செவ்வாய், 31 ஜனவரி, 2017

சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது?





- தந்தை பெரியார்

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது? என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையாவது:- இன்றையத் தினம் இங்குச் சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விளக்கம் தரவேண்டும் என்பதற்காக நம் தோழர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்து இன்றைக்கு 45 வருடங்களுக்கு மேலாகின்றது. அதனைத் தோற்றுவித்ததன் உத்தேசமே சமுதாயத் தொண்டு செய்வதற்காக ஆகும்.

சமுதாயத் தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைக்க வேண்டி ஏன் ஏற்பட்டது என்றால், மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மானமற்றத் தன்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்- Self Respect Propaganda Instuition என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் நோக்கம் நம் மக்கள் இழிவான நிலை ... இழிவான வாழ்வு வாழ்கிறார்கள்; அவர்கள் இழிவை எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவையும், மான உணர்ச்சி யினையும் ஏற்படுத்த வேண்டுமென்பதாகும்.

என்ன இழிவு என்றால் பார்ப்பானைத் தவிர இந்நாட்டு மக்கள் நாலாம் சாதி, சூத்திர மக்களாக இருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும்- மக்களின் இழிவு நிலையைப் போக்க வேண் டும். அவர்களின் அறிவற்ற தன்மையை எடுத்துக்காட்டி அறிவு பெறச் செய்து, சூத்திரத் தன்மையைப் போக்க வேண்டும் என்பதாகும்.

நம் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட போது, நம் மக்களுக்கு மனிதன் மதப்படி, மத தருமப்படி நடக்க வேண்டும், சாஸ்திரப்படி நடக்க வேண்டும் எனப் புகுத்தப்பட்டு, அது மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது, மக்களில் சிலர் ஏன் கீழ்ச்சாதி- பறையன் என்றால், முன் ஜன்மத்தில் செய்த பாவத்தால் என்றும், ஏன் பார்ப்பான் என்றால் முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் என்றும் மக்கள் கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில்  புண்ணியம் செய்து அடுத்த ஜன்மத்தில் மேல்சாதியாகப் பிறக்க வேண்டும் என்று கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில் நாம் ஏன் இழிசாதியாக இருக்கிறோம் என்று நம் மக்களில் எவரும் வெட்கப்பட வில்லை. இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் தோன்றுகிற வரை எவருமே முயற்சிக்கவும் இல்லை.

பார்ப்பனரல்லாத மக்களுக்காக இங்கு ஜஸ்டிஸ் கட்சித் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், அதில் பதவி உத்தி யோகங்களில் பார்ப்பானுக்கே உரிமைகள் வழங்கப்படு கின்றன, அதில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தோன்றியதே தவிர, மக்களின் இழிவைப் பற்றி அது கவலைப்பட வில்லை.

வெள்ளைக்காரன் கூட இங்குள்ள மததருமப்படி தான் ஆட்சி செய்தான். அவன் சில திருத்தங்கள் சமுதாயத் துறையில் செய்ய முற்பட்ட போது, இந்நாட்டுப் பார்ப் பனர்களே அதை எதிர்த்தனர். எனவே, அவன் அதில் தலையிடவில்லை,

இந்த நாட்டில் காங்கிரஸ் ஏற்பட்டது வெள்ளைக்காரன் ஆட்சியைப் பாதுகாக்கவே தவிர, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. வெள்ளைக்காரன் சமுதாயத் துறையில் அரசாங்கத்திற்கு இருந்த எதிர்ப்பைச் சமாளிக்க, பார்ப்பனர்களைப் பிடித்து ஏற்பாடு செய்தது தான் காங்கிரசாகும். காங்கிரசின், சரித்திரத்தைப் பார்த்தால் ஓரிருவர் சமுதாய திருத்தம் பற்றிப் பேசி இருக்கிறார்கள் என்றாலும், அப்போதே அது பற்றிப் பேசக்கூடாது என்று அவர்களைத் தடுத்து விட்டனர். அது காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லிவிட்டார்கள்.

திலகர் என்ற பார்ப்பனர்- சமுதாய சம்பந்தமான கருத்தே காங்கிரசில் இருக்கக் கூடாது என்று தடுத்துவிட்டார். பார்ப்பனர்களே, காங்கிரசின் தலைவர்களாக இருந்து வந்தனர். ஒரு சமயம் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் ராஷ்பிகாரிகோஷ்  என்கின்ற பார்ப்பனரல்லாத ஒருவரைத் தலைவராக்கி விட்டனர். அதனை உடனே எதிர்த்து, திலகர் வேறு ஒருவரை பிரப்போஸ் செய்கிறேன் என்று சொல்லி, ராஷ்பிகாரி கோஷைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று கலகம் செய்ய ஆரம்பித்தார். திலகரின் ஆட்கள் மேடையில் செருப்பு வீச ஆரம்பித்து விட்டனர். தாதாபாய் நவுரோஜி முதலியவர்கள் மீதெல்லாம் செருப்பு விழுந்தது.

அதன்பின் காங்கிரசில் வெகுநாட்கள் வரை பார்ப்பனரல்லாதார் தலைமையே வரவில்லை. அரசியலை மட்டும் வைத்துக் கொண்டு மக்களை நெருங்க முடியாது. மக்களின் ஆதரவு பெற வேண்டுமானால்  சமுதாயத்தை யும் சேர்த்துக் கொண்டால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்ட பின், காங்கிரஸ் அரசியலுக்காகவே என்று ஒரு பிரிவும், சமுதாய சம்பந்தமான காரியத்திற்காக ஒரு பிரிவும் என்று, எங்குக் காங்கிரஸ் மாநாடு நடந்தாலும் ஒரு நாள் அரசியலுக்கும், ஒரு நாள் சமுதாயத்திற்கும் என்று பிரித்து நடத்த ஆரம்பித்தனர்.

அப்போது தான் சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அவர்கள் பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றிப் பதவி- உத்தி யோகங்கள் பெறுகின்றனர் என்பது பற்றிப் பிரசாரம் செய்ததில், மக்களுக்குப் பார்ப்பனர் மேல் வெறுப்பு ஏற்படும் படியாயிற்று. காங்கிரஸ் என்றாலே அப்போது பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்; ஆனதால் காங் கிரசையே மக்கள் வெறுத்தனர். அதன் காரணமாகக் காங் கிரஸ் செல்வாக்கற்றுப் போய் விட்டது. காங்கிரஸ்காரர் களை மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். அவர்கள் தனியே வெளியில் வரவே பயந்தனர்.

