வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 12

24.9.2019 அன்றைய தொடர்ச்சி...

நம்மைப் பிரித்து வைத்துள்ளவை

வேதம், மதம், கடவுள்கள் எனப்படும் மூன்றாலுமே நாம் அனைவரும் இந்துக்கள் என்ற ஒரே சமுதாயப் பட்டிக்குள் திணிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் பல படியாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். இந்து மதத்தினராக உள்ள நாம், சுமார் 25 கோடி இந்துக்கள் இருப்பினும், நாம் யாவரும் இந்தக் கடவுள்களினாலோ, மதத்தினாலோ ஒன்றுபடுத்தப் படவில்லை.

இந்து மதம் என்று ஒரு மதமே இருந்தது கிடையாது எனக் காலஞ்சென்ற காந்தியார் உட்பட, பல ஆராய்ச்சிக்காரர்கள் கூறியிருக்கிறார்கள். மதத்தினாலேயே நாம் ஒன்றாயில்லை; பலகோடிக் கடவுள்கள் இந்து மதத்தினருக்குக் கற்பிக்கப் பட்டுள்ளனர். அவைகளில் யாவருக்கும் ஒன்று என்பதாக ஒன்றுகூட இல்லை. சாஸ்திரங்களின் பேராலும், வேதத்தின் பேராலும் இந்தியாவில் உள்ள இந்துக்கள் ஒன்றுபட்ட வர்களாக இல்லை. அதைவிடுத்து, சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களாகிய நாமாவது எதனா லாவது ஒன்றுபட்டிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. முதலாவது, வேதத்தில் இருப்பவை என்ன என்றே நமக்குத் தெரியாது. ஏனெனில், நாம் தான் வேதத்தைப் படிக்கவோ, பக்கமிருந்து கேட்கவோ கூடாதே! தெரிந்த வரை ஆபாசங்களும் கேடுகளும் அதிலிருக்கின்றன என்று கண்டிருக்கிறோமே தவிர நமக்கு முறையாக வேதம் கற்பிக்கப்பட்டிருக்கிறதா? ஏன்? அதை நாம் பார்க்கப் படிக்க நேர்ந்தால் அதன் அசிங்கம் நமக்கு விளங்கிவிடும். அன்றியும், நம்மை இழிவுபடுத்தவும் ஒழிக்கவுமே வேதசாஸ்திரம், மதம், கடவுள்கள் இருக்கின்றனவே தவிர, அவைகளில் நம் நலத்திற்கென்று ஒன்றுமே இல்லை என்பது விளங்கிவிடும்.

சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், வருணன், ருத்திரன், அவன், இவன் என்று பெயர்களும் உருவங்களும் இருக் கின்றனவே தவிர, காட் (படின), அல்லா, கடவுள் என்பதாக ஒன்று நமக்கு இல்லை. சொல்லப்போனால், கடவுளுக்குத் தமிழில் ஒரு சொல்லே இல்லை. இந்தக் கடவுள் என்ற சொல் இடைக்காலத்தில் தமிழில் புகுந்தது தான். சரித்திரம் காணாத கால முதற்கொண்டே நாகரிக வாழ்வில் திளைத்திருந்த நாம், ஒரு பெரிய சமுதாயம் தனக்கென வேதம், மதம், கடவுள், சாஸ்திரம், கொள்கை இவைகள் இல்லாமல் அண்டிப் பிழைக்க வந்த ஒரு நாடோடிக் கூட்டத்தாரின் பிரச்சாரத் தந்திரத்துக்கு ஆளாகிக் கூத்தடிக்கிறோமே தவிர, வேதனைக்காளாகிறோமே தவிர வேறென்ன?

ஆரியர் - திராவிடர் என்னும் இரு இனப் பிரிவுகளை இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் தவிர சர்வ சகல கட்சியினரும் அமெரிக்க - பிரிட்டிஷ் வரலாற்று நூலாசிரியர்களும், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் - பிரதம மந்திரி பண்டித நேரு உட்பட ஒத்துக் கொள்ளுகின்றனர். நாம் கூறும் ஆரியர் - திராவிடர் பிரச்சினை ரத்தப் பரிசோதனையின் விளைவாக அல்ல; கொள்கைகளினால், கலாச்சாரத்தினால், பழக்க வழக்கங்களினால், பிரிக்கப்பட்டிருக்கும் பேதத் தினால் கூறுகிறோம். மற்றபடி ஆரியரும் - திராவிடரும் பெரும் அளவுக்கு இரத்தத்தினால் கலந்துவிட்டனர் என்பதை நாம் மறுக்க முன்வரவில்லை.

ஆரியர்கள் யார்

ஆரியர்கள் என்போர் யார்? என்சைக்ளோபீடியா என்ற சர்வபொருள் விளக்க நூலும் வேத நூல்களும், ஆராய்ச்சி உண்மை ஆதாரங்களும் சொல்லுவதென்ன?

பர்ஷிய என்னும் பாரசீகத்தில் இருந்தவர்களே ஆதியில் பெரிதும் ஆரியர்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது. இவர் களுக்குள் இரு கட்சிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒரே இனத்தவர் எனினும், இங்கு உள்ள சைவர்கள், வைணவர்களைப் போல, ஒரு சாரார் தேவர்கள் என்றும், மற்றவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்களுக்குள் உயர்வு தாழ்வு கிடையாது; எனினும் கொள்கைத் துறையில் மாறுபட்டிருந்தனர். வானம், தீ முதலிய பிரகாசம் என்னும் பொருளைக் கொண்டதான வான ஒளி என்ற தத்துவத்தின் மீது தேவர்கள் வழிபாடு கொண்டிருந்தனர். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட இயற்கைத் தத்துவத்தைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு அசுரர் என்ற பெயர் இருந்து வந்தது. அசுரர்கள் மது, மாமிசம் சாப்பிடாதவர்கள்; கொலை பலி வெறுப்பவர்கள்.

தேவர்கள் மது, புலால், ஒழுக்கக் குறைவு, கொலைத் தொழில் முதலியவைகளில் ஈடுபட்டிருப்பவர்கள்; ஆதலால், அது காரணமாக அசுரர்கள் தேவர்களை வெறுத்து விரட்டி விட்டனர்.

வசவே வேதம்

விரட்டப்பட்டு ஓடியவர்கள், விரட்டியவர்களை எவ்வளவு கீழ்த்தரமாகவும் இழிவாகவும் பேச முடியுமோ அவ்வளவும் செய்து கொண்டு, வெளியேறிப் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, இறுதியாக இந்தி நதி (சிந்து நதிக்கரை) வந்தடைந்து, சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு, தம்மை விரட்டியவர் களை மேலும் தொடர்ந்து வசைபாடலாயினர். இந்தியா விலும் அவர்கள் கண்ட மனிதர்கள் அவர்களது நாட்டு அசுரர்களைப் போலவே உயர்ந்த தத்துவத்தினராக இருந்து இவர்களை வெறுக்கவே, அவர்களையும் அசுரர் என்றே கருதி, அவர்களை வைவது போலச் சபிக்கும் காரியத்தை இவர்கள் மீதும் செய்து வந்திருக்கின்றனர். அந்த வசவேதான் வேதமாயிற்று. இவ்விதம் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறிக் கண்ணுக்குக் காணும் சூரியன், சந்திரன், தீ, தண்ணீர் முதலிய இவை களையே கடவுள்களாக்கி, அவைகளின் எண்ணிக்கையை 33 ஆக ஆக்கினர். இவை எல்லாம் டாக்டர் முன்ஷி முதலியோர் தீட்டியிருக்கும் ஆதாரம் முதலியவைகளில் இருந்தும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த 33 கடவுள்களில் இன்று கூறப்படும் சிவன் இல்லை; விஷ்ணு என்பவனைத் தங்கள் இனப்பாதுகாப்புத் தேவனாக, ஆபத்துக்களை அகற்றக்கோரித் துதிபாடுவதற்காக ஏற்படுத்தியிருந்தனர். ருத்திரன் என்றொரு கொடுமையான குணத்தைக் கொண்ட தேவராக ஆரியர் ஒரு தேவனைக் கொண்டிருந்தனர்.

