புதன், 4 செப்டம்பர், 2019

ஜீனியர் விகடன் பார்வையில்.... சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாடு (27.8.2019)

திராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன?




தமிழகத்தின் முக்கிய சமூக இயக்க மான திராவிடர் கழகம் உருவாகி, 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எந்தச் சேலத்தில் 1944, ஆகஸ்ட் 27-இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றதோ, அதே சேலத்தில் பவள விழாவைக் கொண்டாடி முடித்திருக்கிறது திராவிடர் கழகம்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கல்வி யிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர் களே அதிக இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதாக பிராமணர் அல்லாதோர் நினைத்ததன் விளைவாக, தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. அது ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையை நடத்தியதால் ஜஸ்டிஸ் கட்சி என்று ஆங்கிலத்திலும் நீதிக்கட்சி என்று தமிழிலும் அழைக்கப்பட்டது. இதை எதிர்கொள்ள காங்கிரஸிலும் பிராமணர் அல்லாதாருக்காக சென்னை மாகாணச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஈ.வெ.ரா.பெரியார், வரதராஜுலு (நாயுடு), திரு.வி.க. ஆகியோர் முன்னணித் தலைவர்களாக இருந்தார்கள்.

சுயமரியாதை இயக்கம் தொடக்கம்!


வைக்கம் போராட்டத்தில் காந்திக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்துவேறு பாடுகள், சேரன்மாதேவி குருகுலப் பிரச் சினை ஆகியவற்றைத் தொடர்ந்து காங்கிரஸில் பிராமணர் ஆதிக்கம் என்ற கருத்து பெரியாருக்கு வலுக்கத் தொடங் கியது. அனைத்து சாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1921, 1923, 1924 என்று மூன்று மாகாண மாநாடு களிலும் கொண்டுவந்தார் பெரியார். தீர்மானம் ஏற்கப்படவில்லை. இறுதியாக 1925இ-ல் திரு.வி.க தலைமையில் நடந்த காஞ்சிபுரம் மாகாண மாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்கப் படாததால் மாநாட்டிலிருந்தும் காங்கிரஸி லிருந்தும் வெளியேறினார் பெரியார்.

திராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன?


சாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்மம், பெண்ணுரிமை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்வைத்து சுயமரி யாதை இயக்கத்தைத் தொடங்கி நடத் தினார். 1933இல் ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்து காங்கிரஸ், நீதிக்கட்சி இரண்டில் எந்தக் கட்சி அதை ஏற்கிறதோ, அந்தக் கட்சியை ஆதரிப்பதாகப் பெரியார் அறிவித்தார். வேலைத் திட்டத்தை ஆதரித்த நீதிக்கட்சியை தொடர்ந்து ஆதரித்தார். நீதிக்கட்சி, பிரா மணர் அல்லாதார் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தாலும் அது சடங்குகள் உள்ளிட்ட பிராமணிய நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை. மேலும் மிட்டா மிராசுகள், ஜமீன்தார்கள், அரசர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்ததால், அடித்தட்டு மக்களுக்கும் நீதிக்கட்சிக்கும் நீண்ட இடைவெளி இருந்தது. 1938-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த பெரியார், நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் உருவப்படத்தைக்கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது. 1944இ-ல் சேலம் மாநாட்டில் நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆனது. அண்ணாவால் முன் மொழியப்பட்ட அந்தத் தீர்மானம் அண்ணாதுரை தீர்மானம் என்றே அழைக்கப்பட்டது.

திராவிடர் கழகம் என்ற பெயர் ஏன் என்பதற்கு பெரியார் அளித்த விளக்கம், இந்த இயக்கம் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது. பார்ப்பனர்களை முன்னிறுத்தி நாம் ஏன் அல்லாதாராக இருக்கவேண்டும்? என்ற பெரியார், பார்ப்பனர் அல்லாதாரை `திராவிடர் என்றழைத்தார். உண்மையில் திராவிடர் என்ற பெயர் பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், ரெவரெண்ட் ஜான் ரத்தினம் போன்ற பலர் திராவிடர் என்ற சொல்லைப் பயன் படுத்தியிருக் கின்றனர். சாதிபேதமற்ற பூர்வ தமிழர்களே திராவிடர்கள் என்றார் அயோத்திதாசர். ஆனால், அதை ஓர் இயக்கமாக மாற்றியவர் பெரியார்.

தி.க.ஏற்படுத்திய மாற்றங்கள்!


திராவிடர் கழகம், தமிழர்களின் அரசியல், சமூக, பொருளியல், பண்பாட்டு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். தமிழகத்தில் சுதந்திரப் போராட் டக் காலத்துக்கு முன்பிருந்தே நீதிக்கட்சி ஆட்சியால் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், சுதந்தி ரத்துக்குப் பிறகு அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 1950இல் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்துக்கு முரணா னது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து பெரியார் நடத்திய மாபெரும் போராட் டத்தால் இந்தியாவில் முதல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இடஒதுக் கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப் பட்டது. அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம், பிராமணாள் கபே அழிப்புப் போராட்டம் என்று போராட்டங்களையே தன் வழி முறையாகக் கொண்டது திராவிடர் கழகம்.

தேர்தல் அரசியலை கடுமையாக விமர்சித்து அதில் பங்கேற்பதைத் தவிர்த்தாலும், இந்திய விடுதலைக்குப் பிறகு தேர்தல் அரசியலும் அரசுமுறையும் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந் தார் பெரியார். காமராசர், அண்ணா, கருணாநிதி போன்றோரின் அரசுகளை ஆதரித்தார். பெரியார் - காமராசர் -நெ.து. சுந்தரவடிவேலு கூட்டணியால் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கான கல்வி பரவலாகக் கொண்டு செல்லப்பட்டது. அனைவரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை, சாதி மறுப்புத் திருமணத் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, உயர் நீதிமன்ற நீதிபதியாக தாழ்த்தப்பட்டோர் நியமனம், எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்குக் கொண்டுவந்தது, சுயமரியாதைத் திரு மணத்துக்குச் சட்ட அங்கீகாரம் என்று, பெரியாரின் பல கொள்கைகளுக்கு சட்ட வடிவம் தந்தனர் திராவிடக் கட்சிகள். போராட்டம், மக்களிடம் பரப்புரை, அரசு மற்றும் சட்டங்களின் மூலம் நடை முறையை மாற்றுதல் என்பதே பெரி யாரின், திராவிடர் கழகத்தின் செயல் பாடுகள்.

திராவிடர் கழகம் தமிழகத்துக்கு செய்தது என்ன?




1973இல் பெரியார் இறந்ததும் மணி யம்மை திராவிடர் கழகத் தலைவர் ஆனார். உலகளவில் நாத்திக இயக்கத் துக்குத் தலைமை தாங்கிய முதல் பெண், மணியம்மைதான். அய்ந்து ஆண்டு கள்தான் அவர் உயிருடன் இருந்தார். வடநாட்டில் கொண்டாடப்படும் ராம லீலாவுக்கு எதிராக தமிழகத்தில் ராவண லீலா நடத்தினார். எமர்ஜென்சி காலத்தில் நெருக்கடிநிலைக்கு மத்தியிலும் இயக்கத் தைக் கட்டிக்காப்பாற்றினார். மணியம் மைக்குப் பிறகு 40 ஆண்டுகளாக திராவி டர் கழகத்தின் தலைமைப் பொறுப் பில் இருக்கிறார் கி.வீரமணி. திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகவும் பிறகு தலைவ ராகவும் ஆனார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடியது திராவிடர் கழகம்.

