வியாழன், 25 மே, 2017

பெரியாரின் நண்பர் சிங்காரவேலர்


மே நாள் உலக வரலாற்றில் புகழ்மிக்க நாள்! அமெரிக் காவில் தொழிலாளி வர்க்கம் 8 மணி நேர வேலை வேண்டி கோரிக்கை எழுப்பினர். சிகாகோ நகரில் 1.5.1886இல் வேலை நிறுத்தத்தின் மூலம் தங்கள் கோரிக்கையை தொழிலாளர்கள் வெளிப்படுத்தினர். காவல்துறை கொடூரமான தாக்குதல் நடத்தியதில் 4 தொழிலாளர்கள் மாண்டனர். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 4 தொழிலாளர் தலைவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

சிகாகோவில் நடந்த இக்கொடூர நிகழ்ச்சிக்குப் பின் பல்வேறு நாடுகளின் தொழிலாளர் தலைவர்கள் பாரிஸ் நகரில் 14.7.1889 அன்று கூடினர். இத்தலைவர்கள் சிகாகோ தொழிலாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 1890ஆம் ஆண்டு முதல் மே நாளை (மே முதல் நாள்) அனைத்துலக தொழிலாளர் நாளாக ஒவ்வொரு நாட்டிலும் கொண்டாட தொழிலாளர்களுக்கு ஒரு தீர்மானம் மூலம் வேண்டிக்கொண்டனர். அய்ரோப்பிய நாடுகள் 1890ஆம் ஆண்டு முதல் மே முதல் நாளை மே நாளாகக் கொண் டாடத் தொடங்கின.

மே நாளை முதன் முதலில் இந்தியாவில் 1.5.1923 ஆம் நாளன்று சென்னையில் கொண்டாடிய பெருமை சிங்கார வேலருக்கு உரியது. இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சி (லிணீதீஷீuக்ஷீ ணீஸீபீ ரிவீsணீஸீ றிணீக்ஷீtஹ்) தொடங்கப் பட்டதை சிங்காரவேலர் அறிவித்தார்.

1925இல் சென்னை மாநகராட்சி தேர்தலில் சிங்கார வேலர் ‘சுயராஜ்யக் கட்சியின்’ சார்பில் ‘யானை கவுனி’ வார்டில் நின்று வெற்றி பெற்றார்.

1927 மே நாள் சிங்காரவேலரின் இல்லத்தில் கொண் டாடப்பட்டது. அன்று மாலை நடந்த மே நாள் கூட்டத்திற்கு டாக்டர் பி.வரதராஜூலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னைத் தொழிலாளர்கள் அனைத்திந்தியத் தொழி லாளர்களுடனும், உலகத் தொழிலாளர்களுடனும் ஒன்று பட்டிருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சிங்காரவேலர் கொண்டு வந்தார்.

1927 ஆகஸ்ட்டில் அமெரிக்காவில் தொழிலாளர் தலைவர்கள் சாக்கோ, வான்ஸைட்டி இருவர் மீதும் பொய் வழக்கு தொடரப்பட்டது. ஆலைத் தொழிலாளருக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் எடுத்துச்சென்ற நிருவாகியைச் சுட்டுக்கொன்றுவிட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக பொய்குற்றம் சுமத்தி வழக்கு மன்றத்தில் வழக்கு நடந்தது. நடுநிலையற்ற நீதிபதி இவ்விரு தலை வர்களை மின்சார நாற்காலியில் உட்காரவைத்துக் கொல்லுமாறு கொடுமையான தீர்ப்பு வழங்கினார்! இக் கொடூர மரண தண்டனையை எதிர்த்து உலகத் தொழி லாளர் வர்க்கம், அமெரிக்க வல்லாட்சியைக் கண்டித்தது. இந்த அநீதியைக் கண்டித்து சிங்காரவேலர் சென்னை நகரில் தொழிலாளர் கூட்டத்தை நடத்தினார்.

தமிழகத்தின் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரி யாருடன் சிங்காரவேலர் கொண்ட நட்பு சிங்காரவேலரை சுயமரியாதை இயக்கத் தொண்டர்களிடையே மிக முக்கியமான பணிகளைச் செய்ய உதவியது.

1931 டிசம்பர் 26இல் சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டைத் திறந்து சிறந்த சொற்பொழிவு ஆற்றினார். தொன்றுதொட்டு ஆதிக்கம் செலுத்திவரும் மூடநம்பிக்கைள், சாதி மத நம்பிக்கைகள் இவற்றை எதிர்த்துப் போராடும் சுயமரியாதை இயக்கத்தை அவர் மிகவும் பாராட்டினார். சமதர்மம் மட்டுமே சாதி, மத வேற்றுமைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமுதாயத்தைக் கொண்டு வர முடியும் என்று கூறினார்.

மாநாட்டில் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் காட்டும் வழியைப் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

“தலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப் போல் மதக்கற்பனைகளை நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக்கத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைபிடித்து நமது முப்பத்தைந்து கோடி மக்களின் அறியாமையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே அதாவது மதமற்ற, சாதி வேற்றுமையற்ற, பொருளாதா வேற்றுமையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்கமாகும்” என்று மாநாட்டு சொற்பொழிவில் குறிப்பிட் டார்.

சாதி ஏற்றத் தாழ்வுகள் மற்ற நாடுகளில் இல்லாதது. இந்தியாவில் பாமர மக்களையும் கவர்ந்து வரும் இராமாயணமும், பாரதமும் வர்ணாஸ்ரம தர்மத்தையும், சாதியையும் கட்டிக்காக்கும் கோட்டைகளாக விளங்கு கின்றன. சம்புகன் என்ற சூத்திரன் தன் குலத்தொழிலுக்கு மாறாகக் காட்டில் தவம் செய்தான் என்பதற்காக இராமன் சம்புகனின் தலையையே வெட்டிவிடுகிறான்!

தந்தை பெரியார் 1931ஆம் ஆண்டு சென்னையில் சிங்காரவேலரை சந்தித்து தனது “குடியரசு” இதழில் பகுத்தறிவுக் கொள்கைகள் பற்றிக் கட்டுரைகள் எழுதி வரும்படி கேட்டுக்கொண்டார். 1931 முதல் 1935 வரை சிங்காரவேலர் ‘குடியரசில்’ பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் பொதுவுடைமைவாதி, சுயமரியாதை இயக்கத் தளபதி, தொழிலாளர் தலைவர் காங்கிரசின் முன்னணித் தலைவர், பெரியாரின் நண்பர் என்று பன்முக ஆளுமை கொண்ட சிங்காரவேலர் 11.2.1945 அன்று இயற்கை எய்தினார் (86ஆம் வயதில்).

தந்தை பெரியாரின் தொண்டர்கள் சிங்காரவேலரின் பன்முகத் தொண்டை என்றைக்கும் மறக்கவே முடியாது. சிங்காரவேலரின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ‘சிங்கார வேலர் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செய்யாறு இரா.செங்கல்வராயன்,

11.5.2017

-விடுதலைஞா.ம.,20.5.17

புதன், 24 மே, 2017

இந்து -தமிழர் சூத்திரரா?

13.11.1943  - குடியரசிலிருந்து...

திராவிட நாட்டிலுள்ள திராவிட இந்துக்கள் ஆதிதிராவிடர்கள் உள்பட தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடியர்கள் மலையாளிகள் ஆகியவர்கள் சமுதாயத்தில் தங்களைக் கீழான ஜாதி என்றும் சூத்திரர்கள் என்றும் ஆரியர்கள்(பார்ப்பனர்கள்) அழைத்து இழிவுபடுத்துவதைப்பற்றி மிக மிக ரோஷப்படுகிறார்கள்.

சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டு அடி உன்னை எவனாவது சூத்திரன் என்றால் நீ அவனை மிலேச்சன் என்று கூப்பிடு என் றெல்லாம் உணர்ச்சி வார்த்தைகள் சொல்லுகிறார்கள்.

வெள்ளைக்கார ராஜ்ஜியம் ஏற்பட்டு 200 வருஷமாகி இன்னமும் சூத்திரராய்த், தீண்டத் தகாதவராய், ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவராய் இருக்கிறோமே என்று சர்க்கார் மீதும் பாய்கிறார்கள். இது சரியா?

இதற்குக் காரணம் பார்ப்பனரும் சர்க்காருமா? அல்லது நாம் தானா? என்பதை நன்றாய் சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

ஒரு மனிதர் அவர் சர் ஆனாலும் சரி, ராஜா சர் ஆனாலும் சரி, மகாராஜா சர் ஆனாலும் சரி; சிறீலசிறீ மகா சன்னிதானம் ஆனாலும் சரி, இன்னும் யாராயிருந்தாலும் சரி, இவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு அந்தப் பட்டியில் பதிவாகி இந்துமத சம்பிரதாயப்படி தங்கள் சமுதாய, குடும்ப, ஆச்சார, அனுஷ்டான பூசை காரியங்களைச் செய்து கொண்டும் வந்தால் அந்த இந்து மத முறைப்படி இவர்களை சூத்திரன் என்று அல்லாமல் வேறு என்னவென்று அழைப்பது?

சமுதாய முறையில் இவர்களை எங்கு நிறுத்தி வைப்பது? என்பதை ஒவ்வொரு திராவிட இந்துவும் யோசித்துப் பதில் சொல்லவேண்டும் என்று விரும்புகின்றோம். இந்து மதம் என்பதற்கு இஸ்லாம் மதத்தைவிட, கிறிஸ்தவ மதத்தைவிட வேறு மாறுதல் என்ன என்று பார்த்தால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், சண்டாளன் என்கின்ற பஞ்சவர்ண பேதம் அல்லாமல் வேறு என்ன முக்கிய வித்தியாசம் இருப்பதாய்ச் சொல்லக்கூடும்?

கிறிஸ்தவ மதத்தில் சூத்திரன் இல்லை, இஸ்லாம் மதத்திலும் சூத்திரன் இல்லை. சூத்திரன் இருக்கும் மதத்தை எடுத்து நம்மீது போட்டுக்கொண்ட பிறகு சூத்திரப்பட்டம் தாங்க நாம் பயந்தால் வெட்கப்பட்டால் முடியுமா? அதாவது கழுதைக்கு வாக்கப் பட்டு உதைக்கு பயந்தால் முடியுமா? என்கின்ற பழமொழிப்படி நம்மை இந்து என்று சொல்லி பெருமை அடைந்து கொண்டு அதனால்வரும் பட்டத்தைப் பார்த்து ரோஷப்படுவது எப்படி அறிவுடைமையாகும் என்று கேட்கிறோம்.

திராவிட இந்துக்கள் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கொள்ளுகிறார்கள். பட்டை பட்டையாக நாமம் தீட்டிக் கொள்ளு கிறார்கள். இராகு காலம், குளிகை காலம், பார்க்கிறார்கள் பார்ப்பானைக் கொண்டு ஹோமம், எக்கியம், நடத்துவதுடன் பார்ப்பான் இல்லாமல் கருமாதி, ருது,சாந்தி, பிள்ளைப் பேறு, காதுகுத்தல், திதி, திவசம், திருமணம், முதலியவை நடத்துவதில்லை. சிறீ ராமநவமி, கோகுலாஷ்டமி, நரகசதுர்த்தி முதலிய இந்துமதப்பணடிகைகள் செய்யாமல் இருப்பதில்லை.

இப்படியெல்லாம் நடந்து கொண்டு பார்ப்பனன் நம்மை சூத்திரன் என்று கூப்பிடுகிறானே என்று ஆத்திரப்பட்டால் இதைவிட கடைந்தெடுத்த முட்டாள்தனமான காரியம் என்ன இருக்க முடியும். பார்ப்பான் நம்மைக் கண்டு சிரிக்காமலும் பரிதாபப்படாமலும் எப்படி இருப்பான்.

எனவே இந்து மதத்தை நான் உண்மையாய் விட்டுவிட்டேன் அடியோடு இந்து மதத்தில் இருந்து விலகிவிட்டேன். என்று சொல்ல முடியாத ஒருவர் உண்மையில் சூத்திரராய் இருக்க முடியாமல் வேறு என்னமாய்த்தான் இருக்க முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். பிராமணன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? அப்படிச் சொல்லிக் கொண்டவர்களையாவது பார்ப்பான் சரியாய் நடத்துகிறானா?

கோவிலுக்குள் தன்னை விடமாட்டேன் என்கிறார்களே என்று ஒரு ஆதிதிராவிடனோ ஒரு திராவிட இந்துவோ கோபிப் பானேயானால், அவன் இந்து மதக் கோவில்களுக்குள் இந்து மத ஆச்சாரச்சட்டம்தான் நடத்தப்பட வேண்டியது என்பது தெரியாத வனாய் இருந்தால்தானே கோபிக்க முடியும்.

இன்று கோவில் இலாகா தலைவர் திவான் பகதூர் நாராயணசாமி பிள்ளை; அடுத்தவர் ராவ்பகதூர் இராமச்சந்திரன் செட்டியார், இவர்களே அர்த்த மண்டபத்துக்கும் கர்ப்பக்கிரகத்துக்கும் வெளியில்தானே நின்று கொள்ளுகிறார்கள். காரணம் என்ன? இந்துக்கள் ஆன சூத்திரர்க்கு உள்ள இடம்தானே தங்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்ந்துதானே?

இப்படியே நான் ஒரு ஆதிதிராவிட இந்து, எனக்கு சர்க்கார் சட்டப்படி பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று ஒரு ஆதிதிராவிடர் பாத்தியம் கொண்டாடுவாரேயானால் அவர் இந்துமத சட்டப்படி எட்டி நின்றுதானே ஆகவேண்டும். அப்படி இல்லாமல், இந்துமதத்தை விடமாட்டேன்; அதிலிருந்தால்தான் எனக்கு உத்தியோகம், பட்டம், பதவிபணம் கிடைக்கும்;

ஆனால் மதத்தின்படி எனக்கு உள்ள யோக்கியதையை மாத்திரம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால் இது ஏய்க்கத்தான் பயன்படுமே தவிர யோக்கியதைக்குப் பயன்படுமா என்று கேட்கிறோம்.

இப்படி ஒவ்வொருவரும் தன் தன் சுயநலத்துக்கு ஆக சமுதாயத்தை ஏய்த்து வருவதால் தான் ஏதோ இரண்டொருவர் மாத்திரம் சமுதாயத்தின் பேரால் கொள்ளை அடிக்க முடிந்ததே தவிர சமுதாயம் கீழான நிலையிலேயே சூத்திரனாகவும், பறையனாகவும் இருந்து வருகிறது. ஆகவே நம்மைப் பார்ப்பான் சூத்திரன் என்றும், தீண்டப்படாதவன், புலையன் என்றும் அழைப்பதிலும், நடத்துவதிலும் சர்க்கார் அதற் கேற்ற சட்டம் வைத்து இழிவுபடுத்துவதிலும் ஏதாவது தப்பிதம் இருக் கிறதா என்று யோசித்துப் பாருங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம். திருத்திக் கொள்ளுவதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.

-விடுதலை,20.5.17

வியாழன், 11 மே, 2017

'தினமலரில்' இரு கட்டுரைகள் திராவிடர் இயக்கத்தின்மீது 'திராவக' வீச்சு!

கவிஞர் கலி. பூங்குன்றன் 

"ஸ்டாலின் விருப்பமும் - திராவிட நாடும்" எனும் தலைப்பில் 6.5.2017 நாளிட்ட தினமலரில் மூத்த பத்திரிகையாளர் பா.சி. ராமச்சந்திரன் என்பவர் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். தலைப்பு அப்படிக் கொடுக்கப்பட்டிருந்தாலும், கட்டுரைக்குள்ளே தந்தை பெரியார் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் சகட்டு மேனிக்கு அவதூறுகள் பொழியப்பட்டுள்ளன.

அடுத்த இரண்டு நாள் கழித்து "பிராமண துவேஷம் வளர்ந்த கதை"  எனும் தலைப்பில் டாக்டர் சு. அர்த்தனாரி என்பவர் (இவர் இதய நோய் சிகிச்சைப் பேராசிரியர்) எழுதியுள்ளார். இப்பொழுதெல்லாம் திராவிட இயக்கத்தவரையும் அதன் தலைவர்களையும் சீண்டுவது என்பது வாடிக்கையாகி விட்டது.

எழுதியவர்கள் எந்த அளவுக்கு "விவரம் தெரிந்தவர்கள்" என்பதற்கு ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளைத் தெரிவித்தாலே போதுமானது.
1930களில் சென்னை நகரில் உள்ள சில பிராமணரல்லாத பணக்கார பேர் வழிகள் ஒரு கட்சியைத் துவக்கினர்! அதன் பெயர் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இதில் ஈ.வெ.ரா.வும் அடக்கமாம்.

1916ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்பது - மூத்த பத்திரிக்கையாளருக்குத் தெரியவில்லை. இனமலரின் பத்திரிக்கா தர்மம்!

அப்படி அந்த அமைப்பு தொடங்கப்பட்டபோது தந்தை பெரியார் அதில் கிடையாது என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை.
இன்னொரு கூற்றைக் கேளுங்கள் 1927இல் ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தாராம். எந்த வரலாற்று நோட்டில் இவர் படித்தாரோ தெரியவில்லை.

பொதுவாக திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் குறிப்பாகப் பார்ப்பனர்கள் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், தான் தோன்றித்தனமாக எழுதுவது என்பதை ஒரு வழமையாகக் கொண்டுள்ளனர். இத்தகு எழுத்து முறைகளுக்கு 'சோ'யிசம் என்று ஓர் அடைமொழியைக் கொடுத்து விடலாம்.

இந்த இரண்டு கட்டுரைக்குள்ளும்கூட முரண்பாடுகள் மொத்தமாகவே கிடைக்கின்றன. அதே நேரத்திலே ஒரு கட்டுரைக்குள்ளேயே முன்னுக்குப்பின் முரண்பாடுகளும் பிய்த்துத் தின்னுகின்றன.

தஞ்சையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா., காமராஜ் ஆகியோருக்கு தனியாக வெளியே திண்ணையில் உணவை வைத்தும், மற்ற பிராமணர்களுக்கு பிரமுகரின் வீட்டின் உள்ளேயும் சாப்பாடு பரிமாறினர். அவர்கள் இருவரும் சாப்பிட்ட இலையை மாலை வரை யாரும் எடுக்கவில்லை. (கருத்து சரிதான் என்றாலும் அதைக்கூட சரியாக சொல்லத் தெரியவில்லை;

தந்தை பெரியாரும் எஸ்.சீனிவாச அய்யங்காரும் காங்கிரஸ் பிரச்சார விஷயமாய் திண்டுக்கல்லுக்கு ஒரு பார்ப்பனர் வீட்டுக்குச் சென்றபோதும், மற்றொரு சமயம் தஞ்சை திருவேங்கடசாமி பிள்ளையும், தந்தை பெரியாரும் பெரிய குளத்துக்குச் சென்றபோதும் தனியே வைத்து சாப்பாடு போடப்பட்டனர். காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைப் பக்கத்தில் இராத்திரி  சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும் ஈக்களும் மொய்த்திருந்தன. (குடிஅரசு 10.1.1948).

"சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் தீவிர ஆச்சாரம் மிக்கவர்கள். அவர்கள் நடத்தும் குரு குலங்களில் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடுகள் இருந்தன. இதை ஈ.வெ.ரா. எதிர்த்தார்" என்று எழுதிவிட்டு வேறுபாடு காட்டியவர்கள் துவேஷிகள் அல்லர் - வேறுபாடுகளைக் காட்டியவர்களை எதிர்த்தவர்களை பிராமண துவேஷிகள் என்று எழுத முடிகிறது என்றால் இந்தக் கூட்டத்தை மனநல மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் டாக்டர் பி. வரதராசலு நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் எம்.கே. ஆச்சாரியா என்ற பார்ப்பனர் என்ன பேசினார் தெரியுமா?

"ஒரு பிராமண சிறுவன், ஒரு பிராமணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால், இதற்காக நான் பத்து நாட்கள் பட்டினிக் கிடப்பேன்" என்று பேசினாரே இதற்கு என்னவென்று பெயராம்?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள், துவேஷிகள் என்று கூறுவார்கள் என்று லாலாலஜபதிராய் சொன்னதுதான் இந்த இடத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

முதலில் தங்களை பிராமணன் பிராமணன் என்று சொல்லுவதே மற்றவர்களை மறைமுகமாக சூத்திரன் என்று சுட்டிக்காட்டி கீழ்மைப்படுத்துவது தானே! சூத்திரன் என்றால் என்ன பத்மபூஷன் பட்டமா? மனுதர்ம சாத்திரத்தின்படி வேசிமகன் (அத்தியாயம் 8 சுலோகம் 415) என்று சொல்லுவதுதானே!

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்னை மாகாண மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட எப்படிக் கூறப்பட்டது?

பிராமணர்கள் 3.4% சூத்திரர்கள் 94.3% மனுகாலத்தில் கிளம்பிய இந்தத் துவேஷம் ஆங்கிலேயர் ஆட்சிவரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே!

ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்பதற்காக தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் போராடி, திமுக ஆட்சியில் சட்டம் செய்தபோதும் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் சென்றார்களே - அதன் உள்ளடக்கம் என்ன?

வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி, கோயில் கருவறையில் உள்ள மூல விக்ரகத்தைத் தொட்டு சூத்திரன் அர்ச்சனை செய்தால் சாமி சிலை தீட்டாகி விடும் - செத்துப் போய் விடும் - அதற்காகப் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும், புதிய கலசங்கள் செய்து வைக்க வேண்டும்; பிராமணப் போஜனம் நடத்தப்பட வேண்டும். சம்ரட்சணம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டதே - இதன் பொருள் என்ன?

இந்த மண்ணுக்குரிய 97 சதவீதமுள்ள பெரும்பான்மை மக்களை இதைவிட இழிவுபடுத்த முடியுமா? துவேஷச் சேற்றைத்தான் முகத்தில் வாரி இறைக்க முடியுமா?

கடவுள் தீட்டாகிவிடும், செத்துப் போய்விடும் என்று சொல்லுகிறோமே என்பதைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் அதைவிட முக்கியம் பார்ப்பனர் அல்லாதாரை இழிவுபடுத்த வேண்டும் என்ற நச்சுக் கொடுக்குத் தான் அம்பிகளுக்கு முனை முட்டி நிற்கிறது.

கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்று அரசு சட்டம் போட்டால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவது துவேஷம் இல்லையா? பூஜை வேளையில் சங்கராச்சாரியார் நீஷப் பாஷையில் (தமிழில்) பேச மாட்டார் என்று கதைப்பதெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்கிறோம் என்று கருத வேண்டாம்.

பார்ப்பனர்களின் இந்தப் பாழ்பட்ட புத்தியினால்தான் பரிகசிக்கப்படும் நிலை தமிழ் மண்ணில் மலர்ந்திருக்கிறது. இன்று வரை இந்த ஜென்மங்கள் திருந்திய பாடில்லை என்பதற்கு அடையாளம்தான் தினவெடுக்கும் 'தினமலரின்' கட்டுரைகள்!

திராவிடர் என்பதே வடசொல்தான் இது தெரியாமல் திராவிடர் கழகத்தைத் துவக்கினார் ஈ.வெ.ரா. என்கிறது தினமலர். திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரைவிட ஆய்வுத் திலகங்கள் இவர்கள் - அதனால் இவர்கள் சொல்லுவதை நாம் ஆமோதித்துத்தானே தீர வேண்டும்.

சரி அவர்கள் சொல்லுகின்ற வழிக்கே நாம் செல் லுவோம் திராவிடம் என்பது வடசொல் என்று ஏற்றுக் கொள்பவர்கள் ஆரியர் என்ற வடசொல்லையும் ஏற்றுக் கொண்டு, நாட்டில் வரலாறு நெடுக நடைபெற்ற ஆரியர் - திராவிடர் போராட்டத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! அங்கு மட்டும் ஏன் பதுங்கல் - பம்மாத்துத்தனம்!

ஆரியப் பார்ப்பனர்கள் - இந்தியாவுக்குள் நாடோடிகள்போல் வந்து சேரும் முன்பே திராவிடர்கள் வட இந்தியாவிலும் வாழ்ந்து வந்துள்ளார்களே. சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்று அய்ராவதம் மகாதேவன் போன்றவர்களும், வெளிநாட்டு தொல் பொருள் ஆய்வுகளும் மெய்ப்பித்திருக்கின்றனவே இதன் பொருள் என்ன? ஆரியர் வருவதற்கு முன்பே திராவிடர் இங்கு வாழ்ந்து வந்த நிலையில் திராவிடம் எப்படி வட சொல்லாகும்?

ராஜாஜியைப் பார்ப்பனர் என்று ஈ.வெ.ரா. குரல் கொடுத்தார் என்கிறார் கட்டுரை ஆசிரியர் ஆம். அதிலென்ன? ஆச்சாரியாரே முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணனாக இருப்பதில்தான் எனக்குப் பெருமை என்று சொன்னவராயிற்றே!

In fact in one occasion Rajaji proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (Caravan Apirl (1) 1918 Gandhiji's crusade against casteism)

இன்னும் பூணூல் கல்யாணத்தை நடத்திக் கொண்டும், ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டும் தங்களின் பிறவி ஆதிக்கத் திமிரை உச்சிக் கொம்பில் ஏறிக் கொண்டு கொக்கரிக்கும் கூட்டம் வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று கோணங்கி ஆட்டத்தையெல்லாம் போட்டுக் கொண்டு திரிவது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

பெரியாருக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் பேச முடிவதில்லை. 
அவரால் எப்படி மதன்மோகன் மாளவியாவிடமும், நேருவுடனும், காந்தியுடனும் பேச முடியும்? இப்படியொரு வாதத்தை முன் வைத்திருக்கிறது தினமலர் கட்டுரை.

தந்தை பெரியார் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்திருக்கிறார் நகர மன்றக் கூட்டங்களின் நடவடிக்கைகளை அவர் ஆங்கிலத்திலேயே எழுதி இருப்பதை அறியாத பேச்சு இது.

காந்தியார் ஈரோட்டில் தந்தை பெரியார் இல்லத்திற்கே வந்து தங்கியுள்ளார். பெங்களூருவில் காந்தியாருடன் இரண்டு மணி நேரம் விவாதம் செய்திருக்கின்றார்.

உலக மேதை அண்ணல் அம்பேத்கருடன் பலமுறை சந்தித்து உரையாடியிருக்கிறார். கான்பூர் மாநாட்டில் முழு உரையையும் ஆங்கிலத்திலேயே நிகழ்த்தி இருக்கிறார். அன்றாடம் ஆங்கில ஏடுகளையும்  படிக்கக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்!

இந்த வரலாறு எல்லாம் தெரியா விட்டால் வாயை மூடிக் கொண்டு கவிழ்ந்து கிடக்க வேண்டும்.

ஆனால், அது அவர்களின் நோக்கமல்ல; தந்தை பெரியார் சமூகநீதிக்காகக் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பதை மறைக்க வேண்டும் - அந்த உண்மை தெரிய வந்தால் அது அவாளுக்கு அனுகூலமாக இருக்காதே! இவர்கள் இருட்டடித்து விட்டால் இந்த பூணூல் பூனைகள் கண்களை மூடி விட்டால் பூலோகமே இருண்டு விடுவதாக ஒரு நினைப்பு!

காங்கிரசில் பெரியார் மட்டுமல்ல; அவரின் குடும்பமே எப்படி ஈடுபட்டது என்பது காந்தியாருக்குத் தெரிந்திருக்கிறது - இந்தக் கனக விஜயர்களுக்குத் தெரியவில்லையே!

மதுவிலக்குப் போராட்டத்தை தொடர்வதா, நிறுத்துவதா என்பது என் கைகளில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது என்று பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் காந்தியார் சொன்ன தாத்பரியத்தை அறிவார்களா இந்த அக்ரகாரவாசிகள் அந்த இரு பெண்மணிகளும் வேறுயாருமல்ல;

தந்தை பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையாரும், தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளும்தான் என்பதை இப்பொழுதாவது தெரிந்து கொள்வது நல்லது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையார் இருந்தார்  என்பதெல்லாம் தெரியுமா?

சென்னை மாநில காங்கிரஸ் தலைவராகவும், செயலாளராகவும் இருந்தவர் பெரியார் என்பதைக் கூட தெரியாமல் கிறுக்குவதுதான் மூத்த  பத்திரிக்கை யாளர்களுக்குத் தகுதியோ?

குருமூர்த்திகளுக்கும், பாரதிய ஜனதா பார்ப்பனர் களுக்கும் தந்தை பெரியாரின் அருமை தெரியாமல் இருந்திருக்கலாம். அவாள் ஆத்து மூதறிஞர்  உடம் பெல்லாம் மூளை என்று வருணிக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மூலம் தெரிந்து கொள்ளட்டும்.

"முக்கியமான தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் (1924 ஜூன்). அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ. இராமசாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ் காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை.

"சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்றுதான் இராமசாமி நாய்க்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக  (head and active master)அவர் இருந்து வந்திருக்கிறார்" என்று ராஜாஜி இரயிலிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
(நூல்: தமிழ்நாட்டில் காந்தியார் பக்கம் 392-393)

இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் கூழ் முட்டைகளை உடைத்து ஆம்லெட் போடுகிறது 'தினமலர்'

-விடுதலை,11.5.17