அதன்பின் காங்கிரஸ் சமுதாயத் தொண்டின் மூலம் தான் மக்களை அணுக முடியும் என்று உணர்ந்ததும் காங்கிரசிற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதன் இலட்சியம் சமுதாயத் தொண்டுதான் என்று சொல்லி மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். எங்கள் இலட்சியம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லி விட்டு, அதன்பின், ஆனால் சாதி  அமைப்பை மாற்றக் கூடாது என்றார்கள். தீண்டப்படாத மக்களுக்குத் தனி கிணறு, தனிப்  பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பது என்று வேஷம் போட்டார்கள். சமபந்தி போஜனம் பற்றிக் காந்தியார் சொன்னது என்ன என்றால், மலம் கழிப்பதில் கூட மனிதன் இன்னொருவனுடன் சேர்ந்து இருப்பதற்கு வெட்கப்படும் போது, சாப்பாட்டில் எப்படிச் சேர்ந்து சாப்பிட முடியும்? என்று கேட்டவர் ஆவார். இது பற்றிக் குடிஅரசுவில் அப்போதே கண்டித்து எழுதி இருக்கின்றேன்.

சமுதாய ஏற்றத் தாழ்வைப்- பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார் என்கின்ற பேதத்தை ஒழிப்பதற்காக என்று, இந்த ஊர் பார்ப்பான் வ.வே.சு. அய்யர் என்பவர் ஒரு குருகுலம் ஆரம்பித்தார். அப்படிக் குருகுலம் ஆரம்பித்த அந்தப் பார்ப்பனர் நமக்கு முன் வந்த, பண்டங்களையே சாப்பிட மாட்டார். அப்படிப்பட்ட அவரால் ஆரம்பிக்கப் பட்ட குருகுலத்தில் சாதி பேதம் கடைப்பிடிக்கப்பட்டது.

பார்ப்பானுக்குத் தனியாக நல்ல உணவும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனியாக சாதாரண உணவும் பரிமாறப்பட்டது. இந்தக் குருகுலத்திற்குக் காங்கிரஸ் நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகச் சொல்லி முதலில் ரூ. 5000 கொடுத்திருந்தேன். அதன் நடவடிக்கை தெரிந்ததும் நான் அந்த மீதிப்பணத்தைக் கொடுக்க வில்லை. எனக்குத் தெரியாமல் என்னுடைய செகரட்டரி பார்ப்பானிடம் வந்து அந்தப் பணத்திற்குச் செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார். இது தெரிந்ததும் நான் ராஜாஜியிடம் சென்று பார்த்தீர்களா பார்ப்பன புத்தியைக் காட்டிவிட்டார் என்று கோபித்துக் கொண்டேன். அதற்கு அவர், தான் கண்டிப்பதாக சமாதானம் கூறினார்.

காங்கிரஸ் 1920-இல் சட்டசபையில் எவ்வளவு ஸ்தாபனங்கள் இருந்ததோ அதில் பாகம் தான் 1923-இல் ஜெயித்தார்கள். பின் 1926-இல் ஜஸ்டிஸ் கட்சியினர் அடியோடு தோற்று விட்டனர். அப்போது நம் தீவிர பிரசாரத்தால் காங்கிரசிற்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அதுவரை தேர்தலுக்கு நிற்ப தில்லை என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தது. நான் அப்போது அதனை எதிர்த்தேன்.

1925-இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் தேர்தலில் நிற்பதானால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு 100-க்கு 50 ஸ்தாபனங்களை ஒதுக்கிவிட்டு மற்றதில் தான் போட்டி போட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு சென்றேன். அதனைப் பெரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள். ஓட்டுக்கு விட்டால் அந்தத் தீர்மானம் நிறைவேறிவிடும் என்கின்ற நிலை ஏற்பட்டதும், அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்கள் காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லி என் தீர்மானத்தை ஏற்கவில்லை என்றதும், உடனே நான் கோபமாகப் பேசிவிட்டு வெளியேறி விட்டேன்.

அதிலிருந்து வெளிவந்த பின்தான் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கை கடவுள், மதம்,  சாஸ்திரம், காங்கிரஸ் ஒழிக, பார்ப்பான் ஒழிக, என்கின்ற 5 கொள்கைகளாகும். இவை ஒவ்வொன்றையும் விளக்கி, குடிஅரசுவில் பல கட்டுரைகளை எழுதினேன். அதை எதிர்த்து எவரும் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. பார்ப்பான் எல்லாம் ஒன்று கூடி இதுபோல எழுது கின்றானே என்று யோசித்து, விஜயராகவாச்சாரி தலைமையில் கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியே அவன் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகட்டும்; நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டாம். அவன் சொல்வதை, எழுதுவதை வெளியிட வேண்டாம் என்று சொன்னார். அதன்படி தான் இன்று வரை பார்ப்பனர்கள் நடந்து கொள்கின்றனர்.

1925-இல் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்தேன். 1927-லேயே காந்தி என்னோடு பேசவேண்டும் என்று இராமநாதனை அழைத்து, என்னை அழைத்து வரும்படிச் சொன்னார். இராமநாதன் வந்து சொன்னதும் நானும் அவரும் சேர்ந்தே சென்றோம். காந்தியார் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தார். நானும், இராமநாதனும் போய்ச் சந்தித்தோம். அங்கு இராஜாஜியும், தேவதாஸ் காந்தியும் கீழே இருந்தார்கள். காந்தி மாடியில் தங்கியிருந்தார். நாங்கள் போனதும் எங்களை விட்டுவிட்டு அவர்கள் கீழே வந்து விட்டார்கள். ``என்ன ராமசாமி உன்னைப் பற்றி ``கம்ப்ளைன்ட் வந்திருக்கிறதே என்ன என்றார் காந்தியார். நான் உடனே ஒன்றும் கம்ப்ளைன்ட் இல்லைங்க; இந்த மதம் ஒழிய வேண்டும் என்பது தான் என் கொள்கையாகும் என்றேன். அதற்கு அவர் இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது என்று ஒப்புக் கொண்டார்.

அந்தச் சம்பாஷணையில் கடவுள், மதம், சாஸ்திரம், ஆகியவற்றைப் பற்றி எல்லாம் பேசினோம். பார்ப்பனர் களைப் பற்றி நான் சொன்னதும், ஏன் பார்ப்பான் மேல் உனக்கு வெறுப்பு வந்தது என்று கேட்டார். உடனே நான் அயோக்கியன் மேல் வெறுப்பு வருவதில் தவறில்லையே என்றேன். அப்படியானால் பார்ப்பனர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்கின்றாயா? என்று கேட்டார். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றேன். உடனே அவர் ராஜகோபாலாச்சாரி என்றார். அதற்கு நான் அவர் நல்லவர், தியாகி, உண்மையானவர்; ஆனால் எல்லாம் அவர் ஜாதிக்காக என்றேன். உன் கண்ணுக்கு ஒரு பார்ப்பனர் கூட நல்லவராகத் தென்படவில்லையா? என்றார். இல்லை என்றேன். அப்படிச் சொல்லாதீர்கள்; கோபாலகிருஷ்ண கோகலேயை நல்ல பிராமணர் என்றே கருதுகிறேன் என்றார்.

நான் உடனே மகாத்மாவின் கண்ணுக்கே ஒரு பிராமணர் தான் நல்லவராகத் தோன்றியிருக்கிறார் என்றால், சாதாரணமான எங்களைப் போன்றவர்கள் கண்களுக்கு எப்படி உண்மை பிராமணர் தோன்ற முடியும்? என்று சொன்னேன். இப்படி உரையாடியதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவில்லை.

காந்தியார், இதுவரை நாம் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று நினைக்கின்றேன். இன்னும் இரண்டு, மூன்று முறை சந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னார். சரிஎன்று சொல்லிக் கீழே வந்ததும், இராஜாஜி அவர்கள் என்ன பேசினாய் என்று கேட்டார். நான் அங்கு நடந்த உரையாடலை அப்படியே சொன்னதும் இராஜாஜி, அவருடைய (காந்தியாருடைய) ஒரு மாதத்து ஓய்வைக் கெடுத்து விட்டாய் என்று சொன்னார். தேவதாஸ் காந்தி அவர்கள் இன்னமும் இரண்டு நாள் இங்கேயே தங்கி மறுபடியும் சந்தியுங்கள் என்று சொன்னார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்.

15.3.1970, அன்று திருச்சியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.
விடுதலை, 7.5.1970

விடுதலை, 14.9.14

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் அப்பீல் வழக்கு முடிவு தோழர் ஈ.வெ.ரா. விடுதலை


ஈரோடு குடியரசு பத்திரிகையில் சென்ற அக்டோபர் மாதம் 20ந் தேதி என் இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும் என்ற மகுடத்தின் கீழ் ஓர் தலையங்கம் வெளியாயிற்று. அக்கட்டுரை யானது சர்க்கார் மீது துவேஷத்தை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறதென அதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ராமசாமி மீதும்,
அவரது சகோதரியும் அப்பத்திரிக்கையின் பிரசரகர்தாவுமான தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் மீதும் நடந்த வழக்கில் கோயம்புத்தூர் ஜில்லா மாஜிஸ்திரேட் தோழர் ராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும், தோழர் கண்ணம்ளுக்கு 3 மாத சிறை தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், விதித்தார். பின்னர் தோழர் கண்ணம்மா ஜாமீனில் விடுதலை பெற்று ஹைக்கோர்டில் அப்பீல் செய்து கொண்டார்.
தோழர் ஈ.வெ.ராமசாமி ஜாமீனில் விடுதலை பெற மறுத்ததுடன் அப்பீலும் செய்து கொள்ளவில்லை எனவே அவர் தற்போது ராஜமகேந்திரவரம் சிறையிலிருந்து வருகிறார். மேற்படி அப்பீலின் பயனாக ஹைகோர்ட் நீதிபதி கே.பி.லட்சுமணராவ், அவர்கள் நேற்று கீழ்க்கோர்ட்டார் தீர்ப்பை உறுதி செய்தாரெனினும், இரு எதிரிகளுக்கும் தண்டனை இதுவரை அனுபவித்துள்ள சிறை தண்டனை காலத்திற்குக் குறைத்து விட்டார்.
தோழர் ஈ.வெ.ரா. விடுதலை
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 15ந் தேதி ராஜ மகேந்திரம் ஜெயிலிலி ருந்து விடுதலையாகி, 16ந் தேதி சென்னை வந்து அங்கிருந்து அன்றே புறப்பட்டு 17ந் தேதி ஈரோடு வந்து சேர்ந்தார். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு ஆங்காங்குள்ள சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் வந்து சந்தித்துப் பேசிப் போனார்கள்.
ராஜமகேந்திரம் ஜெயிலில் வெயில் கொடுமையால் சிறிது கருத்தும் இளைத்தும் போயிருக்கிறார். ஆனால் உடல் சவுக்கியமாய் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெயில் கொடுமைக்காக எங்காவது குளிர்ச்சி யான இடத்துக்குப் போக கருதியிருக்கிறார்.
ஜெயிலில் தோழர் ஈ.வெ.ராவுக்கு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் முயற்சியில் ஹை-கிளாஸ் சவுகரியம் கிடைக்கப்பட்டது என்றாலும், அந்த ஜெயிலில் கிளாஸ் பிரிவுகளுக்குப் போதிய சவுகர்யம் இல்லாததால் பி-கிளாஸ் கைதியாகவே இருந்து வருகிறேன் என்று ஜெயில் அதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டு பி. கிளாஸ் கைதியாகவே இருந்து வந்தார்.
அங்கு சாப்பாடும் ஒரு பத்திரிகையும் தவிர மற்றபடி சி-கிளாஸ் கைதி போலவே நடத்தப்பட்டார். சாப்பாடுகூட ரொட்டி, பால் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. சி-கிளாஸ் கைதிகளுடனேதான் வைக்கப் பட்டிருந்தார். ஒரு பிளாக்கில் உள்ள 32 அறைகளில் 28 கருப்புக்குல்லாய் கைதிகளுடன் 29 வது கைதியாகவே இருந்து வந்தார்.
வெராண்டா இல்லாத 7 க்கு 10 ரூமில் காலை முதல் மாலை வரையில் வெயிலில் இருக்கும்படியான நிலையில் இருக்க நேர்ந்தது என்பதோடு அறையை விட்டு வெளியில் வந்தாலும் வெயிலில் இருக்க வேண்டியதைத் தவிர வேறு மார்க்கமில்லாத ஜெயிலாய் இருந்தது என்பதோடு பிளாக்கை விட்டு வெளியில் போவதற் கில்லாமலும் வேறு யாருடனும் பேசுவதற்கில்லாமலும் நிர்ப்பந்தத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தப்படி வைக்க மேல் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாகத் தெரிகிறது. மற்றபடி வேறுவித அசவுகரியம் இல்லை என்பதாகத் தெரிகிறது.
தோழர் ஈ.வெ.ரா.ஈரோடு விஜயம்
பாராட்டுக் கூட்டத்தில் ஈ.வெ.ரா.பிரசங்கம்
விடுதலையான பிறகு ஈரோட்டில் பாராட்டுக் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா.பேசியதாவது:-
நான் சிறைவாசம் சென்றுவிட்டு வந்ததைப் பாராட்டு வதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப்பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். இது ஒரு வித பழக்க வழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல பொருள் இருப்பதாக நான் கருதவில்லை.
முதலாவதாக இப்பொழுது நான் மற்றவர்களைப் போல் சிறைசெல்ல வேண்டுமென்று கருதி நானாக சிறைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக்கூடிய சந்தர்ப்பம் எற்பட்டால், அதற்காக பயந்து பின்வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நான் சிறை செல்ல நேர்ந்தது.
அதாவது குடிஅரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானதுமான வியாசத்திற் காகத்தான் நான் சிறைக்கு போக நேரிட்டதே தவிர, மற்றபடி செல்லத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை.
சர்க்கார் இந்தக் குடி அரசுப் பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக் கணக்காய் தண்டிக்கக்கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காய் தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக்காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை.
அவர்கள் ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப்பார்த்தால் காங்கிரசிற்கு பாமர ஜனங்களிடத்தில் இருந்த செல்வாக்கின் பயனாய் நமது வியாசங்களை பொது ஜனங்கள் லட்சியம் செய்ய மாட்டார்கள் என்கின்ற தைரியத்தால் சர்க்கார் அப்பொழுது சும்மா இருந்தார்கள் என்று தோன்றுகிறது.
ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங் களையும் கண்டு இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும் படியான நிலைமை ஏற்பட்டுவிட்ட தென்பது நன்றாய்த் தெரிகிறது இதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டி இருக்கிறதென்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் சுயமரியாதை கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும்,
சர்க்கார் இப்போது உணர்வதாகத் தெரிகிறது அன்றியும் மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற் கிறார்கள் என்பதும் தெரிகிறது. இதுவரை நமது நாட்டில் இருந்து வந்த அபிப்பிராயங்கள் எல்லாம் வெள்ளைக்காரருக்கு இந்நாட்டில் என்ன வேலை அவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக் கான ரூபாய் சம்பளம், கருப்பு மனிதனுக்கு ஏன் நூற்றுக்கணக் கான பத்துக் கணக்கான ரூபாய்கள் சம்பளம்? அவர்களுக்கு ஏன் பெரிய அதிகாரம்,
நமக்கு ஏன் சின்ன அதிகாரம் என்பது போன்ற பிரச்சினைகளே தேசீயம் என்னும் பேரால் முக்கியமாய் இருந்து வந்தது. இதன் பயனாய் அரசாங்கத்தார் களும் இங்குள்ள பணக்காரர் படித்தவர் மேல் ஜாதிக்காரர் ஆகிய ஒரு சிறு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பூசி மக்களின் தேசீய அபிலா ஷைகளை திருப்தி செய்து வந்து கொண்டும் இருந்ததால் பாமர ஜனங்களின் எண்ணம்,
உணர்ச்சி, ஊக்கம் எல்லாம் அதிலேயே ஈடுபட்டுக் கிடந்தது. ஆனால் இப்பொழு தோ நாட்டில் வரவர அந்த எண்ணங்கள் மறையத் தொடங்கி விட்டன. அவை வேறு விதமாக  பரிணமிக்க ஆரம் பித்து விட்டன.
எப்படிஎன்றால் வெள்ளையனுக்கு ஏன் 1000, 5000 ரூபாய் சம்பளங்கள், கருப்பனுக்கு 100, 50, 10, 5 ரூபாய் சம்பளம் என்பது போய், மனித சமூகத்தில் யராராயிருந்தாலும் ஒருவனுக்கு ஏன் 5000, 10000 ரூபாய் சம்பளம், மற்றவறுக்கு ஏன் 5 ரூபாய், 10 ருபாய் சம்பளம், என்கிற உணர்ச்சி தோன்றி எல்லா மக்களும், ஜாதி, மதம், தேசம் என்கின்ற பேதமும் பிரிவுமில்லாமல் சகலரும்சமமாய் பாடுபட வேண்டும்.
பயனை சமமாய் அடைய வேண்டும் என்கின்றதான் ஒரு சமதர்ம உணர்ச்சியில் திரும்பி விட்டது. இந்த நிலைமையானது ஆட்சிக்காரருக்கு மாத்திரமோ அல்லது அரசாங்க உத்தியோஸ்தருக்கு மாத்திரமோ விரோதமானதன்றோ, அடக்கி விட வேண்டிய தென்றோ தோன்றாமல் நம் நாட்டில் உள்ள எல்லா பணக்காரர்களுக்கும், எல்லா மேல்ஜாதிக்காரர்களுக்கும் (அதாவது பாடுபடாமல் வயிர் வளர்க்கவும்,
போகபோக்கியம் அனுபவிக்கவும் கருதும் மக்களுக்கும்) படித்தவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் தோன்றி விட்டதுடன் இவர்களால் வாழ்ந்து வந்த மதப்புரோகிதர்கள் என்பவர்களுக்கும் தோன்றிவிட்டது. ஆதலால் இந்தக் கூட்டத்தார்கள் எல்லோருமே அக்கொள் கைக்கு எதிரிகளாய் இருப்பதில் நான் அதிசயப்படவில்லை என்பதோடு இதற்காக நான் ஜெயிலுக்குப் போக நேரிட்டதிலும் அதிசயமில்லை.
(போன வார வரலாற்றுச்சுவட்டில் வந்திருந்த பச்சநாவி என்ற சொல்லுக்கு நஞ்சு என்பது பொருள் ஆகும்)
-விடுதலை,25.7.15

நாயக்கர் சிறைபட்டார்


குடிஅரசு ஆசிரியர் ஈவெராமசாமி நாயக்கர் சிறை தண்டனைப் பெற்றிருக்கும் விவரத்தை மற்றொரு விடத்தில் காணலாம். சென்ற அக்டோபர் மாதம் குடிஅரசு பத்திரிகையில் வெளியான தலையங்கம் ராஜத்துரோகமுள்ளதென்ற குற்றத்திற்காக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்திரேட் இவ் வழக்கை விசாரித்து நாயக்கருக்கு 6 மாதம் வெறுங்காவலும், ரூபாய் 300/- அபராதமும் விதித்திருக்கிறார்.
நாயக்கர் தமிழ்தேசத்திற்கு செய்துள்ள ஊழியத்தை ஒருவரும் மறந்திருக்கமுடியாது. பெரும் தன்வந்தராகவும், ஈரோடு முனிசிபல் சேர்மன், தாலுக்கா, ஜில்லா போர்டுமெம்பர் ஆகிய பதவிகளை வகித்து உல்லாசமாயிருந்த ராமசாமி நாயக்கர் 1915ஆம் வருடம் முதற்கொண்டு, தேசீய இயக்கத்தில் ஈடுபட்டார்.
கோயமுத்தூர் ஜில்லா மகாநாட்டிற்கும், சென்னை மாகாணச் சங்க மகாநாட்டிற்கும் 1915, 1917 ஆகிய வருடங்களில் வரவேற்புத் தலைவராயிருந்து நாயக்கர் செய்த சேவைகளை யாரும் அறிவார்கள், பிறகு காங்கிரசில் சேர்ந்து ஒத்துழையாமைப் போராட்டத்தில் முன் அணியில் நின்று அவர் தொண்டாற்றி யதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதே இல்லை.
1924ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் மெம்பராகவும் இருந்து நாயக்கர் நல்ல வேலைகளைச் செய்துள்ளார். தீண்டாமையைத் தொலைக்க, வைக்கத்தில் சக்தியாகிரகம் செய்து சிறைப்பட்ட பாக்கியம் பெற்ற தமிழ்த் தலைவர் நாயக்கர் ஒருவரே யாவர்.
அரசியல் போராட்டத்தில் அவர் சிறைப்பட்டு கோயமுத்தூர் சிறையில் 1922-ஆம் ஆண்டில் தவம் செய்தார். பிறகு காங்கிரசிலிருந்து விலகி வரதராஜலுநாயுடு உள்பட எல்லா தேசியவாதிகளையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ததும், சுயமரியாதை இயக்கத்தை அவர் தோற்றுவித்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமே யாகும். ஐரோப்பாவில் யாத்திரை செய்து ருஷியாவை தரிசித்ததின் பயனாக பொதுஉடமைக் கொள்கையில் இன்று வெகு தீவிரமாக இறங்கியிருக்கின்றார்.
அவருக்கும், நமக்கும் மாறுபட்ட கருத்துகள் என்ன விருப்பினும், நமக்கு நியாயமென்று பட்ட கருத்துகளை அஞ்சாது வெளியிடுவதில் நாயக்கர் முத்ல் ஸ்தானம் பெற்றவரென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. சமய-சமூக-அரசியல் துறைகளில் நாயக்கர் செய்துள்ள தியாகமும், ஊழியமும் அவர் பட்டுள்ள கஷ்டங்களும் இத்தேசத்தினர் ஒரு நாளும் மறக்க முடியாதென்பதே நமது கருத்தாகும்.
பலவித ரோகங்களுக்குட்பட்டு, வயது சென்ற இக்காலத்தில் அவரை சிறைக்கனுப்பியது சர்க்காருக்கு அழகல்லவென்றே கூறலாம். கண்மூடித்தனமான பழைய ஆட்சிமுறைகள் முறிந்து, புதிய அரசியல் அமையப்போகும் இச்சந்திகாலத்தில், அரசாங்கத்தை தூஷித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டுவதும், அதற்காக தண்டிப்பதும் சிறுபிள்ளைத்தனமேயாகும்.
காலதேச வர்த்தமானத்தை அறிந்து நடந்துகொள்ளும் நல்லறிவு சர்க்காருக்கு என்றுதான் உண்டாகுமோ தெரியவில்லை, ராமசாமி நாயக்கரையும், அவருக்குத் துணையாகவிருக்கும், அவருடைய சகோதரி கண்ணம்மாள் அவர்களையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம்.
(தமிழ்நாடு தலையங்கம், ஜனவரி 1934)
-விடுதலை,11.7.15

ஈ.வெ.ராமசாமிக்கும், சா.ரா.கண்ணம்மாளுக்கும் ஜே (ஈ.வெ.கி)



நமதியக்கங்கண்ட தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம் 29ஆம் தேதியில் குடிஅரசில் எழுதிய இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் தொடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான் ஆகிய தோழர் ஜி. டபிள்யூ. வெல் அய்.சி.எஸ் அவர்கள் சென்ற ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார்.
அதாவது தோழர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு 6 மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3-மாதம் வெறுங்காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும், மேற்படி அபராதத் தொகை செலுத்தாத பட்சம் மேற்கொண்டு தலா ஒவ்வொரு மாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள்.
எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது - தற்போது நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்திருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.
ஆயினும் நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பதுதான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கை யானது நமது காரியாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் 110 என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமந் தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமை யாக ஒரு சங்கம் அவைகளின் தாலுகா தலைநகரில் ஏற்பட வேண்டும்.
அப்படி ஏற்படுகிற தாலுகாக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலுகாக்களின் ஜில்லாக்களின் தலைநகர் களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கத்திலும் அங்கத்தினர்கள் ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரச்சாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும்படியாகவும் சர்க்கார் மீது எவ்வித துவேஷம் உணர்ச்சி உண்டாக்காமலும் நமதியக்க உணர்ச்சி யையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரச்சாரம் செய்து வரவேண்டும்.
அதனால் மக்களுக்குள் ஒரு வித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி அறியாமையையும் அடிமைப்புத்தியையும், மூடப் பழக்க வழக்கங்களையும் வேரோடுகளையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரச்சாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்.
அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிராயங் களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள்.
நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கை களையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரச்சாரத்தின் மூலமும், எழுத வேண்டிய பிரச்சாரத்தின் மூலமும் எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அநேகமாயிரக் கணக்கான எதிர்ப்புகளுக்கும்,
முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல் களுக்கும் எதிர்பார்த்துத் தயாராகவுள்ள தியாகத் தோடுள்ள வர்களுக்கேதான் அவைகள் கைகூடிவரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம்.
ஆகையால் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கை களையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கை யை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்துகொண்டு தான், தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழிக் காயங்களால் இராப்பகலின்றி உழைத்து வந்தவர்கள்.
இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக் காகவும் சிறைப்பட்டார்களோ அந்தந்த கொள்கையும், எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ண முடைய ஒவ்வொருவரும் இனிச் செய்ய வேண்டியதென்ன வென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங் களும், பிரச்சாரங்களுமே உற்றதுணையாகும்.
ஆகையால் அவைகளை முன் தெரிவித்துக் கொண்டபடி நிறுவி பிரச்சார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமது இயக்கத் தோழர் களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம். மற்றும் நமது கொள்கைச் சமதர்மமும், சமத்துவமுமான தற்கேற்றபடி நமதியக்கத்தவர்களும் ஒருவருக் கொருவர் சமானமானவர்களேயாவர்கள்.
நமது ஈ.வெ.ரா. உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார் களாகையால் தற்பொழுது நமது இயக்கப் பிரச்சாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவரும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையி லில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்.
- புரட்சி - தலையங்கம் - 28.01.1934
-விடுதலை,11.7.15

வியாழன், 26 ஜனவரி, 2017

அம்பலத்து அதிசயம்! மறக்கமுடியாத பார்ப்பனக் கொடுமைகள்!


தேச விடுதலை விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் (திராவிடர்)பொதுநன்மையைஉத்தேசித்துஅநேக பார்ப்பனர்களுடையகொடுமைகளையும்,சூழ்ச்சி களையும் கூட்டாக்காமல், கபடமற்றுப் பார்ப்பனர் களுடன் ஒத்துழைத்து வந்திருந்தாலும், அவர்களு டைய உழைப்பையெல்லாம், அவர்கள் தங்கள் வகுப்புச் சுயநலத்திற்கென்று அனுபவித்துக் கொள்வதல்லாமல், உழைக்கின்றபார்ப்பனரல்லாதாருக்கு(திராவிட ருக்கு)எவ்வளவுக்கெவ்வளவுகெடுதிகளையும், துரோகங்களையும் செய்து வந்திருக்கிறார்களென் பதை- செய்து வருகிறார்களென்பதைப் பொறுமை யோடு படித்து அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.

முதலாவது பழைய காலத்திய தேசீயவாதிகளில், சிறந்தவர்களில் தோழர் சர். சி. சங்கரன் நாயர் என்கிற திராவிடர் முக்கியமானவர் ஆவர். அவர் காங்கிரசிலும் தலைமை வகித்தார். அப்பேர்பட்டவரை முன்னுக்கு வரவொட்டாமல் தடுப்பதற்காகப் பார்ப்பனர்கள் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்துவந்தார்கள்.

அவருக்குக் கிடைக்கவிருந்த அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவியைக் கிடைக்கவொட்டாதபடிக்குச் செய்ய, எவ்விதப் பொதுநலத்திலும் ஈடுபட்டிராத தோழர் சர்.வி.பாஷ்யம் அய்யங்கார் போன்றவர்களும் மற்றும் அநேக பார்ப்பன வக்கீல்களும் சீமைக்கெல்லாம் தந்தி கொடுத்ததோடல்லாமல், அவர் பேரில்  எவ்வளவோ பழிகளையெல்லாம் சுமத்திக் கஷ்டப்படுத்தினார்கள். அதன் காரணமாக நான்கு, அய்ந்து வருடங்களுக்கு முன்னதாகவே கிடைக்கவேண்டிய அய்க்கோர்ட் ஜட்ஜ் பதவி, வெகுகாலம் பொறுத்துத்தான் கிடைத்தது.

டாக்டர் டி.எம்.நாயர் அக்காலத்திய தேசீயவாதி களில் மிகவும் முக்கியமான திராவிடத் தேசீயவாதி. அவர் எவ்வளவோ பொதுக் காரியங்களில் ஈடுபட் டிருந்தவர். அவரையும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் ஒரு முனிசிபாலிட்டியில் கூட அவர் உட்காருவதைப் பொறுக்காமல், அவருக்கு விரோதமாகச் சூழ்ச்சிகளைச் செய்து, அவரையும் உபத்திரவப்படுத்தினார்கள். ஜஸ் டிஸ் கட்சி ஏற்படுவதற்கு நமது நாட்டில் ஏற்பட்ட முக்கியமானகாரணங்களில்இவையிரண்டும்முதன் மையானதென்று, ஒரு காங்கிரஸ் பார்ப்பனப் பிரசி டெண்டே நம்மிடம் சொல்லியிருக்கிறார்.
இவ்விதமான கஷ்டங்களிலிருந்து பார்ப்பனரல்லா தாரைக் காப்பாற்றுவதற்காக வேண்டி, முக்கிய காங் கிரஸ்வாதிகளாயிருந்த டாக்டர் நாயர் போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களால், ஜஸ்டிஸ் கட்சி யென்று ஓர் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது. அதை ஒழிப்பதற்காகப் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து, அதற்கு,எதிரிடையாகப் பார்ப்பனரல்லாதார் சிலரைப் பிடித்தேசென்னைமாகாணச்சங்கம்என்றுஒன்றை ஆரம்பிக்கச்செய்து,அதற்குவேண்டிய பொருளத் தனையும் பெரும்பான்மையாகப் பார்ப்ப னரே உதவி தேசபக்தன் என்ற தமிழ்த் தினசரிப் பத்திரி கையும், இந்தியன் பேட்ரியாட் என்ற ஆங்கிலத் தினசரிப்பத்திரிகையும்,ஜஸ்டிஸ்கட்சியைக்கொல்லு வதற்காகவேபிரச்சாரம்செய்யும்பொருட்டுஏற்பாடு செய்து கொடுத்து, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் செல்வாக்கில்லாமல் அடித்தார் கள்.
இந்தியன் பேட்ரியாட் பத்திரிக்கையைத் தங்கள் வேலையை முடித்துக் கொண்டவுடனே, ஒழித்து விட்டார்கள். எஞ்சியிருந்த தேசபக்தன் பத்திரிகையை, தேசத்தில்அதற்குக்கொஞ்சம்செல்வாக்குஆரம் பித்தவுடனே அதில் தமிழ்ப் பெரியார் கலியாண சுந்தரமுதலியார் ஆசிரியராயிருப்பதை ஒழிக்க வேண்டு மென்னும் முக்கிய கருத்துடன், அவருக்கு விரோதமாகச் சில பார்ப்பனரல்லாதாரையே கிளப்பிவிட்டு, சில பார்ப்பனர்களும் இரகசியமாக, அப்பத்திரிகைக்கு விரோதமாகத் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்து, தமிழ்ப் பெரியார் முதலியாரவர்களே தேசபக்தனைவிட்டு ஓடிப்போகும்படியாகச் செய்துவிட்டார்கள். அதற் குப் பிறகு அப்பத்திரிகைக்குப் பார்ப்பனர்களே ஆசிரியர்களும், எஜமானர்களுமாகி மெதுவாக நழுவ விட்டுக் கொண்டார்கள். இந்த மாதிரியே சென்னை மாகாண சங்கத்திலும், பார்ப்பனர்களின் சொற்படி நடந்து கொண்டிருந்த சிலர் ஆதிக்கம் பெற்றிருந்ததை ஆதாரமாக வைத்து, அவர்களைக் கொண்டே தங்கள் காரியமெல்லாம் முடிந்து போனவுடன் மறையும்படி செய்துவிட்டார்கள்.
இவையெல்லாம் பழைய காங்கிரஸின் கொள் கைப்படி ஏற்பட்ட திருவிளையாடல்கள் என்றாலும், ஒத்துழையாமை ஏற்பட்ட காலத்தில் பார்ப்பனரல்லாத திராவிடத் தேசபக்தர்களுக்குச் செய்த கொடுமைகளில் சிலவற்றைக் கீழே குறிக்கிறோம்.

ஒத்துழையாமைஆரம்பிப்பதற்குக்கொஞ்ச நாளைக்கு முன்பாகச் சென்னையில் தேசீயவாதி களின் சங்கம் (Nationlist’s Association) என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். அதற்குத் தோழர் சி.விஜயராக வாச்சாரியார் அவர்களை அக்கிராசனராக வைத்து, உப அக்கிராசன ஸ்தானத்துக்குத் தோழர் வி.ஓ.சிதம்பரம்பிள்ளைஅவர்கள்பெயரைப் பிரேர பித்தவுடன், அவருக்கு அந்த ஸ்தானத்தைக் கொடுக்க இஷ்டமில்லாதவர்களாகி, அதை அவர் அடையவிடாமற் செய்வதற்கு எவ்வளவோ பிரயத் தனங்களைப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதைப் பார்ப்பனரல்லாதவர்களில்  சிலர் தெரிந்து, அப்போதே கூச்சல் போட்டதின்பலனாக, அநேக உப அக்ராசனாதி பதிகளை ஏற்பாடு செய்து, அந்த ஸ்தானத்திற்கே ஒருமதிப்பில்லாமல்அடிக்கப்பார்த்தார்கள். இதன்பலனாகஅதன் நிர்வாக சபைகளில்பார்ப் பனரல்லாதாரை அதிகமாகப் போடும்படி நேரிட் டது. இதன் காரணமாகத் தேசீயவாதிகளின் சங்க மென்பதைக் குழந்தைப் பருவத்திலேயே கழுத்தைத் திருகிக் கொன்றுபோட்டார்கள். பிறகு திருப்பூரில் கூடிய தமிழ்நாடு மாகாண மாநாட்டுக்குத் தோழர் வரதராஜூலு நாயுடு அவர்களைத் தலைமை வகிக்க வேண்டுமென்று சிலர் பிரேரபித்தார்கள். அதற்கு விரோதமாக இந்து, சுதேசமித்திரன், சுயராஜ்யா ஆகிய மூன்று பத்திரிகைகளும், அதுசமயம் நாயுடு அவர்கள் மாநாட்டில் தலைமை வகிக்கத் தகுதியற்றவர் என்று எழுதி வந்ததோடு, பிரேரபித்தவரும் இம்மாதிரி பிரேரபித்தது தப்பிதமென்று சொல்லியும், அநேக ஜில்லாக்கள் பெரும்பான்மையாய்த் தோழர் வரத ராஜூலுநாயுடுவையேதெரிந்தெடுத்திருந்து,தோழர் ஆதிநாராயண செட்டியாரவர்களைக் கொண் டும், தோழர் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் திருப்பூருக்குச் சென்றதின் பலனாகவும், உபசரணைக் கமிட்டி யாரை வசப்படுத்தி, இவருடைய தேர்தலை ஒப்புக் கொள்ளாமல் நிராகரிக்கும்படி செய்து விட்டார்கள். பிறகு மாகாணக் காங்கிரஸ் கமிட்டியார் பிரவேசித்து அவரை ஒப்புக்கொள்ள வேண்டுமென்று தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு நிர்ப்பந்திக்கப்படுத்தினதின் பேரில் சுயமரியாதையுள்ளவர்கள் ஒப்புக்கொள்ள முடியாதவாறு உள்ள ஓர் தீர்மானத்தைப் போட்டு அவரையே ஒப்புக்கொண்ட மாதிரியாய்த் தெரியப் படுத்தினார்கள். இத்தீர்மானத்தின் போக்கு யோக்கி யதை அற்றதாய் இருந்தபடியால் தோழர் நாயுடு அதைத் தமக்கு வேண்டாமென நிராகரிக்கும்படியாயிற்று. பிறகு திடீரென்று தோழர் எம். ஜி. வாசுதேவ அய்யரவர்களைக் கொண்டு அம்மாநாட்டை நடத்திக் கொண்டார்கள்.

அதற்கடுத்தாற்போல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அக்கிராசனாதிபதியாகப் பெரும்பான்மை யோரால் என்னைத் தேர்ந்தெடுத்தபோது, தெரிந்தெடுத்த ஒரு மணி நேரத்திற்குள், தோழர் வ.வே.சு.அய்யர் அவர்கள் நம்பிக்கையில்லை எனும் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்ப் பெரியார் கலியாணசுந்தர முதலியார் எழுந்து, இது ராஜூய நோக்கத்துடன் கொண்டுவந்த தீர்மானமல்ல என்றும், அது ஒரு பார்ப்பனரல்லாதார் இந்த ஸ்தானம்  பெறுவதை எப்படியாவது ஒழிக்கவே கொண்டு வரப்பட்ட தீர்மானம் என  பொருள்பட உக்கிரமாய் அப்பொழுதே பேசி இருக்கிறார்.

இத்தீர்மானம் தோழர் வ.வே.சு. அய்யர் கொண்டு வந்ததின் பலனாய் சில  நாட்களுக்குள் தோழர் எஸ்.சீனிவாச அய்யங்காரால் மேற்படி அய்யர் அவர் களுக்குக் குருகுலத்திற்கென்று ரூ.600 நன்கொடை அளிக்கப்பட்டது.

1925இல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மாநாட்டிற்குத் தமிழ்ப் பெரியாரை சில ஜில்லாக் கமிட் டிகள் தெரிந்தெடுத்திருந்தும், அதை வெளியா ருக்குத் தெரிவிக்காமல் இரகசியமாய் வைத்துக் கொண்டு,   தங்களுக்குவேண்டியவர்களுக்கு ஆகும்படி இரக சியப் பிரச்சாரங்களும் நடைபெற்றன. இதற்கு முன் பெல்லாம் யார் யாரை எந்தெந்த ஜில்லாக்கள் தெரிந் தெடுத்தன என்பது பத்திரிகைகளில்  வருவது வழக் கம்.அப்பொழுதுஉபசரணைக்கமிட்டியாருக்கும்தெரி விக்காமல் பத்திரிகைகாரர்களுக்கும் தெரிவிக்காமல், இரகசியமாய் வைக்கப்பட்டது. தவிர, கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி தோழர் வரதராஜூலு நாயுடு தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினமாச் செய்யவேண்டுமென்று தீர்மானம் ஒன்று செய்தது. சென்னைக் காங்கிரஸ் கமிட்டியோ, என்னையும் சுரேந்திரனாத் ஆரியாவையும் கண்டித்து ஒரு தீர் மானம் செய்தது. நன்னிலம்  பொதுக்கூட்டத்தில் என் னையும், தமிழ்ப் பெரியார், ஆரியா ஆகியோரையும் காங்கிரசினின்றுவெளியாக்கவேண்டுமெனத்தோழர் சீனுவாச அய்யங்கார் பேசினார். சட்ட சபையில் காங்கிரஸ்பார்ப்பனமெம்பருடையவேலை,பார்ப் பனரல்லாதவருடைய ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டு மென்பதும், பார்ப்பனரல்லா தாருக்கு எதிரிடையாய் நிற்க வேண்டுமென்பதுமே என்று, சட்டசபையில் எலெக்ஷன் ஆன உடனேயே சுதேசமித்திரன் பத் திரிகை எழுதியது. இந்த நேரத்தில் சட்டசபையில் ஒரு பார்ப்பனர், எங்களுக்கு உத்தியோகம் கொடுக்காவிட்டால், ஒத்துழையாமைக் கட்சியில் சேர்ந்துவிடுவோமென சர்க்காரை மிரட்டினார்.
அன்றி சத்தியாக்கிரகத்தின் மூலமாய் அடைந்த  தண்டனையிலிருந்து நான் விடுதலையாகித் தமிழ்நாட்டிற்கு வந்த உடன், மறுபடியும் வைக்கம் போகாமலிருப்பதற்காக வேண்டி ஒரு பார்ப்பனச் சட்ட மெம்பரையும், ஒரு பார்ப்பன அட்வகேட் ஜெனரலையும் கொண்ட கவர்ன்மெண்ட், எட்டு ஒன்பது மாதங்கட்கு முன்னால் பேசிய பழைய குப்பைகளை  ஆதாரமாக வைத்து, ராஜ துரோகம் முதலிய கேஸ் எடுத்து, அதன் மூலமாகக் கைதியாக்கிக் கொண்டு போனார்கள். பார்ப்பனர்களின் பொல்லாத வேளையாய் ஒரு பார்ப்பனரல்லாத மாஜிஸ்திரேட்டிடம் அந்தக் கேஸ் நடந்தபடியால், கேஸ் ஒன்றும் ருஜுவாகவில்லை என்று அவர் கேசை முடித்துத் தண்டிக்காமல் ஓட்டி விட்டார். இவ்வளவுமல்லாமல் பார்ப்பனரல்லாத மந்திரிகள் பெரிய உத்தியோகஸ்தர்கள் லஞ்சகம் வாங்குகிறார்கள், லஞ்சம் வாங்குகிறவர்கள் அது செய்கிறார்கள், இது செய் கிறார்கள் என்று கிராமம் கிராமமாய், ஊர் ஊராய்ப் பிரச்சாரம் செய்வதற்குப் பணம் செலவு செய்து ஆட்களை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து, அவர்கள் பேரில் தப்பபிப்பிராயத்தைக் கற்பித்து வந்தார்கள்.

குருகுலம் சம்பந்தமாய் நடந்த கூட்டங்களில், பார்ப்பனர்கள் கல்லெடுத்துப் போட்டார்கள். சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல்களில் தோழர் ஆரியாவைஆட்களைவிட்டுஅடித்தார்கள். பொதுவாய் ஏழைகளுக்கும், முக்கியமாய்ப் பார்ப்ப னரல்லாதவர்களுக்கும் அவசிய மானதாகிய மது விலக்கு, தீண்டாமை முதலிய திட்டங்களைக் காங் கிரசை விட்டு ஓட்டி விட்டார்கள்.

பார்ப்பனரல்லாதார், தெய்வத்தின் பேராலும் க்ஷேத்திரங்களின் பேராலும் காணிக்கை, வேண்டுதல் மூலமாகக் கொடுக்கின்ற பணங்கள், ஒழுங்கான வழியில் செலவழிப்பதற்காக ஏற்பட்ட தேவஸ்தான ஆக்டானது, பார்ப்பனர்களுடைய எவ்வளவோ எதிர்ப்புக்களுக்கும் கண்டனங்களுக்கும் தப்பி நிறைவேறி விட்டபடியினால், அந்த ஆக்டே செல்லாதென்றும், அதை எடுத்துவிட வேண்டுமென்றும், (இப்போது அதன் திருத்தத்தை எப்படி எதிர்க்கிறார்களோ அப்படியே) அதை அமலில் இல்லாமல் சஸ்பெண்டு செய்வதற்கு இன்சக்ஷன் தடை கோரி, அய்க்கோர்ட்டில் மகந்துக்கள் பேரால் வியாஜ்யந் தொடுத்தார்கள். இதற்கு வக்கீல்களோ தோழர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், டி.ரங்காச்சாரியார், டி.ராமச்சந்திர அய்யர் மகந்துப் பக்கமும், இதற்கு எதிர் வக்கீலாய் ஏற்பட்டவரோ அட்வகேட் ஜெனரலான தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள் என்கிற பார்ப்பனருமே.

இந்த ஆக்ட் ஒழிய வேண்டுமென அய்க்கோர்ட்டில் பிராது தொடுத்திருந்தாலும், இந்த ஆக்டின் மூலமாய் ஏற்பட்ட உத்தியோகங்கள் எல்லாம் தங்களுக்கே கிடைக்க வேண்டுமென்று, தேவஸ்தான போர்டு ஆபீசையும், மந்திரி வீடுகளையும் பார்ப்பனர்கள் மற்றொரு பக்கம் சுற்றிக் கொண்டுதான் வந்தார்கள்.

இவையெல்லாமிருக்க, உலகப் பெரியார் காந்தி யாரையே ஒழிப்பதற்காக, ப்ராமணன் என்கிற ஒரு பத்திரிகையையும், சங்கராச்சாரியார்கள் மகந்துக்கள்
முதலியபார்ப்பனசிரேஷ்டர்கள்என்போரின்ஆத ரணையில்ஆரம்பித்ததும்இப்போதுதான்.இதே நேரத்தில் மற்றொரு பக்கம் காந்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பதவிகளையும், சட்டசபை ஸ்தானங்களையும் பெறுவதற்குப், பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றியும் அலைந்து கொண்டுதானிருந்தார்கள். இதற்குச் சில பார்ப்பனரல்லாதாரையும் மிரட்டிச் சுவாதீனப்படுத்திக் கொண்டார்கள்.

தினசரிப்பத்திரிகைகள்(இன்றைக்குப்போலவே அன்றைக்கும்)தங்கள்கைகளில்இருக்கிற காரணங்களால்,பாமரஜனங்களைஏமாற்றித்தங்கள் வசப்படுத்திக் கொள்வதோடு, சில முக்கியமான பார்ப்பனரல்லாததிராவிடர்களைத்தலையெடுக்க வொட்டாதபடி,பத்திரிகைகளில் ஊர், பேர் தெரியாத பார்ப்பனரல்லாதாரின் பொய்ப் பெயர்களை இட்டு தூற்றுதலான வியாசங்களை எழுதுவதும், பார்ப்பன வக்கீல்களிடம் (அப்ரென்டிஸ்) அதாவது வேலை படிக்கும் பார்ப்பனரல்லாத வக்கீல் களான, வாலிபர்களின் கையெழுத்தைப் போடச் செய்து, அவர்கள் பெயரால் பார்ப்பனரல்லாதாரைவைது,பத்திரிகைகளில்எழுது வதும்வயிற்றுக்கில்லாதவர்களினுடையவும்,பணத் தாசைபிடித்தவர்களினுடையவும்தேசபக்தியை யும் விலைக்கு வாங்கிக்கொண்டு, அவைகளைப் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாக உபயோகப் படுத்திப் பணச்செருக்கால் செய்து வந்தது சென்னைத் தேர்தல்களிலும் மற்றத் தேர்தல்களிலும் அப்போது நன்றாக அம்பலமாகியது.

ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனரல்லாதாருக்குள் கட்சிப் பிரதி கட்சிகளை உண்டாக்கி, இவர்களைக் கோர்ட்டுக்குச் செல்லும்படி அப்போது செய்ததும் பார்ப்பனர்களேயாகும்.
தேசியப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்துள்ள கொடுமைகள் இவ்வளவுதானெனவரை யறுத்துவிட முடியாது. அவர்கள் செய்தவையும், இன்னும் செய்யப் போகின்றதுமான காரியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவைகளைச் சமயம் நேரும்போது வெளியிட நாம் பின் வாங்கப் போவ தில்லை.

- ('குடிஅரசு’, 14.5.1949)
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016,விடுதலை