இங்கு வந்த பின்பே ஆரியர்கள் ருத்திரன் என்ற தேவனை, சிவன் என்று பெயர்மாற்றி, அதை முக்கிய தேவனாக்கி, வேதத்தில் மிகச் சாதாரண - பிந்திய தேவனாக இருந்த விஷ்ணுவையும் முக்கியத்துவம் அளித்து நாளாவட்டத்தில் அவைகளையும் கடவுள்களாக ஆக்கி வந்திருக்கின்றனர். ஆயினும், பிரம்மா என்பதாக ஒரு கடவுள் வேதத்தில் காணப்படவில்லை. இவைகளையே நாளடைவில் விருத்தி செய்து சிவனின் பிள்ளைகள் என்றும், விஷ்ணுவின் அவதாரம் என்றும் பலரை உற்பத்தி செய்து தசாவதாரம், புராணக் கதைகள் என்பவைகளையும், கடவுள்களுக்குப் புத்திரர்களையும் உண்டு பண்ணினர். இவர்களெல்லாம் கடவுள்கள் அல்லர்; பெரிதும் தேவர்களும் அல்லர்; தேவர்கள் என்றால் பிரகாசமாக வானத்தில் இருப்பது என்பது அவர்கள் ஆதாரக் கருத்து.

வேதகாலம் தெரியாது

வேதங்களுக்கும் காலம், கர்த்தா, குறிப்பிட்ட கருத்து, முதலிய எதுவுமில்லை என்கிறார்கள். வேதம் ஏற்பட்ட காலம், எழுதியவர், அல்லது ஏற்படுத்தியவர் யார் என்று ருசுப்பிக்க ஆதாரங்கள் எதுவுமில்லை; ஆனால், இப்போது கூறுகிறார்கள் காலப்போக்கில் தொகுக்கப்பட்டவை என்று. இதையே இக்காலத்தில் உலகெங்கும் நிகரற்றது; சகல மதத்தையும் தழுவியதென்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மாத்துவர் உள்பட ஆஸ்திகர் நாத்திகர்களும் பிறரும் தத்தமது ஆஸ்திக நாஸ்திகமான பலவிதக் கொள்கைகளை மதங்களாக வேதத்திலிருந்தே அவரவர் கருத்துக்கேற்ப விளக்கம் தந்து அமைத்திருக்கிறார்கள். கிளைக் கடவுள் களையும் அவதாரங்களையும் கொண்ட புராண இதிகா சங்கள் யாவும் ஒரே கருத்தில்தான் அதாவது ஆரியர் திராவிடப் போராட்டத்தின் மீதே ஏற்பட்டிருக்கின்றன.

அடிமைப்படுத்தும் தத்துவமே

திராவிடர்கள் என்றென்றைக்கும் தலைதூக்காதபடி செய்யும், நிரந்தரமாக ஆரியர்க்கு அடிமைப்பட்டிருக்கச் செய்யும் தத்துவமே புராண இதிகாசங்களின் தத்துவங் களாகும். சைவம், வைணவம் எல்லாமே இதே நோக்கம் கொண்டவை. திராவிடர் ஒழிப்பே அந்த நோக்கமாகும், இங்கு கண்டவர்களையும் நமது நாட்டு அசுரர்கள் என்றே கருதி ஆரியர்கள், திராவிடர்களைச் சூழ்ச்சிப் போரில் வென்று, அவ்வெற்றி தேவர்களால் ஏற்பட்டதென்று கருதி அத்தேவர்களையே அவதாரங்களாக்கி, அவற்றை நமது கடவுள்களாக ஆக்கிவிட்டனர். நமது நாட்டில் ஆரம்பிக்கப் பட்ட போராட்டத்தை அவர்கள் வெற்றி பெற்றதும் பல உருவில் கதைகளாக்கி அக்கதைகளைப் புராணங்களாக்கி விட்டனர். அக்கதையில் வந்த பாத்திரங்கள் எல்லாம்தான் கடவுள்களாக்கப்பட்டன.

இன்று

மக்களுக்கு இன்று உணர்ச்சி வந்துவிட்டதால், ஆரியர்கள் நம்மை அசுரர்கள், ராட்சதர்கள் என்று நேரில் கூறாமல் இருக்கின்றனர்; என்றாலும் அந்த வெறுப்புடன்தான் நம்மை நடத்துகிறார்கள்.

தேவர் - ஆரியப் பார்ப்பனரே

தேவர்கள் என்னும் ஆரியர்களை அதாவது பார்ப்பனர் களைப் பற்றி அவர்கள் நன்றாக எழுதி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடர்கள் போரில் தமக்குச் செய்த கொடுமைகள் காரணமாகவே மனுதர்மம் என்பதாக தமது வகுப்புக்கு ஒரு தனி அடக்குமுறை நீதிநூல் உண்டாக்கி அதை மத ஆதாரமாக ஆக்கிவிட்டார்கள். அந்த நூலில் யாகத்தின் பெயரால் திராவிடர்களைக் கொள்ளையடி என்றும், பலாத்காரமாய் பொருளைப் பிடுங்கிக் கொள் என்றும், ஆரியர்கள் எழுதியிருக்கிறார்கள். வசதிப்பட்ட போது திராவிடர்களும் ஆரியர்களை வெளுத்திருக் கிறார்கள். இக்கால மலைவாசிகள் யுத்தமுறை போன்று என்பதும் வேதத்தினால் விளங்குகிறது.

பெண் வேடத்தில் ஏமாற்றினர்

கஷ்டங்கள் நேர்ந்த காலத்தில் எல்லாம் பெண் வேடத்தில் ஆரியர்கள் திராவிடர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். தமது இனப் பெண்களென்பதற்குப் பதிலாக சிவன், விஷ்ணு பெண் அவதாரம் என்பதாகத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஆக தந்திரம், சூது காரணமாகப் பல சாதனைகளைச் செய்திருக்கின்றனர். இது சம்பந்தமான கதைகளை எழுதும்போதும் ஆபாசங்களையும் மோசமான வைகளையும் அவர்கள் செய்யத் தயங்கவில்லை, நமக்கு வணக்கம், வழிபாடு இவைகட்கு உரியதாக புராணம் கடவுள்களை ஏற்படுத்திப் பார்ப்பனர்களுக்கு என்றென்றும் சுலபமான வகையில் சுகமாக வாழ வழி செய்துள்ளனர்.

தங்களுடைய ஆபத்துக் காலத்தில் புராண தந்திரங்கள் பயன்படவேண்டிய புராணப் பாத்திரங்களையும் நிகழ்ச்சி களையும், கடவுள்கள் திருவிழா, பண்டிகைகளாகக் கொண்டாடுமாறு செய்துவிட்டனரே அன்றி, நமக்கு என்று ஒரு தனிக் கடவுள் எதுவும் இல்லை. நம் கடவுள்கள் என்பனவெல்லாம் நம் பொருளையும் பணத்தையும் பார்ப்பனருக்குப் பிடுங்கிக் கொடுக்கவே இருக்கின்றன.

தொடரும்

- விடுதலை நாளேடு, 26. 9 .19

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 11

19.9.2019 அன்றைய தொடர்ச்சி...

1925ஆம் ஆண்டில்

1925ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நான் காங்கிரசிலிருந்து வெளிப்படையாகப் பிரிந்தேன். அரசியலின் பேரால் அப்போது காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் செய்து வந்த பித்தலாட்டங்களை நான் நன்றாய் உணர்ந்ததால் அவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு வருடம் பணியாற்றினேன். ஓரளவு பயனுமடைந்தேன். எனினும் பொதுத் தேர்தல் 1926இல் நடைபெற்றபோது ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப்போய் விடவே, பின்பு சமுதாயம், மதம், புராணங்கள் இவைகளின் பேரால்தான் பார்ப்பனர்கள் இவ்வளவு அதிகாரமும், செல்வாக்கும் பெற முடிகின்றது என்பதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்து மக்களிடையே அதுபற்றித் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினேன். அந்த எண்ணத்துடனேதான் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்து, குடிஅரசு பத்திரிகையிலும் தொடர்ச்சியாக அவை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தேன். சாதாரண மக்களுக்குப் புரியும்படியாகவும், அரசியல்வாதிகளும் ஓரளவு ஆதரவு அளிக்கும் வகையிலும் படிப்படியாக எழுதி வந்தேன். காலப்போக்கில் இயக்கம் வளர்ந்தது. இப்போது, அதாவது சமீப காலத்திலே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றவுடன் அரசியல் தொடர்பையே அறுத்துக் கொண்டேன். தேர்தல், பதவி, கவுரவப் பட்டம் இவைகளை லட்சியம் செய்யாது அவைகளைத் துறக்கக்கூடிய தியாகங்களைச் செய்யக் கூடியவர்களையே கழகத்தில் சேர்த்துக் கொண்டேன். பட்டம், பதவி இவைகளை ஒதுக்கி, உதவும் தியாக மனப்பான்மை, நாணயம், யோக்கியம் இவை உடைய வர்களையே கொண்டதாக திராவிடர் கழகத்தை நாளாவட்டத்தில் திருத்தி அமைத்தேன்.

ஆங்கிலத்தில் வழங்கப்படும் Honesty is the Best Policy என்னும் பழமொழியே, அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சியடையும், ஒரு திட்டத்தைக் குறிப்பதேயாகும். தியாகம் என்பது சுயநலத்திற்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது, இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது என்பதாகும். இந்த இரண்டு தன்மையும் திராவிடர் கழகத்தில் முக்கிய இடம் பெறச் செய்து, இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களைக் கழகத்திலிருந்து ஓடும்படிச் செய்தேன். அதனாலேயேதான் நம் கழகம் இந்த உயர்நிலையை அடைய முடிந்தது.

மரியாதையும் மதிப்பும்

அன்றியும், அதனாலேயே நமது புரட்சிகரமான கருத்துக் களுக்கும், பேச்சுக்களுக்கும் ஏகமாக ஆமோதிப்பு கிடைக் காவிடினும் எதிர்ப்பு இல்லாதபடி - நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவர இருத்திவர முடிந்தது. இதனாலேயே தான் நாட்டிலும் ஒரு அளவு மரியாதையும் மதிப்பும் நம் கழகத் திற்கு இருந்து வருகிறது. அதிகாரிகளிடமும் எதிர்க்கட்சி யாளர்களிடமும் மதிப்பிருந்து வரும் வகையில், பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனமாக நமது கழகத்தைக் கருதும் படியாகச் செய்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக் கெல்லாம் அது பதவியில் இருக்கும் வரையில் தான்; பதவி போய்விடின் யாரும் அக்கட்சியிலிரார். காரணம், காங்கிரசில் பதவிப் பித்தர்கள், பணப்பித்தர்கள் தவிர மற்றவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது. ஆதலால், காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கிறது. நமக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக அதில் பலரும் இருக்கிறார்களே அன்றி அதன் திட்டத்துக்காக அல்ல;

அதில் திட்டமும் எதுவும் இல்லை. பதவி அதிகார மோகம் காரணமாகவோ, கட்சியின் திறமைக் குறைவோ அதனால் நாணயக் குறைவோ ஏற்படும்போதெல்லாம் அவை வெளியே தெரியாதவாறு திரையிட்டு - மறைக்கப்பட்டு வருகின்றன.

வேறு கட்சிகள்

நாட்டில் வேறு கட்சிகள் எதுவுமில்லையா என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக ஒரு கட்சி இருக்கிறது. என்றாலும் அதிலும் வசதிக்காக, வாழ்வுக்காக அதில் பெரும்பாலோர் இருப்பதால், அதோடு பார்ப்பன ஆதிக்கமும் அதில் தலைசிறந்து இருப்பதால், அவர்களின் நிலைமை இப்போது மக்களுக்கு நன்றாய் வெளியாகிவிட்டது. அக்கட்சியின் நிலையைக் கவனித்தால் இன்று அதன் முக்கியஸ்தர்களுக்குப் பலனளிப்பதாக இருக்கிறதே அன்றி பாமர ஏழை - தாழ்த்தப்பட்டோர், சேரிவாழ் மக்கள் இவர் களுக்கு அதில் பலனேதும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களும் சேரிவாழ் மக்களும் சமூக உயர்நிலைக்குத் திருந்தவோ அல்லது பிற மக்களுடன் சமநிலை அடையவோ அக்கட்சியினரிடம் திட்டம் வசதி இல்லை. அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள்; சமீபகாலத்தில் தலைதூக்கும் வகையிலும் அதன் வேலைகள் தோன்றவில்லை. ஆகவே, உருப்படியாக இருப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான். இந்து மகாசபை இருக்கிறது; தமிழரசு போன்ற பல கழகத்தினர் இருக்கிறார்கள். ஆனால் தமிழரசுக் கழகத்தினர் தமிழ்நாடு பிரிவினை என்றதுமே அவர்களுக்கு ஒரு தரும சங்கடம், தொல்லை ஏற்பட்டிருக்கிறது! ஆகவே, பிழைப்புக்கு ஒரு வாய்ப்பாகவே தமிழரசுக் கழகமும், இந்துமகா சபையும் இருந்து வருகின்றன. பிரஜா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா - சோஷலிஸ்ட் கட்சி முதலியன எல்லாம் அதிலிருப்ப வர்கள் தத்தமக்குப் பதவி வாய்ப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே தவிர அடிப்படையில் காங்கிரசுக்கு மாறுபட்ட தனித்த ஒரு லட்சியம் - நோக்கம் கொண்டன அல்ல. தேர்தல் காலங்களில் ஓட்டு வேட்டைக்கு, சுயலாபத் துக்கு, கட்சிகள் இருக்கின்றன; அதற்கே பயன்படுகின்றனவே தவிர, உருவான நிலையான கட்சிகள் கிடையாது. எந்தக் கட்சியின் பேரைச் சொன்னாலும் ஆகா! அவனப்படியா? என்று மக்கள் சொல்லிப் போகும் வகையில் இருக்கிறது.

மக்கள் மதிப்பதேன்?

நாம் மக்களிடையே விழிப்பையும் உணர்ச்சியையும் ஊட்டு வதால் நம்மை மதிக்கிறார்களா, இல்லையா என்றில்லா விடினும், அவர்களுக்குள் ஏமாற்றப்படாத வகைக்கு நம் செயல்கள் பலனளித்து வந்துள்ளன. ஆக, நாம் இவ்வித வசதிகளை மட்டும் கொண்டு பயனில்லை என்பதாலே காரியம் ஏதேனும் சாதிக்க, நம்மீது மக்கள் கொண்டுள்ள உறுதி - நம்பிக்கை இவைகளைக் கருதும்போது எதையாவது சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்; சிந்தித்து ஏதேனும் செய்து வருகிறோம். அவ்விதம் செயலாற்றியதன் பயனாகச் சென்ற சில வருடங்களிலும் முன்னேற்றமும் கண்டு வருகி றோம். இந்த முன்னேற்றத்தைத் தீவிரமாக்க வேண்டும். இது காரணமாகவே இன்றைய அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு அரசியல் துறையில் இருந்து ஒதுங்கியிருந்து பின்னர்ப் பார்க்கலாம் என்று கருத்துக் கொண்டிருக்கிறோம்.

புராண ஒழிவு புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் கூறினோம். அந்தப்படி எரித்தோமோ இல்லையோ அது வேறு விஷயம். நமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டோம். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் குடிஅரசு இதழ்களில் எழுதியிருந்தவை எல்லாம், இன்றைக்குப் பொருந்தக் கூடியனவாக உள்ளன. அந்தக் காலத்திலே காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்த சில தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருவதால் அதற்கான முதல் முயற்சி என்பதாக இந்நாட்டு மக்களுக்குள் பிறவியின் காரணமாக இருந்து வரும் உயர்வு தாழ்வுகளைச் சமுதாய இழிவுகளைக் களைய வேண்டும் என்பதாகத் தீர்மானித்த லட்சியத் தீர்மானத்தைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்தார்கள்.

மற்றொரு சமயம், புராணங்களை எரிப்பது என்பதான திட்டத்தின் விளைவாக இராமாயணம், கந்தபுராணம் இவைகளை எரிப்பதென்று தீர்மானித்தோம். உடனே புலவர்களும், பண்டிதர்களும் இராமாயணம், கந்தபுராணம் இவைகளில் உள்ள ஆபாசங்களை ஒத்துக்கொண்டு, ஆனால், இராமாயணம், கந்தபுராணம் இவைகளை இலக்கி யங்களாகப் பாவியுங்கள்; புராணமாக மதிக்காவிடினும் பரவாயில்லை என்றார்கள். நாம் மறுத்ததும் சிலர் கழகத்தை விட்டு விலகினார்கள். இன்று மற்றொருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித்திருக்கிறோம். இத்தீர்மானங்களின் அவசியத்திற்கு, நமக்கு நல்ல பலமான ஆதாரங்கள் இருக்கின்றன.

துணிவு ஏற்பட்டதேன்?

இந்த ஆதாரங்கள் யாவும் வேத சம்பந்தமானவைகளாக அதுவும் டாக்டர் முன்ஷி, நீதிவாதி டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் தலைமையில் எழுதப்பட்டு வெளிவரும் ஆதாரங்களிலேயே இருக்கின்றன. இவர்கள் சமீப காலத்தில் இந்திய சரித்திர கலாசார ஸ்தாபனம் என்பதாக ஒரு கழகத்தை நிறுவி, இந்தியாவின் சரித்தி ரத்தைத் திருத்தி எழுதி வருகிறார்கள். மொத்தம் எட்டுத் தொகுப்புகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை 2 தொகுப்புகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, முதலாவது தொகுப்பில் வேத காலம் வரை இந்தியாவின் கலாச்சார வரலாற்றை வெளியிட்டிருக் கிறார்கள். எதற்கு ஆக என்றால், இந்நாள்வரை வெளியிடப்பட்டுக் கற்பிக்கப்பட்டு வரும் சரித்திரம் ஒரு சார்பாகவே இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். என்றாலும், அமெரிக்க பிரிட்டிஷ் சரித்திராசிரியர்களும், என்சைக் ளோபீடியா என்ற ஞானக் களஞ்சிய நூலும் மற்ற ஆராய்ச்சியாளரும் எழுதியிருப்பது போலவே தான் இந்த முன்ஷி வகையறாக்கள் அவைபற்றி எழுதியிருப்பதும் இருக்கின்றன. இவைகளைப் பார்த்த பிறகு நம்முடைய தெனக் கூறப்படும் வேதபுராணங்களின் ஆபாசங்களை வெளியிடுவதில் மேலும் துணிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அக்கருத்துக் காரணமாகவே, இப்போது வேதமும் வேதக் கடவுள்களும் என்னும் பொருள்பற்றிப் பெரிதும் அதை அனுசரித்தே பேசலானேன்.

தொடரும்

- விடுதலை நாளேடு, 24. 9. 19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? -10

12.9.2019 அன்றைய தொடர்ச்சி...


திருச்சியில் பெரியார் பேருரை


புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15-20 ஆண்டு களுக்கு முன்பே திட்டம் கூறினோம் என்பதாகவும், இன்று ஒருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித் தோம் என்பதாகவும், தந்தை பெரியார் அவர்கள் திருச்சி தேவர் ஹாலில் 29.3.1953ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறியதோடு, ஏன் திராவிடர் கழகம் இம்முடிவுக்கு வந்ததென்பதையும் தெளிவுபடுத்தியதன் சுருக்கம்:

பேரன்புமிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர் களே! இக்கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்கு முன் பேசிய சைதாப்பேட்டை தோழர் கு.மாணிக்கம், சாதாரணமாக ஓரளவுக்கு எளிய தன்மையில் புராணங்களைப் பற்றியும் அவைகளில் பொதிந்துள்ள ஆபாசங்களைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொன்னார்.

இன்றைய இந்தக் கூட்டத்துக்குப் பெண்கள் வரக் கூடாது என்று விளம்பர அறிக்கையில் போட்டுவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஏன் எனில், நமது கடவுள்கள் விஷயமாக அவ்வளவு ஆபாசங்களைப் புராணங்கள் கொண்டுள்ளன. அக்காலத்தில் ஆபாசங்களைப் புகுத்தாமல் புராணம் எழுதவே முடியாதோ என்னவோ! சிலருக்குக் கொக்கோகம் முதலிய காமதூர விஷயங்கள்தான் பிடிக்குமென்பார்கள். அதைப்போல, நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் காலத்தில் புராணங்களை எழுதியவர்கள் ஆபாசங்களைப் பற்றிச் சிறிதும் வெட்கப்படாமல் (கம்பனைப்போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்) தங்கள் மனதில் நினைத்தையெல்லாம் எழுதியிருக்கிறார்கள். காலதேச வர்த்தமானத்தையொட்டி அந்தக் காலத்திற்கு ஏற்றவாறு அவர்கள் எழுதியிருக்கலாம் என்று கருதினாலும், அந்தப் பரம்பரையர்களுக்கு இன் றுள்ள மதவெறி காரணமாக அவைகளில் உள்ள ஆபாசங்கள் அனைத்தையும் பொதுமக்களுக்கு வெளியிடாமலிருக்க முடியவில்லை.

மேலும், இந்தப் புராணங்கள் முதலியவைகளை நினைத்தவர்கள், தங்கள் தங்கள் விருப்பத்திற்கும், இஷ்டத்திற்கும் ஆபாசங்களுக்கும் ஏற்ற மாதிரியில் எழுதி எழுதி முன்னுக்குப் பின் முரணாகப் போகும் என்றுகூடக் கவலைப்படாமல் சேர்த்துக்கொண்டே வந்துவிட்டார்கள். இப்போது இங்கு வேத சாஸ்திர புராணக் கடவுள் என்பதாக ஒரு பொருள் பற்றி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் நமக்குத் தெரிந்த சங்கதிகளை, நம்முடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டிய வரையில் நமக்குத் தோன்றிய கருத்துக்களை, இன் றைய தினம் மக்கள் எதையெதை தங்கள் வேதமாகவும் தெய்வமாகவும் கருதிக்கொண்டு இருக்கிறார்களோ அவை கள் எல்லாம் பித்தலாட்டங்கள், மக்களை ஏமாற்றுவதற்கும், அடக்கியாளுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சூழ்ச்சியான முறைகள் என்பதைப் பல ஆராய்ச்சிக் கருத்துக்கள் முதலி யவைகளை எடுத்துக்காட்டிச் சொல்லலாம் என்பதற்காகத் தான் இந்தக் கூட்டம் கூட்ட நானும் சம்மதித்தேன். எங்களுடைய கருத்தை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறவர்களல்ல நாங்கள். சொல்லுகிற கருத்துக்களைப்பற்றி மக்கள் சிந்தித்துப் பார்த்து, சரி எனப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக நான் பல முறை கூறி வந்திருக்கிறேன். மறுத்துக் கூறுபவர்கள் முன் வருவதை நான் வரவேற்கின்றேன்.

திராவிடர் கழகம்


ஆனால், திராவிடர் கழகம் ஒன்றுதான் இத்துறையில் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு வருகிறது. அதற்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சி என்ற பேரால் இருந்து வந்த இந்தக் கழகம் சமூகத்துறையில் புகாமல் அரசியலில் மாத்திரம் வேலை செய்து வந்தது என்றாலும் அதனால் மக்களுக்கு அது சமயம் ஓரளவுக்கு அரசியல் உணர்ச்சி வந்தது. ஜஸ்டிஸ் கட்சியும் 18 வருட காலத்தில் ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன சாதிக்கக்கூடுமோ அதையெல்லாம் செய்தது; அதன் மூர்த்தண்யமான சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியும் புது துறையில் புகுந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்பே காங்கிரஸ் கட்சி இருந்துவந்தது; எனினும் அது அப்போ தெல்லாம் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கும் ஆதிக்கமும், உத்தியோகமும் கிடைக்கப் பாடுபடும் ஒரு கட்சியாகவே இருந்து வந்தது; அதன் மூலம் வெள்ளைக்காரனிடமிருந்து உத்தியோகமும், பதவியும், அதிகாரமும், கொழுத்த சம்பள மும் பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி இருந்து வந்தது. போட்டியாக ஜஸ்டிஸ் கட்சி தோன்றி யவுடன்தான் அவர்கள் தமது போக்கை மாற்றிக்கொண் டார்கள். நானும் அந்த மாறுதல் காங்கிரசுடனிருந்தே தான் போராடினேன். அந்த அனுபவம் காரணமாகவே சில காரியங்களையேனும் சாதிக்க விரும்பியே சில நாளிலேயே காங்கிரசிலிருந்து வெளியேறினேன். அரசியலில் உழைப்பது மட்டும் பயன் அளிக்காது; உத்தியோகத்தால் மட்டும் மக்க ளுக்குப் பயனில்லை; அதுவும் உத்தியோகம் எத்தன் மையான மக்களையும் மதிமயக்கமடையச் செய்யத்தான் செய்யும். அதனால் அஸ்திவாரத்தைத் திருத்தி அமைக்க நாம் சமுதாயத் துறையில் பணியாற்றுவதென முடிவு செய்துகொண்டே இறங்கினேன். சமுதாயம் என்றால் இந்து மதச் சமுதாயம்; இந்து மதச் சமுதாயம் என்றால் அதாவது புராண சமுதாயம்தான்.

ஆகவே, இங்கு நான் சமுதாயம் என்னும்போது இந்து சமுதாயத்தையே குறிப்பிடுகின்றேன்.

தொடரும்

- விடுதலை நாளேடு, 19. 9. 19

தந்தை பெரியாரிடம் கற்றதும் - பெற்றதும்...!

பகுத்தறிவுப் பகலவன் என்று பார் போற்றும் தந்தை பெரியாரின் 141 ஆவது ஆண்டு பிறந்த நாளில் வெளியிட, தந்தை பெரியார் அவர்களுடன் நீண்ட காலம் தொண்டாற்றியவர் என்ற முறையில், உங்களது பல்வேறு அனுபவங்கள், பெரியாரிடம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்பவற்றையே ஒரு கட்டுரையாக ஆக்கி எங்களுக்குத் தாருங்கள்'' என்று தினத்தந்தி' ஆசிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டதையொட்டியே இக்கட்டுரை.


கி.வீரமணி,


தலைவர், திராவிடர் கழகம்




நாளை (செப்டம்பர் 17ந் தேதி) தந்தைபெரியார் பிறந்த நாள்.

1943 இல் கடலூர் முதுநகரில் நான் 10 வயது சிறுவனாக இருந்தபோது, என்னை கல்வியிலும், கழகத்திலும் பக்குவப் படுத்திய எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் - அறிஞர் அண்ணா அவர்கள் 1942 இல் தொடங்கிய திராவிட நாடு' வார ஏட்டிற்கு கடலூர் தோழர்கள் - வாசகர்கள் சார்பில் ரூ.பாய் 112 திரட்டியதை - ஒரு பொதுக்கூட்டம் போட்டு அறிஞர் அண்ணாவிடம் அளிக்கப்பட்டது; அந்த மேடையில் மேசைமீது என்னை ஏற்றி, அவர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேச வைத்தார். அதுதான் எனது கன்னிப் பேச்சு - மேடை அரங்கேற்றமும்கூட!

வாரம் தவறாமல் விடுதலை', குடிஅரசு', திராவிட நாடு' ஏடுகளை மாணவர்களாகிய நாங்கள் படிப்போம். கழகக் கொள்கை விளக்கங்களை - படிப்பு - டியூஷன் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பில் எனது ஆசிரியர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து, பக்குவப்படுத்தினார்!

சாரங்கபாணி என்று என் வீட்டார் எனக்கு வைத்த பெயரை, வீரமணி' என்று மாற்றி வைத்தார் எனது ஆசிரியர்.

'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு'


அடுத்த ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' என்ற தலைப்பில், கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் காலை முத்தய்யா டாக்கீஸ் என்ற திரையரங்கில் மாநாடு - தந்தை பெரியார் திறப்பாளர், அறிஞர் அண்ணா மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசிய மாநாடு.

29.7.1944 அன்று,

தந்தை பெரியாரைப்பற்றிப் படித்தும், எனது ஆசிரியர் சொல்லியும் அறிந்த எனக்கு ஒரு மகிழ்ச்சி யான வாய்ப்பு - முதல் நாள் இரவே வந்து திருப்பாதிரிப் புலியூரில் ஒரு சத்திரத்தில் தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் என்னை அழைத்துச் சென்று, அறிமுகப் படுத்தினார் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள். அன்னை கே.ஏ.மணியம்மையார் அய்யாவுடன் இருந்தார்.

நான் கண்டு பயந்த ஒருவர் காட்டிய பாசம்தான், இறுதிவரை நீடித்தது; நிலைத்தது!


அய்யாவைப் பார்த்தவுடன் ஒரு பயம் கலந்த மரியாதை, சிங்கத்தைப் பார்த்து பயந்தும், மகிழ்ந்தும் உள்ள ஒரு சிறுவனின் மனநிலை. அய்யா அன்புடன் என்னை அழைத்து அருகில் நிறுத்தி, என்னைப்பற்றிய விவரங்கள் கேட்டு, நல்லா படியுங்கள்!' என்று கூறி அனுப்பினார். என் வாழ்வின் திருப்பமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்த நாள். அன்று நான் கண்டு பயந்த ஒருவர் காட்டிய பாசம்தான், இறுதிவரை நீடித்தது; நிலைத்தது - எனக்குப் பேறாய் கிடைத்தது!

அன்றைய மாநாட்டில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் என்னை இந்தக் கொள்கையிலும், இயக்கத்திலும் கட்டிப்போடக் காரணமாய் அமைந்தன.

ஒன்று, முற்பகல் மாநாட்டில் நான் மேசைமீது ஏற்றி நிறுத்தப்பட்டு, அய்யா, அண்ணா மற்றும் இயக்க முக்கி யஸ்தர்கள், தோழர்கள் சுமார் ஆயிரம் பேருக்குமேலே கூடிய கூட்ட அரங்கில், பேசினேன் - உற்சாகக் கை தட்டல்கள் என்னை பயமறியாத இளங்கன்றாக ஆக்கியது.

அடுத்துப் பேசிய அறிஞர் அண்ணா என் பேச்சைக் குறித்து, இப்போது பேசிய இந்த சிறுவன், வைதீக மேடையில்  இப்படிப் பேசினால், பார்வதி பாலை உண்ட திருஞானசம்பந்தன் என்று கூறியிருப்பார்கள் அவர்கள்; அவன் உண்டது பெரியாரின் பகுத்தறிவுப் பால்; இளம் வயதிலேயே இப்படித்தான் பகுத்தறிவுப் பால் மாணவச் சிறுவர்கள் முதற்கொண்டு ஊட்டப்படவேண்டும்'' என்றார். அன்று முதல் பலர் - திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தன்'' என்று இன்றுகூட அண்ணா சொன்னதை நினைவூட்டியே வருகிறார்கள்.

எவ்வித பதற்றமுமின்றி அந்த எதிர்ப்பை அய்யா எதிர்கொண்ட விதமும், அவர்மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்தியது


மாநாட்டில் அடுத்து தந்தை பெரியார் பேசிக் கொண்டு வரும்போது, ஒருவர் அய்யாவைப் பார்த்து இராமசாமி நாயக்கரே  உம் பேச்சை நிறுத்தும்' என்று கூச்சலிட்டார். எல்லோரும் ஆத்திரப்பட்டதை அய்யா அமைதிப்படுத்திவிட்டு, என்ன சந்தேகம் கேளுங்கள், பதில் கூறுகிறேன்' என்று தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் பேசியது எனது பிஞ்சு உள்ளத்தில் அந்த வீரமும், எவ்வித பதற்றமுமின்றி அந்த எதிர்ப்பை அய்யா எதிர்கொண்ட விதமும், அவர்மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பையே விதைத்துவிட்டது!

இப்படி ஒரு துணிவுள்ள தலைவரா? அவமானத்தைக்கூட எதிர்கொண்ட  முறை வியப்பானது!


மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் - பல்லாயிரக்கணக்கில் மக்கள் பெருந் திரள் - அய்யா பேசி முக்கால் மணிநேரத்தில் அடை மழை! கூட்டம் அத்துடன் முடிவுற்று, கைரிக்ஷாவில் தந்தை பெரியாரை திருப்பாதிரிப்புலியூர் தொடர் வண்டி நிலையத்திற்கு அழைத்து வருகிறோம் நாங்கள். மாணவர்கள், தோழர்கள் உடன் வந்தனர். கெடிலம் ஆற்றுப்பாலம் (பழையது) ஒரே இருட்டு - மின்சாரம் நின்றுவிட்டது. பாம்பு, பாம்பு'' என்று யாரோ பாம்பைப் போட்டனர். அதைப் பொருட்படுத்தாது ரிக்ஷா இழுத்த தோழர் தொடர்ந்தார். பிறகு அய்யா ரிக்ஷாவைத் திருப்பச் சொன்னார். சிறிது தூரம் ரிக்ஷா சென்றதும், மீண்டும் திருப்பச் சொன்னார். டார்ச் லைட்டுகள்தான் வெளிச்சம் - தொடர் வண்டி நிலையத்தில் வந்து தங்க வைக்கப்பட்டார் - தொடர் வண்டி வர நேரம் நிறைய இருந்தது. சென்னைக்குப் பயணமாகிறார். அருகில் நின்றிருந்த தோழர்களிடம் உற்சாகத்துடன் பேசினார் அய்யா - நான் ஏன் ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன் என்று நீங்கள் யாரும் கேட்கவில்லையே!'' என்று அய்யா கூறிவிட்டு, தனது தோல் கைப்பெட்டியைத் திறந்தார் - மீண்டும் மின்சாரம் வந்துவிட்டது - அதிலிருந்து இரண்டு செருப்புகளைக் காட்டினார். ஒன்று என் மடியில் வந்து விழுந்தது; ஒரு செருப்புப் போட்டவனுக்கு மற்றொரு செருப்புப் பயன்படாது என்பதால், ரிக்ஷாவை திருப்பச் சொன்னேன்; இன்னொரு செருப்பையும் வீசுவான் என்று எதிர்பார்த்தேன், அது இரண்டு பேருக்கும் நல்லதுதானே'' என்றார்.

அய்யோ இப்படி அய்யாவுக்கு ஆகிவிட்டதே நம்மூரில்!'' என்ற கோபம் எனது ஆசிரியர், தோழர் களுக்கு, எங்களுக்கு ஏற்பட்டது என்றாலும், எனது உள்ளத்தில் இப்படி ஒரு துணிவுள்ள தலைவரா? அவமானத்தைக்கூட அவர் எதிர்கொண்ட முறை வியப்பானதாக உள்ளதே என்று மலைப்பு ஏற்பட்டது. எனது ஆசிரியரும், தோழர்களும் அய்யாவை அனுப்பிவிட்டு, பேசியது என்னை மேலும் சிந்திக்க வைத்தது!

அடுத்த சில வாரங்களில் சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றப்பட்ட நீதிக்கட்சி மாநாடு. அதற்கும் எங்களை எங்கள் ஆசிரியர் அழைத்துச் சென்றார்; தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்ட தோழர்களின் உணர்ச்சிக் கடல் என்னைப் போன்ற வர்களின் உள்ளத்தில் பசுமையாகப் பதிந்தது.

தலைமை என்றால் தந்தை பெரியார்தான் என்ற விதை மிக வேகமாக மேலும் என் உள்ளத்தில் வளர்ந்தது.

1945, 46 ஆம் ஆண்டுகளில் ஈரோட்டில் திராவிட மாணவர்கள் கோடை விடுமுறைப் பயிற்சி; இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தந்து பல மாவட்டங்களுக்கு அவர்களை பயிற்சிக் களத்திற்கு அனுப்புவதுபோல் செய்ததில் என்னை சேலம் மாவட்டம், கோவை மாவட்டத்திற்கு, தஞ்சை மாவட்டத்திற்கு அனுப்பி, 1945-46 ஆகிய ஆண்டுகளில் பங்கேற்கச் செய்ததில் மேலும் பிடிப்பும், பரப்புரை பயிற்சியும் வளர்ந்தது!

ஒழுங்கு, கட்டுப்பாட்டை எங்களுக்குப் போதிப்பார்!




தந்தை பெரியார் அவர்கள், எதையும் வீணாக்கக் கூடாது; செல்லும் ஊர்களில் சிக்கனமாகவும், எளிமை யாகவும் ஏற்பாடு செய்யும் கழகத் தோழர்களை சங்கடத்திற்கு ஆளாக்கக் கூடாது. எந்த நிகழ்ச்சி யானாலும் ஒப்புக்கொண்டு விட்டால் கட்டாயம் சென்று கலந்துகொள்ளவேண்டும் என்ற ஒழுங்கு, கட்டுப்  பாட்டை எங்களுக்குப் போதிப்பார்கள்!

ஒருமுறை, அய்யாவிடமிருந்து கடலூருக்குத் தந்தி, சேலத்திற்கு உடனே புறப்பட்டு வந்து என்னை சந்தி யுங்கள்'' என்று. அதன்படி கடலூரிலிருந்து சென்றேன்; அன்னை மணியம்மையார் அவர்களும் சொன்னார், அய்யாவுக்கு 102 டிகிரி காய்ச்சல் - வயிற்றுப் போக்கும் உள்ளது. சேலம் மாவட்டச் சுற்றுப்பயணத்தில் 3, 4 ஊர்கள் - அரூர் பகுதியில் பொதுக்கூட்டங்களை அய்யா தள்ளி வைக்க விரும்பவில்லை; நீங்கள் பேசினால், பிறகு கொஞ்ச நேரம் அய்யாவும் பேசி, முடித்துவிடலாம்; ஏற்பாடு செய்த தோழர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்கும் என்பதற்காகத்தான் உங்களை வரவழைக்கச் சொன்னார்'' என்றார்.

அதன்படி அடுத்த நாள் அய்யாவின் உடல்நலம் சற்று குணமடைந்தது. ஜூரம் குறைந்தது. சோர்வு, அசதி என்றாலும் வேனில் புறப்பட்டோம்.

தனக்குத்தானே சமாதானம் அடைந்தார்!


அய்யா எதையும் மறைத்துப் பேசவே மாட்டார். என்ன நினைக்கிறாரோ அதை தமது தோழர்களிடம் வெளிப்படையாகவே கூறத் தயங்கமாட்டார்!

கோவை மில் ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து வட்டியை இயக்கத்தின் செலவுகளுக்குப் பயன்பட வழி செய்தேன். அம்மில் அதிபர் இன்சால் வெண்ட் கொடுத்துவிட்டார். அதை நினைத்ததும் எனக்கு ஒரு அதிர்ச்சி - அதுவும் எனது சுகவீனத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்'' என்றவர், சிறிதுநேர அமைதிக்குப் பின், அவரே அந்தக் கவலையிலிருந்து நீங்கிய நிலை பளிச்சிட்டதைப்போலச் சொன்னார், உம் அவர்கள் பல ஆண்டுகளாகத் தந்த  ஆண்டு வட்டியே இழந்த ஒரு லட்சத்திற்குமேல் வந்திருக்கும். பரவாயில்லை'' என்று தனக்குத்தானே சமாதானம் அடைந்தார்!

கூட்டங்களில் ஒரு மணிநேரம், ஒன்றரை மணிநேரத்திற்குக் குறைவில்லாமல் பேசினார். அவரது உடல்நலக் குறைவு, மக்களைப் பார்த்தவுடன் ஏற்கெனவே மனதிலிருந்த தொகை இழப்பு எல்லாம் மறைந்துவிட்டதைக் கண்டு  வியப்படைந்தோம்!!

பொதுத் தொண்டு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நட்டம் எல்லாம் அய்யாவுக்கு ஒரு பொருட்டல்ல என்பதைப் புரிந்துகொண்டோம் - இதிலிருந்து!

தயவு தாட்சண்யம் பாராமல்  கண்டிக்கவும் தயங்கமாட்டார்!


தனது தோழர்களுடன் செல்லும்போது, உபசரிக்கும் விருந்தினர் அய்யாவுடன் வந்த தோழர்களுக்குப் பரிமாறுவதையும், தான் சாப்பிடும்போதும்கூட ஒரு பார்வையிடுவார்.

யாராவது இலையில் அல்லது தட்டில் மிச்சம் வைத்தால், அதை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கவும் தயங்கமாட்டார்!

அய்யாவை, கஞ்சன், கருமி'' என்றெல்லாம் கூறுபவர்கள், அவரை அறிந்துகொள்ளத் தவறியவர்கள். அல்லது மேம்போக்காக நுனிப்புல் மேய்பவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

தனது முழுச் சொத்தையும் பொது அறக் கட்டளையாக்கி, அதில் தனது சொந்த பந்தங்களை இடம்பெறச் செய்யாது - பொதுமக்களுக்கே ஆக்கி வைத்த தலைவர் வேறு யார்?

எதற்குச் செலவழிக்கவேண்டுமோ அதற்குத் தாராளமாய்ச் செலவு செய்வார்; ஆடம்பரம், தேவைக்கு அதிகமாகச் செலவழித்துத் தகுதிக்கு மீறி வாழுவது பொதுத் தொண்டர்களுக்கு ஏற்றதல்ல என்பதை வகுப்பில் பாடம் எடுப்பதுபோல் உணர்த்துவார்கள்.

மற்றவர்களுக்குக் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு என்னை அவர்கள் விடுதலை'க்கு ஆசிரியராக நியமித்தபோது, வரவேற்கிறேன்' என்ற தலைப்பில் இரண்டு அறிக்கைகளை விடுத்தது மட்டுமல்லாது, விடுதலை'யை  அவரது ஏகபோகத்திற்கே விட்டு விடுகிறேன்'' என்றும் எழுதினார். அந்த நாளில் சிந்தா திரிப்பேட்டையில் இருந்த விடுதலை' அலுவலகத்திற்கு அழைத்து வந்து, என்னை நாற்காலியில் அவருக்கு எதிரில் அமர வைத்தார்; அதுபோலவே, எனது பணிகளை இறுதிவரை ஊக்கமூட்டி, உற்சாகப்படுத்தி னார்களே தவிர, ஒருநாள்கூட கண்டித்ததே இல்லை.

ஆசிரியர்' என்ற அடைமொழி அய்யா தந்தது; பயன்படுத்தியது. பெரியார் திடலில் வந்து தங்கும் போதுகூட, ஆசிரியர் வந்துவிட்டாரா?' என்றுதான் கேட்பார். இது எனக்குப் பெருமையைத் தர அல்ல - ஒரு பொறுப்பை ஒருவரை நம்பி கொடுத்துவிட்டால், அப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நாம் மரியாதை தந்தால்தான், மற்றவர்கள் அவரை மதிப்பதோடும், ஒழுங்காக ஒத்துழைப்பு நல்கவும் ஆன சிறந்த நிர்வாக முறையும்கூட என்பதால்தான். பிறர் கற்கவேண்டிய பாடம் இது!

ஒரு தடவை, பல ஆண்டுகள் அய்யாவை தெரிந்த பணி செய்யும் ஒரு தோழர் அலுவலகத்தில் ஏதோ சம்பள உயர்வு கேட்க அய்யாவிடம் சென்று பேச்சைத் தொடங்கியவுடன், தந்தை பெரியார், நீங்கள் என்னை வந்து சந்திப்பதற்குமுன் ஆசிரியரிடம் சென்று அனுமதி பெற்று வந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டு, திருப்பி அனுப்பியதை, அந்த நண்பரே பிறகு என்னிடம் கூறி, தனது தவறான நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்

தீரா விடும்பை தரும்

(குறள் 510)

என்ற குறளுக்கு ஏற்ப, இவரது தலைமை ஆளுமையில் அவர்கள் ஒருவரை நம்பி பொறுப்புக் கொடுத்துவிட்டால், பிறர் சொல்வதைக் கேட்டு, நம்பி தன் கருத்தை உடனடியாக மாற்றிக்கொள்ளவோ, அதை வைத்து அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கவோ முன்வரமாட்டார்கள்.

மனிதர்களை சரியாக எடைபோடத் தவறமாட்டார்!


சக தோழர்கள் தவறுகள் செய்தாலும்கூட, அய்யா சொல்வார், நாம் இன்னும் கொஞ்சம் Long Margin    கொடுத்துப் பார்ப்போம் - திருந்துகிறாரா'' என்று!

மீறி ஏதாவது நடந்தால்கூட, ஒரே வார்த்தையில் ஒரு விளக்கத்தைத் தருவார்கள்.

அது அவரவர் ஜீவ சுபாவம்; எப்படி அதை மாற்ற முடியும்? நாம் புரிந்துகொள்ளாதது நமது தவறே ஒழிய, அவர் தவறல்ல'' - ஒரு அருமையான தத்துவ விளக்கம்போல் கூறுவார்கள்!

எதையும் ஆழமாகக் கவனிப்பார்;  மனிதர்களை சரியாக எடைபோடத் தவறமாட்டார்!

ஒருமுறை நான், அய்யாவிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புகின்றனர் சிலர் என்று (பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு) கூறிக்கொண்டிருந்தபோது, என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதைக் கவனித்துவிட்டு, என்னை அமைதிப்படுத்தும் வகையில் சொன்னார்,

அடப் பைத்தியக்காரா, உன்னை பெரிய புத்திசாலி என்று நினைத்தேன் - நீங்கள் இதற்கெல்லாம் மன வருத்தம் அடையலாமா? மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என்று கவலைப்படுபவர்களால் எதையும் சரியாகச் செய்ய முடியாது. (பைத்தியக்காரா என்பது அவரது வாஞ்சை பொங்கும் சந்தர்ப்பங்களில் அவர் வாயிலிருந்து வரும் சொற்கள் ஆகும்!) நான் என்ன உன்னைப்பற்றி நினைக்கிறேன் என்பதைப்பற்றி மட்டும் யோசித்துப் பார்; மற்றவர்கள் என்ன பேசினால், எழுதினால் என்ன?'' என்று கூறியது மிகப்பெரிய அறிவுரை - அனுபவத்தின் முத்திரையோடு முகிழ்ந்த அறிவுரை அல்லவா!

 

அறிவு நாணயம் - சொல் தவறாமை!




அய்யாவிடமிருந்து எவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய பாடம் - அறிவு நாணயம் - சொல் தவறாமை!

ஒருமுறை ஈரோட்டில் அவரது சொத்து ஒன்றிற்கு மாத வாடகை 300 ரூபாய் தருவதாக ஒருவர் கூற, அய்யா அப்போதுள்ள ஊர் நிலவரம் அறியாமல், பழைய மதிப்பீட்டையே வைத்து அத்தொகைக்கு அய்யா ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால், அதன்பிறகு ஈரோட்டில் அவரது பொறுப்பாளராக இருந்து வந்த அவரது தங்கை மகன் திரு.எஸ்.ஆர்.சாமி வந்து, என்னய்யா நீங்கள் எங்களைக் கலந்தாலோசிக்காமல் இப்படி குறைந்த தொகைக்கு ஒப்புக்கொண்டு விட்டீர்கள். மற்றவர்கள் மாத வாடகை 1000 ரூபாய் தரத் தயாராக உள்ளனர். அதனால், ஒப்பந்தம் எழுத்துமூலம் போடாததினால், புதியவருக்கே கொடுக்கலாம், தவறில்லை'' என்று கூறினார். ஆனால், பிடிவாதமாக அய்யா அதை ஏற்க மறுத்துவிட்டார்.

எப்போது நான் வாக்குக் கொடுத்து சரி என்று சொல்லிவிட்டேனோ, இப்போது கூடுதல் தொகைக்காக வாக்குத் தவறுவது நாணயக்கேடு ஆகாதா? ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்'' என்று கூறி, பழையவருக்கே அதைக் கொடுத்தார். அவர்தாம் பெரியார்!

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அரசியலிலும் உண்டு. எங்களுக்கு அச்சம்பவங்கள் பாடங்களாக என்றும் அமையும்.

பரிந்துரைக் கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்துத் தருவதற்கு என்னிடம் தருவார்கள். கல்லூரியில் இடம், வேலை வாய்ப்புகளுக்குக் கடிதம் கொடுப்பார்கள் - எவருக்கும் உதவுவதில் பின்வாங்கவே மாட்டார். அப்படி உதவி கேட்பவர்கள், பழம் முதலியன கொண்டு வந்தால், வாங்கவே மாட்டார்கள். திருப்பி விடுவார்கள். மற்றபடி அன்பாக யார் எதைக் கொடுத்தாலும், அதை வாங்கி, மலை வாழைப்பழம் என்றால் ஒரு சீப்பில் ஒன்றைப் பிய்த்து, அவர் எதிரிலேயே சாப்பிட்டு, கொடுத்தவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி, தானும் மகிழ்வார்!

சில நேரங்களில் சென்னை வந்தபோது, நான் இன்னாருக்கு ஆக கடிதம் கொடுத்தேன், அது என்னவாயிற்று? நடந்ததா? தகவல் ஏதும் தெரியுமா?'' என்று கேட்பார்.

அய்யாவிடம், அது உடனே நடந்துவிட்டது, அவரிடம் நானும் தெரிவித்தபோது, அய்யாவிடம் நானே சொல்லி விடுகிறேன்'' என்று என்னிடம் சொல்லிவிட்டுப் போனார் அய்யா'' என்றவுடனே, பரவாயில்லை; அவர் வரவில்லை. கிடைக்காமல் இருந்தால் வந்திருப்பார், மீண்டும் சொல்லுங்கள் என்று; கிடைத்தால் நம்மாட்கள் வரமாட்டார்கள், அதுதான் மக்களின் சுபாவம்'' என்று சாதாரணமாகக் கோபம், எரிச்சல் இன்றி சிரித்துக்கொண்டே சொல்வார்!

இதுவும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அல்லவா?

தான் யாருக்கு உதவி செய்தாலும்,  அதை விளம்பரப்படுத்தவே மாட்டார்


அய்யா அடிக்கடி சென்று சில கழக முக்கியஸ் தர்கள் வீட்டில் தங்கி, ஊருக்குத் திரும்புவது வாடிக்கை. அவர்கள் பெரும் வாய்ப்பாகக் கருதி, அய்யாவை உபசரிப்பார்கள். ஆனால், அய்யா பெரியார், அம்மா மணியம்மையார் இருவரும் அதை ஈடுசெய்யும் வகையில் முக்கிய பொருள் களை அவ்வப்போது வாங்கிச் சென்று விளம்பர மின்றி செய்துவிட்டு திருப்தி அடைவார்கள்!

தான் யாருக்கு உதவி செய்தாலும், அதை விளம்பரப்படுத்தவே மாட்டார். ஏன் சில நேரங் களில் அருகில் உள்ள அன்னை மணியம்மையார் போன்றவர்களுக்குக்கூடத் தெரியாமல், உதவி செய்வார். பிறகு செக் - கவுண்ட்டர் ஃபாயில் கணக்கு வரும்போது அவர்களுக்குத் தெரிய வரும், அது இயல்பு.

என்னிடம் ஒரு ரயில்வே அட்டவணை - 3 மாதத்திற்கொருமுறை அப்போது ரயில்வே துறை வெளியிட்ட ரயில்வே கைடு' - கால அட்டவணை பற்றிய தகவல் தொகுப்பு இருந்தது. அய்யாவுடன் சுற்றுப்பயணத்தின்போது வாங்கினேன் பல ஆண்டுகளுக்கு முன்பு. அந்த ரயில்வே கைடை' அய்யா நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்' என்றேன் நான், உடனே அய்யா அவர்கள், நாலணாவை வற்புறுத்தித் தந்தார். இலவசமாக எதையும் எளிதில் பெற்றுக்கொள்ளமாட்டார்.

இலசவமாகக் கொடுத்தால், படிக்கமாட்டார்கள்!




அய்யாவின் பிறந்த நாளையொட்டி அவர்களது கருத்து விளக்கங்களைத் தொகுத்து, சிந்தனை விருந்து' என்ற தலைப்பில், 16 பக்கங்கள் கொண்ட ஒரு நூலைத் தயாரித்தோம். அட்டையின் பின்பக்க விளம்பரம்மூலம் அதன் அடக்கச் செலவு சரியாகிவிட்டது; எனவே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை கொடுத்துப் பரப்ப ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு, அய்யாவிடம் காட்டினோம்; இதனை இலவசமாக மக்களுக்குத் தரப்போகிறோம் என்று கூறியவுடன், தந்தை பெரியார் எங்களைப் பாராட்டவில்லை; மாறாக, இலசவமாகக் கொடுத்தால் படிக்கமாட்டார்கள், மக்கள், வாங்கிக் கிழித்து, வேறு பயன்பாட்டிற்கே அதனை உபயோகப்படுத்துவர்; இலவசம் என்றால், நம் மக்கள் ஒரு கையால் என்ன, இரண்டு கைகளாலும்கூட வாங்குவர்; அதனால் 10 காசு வாங்கிக்கொண்டு கொடுங்கள், படிப்பார்கள். உங்கள் நோக்கம் நிறைவேறும்'' என்றார்!

அதுவும் எங்களுக்குச் சரியான பாடம்தானே!

அதுமட்டுமா?

எங்களுக்கு வழிகாட்டும்  கலங்கரை வெளிச்சங்கள்!


யாரைப்பற்றியும், எதுப்பற்றியும் அவரது நுண்மாண் நுழைபுலம் - ஆழ்ந்த பட்டறிவு - கனிவும், செறிவும் உடையது என்பதை நான் பார்த்து, அனுபவித்து, மகிழ்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் எத்தனையோ உண்டு.

இன்றும் தனி வாழ்விலும் சரி, பொதுவாழ்விலும் சரி என்னை  - என்னைப் போன்ற எண்ணற்ற தோழர்களை, குடும்பங்களை நெறிதவறாத வாழ்வு - நாணயம் கெடாத, நன்றியை எதிர்பாராது பணி செய்யும் வாய்ப்பாக எங்களுக்கு அவை வழிகாட்டும் கலங்கரை வெளிச்சங்களாக உள்ளது!

நன்றி என்பது பயன்பட்டவர்கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று; எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்'' - இப்படி 1933 குடிஅரசி'ல் எழுதியது எத்தகைய ஆழமான அறிவுரை; அதை எழுதியதோடு நிற்காமல், அதை இறுதிவரை கடைப்பிடித்து ஒழுகி, மற்றவர் களுக்குப் பாடமானார்.

ஒருமுறை எனக்கு ஏற்பட்ட விசித்திர அனுபவம். அய்யா என்னை அழைத்து மிகப்பெரிய பொறுப்பில் இருந்த ஒருவரிடம் சென்று, நான் சொல்வதை அப்படியே அவரிடம் கூறுங்கள். அவருக்கு அது பயனளிக்கும்'' என்று கூறினார்கள். நான் எனது சிறுகுறிப்பு ஏட்டில் அந்த வாசகங்களை அப்படியே எழுத்து மாறாமல் குறித்துக்கொண்டு, அவரைத் தனியே சந்தித்து, அய்யா கூறிவரச் சொன்னதை அப்படியே சொன்னேன். அவரும், அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார்; இன்ப அதிர்ச்சியோடு அய்யாவுக்கு நன்றியும் சொல்லச் சொன்னார்!

நீங்கள் யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளுங்கள் - அதை நாம் எதிர்கொண்டு சமாளித்துவிடலாம்; ஆனால், நண்பர்களாகப் பழகுபவர்களை மாத்திரம் மிகவும் கவனமாகப் பார்த்து தேர்வு செய்து பழகுங்கள்; இன்றேல் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டு, பிறகு அது வேதனையைத் தரும்.''

பொதுவாழ்வில் பெரிய பொறுப்பில் உள்ளவருக்குத் தந்தை - தலைவர் என்ற நிலையில் இருந்தவர் எத்தகைய பயனுறு அறிவுரையை அளித்தார் பார்த்தீர்களா?

அன்றும், இன்றும், என்றும்  துணை நிற்கின்றன!


என்னை செதுக்கிக் கொள்ள இந்தப் பாடங்கள், அன்றும், இன்றும், என்றும் துணை நிற்கின்றன.

எனக்கு சொந்த புத்தி கூட வேண்டாம்; பெரியார் தந்த புத்தி போதும்' என்று ஒருமுறை கூட்டத்தில் நான் பேசியதற்கு, பகுத்தறிவாளர்கள் இப்படிப் பேசலாமா?'' என்ற கடும் விமர்சனம் எழுந்தது. அதற்கு நான் அளித்த பதிலை இங்கே பதிவு செய்தால், அதே கேள்வியை இப்போதும் கேட்கத் துடிப்போருக்கும்கூட அது சரியான விளக்கம் ஆகும்.

என் சொந்த புத்திக்கு உள்ள பகுத்தறியும் தன்மையைவிட, பெரியார் தந்த புத்திக்குக் கூடுதல் திறன் உண்டு; என் சொந்த புத்திக்கு சபலங்கள், பலவீனங்கள் உண்டு. பெரியார் தந்த புத்திக்கு அது அறவே கிடையாது; ஆகவே, அதைப் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது - பொதுத் தொண்டுக்கு மிகவும் உகந்தது'' என்றேன்.

தந்தை பெரியார் கூறியது  நூற்றுக்கு நூறு உண்மை!


இளமை முதலே தந்தை பெரியார் தொண்ட னாக, பெரியாரின் வாழ்நாள் மாணாக்கனாக இருந்துவரும் அரிய வாய்ப்பினால், தனி வாழ்க்கை யில் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடவோ, முறையற்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டதோ கிடையாது. எங்களைப் பொறுத்தவரை, சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு' என்று தந்தை பெரியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையாகும்!

அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற - பெற்ற பாடங்கள் உற்ற  துணையாக என்றும் வழிகாட்டும்!


இப்படி எத்தனை எத்தனையோ, பல்கலைக் கழகப் படிப்பும், பட்டங்களும் தராத பாடங்கள் எங்களை - இந்த இயக்கத்தை கட்டுப்பாடு காத்து, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்'' இரட்டை வேடதாரிகளாக இல்லாது, பேசுவதும், செயல்படுவதும் சுயமரியாதை, பகுத்தறிவு வாழ்க்கை நெறி என்பதையே அடித்தளமாக வாழ்ந்து வருவதற்கு அய்யாவிடம் 70 ஆண்டுகளுக்குமேல் கற்ற - பெற்ற பாடங்கள் உற்ற  துணையாக என்றும் வழிகாட்டும்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

- நன்றி: 'தினத்தந்தி' 16.9.2019

- விடுதலை நாளேடு, 16. 9 .19