வெள்ளி, 27 செப்டம்பர், 2019

இந்து மதத்தில் 25 கோடி மக்களாக இருந்தும் என்ன பயன்? - 11

19.9.2019 அன்றைய தொடர்ச்சி...

1925ஆம் ஆண்டில்

1925ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் நான் காங்கிரசிலிருந்து வெளிப்படையாகப் பிரிந்தேன். அரசியலின் பேரால் அப்போது காங்கிரஸ் மூலம் பார்ப்பனர்கள் செய்து வந்த பித்தலாட்டங்களை நான் நன்றாய் உணர்ந்ததால் அவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு வருடம் பணியாற்றினேன். ஓரளவு பயனுமடைந்தேன். எனினும் பொதுத் தேர்தல் 1926இல் நடைபெற்றபோது ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப்போய் விடவே, பின்பு சமுதாயம், மதம், புராணங்கள் இவைகளின் பேரால்தான் பார்ப்பனர்கள் இவ்வளவு அதிகாரமும், செல்வாக்கும் பெற முடிகின்றது என்பதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்து மக்களிடையே அதுபற்றித் தீவிரப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினேன். அந்த எண்ணத்துடனேதான் சுயமரியாதை இயக்கத்தையும் ஆரம்பித்து, குடிஅரசு பத்திரிகையிலும் தொடர்ச்சியாக அவை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தேன். சாதாரண மக்களுக்குப் புரியும்படியாகவும், அரசியல்வாதிகளும் ஓரளவு ஆதரவு அளிக்கும் வகையிலும் படிப்படியாக எழுதி வந்தேன். காலப்போக்கில் இயக்கம் வளர்ந்தது. இப்போது, அதாவது சமீப காலத்திலே அது திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றம் பெற்றவுடன் அரசியல் தொடர்பையே அறுத்துக் கொண்டேன். தேர்தல், பதவி, கவுரவப் பட்டம் இவைகளை லட்சியம் செய்யாது அவைகளைத் துறக்கக்கூடிய தியாகங்களைச் செய்யக் கூடியவர்களையே கழகத்தில் சேர்த்துக் கொண்டேன். பட்டம், பதவி இவைகளை ஒதுக்கி, உதவும் தியாக மனப்பான்மை, நாணயம், யோக்கியம் இவை உடைய வர்களையே கொண்டதாக திராவிடர் கழகத்தை நாளாவட்டத்தில் திருத்தி அமைத்தேன்.

ஆங்கிலத்தில் வழங்கப்படும் Honesty is the Best Policy என்னும் பழமொழியே, அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சியடையும், ஒரு திட்டத்தைக் குறிப்பதேயாகும். தியாகம் என்பது சுயநலத்திற்குப் பலனை எதிர்பாராது, லட்சியம் செய்யாது, இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது என்பதாகும். இந்த இரண்டு தன்மையும் திராவிடர் கழகத்தில் முக்கிய இடம் பெறச் செய்து, இதற்கு மாறுபட்ட சுயநலக்காரர்களைக் கழகத்திலிருந்து ஓடும்படிச் செய்தேன். அதனாலேயேதான் நம் கழகம் இந்த உயர்நிலையை அடைய முடிந்தது.

மரியாதையும் மதிப்பும்

அன்றியும், அதனாலேயே நமது புரட்சிகரமான கருத்துக் களுக்கும், பேச்சுக்களுக்கும் ஏகமாக ஆமோதிப்பு கிடைக் காவிடினும் எதிர்ப்பு இல்லாதபடி - நம் கருத்தைத் தவறு என்றோ, நடத்தையை அயோக்கியம் என்றோ எவரும் கூறாதபடி இயக்கத்தை மிக ஜாக்கிரதையாக, வெற்றிகரமாக நடத்திவர இருத்திவர முடிந்தது. இதனாலேயே தான் நாட்டிலும் ஒரு அளவு மரியாதையும் மதிப்பும் நம் கழகத் திற்கு இருந்து வருகிறது. அதிகாரிகளிடமும் எதிர்க்கட்சி யாளர்களிடமும் மதிப்பிருந்து வரும் வகையில், பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனமாக நமது கழகத்தைக் கருதும் படியாகச் செய்திருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் செல்வாக் கெல்லாம் அது பதவியில் இருக்கும் வரையில் தான்; பதவி போய்விடின் யாரும் அக்கட்சியிலிரார். காரணம், காங்கிரசில் பதவிப் பித்தர்கள், பணப்பித்தர்கள் தவிர மற்றவர்களுக்கு இடமில்லாமற் போய்விட்டது. ஆதலால், காங்கிரஸ் கட்சி பதவியில் இருக்கிறது. நமக்குப் பதவி கிடைக்கும் என்பதற்காக அதில் பலரும் இருக்கிறார்களே அன்றி அதன் திட்டத்துக்காக அல்ல;

