திங்கள், 26 ஜூன், 2023

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' - 2023


11

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப  நிகர்நிலைப் பல்கலைக் கழக வேந்தரான ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியாரின் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர் விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ’சி ஜி ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க்  பில்டு அமைப்பு'  இன்று (25.06.2023)  வழங்கியது.  இந்த விருதை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழக  பதிவாளர் சிறீவித்யா - ஆசிரியர் கி.வீரமணி சார்பில் பெற்றுக் கொண்டார்.


ஞாயிறு, 11 ஜூன், 2023

தென் இந்திய ரயில்வே ஸ்டேஜன்களில் சாப்பாட்டு விடுதிகள்

 

தென் இந்திய ரயில்வே ஸ்டேஜன்களில் சாப்பாட்டு விடுதிகள்

2023 மே 1-15,2023 வரலாற்றுச் சுவடுகள்

இதைப்பற்றி ‘குடிஅரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’, ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல்லாதவருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்குமாறு, சாணிச் சட்டி, கூடை, முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள். அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு, அதிலேயே எச்சிலை, சாணிச் சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்குப் பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை “உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா” என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் “உத்தம தேசபக்தர்களை” வணக்கத்துடன் கேட்கிறோம்.

– “குடிஅரசு’’
– விமர்சனம் – 06.06.1926

கல்பாத்தியும் தெருவில் நடக்க தடையும்

 

கல்பாத்தியும் தெருவில் நடக்க தடையும்

2023 பெரியார் மே 1-15,2023 வரலாற்றுச் சுவடுகள்

– ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவிலிருந்து


மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய்‘பஞ்சமர்கள்’ என்று சொல்லுவோர்களையும் ‘தீயர்’ என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை.

அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து சாமான்கள் வாங்கினால் அதைத் தங்கள் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல மகமதியக் கூலிகளையாவது, கிறிஸ்துவக் கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக்கொண்டு போவதே தவிர, மேற்படி இந்துக் கூலிகளை எடுக்க விடுவதில்லை.இதற்காகவே அக்கடைகளுக்குப் பக்கத்தில் மகமதிய, கிறிஸ்துவக் கூலிகள் அதிகமாய் நின்று கொண்டிருப்பார்கள்.

அல்லாமலும், அந்த வீதிகளில் உத்தியோகஸ்தர்களும் குடி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கும் ஆபீஸ் சம்பந்தமான காகிதம் போக்குவரத்து முதலியவைகளுக்கும் மகமதிய, கிறிஸ்துவ, பிராமண, நாயர் ஆகிய ஜாதியிலேயே குமாஸ்தா, பியூன் முதலியவர்களை நியமித்துக் கொள்ளுவதே அல்லாமல் தீயர், ஈழவர் என்கிற வகுப்பார்களை நியமிப்பதில்லை. தவிரவும் சென்னையிலிருந்து கள்ளிக்கோட்டைக்குப் போய்க் கொண்டிருக்கும் நேர் ரஸ்தாவில்தான் பாலக்காடு டவுன் பெரிய கடைவீதி இருக்கிறது. அக்கடைவீதிதான் பெரிய மண்டிக்கடை, மளிகைக் கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, பலகாரக்கடை, வெத்திலை பாக்குக்கடை, புகையிலை மண்டி முதலிய வியாபாரங்கள் நடக்கும் வியாபார ஸ்தலமாய் இருக்கிறது. இதுவும் முனிசிபல் பொது ரஸ்தாவாகும். இதிலும் சேரி மக்கள் முதலிய சில தாழ்ந்த ஜாதியார் என்போர்கள் நடக்கக்கூடாது. இந்தக் கடை வீதிகளிலும் மேற்படி தாழ்ந்த ஜாதியார் கூலிவேலை செய்யவுங் கூடாது.

தங்களுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கவும் கூடாது. வேறு யாரிடமாவது, ஒரு மகமதியர் மூல
மாகவோ, கிறிஸ்துவர் மூலமாகவோ ‘உயர்ந்த ஜாதி’ இந்து மூலமாகவோதான் காசு கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தக் கடைவீதியில் தான் சர்க்கார் போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது.

திருட்டு, கொலை, கொள்ளை, போர்ஜரி, விபசாரம் முதலிய வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியாகவோ, தண்டித்த கைதியாகவோ இருந்தால் அந்த வீதி வழியாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போலீஸ்காரர்கள் கைவிலங்கிட்டோ சங்கிலியில் பிணைத்துக் கட்டியோ கூட்டிக்கொண்டு போவதை அடிக்கடி பார்க்கலாம்.

யோக்கியமானவன்தான் அவ்வழியில் நடக்கக் கூடாது. இவ்விஷயங்களைப் பற்றி சுமார் 7, 8 வருஷங்களுக்கு முன் ஒரு தடவை சில கனவான்கள் யோசித்து கல்பாத்தி வழியாக சில தாழ்ந்த வகுப்பார் என்கிறவர்களை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். அதுசமயம் கல்பாத்தி பிராமணர்கள் “பொது கடை வீதிகளில் பிராமணரல்லாதவர்களான மகமதியர், கிறிஸ்துவர்கள், ஈழவர்கள் உள்பட அநேகம் பேர் இருக்கிறார்கள். அந்த வழியிலேயே தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லும் போது, நாங்கள் மாத்திரம் எப்படி எங்கள் தெருவில் நடக்கவிடுவோம்’’என்றார்கள். அதன் பிறகு உடனே சிலரில் தாழ்ந்த ஜாதியாரை அழைத்துக் கொண்டு கடைவீதியின் வழியாய் நடக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால், அந்தக் கடைவீதியானது பெயருக்கு மாத்திரம் பல வகுப்புக்காரர்கள் அடங்கிய வியாபாரக் கூட்டக்காரரால் வியாபாரம் செய்யப்பட்ட வீதியாயிருந்ததே ஒழிய, ஏறக்குறைய எல்லா முக்கிய வியாபாரிகளும் கல்பாத்தி முதலிய பிராமண அக்கிரகாரங்களில் உள்ள பிராமணர்களிடத்தில் கடன் வாங்கியவர்களாகவே இருந்ததால் அந்தப் பிராமணர்களின் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்க சக்தியற்றவர்களாகவே இருந்து அந்தப் பிராமணர்கள் தயவுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டியவர்களானதால் இந்த வியாபாரிகள் கடைவீதியிலும் தாழ்ந்த ஜாதிக்காரர் பிரவேசித்ததைத் தடுத்தார்கள். தடுத்ததோடு பிரவேசித்த தாழ்ந்த வகுப்பார்களை நன்றாய் அடித்தார்கள்.

அதன்மேல் பிராது ஏற்பட்டு அடித்ததற்காக சில செல்வமும் செல்வாக்கும் உள்ள வியாபாரிகள் அபராத தண்டனையும் அடைந்தார்கள். அதற்குப் பிறகு எவரும் செல்லவும் தடுக்கவும் பிரவேசிக்கவுமில்லை. சென்ற வருஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு மறுபடியும் கல்பாத்தி அக்கிரகாரத்திற்குள் ஈழவர்கள் பிரவேசிக்க முயன்றார்கள்.
அதுசமயம் சட்ட சபையிலும் எல்லா பொது ரஸ்தாவிலும் எல்லா ஜாதியாரும் போகலாம் என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினார்கள். அது அமலுக்கு வரும்போது சட்ட மெம்பர் சர். சி.பி. ராமசாமி அய்யர் தயவில் “வேலையிருந்தால்தான் போகவேண்டும்” என்கிற வியாக்கியானம் செய்யப்பட்டுப்போய் அந்தத் தீர்மானம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பிறகு சில ஈழவர்கள் ஆரிய சமாஜத்தில் சேர்ந்து மதம் மாறி அவ்வழியே நடந்தார்கள். அவர்கள் மீதும் பிராது கொடுக்கப்பட்டு விடுதலை ஏற்பட்டது.

இப்போது மறுபடியும் விடுதலை பெற்ற அதே ஆசாமி, அதாவது ஸ்ரீமான் சங்கரன் என்னும் பத்திரப் பதிவு இலாகா குமாஸ்தா தன் எஜமானன் வீட்டுக்குச் சர்க்கார் காரியமாய்ப் போகும் போது சில பிராமணர்கள் அவரை வழிமறித்து உபத்திரவம் செய்து அவர் நடந்த வீதியை பரிசுத்தம் செய்வதற்கென 10 ரூபாய்க்கு ஒரு பிராமிசரி வாங்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். இதைப்பற்றி நியாய ஸ்தலத்தில் பிராது நடந்து கடைசியாக இவ்வாரத்தில் தடுத்த பிராமணர்களுக்கு ஆள் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் அபராதமும் போடப்பட்டது.

இத்தோடு இது முடியும் விஷயமாகவும் இல்லை. மறுபடியும் கடைவீதிகளில் தாழ்ந்த ஜாதியார் நடக்கக்கூடாது என்பதைச் சிலர் வற்புறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனாலும் இதுசமயம் பாலக்காடு பெரிய கடைவீதி வியாபாரிகள் சுலபத்தில் ஏமாறக்கூடியவர்கள் அல்ல. தாங்கள் சென்ற தடவை தடுத்ததே நியாயமில்லை என்பதை நன்றாய் உணர்ந்திருக்கிறார்கள். ஆதலால் சீக்கிரத்தில் தாழ்ந்த வகுப்பாருக்குக் கடைவீதி பிரவேசமாவது கிடைக்குமென்று நம்புகிறோம்.

-‘‘குடிஅரசு’’ – கட்டுரை – 16.05.1926

வைக்கம் போராட்ட நூற்றாண்டு! கொண்டாட்டங்களால் கொள்கைப் பரப்புவோம்!

 

முகப்புக் கட்டுரை – வைக்கம் போராட்ட நூற்றாண்டு! கொண்டாட்டங்களால் கொள்கைப் பரப்புவோம்!

2023 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் உயர் ஜாதியினர் தவிர மற்ற ஜாதியினர் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டமே வைக்கம் போராட்டம். இந்தப் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி கேரளா தலைவர் டி.கே. மாதவனால் தொடங்கப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டதால், போராட்டத்தை முன்னெடுக்கத் தலைவர்கள் இல்லாத நிலையில் போராட்டம் கைவிடப்படும் நிலைக்கு வந்தது. இந்நிலையில்

1924ஆம் ஆண்டு மே மாதம் ஈ.வெ.ரா. வுக்கு கேரளாவில் வைக்கம் நகரில் இருந்து ஒரு தந்தியும், ஒரு கடிதமும் வந்தன.
திருவனந்தபுரம் சமஸ்தானத்திலுள்ள ஒரு சிறு நகரம் வைக்கம், ஈழவர் போன்ற பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அந்நகரின் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடமாடவோ, கடந்து செல்லவோ உரிமை கிடையாது. அவர்கள் எதிரிலுள்ள தெருவிற்குப் போக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றித்தான் போக வேண்டும்.

மாதவன் என்ற வழக்கறிஞர் (ஈழவர் வகுப்பு) அத்தெருவழியே நீதிமன்றம் செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
இக்கொடுமைகளுக்குத் தீர்வு காண ஈ.வெ.ரா.வால் மட்டுமே முடியும் என்று அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட தலைவர்கள் முடிவெடுத்துதான் ஈ.வெ.ராவை வைக்கத்திற்கு அழைக்கும் கடிதமும் தந்தியும் அனுப்பினர்.

மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈ.வெ.ரா சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்து விட்டு, காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை, தான் திரும்பி வரும் வரை ராஜாஜியை ஏற்க கடிதம் கொடுத்துவிட்டு, உடனே வைக்கம் நோக்கிப் புறப்பட்டார்.

வைக்கம் வந்த ஈ.வெ.ரா. தம்மை வரவேற்க திருவிதாங்கூர் மகாராஜாவின் போலீஸ் அதிகாரியும், நிருவாக அதிகாரியும் காத்திருக்க வியப்படைந்தார்.

திருவிதாங்கூர் மகாராஜா டெல்லிக்குச் செல்லும் போது வழக்கமாக ஈரோட்டில் ஈ.வெ.ரா.வின் வீட்டில் தங்குவார். அந்த நன்றி விசுவாசத்தில்தான் இந்த வரவேற்பைக் கொடுத்தார். ஈ.வெ.ராவை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுக்க ஒரு யுக்தியாகவும் மகாராஜா அந்த வரவேற்பைப் பயன்படுத்தினார். ஆனால் ஈ.வெ.ரா கொண்ட கொள்கையில் உறுதியாய்நிற்பவராயிற்றே! மகாராஜா ஏமாந்து போனார்.

அய்ந்தாறு நாள்கள் வைக்கத்தில் நடக்கும் கொடுமையை எதிர்த்து காரசாரமாகப் பேசினார். இதைக் கேட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணர்வு கிளர்ந்தது.
கீழ்ஜாதி மக்கள் சென்றாலே தீட்டாகும் என்று சொல்லப்படும் வைக்கத்தப்பனை (வைக்கத்து கடவுளை) போட்டு துணி துவைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா. கூற மக்கள் ஆதரவு மிகவும் கூடிற்று. மகாராஜா ஒருவாரம் பொறுத்தபின் தடையுத்தரவு போட்டார்.

ஈ.வெ.ரா அத்தடையுத்தரவை மீறினார்.அதனால், அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதம்‘அருவிக்குத்தி’ சிறையில் அடைக்கப்பட்டார். (22.04.1924)இதைக் கேள்வியுற்ற நாகம்மாளும் கண்ணம்மாளும் வைக்கம் வந்து, பிரச்சாரத்தைத் தொடர்ந்தனர். நாளுக்கு நாள் ஆதரவு பெருகிற்று.

இச்சூழலில், ராஜாஜி ஈ.வெ.ராவிற்கு ஒரு கடிதம் எழுதினார். நமது இடத்தை விட்டுவிட்டு நீங்கள் ஏன் இன்னொரு இடத்தில் போய் ரகளை செய்கிறீர்கள். அதை விட்டுவிட்டு இங்கு வந்து, விட்டுச் சென்ற வேலைகளைக் கவனியுங்கள் என்று அதில் எழுதியிருந்தார். மற்றொரு காங்கிரஸ்காரர் எஸ். சீனிவாச அய்யங்கார் ஈ.வெ.ராவை கையோடு
அழைத்துப் போகவே வந்து விட்டார்.

