செவ்வாய், 20 டிசம்பர், 2016

பார்ப்பனர் அல்லாத இயக்கத்துக்குத் தோல்வியா?

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?’ என்ற தலைப்பில் தி இந்து (தமிழ்) ஏட்டில் கட்டுரை ஒன்று வெளிவந்தது (11.12.2016). அதில் காணப்பட்ட சில கருத்துகளுக்கும், தகவல்களுக்கும் மறுப்புத் தெரிவித்து கழகத் தலைவர் அனுப்பிய கட்டுரை - அந்த இதழில் வெளிவந்துள்ளது (19.12.2016).

கழகத் தலைவரின் கட்டுரை முழுமையான அளவு வெளியிடப்படாததால், அந்த முழுக் கட்டுரையும் இங்கே வெளியிடப்படுகிறது.

குறிப்பு: இந்து (தமிழ்) ஏட்டில் நீக்கப்பட்ட பகுதிகள் தடித்த எழுத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

- கி.வீரமணி - தலைவர், திராவிடர் கழகம்

‘தி இந்து’ (தமிழ்) ஏட்டின் டிசம்பர் 11 கட்டுரையின் தலைப்பு - “தமிழ் நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச் சென்றது என்ன?” என்பதாகும்.

பல்வேறு தகவல்களையும், கருத்துக்களையும் தன் மனம்போன வாக்கில் வாரி இறைக்கப்பட்ட அந்தக் கட்டுரையின் கடைசிப் பகுதி குழப்பத்தின் கைப் பிள்ளையாகக் கதறுகிறது.

“திமுக தலைவர் முதுமைக்கு ஆளாகியுள்ளார்; ஜெயலலிதா மறைந்து விட்டார், இனிமேல் சித்தாந்தத் துக்கு இடம் இல்லை; சாதிய, மதவாத சக்திகள் முழு ஆதிக்கம் பெற வழி கோலும்; தமிழகத்தில் இதுவரை முதல்வர் பதவியைக் குறி வைக்கும் நிலையில் சாதிய சக்திகள் இல்லை; இப்போது எண்ணிக்கைப் பெரும் பான்மையும், பொருளாதார வலுமிக்க சாதிய சக்திகள் அதிமுகவுக்குள் அணி திரள ஆரம்பித்திருப்பதன் விளைவு ஏனைய கட்சிகளையும் இது பிடிக்கும்; முக் குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், நாயுடுகள் எனத் தனித்தனியே அணி திரள்களும் பேரங்களும் நடக்கும், கூடவே மதவாதமும் தலை தூக்கும். இவற்றினூடாக டெல்லியின் கை ஓங்கும்.”

என்று ‘ஆருடம்’ சொல்லுகிறது கட்டுரை. இதனை  ‘தமிழ்நாட்டின் தட்ப வெப்பத்தை’ நுணுக்கமாக அறிந்த கருத்தாக இதைக்கொள்ள முடியாது.

ஜாதிக் கட்சிகளும், ஜாதியத் தலைவர்களும் அவ் வப்போது வெளிப்படையாக நடைபோட்டதுண்டு. ‘வன்னியர் ஓட்டு அந்நியருக்கு இல்லை’ என்கிற அளவுக்குக் கூட இருந்ததுண்டு. அவை எல்லாம் எடுபடவில்லை. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட ஜாதி சங்கங்களை ஒருங் கிணைத்து அரசியல் கட்சிகளை மிரட்டிப் பார்த்த காட்சிகளைத் தான் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? அவை எல்லாம் தேர்தல் களத்திலேகூட காலடி எடுத்து வைக்க முடியாமல் தன்னளவிலேயே கரைந்து உரு தெரியாமல் போய் விட்டன.

ஜாதிப் பிரச்சினை அவ்வப்பொழுது தலை காட்டினாலும் வெளிப்படையாக தம் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடும் கலாச்சாரம் ஒழிந்து போயிற்று; அப்படிப் போட்டுக் கொள்வது அவ மானகரம் என்ற மனநிலை - திராவிட இயக்கத்தால் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைப் புரட்சியால் உருவாக்கப்பட்டது.

பிற மாநிலங்களில் இடதுசாரித் தலைவர்கள் கூட பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைத் துறக்க முடியாதநிலையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கான வரலாறை அலட்சியப்படுத்திட முடியாது.

குறிப்பிட்ட சில வட்டாரங்களில், மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதியினர் அதிகமிருந்தால், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களா கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந் தெடுக்கப்படுவதில் பெரிய தத்துவார்த்தம் இருப்பதாகக் கூற முடியாது.