அதில் திட்டமும் எதுவும் இல்லை. பதவி அதிகார மோகம் காரணமாகவோ, கட்சியின் திறமைக் குறைவோ அதனால் நாணயக் குறைவோ ஏற்படும்போதெல்லாம் அவை வெளியே தெரியாதவாறு திரையிட்டு - மறைக்கப்பட்டு வருகின்றன.

வேறு கட்சிகள்

நாட்டில் வேறு கட்சிகள் எதுவுமில்லையா என்றால் கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக ஒரு கட்சி இருக்கிறது. என்றாலும் அதிலும் வசதிக்காக, வாழ்வுக்காக அதில் பெரும்பாலோர் இருப்பதால், அதோடு பார்ப்பன ஆதிக்கமும் அதில் தலைசிறந்து இருப்பதால், அவர்களின் நிலைமை இப்போது மக்களுக்கு நன்றாய் வெளியாகிவிட்டது. அக்கட்சியின் நிலையைக் கவனித்தால் இன்று அதன் முக்கியஸ்தர்களுக்குப் பலனளிப்பதாக இருக்கிறதே அன்றி பாமர ஏழை - தாழ்த்தப்பட்டோர், சேரிவாழ் மக்கள் இவர் களுக்கு அதில் பலனேதும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. தாழ்த்தப்பட்டவர்களும் சேரிவாழ் மக்களும் சமூக உயர்நிலைக்குத் திருந்தவோ அல்லது பிற மக்களுடன் சமநிலை அடையவோ அக்கட்சியினரிடம் திட்டம் வசதி இல்லை. அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள்; சமீபகாலத்தில் தலைதூக்கும் வகையிலும் அதன் வேலைகள் தோன்றவில்லை. ஆகவே, உருப்படியாக இருப்பது திராவிடர் கழகம் ஒன்றுதான். இந்து மகாசபை இருக்கிறது; தமிழரசு போன்ற பல கழகத்தினர் இருக்கிறார்கள். ஆனால் தமிழரசுக் கழகத்தினர் தமிழ்நாடு பிரிவினை என்றதுமே அவர்களுக்கு ஒரு தரும சங்கடம், தொல்லை ஏற்பட்டிருக்கிறது! ஆகவே, பிழைப்புக்கு ஒரு வாய்ப்பாகவே தமிழரசுக் கழகமும், இந்துமகா சபையும் இருந்து வருகின்றன. பிரஜா கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா - சோஷலிஸ்ட் கட்சி முதலியன எல்லாம் அதிலிருப்ப வர்கள் தத்தமக்குப் பதவி வாய்ப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவைகளே தவிர அடிப்படையில் காங்கிரசுக்கு மாறுபட்ட தனித்த ஒரு லட்சியம் - நோக்கம் கொண்டன அல்ல. தேர்தல் காலங்களில் ஓட்டு வேட்டைக்கு, சுயலாபத் துக்கு, கட்சிகள் இருக்கின்றன; அதற்கே பயன்படுகின்றனவே தவிர, உருவான நிலையான கட்சிகள் கிடையாது. எந்தக் கட்சியின் பேரைச் சொன்னாலும் ஆகா! அவனப்படியா? என்று மக்கள் சொல்லிப் போகும் வகையில் இருக்கிறது.

மக்கள் மதிப்பதேன்?

நாம் மக்களிடையே விழிப்பையும் உணர்ச்சியையும் ஊட்டு வதால் நம்மை மதிக்கிறார்களா, இல்லையா என்றில்லா விடினும், அவர்களுக்குள் ஏமாற்றப்படாத வகைக்கு நம் செயல்கள் பலனளித்து வந்துள்ளன. ஆக, நாம் இவ்வித வசதிகளை மட்டும் கொண்டு பயனில்லை என்பதாலே காரியம் ஏதேனும் சாதிக்க, நம்மீது மக்கள் கொண்டுள்ள உறுதி - நம்பிக்கை இவைகளைக் கருதும்போது எதையாவது சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்; சிந்தித்து ஏதேனும் செய்து வருகிறோம். அவ்விதம் செயலாற்றியதன் பயனாகச் சென்ற சில வருடங்களிலும் முன்னேற்றமும் கண்டு வருகி றோம். இந்த முன்னேற்றத்தைத் தீவிரமாக்க வேண்டும். இது காரணமாகவே இன்றைய அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம். இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு அரசியல் துறையில் இருந்து ஒதுங்கியிருந்து பின்னர்ப் பார்க்கலாம் என்று கருத்துக் கொண்டிருக்கிறோம்.