பிறகு அதைத் திரும்பப் பெற்ற எம்.ஜி.ஆர்., இடஒதுக் கீட்டின் அளவை 50 சதவிகிதமாக உயர்த்தினார். படிப்படி யாக 69 சதவிகிதமாக உயர்ந்த இட ஒதுக்கீட்டுக்கு 1992-இல் ஆபத்து வந்த போது, அப்போதைய முதல்வர் ஜெய லலிதா மூலம் சட்டம் இயற்றி, அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்தார் வீரமணி. அருண்ஷோரி அம்பேத்கரை விமர்சித்து தவறான கடவுளை வழிபடுதல் என்னும் புத்த கத்தை எழுதியபோது தமிழகத்தில் பட்டியல் சமூகத் தரப்பில் இருந்துகூட பெரியளவிலான எதிர்ப்புகள் வராத போது அருண்ஷோரிக்கு மறுப்பு என் னும் புத்தகத்தை எழுதினார் வீரமணி. திராவிட இயக்கத்தவர்கள், சிறுபான்மையினர், பட்டியல் சமூக இயக்கத்தவர்கள் ஆகியோரை தேசத்துரோகிகளாகச் சித்திரித்து ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் என்கிற இரண்டு இந்துத்துவவாதிகள் உடையும் இந்தியா? என்ற புத்தகத்தை எழுதியபோது அதை மறுத்து விரிவான புத்தகம் எழுதினார்.

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!


கி.வீரமணி திராவிடர் கழகத்தை, சொத்துகளைக் காப்பாற்றும் அமைப்பாக மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், பகுத்தறிவு, சாதி ஒழிப்புக் கருத்துகளைப் பரப்ப வலுவான பொருளியல் அடித்தளம் அவசியம். அதனால்தான் பெரியார் சிறுகச் சிறுக நிதி சேர்த்து சொத்துகளை உருவாக்கினார். அவற்றை விரிவுபடுத்தியுள்ளார் வீர மணி. இவற்றின்மூலம் பெரியாரை உலகமயமாக்கியுள்ளார் என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர். ஆளுங்கட்சிகளை திராவிடர் கழகம் ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் பெரியாரை உதாரணம் காட்டி மறுத்தி ருக்கிறார் வீரமணி. தன் மகன் அன்பு ராஜை அடுத்த தலைவராக்கப்போகிறார் என்று வதந்திகள் உலவின. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவரான கலி.பூங்குன்றன்தான் அடுத்த தலைவர் என்று சமீபத்தில் அறிவித்துள்ளதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வீரமணி.

திராவிடர் கழகம் பலமுறை பிளவு களைச் சந்தித்திருக்கிறது. பெரியார் காலத்தில் தி.மு.க உதயமானது பெரும் பிளவு. தி.மு.க-விலிருந்து பிரிந்துதான் அ.தி.மு.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகள் உருவாகின. பெரியார் மறைவுக்குப் பிறகு வே.ஆனைமுத்து, கோவை ராமகிருட்டி ணன், ஆனூர் ஜெகதீசன், விடுதலை ராசேந்திரன், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் என பலர் வெளியேறியிருக்கின்றனர். மார்க் சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, திராவிடர் கழகம் (ஆர்), தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் மனித உரிமை அமைப்பு, பெரியார் மய்யம், தமிழின மகளிர் விடுதலைக்கழகம், தமிழர் தன் மானப் பேரவை என பல அமைப்புகள் உருவாகின.

பி.ஜே.பி தமிழகத்தில் சரிவைச் சந்திக்கும் போதெல்லாம் இது பெரியார் மண் என்று திராவிடர் இயக்க ஆதர வாளர்கள் உற்சாகமடைந்தாலும், சாதிப் பிரச்சினைகள் தலைதூக்கும்போதெல் லாம் இதுதான் பெரியார் மண்ணா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கம், அறமற்ற ஆணவக்கொலைகள், அச்சு றுத்தும் சாதிச்சங்கங்கள், கிராமம் தொடங்கி நகரம்வரை விரியும் தீண்டாமை, அகலாத ஆணாதிக்கம், கார்ப்பரேட் சாமியார்கள், மதவாதம்... என பவளவிழா கொண்டாடும் திரா விடர் கழகத்தின் முன், சவால்கள் விரிந்து கிடக்கின்றன. களங்கள் காத்துக்கிடக் கின்றனகருஞ்சட்டைக்காரர்களுக்கு!

- சுகுணா திவாகர்

நன்றி: 'ஜூனியர் விகடன்' , 4.9.2019

- விடுதலை நாளேடு, 1.9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக