வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வரலாற்றுச் சுவடுகள்: ‘ஜஸ்டீஸ்’ கட்சி ‘திராவிடர் கழக’மான வரலாறு



நீதிக்கட்சி என்றாலே அது பட்டம் பதவி களைத் தேடி ஓடும் ஜரிகைத் தலைப் பாகைக்காரர்கள் கட்சி என்ற கறைபடர்ந்த வரலாற்றினை மாற்றியமைத்திட வேண்டு மெனத் தந்தை பெரியார் அவர்கள் விரும் பினார். தாம் விரும்பியபடி மாற்றி இன்று அதையே மகோன்னதமான இயக்கமாக வளர்த்துவிட்டார்.

ஆம்! 1944ஆம் ஆண்டிலே சேலம் நகரிலே நடைபெற்ற நமதியக்க மாநாட்டி னைத்தான் குறிப்பிடுகிறோம். அந்த மாநாட்டிலேதான் அய்யா அவர்கள் இந்த இயக்கத்திற்கு புது உருவங் கொடுத்து, புரட்சி இயக்கமாக மாற்றினார். அதுமட்டு மல்ல, ஜரிகைத் தலைப்பாகைக்குச் சமதை யாக ‘ சாமான்யர் ‘ அண்ணா அவர்களைத்’ திரா விடர் தளபதி’யாக ஆக்கி நாட்டுக்குத் தந்தார்.

சேலத்து நெட்டோ, பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியன், மதுரை ராஜன், திருச்சி விசுவநாதம், பூவாளூர் பொன்னம்பலம் போன்றவர்களும் இன்னும் சிலரும் அய்யா அவர்களுக்கு எதிராகத் திரை மறைவிலே தங்கள் பணியினைத் துவக்கினார்கள். பதவிக்குப் போகக்கூடாது என்று பெரியார் அவர்கள் சொல்லிவந்த காரணத்தால் அத் தகைய திரைமறைவு வேலைக்காரர்களின் வலையிலே அண்ணா அவர்களும் விழுந்து விட்டார் என்று இயக்கத்தார் எல் லோரும் எண்ணும் அளவுக்கு அண்ணா அவர்களோடு, அவர்கள் உறவாடினார்கள். அந்த உறவினை ஊருக்கும் காட்டினார்கள். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் மாநாட்டிற்கு முன்பாகவே ஈரோட்டிலே அய்யா அவர்களிடம், தமக்கும், சதிக்கூட் டத்தினருக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதனைத் தெளிவுபடுத்திய தோடு, தம்மீது சாட்டப்படும் குற்றச்சாட் டினை மறுத்திடும் வகையில் பெரியார் அவர்களுடனேயே ஈரோட்டிலேயே தங்கி விட்டார். அந்தச் சந்தர்ப்பத்திலேதான் ஈரோட்டிலே. சரித்திரப் பிரசித்தி பெற்ற சேலம் மாநாட்டுத் தீர்மானங்களைப் பெரியார் அவர்கள் தயாரித்தார். நீதிக்கட்சி என்ற பெயர் திராவிடர் கழகம் என்று மாற்றப்பட வேண்டும் என்பதும், பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்திருக்கும் பட்டம், பதவி களை விட்டுவிட வேண்டும் என்பதும், தேர்தல்களில் நமதியக்கம் கலந்து கொள் ளக்கூடாது என்பதும் தான் பெரியார் அவர் கள் தயாரித்த அந்தத் தீர்மானங்கள்.

தீர்மானங்களைத் தயாரித்த பெரியார் அவர்கள் தம் பெயராலேயே அந்தத் தீர் மானங்களை மாநாட்டினில் கொண்டு வந் திருக்க முடியும். ஆனால், அந்தத் தீர்மானங் களை அறிஞர் அண்ணா அவர்கள் பெய ரால், ‘அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்ற பெயரிட்டு மாநாட்டில் கொண்டுவரச் செய் தார்.

அந்தத் தீர்மானங்களில் அமைக்கப் பட்டிருக்கும் வாசகங்களைப் படிப்பவர்கள் அனைவருக்கும் புரியும், அது அய்யா அவர்களால்தான் எழுதப்பட்டது என்பது. ஏனென்றால் அந்தத் தீர்மான வாசகங் களிலே அறிஞர் அண்ணா அவர்களின் அழகு தமிழைக் காண முடியாது! பெரியார் அவர்களின் ‘பாமரத் தமிழைத் தான் பார்க்கமுடியும்.

அதுமட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அவர்களுடனேயே ஈரோட்டிலே தங்கிவிட்டதால், காஞ்சிபுரத்திலேயிருந்து வெளிவருகிற திராவிட நாடு’ இதழை ஈரோட்டிலேயே ‘குடி அரசு’ பத்திரிகை அச்சடிக்கப்படுகின்ற தமிழன் அச்சகத்தில் அச்சடித்து, ஈரோடு தோழர் சண்முகவேலாயுதம் அவர்கள் அந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு. காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து ஏஜண்டுகளுக்கும், சந்தாதாரர்களுக்கும் பத்திரிகையினை அனுப்பிவைத்தார். அந்த வாரத்துத் திரா விட நாட்டு இதழைப் பார்த்தால் விடுதலை, குடி அரசு இதழ்களில் பயன்படுத்தப்படும்.  லை, னை, ணா, றா போன்ற எழுத்துக்கள் இருக்கும். இந்தப்படி தம் தீர்மானங்களை’ அண்ணாதுரை தீர்மானங்கள்’ என்ற பெயரால் அய்யா அவர்கள் கொண்டுவந்து அண்ணா அவர்களை உயர்த்தியதோடு மட்டுமல்ல, இயக்கத்திற்குப் புது உருவம் கொடுத்த பெருமையினை அண்ணா அவர்களுக்கே விட்டு விட்டார்.

எனவே, பெரியார் தொண்டர்களாகிய நாம் அவர் காட்டிய வழிப்படி பதவியை விரும்பாமல் இருப்பதோடு, புகழையுங்கூட விரும்பாமல் வாழவேண்டும் என்ற உறுதி யினை அய்யா அவர்கள் பிறந்த நாளில் எடுத்துக்கொள்வோமாக.

- ஆதாரம்: "நீதிக்கட்சி 75ஆவது ஆண்டு (பவள விழா) மலர்

- விடுதலை ஞாயிறு மலர், 24. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக