் நிலை ஏற்படவில்லை என்று ஆய்வாளர் குறிப்பிட்டதை ஆசிரியர் அவர்கள் எடுத்துச் சொன்னார்.

வரலாற்று ஆசிரியர் என். சுப்பிரமணியம் அய்யர் எழுதிய நூல் The Brahmin in Tamilnadu;    அதில் குறிப் பிடப்பட்ட ஒன்றை நமது தலைவர் ஆசிரியர் அழகாக விளக்கினார்.

ராஜாஜியிடமிருந்து ஆட்சி அதிகாரம் காமராசர் கைக்கு வந்த நிலையில் பார்ப்பனர் ஆதிக்கம் முற்றும் ஒழிந்தது என்று ஒரு பார்ப்பன வரலாற்று ஆசிரியரே கூறுவது கவனிக்கத்தக்கதுதானே.

பார்ப்பனர் அல்லாதார் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டு விடவில்லை; இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்கள்தான் நாடோடிகள் என்ற நிலை உருவாக் கப்பட்டது. கிராமங்கள் வரை பார்ப்பனர் ஆதிக்கத்தின் மீதான எதிர்ப்புணர்ச்சி தமிழ்நாட்டில் உருவானது என்பது வரலாற்று ஆசிரியர்களின் துணிபு. (இன்றைக்குக்கூட 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் இருவர் மட்டுமே பார்ப்பனர் என்பது கவனிக்கத்தக்கது)

4) இந்த நிலையில் திராவிடர் இயக்கம் தோற்று விட்டது என்று எப்படிக் கூற முடியும்? அதன் கொள்கையும் கோட்பாடும் இந்த நாட்டுக்கானது - தேவையானது - அதற்குத் தோல்வி வீழ்ச்சி என்பது கிடையாது. 
எந்த சவாலையும் இந்த இயக்கம் சந்திக்கும். நீதிக்கட்சியின் நூற்றாண்டு விழா கால கட்டத்தில் அது ஒரு புது திருப்பத்தைக் காணும் என்பதில் அய்யமில்லை.

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு யார் தலைமை என்பதில்கூட திராவிட இயக்கத்தின் - தந்தை பெரியாரின் தாக்கம் உண்டே! (பலத்த கரஒலி) என்று விளக்கவுரையாற்றினர் விடுதலை ஆசிரியர் அவர்கள்.


கவிஞர் நந்தலாலா

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள - திராவிடப் பெருந்தகை சர். பிட்டி தியாகராயர் (ஆசிரியர்  மயிலாடுதுறை கோ. குமாரசாமி) நூலினைத் திறனாய்வு செய்த கவிஞர் நந்தலாலா அவர்கள் எடுத்த எடுப்பிலேயே தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று அறிவித்ததுபோல திராவிடர் இயக்கம் இல்லாவிட்டால் நாமெல்லாம் செல்லாத காசாகப் போயிருப்போம் என்று  நறுக்கென்று கூறினார்.

அமெரிக்க நாட்டிலே பெண்களுக்கும் கறுப்பர்களுக்கும் வாக்குரிமை கொடுக்கப் படாத காலத்திலேயே சென்னை மாநிலத்தில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை அளித்த இயக்கம் திராவிட இயக்கமான நீதிக்கட்சி என்ற சிறப்பான வரலாற்றுப் பகுதியைக் கவிஞர் வெளிப்படுத்தினார்.

நீதிக்கட்சியான திராவிடர் இயக்கம் இல்லை என்றால் இந்த மேடையில் நான் இல்லை என்று நன்றி உணர்வோடு அதனைப் பதிவும் செய்தார் கவிஞர் நந்தலாலா.

இந்த நூலினை எழுதிய மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்த நூலினை மறுபதிப்பு செய்த ஆசிரியர் அவர்கள் தமிழர்களின் நன்றிக் குரிய பெரு மகன் என்றும் குறிப்பிட்டார்.

'சட்டக்கதிர்' ஆசிரியர் 
டாக்டர் வ.இரா.சே. சம்பத்

கால் நூற்றாண்டு காலமாக சட்டக்கதிர் என்னும் தமிழ் திங்களிதழினை  சிறப்பாக நடத்திவரும் டாக்டர் வ.இரா.சே. சம்பத் அவர்கள் அமெரிக்காவின் பூர்வீகக்குடி மக்களுக்குத் தனித்த சட்டங்களும், உரிமைகளும் உண்டு. ஆனால் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான நாமோ நமது உரிமைகளுக்காக இன்னும் போராட வேண்டியுள்ளது என்று தன் உரையை ஆரம்பித்தார்.

இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையே- இந்தியா ஒரே நாடு ஒரே தேசியம் என்று கூறப்படுவதுதான்.

ஆனால் உண்மை என்ன? இந்தியா பல  மாநிலங்கள், பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகளை உள்ளடக்கிய துணை கண்டமே! இதனை மறுத்து, மறந்து, இந்தியா ஒரே நாடு, ஒரே நாடு என்று சொல்லி ஏன் எங்கள் உயிரை  வாங்குகிறீர்கள்? என்ற அவரின் கேள்வியில் உண்மையும், நியா யமும் கூர் ஈட்டியாகக் குத்திட்டு நிற்கிறதே!

மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி பொதுப் பட்டியலுக்குச் சென்றது எப்படி என்ற வினாவையும் தொடுக்கத் தவறவில்லை. சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயாக்கள்? இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக் கவா என்ற அவரின் கேள்வியும் அர்த்தம் மிக்கதாகும்.

பேராசிரியர் அ. இராமசாமி

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடத்தப்பட்ட நேற்றைய விழா வரலாற்றில் என்றும் பேசப்படக் கூடியதாகும்.

வரலாற்றையே மாற்றும் மோசடிகள் நடைபெறுவதை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் மேனாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் பதிவு செய்தார். சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரியர் நாகரிகம் என்று மாற்றும் திரிபு வேலை ஒரு பக்கத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இப்பொழுதுகூட சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்னும் ஊரில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் திராவிடர் நாகரிகத்தின் பழைமையை வெளிப்படுத்தக் கூடியது என்பதால் தோண்டியவற்றை எல்லாம் மூடிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற ஆபத்தையும் சரியாகச் சுட்டிக் காட்டி எச்சரித்தார்.

மய்யத்தின் செயலாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியதும் பொருத்தமானதாகும்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் முனைவர்  த.ஜானகி (மேனாள் துணைவேந்தர்) நன்றியுரை, பொருளாளர் வீ. குமரேசன் இணைப்புரை இவையெல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.


பெருந்தகை முத்துக்குமாரசாமி 
அவர்களுக்கு பாராட்டு

திராவிடர்ப் பெருந்தகை சர். பிட்டி தியாகராயர் என்ற நூல் - மயிலாடுதுறை கோ. குமாரசாமி அவர்களால் எழுதப்பட்ட நூல் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால்  வெளியிடப்பட்டது.(1985) மறுபதிப்பு செய்யப்படாத நிலையில் நீதிக்கட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மறுபதிப்பு செய்ய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விரும்பினார்.

அதற்கான அனுமதியை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இரா. முத்துக்குமாரசாமி அவர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டபோது மனமுவந்து அளிக்க முன்வந்தார். அந்த அடிப்படையில்தான் திராவிடர் கழக வெளியீடாகக் கொண்டு வரப் பட்டுள்ளது (2016 நவம்பர்) சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பெருந்தகை முத்துக்குமாரசாமி நேற்றைய விழாவுக்கு அழைக்கப்பட்டு, கழகத் தலைவர் அவர்களால் சால்வை அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டு நன்றியும் தெரிவிக்கப்பட்டது-


-