இங்குதான் தலைவர்களையும் அவர்களின் உண்மை உருவத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டோரின் விடிவுக்காக ஈ.வெ.ரா. நடத்திய போராட்டம் ராஜாஜிக்கு ரகளையாகப் பட்டிருக்கிறது! இன்னொரு அய்யங்கார் அழைத்துப் போகவே வந்து விட்டார். அவ்வளவு அக்கறை! ஜாதி உணர்வில், மற்றவர்களை ஆதிக்கம் செலுத்துவதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு இவ்வரலாற்றுச் சம்பவம் சரியான எடுத்துக்காட்டு.
ஆனால், கொள்கைப் பிடிப்புள்ள ஈ.வெ.ரா. இவர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல்,வர முடியாது என்று மறுத்துவிட்டார்.

ஈ.வெ.ராவின் போராட்டச் செய்தி நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. பஞ்சாபிலிருந்துகூட ஆதரவு கிடைத்தது. ஆனால், இந்த ஆதரவை இந்துக்களுக்கு எதிரான சீக்கியர் போர் என்று சூழ்ச்சிக்காரர்கள் திசை திருப்ப, பிற மதத்தவர் யாரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று காந்திஜி அறிக்கை விட்டார். அதனால் பிற மதத்தவர்கள் விலகிக் கொண்டனர்.

ஈ.வெ.ரா சிறையிலிருந்து விடுதலையானதும் மீண்டும் அங்கே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். காந்தியின் ஆதரவு இப்போராட்டத்திற்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அதிகாரிகள்
மீண்டும் ஈ.வெ.ராவைக் கைது செய்து 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார்கள். அதன்படி ‘பசுப்புரா’ சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சூழலில் கேரளாவில் ஈ.வெ.ரா தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த வைதீக சனாதனிகள் ஈ.வெ.ரா. மரணமடைய வேண்டும் என்று கடவுளை வேண்டி ஒரு யாகம் நடத்தினர். அதற்கு ‘சத்ரு சம்ஹார யாகம்’ என்று பெயர். இந்த யாகம் நடந்து கொண்டிருந்த போதே திருவிதாங்கூர் மன்னர் மரணமடைந்தார். இதுதான் வரலாற்று நகைச்சுவை!

மன்னர் மறைந்ததையொட்டி போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மன்னர் மறைவிற்குப் பின் அரசியார் பதவிக்கு வந்தார். அவர் போராட்டத் தலைவர்களுடன் பேசித் தீர்வுகாண உடன்பட்டார்.

ஈ.வெ.ராவிற்கும் ராணிக்கும் இடையே உடன்பாடு எற்படுவதை விரும்பாத சமஸ்தான திவான் ராஜாஜிக்குக் கடிதம் எழுத, அவர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி வரவழைத்தார்.
வைக்கம் வந்த காந்திக்கும் ராணிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஈ.வெ.ரா. கலந்து கொள்ளாமல் பயணியர் விடுதியில் இருந்தார்.

“நாங்கள் தெருக்களைத் திறந்துவிடத் தாயார். ஆனால் ஈ.வெ.ரா கோயிலுக்குள்ளும் போக வேண்டும் என்று போராடுவார். அதுதான் தயங்குகிறோம்” என்றார்.
உடனே காந்திஜி பயணியர் விடுதிக்கு வந்து ஈ.வெ.ராவைச் சந்தித்து ராணி கூறியதைக் கூறி, “ஒத்துக் கொள்வது நல்லது; உங்கள் கருத்தென்ன” என்று கேட்க,“தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள்ளும் செல்லவேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கமாக இல்லாவிட்டாலும் அது எனது லட்சியம். அதை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இப்போதைக்கு வேண்டுமானால் அதுபோன்ற கிளர்ச்சி இருக்காது” என்று ஈ.வெ.ரா தனது தனித் தன்மையையும், நேர்மையையும், உறுதியையும் வெளிப்படுத்தினார்.

காந்திஜி ஈ.வெ.ராவின் பதிலை அரசியிடம் கூற அரசி ஏற்றுக் கொண்டார். தீண்டப்படாத மக்களுக்கு கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்த தடை நீங்கியது; அவர்கள் தலைநிமிர்ந்து நடந்தனர்.
இப்போராட்டம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. கோயில் நுழைவுப் போராட்டத்திற்கு அவர்களைத் தூண்டியது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூட இப்போராட்டத்தினால் தூண்டப்பட்டதாக அவரே கூறினார்.
தமிழ்நாட்டிலும் இப்போராட்டத்தின் விளைவாய் தாழ்த்தப்பட்டோரிடையே எழுச்சி ஏற்பட்டது. பல மாதங்களுக்குப் பின்வெற்றியோடு தமிழ்நாடு திரும்பிய ஈ.வெ.ரா.விற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘வைக்கம் வீரர்’ என்னும் அடைமொழியை திரு.வி.க. ஈ.வெ.ரா. விற்கு வழங்கினார்.

வைக்கம் போராட்டத்தில் வென்ற ஈ.வெ.ரா. பெரியார் போராட்ட வெற்றிபற்றி கீழ்க்கண்டவாறு நுட்பமாகப் பேசினார்.“அறப்போராட்டத்தின் நோக்கம் கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாமும் நடக்க வேண்டும் என்பதல்ல; மனிதனுக்கு மனிதன் உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது என்பதேயாகும். சமத்துவம் வேண்டும் என்பதே நமது குறிக்கோள். இது இத்தெருவில் நடந்ததோடு முடிந்து விடவில்லை. தெருவில் நிலைநாட்டிய சுதந்திரத்தை கோயிலுக்குள்ளும் நிலை நாட்டவேண்டியது மனிதர் அனைவரின் கடமையாகும்’’ என்றார்.

வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து கோட்டயம் நகரில் ஈ.வெ.ரா தலைமையில் மாநாடு நடந்தது. அதில் கோயில் நுழைவு சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து எர்ணாகுளம் நகரில் ஜாதியொழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. ஜாதியொழிய ஜாதியில்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் சேரலாம் என்றும் பரிந்துரைக்
கப்பட்டது. இதையேற்று ஒடுக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக இஸ்லாம் மதத்தில் சேர்ந்தனர். இந்நிலை நீடித்தால் இந்துமதம் அழியும் என்று அஞ்சிய மதவாதிகள் மவுனமாக, அரசு வேறு வழியில்லாமல் எல்லா இந்துக்களும் எல்லாக் கோயில்களுக்குள்ளும் செல்லலாம் என உத்தரவு பிறப்பித்தது. இது ஈ.வெ.ரா.வுக்குக் கிடைத்த அடுத்த வெற்றி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டும் தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பும்

இதற்கு பெருமை வாய்ந்த வைக்கம் போராட்ட தள நாயகர் தந்தை பெரியார் செயற்கரும் செயல்கள் குறித்து ஓராண்டு முழுவதும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு சிறப்புடன் நிகழ்ச்சிகள் நடத்தும் என்று சட்டப் பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினைப் பிரகடனப்படுத்தினார் சமூக நீதிக்கான சரித்திரநாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30ஆம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023 ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும். போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா, பின்வரும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” நிகழ்ச்சியில், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன். வைக்கம் போராட்டம் நடை பெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

2. தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழி பெயர்ப்பு வெளியிடப்படுகிறது.

3. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் கேரளாவில் உள்ள டி.சி.பதிப்பகம் ஆகியவற்றின் கூட்டு வெளியீடாக இது வெளியிடப்படவுள்ளது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

4. இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இருமாநில முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும்.

5. எல்லை கடந்துசென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும்
வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.

6. கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருள்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7. தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த ‘அருவிக்
குட்டி’ கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

9. தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓராண்டு முழுவதும்…

10. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்றுகொண்டுவரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும். இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும்.

11. வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு அறிஞர்களிடமிருந்து பெற்று தொகுத்து வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் ஒன்று ‘தமிழரசு’ பத்திரிகை மூலம் கொண்டு வரப்படும்.
இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

ஆசிரியர் வரவேற்பு

வைக்கம் போராட்டத்தைப் போற்றும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் 30.3.2023 அன்று அறிவித்த அடுக்கடுக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதற்காக நமது முதலமைச்சரை தாய்க்கழகம் திராவிடர் கழகம் உச்சிமோந்து பாராட்டி மகிழ்கிறது.
நூற்றாண்டு 30.3.2023ஆம் நாளிலிருந்து தொடங்குவதால், தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் இன்று அறிவித்துள்ள அறிவிப்புகளும், நிதி ஒதுக்கீடும், அதனை விளக்கி முதலமைச்சரின் சுருக்க உரையும் இசைத் தேனாக நமது காதுகளில் ஒலித்தன!

மனித உரிமையின் மாண்புக்கு முன்னோட்டமான இப்போராட்டம் ஒரு துளி ரத்தம் சிந்தாத ஆயுதம் ஏந்தாத ஓர் அமைதிப் புரட்சிவழிப் போராட்டம்!

மனித உரிமைக்கான தாய்ப் போராட்டம்!

பல மனித உரிமைப் போராட்டங்களுக்கும், ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்
களுக்கும் ‘தாய்ப் போராட்டம்’ என்றே பொருத்தமாக இதனை அழைக்கலாம்!
அதன் முக்கியத்தை இப்போதுள்ள இளைஞர், மாணவர், மக்கள் அறியவேண்டிய, இனி வரக்கூடிய தலைவர்களுக்கும் புரியவேண்டிய தேவையும் கருதி, நமது முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள நூற்றாண்டு விழா செயல் திட்டங்கள் செம்மை பெற, ‘செயலாக்கக் குழு’ அமைப்பும் முக்கியம்!

செய்யப்படவேண்டியவை

வெறும் விழாக்கோலம் தாண்டி, புதிய எழுச்சியை உருவாக்கவும், ஜாதி – தீண்டாமை ஒழிப்புக்குத் தூண்டுதலாகவும், பல புதிய சமூகப் புரட்சிச் சட்டங்களையும், வைக்கம் நூற்றாண்டு காலத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியும், கொள்கைமிகு முதலமைச்சரும் செய்யவேண்டும் என்பதை எதிர்பார்ப்பதுடன் இதை ஒரு திருப்புமுனையாக அமைப்பது முக்கியம் என்பதையும் நினைவூட்டி, முதலமைச்சருக்கு நமது உளங்கனிந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மனமார – வாயார – கையார வாழ்த்தி, கைதட்டி வரவேற்கிறோம்!
‘‘புதியதோர் உலகு செய்து” நாட்டை புதிய சமத்துவபுரமாக்கிய நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியை தாய்க்கழகத்தின் சார்பில் மனதார உச்சிமோந்து பாராட்டுகிறோம்!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்திட உள்ள கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களையும், கேரள அரசையும் மனதாரப் பாராட்டுகிறோம்!’’ என்று ஆசிரியர் வரவேற்றுப் பாராட்டினார்கள்.

நூற்றாண்டு விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை

கடந்த மார்ச் 6ஆம் நாளன்று நாகர்கோயிலில் நடந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200ஆம் ஆண்டு விழாவில் நானும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் கலந்து கொண்டோம்.
அந்தக் கூட்டத்தில் பேசிய நான், ‘‘வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதனைத் தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.எனக்குப் பிறகு பேசிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள், அதனை உறுதிப்படுத்திப் பேசினார்கள்.

“ஞங்கள் நடத்தாம்! தாங்கள் வரணும்…” என்னு, ஆ வேதியில் வெச்சு தன்னே, சகாவு பினராயி விஜயன் என்னெ ஸ்வாகதம் செய்து. உடல் கொண்டு வேறே வேறே என்னாலும், சிந்த கொண்டு நம்மள் ஒன்னாணு என்னு அப்போதன்னே, அத்தேஹம் தெளியிச்சு.

(நாங்கள் நடத்துகிறோம் – நீங்கள் வருகை தாருங்கள் என்று எனக்கு அந்த மேடையில் வைத்தே அழைப்பு விடுத்தார்கள். உடலால் நாம் வேறு வேறு என்றாலும் உணர்வால் ஒருவர் என்பதை அந்த மேடையிலேயே பினராயி விஜயன் அவர்கள் நிரூபித்தார்கள்.)
சில நாட்களில் கேரள அமைச்சர் திரு. சாஜி செரியன் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்து என்னைச் சந்திக்க வைத்தார்கள்.

வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு சகோதரர் பினராயி விஜயன் அவர்கள் அழைத்து நான் இதுவரை வராமல் இருந்தது இல்லை.

ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு…

தமிழ்நாட்டில் இப்போ நியமசபா நடக்குன்னு. என்னாலும், வைக்கம் சத்யாகிரஹத்
தின்டே நூறாம் வார்ஷிகத்தில் நிச்சயம் பங்கெடுக்கணம் என்னுள்ளதினால் ஞான் இவிடே எத்தியிரிக்குன்னு..
(தமிழ்நாட்டில் இப்போது சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. என்றாலும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவுக்கு நிச்சயம் சென்றாக வேண்டும் என்று நான் இங்கே வந்துள்ளேன்!)
கேரளாவே இங்கு திரண்டு வந்திருக்கிறது என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பிரமாண்ட-மாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைக்கம் – என்பது இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு எழுச்சியை -_ உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர்!
1924 ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல – தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம்! இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்!
அம்பேத்கர் பார்வையில் வைக்கம் போராட்டம்!

“வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது” என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிற்காலத்தில் எழுதினார்கள்.
வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அவர்கள் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும், சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும், மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே, சுயமரியாதை -சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் -நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

சூத்திரர்கள் என்றும், பஞ்சமர் என்றும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களைத் தலைநிமிர வைக்க கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் சீர்திருத்த இயக்கமானது பல்லாண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைச் சீர்திருத்த இயக்கமாக மட்டுமே சுருக்கிச் சொல்லி விட முடியாது. இவைதான் புரட்சி இயக்கங்கள்!
கேரளாவில் புரட்சி இயக்கம் என்பது –

 நாராயணகுரு
 டாக்டர் பல்ப்பு
 பத்மநாபன்
 குமாரன் ஆசான்
 அய்யன்காளி
 டி.கே.மாதவன் – ஆகிய தலைவர்களால்
வரிசையாக நடத்தப்பட்டது!
தமிழ்நாட்டு புரட்சி இயக்கமானது –
 இராமலிங்க வள்ளலார்
 அய்யா வைகுண்டர்
 அத்திப்பாக்கம் வெங்கடாசலனார்
 பண்டித அயோத்திதாசர்
 டி.எம்.நாயர்
 தந்தை பெரியார் – ஆகிய தலைவர்களால்
வரிசையாக நடத்தப்பட்டது!
இதில் கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவன் அவர்களும் – தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம்!’’ என்றார்.

கேரள முதல்வர் உரை

வைக்கம் சத்தியாகிரகம் கேரளத்துக்கு மட்டுமல்ல, இங்கு தமிழ்நாடு முதல்வர் குறிப்
பிட்டதுபோல் தமிழ்நாட்டுக்கும் பெருமை
கொள்ள வழி வகுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிராமணிய எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த ஈ.வெ.ரா. பெரியார், அங்கிருந்து வந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதுடன் இங்கு சிறைவாசமும் அனுபவித்தார். அவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் வைக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

தனியார் போராட்டம் அல்ல…

வைக்கம் சத்தியாகிரகம் மற்றொரு முன்மாதிரியையும் நம்முன் உயர்த்திக்-காட்டுகிறது. சீர்திருத்த இயக்கம் என்பது சமூக அமைப்புகளால் மட்டும் நிறைவு பெற்றுவிடாது. இப்போதும் ஜாதியப் பாகுபாடுகளைச் சந்திப்போர் அதற்கு எதிராக தன்னந்தனியாக வேறுபட்டு நின்று நடத்தவேண்டிய போராட்டம் அல்ல என்பதுதான் அது. .

‘அவர்ணருக்காக’ போராடிய ‘சவர்ணர்கள்’

‘அவர்ணர்’ என வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வேண்டும் என்பதே மன்னத்து பத்மநாபன் தலைமையில் நடந்த சவர்ணர்களின் நடைப்பயணம்.

வைக்கம் சத்தியாகிரகத்தையொட்டி பேச்சு வார்த்தைக்கு வந்த காந்திஜியைக்கூட, அவர் பிராமணிய சவர்ணர் அல்ல என்பதால் வைக்கத்தின் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த இண்டம்துருத்தி மனையில் அனுமதிக்காதது குறித்து இங்கே குறிப்பிட்டார்கள். கோயிலுடன் இணைந்த பொது வழிகளில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்கிற காந்தியின் கோரிக்கையை அந்த ஆதிக்க மனையின் அதிகாரிகள் நிராகரித்தனர். காந்திஜிக்கு அங்கு கிடைத்த அனுபவம், அவமானகரமான சூழல் குறித்தும் இங்கே குறிப்பிடப்பட்டது. அந்த மனைதான் இப்போது ‘சொத்து’ (மரம் ஏறும்) தொழிலாளிகளின் அலுவலகமாகச் செயல்படுகிறது. வரலாறு முற்போக்காக முன்னேறிச் செல்லும் என்பதற்கான சான்றாகும் இது.

சத்தியாகிரகிகள் எதிர்கொண்ட கொடூரமான தாக்குதல்கள் மறக்க முடியாதவை. பிராமணரான ராமன் இளையது என்கிற சத்தியாகிரகியின் கண்களில் பிராமணியத்தின் பிரமுகர்கள் வலுக்கட்டாயமாக சுண்ணாம்பு தேய்த்தனர். வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவராக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோன்ற ஏராளமான வலி நிறைந்த அனுபவங்களைக் கொண்டது வைக்கம் போராட்டம். அவற்றை யெல்லாம் கடந்துதான் ஜனநாயக முறையில் இன்று கேரளம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உயர்ந்துள்ளது.

60 ஆண்டுகள் அமலாகாத சட்டம்

ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கு பொதுப்பாதையைப் பயன்படுத்தும் சுதந்திரம் 1865இல் திருவிதாங்கூர் அரசு வழங்கியது. ஆனால், அந்த அனுமதி அமலாக சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வெகுஜனப் போராட்டம் தேவைப்பட்டது. சிறப்பான சட்டத்தால் மட்டும் சமூக நிலவரங்களை மாற்றி அமைத்துவிட முடியாது, அதற்கு சமூகத்தின் ஒட்டுமொத்த மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும் வெகுஜனத் தலையீடு தேவை என்பதை வைக்கம் சத்தியாகிரகம் தெளிவுபடுத்துகிறது.
வைக்கம் சத்தியாகிரகம் நாட்டின் பல்வேறுபகுதிகளில் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

அத்தகைய போராட்டங்களின் மூலம் வளர்ந்து வந்த மாற்றங்கள்தான் இன்று தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் ஆட்சி அதிகாரத்துக்கு வழிவகுத்தது. பெரியார், அண்ணா போன்றோரின் திராவிட முன்னேற்ற கழக இயக்கத்தை காலத்துக்கு ஏற்ப அரசியல்படுத்தி முன்னெடுத்துச் செல்கிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, சீர்திருத்த இயக்கத்திடமிருந்து ஊக்கம் பெற்று மனிதாபிமானம் கொண்ட ஒரு புதிய சமூகத்தைப் படைக்க கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு முயற்சிக்கிறது. சீர்திருத்த இயக்கத்தின் உன்னத நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லும் இரண்டு நீரோட்டங்களின் இத்தகைய சங்கமம், வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டையொட்டி இங்கு சாத்தியமாகி இருக்கிறது என்பது அதிக முக்கியத்துவம் கொண்டதாகும்’’ என்றார்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கே விழிப்பையும், தூண்டுதலையும் தந்தது வைக்கம் போராட்டம். அதன் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதன்மூலம் இன்றைய தலைமுறைக்கு விழிப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்த முடியும்! ஏற்படுத்த வேண்டும்!


திருவாங்கூரும் பார்ப்பனியக் கொடுமையும்

திருவாங்கூரும் பார்ப்பனியக் கொடுமையும்

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் பெரியார்

 – தந்தை பெரியார்

திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்ஜியமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பனக் கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள், உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக, ஜாமீன் பறிமுதல் செய்யப்-பட்டதோடு, பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அனுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது. அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகைச் செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்
கப்பட்டு வருகிறது. சென்னைத் தினசரி பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானதாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப் படுகின்றன.

சர்வம்பார்ப்பனமயம்

இந்நிலையில் திருவாங்கூர் பிரஜைகள் வதைபடுத்தப்படுகிறது ஒருபுறமிருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம் மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற் கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக்கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப் படுகிறது. மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனுபவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ஜிய பாரத்தைத் தனக்கு வாங்கிக் கொடுத்தவர் சர்.சி.பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சர். சி.பி. திருவாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.

வர்த்தகத் துறையிலும் பூணூல்

அதாவது 5 லட்சம் ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத்திய ரப்பர்
தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம்.
மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனி, ஒரு அய்ரோப்பிய கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்குக் கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து சர்வீசைச் சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிருவாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லட்ச ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கிக் கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். சர்.சி.பி மகன் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்குப் பெரிய கான்ட்ராக்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்.

உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள்

உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூபாய் சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர். இவர் மெட்ரிகுலேஷன் பரீட்சை கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45க்கு மேலான பிறகு உத்தியோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்பந்தமுள்ளவர். இவருக்குச் சம்பளம் மாதம் ரூபாய் 1500 இரண்டு சட்ட கலாசாலை பிரின்சிபால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள்.

சர்க்கார், பொட்டோகிராபர் கூடப் பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வகேட் ஜெனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும் புரோசான்ஸலர், வைஸ்சான்ஸலர் என்றும் லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 என்றும் ரூபாய் சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவாங்கூர் பொக்கிஷம் காலியாகிக் கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூபாய் கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.

சென்னை மாதிரி திருவிதாங்கூரும்

சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வருஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருடம் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல் ஸர் சி.பி. திவானாவதற்கு முன் தங்கப்பாளங்களும், வைரம், சிவப்பு பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய்க் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக்கிஷம், அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் லு கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு 3லு கோடி வருஷ வருமானமுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவாங்கூர் பிரஜைகளான வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லாத மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து, ஆத்திரப்பட்டு, மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது சர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும். தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந்தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.

நாராயண பிள்ளை கதி

இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட் வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்ரிகையில் ஒரு கட்டுரை எழுதினார், என்பதற்காக அவர் மீது ராஜத் துரோகம் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையை விட குற்றவாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும், நீதி வழங்கப்பட்ட முறையும்தான் நாம் மிகுதியும் கவனிக்கத் தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து ஊன்றிக் கவனித்தால் திருவாங்கூரில் இன்று நீதி, நிருவாக ஆட்சி நடக்கிறதா? அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கிறதா? என்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.
எதிரி பட்ட கஷ்டங்கள்

ஏனெனில், தோழர் நாராயணப்பிள்ளை குற்றம் சாட்டப்பட்டவுடன் ரிமாண்ட் செய்யப்பட்டார். இது விஷயத்தில் பொதுக் கூட்டங்கள் – தங்கள் அபிப் பிராயங்களைத் தெரிவிக்கக் கூட்டம் கூட்டப்படாது என்றும் தடைபடுத்தப்பட்டு விட்டது. தோழர் நாராயண பிள்ளைக்கு கீழ் கோர்ட்டில் கிடைத்த ஜாமீன் உத்தரவு, மேல் கோர்ட்டில் சர்க்கார் கட்சி அப்பீலின் மீது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தக்க வக்கீல் வைத்து வாதாட பொது ஜன ஆதரவுக்கு தடை செய்யப் பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தில் உள்ள திறமையுடைய வக்கீல்கள் நாராயணப் பிள்ளைக்காக ஆஜராகிக் கேசை நடத்தப் பயப்பட்டு விட்டார்கள். எதிரிக்காகக் கேசை நடத்த வெளி மாகாணத்தில் இருந்து தோழர் நரிமன் வரவழைக்கப்பட்டார். அவர் ஆஜராகக் கூடாது என்று தடுத்ததுடன் அவர் திருவாங்கூரில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடை படுத்தப்பட்டு வந்த வழியே திருப்பி அனுப்பட்டுவிட்டார். இந்தக் காரணங்களால் எதிரி நிர்க்கதியாகி விசாரணையில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சர்க்காருக்கு சவுகரியமாகப் போய்விட்டது போலும். தோழர் நாராயண பிள்ளைக்கு ஒன்றரை வருஷம் வெறுங் காவலும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

துக்ளக் ஆட்சி

ஆகவே, இன்று திருவிதாங்கூர் ராஜ்யம், செல்வம், நிருவாகம், அதிகாரம், நீதி முதலியவைகளில் பழங்கால காட்டுராஜா ஆட்சி என்றும் நவாப் தர்பார் என்றும், அதிலும் மகமத் துக்ளக் ஆட்சி என்றும் சொல்லப்படும் ஆட்சி போல் நடக்கின்றது என்பதோடு, வரவுக்கு மிஞ்சின செலவும், பொக்கிஷம் காலியும், கடனும் ஏற்படுகிற நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்.

பூணூல் மகிமை

இவை தவிர, இனியும் எவ்வளவோ ஆபாசங்கள் நடப்பதாயும் கூறப்படுகின்றன. இவ்வளவு சங்கதிகளும் இன்று பொது ஜனங்களுக்குப் புலப்படாமல் இருக்கவும், மேலும், மேலும் சர்.சி.பி. அய்யருக்குத் தைரியம் ஏற்படவும் காரணமாய் இருப்பது பூணூலே ஆகும். அதாவது திவான் ஒரு பார்ப்பனராய் இருப்பதேயாகும். கொச்சி திவான் தோழர் சர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் கொச்சி சென்றவுடன் “கொச்சியில் திவான் வேலை பார்க்கக் கொச்சியில் ஒரு ஆள் கிடைக்க வில்லையா?” என்ற எடுப்பை பல்லவியாக வைத்து ஒரு வருஷகாலம் அவருக்கு சென்னைப் பார்ப்பன பத்திரிகைகள் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கொச்சிக்குச் சென்று அங்குள்ள காலாடிகளைப் பிடித்து கலகத்தை மூட்டித் தொல்லை கொடுத்தார்கள்.

ஆர்.கே. கொச்சிக்குச் செய்த நன்மைகள்

இவ்வளவையும் சமாளித்துத் தோழர் சண்முகம் கொச்சி சமஸ்தானத்துக்கு வருஷத்துக்கு பத்து லட்சக்கணக்கான ரூபாய் வரும்படி கிடைக்கும்படியான கொச்சித் துறைமுகத் திட்டத்தை ஏற்படுத்தி மகாராஜாவுடையவும் பிரஜைகளினுடையவும் ஆதரவையும் அன்பையும் பெற்று இந்திய சமஸ்தானங்களில் வேறு எங்குமில்லாத முறையில் பிரஜைகளுக்கு முதல்படியாக பொறுப்பாட்சியும் வழங்கினார். இதைக் கண்டாவது பார்ப்பனப் பத்திரிகைகள் புகழாவிட்டாலும் சும்மவாவது இருக்காமல் இதென்ன கண்ணைத் துடைக்கிற வித்தை என்றும், இதில் என்ன பிரயோஜனம் என்றும், அயோக்கியத் தனமாகவும் அற்பத்தனமாகவும் எழுதிப் பரிகாசம் செய்தன.

சி.பி. சமாதானம்

இதையாவது ஏன் திருவாங்கூர் சர்.சி.பியும் பரோடா திவான் சர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரியும், காஷ்மீர் திவான், திவான் பகதூர் என் கோபாலசாமி அய்யங்காரும் ஆகிய பார்ப்பனர்கள் செய்யவில்லையே என்று பொது ஜனங்கள் கேட்க ஆரம்பித்தபோது “சுதேச சமஸ்தானங்களுக்குச் சீர்திருத்தம் வழங்கப்
பிரிட்டிஷ் சர்க்கார் சம்மதிக்க மாட்டார்கள்” என்று ஒரு பொறுப்பற்ற யோக்கியமற்ற சமாதானத்தை சர்.சி.பி. சொன்னார்.

பிரிட்டிஷார் பதில்

பிரிட்டிஷார் இதைக் கேட்டு நகைத்துவிட்டு, நாங்கள் தடையாயில்லை. எவ்வளவு சீர்திருத்தம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லி விட்டார்கள். இதன்மேலாவது சர்.சி.பி. வாயை மூடிக்கொண்டிருக்காமல் அதைவிட போக்கிரித்தனமானது யோக்கியப் பொறுப்பற்றதுமான பதில் சொன்னார். என்னவென்றால் கொச்சி முதலிய சாதாரண சமஇதானங்கள் தவிர “தர்மராஜ்யமான திருவாங்கூருக்கு சீர்திருத்தம் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு, சொன்ன எட்டு நாளிலேயே இந்தத் திருக்கூத்தை நடத்தியிருக்கிறார்.

நாணயமற்ற சாக்குப் போக்கு

தவிரவும் திருவாங்கூர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டதிலும் இது மாதிரியே நாணயமற்ற சாக்கு போக்குச் சொல்லி அடக்கிவிட்டு, பெரிய உத்யோகங்களை பார்ப்பனர்களுக்கே ஏராளமாய்க் கொடுத்து வருவதோடு பொக்கிஷம் பாப்பராகும் படி புது உத்யோகங்களையும் சிருஷ்டித்துப் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப் போகிறார். ஸர். சண்முகம் அவர்கள் தன் திவான் ஆதிக்கத்தில் 2-வருஷத்துக்கு முன்பே வகுப்பு
வாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி, தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்
களுக்கே 100க்கு கிட்டத்தட்ட 40 உத்யோகங்கள் போல் கிடைக்கும்படி செய்து விட்டார்.

ஆர்.கே.எஸ்சும், பார்ப்பனப் பத்திரிகைகளும்

ஆகவே, தோழர் ஆர்.கே.சண்முகம் அவர்கள் துறைமுக வரும்படியில் பொக்கிஷத்தை நிரப்பினார். அரசியல் சுதந்திரத்தால் பொறுப்பாட்சி அளித்தார். வகுப்புவாரி உத்தரவால் சமுதாயத்தை மேன்மைப்படுத்தினார். அதாவது சர். சண்முகம் ஆட்சியானது அரசியல் சமுதாய இயல் பொருளாதார இயல் ஆகிய மூன்று துறையையும் இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லாத அளவுக்கு மேன்மைப்படுத்தியும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதவராய் இருப்பதால், அவரைப் பார்ப்பனர்களும் பத்திரிகைகளும் வைகின்றன. குறை கூறுகின்றன. “பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட்டார்?” என்று போக்கிரித்தனமாய் எழுதி விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.

ஹிட்லர் சி.பி.க்கு புகழ்மாலை

ஆனால், திருவாங்கூரில் இவ்வளவு திருக்கூத்தும் இன்னும் எழுத முடியாத பல திருக்கூத்துகளும் நடத்திய டயராட்சி நடத்தும் சர்.சி.பி. ராமசாமி அய்யர் பார்ப்பனராய் இருப்பதால் சென்னை மாகாண முதன் மந்திரி தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் பூமாலை போட்டுப் புகழ்கிறார். காந்தியாரைக் கொண்டும் புகழச் சொல்கிறார். திருவாங்கூர் மகாராஜா ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை அளித்ததற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சர்.சி.பி.யைப் பார்ப்பனர்கள் புகழ அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டாலும் அதுவும் இன்று ஒரு வேஷமாகவும், நாடகமாகவும் தான் முடிந்துவிட்டது. அதாவது, திருவாங்கூர் சமஸ்தானக் கோவில்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலாகச் செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லப் படுகிறது. இவை எப்படியோ இருக்கட்டும், ஆனால், நமது நாட்டில் பார்ப்பனர்கள் பார்ப்பன அரசியல் பார்ப்பனப் பத்திரிகைகள் முதலியவைகளின் ஆட்சி ஆதிக்கம் எவ்வளவில் இருக்கிறது என்பதை விளக்கவே இதை எழுதுகிறோம்.

‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.04.1938

ஆசிரியர் கி.வீரமணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்!

அய்யாவின் அடிச்சுவட்டில்…- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்!

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் ஏப்ரல் 1-15,2023

இயக்க வரலாறான தன் வரலாறு (313)
கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...

 காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு டாக்டர் பட்டம் (D.Litt) எமக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்க பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டபின், பல நாள்கள் கழித்து, ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். இலட்சுமிபதி அவர்கள் பெயரும் இணைக்கப்பட்டது. இது குறித்த ஒரு செய்தியை நான் பின்னாட்களில் அறிந்தேன். பல்கலைக் கழக ஆட்சிக் குழு முடிவு செய்து வேந்தரின் ஒப்புதலும் பெறப்பட்டு, விழாவிற்கான அழைப்புகள் எல்லாம் தயாராகி விட்டபின், அந்தப் பெருமை எனக்கு தனியே ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்த சிலர், ஆளுநர் மாளிகைக்கு அன்றைய ஆளுநரான ராம்மோகன் ராவ் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து திடீரென்று தினமலர் வெளியீட்டாளருக்கும் சேர்த்து தர வேண்டும் என்று வற்புறுத்தவே, ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின் விதிகளை மீறி அவரது பெயரும் இணைக்கப்பட்டது. பார்ப்பனர்களுக்கு சட்டம், வளைந்து கொடுத்தது.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது.

பட்டமளிப்பு விழா மரபுப்படி முதலாவதாக தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகனராவ், துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி, மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்பெறும் நாமும், ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர். லட்சுமிபதி, செனட் உறுப்பினர்களுடன் பட்டமளிப்பு நடைபெறும் முருகப்பா அரங்கிற்குச் சென்றோம்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற்புரையாற்றி
னார். பல்கலைக் கழகத்தின் சாதனைகள் சிறப்புத் திட்டங்கள், உலகளாவிய அளவில் அதன் தொடர்புகள், செயல்பாடுகள் குறித்து துணைவேந்தர் விரிவாக அவ்வுரையில் குறிப்பிட்டார்.

எமக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்குமுன் எமது சிறப்பு இயல்புகளை, சாதனைகளை, கல்வித் தகுதிகளை, அரை நூற்றாண்டைக் கடந்த தொண்டுப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டினார் துணைவேந்தர். (சிவீtணீtவீஷீஸீ) மகளிர் கல்வி, மகளிர் முன்னேற்றம், சமூகநீதி, சமூக சீர்திருத்தம் முதலிய துறைகளில் எமது பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டார். (பெட்டிச்செய்தி காண்க)சரியாக 10:40 மணிக்கு மதிப்புறு டாக்டர் (டி.லிட்) பட்டத்தினை எமக்கு தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகவேந்தர் மேதகு ராம்மோகனராவ் அவர்கள் நீண்ட கரவொலிக்கிடையே வழங்கினார்கள்.

40 ஆண்டுகளாகப் பத்திரிகைத்துறையில் சிறந்த சேவைகளை புரிந்ததற்காக ‘தினமலர்’ வெளியிட்டாளர் ஆர். லட்சுமிபதி அவர்களுக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாகத் துணைவேந்தர் அறிவிக்க, அதனைத் தொடர்ந்து மேதகு ஆளுநர் அவர்கள் பட்டத்தினை வழங்கினார்.

டாக்டர் அழகப்பா செட்டியார் அவர்களின் மகளும் பல்கலைக் கழக ஆயுள்கால ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமாகிய உமையாள் ராமநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழாப் பேருரையை நிகழ்த்தினார்.
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். அவர்கள் முன்னேற்றம் என்பது சமுதாய முன்னேற்றமாகும். ஆனாலும், நடைமுறையில் உயர்கல்வி, பெரிய பதவிப் பொறுப்புகளில் ஆண்களைவிடப் பெண்கள் சதவிகிதம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது.

ஆனாலும் அழகப்பா பல்கலைக்கழகம் பெண் கல்விக்கு உரிய இடத்தைத் தருகிறது; இப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களைவிட மாணவிகளின் சேர்க்கை மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்ள் 407 பேர்களில் 236 பேர் பெண்கள்; தங்கப்பதக்கம் பெற்ற 21 பேரில் 15 பேர் பெண்கள் என்று மிகவும் பெருமிதமாகச் சுட்டிக்காட்டினார் உமையாள் ராமநாதன் அவர்கள்.

விழாவில் ஆளுநர் அவர்கள் 54 பேர்களுக்கு டாக்டர் பட்டமும், நூறு பேர்களுக்கு எம்.ஃபில். பட்டமும் 356 மாணவ-மாணவியர்களுக்கு முதுகலை மற்றும் பி.எட்., பட்டமும் வழங்கிப் பாராட்டினார். மொத்தம் 510 பேர் நேரில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகம் தழுவிய அளவில் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் காரைக்குடிக்கு திரண்டு வந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அழகப்பா பல்கலைக் கழகம்
அளித்த சிறப்புக் குறிப்புகள்…

2003 ஏப்ரல் 4ஆம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினைந்தாவது பட்டமளிப்பு விழாவில்
கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டத்தை வழங்கியபோது பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் அ. ராமசாமி அவர்கள் ஆற்றிய குறிப்புரை.
பல்கலைக் கழக வேந்தர் அவர்களே!
சமூகத்தின் நலிந்த பிரிவு மக்களின் நலனுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் போராடத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கழகத் தொண்டரும், சமூகநீதிப் போராளியுமான திரு.கி. வீரமணி அவர்களைத் தங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெரு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூரில் 1933 டிசம்பர் 2ஆம் தேதி அன்று பிறந்த திரு.கி. வீரமணி கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொருளியலில் முதுகலைப் பட்டப் படிப்பில் பயிலும் போது மதிப்பு மிகுந்த தங்கப் பதக்கம் அவருக்கு அளிக்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் சட்டக்கல்வி பயின்று 1960இல் பட்டம் பெற்ற அவர் அந்த ஆண்டிலேயே தன்னை ஒரு வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார்.
திரு.கி. வீரமணி அவர்கள் ஓர் ஆழ்ந்த சிந்தனையாளரும், மாபெரும் எழுத்தாளருமாவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியுள்ள அய்ம்பதுக்கும் ‘மேற்பட்ட நூல்களே அதற்குத் தகுந்த சான்றாகும். அவரது நூல்களில் சிறப்பானவை:
சமூகநீதிக்காகத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போராட்ட வரலாறு,

மனித நேயமும் நாகரிகமும், பெரியார் களஞ்சியம் (ஆறு தொகுதிகள்) விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் – உண்மை வரலாறு.
அத்துடன் அவர் ‘விடுதலை’ என்னும் தமிழ் நாளேடு, ‘உண்மை’ என்னும் தமிழ் மாதமிருமுறை இதழ், ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்னும் ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியருமாவார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு பேசவல்ல ஆற்றல்மிகு பேச்சாளரான அவர், தனது மாணவப் பருவம் முதற்கொண்டே பல விருதுகளையும் பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளார்.

அவர் பல சர்வதேச, தேசிய அளவிலான கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1985இல் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பன்னாட்டு அமைதி மாநாடு, 1995இல் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்நாடு நிறுவனத்தின் ஆண்டு மாநாடு, 1998இல் மும்பையில் மனிதநேய அறநெறி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட சர்வதேசக் கருத்தரங்கம் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாகும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் பல நினைவுச் சொற் பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

உலகெங்கும் பரவலாகப் பயணம் செய்துள்ள அவர் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா, ஜப்பான், மியான்மர் மற்றும் பல இதர அய்ரோப்பிய நாடுகளுக்கும் பலமுறை சென்று பல கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் சிறப்புச் சொற்பொழிவுகளாற்றியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களாலும், அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளாலும் தனது இளம் வயது முதலே கவரப்பட்ட திரு. வீரமணி அவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு, பெண்களுக்கான சமஉரிமை, ஆகிய பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர் ஆவார். சமூகநீதிக்காகவும், மனித உரிமைகள், பெண்கள் சமஉரிமை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்காகவும் போராடும் ஒரு சமூகத் தொண்டராக இவர் தனது அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் திகழ்கிறார்.
பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பரப்ப இவர் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் முக்கியமானவை:
* பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டு மய்யம்
* மகளிர் மேம்பாடு மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (‘பவர்’)
பெண்களும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவு மக்களும் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர், தனது ஆசானான பெரியார் அவர்களின் பெயரில் பல கல்வி நிறுவனங்களையும், அறக்கட்டளையையும் உருவாக்கியுள்ளார்.
இக்கல்வி நிறுவனங்கள்:
* பெரியார் மணியம்மை மகளிர், பொறியியற் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர் (பெண்களுக்கென முதன்முதலாகத் தொடங்கப்பட்ட முற்றிலும் பெண்களுக்கான பொறியியற் கல்லூரி இதுவே!
* பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பயிற்சி மய்யம், சென்னை.
* பெரியார் கணினி உயர்கல்விக் கல்லூரி, திருச்சி.
* பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி,
பாராட்டத்தக்க சமூகத் தொண்டாற்றிய திரு.கி.வீரமணி அவர்கள் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
* சமூக நீதி இயக்கத்திற்காக சிறப்பான முறையில் தொண்டாற்றியதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சமூக நீதிக்கான “பெரியார் விருது.’’
சுற்றுச் சூழல், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் முறையில் சமூக வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கனடா அரசால் வழங்கப்பட்ட ‘சிடா’ சிறப்பு நிலைப் “பன்னாட்டு விருது.’’
புதுடில்லி தேசிய முன்னேற்ற முன்னணியால் வழங்கப்பட்ட “பாரத் ஜோதி’’ விருது.
சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவு மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புக் கோரும் சமூக நீதிக்காகவும், குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் இடைவிடாது போராடி வருபவரான திரு.கி. வீரமணி அவர்களுக்கு இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க அழகப்பா பல்கலைக் கழக ஆலோசனைக் குழு (சிண்டிகேட்) பரிந்துரைத்துள்ளதை ஏற்றுக்கொண்டு வழங்குமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.