ஜாதி கட்சிகள் என்று சொல்லப்படும் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் கட்டிய பணத்தை மீட்டுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் யதார்த்தம். ஜாதி யைச் சொல்லி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற முடியாத காரணத்தால் அரசியல் முகப்படாமுடன் காட்சியளிப்பவர்களை அடையாளம் கண்டு வாக் காளர்கள் கழித்தல் கணக்கைப் போட்டுத் தள்ளினர்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் மறைந்த நிலையில்  அடிப் படையே இல்லாத ஜாதிய மதவாதம் தலை தூக்குவ தற்கு எங்கே இடம் இருக்கிறது?

திருமதி சசிகலா அவர்கள் பொதுச் செயலாளராக  இருக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள்கூட அவரின் ஜாதியை முன்னிறுத்தவில்லை. அம்மாவுக்கு வாழ்விலும் தாழ்விலும் பக்கத்திலிருந்து பணிவிடை செய்தவர் என்றுதானே பல்வேறு ஜாதிகளைச் சார்ந்த அதிமுகவினர், முன்னணியினர், சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் சொல்லுகின்ற னர்.

இந்த நிலையில் ஜாதியைத் தூண்டும் தன்மையில் ஒரு ‘தேசிய’ நாளேடு கருத்துகள் கூறுவது  நாகரிகம் தானா?

டில்லியின் கை ஓங்கும் என்று சொல்லும்போது மதவாதம் ஓங்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. டில்லியில் தமிழக அரசியலில் மீன் பிடிக்க எத்தனிக்கும் பிஜேபியின் வியூகமும் தெரிகிறது. இதனை நானே விடுதலை அறிக்கையில் குறிப்பிட்டும் உள்ளேன்.

வடக்கே சில மாநிலங்களில் மத்திய பிஜேபி ஆடிய அரசியல் சித்து விளையாடல் தமிழ்நாட்டில் எடுபடாது!

தமிழ்நாட்டில் தேர்தலில் பிஜேபி போட்டியிடும் இடங்களில் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்கினாலே பெரிய சாதனைதான். சில தொகுதிகளில் பிஜேபியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து விடுகின்றன.

தமிழ்நாட்டில் பிரதானமாக இருக்கக் கூடிய கட்சி களைத் தாண்டி ஜாதி, மதவாதம் தலை தூக்கும் என்பதெல்லாம் ஒரு வகை ‘மாயாவாதம்’ தான்

கட்டுரையின் கடைசிப் பகுதியோ - ஒரே குழப்பம்! குழப்பம்!

“திராவிட இயக்கம் தன்னுடைய நூற்றாண்டில் அதன் வரலாற்றிலேயே மிகச் சவாலான கால கட்டத் துக்குள் நுழைவதாகவே கருதுகிறேன். பிராமணர் எதிர்ப்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கத் தின் எதிர்காலம் இக்கட்டுக்குள்ளாவதை இன்று ஒரு பிராமணத் தலைவரின் மறைவு உந்தியிருப்பதை வெறுமனே வரலாற்று முரண் என்று கடப்பதற்கு இல்லை. அதைத் தாண்டிய ஒரு சமூக உளவியல் இங்கு வெளிப்படுகிறது. பிராமணரைப் பார்த்தொழுகும் இந்திய சாதி கலாச்சாரத்திலிருந்து பிராமண எதிர்ப்பு இயக்கங்களாலும் வெளிப்பட இயலாததன் தோல் வியே அது; தன்னுடைய கட்சியைத் தாண்டி எதிரிகள் மீதும்கூட ஜெயலலிதாயிஸத்தைப் படர விட்டுச் சென் றிருப்பதையே ஜெயலலிதா வாழ்வின் எச்சம் எனக் கருதுகிறேன்” என்று கட்டுரையை முடித்துள்ளார் தோழர் சமஸ்.

இதைப் படிக்கின்றவர்களுக்கு ஏதாவது தெளி வாகப் புரிகிறதா? சொல்ல வந்ததை எளிமையாகப் புரிய வைக்க முடிகிறதா? கருத்தில் குழப்பம் இருந் தால் வார்த்தைகளிலும் அதன் எதிரொலியைக் காணத்தானே முடியும். அதுதான் இங்கு நடந்திருக் கிறது.

‘பிராமண’ எதிர்ப்பு என்பது ஒரு வரலாற்றின் கட்டாயம். அந்த இயக்கம் தமிழ் மண்ணைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அடித்தட்டு மக்கள் மத்தியிலே ஒரு தன்மான உணர்வை, சிந்திக்கும் கூர்மையைத் தட்டி எழுப்பி இருக்கிறது.

அந்த எதிர்ப்புக்கான காரணம்  துவேஷமல்ல; துவேஷம் செய்யும் தத்துவத்தையும், சமூகத்தின் சகல பரப்பிலும் ஆதிக்கம் செய்த அதன் வேர்களையும் அதாவது மூல பலத்தையும் நொறுக்கித் தள்ளியுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித் திருக்க வேண்டும் என்கிற அளவுக்குச் சூழ்ச்சித் திறன் மிக்க பார்ப்பனீயத்தை மக்களுக்கு அடையாளம் காட்டி, பெரும்பாலான மக்கள் மத்தியில் பார்ப்பனீ யத்தை அடையாளம் காட்டிய இயக்கத்தின் மீது - அதன் தத்துவத் தலைவர்மீது கட்சிகளையெல்லாம் கடந்து வணக்கத்தையும், நன்றியையும் செலுத்தும் ஒரு மனப்போக்கும் தமிழ்நாட்டில் உண்டு.

காங்கிரசிலிருந்து பார்ப்பன ஆதிக்கப் போக்கை எதிர்த்து பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான பிரதிநிதித்துவ விகிதாசாரத்தை வலியுறுத்தியும், காங்கிரசுக் குள்ளே போர்க் கொடி தூக்கி, ஒரு கட்டத்தில், அதற்கு காங்கிரஸ் பயன்படாது என்று திண்மையாகக் கருதி வெளியேறி, பார்ப்பனர் அல்லாத இயக்கத்தை “சுயமரியாதை இயக்கம்” என்ற  பெயரில் நிர்மாணித்த தந்தை பெரியார் தோற்றா போய் விட்டார்?

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டப் பாதுகாப்புடன் வீறு நடை போடவில்லையா? அன்றைக்கு வெறும் 50 சதவீதம் பார்ப்பனர் அல்லா தாருக்குக் கோரினார் பெரியார்; அதற்கு இணங்க மறுத்த பார்ப்பனர்கள் இப்பொழுது மாநாடு கூட்டி எங்களுக்கு இடஒதுக்கீடு தந்திடுக என்று தீர்மானம் போட்டது நம் கண்முன் நடக்கவில்லையா?

இந்த சட்டப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்பட்டவர் - கட்டுரையாளர் அடையாளம் காட்டும் பிராமணப் பெண்மணியான முதல் அமைச்சர் ஜெயலலிதா தானே! அவர் கூட திராவிடப் போர்வையோடு அதன் சமூக நீதிக் கொள்கையை ஏற்ற நிகழ்வு காரணத்தால் தான் நிலைக்க முடிந்தது! இதன்மீது யாராவது கை வைக்க முடியுமா? இதில் ‘பிராமண’த் தன்மை எங்கே எதிலே உந்தியிருக்கிறதாம்?

சங்கராச்சாரியாரைக் கைது செய்யும் துணிவுக் குள் ஜெயலலிதாயிஸம் இல்லை. பெரியாரிஸம்தான் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம், சொல்லப் போனால் ஜெயலலிதாயிஸம் என்று சொல்ல என்ன இருக்கிறது?

எந்த தத்துவத்தின் அடிப்படையிலும் அவர் நிலை கொண்டவர் இல்லை.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாநில கட்சியாக இருந்தாலும், தேசிய கட்சியாக இருந்தாலும் பார்ப்பனர் ஒருவர் தலைமைதாங்க முடிகிறதா - பாரதிய ஜனதா கட்சி உட்பட? இது எதைக் காட்டுகிறது?

தமிழ்நாட்டில் 234 சட்டப் பேரவை உறுப்பினர் களுள் இரண்டே இரண்டு பேர்கள்தான் பார்ப்பனர்கள்; அதிலும் ஒருவர் மரணம் அடைந்து விட்டார். இந்த நிலை இந்தியாவில் எந்த மாநிலத்தில் உண்டு?

ஜெயலலிதா ஒரு கட்சிக்குத் தலைமை வகிக்க வில்லையா என்று கேட்கலாம். அவரும் திராவிட இயக்கத்தின் படிக்கட்டுகளில் ஏறி - எம்.ஜி.ஆர். என்ற ஈர்ப்பு மிக்க திராவிட இயக்க சினிமா கலைஞரால் தூக்கி நிறுத்தப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மேலே வந்தவர்தான்.

பொருளாதார மேதை அசோக் மேத்தா சொன்னது போல திராவிட இயக்கம் தென்னகத்திலே குறிப்பாக சென்னை மாநிலத்திலே ஏற்படுத்திய உணர்ச்சி - பார்ப் பனர் அல்லாத எழுச்சியை உண்டாக்கி இருக்கிறது. வட மாநிலங்களில் இப்பொழுதுதான் அதற்கான அலை தொடங்கியுள்ளது என்று கூறியது மேலோட் டமான கருத்தல்ல.

பாரதீய ஜனதா இன்னமும் தமிழ்நாட்டில் ஏன் வேர்ப்பிடிக்க முடியவில்லை? அதன் மீதான பார்ப் பனீய இந்துத்துவா எதிர்ப்பு என்பது இங்கு வேரூன்றி இருப்பது காரணம் அல்லவா?

புதிய தேசியக் கல்வி திட்டம் என்பது - இந்தியா விலேயே தமிழ்நாட்டில் மட்டுமே கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?  இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இங்கு ஏன் நிலை நிறுத்த முடிய வில்லை?

இன்னும் சொல்லப் போனால் பிஜேபி என்ற மதவாத பார்ப்பனீய இந்துத்துவா எதிர்ப்புக்குப் பெரியார் அலை தமிழ்நாட்டையும் கடந்து இந்தியா முழுவதும் தேவைப்படும் கால கட்டம் இது.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தமிழ் நாட்டையும் தாண்டி, டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக் கழகத்திலும், அய்தராபாத் பல்கலைக் கழ கத்திலும் கொண்டாடப்படுவதன் அர்த்தம் என்ன? அங்கெல்லாம் பெரியார் - அம்பேத்கர் வாசகர்வட்டம் தோற்றுவிக்கப்பட்டதே - எந்த அடிப்படையில்?

ஜெயலலிதா மறைந்து விட்டதால் இந்தக் கொள்கை எப்படி மறைந்து போகும்? ஒரு ஜெய லலிதாவை வைத்தா இந்தக் கொள்கை உருவாக் கப்பட்டது? ஜெயலலிதா திராவிட இயக்க சமூகநீதிக் கொள்கையைப் பயன்படுத்தியதால்தான் தொடர முடிந்தது.

உண்மையைச் சொல்லப் போனால் பார்ப்பனர்கள் எதிர்ப்பு இயக்கத்தை பார்ப்பன சக்திகள்தான் பல திசைகளுக்கும் கொண்டு செல்லுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்) நாடாளுமன்ற மக்களவையில்  மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் பற்றி ஆவேசமாகப் பேசியதெல்லாம் தோழர் சமஸ் அறிந்திருக்கவில்லையா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதுகூட எதிலிருந்து வெடித்துக் கிளம்புகிறது? பார்ப்பன அர்ச்சக ஏகபோக எதிர்ப்பிலிருந்து வெடித் துக் கிளம்பிடவில்லையா?

இதற்கு முட்டுக்கட்டை போடப்போட, பார்ப்பனர் எதிர்ப்பு வீரியம் என்பது வீறு கொண்டு எழத்தானே செய்யும்? தமிழ்நாட்டோடு இது முடிந்துவிடக் கூடியதல்ல - இந்தவுணர்வு இந்தியா முழுவதும் பரவித் தீர வேண்டியது கட்டாயம்!

ஆதிக்கத்தை  இருத்திக் கொள்ள ஒரு சக்தி - அதனை எதிர்க்கும் இன்னொரு சக்தி, இதில் எது வெற்றி பெறும் என்பதை வரலாறு தெரிந்தவர்கள் உணரவே செய்வார்கள்.

தங்கள் உயர்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத் தவும், காட்டிக் கொள்ளவும் இன்னும் பார்ப்பனர் ‘ஆவணி அவிட்டங்களை’ நடத்திக் கொண்டுதானே இருக்கின்றனர்! திராவிட இயக்கம் வேண்டாம் என்று நினைத்தாலும் பார்ப்பனீய எதிர்ப்பு உணர்வைப் பார்ப்பனர்கள் ஊதி ஊதி நெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதே நிதர்சனம்.

குழப்பமான கருத்தை குழப்பமான சொற்களால் அவதானித்திருக்கிறார் ‘சமஸ்’ என்பது மட்டும் உண்மை.

-விடுதலை,20.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக