சனி, 28 அக்டோபர், 2023

உணவகங்களில் ‘பிராமணாள்' ஆதிக்கம் ஒழிந்தது எப்படி? பெரியார் செய்த அமைதி புரட்சி!


கி.வீரமணி

a

* அந்தப் பிராமணர்களுக்கு எந்தெந்தப் பதார்த்தம் இஷ்ட்டமாயிருக்குமோ அதைப் பொறாமையின்றிப் பரிமாற வேண்டியது, அவர்கள் புசிக்கும் போது பரமாத்மசுவ ரூபத்தைச் சொல்லும்படியான வேதாந்தங்களைப் படிக்க வேண்டியது இது பிதுர்க்களுக்கு இஷ்டமானது

(மனுஸ்மிருதி அத்தியாயம்-3,சுலோகம் - 231)

* பிராமணர்கள் புசிக்கும்போதுதான் சந்தோஷத் துடன் அவர்களைச் சந்தோஷப்படுத்தி கொஞ்சங் கொஞ்சமாக அந்ந முதலியவற்றைப் பரிமாறி இந்தப் பாயசம் ருசியுள்ளது இதில் கொஞ்சம் புசியுங்கள் இந்த மோதகம் இன்பமானது இதை மாத்திரம் அங்கீகரி யுங்களென்று பிரார்த்தித்து புசிப்பிக்க வேண்டியது.

(மனுஸ்மிருதி அத்தியாயம்-3,சுலோகம் - 233).

* சண்டாளன் - ஊர்ப்பன்றி - கோழி - நாய் - விடாயானஸ்த்திரி - பேடி இவர்கள் பிராமணர்கள் புசிக்கும்போது பாராமலிருக்கும்படி செய்ய வேண்டி யது. 

(மனுஸ்மிருதி அத்தியாயம்-3,சுலோகம் - 239).

மேலே காட்டியுள்ள ‘மனுஸ்மிருதி'யின் சுலோ கங்கள், உடன் உணவு உண்ணுதல் என்பது ஜாதி, வர்ண தர்மத்தினை கெடுத்து, பாழ்படுத்தி விடு கிறது. ஆகவே "பிராமணர்கள்" என்ற மேல் ஜாதியினர் உணவை பிறர் பார்க்காமல் தனியே அமர்ந்து சாப்பிட வேண்டும். 

அதன்மூலம் தான் ஜாதி - வர்ணதர்மம் காப்பாற்றப்பட முடியும் என்பதன்படி உணவு விற்பனையகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கமே ஒரு நூற்றாண்டுக்கு முன் கொடிகட்டிப் பறந்தது! எங்கும் "பிராமணாள்" காபி கிளப்தான்.

அது மட்டுமா?

ஓட்டல்களில் காசு கொடுத்து சாப்பிடுவோரில் "பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்று அவர் களுக்கென்றே தனியே ஒரு சாப்பாட்டு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது - காசு கொடுத்துச் சாப் பிட்டாலும் அவர்களின் சாப்பாட்டு இலைகளை சாப்பிட்டவர்களே எடுத்துப் போட வேண்டும் என்பது சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையிலிருந்த உண்மையாகும்.

இரயில் நிலையங்களிலும் இந்தப் பேதம் இருந்த துண்டு. அதை ஒழித்தது - தந்தை பெரியாரின் முயற்சி!

1924இல் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன் மகாதேவியில் "தேசபக்தர்" வ.வே.சு.அய்யர் (இவரை பெரிய புரட்சிக்காரர் என்று சிலர் வர் ணிப்பர்) - அவரது, ‘புரட்சி‘ எப்படி? பலரிடம் நன் கொடை மூலம் வசூலித்த பணத்தைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட தேசிய குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்குத் தனி இடம், தனி உணவு, பார்ப் பனரல்லாதாருக்குத் தங்கும் இடம் வேறு, உணவு வேறு என்பதே போராட்டமாக வெடித்தது!

பல தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் பார்ப்பனர் களுக்குத் தனி இடம் - பந்தி பரிமாறல் - இப்படி சர்வசாதாரணமாக நடந்தன!

காங்கிரஸ் மட்டுமல்ல, மகாராட்டிர மாநிலத்தில் மாநாட்டில் தொழிற்சங்கப் போராட்டத்தை அந் நாளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தியபோது கைதானவர்களில் சிறைவாசிகளாக இருந்த உயர் ஜாதி பார்ப்பனர்களுக்குத் தனியே உணவுப் பொருள்கள் தருவித்து, தனியே சமைத்துக் கொடுத்த நிலையும் இருந்து - பிறகுதான் மாறியது!

கொலை வழக்கில் சிறைக் கைதியாக இருந்த காஞ்சி சங்கராச்சரியார் ஜெயேந்திர சரஸ்வதி சிறையில் எப்படி எல்லாம் நடந்து கொண்டார்? மலம் கழிக் கக் கூட வாழை இலை கேட்கவில்லையா?

முன்சீப்புகளாக, மாவட்ட நீதிபதிகளாக கும்ப கோணத்தில் பணியாற்றி, பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான நீதிபதிகள் கணபதியா பிள்ளை, சுப்ரமணிய நாடார் போன்றவர்களை பார்ப்பன வழக்குரைஞர்கள் திருமண வரவேற்பு விருந்தில் - பார்ப்பன வழக்குரைஞர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் அமர்த்தாது, தனியே ஓர் இடத்தில், தனியே அமர வைத்து - காக்க வைத்து, "பிராமணர் போஜனம்" முடிந்த பிறகே சாப்பிடச் செய்யும் ஏற்பாடு கண்டு ஆத்திரப்பட்டு அவ்விருவரும் தன்மானத்தோடு விருந்தைப் புறக் கணித்து வெளியேறினர்.

மராத்திய ஜோதிபாபூலேவின் மிக நெருங்கிய பார்ப்பன நண்பரின் திருமணத்தின்போதும் இத்த கைய அவமானம் ஏற்பட்டதால் அவரே சிந்தித்து தனியே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தொடங்க காரணமாக அது அமைந்தது என்பதும் வரலாறு.

கேரளத்தில் கீழ் ஜாதிப் பிரிவுகளில் கூட ஒன்றாக அமர்ந்து உடன் உண்ணல் என்பதற்குப் பெரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக 200 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. "மிஸ்ர போஜனம்" என்ற போராட்டத்தை ‘சகோதரன்' அய்யப்பன் போன்றவர்கள் முன்னாளில் நடத்தியுள்ளார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சுயமரி யாதை இயக்க மாநாடுகளில் உணவு உடன் உண்ணல் மட்டுமல்ல,  அக்காலத்தில் ஜாதி இழிவுகளை சுமந்த நாடார்களை சமத்துவ மனிதத் தன்மையை உணர்த்திட, அவர்களை அழைத்தே சமைக்கவைத்து, விளம்பரப்படுத்தி ருசிகரமான விருந்து பரிமாறி, இந்த ஜாதித் தீட்டு என்ற போலிக் கற்பனையை உடைத்தெறிந்தார்கள்!

நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மதிய உணவுப் பந்தியில் உட்காரப் போன கோவிந்த சாமி நாடாரைப் பார்ப்பனர்கள் தடுத்ததால் வெளி யேறி, தான் எப்பொழுதும் அணிந்து வரும் கதர்ச் சட்டையைக் கொளுத்தினாரே!

திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் - பார்ப்பனர்களுக்குப் பதில் “சைவாள் காபி கிளப்" என்று சுவைமிக்க உணவு விடுதிகள் வெகுவாக மக்களின் ஆதரவு பெற்று நடந்தன.

அக்காலத்தில் திருநெல்வேலி டவுனில் பிரபல ஓட்டலான ,குமாரவிலாஸ்- மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக பின்னாளில் ஆன பெரியார் பெருந்தொண்டர் க.மு.க.பிரமநாயகம் (பிள்ளை) உணவு விடுதியில் எவ்வித பேதமும் கிடையாது; அனைவரும் ஜாதி மத பேதமின்றி சுவையுடன் உடன் உணவை விரும்பி ஏற்றனர்!

தமிழ்நாடு முழுவதிலும் அப்படியே ஆகி தமிழர்கள் ஜாதி வேறுபாட்டுக்கு இடந்தராது நடத் திய ஓட்டல்கள் பிரபலமாகின.

கடலூர் பீம விலாஸ் உரிமையாளர் (தங்கராஜ் முதலியார்) மேற்பார்வை (கடலூர் விழுப்புரத்தில் அவரது தம்பி), பிறகு ஓட்டல் பிருந்தாவனம், செங்கற்பட்டில் சுயமரியாதை வீரர், தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவின் அன்பைப் பெற்ற தோழர் சின்னய்யா நடத்திய "தமிழர் உணவு விடுதி" கரூரில் பெரியார் பெருந்தொண்டர் தோழர் கே.எஸ்.இராமசாமி நடத்திய நேஷனல் லாட்ஜ், தோழர் நல்லுசாமி நடத்திய பெரியார் உணவு விடுதி, அதன் பிறகு தற்போது ‘ஆரிய பவன்’ என்ற பெயரில், ஆர்த்தி  என்ற பெயரிலும், மதுரை தி.லட்சுமணன் (ரெட்டியார்), திண்டிவனத்தில் தற்போது இராமகிருஷ்ணன் (ரெட்டியார்) நடத்தும் ஆரியபவன் (பெயர் எப்படியோ வைத்துவிட்டனர்), பல ஊர்களில் கொங்கு மெஸ் என்று வெளிப்படையாகவே பார்ப்பனர் அல்லாத ஜாதியின் பெயரில்கூட பல உணவு விடுதிகளில் வியாபாரம் நடக்கிறதா இல்லையா? அங்கே அனைவரும் சமைக்கிறவர்கள், பரிமாறுகிறவர்கள் யார்? 

இவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக திரு.ராஜகோபாலன் (நாடார்) அவர்கள் தொடங்கி வெற்றிகரமாக வெளிநாடுகளில் கூட நடத்தி, வெற்றி முத்திரை பதித்த ‘சரவண பவன்'கள் செய்துள்ள வணிகச் சாதனை, உணவின் தரம் வியக்கத்தக்கது!

(நாமே அதற்காக - அவர் பக்தராக இருந்தாலும் அவரை அழைத்துப் பெருமைப்படுத்தி "பெரியார் விருது" கொடுத்து அவரது வணிகத்துறை சாதனை வெற்றியைப் பாராட்டினோம்.)

1937ஆம் ஆண்டில் நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சமபந்தி போஜனத்தில் அமர்ந்து சாப்பிட்ட தாழ்த்தப்பட்ட தோழர்கள் தாக்கப்பட வில்லையா? அதனைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத் தோழர்கள் "சமஉரிமை ஹோட்டல்" நடத்தியதுண்டே!

புதுச்சேரியைச் சேர்ந்த பெருமைக்குரிய நண்பர் செண்பகராமன் (நாடார்) தொடங்கி நடத்திய ஓட்டல் அண்ணாமலை போன்றவை வெற்றிகரமாக நடப்பவை - இப்பகுதியில்.

இதற்கு அடிநாதம், உயர்ஜாதிப் பார்ப்பனர் சமைத்தால்தான் தீட்டில்லாதது; உயர்ந்த வகை உணவு என்கிற கருத்து மாறிப்போனதுதானே அடிப்படை?

இதற்கு யார் காரணம்? தந்தை பெரியாரே காரணம். முன்பு ஒருமுறை கல்வி பரவி, பள்ளிகள் பெருகியதற்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம் - என்ற வாசகர் கேள்விக்கு, ‘ஆனந்தவிகடன்’ ஆசிரியர் கூறிய விடைதான் இப்போதும் ("காரணம் பெரியார் காரியம் காமராசர்!" என்று எழுதியதே! 'ஆனந்த விகடன்') - அடையாறு ஆனந்த பவன் எங்கெங்கும் வெற்றிகரமாக நடப்பதற்கும் - “காரணம் பெரியார்; காரியம் அந்தந்த உரிமையாளர்களின் ஆளுமை" தான். அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் ராஜாவே கூறியுள்ளாரே!

இந்த சமூக சிந்தனை மாற்றம் - ஜாதி முக்கியத்துவம் என்ற நினைப்பு விடைபெற்று சமையல் ‘அவாள்’ செய்தால்தான் புனிதம், தீட்டற்ற நிலை என்ற பத்தாம் பசலித்தன பழங்கால வர்ணாசிரம பேத வெறி விடைபெற்றுக்கொண்டது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது!

பிராமணாள் கபே கிளப்பில் "பிராமணர்" ஜாதிப் பட்டத்தை நீக்க மறியல் தொடர்ந்த போது, அது ஜாதியைக் குறிக்காது, "உயர்ந்த வகை சமையல் " என்ற அர்த்தத்தில்தான் என்று விசித்திர வியாக்கியானம் தந்தனர். விடுதலை அப்போதே மறுப்பு எழுதியது என்பது நினைவுக்கூறத்தக்கது.

பல திருமண சமையல் காண்ட்ராக்டர்கள் - ஒப்பந்தக்காரர்கள்  - பல்லாயிரம் பேருக்கு சமைக்க முன் வருபவர்கள் இப்போது பர்ப்பனரல்லாத மற்ற ஜாதிக்காரர்கள் - வர்ணாசிரம கணக்கில் மற்றவர்கள்.

செட்டிநாட்டில் இந்த ஏற்பாடு எப்போதும் தயார்நிலையில் உள்ள வணிகமாக உள்ளது!

கோவை மேட்டுப்பாளையம் சுருளி, தேக்கம்பட்டி சிவக்குமார், செம்பனார்கோயில் மயிலாடுதுறை மானமிகு தோழர் அன்பழகன் நடத்தும் உணவு விடுதி - பல்லாயிரம் பேருக்கு உடனடியாக காய்கறி உணவு  விருந்தளிக்கும் ஆற்றலின் ஆளுமை ஜொலிக்கும் விந்தை!

எங்கெங்கும் அடையாறு ஆனந்தபவன் நீண்ட பயண சாலைகளின் இருமருங்கிலும். எனவே, பெரியாரின் தொண்டு, உழைப்பு, கொள்கை வெற்றி கண்ணுக்குத் தெரியாது - சுவாசித்துப் பயன் பெறும் மூச்சுக் காற்று போல!

இவை ரத்தம் சிந்தா அமைதிப் புரட்சி - வன்முறை,   ஆயுதம் ஏந்தா அறிவுப் புரட்சி!

இதுபோல் பலப்பல துறைகள் உண்டு. அதில் இது ஒரு சிறு பகுதி. அவ்வளவே!

திங்கள், 23 அக்டோபர், 2023

கடலூர் தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாறு (செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்)

“செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்”

(கடலூர்  தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாறு)

1

தந்தை பெரியார் அவர்களின் அரை நூற்றாண்டு தாண்டிய அயராத தொண்டுக்குத் தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் தங்களிடையே உண்டான மாச்சரியங்கள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி தந்தை பெரியார் அவர்களை எப்படி தமிழர்களின் தனிப் பெரும் பொதுச் சொத்தாகக் கொண்டாடுகின்றனர் என்பதற்கு கடலூர் சிலை திறப்பு விழா சீரியதோர் எடுத்துக்காட்டாக விளங்கியது!

கடலூரில் தந்தை பெரியாரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் படம் - அதன் வாசகங்கள் அல்லாது மேலும் தனிச் சிறப்பு 

3 அடி X 2 அடி அகல நீளத்தில் "சரித்திரக் குறிப்பு" என்ற தலைப்பில் ஒரு கல் பதிக்கப்பட்டுள்ளதாகும்.

"29.7.1944 அன்று தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில் இன்று (13.8.1972) அவருக்கு, மக்களால் அன்புடனும் சிறப்புடனும் சிலை எழுப்பப்படுகிறது." என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட கல் - தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய சமுதாயப் புரட்சி எவ்வளவு பிரம்மாண்டமானது; வன்முறை தவிர்த்து, புதியதோர் சகாப்தத்தை உருவாக்கியது என்பதை உலகுக்கே பறைசாற்றுவதாகும்.

தந்தை பெரியார் மீது செருப்பு வீசி அவரை அலற வைத்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்ட மக்கள் இன்று அவரால் அல்லவா நம் விழிகள் திறக்கப்பட்டன என்ற பெருமிதமான நன்றி உணர்வுடனும் அவருக்குச் சிலை எடுக்கிறார்கள்; பாம்பு போட்டு மிரட்டிய மக்கள் பத்தாயிரம் ரூபாய் பண முடிப்பைத் தந்தல்லவா தமது நன்றிப் பெருக்கை, மரியாதையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதுபோல் உலக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் பெறாத பேறு இது; எந்த சமுதாயப் புரட்சிவாதியும் அவர்களது வாழ்நாளில் இவ்வளவு அரிய வெற்றிக் கனியைச் சுவைத்ததே இல்லை.

தலைவர் தந்தை பெரியார் அவர்களும், முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், மேலவைத் தலைவரும், அன்பில் அவர்களும் ஊர்வலத்தில் பவனி வந்த காட்சி, சுயமரியாதைக் குடும்பப் பாசத்தையும் பற்றினையும் எடுத்துக்காட்டும் காட்சியாகத் திகழ்ந்தது - மக்கள் காட்டிய உணர்ச்சிப் பிரவாகம் கட்டுக்கடங்காததாயிற்று!

- விடுதலை - 14.8.1972