புராண ஒழிவு புராணங்களை ஒழிக்கும் வகையாகப் புராணங்களையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் எரிப்பதற்கு 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் கூறினோம். அந்தப்படி எரித்தோமோ இல்லையோ அது வேறு விஷயம். நமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டோம். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் குடிஅரசு இதழ்களில் எழுதியிருந்தவை எல்லாம், இன்றைக்குப் பொருந்தக் கூடியனவாக உள்ளன. அந்தக் காலத்திலே காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்த சில தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வருவதால் அதற்கான முதல் முயற்சி என்பதாக இந்நாட்டு மக்களுக்குள் பிறவியின் காரணமாக இருந்து வரும் உயர்வு தாழ்வுகளைச் சமுதாய இழிவுகளைக் களைய வேண்டும் என்பதாகத் தீர்மானித்த லட்சியத் தீர்மானத்தைச் சிதைக்க வேண்டும் என்பதற்காகவே ராஜினாமா செய்தார்கள்.

மற்றொரு சமயம், புராணங்களை எரிப்பது என்பதான திட்டத்தின் விளைவாக இராமாயணம், கந்தபுராணம் இவைகளை எரிப்பதென்று தீர்மானித்தோம். உடனே புலவர்களும், பண்டிதர்களும் இராமாயணம், கந்தபுராணம் இவைகளில் உள்ள ஆபாசங்களை ஒத்துக்கொண்டு, ஆனால், இராமாயணம், கந்தபுராணம் இவைகளை இலக்கி யங்களாகப் பாவியுங்கள்; புராணமாக மதிக்காவிடினும் பரவாயில்லை என்றார்கள். நாம் மறுத்ததும் சிலர் கழகத்தை விட்டு விலகினார்கள். இன்று மற்றொருபடி முன்னேறி விக்கிரகங்களை உடைக்கத் தீர்மானித்திருக்கிறோம். இத்தீர்மானங்களின் அவசியத்திற்கு, நமக்கு நல்ல பலமான ஆதாரங்கள் இருக்கின்றன.

துணிவு ஏற்பட்டதேன்?

இந்த ஆதாரங்கள் யாவும் வேத சம்பந்தமானவைகளாக அதுவும் டாக்டர் முன்ஷி, நீதிவாதி டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் தலைமையில் எழுதப்பட்டு வெளிவரும் ஆதாரங்களிலேயே இருக்கின்றன. இவர்கள் சமீப காலத்தில் இந்திய சரித்திர கலாசார ஸ்தாபனம் என்பதாக ஒரு கழகத்தை நிறுவி, இந்தியாவின் சரித்தி ரத்தைத் திருத்தி எழுதி வருகிறார்கள். மொத்தம் எட்டுத் தொகுப்புகள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை 2 தொகுப்புகளைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, முதலாவது தொகுப்பில் வேத காலம் வரை இந்தியாவின் கலாச்சார வரலாற்றை வெளியிட்டிருக் கிறார்கள். எதற்கு ஆக என்றால், இந்நாள்வரை வெளியிடப்பட்டுக் கற்பிக்கப்பட்டு வரும் சரித்திரம் ஒரு சார்பாகவே இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். என்றாலும், அமெரிக்க பிரிட்டிஷ் சரித்திராசிரியர்களும், என்சைக் ளோபீடியா என்ற ஞானக் களஞ்சிய நூலும் மற்ற ஆராய்ச்சியாளரும் எழுதியிருப்பது போலவே தான் இந்த முன்ஷி வகையறாக்கள் அவைபற்றி எழுதியிருப்பதும் இருக்கின்றன. இவைகளைப் பார்த்த பிறகு நம்முடைய தெனக் கூறப்படும் வேதபுராணங்களின் ஆபாசங்களை வெளியிடுவதில் மேலும் துணிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அக்கருத்துக் காரணமாகவே, இப்போது வேதமும் வேதக் கடவுள்களும் என்னும் பொருள்பற்றிப் பெரிதும் அதை அனுசரித்தே பேசலானேன்.

தொடரும்

- விடுதலை நாளேடு, 24. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக