சனி, 30 நவம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா?

நேயன்

அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை என்பது எதிரிகளின் அடுத்தகுற்றச்சாட்டு.

அம்பேத்கர் அவர்கள், இந்து மத சாஸ்திரங்கள் பற்றி கூறியவற்றை சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர, மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்று கூறியே தனது தீர்வை முன்வைக்கிறார்.

‘பகவத் கீதை முட்டாளின் உளறல்’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.

அப்படியிருக்க அதற்கு முரணான செய்திகளை இவர் கூறுவது உண்மைக்கு மாறானது.

தந்தை பெரியாரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும் சரி, யார் எதைக் கூறினாலும் அதிலுள்ள உண்மையை அறிந்து சரியானதை ஏற்க வேண்டும், மற்றதைத் தள்ள வேண்டும் என்றே கூறியுள்ளனர். பிறர் கூறும் நல்லவற்றை ஏற்கக் கூடாது என்று பெரியார் என்றைக்கும் சொன்னதில்லை.

பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு சூழலில், பல காரணங்களுக்காகக் கூறிய செய்திகளை கத்தரித்துக் காட்டி இந்த ஆள் மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முயல்வதே இதன்மூலம் வெளிப்படுகிறது. மாறாக, பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நோக்குடையவர்கள். அவர்களின் அணுகுமுறையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயல்வது ஏமாற்று வேலையாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அயல்நாட்டுக் கருத்துகள் நமக்குத் தேவையில்லை. புத்தர் கூறியவற்றிலே எல்லாம் இருக்கிறது என்று கூறியவர் அம்பேத்கர். நம் நாட்டு சிந்தனைகளே நமக்குப் போதும். அதிலுள்ள அநீதிகளை ஒழித்தால் போதும் என்பதற்கு அம்பேத்கர் கூறியவற்றை இவர் எடுத்துக்காட்டி, இந்து மத சாஸ்திரங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதுபோல் காட்ட முனைவது மோசடியாகும். இந்து மதத்தை இந்து சாஸ்திரங்களை ஒழிக்க இருவருமே தீவிரங் காட்டினார். இருவருக்கும் இதில் வேறுபாடு இல்லை.

“இரட்டைப் பேச்சுகளை அம்பேத்கர் பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ரா. பேசினார்.” என்பது இவர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு!

தந்தை பெரியார் பற்றிய உயர் மதிப்பீடுகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யார் என்ன நினைப்பார்கள், என்ன விமர்சனம் வரும் என்பதற்கு ஏற்ப பேசாதவர். மனதிற்குச் சரியென்று படுவதை ஒளிவுமறைவு இன்றி பேசுவார். போராட்ட முறையில்கூட வெளிப்படையாகவே நடப்பார். இவை அவரது இன எதிரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க, அவதூறாய்ப் பேசுவதே கொள்கையென செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியரான இந்த நபர் திட்டமிட்டு திசைதிருப்பவே ஆதாரமில்லாமல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பெரியார் மீது சொல்லியுள்ளார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது அம்பேத்கருக்கும் இயல்பு. ஆக கொள்கை, எழுத்து, பேச்சு, செயல்பாடு என்று இருவரும் ஒத்த இயல்புள்ளவர்கள். அப்படியிருக்க இருவருக்கும் நேர் எதிரியான இந்த ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அம்பேத்கருக்கும் பெருமை சேர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, ஒத்த நோக்குடையவர்களின் தொண்டர்களைப் பிரித்து பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளும் ஒரு மோசடி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டுகள்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி திராவிடர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்வெண்மணியில் கொளுத்திக் கொல்லப்பட்டதை ஈ.வெ.ரா. கண்டிக்கவே இல்லை. கூலி உயர்வு கேட்கும் போராட்டத்தை தாழ்த்தப்பட்டோர் செய்யக் காரணமானவர்களையே கண்டித்தார். இது நியாயத்திற்கு எதிரான அவரது மனநிலையைக் காட்டுகிறது என்று பெரியார் மீது குற்றஞ் சாட்டுகிறார் இந்த ஆள்.

ஆனால், இவர் கூறுவது போன்று பெரியார் கூலி உயர்வு கேட்கச் சொன்னவர்களைக் கண்டித்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

28.12.1968 விடுதலையில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள், பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.

இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும், ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதும் நீதிபதிகளே 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கண்டித்துக் கவலைப்படுகிறார்.

‘விடுதலை’யிலும் அது பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் கூலி உயர்வு கோரிக்கையைக் கண்டித்ததாக இல்லை.

இச்சம்பவத்தையும், அது அரசாங்கத்தின் கையாலாகாத நிலையாலும், ஆதிக்கவாதிகளாலும் நடைபெறுவதையும் கண்டிக்கிறார். இதில் என்ன இரட்டை நிலை? இதில் என்ன தலித் விரோத நிலையுள்ளது? தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் போராடியதை அம்பேத்கர் பாராட்டுகிறார். தலித் மக்களும் பாராட்டுகிறார்கள். தலித் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பு, பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் கூறியுள்ளனர். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்.காரர் எதற்கு இதைப் பேசுகிறார்?

தலித்துகளை பஞ்சமர்களாக்கி, தீண்டத்தகாதவர்களாக்கி, கல்வியைப் பறித்து இன்றளவும் கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு தலித் நலம் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

(தொடரும்...)

 - உண்மை இதழ், 1-15.10.19

வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழ் மொழியில் வடசொற்கள் புகுந்தமை- 30

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் (தமிழ் மொழித் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம், சென்னை - 600 005)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகம் தோன்றிப் பன்னெடுங் காலம் ஆகிவிட்டது. மனிதன்  தன் உள்ளக் கருத்தினை ஒருவரோடு ஒருவர்க்குத் தெரிவித்துக்கொள்ளத் தனக்கு வசதியாக மொழியினைப் படைத்துக் கொண்டான். வெண்டிரியே என்னும் மொழி நூலறிஞர் எண்ணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி மொழி (Language is a vehicle of thought)  என்பர். உலகில் இதுகாறும் பல்மொழிகள் தோன்றியிருந்தாலும், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றளவும் நிலைத்து நிற்பவை ஒரு சில மொழிகளே எனலாம். மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் திகழ்ந்து, இலக்கிய இலக்கணச் செல்வங்களைப் பெற்று, இன்றளவும் மாயாமல் நிலைத்து வாழும் மொழிகளாகத் தமிழ், சீனம் முதலிய மொழிகளைக் குறிப்பர். சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்க் கருத்து வளமும் சிந்தனைச் செல்வமும் நிறைந்தமொழியாய் இலங்குகின்றது.

இத்தகு பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியில் காலப்போக்கில் வடமொழியிலிருந்து சில சொற்கள் புகுந்தன. எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த வகையில் கலப்புகள் நேர்ந்தன என்பதனை ஒருவாறு காண்போம்.

காலப்போக்கில் ஓர் இனத்தார் பிற இனத்தாருடன் கலந்து பழகும்பொழுது, ஒன்றிரண்டு சொற்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் செல்வது இயற்கை. இயல்பாகப் புகுவது என்பது வேறு; வற்புறுத்திப் புகுவிப்பது என்பது வேறு. இயல்பாகப் புகுவதாயின் அது காலப்போக்கில் நேரிடும் மாறுதல் எனக் கொள்ளலாம். வற்புறுத்திப் புகுத்தப்படுமாயின் முதற்கண் அது வெறுப்புடன் நோக்கப்படும்; எதிர்ப்பு எழும்; எதிர்ப்புகள் அடக்கப்பட்டாலுங்கூட, உள்ளத்தில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்; காலப்போக்கில் உறவு பகையாக வெடிக்க வாய்ப்புண்டு. எனவே தான் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவர்,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே"

என்று குறிப்பிட்டார். அவரே புதியன புகுத்தலும் என்று சொல்லாமல் புகுதலும் என்று சொன்னார். புகுத்தல் என்பது வலிந்து மேற்கொள்ளும் முயற்சி; புகுதல் என்பது இயல்பாக நிகழும் மாறுதல்.

தமிழ் இலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பிய ஆசிரியர் தொல்காப்பியனார் பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குங் காலையில் ஒருமொழியினர் என்றும் நினைவில் இறுத்திப் போற்றத்தக்க நெறியினைப் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

- தொல்காப்பியம், சொல், 401

இதனால் பிறமொழிச் சொற்கள் எந்த மொழியில் புகுகின்றனவோ அந்த மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு மாறி அமையவேண்டும் என்பது தொல் காப்பியனார் கருத்து என்று புலப்படுகின்றது. இவ்வாறு மாறியமைந்த வடசொற்களே ஆணை, விண்ணப்பம், ஞானம், அனுபவம், அமாவாசை முதலிய சொற்கள்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் புகுந்த சொற்கள் சில இவ்வாறு சிறு மாறுதல் பெற்றுத் தமிழுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அய்ரோப்பா, இங்கிலாந்து, ஆங்கி லேயர், உயில், கிறிஸ்து, யோவான், உவிவிலியம் முத லான சொற்கள் எடுத்துக்காட்டு ஆகும் என்று டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் குறிப்பிடுவதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் குறிப்பிடுகின்றார்: "தேவையும் பயனும் நோக்கி ஒரு சில சொற்களை கடன் வாங்கும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காக, அலங்காரத்திற்காக என்று பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்கும்போது எதிர்ப்பு எழுகிறது (மொழி வரலாறு; கடன் வாங்கல்; பக்கம் 102)."

தொடரும்

- விடுதலை நாளேடு 28 11 19

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி" (2) - 29

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை

வருமாறு:

வேதியலில் வடமொழியாக்கம் :

"வாதி கெட்டு வைத்தியன்" என்பது தமிழில் வழங்கும் ஒரு பழந்தொடர். பல்வகை மருந்துப் பொருள்கள், மூலிகைகள், உலோகங்கள் முதலியன வற்றோடு பயின்று பயின்று வேதையில் வெற்றி காணமுடியாமல் இறுதியில் மூலிகையின் குணம் முதலியன அறிந்தமையால் மருத்துவராவர் என்பது இத்தொடரின் பொருள். ரசவாதம் எனத் தற்போது குறிக்கப்பெறும் சொல்லுக்குப் பண்டைய இலக்கியங் களில் வேதித்தல் என்ற சொல்லே காணப்படுகின்றது. வேதை என்ற சொல்லும் காணப்படுகின்றது.

பரிசோதனைக் குழாய், மருந்துப் பொருட்கள், வாயு அடுப்பு போன்ற எந்தவிதத் துணைக் கருவிகளும் இல்லாமல், துருத்தி பச்சிலை முதலியன கொண்டே வேதித்தனர் என்பது அவர்தம் எல்லையில்லா அறிவாற்றலை விளக்கும். இதைக் காட்டிலும் வியக்கத் தக்க முறைகள் இருந்ததாகச் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த சித்தராக விளங்கிய இராமலிங்க அடிகளாரது குறிப்புக்களால் அறியலாம். இவர் வேதை (ரசவாதம்) ஏழுவகையாகவும் துணை வேதை (உபரசவாதம்) ஏழுவகையாகவும் ஆற்றல் கூடும் என்கிறார்.

ரசவாதம் :

ஸ்பரிசவாதம்   -    தீண்டி வேதித்தல்

ரசவாதம்   -     மருந்தால் வேதித்தல்

தூமவாதம்    -    புகையால் வேதித்தல்

தாதுவாதம்   -     உலோகத்தால் வேதித்தல்

வாக்குவாதம்       -       சொல்லால் வேதித்தல்

அக்ஷவாதம் -              பார்வையால் வேதித்தல்

அங்கப்பவாதம்-        இறையுணர்வால் வேதித்தல்

எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களால் இராமலிங்க அடிகளாரே எழுதியுள்ளது வியப்பு. வடசொற்களுக்கு இணையான தமிழ் அடுத்து எழுதப் பெற்றுள்ளது காண்க.

உபரசவாதம் :

மந்தரவாதம்     -        சிறுநீரால் வேதித்தல்

தூளனவாதம்        -      கால் தூசால் வேதித்தல்

வாயுபிரேரகவாதம்        -நச்சுக்காற்றால் வேதித்தல்

பிரவேச விசிரிம்பிதவாதம்- தாதுப்பொருட்களால்  வேதித்தல்

தேவாங்க வாதம்     -தியானத்தால் வேதித்தல்

தந்திர வாதம்        -      காரணமின்றி வேதித்தல்

வடசொற்களுக்கான பொருளும் உடன் தரப் பெற்றுள்ளன. இத்தகைய கருத்துக்களை ஊன்றிப்படித்து ஆழ்ந்து சிந்திக்கின் அறிவியலில் மிகப் பன்மடங்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் ஆராய்ச்சிப்பூர்வமாக மிகப்பெரும் அளவு பணம் செலவு செய்தாலும் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற முடியாத அரிய செயலை மிக எளிதாக மேற்காட்டிய வகைகளில் செய்தனர் நம் முன்னோர் என்பதை நினைத்துப் பார்த்துப் பெருமிதம் அடையாமல் இருக்கமுடியாது; வியவாமலும் இருக்க முடியாது. இதைவிட வியப்பு அத்துணை சொற்களும் இத்துறையில் வட சொற்களாக இருப்பதுவே.

ஞானத்தில் வடமொழி :

பண்டைத் தமிழகத்தில் பயின்று வந்துள்ள மிகு பழங்கடவுட் கோட்பாடு சிவன் தொடர்பானது ஆகும். பிற்காலத்தில் தோன்றிய பல்வகைப் புராணங்கள், தலக்கதைகள், சமய இலக்கியங்கள் ஆகியவை சிவனைப்பற்றித் திசை திருப்பும் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி இழிவுபடுத்தும் நிலைக்குக் காரணமாயின என்பது உண்மை. ஓர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவனாக விளங்கியவன் சிவன். அனைத்துச் சித்தர்களும் இக்கருத்தைக் கூறுவதைக் காணலாம். சிவன் அகத்தியர்க்கு உணர்த்த, அகத்தியர் பிறருக்கு உணர்த்த வந்த ஆன்மீக அறிவு என்பதைச் சித்தர்கள் மரபு ஆய்வாளர்கள் நன்கு அறிவர். இந்தச் சித்தர்கள் கண்ட கடவுட்கொள்கையே சித்தாந்தம் என்பது. சித்தர்கள் கண்ட முடிபு என்பது இச்சொல்லின் பொருளாகும்.

தமிழகத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சைவ சமய சாத்திரங்கள் பதினான்குக்கும் அடிப்படை சித்தர் பாடல்களே. காலம் கணித்துச் சொல்லமுடியாத வாழ்வினையுடைய சித்தர்களில் தொன்மையான அகத்தியர், தமிழில் முதல் தந்திர சாத்திரம் எழுதிய திருமூலர் முதலியோரின் நூல்களில் காணப்பெறும் கருத்துக்களின் ஒருபகுதியே சாத்திரங்களாக மலர்ந்தது என்பதை இரண்டும் பயின்றார் அறிவர். தத்துவங்களைச் சொன்ன அவர்கள் சமயம் என்னும் வட்டத்தை உருவாக்கவில்லை. பின்னர் வந்தவர்களே சைவ சித்தாந்தம் என்னும் எல்லையுடைய சொல்லைத் தோற்றுவித்தனர்.  தமிழ்ச் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் வந்த சாத்திர வல்லுநர்களால் வளர்க்கப்பெற்ற சித்தாந்தத்தில் காணப்பெறும் வடசொற்களின் விழுக்காடும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.

கீழே சில வடசொற்களும் இணையான தமிழ்ச் சொற்களும் சான்றாகத் தரப் பெற்றுள்ளன.

சர்வஞ் ஞன்   - முற்றுணர்வினன்

இச்சா சக்தி       - விழை வாற்றல்

கிரியாசக்தி      - செயலாற்றல்

ஞானசக்தி    - அறிவாற்றல்

திரோதானசக்தி         - மறைப்பாற்றல்

அனுக்கிரகசக்தி        - அருளாற்றல்

மலபரிபாகம்        - மலநீக்கம்

இந்திரியம்    - பொறி

கரணம்     - கருவி

சாலோகம்      - இறையுலகு பேறு

சாமீப்யம்     - இறையருகு பேறு

சாரூபம்       - இறையுரு பேறு

சாயுச்சியம்      - இறையாதல் பேறு

பஞ்சாட்சரம்     - அய்ந்தெழுத்து

சகமார்க்கம்   - தோழமை நெறி

தாசமார்க்கம்     - அடிமை நெறி

சற்புத்ரமார்க்கம்       - மகன்மை நெறி

இத்தகைய சொற்களின் பட்டியல் மிகப் பெரிதாகும் தன்மையது.  இடம் கருதி சில சான்றுகளே தரப்பெற்றன.

யோகத்தில் வடமொழி

இணைதல் என்னும் பொருளுடைய 'யுஜ்' என்னும் சொல்லில் இருந்து யோகம் என்னும் சொல் தோன்றியதாகச் சொல்வர். சிற்றணு பேரணுவுடன் (ஜீவன் - சிவனுடன்) இணைதற்கான முயற்சியே இது. இதுவும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு அறிமுகம் ஆன துறையே. இந்திய நாகரிகத்தின் தொன்மையான சிந்துவெளிப் பகுதியினர் யோகம் பயின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதையும், அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதையும் திராவிட நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் பலரும் ஏற்பர்.

இந்த இறையொன்றல்  ( யோகம் ) துறையிலும் வடசொற்கள் மிகுந்து காணப்பெறுகின்றன.

சான்றாகச் சில :

அஷ்டாங்க யோகம்       - எண்நிலையொன்றல்

அஷ்டமா சித்து     - எண்பெரும் பேறு

ரேசகம்      -   விடுதல் ( வளி )

பூரகம்     -   வாங்கல் ( வளி )

கும்பகம்      -   உள்ளடக்கல்

பிரமாந்திரம்    - பெருந்துளை

ஸ்தூல தேகம்   -   பருஉடல்

சூட்சும தேகம்     -   நுண்உடல்

சாக்கிரம்    -   நினைவு

சொப்னம்     -   கனவு

துரியம்      -   பேருறக்கம்

துரியாதீதம்     -   உயிர்ப்படங்கல்

காயப் பிரவேசம்   -   கூடுவிட்டுக் கூடுபாய்தல்

ஆகாயப் பிரவேசம் -   வெளிப்பயணம்

பிறதுறைகள் :

மேற்காட்டிய துறைகளில் மட்டுமல்லாமல் சோதிடம், மந்திரம் ஆகிய சித்தர்கள் கண்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வட சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முடிவுரை :

தமிழகத்தில் தோன்றிய இறையுணர்வு மிக்கச் சித்தர்கள் தமிழுக்கும் மக்கட் கூட்டத்திற்கும் மருத்துவம் முதலிய பல துறைகளினாலும் தொண்டாற்றியுள்ளனர் என்பதையும், அந்த நூல்களில் கூறப்பெற்றுள்ளவற்றில் பல மறைபொருட் கூற்றாகவே இருப்பினும் எவ்வாறோ வடசொல்லாகவும் விரைந்து நிகழ்ந்துள்ளன என்பதையும் சிற்சில சான்றுகளுடன் இக்கட்டுரையில் கூறப்பெற்றது.

தமிழ்ச் சித்தர்கள் கண்ட அனைத்துத் துறைகளும் இன்றைய தமிழகத்தில் உள்ளன. ஆனால் சொற்கள் இல்லை அவற்றை மீண்டும் தமிழாக்கி மக்கள் வழக்கில் கொண்டுவரச் செய்து தமிழும் தமிழனும் இழந்த புகழை நிலை நிறுத்துவதே அவை பயின்ற அறிஞர்தம் கடனாக இருத்தல் வேண்டும்..

-  விடுதலை நாளேடு 26 11 19

வியாழன், 28 நவம்பர், 2019

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி"- 28

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை வருமாறு:

முன்னுரை :

இறையுணர்வு மிக்கோரைப் பத்தர், சித்தர் என இரு வகையினராகப் பிரிக்கலாம். முன்னவர் இறை உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர். கோயில்தோறும் சென்று பல்வகையாகப் பாடிப் பரவியவர். பின்னவர் அஃதொழிந்தவர். சுருங்கச் சொன்னால் முன்னவர் புறத்தவம் பயின்றவர். பின்னவர் அகத்தவம் பயின்றவர். இரு பிரிவினராலும் தமிழ்மொழி சிறந்துள்ளது. எனினும் தமிழ்ச் சித்தர்களால் வேறு ஒரு பயனும் விளைந்துள்ளது. அதுவே பல்துறைச் சமூக நலப்பணிகள்.

சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை மேல் நீர்போல வாழ்ந்த இவர்கள் யோகம் பயின்று விரிந்த காட்சியுற்றுப் பொருள்களின் உண்மையியல்புகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைமைகளையும் அறிந்து மந்திரம், மருந்து, யோகம், ஞானம், வேதியல் (ரசவாதம்) முதலிய பல துறைகளிலும் மிகப்பல நூற்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். இவர்களது நூற்களில் வடமொழியாக்கம் பற்றிச் சிறிது இக்கட்டுரையில் காணலாம்.

சித்தர்கள் இலக்கிய மரபு

தமிழ் இலக்கியங்களைக் காலமுறைப்படி வகைப்படுத்தினால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையானவை தோன்றின என்பது விளங்கும். ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமைப்போடும் பயனோடும் விளங்குவது பெரும்பாலான பழைய இலக்கியங்கள் அல்லது பாடல்கள் அவற்றுக்குரிய ஆசிரியரால் எழுதப்பெற்றனவாகவோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்த பிறரால் எழுதப்பெற்றனவாகவோ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்கள் என்று இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும்-எந்தத் துறை யைச் சார்ந்ததாக இருந்தாலும்-அந்தந்த ஆசிரியரால் எழுதப் பெற்றனவாயிராதென்பது உறுதி. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுதல் கூடும்.

முதலாவதாக இவர்கள் சமுதாயத்தை விட்டு மிக ஒதுங்கி வாழ்ந்தவர்கள்.

"பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே"

பற்றனைத்தும் விட்ட பட்டினத்தார் தரும் உண்மைச் சித்தருக்கான விளக்கம் இது. இவ்வளவு ஒதுங்கி வாழ்ந்த சித்தர்கள் உட்கார்ந்து கொண்டு நூற்களை எழுதினர் என்பது பொருந்துமாறில்லை. இரண்டாவது காரணம் இதற்குத் துணையாய் அமைவது - மிகப் பல சித்தர்கள் பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. மக்கட் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்றே பல அரிய செய்திகள் சித்தர் பாடல்களில் கூறப் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பலருக்கும் புரியாக் குறிப்பு மொழியாலும் குழூஉக் குறியாலும் பாடப் பெற்றவை. பண்படா மனத்தோர் பயிலக்கூடாது அல்லது அறிந்து கொள்ளக்கூடாது என்றே அவர்கள் அத்தகைய முறையைப் பயின்றனர் என்பதை அவர்கள் பாடல்கள் வாயிலாகவே அறிகின் றோம். எனவே, கருத்துக்குச் சித்தர்கள் சொந்தக்காரர்கள்; கவிதைக்கல்லர்.

"உண்டான மூலியைத்தான் குகையினுள்ளே

ஒளித்து வைத்தார் சித்தரெல்லாம் வெளியாமென்று

பண்டான சித்தருக்கு மூலியிட்டுப் பாவிகட்கும்

கர்மிகட்கும் கிட்டுமோ சொல்

செண்டான பூவுலகில் மானுட ரெல்லாம்

செத்தவர்க ளெழுந்திருப்பார் இடம்கொள்ளாது

கொண்டான விதியாளி வந்தானாகில்

கூப்பிட்டுத் தான்கொடுப்பார் சித்தர்தானே;"

- 167 புலிப்பாணி வைத்தியம் 300

"தாமிந்த சூத்திரத்தைக் கொளியா தீந்தால்

தலை தெறித்துப் போகுமடா சத்தியம் சொன்னேன்

நாமிந்தப் படிசொன்னோம் யோகிக் கீவாய்"

- 216 அகத்தியர் பூரண சூத்திரம்

"குணமாகப் பலபேர்க ளிடத்தில் வாதம்

கூக்குரலாய்ச் சொன்னாக்கால் குடி கெடுக்கும்

பணம்போகு மாக்கினைதான் மிகவுண்டாகும்

பதிவான தலைபோகும் பாரிலேதான்

உணவாக உனைநம்பார் உலுத்தமாடு

உற்றுமே பொருளறியார் ஒழுங்குமில்லை

பிணம்போல இருந்துமே வேலைபாரு

புத்ததனில் வைத்திருக்கும் பிரிதிதானே"

- 103, யாகோபு சுண்ணம், 300

மேலே காட்டப்பெற்ற பாடல்கள் முற்கூறிய கருத்துக்குத் துணைசெய்வதைக் காணலாம்:

காயகல்பம், ரசவாதம், பல்வகை மந்திரங்கள் - இன்னமும் இவை போன்ற அரிய முறைகளைப்பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டால் ஏற்படும் விளைவினை எண்ணிப் பார்க்கவும் முடியாதன்றோ? அவரவர்கள் தம்தம் விருப்பப்படி செயல்படத் தொடங்கின் இயற்கையின் கட்டுக்கோப்பு உடைபட்டுப் போகும். ஆகவே மறைவாகவே வைக்கப்பெற்றன.

இத்தகைய கருத்துக்களை "எழுதாக் கிளவியாக" குரு மாணவர் முறையிலே கற்றுத்தரப்பெற்றன. மறைவாக இருந்த இவ்வரிய கருத்துக்களை மறை என்று கூறும் மரபு உண்டாகியது. வடமொழியாளர் வேதம் என்ற சொல்லால் இத்தகைய மறைபொருட்களைக் குறித்தனர். வித் என்னும் சொல்லின் அடியாக இது பிறந்தது என்பர். ஆனால் மறைத்தல் அல்லது வேய்தல் என்னும் சொல்லின் அடியாக மறையும் வேதமும் தோன்றின என்பது பொருந்தும். "கூரை வேய்ந்தான்" என்பதும் காண்க.  நீண்ட காலமாக மறைவாக செவி வழியாகவே கூறப்பெற்று வந்த அரிய கருத்துக்களைப் பின்னர் தோன்றியவர்கள் குறிப்பாகவும் குழூஉக் குறியாகவும் வெளிப்படுத்தினர் ஆதலின் அப்பாடல் களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிக அதிக அளவிற்கு இடம் பெற்றன. எனவே, சித்தர் பாடல் களில் இடம்பெறும் சொற்களை வைத்துக் கொண்டு அவர்களது காலத்தைக் கணிப்பது தவறுடையதாக அமையும். ஆதலின் இவர்கள் பெயரில் கிடைக்கும் பாடல்கள் அவர்கள் காலத்தில் பாடப்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனலாம்.

இனி, இவர்கள் தொண்டாற்றிய துறைகளை மருத்துவம், வேதியியல் (ரசவாதம்) யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவினுள் அடக்கலாம். இந்த நான்கு துறைகளிலும் தமிழர் மிகுதொன்மைக் காலம் தொட்டே புலமை மிக்கவராய் விளங்கினர் என்பதற்கும் வேற்றுமொழியினர் அல்லது வேற்றுநாட்டினர் தொடர் பாலும் இவ்வறிவினைப் பெறவில்லை என்பதற்கும் சித்தர் பாடல்களே பெரும் சான்றாக விளங்குகின்றன.

வடமொழியாக்கம்

தமிழ்ச் சித்தர் பாடல்களில் மிகப் பரவலாகக் குறிப்பு மொழியும் குழூஉக் குறியும் இருப்பினும் வட சொல்லாக்கம் மிக அதிக அளவில்-எல்லாத்துறைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வியப்பாக உள்ளது. தமிழர்க்கான இயல்பான பெருமை குன்றும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

புகழ் பெற்ற பதினெண் சித்தர்களுக்குக் குருவாக இருந்தவர் அகத்தியர். ஆதலின் அவரைக் குருமுனி எனக் குறிக்கும் மரபு இருந்தது.

"ஆமென்றஎன் பேரகத்தியனாகும் அருளினோம்

என்னுடைய சீஷர் பதினெண்பேர்

தேமென்ற தென்பொதிகை தென்கயிலை

சீஷர்          தேறினாரிவர் பெருமை."

- 77 அகத்தியர் சவுமிய சாகரம் 1200

"சீரேதான் சங்கத்தார் எல்லாம் கூடி

சிறப்புடனே அரங்கேற்றம்

நீரேதான் அகத்தியர்க்குக் குருபட்டம்

திகழாகத் தான்கொடுத்தார் தானே."

- 699 - மிமி காண்டம், அகஸ்தியர் 12000

இப்பாடல் வரிகள் மேற்கூறிய கருத்துக்குத் துணை நிற்பன. இவர் குடக்குத் திசையில் உள்ள மலையை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர். ஆதலின் குடமுனி எனப் பெயர் பெற்றார்.

திசையைக் குறிக்கும் சொல்லாகிய "குடக்கு" என்பதைக் குடம் என ஆக்கி அதன் வட சொல்லாகிய கும்பம் என மொழிபெயர்த்து அதில் தோன்றியவர் என்று ஒரு கதையையும் கட்டிவிட்டுக் "கும்பமுனி" என்றும் குறுகிய வடிவுடைய குறுமுனி என்றும் விளக்கம் தந்து அவரது வடிவையும் புகழையும் குறைத்தனர் ஒரு சாரார் என்பதை நினைக்கும் தோறும் வேதனை மேலோங்கும்.

குடமூக்கு என்ற இனிய தமிழ்ப் பெயர் கும்பகோணம் என மாற்றப்பெற்றமை இணையான பிறிது ஒரு எடுத்துக்காட்டு. திருமறைக்காடு என்பதை வேதா ரண்யம் என்றும் பழமலை என்பதை விருத்தாசலம் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

மருத்துவத்தில் வடமொழி

நீர், நிலம் இவற்றில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரம் ஆகியவற்றின் இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பட்டை, வேர் ஆகிய அனைத்து உறுப்புக்களின் குணம் அறிந்து நோய்க்குத் தக்க மருந்தாக்கியுள்ளனர் நம் நாட்டு சித்தர்கள். இத்துடன் அமையாமல் உலோகங் களின் குணங்களையும் அறிந்து அவற்றை நீறாக்கி (பஸ்பம்), நோய்களுக்குத் தந்துள்ளனர். எந்தப் பொருளை எப்படித் தூய்மை செய்தல் வேண்டும், எப்படி எரித்தால் (புடமிடல்) நீறாகும் என்பனவற்றையும் அறிந்திருந்தனர். எந்தவித அறிவியல் கூடமோ, சாதனமோ இல்லாமல் இவற்றை அறிந்திருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எவராலும் வியவாதிருக்க முடியாது.

தமிழ் நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனு பவங்களின் விளைவே இம்மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் - அனைத்தும் வட சொற்களாகவே விளங்கு கின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கி வரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் கீழே சான்றுக்குச் சில தரப் பெற்றுள்ளன.

மூலிகை வகை :

சௌந்தர்யம்  -    வெள்ளாம்பல்

ப்ருந்தா    -    துளசி

சப்ஜா   -   திருநீற்றுப் பச்சை

கூஷ்பாண்டம்    -     பூசணி

சாயாவிருட்சம்    -   நிழல்காத்தான்

ரத்தபுஷ்பி   -   செம்பரத்தை

மருந்து வகை :

ஔஷதம்     -   அவிழ்தம்

லேஹியம்    -   இளக்கம்

பஸ்பம்   -   நீறு

கஷாயம்  -   குடிநீர்

ப்ரமாணம்    -   அளவு

சூரணம்   -   இடிதூள்

நோய் வகை :

திருஷ்டி  -  கண்ணேறு

க்ஷயம்    -    என்புருக்கி

ஆஸ்துமா    -  ஈளை இரைப்பு

அரோசகம்  -  சுவையின்மை

அஜீர்ணம்    -     செரியாமை

குஷ்டம்   -    தொழுநோய்

மருந்துப் பொருள் வகை :

சொர்ணமாட்சிகம்   -   பொன்னிமிளை

நேத்ரபூஷ்ணம்    -   அன்னபேதி

ப்ரவளம்  -  பவழம்

நவநீதம்  -   வெண்ணெய்

லவணம்   -   உப்பு

தசமூலம்  -   பத்துவேர்

த்ரிகடுகு  -     முக்கடுகு

த்ரிபலா     -   முப்பலா

தொடரும்...


புதன், 27 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே? - 2 (27)

தந்தை பெரியார்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்நூற்பாவுக்குச் சான்று காட்டவந்த நன்னூலுரையா சிரியர்களுள் ஒருவரும் நான்கெழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொல்லினைச் சான்று காட்டிலர்.

அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான்-பகுபதம்.

இவை நன்னூலுக்குப் பேருரை (விருத்தியுரை) எழுதிய சிவஞான முனிவர் காட்டியவை. இவற்றுள் பகாப்பதத்துள் அகலம்வரை தமிழ், பகுபதத்துள் பொருப்பன்வரை தமிழ்.

அகலம் என்பது நான்கெழுத்தாலாயது; அகல்+அம் எனப் பிரித்துக் காணின் மூன்றெழுத்து, ஈரெழுத்தாய் நிற்கும்.

பொருப்பன் என்பது பொருப்பு+அன் எனும் இரு சொற்புணர்ச்சி; பொருப்பு நான்கெழுத்தாலாயது. ஏனைய உரையாசிரியர் சான்றுகளை விரிப்பின் பெருகும்.

பதம் என்பது வடசொல், மொழி, சொல், கிளவி என்பன தமிழ். இம்மூன்றனையும் இன்று பதம், பதம் பார்த்து வருகிறது.

தொல்காப்பியர் ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்மொழி எனச் சுட்டுகிறார். ஈண்டுத் தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் சுட்டும்.

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

என்பது தொல்காப்பியர் திருவாக்கு.

ஆ, கா, நா - ஓரெழுத்தொருமொழி

மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி

கணவிரி (அலரி) - நாலெழுத்தொருமொழி

அகத்தியனார் - அய்யெழுத்தொருமொழி

திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி

பெரும்பற்றப்புலியூர் - ஏழெழுத்தொருமொழி இவை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அந்நூற்பாவிற்குக் காட்டும் சான்றுகள். இவற்றுள் நாலெழுத்தொருமொழிவரை தமிழ் ஏனையவை பகுத்தற்குரியன.

ஆ, மணி, வரகு, கொற்றன் இவை உரையாசிரியர் இளம்பூரணர் காட்டும் சான்றுகள். நான்கெழுத்துச் சொல்லுக்கு மேற்காட்டாமை இவரது தமிழ் மரபை உணர்ந்து உரை எழுதும் திறத்தைக் காட்டுகிறது.

மேற்கண்ட விளக்கங்களால் நான்கெழுத்திற்கு மேம்பட்ட தமிழ்ச்சொல் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்நிலையில் இலக்கியமும் இலக்கணமும் எவ்வாறு தமிழ்ச் சொற்களாக இருக்க முடியும்? அவை தமிழ்ச் சொற்கள் அல்லவே அல்ல; வடமொழிச் சொற்கள்.

லக்ஷியம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கியம்.

லக்ஷணம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கணம் ;

(தற்பவம் - தன்னிலிருந்து தோன்றியது) இவற் றைத் தமிழெனக் கொண்டு மனம் போன போக்கில் விளக்கம் காண்பது ஏற்புடைத்தன்று.

இலக்கணம் எனும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு அது தமிழ்ச்சொல் என வாதிடுதல் பொருந்துவதன்று. தொல்காப்பியர் காலத் திற்கு முன்பே வடமொழி மயமாக்கும் பணி தொடங்கப்பட்டதன் விளைவு அது.

அவ்வாறாயின் இலக்கிய இலக்கணம் எனும் தொடருக்கு ஈடாய்த் தமிழ்த் தொடர் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

அத்தொடர் யாது ?

கணக்கு வழக்கு என்பதே அத்தொடர்

அக்கணக்கு வழக்கு எங்கே? -

அன்னை மொழியின் அருமையை உணராது அயல்மொழிக்கு ஆக்கம் தேடக் கருதிய பண்டைக்கால உரையாசிரியர் சிலரால் அத்தொடர் தன்னிடத்தை இழந்து, பிளவுபட்டுத் தன் பொருளை மட்டும் விடாது, கரந்து நிலவுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு எனும் தொடர்களின் கண்வரும் கணக்கு என்பதும்,

காணக்காயர் எனும் சொற்கண் நிற்கும் கணக்கு என்பதும்,

-"கணக்கினை

முற்றப்பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலின்

கேட்டலே நன்று"

எனும் பழமொழிப் பாடல் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும்,

கணக்கறிந்தும் விடுவானோ கண்டாய் என் தோழி எனும் வள்ளலார் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும் எப்பொருளைச் சுட்டுகின்றன?

கருதுதல்-கருத்து, கருதுதற்குரிய நூல் எனும் பொருளைச் சுட்டுகின்றன. இலக்கியத்தைச் சுட்டுகிறது என்றால் தெளிவாகப் புரியும். அந்த அளவிற்கு வடமொழி, நம்மைத் தன்மயமாக்கிவிட்டது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழு முயிர்க்கு"

எனும் திருக்குறட்கண்ணும்

"எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணெழுத்திகழேல்"

எனும் முதுமொழிகளின் கண்ணும் இடம் பெற்றுள்ள எண் என்பதும் கணக்கையே உணர்த்தும்.

கண் என்பது கணக்கு என்பதன் வேர்ச்சொல்;

கண் - கருது

எண் - எண்ணுதல் - கருதுதல்

கருதுதற்கு-எண்ணுதற்கு-சிந்தித்தற்கு உரியதாய்த் திகழ்வது கணக்கு.

இலக்கியம் எனும் வடமொழி மயத்தால் கணக்கு இவ்வாறு கரந்து மறைந்து திரிந்து வருகிறது; என்னே தமிழ் நிலை ?

ஏவல் கண்ணிய (கண்ணிய - கருதிய)

கண்ணிய மரபு

கண்ணிய நிலைத்தே கண்படை கண்ணிய கண்படை

கபிலை கண்ணிய வேள்வி

காலம் கண்ணிய ஓம்படை

காமம் கண்ணிய நிலைமைத்து

கண்ணிய புறனே

முதலாய தொடர்களுள் கண்ணிய (கண்) எனும் சொல்லினைக் கருது-கருத்து எனும் பொருளில் தொல் காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க. மேலும் பல இடங்களிலும் இவ்வாறு கையாண்டுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.

வழக்கு - வழங்கு - வழங்குவது வழக்கு வழங்குதலால் அமையும் மொழியின் அமைதியே வழங்கு, வழக்கு, இயல், மரபு முதலாயவை ஒரு பொருட் சொற்கள்.

இயல் என்பது இலக்கணம் எனும் பொருளில் வழங்கி வந்த சொல்லாகும். எழுத்தியல், பிறப்பியல், புணரியல் முதலாய பல இடங்களில் இடம் பெற்றிருக்கும் இயல் என்பதற்கு இளம்பூரணர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சங்கரநமச்சிவாயர் முதலாயவர்களை உள்ளிட்ட உரையாசிரியப் பெருமக்கள் அனைவரும் இலக்கணம் என்றே உரை காண்கின்றனர்.

இயல் (இயல்பு)-மொழியின் இயல்பு-மொழி இயல்பாய் அமைந்த நிலை.

வழங்கியல் மரபு

வழக்கத்தான

வழங்கியல் மாவென் கிளவி

வழக்கு வழிப்பட்டன

முதலாய தொடர்களுள் வழக்கு (வழங்கு) எனும் சொல்லினை இயல் (இலக்கணம்) எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க.

இக்கருத்துணராது இயல் என்பதற்கு சிறு பகுதி (ஊயயீவநச) என்று பொருள் காண்பது பொருந்து வதன்று. ஆறுமுக நாவலரும் தொல்காப்பிய நூற்பாக் களைக் குறிப்புரையுடன் வெளியிட்ட இளவழகனாரும். அப்பொருள் இருப்பதாகச் சுட்டுதல் ஏற்புடைத்தன்று. அதற்கு ஒத்து எனும் சொல்லொன்று இருப்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

கணக்கு வழக்கு எனும் தொடர் இலக்கிய இலக் கணம் எனும் வடமொழி மயத்தால் கரந்துறைந்து, கரைந்து வருதலைப் போல, படலம், பால் எனும் தமிழ்ச் சொற்கள் அதிகாரம் எனும் வடமொழி மயத்தில் கரைந் துறைகின்றன. இவைபோன்றே எத்துணையோ தூய தமிழ்ச்சொற்கள் தம்மிடத்தை வடமொழிச் சொற்கள் கைப்பற்றிக் கொள்ள, வாழவழியின்றி, ஏங்கிக் கரந்து நின்று தவிக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொணர்தல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

- விடுதலை நாளேடு 19 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே ? - 26

பேரா.இராம.சுப்பிரமணியன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகுக்கெல்லாம் கணக்கு வழக்கு உண்மைகளை-அடிப்படைகளை வகுத்துத் தந்த தமிழன், தான் மட்டும் அவற்றினை உரியவகையில் வைத்துக் கொண்டா னில்லை; போற்றிப் பாதுகாத்தானில்லை. அதனால், கலாச்சாரம் எனும் பெயரால் தமிழகத்துப் புகுந்த கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அவனது இயற்கையோடியைந்த-தூய பண்பாடும், ஒருநிலையின்றி முக்கல், கனைத்தல் முதலாய நான்கு நிலைகளான் நடந்துவந்த ஒருமொழிக்கு அவனது தூய, எளிய, இனிய மொழியும் இரையாகி, அதனதன் வண்ணமாயின. இன்றோ, தூய தமிழ்ப் பண்பாடு யாது? தூய தமிழ்மொழி யாது? எனத் துணியக் கூடாநிலை உருவாகி விட்டது.

தன்னிடம் தமிழனுக்குக் கணக்கு வழக்கு இல்லாம லில்லை. ஒருகாலத்திலிருந்தன; இன்றும் இருக்கின்றன. ஆனால், கரந்துறைகின்றன.

உலக அரங்கினுள் தமிழ்மொழி ஈடிணையற்ற ஒன்றெனின் அது மிகையன்று. அம்மொழிக்குள்ள இனிமையும், எளிமையும் வேறெம்மொழிக்குமில்லை. அவ்விரண்டனுக்கும் காரணம் தமிழ் ஒலியமைப்பும், மொழி (சொல்) அமைப்புமேயாகும்.

தமிழெழுத்துக்கள் அனைத்தும் பெரும்பாலும் மிடறு, பல், இதழ், நா, மூக்கு எனும் அய்ந்துறுப்புகளையே இடமாகக் கொண்டு இயல்பாகப் பிறக்கின்றன. எவ்வெ ழுத்திற்கும் வலிய முயற்சி தேவைப்படுவதில்லை. தமிழெழுத்துக்களோடு பிறமொழியெழுத்துக்களை ஒப்பிட்டொலித்துக் காண்போர்க்கு இது நன்கு புலனாகும்.

எழுத்து என்றால் எழச்செய்வது என்பது பொருள். எழு-வேர்ச்சொல், து-பிறவினை இறுதி (விகுதி), விழுத்து-விழச்செய் என்பதுபோல, எழுப்ப எழுவது ஒலி. ஆக, எழுத்தென்றால் ஒலி என்பது பொருளாயிற்று. எழுதப்படுவது எழுத்தெனக் கூறுதல் பொருந்துவதன்று. எழுத்தாகிய ஒலிகள் தமிழ்க்கண் முப்பத்தொன்று மட்டுமே உள்ளன. இம்முப்பத் தோரொலிக்குள் தமிழ்மொழி இயங்குகிறது.

உயிர் மெய்யென்பது தனியொலியன்று. உயிரு மெய்யும் இணைந்த ஈரொலி; அதனைத் தொல்காப்பியர் ஓரெழுத்தாகச் சுட்டவில்லை. பவணந்தியார் ஓரெழுத் தாகச் சுட்டினாலும், குற்றியலுகரங்களையும் நிலை மொழி, வருமொழிகளின் ஈறு, முதல்களையும் சுட்டும்போது அதனை ஈரொலியாகவே காண்கின்றார்.

எடுத்துக்காட்டு :

வரகு - உயிர்த்தொடர்

நாடு - நெடிற்றொடர்

ஈண்டு உயிர்மெய்த் தொடர் என்று கூறாது ஈற்றயலெழுத்துக்களை மெய்யும் உயிருமாய்ப் பிரித்து, ஈற்றயல் நின்ற எழுத்தாய உயிர்மேல் வைத்து, உயிர்தொடர், நெடிற்றொடர் எனச் சுட்டுகிறார்.

யானை + கால் = யானைக்கால்

உயிர் மெய்முன் உயிர்மெய் வந்தது எனக் கொள்ளாது, உயிர்முன் மெய்வந்தது எனக் கொள்ளு மாறு அவர்.,

"நின்ற நெறி யேயுயிர் மெய்முதல் ஈறே"

என விதி கூறுகின்றார். இதனால் உயிர் மெய் யெழுத்து ஓரொலியன்று; ஈரொலியேயென்பது பவணந்தியார் உள்ளக்கிடக்கை என்பதனை அறிகிறோம்.

உயிரெழுத்து-12; மெய்யெழுத்து-18; ஆய்தம்-1; உயிர்மெய்யெழுத்து-216; ஆக 247 எழுத்தெனச் சின்னஞ்சிறார் உள்ளத்தில் தவறான கருத்தினைப் புகுத்துதல் ஏற்றதன்று.

ஆங்கிலமொழி 26 எழுத்துக்களாலாய மொழி எனவும், உலக மொழிகளுள் அதுவே குறைந்த எழுத்துக்களாலாய மொழியெனவும் கூறுதலுண்டு; இஃது உண்மைக்குப் புறம்பாயது. ஆங்கில மொழி வரி வடிவால் 26 எழுத்துக்களையுடையதே தவிர ஒலி வடிவால் நூற்றுக்கு மேற்பட்ட ஒலிகளையுடையது என்பதனை அதன் ஒலி வேறுபாடுகளின் நுட்பங்களை நுனித்துணர்வார் பலரும் உணர்வர்.

ஏ (A), ஜி (G) இவ்வீரெழுத்துகளை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொன்றும் சொற்களில் இடம்பெறும் போது எத்துணை ஒலிகளாக ஒலிக்கின்றன என்பது புலனாகும்.

தமிழெழுத்துக்களின் நிலை அத்தகையதன்று. தனித்து ஒலிக்கும்பொழுதும், மொழியிடை ஒலிக்கும் பொழுதும் அதன் நிலை வேறுபடுவதில்லை; பல்வேறு நிலையாய் நின்று, பல்வேறு பொருளைத் தருவதில்லை.

தமிழ்மொழியின் எழுத்துகள் முப்பத்தொன்றே உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1.

தமிழ்க்கண் நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட மொழியே (சொல்லே) இல்லை. சிலருக்கு இது வியப் பாகத் தோன்றலாம்; இஃது உண்மை. தமிழ்ச் சொற்களை ஆய்தலைவிட அவற்றுக்கு அடிப்படையாய அசை களை ஆய்ந்தாலே அதன் உண்மை புலனாகும்.

நேர், நிரை, நேர்பு, நிரைபு இவை தொல்காப்பியர் சுட்டும் அசை நிலைகள். தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இவ்வசை நிலைகளின் கண் அடங்கிச் செய்யுளாகவும், உரைநடையாகவும் வெளிவருகின்றன. சான்றுக்கு உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டாலும், ஒரு மரத்தின் உறுப்புகளை எடுத்துக் கொண்டாலும் அவை இந்நான்கசைகளின் கண் அடங்கி நிற்றலைக் காணலாம்.

உடல் - நிரை

நா - நேர் (நாக்கு-நேர்பு)

கால் - நேர்

மார்பு - நேர்பு

கழுத்து, வயிறு - நிரைபு

மரம் - நிரை

வேர், காய் - நேர்

இலை, கனி, கிளை - நிரை

ஏனைய உறுப்புகளையும் பொருத்திக் காண்க.

தமிழ்மொழி அசைகளாகிய இவற்றை நுனித்து நோக்குவார்க்கு, தமிழ்மொழி அமைப்பினை இவை கொண்டு காட்டுதல் நன்கு புலனாகும். அஃதாவது நான்கெழுத்துகளுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொல் இல்லை என்பது புலனாகும். நான்கெழுத்துச் சொல் ஆயிரத்திற்கு ஒன்று கிடைத்தலே அரிது.

நேர்-ஓரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் ஈரெழுத்து.

நிரை - ஈரெழுத்து

நேர்பு - ஈரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் மூவெழுத்து

நிரைபு - மூவெழுத்து (கருத்து போன்றவை நான்கெழுத்து)

"தாமரை புரையும் காமர் சேவடி"

தாமரை - மூவெழுத்து

புரையும் - (புரை+உம்) ஈரெழுத்து; ஈரெழுத்து

காமர் - மூவெழுத்து

சேவடி - மூவெழுத்து (செம்மை+அடி)

எனப் பிரிப்பினும் மூவெழுத்து ஈரெழுத்தாய் நிற்றல் காண்க.

இத்தகைய சொற்களைத்தன்பால் கொண்ட தமிழ் என்பதும் மூவெழுத்தாலாயதே.

இத்தமிழ்க்கண் தோன்றிய நூல்களைத் தொகுத்துச் சுட்டும் சொற்கள் எத்துணை எழுத்துக்களால் இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட நால்வகை அசை நிலைகளின் கண் அடங்கியல்லவா நிற்றல் வேண்டும்? அஃதல்லவா தமிழ் மரபு ?

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ்க்கண் தோன்றிய நூல்களை எத்தொடரால் இன்று சுட்டுகிறோம்?

"இலக்கிய இலக்கணம்" என்னும் தொடராலல்லவா சுட்டுகிறோம் ?

இலக்கியம், இலக்கணம் இவை இரண்டும் எத்துணை எழுத்துகளானானவை? அவ்வாறெழுத்து களானானவையல்லவா?

இவைபோல ஆறெழுத்துகளானான ஒரு தமிழ்ச் சொல்லைச் சுட்ட முடியுமா?

அந்தணர் என்பதைச் சுட்டலாம்; அஃது ஒரு சுட்டுச் சொல்; அம்+தண்+அர் எனப்பிரிந்து நின்று அழகிய குளிர்ச்சியையுடையார் எனப் பொருள்தரும் (குளிர்ச்சி-அருள்)

அடுத்து "ஒட்டகம்" என்பதனைச் சுட்டலாம். அஃது இரு சொற் புணர்ச்சி; ஒட்டு+அகம் எனப்பிரிந்து நின்று பொருள்தரும்; அகத்தினுள்ளே நீர்பை ஒன்று ஒட்டி நிற்கும் விலங்கினை அச்சொல் சுட்டுகிறது என்பது நுனித்துணர்வார்க்குப் புலனாகும். வேறு ஏதேனும் ஒரு சொல்லினை-ஆறெழுத்துடைய ஒரு சொல்லினை - தமிழ்ச் சொல்லாக யாரேனும் சுட்டமுடியுமா?

பகாப்பதம் ஏழெழுத்து, பகுபதம் ஒன்பதெழுத்தெனப் பவணந்தியார் சுட்டுகிறார், தமிழ்மொழியை வடமொழியாக்கும் பெரும் பணியைத் தலைமைதாங்கிச் செய்தவர்களுள் குறிப்பிடத்தக்க அவர் அவ்வாறு சுட்டாது வேறு எவ்வாறு சுட்டுவார் ?

"பகாப்பக மேழும் பகுபத மொன்பது

மெழுத்தீ றாகத் தொடரு மென்ப" - 130

என்பது அவர் திருவாக்கு.

தொடரும்

- விடுதலை நாளேடு 14 11 19

வியாழன், 14 நவம்பர், 2019

தமிழ்ச்சொற்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை -தமிழ் "அரசு"- 25

"தமிழண்ணல்" டாக்டர் இராம. பெரியகருப்பன்

தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழியல்துறைத் தலைவர் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

'வடநூல் உணர்ந்தார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் 'அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று கூறுவதனின்றும் இருமொழியறிவின் இன்றிய மையாத் தன்மையை சிவஞான முனிவர் உணர்ந்தவர்' என்பது பெறப்படுகிறது.

தமிழிலுள்ள 'அரசு' என்ற சொல் பழமையானது. தொல் காப்பியத்தில் அரசர் (1021) என்ற சொல் புறத்திணையியலில் காணப்படுவதுடன், மரபியலிலும் ஆளப்படுகிறது. (1571, 1572, 1574). புறநானூற்றில் அரசு (327, 369) அரைசு (42, 211) எனவரும் இடங்கள் பலவாகும். பொதுவாக அரசன், அரசர், அரசவை, அரசாண்ட, அரசாளன், அரசியல், அரசிளங்குமரர், அரசு, அரசுகட்டில், அரசுவா, அரைசர், அரைசு, அரையன் போன்ற சொல்வடிவங்களைச் சங்க இலக்கியத்தும் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களிற் காண்கிறோம்.(1) அரசுவா என்பது பட்டத்து யானை; அரச அரா என்பது அரசராகிய பாம்பு. இத்தகைய தொடர்களும் நினைவுகூரத்தக்கன.

திராவிட மொழிகளில் அரசு என்ற சொல் பல்வேறு நிலைகளில் ஆட்சியிலுளது. கருநாடகத்தில் தேவராச அரசு என்று, 'அரசு' என்பது குலப்பெயராகக் குறிக்கப் படுகிறது. அரசு குற்றியலுகரமாதலின் ஒலித்துணை உயிர்களை விட்டுவிட்டு அர்ஸ் ஆகிறது. ஆங்கிலத்தில் அர்ஸ் (Ars) என்று எழுதப்படும்போது, முன்னைய வடிவமே மறக்கப்படுகிறது. அரசன்மனை என்ற சொல் அரமனை என ஒலிக்கப்படுவதே முறை. இன்று தமிழில் அரண்மனை எனல் ஒலிப்பில் நேர்ந்த தவற்றால் விளைந்ததாகலாம். ஏனெனில் மலையாளத்தில் அரமனா என்றும், கன்னடத்திலும், துளுவிலும் அரமனை என்றும் குடகில் அரமனே என்றும், கோடர், தோடர்  மொழிகளில் அர்மன் என்றும், தமிழிலும் பேச்சு வழக்கில் அரமனை என்றும் வழங்குதல் காண்கிறோம். மலையாளத்தில் அரசன், அரயன், அரசம், அரசு எனவும் கோடர் மொழியில் அர்ச் எனவும் தோடர் மொழியில் அர்ஸ் என்றும், கன்னடத்தில் அரச அரசு, அரசி, அரசத்தி (அர சாத்தி), அரமனை என்றும் துளுவில் அரசு, அரசெ என் றும் தெலுங்கில் அருசு என்றும் சமற்கிருதத்தில் ராஜன் என்றும் இச்சொல்வடிவங்கள் காணப்படுகின்றன.(2)

அரசகேசரி, இராசாதிராசன், இராசராசன், இரா சேந்திரன் என்ற பல சொற்கள் இடைக்காலத்து வழக்கிலிருந்தன. ஆண் மகவை அரசு எனல் இன்றும் சில சமூகங்களில் வழக்கிலுள்ளது. தலைமையான மரமொன்றை 'அரசமரம்' என அழைத்தனர்.

அரசன் என்ற சொல்லே அரைசன், அரயன், அரையன் என எழுத்துப் போலியாய் மாறி வழங்குகிறது. சிலம்பில் மலையரையன் என்று கூறப்படுவதைப் பர்வதராஜன் என்பர், முன்றுறை அரையனார் என்பவர் பழமொழி நானூற்றின் ஆசிரியர் ஆவார். அரையர் என ஒரு வகுப்பினர் பெயரும் குறிக்கப்படுகிறது.

வடமொழி எனக் கருதப்படும் ராஜு, ராஜன் என்ற சொற்கள் 'அரசு'  'அரசன்' என்ற மூலச்சொல்லின் திரிபு வடிவங்களேயாம்.

அரசு    அ ர்      அ சு     ராசு      ராஜு

ர் அ      அ சு

அரசன்  அ ர்      அ சன் ராசன் ராஜன்               ராஜா

ர் அ      அ சன்

உயிரிடம் பெயர்தல் என்பது ஓர் ஒலித்திரிபு. டாக்டர் மு. வரதராசனார் தம் மொழிநூலில் மூன்று உயி ரொலிகளைக் கொண்ட, உயிர் முதன் மொழியாக வரும் தெலுங்குச் சொற்களில் உயிரொலி இடம் பெயர்ந்து நிற்பதை விளக்குகிறார். (ப.33) இது திராவிட மொழிகளில் காணப்படும் ஓரியல்பு என்பது உணரத்தக்கது.

அவரு  அ வ் அ ரு     வ் அ    அ ரு

வ் ஆ   ரு     வாரு

இவரு    இ வ்இ ரு    வ் இ    இ ரு

வ் ஈ ரு   வீரு

மேலும் சில தெலுங்குச் சொற்களையும் மு.வ. காட்டுகிறார்:

சுட்டுச்சொற்கள்

அதி னி             அதினி              தானி

இதி னி             இதினி              தீனி

பிற தெலுங்குச் சொற்கள் சில:

உரல்   உரலு  ஓரலு ரோலு

உகிர்   உகிரு ஒகிரு கோரு

இலது               எலது  லேது

'இவற்றில் காணும் மாறுதல் என்ன? முதலில் உள்ள உயிர் இரண்டாமிடத்திற்குப் பெயர்ந்து சென்று, அங்குள்ள உயிரைக் கெடுத்து, அதற்கீடாக நீண்டு நிற்றலே இம்மாறுதலாகும்' என்றும்,  'இத்தகைய மாறுதல் நிகழும் சொற்களை ஆராயுமிடத்து இடையிலுள்ள மெய் ர, ல,வ என இடையின மெய்களாகவே பெரும்பாலும் இருக்கக் காண்கிறோம். அவற்றின் திட்பமின்மையே இம்மாறுதலுக்குக் காரணம் எனலாம்' என்றும் டாக்டர் மு.வ. கூறுவன மனங்கொளத்தக்கனவாம்.

இதே முறையில்தான் அரசு, ராசு என மாறுகிறது. அரசு என்ற சொல்லிலும் மூன்று உயிர் வருதலும் திட்பமில்லா இடையின மெய்யாக இடையிலுள்ள ரகர மெய்யிருத்தலும் காணலாம். தமிழ்நாட்டில் நகரத்தார் மரபில் 'ராசு' என்றும், ராசாச்சி என்றும் இன்றும் வழக்கிலுள்ள பெண்பால் குறிக்கும் மக்கட் பெயர்களைக் காணலாம். அதுபோலவே ராசப்பன், 'ராசாத்தி' என்ற பெயர்களும் உள. இவையே ராஜு, ராஜன், ராஜா, ராஜப்பன், ராஜாத்தி என்றெல்லாம் வடமொழிபோல் ஒலிக்கப்பெற்று ஆட்சி செய்கின்றன. மூலவர் தமிழிலுள்ள அரசரே என்பது. மேற்காட்டியவற்றால் அறியலாகும்.

தேவராஜன், மகராஜன் என்ற சொற்கள் கருதத் தக்கன. தேவ அரசன் என்பது ஒலித்தற்கு இடையீடாகத் தோற்றும் பொழுது தேவராசன் என இம்மாற்றம் எளிதாக அமைகிறது. அரசனுக்கு மகப் பிறந்ததும், மகவு அரசனாகிறது. அம் மக அரசன்தான் மகராசனாகிறது. ஒரு தாய் தன் குழந்தையை வாய்குளிர, மனங்குளிர மகராசா என்று கொஞ்சும்பொழுது மகவாய்ப் பிறந்த அரசையே-தமிழ்ச்சொல்லால் அவ்வாறு கொஞ்சுகிறாள்; மஹாராஜன் என்ற சொல்லுக்கும் இதற்கும் பொருள் வேறுபாடுண்டு. வரதராசன் என எழுதும் பொழுது, வடமொழி ராஜனைத் தமிழ் ஒலிக்கு ஏற்பத் தமிழ்ப்படுத்தி எழுதியதாக இதுகாறும் நினைத்து வருகிறோமே அது தவறு. வரதன்+அரசன் வரதராசன். ஒலித்தற்கு இடர்ப்பாடு நேருமெனின் உயிரிடம் பெயர்ந்து ராசனாகிவிடுகிறது. வரதராசன் என்பதே இயல்பானது. அதனை வரதராஜன் என்பதுதான் வடமொழிக்கு ஏற்ப ஒலித்திரிபு செய்து உச்சரித்தது மட்டுமல்லாமல், அதன்படி எழுதியதுமாகும். சூடு என்பதை ஜூடு எனவும், சாமான் என்பதை ஜாமான் எனவும் கொச்சை வழக்காய் ஒலிப்பது போல் பிறந்ததே அரசு, ராசு ஆகி ராசு, ராஜா ஆன வரலாறாகும்.

அரசன்-அரையர்-ராயன்

அரசன் என்ற சொல் அரைசன், அரையன், அரய்யன் என ஆதல் சங்க நூல்களிலேயே காணப்படுவதாகும். அய்காரக் குறுக்கம் என்பதற்கு ஏற்ப அரய்யன், அரயன் என ஒலிப்பு நிலையில் உச்சரிக்கப்படுவதே முற்கூறிய விதிப்படி ராயன் என மாறுகிறது. இதனால் ராயன் என்பதும் தமிழ்ச்சொல்லே என்பது விளங்கும்.

அரசப்பன்       -              ராசப்பன்

அ(ர)யப்பன்    -              ராயப்பன்

அரய்யன்        -              ராயன், ராய்

தேவராசன் தேவராயன் என மாறும். தமிழ்நாட்டில் ராயவேலூர் தேவராயன் பட்டினம், சேர்வராயன் பட்டணம் என்பனபோல் பல ஊர்ப் பெயர்களைக் காணலாம். புறநானூறு இரண்டாம் பாட்டின் அடியில் எழுதப்பட்டுள்ள கொளு 'சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது' என்பதாகும். அன்றே எவ்வாறு ராயர் வந்தார் எனத் தமிழறிஞர்கள் அய்யப்பட்டதுண்டு. அரசன், அரயன், ராயன் என்ற வழக்குத்திரிபை உணர்ந்தால் முடிநாகராயர் தொன்மைத் தமிழரே என்ற உண்மை விளங்கும்.

கிருஷ்ண தேவராயன் என மகாராட்டிர மொழியிலேயே 'ராயர்' வழங்குவது எதைக் காட்டுகிறது ? அரசனின் மறுவடிவான 'ராயன்' என்பதும் திராவிட மொழிகள் பலவற்றிலும் காணப்படும் பொதுக் கூறேயாகும். முன்னைய பிராகிருதங்களிலும் இது வழங்கியதாதல் வேண்டும். பரவு பரசு; விரவு விரசு என்பனவற்றையும் கரையல், கரைசல்; பரவல் - பரசல்; உரையல் - உரைசல் என்ற மாற்றங்களையும் எண்ணிப் பார்த்தால் அரையன், அரயன், ராயன் என்பனவே பழமை மிக்க வடிவங்கள் என எண்ணத் தோன்றும். அரவு அரசு, அரயன் அரசன் ஆகியிருக்கலாம். அரவு வலிமையைச் சுட்டிப் பின்பு பாம்பைக் குறித்தது.

கன்னடத்தில் ராயன் எனவும் தெலுங்கில் ராயலு எனவும் மலையாளத்தில் ராய் எனவும் வழங்கும் குலப்பெயர்கள் எல்லாம் இதன்வழிப் போந்தனவேயாம். ராவ் என்ற பெயருடையாரும் 'ராயரேஸ் என்றுதான் அழைக்கப்படுகின்றனர். ராமராவ் என்பதில் வரும் ராவும் ராயும் ஒன்றே. பாவாணர் தம் 'முதல் தாய்மொழி' நூலில்,

அரசு

உரவு  -              அரவு அரசு அரசன்

ஏவு      -              ஏசு

பரவு    -              பரசு

விரவு -              விரசு

அரவு  -              அரசு

அரவு  -              அரைசு அரைசன் அரையன்

(கன்) ராயன், (தெலு) ராயலு, (மாஹி) ராவ் எனத்தரும் காட்டுகள் இவண் நினையத்தகுவன. (பக். 225-226)

அவர் கூறுவதுபோல் அரவு, ராவு, ராவ் என்பதும் பழமையான வடிவமாக இருந்திருக்கக்கூடும் எனத் தோற்றுகிறது. உரவு வலிமை. அதுவே அரவு ஆகி அரசு ஆயிற்றென்று அவர் கருதினாரெனத் தோற்றுகிறது.

'அரசன் சண்முகனார்' என்ற இலக்கணப் பெரும்புலவர், மதுரையை அடுத்த சோழவந்தானில் வாழ்ந்தவர். அரசன் என்பது தந்தை பெயராகுமிடத்தும், அதுவே மன்னனைக் குறிக்குமிடத்தும் அரசன் இன்னார் என வழங்கப்பட்டது. பின்னர் அது ராசன், ராஜன் எனப்பட்டு இராசன் என்று வடமொழியாக்கம் பெற்று எழுதப்பட்டமைபற்றி நாமறிவோம். இங்ஙனம் கொச்சைத் தன்மையுடன் செந்தமிழ்ச் சொற்களை சமற்கிருத மயமாக்கும் போக்கைப் பல்வேறு நிலைகளிற் காணலாம். சிலர் சமற்கிருத மயமாக்கும் (Sanskritization)  என்பதை மேனிலையாக்கம் என மொழி பெயர்ப்பது இங்கு அடிபட்டுப் போகிறது.

அரசனுக்குக் கட்டியங்கூறும்போது 'ராசாதிராச ராச மார்த்தாண்ட ராசகுல திலக' என்றிவ்வாறு அடுக்குங் கால், ஒலித்திரிபு, உலக வழக்கில் இன்றியமையாத தாகிவிட்டது. அதனையே இன்று பெருமையாக இருக்கும் என்று கருதி, 'ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜராஜ' என்றிவ் வாறு ஒலிக்கலாயினர். ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதித்தன் என்பனவெல்லாம் தமிழ் மூலச்சொல் திரிந்து வடமொழிச் செல்வாக்குக் காலங்களில், ஒலித் திரிபு மட்டும் ஏற்றனவே தவிர, அவை அயற் பெயர்களல்ல என்பது மனங்கொள்ளத் தக்கது. செல்வர் என்ற சொல் எவ்வாறு செல்வந்தர் ஆனது? வடமொழித் 'தன்வந்தர்' என்ற சொல் வழக்கைத் தமிழிற் கலந்ததால் விளைந்த வினை இது.

இங்ஙனம் தமிழ், 'அரசை' உணர்வதன் பயன் யாது? 'சேம அச்சி'லுள்ள (புறம். 102) சேமம் என்பதே க்ஷேமம் ஆகிறது. தேம், தேஎம், தேயம் என்பதே தேசம், தேஷ் ஆகிவிடுகிறது. முதுமக்கட் சாடியிலுள்ள சாடி பின்னர் ஜாடி ஆகிவிடுகிறது. சுவடு, சோடியாகிப் பிறகு ஜோடி யாகிறது. துண்டிக்கப்படுகிற துண்டுபோல் வெட்டி யெடுக்கப் படுகிற வேட்டி வேஷ்டி ஆகிறது. பதறுவதால் ஏற்படும் பதற்றம் நம் பதற்றத்தில் பதஷ்டம் ஆகித் தொலைகிறது.

வேகும் கடம் வேங்கடமாகிறது. சங்க காலத்திலேயே கடம்-காடு என்ற சொல்லாட்சி மிகுதி. வேம்கடமாக அது மாற வேங்கடராமன் முதலிய கலவைத் தொடர்கள் தோன்றின. வேங்கடராமன், வெங்கடராமன், வெங்கட் ராமன், வெங்கட்ராம், வெங்கட், வெங்கு என்றும் வெங்கடாசலம், வெங்கிடாசலம், வேங்கடாசலம், வெங் கடேஷ் என்பன போலக் கலந்தும் பிறழ்ந்தும் சமற்கிருத மயமாக்குதல் கொச்சைப்படுத்தும் வழக்கின் பாற்படு மன்றோ? மூலச்சொல் எப்படி வெட்டி, ஒட்டி கட்கட் டாகிறது பாருங்கள் !

சமற்கிருத மயப்படுத்துதல் என்பது பெரும்பாலும் புறப்பூச்சு வண்ணம் போன்றதே; உள்ளீடெல்லாம் தமிழே. மறைக்காட்டை வேதாரண்யம் ஆக்கினால் அஃது அயல்தேசத்து ஊராகிவிடுமா? தமிழர்கட்கு உரிய பரதநாட்டியம் திருத்தணிக்கு அப்பாற் காணப் படாதது. அக்கலை பற்றிய பரதசாத்திரம் வடமொழியிலிருப்பதால், பரதக்கலை தமிழருக்குரிய தல்லாததாகி விடுமா ?

சொற்களைப் பொறுத்தவரை, சமற்கிருதமே தனக்கு அடுத்து வழங்கிய வடநாட்டுப் பாகதங்கள், பைசாச பிராகிருதங்கள், பிராகிருதங்கள் என்றெல்லாம் அழைக்கப்பட்ட வடநாட்டுத் திசை வழக்குகளிலிருந்து கடன்பெற்று வளர்ந்ததாகும். அப்பழம் திசைச் சொற்கள் பல தமிழோடு தொடர்புடையன. எனவே, வடமொழியில் வழங்குவனவெல்லாம் வடமொழிக்கே உரிமையுடையன என்று கருத இயலாது. வடமொழி ஒலிப்பால் ஏற்பட்ட மாறுதல்களும் வடமொழி போலத் தோற்றினும் அவை வடமொழியாகா. மேலும், தமிழக வரலாறு 'ஆறிடு மடுவும் மேடும்' போன்றது. தமிழ் செல்வாக்குப் பெற்றபோது தமிழ் மயப்படுத்துதலும் வடமொழி ஓங்கியபோது சமற்கிருதமயமாக்குதலும் என இவை மாறி மாறி நிகழ்ந்து வந்துள்ளன. வடமொழி அரசாட்சியிலிருப்பார் ஆதரவு பெற்று, மேலோங்கி நின்ற காலங்களில் தமிழ் நாட்டுக்கே உரிய கலைகள், சிற்பம், இசை, மெய்ப்பொருள், அறிவியல், வானநூல், மருத்துவம் எல்லாம் சமற்கிருதமயமாக்கப்பட்டன. அக்காலத்திலெல்லாம் அறிந்தும் அறியாமலும் பல தமிழ்ச்சொற்களும் சமற்கிருதமயமாக்கப்பட்டன. தமிழ் 'அரசு' அதை நன்கு மெய்ப்பிக்கிறதென்பதை நம் மொழியியலறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- விடுதலை நாளேடு 12 11 19

செவ்வாய், 12 நவம்பர், 2019

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் (2) - 24

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

பிரயோக விவேக ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர் தாம் இயற்றிய நூலின் சிறப்பியல்பையும் பயனையும் கூறுமிடத்து தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறிய வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமந் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது, யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன் என்று விளக்குகிறார். ஆகவே, இவர் அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் முதனூல் பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும் என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெலும் இன்றைய நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, சுநீதிகுமார் சாட்டர்ஜி முதலான பல்வேறு ஆரிய திராவிட மொழியாய்வாளர்களும் இக்கூற்று முற்றிலும் தவறானது என்பதைத் தெள்ளிதின் நிலை நாட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சொல்லப்போனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தைச் சிவஞானமுனிவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்பதை நாம் காண்கிறோம்.

காரகத்திற்குரிய பெயர்களுள் கருத்தா, கருமம், கரணம், அவதி, ஆதாரம் என்ற வடமொழிப் பெயர்களையே எடுத்தாள்கிறார். ஆறாம் வேற்றுமையைக் காரகமாகக் கொள்பவன் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமைக்குரிய காரகத்தை மட்டும் கோளி என்ற தமிழ்ச் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.

வடமொழியில் ஆண், பெண், அலி என்ற முப்பாலிலும் வரும் சொல் ஏழு வேற்றுமைகளையும், ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று எண்களையும் கொண்டு உறழ 63 வடிவங்களைப் பெறுகின்றன. இவற்றிற்கொப்பத் தமிழிலும் 64 வடிவங்கள் உளவாக ஆசிரியர் கருதுகின்றார். பெயர் உருபு எட்டுடன் வேற்றுமை உருபு எட்டையும் உறழ்ந்து இவ்வெண்ணைப் பெறுகிறார். வினையியலில் துமந்தம், துவாந்தம் என்பவற்றைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.

இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவரது இலக்கணக் கொத்து வடமொழி இலக்கணத்தை உட்கொண்டு அமைந்துள்ளது. இவரது தீவிர வடமொழிப்பற்று இவரை வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் அவர் காலத்தில் நிலவிய வடமொழிச் செல்வாக்கு, அய்ந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே என்று அவர் கூறும் அளவிற்கு மிகுந்திருந்தது. வடநூலார் சந்தியக்கரம் என்பதை இணையெழுத்து என்றும் ஏகவாக்கியம் பின்னவாக்கியம் என்பனவற்றை ஒரு தொடர், பல தொடர் எனவும் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

தொன்னூல் விளக்க ஆசிரியரான வீரமாமுனிவர் பொருளதிகாரத்தில் விரித்துரைக்கப்படும் பொருளாகத் தொல்காப்பியல் கூறிய அகம், புறம் என்பவற்றை விடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்று கொண்டார். அதற்கு அவர் கூறும் காரணம்-பொருணூல் தந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவும் ஒழிய அகப்பொருள் எனச் சிற்றின்பம் ஒன்றையும், புறப்பொருள் எனப் படைச்சேவகம் ஒன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாது உரைத்த நூல் சிறுபான்மையாகையான் இங்ஙனம் அறம் முதல் நான்கிற்கேற்ப பொது நூலாக இவ்வதிகாரம் முடியும் எனவே கொள்க என்பதாகும். இப்படி வடநூலார் மரபையொட்டித் தண்டி முதலாயினோர் கூறியவாறு நால்வகைப் புருடார்த்தங்களே அகமும் புறமுமாம் என்பதோடமையாது இப்பொருள், வழக்கு, தேற்றம், தோற்றம் என மூவகைப்படும் என்றும், வடநூலார் இவற்றை ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என்பர் என்றும் கூறினார். பொருளிலக்கணம் கூறவந்த வீரமாமுனிவர் மிருதி நூலில் கூறப்பட்டவற்றைக் கூறுவது வியப்பாகும். புறத்திணை ஒழுக்கத்தைக் கூற முற்பட்டவர், வேதநூல், நீதிநூல், மனு நூல் முதலிய நூல் வழி விலக்கியனவும் விதித்தனவும் எடுத்துக்காட்டித் தன் பொருள் தோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம் என்றாலும் வடநூற் கருத்துகளை மரபுக்குப் புறம்பாக இலக்கண நூலில் அமைப்பது பொருத்தமாகப்படவில்லை.

ஆரிய மொழிகளைத் தமிழிடத்துரைக்குங்காலைப்  பொதுவெழுத்தால் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்று என்ற மரபு வழிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்கிறார். தமிழிலக்கணக் குறியீட்டுச்  சொற்களுக்கு ஒத்த தன்மை உடைய வடசொற்களைத் தருவதை ஆங்காங்கு காண்கிறோம். வடநூலார் பகாப்பதத்தை ரூடம் என்பர் (சூ.46) விகுதியை பிரத்தியயம் என்பர் (சூ, 84). அநீதி, அனாதி, நிராயுதன், நிருவிகல்பம் முதலான எதிர்மறை வடசொற்கள் தமிழில் பயில்வதால் அவற்றிற்குரிய வடமொழி இலக்கணத்தை 87ஆம் சூத்திரத்தில் தருகிறார். எனினும் ஒரு சில இடங்களில் தவறான செய்திகளையும் தருகின்றார் - அடைமொழியை வடநூலார் அவ்வியயம் என்பர் (93) தந்திரம் என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க என்றாற் போல்வன சில.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவஞான சுவாமிகள் வடமொழியையும் தமிழ் மொழியையும் கற்றுத் தெளிந்தவர். வடமொழித் தத்துவ நூல்களையும் தருக்க நூல்களையும் கற்றவர். அப்படிக் கற்றுத் தெளிந்த காரணத்தால்தான் அவருக்கு முன் வந்த இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கண நூலாசிரியர்களைப் போலன்றி இவ்விரு மொழிகளும் இன்றைய மொழி நூலார் கூறுவதுபோல, வேறுபட்ட ஆரிய, திராவிட மொழியினங்களைச் சார்ந்தவை என்பதை இவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அய்ந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம், புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்,

இரு மொழியறிவைப் பெற்றவராகலின் ஆங்காங்கு ஒப்புநோக்கு முறையில் சில கருத்துக்களைக் கூறிச் செல்கிறார். இத்தகைய ஒப்பாய்வு தெளிவைத்தரும்.

எடுத்துக்காட்டாக அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரித்து, என்ற வரியில் தெரிவித்து என நிற்கப்பாலது தெரித்து என விவ் விகுதி தொக்கி நின்றது.

இங்ஙனம் வருவனவற்றை வட நூலார் அந்தர் பாவிதணிச் என்பர். பாயிரத்தின் சிறப்பியல்பைக் கூறும்போது யாப்பு, முதலிய பொருள், கேட்போர், பயன் இந்நான்கையும் வடநூலார் ஆனந்தரியம், விடயம், அதிகாரிகள், பிரயோசனம் என்று கூறுவர் என்கிறார். முத்தமிழ் இலக்கணம் அகத்தியரால் ஆக்கப்பட்டது ஏன் என்பதை விளக்கும்போது அவரது மற்றொரு கருத்தைக் காண்கிறோம் - சோதிடம் முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழினும் ஏனைய மொழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினார்.(2)

அகர இகரம் அய்காரமாகும், அகர உகரம் ஔகாரமாகும் என்ற சூத்திரங்கள் வடமொழி மரபை உளத்தில் கொண்டு போலும், சிவஞான முனிவர் இச்சூத்திரங்கள் சந்தியக்கரங் களை உணர்த்துகின்றன என்று கொண்டார்.

இக்கூற்றை மறுத்து, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் எழுத்து அதிகார ஆராய்ச்சி என்ற நூலில், இவை சந்தியெழுத்தின் இயல்பினைக் கூறுவனவாயின். ஆசிரியர், இவற்றைத் தனியெழுத்துக்களின் இயல்பினைக் கூறும் நூன்மரபில் வைத்திருப்பார். அவ்வாறன்றி, மொழியிலுள்ள எழுத்துக்களின் இயல்பினைக் கூறும் மொழி மரபில் இவற்றை வைத்திருத்தலின், மொழியிலுள்ள அய்காரத்திற்கு அ, இ என்பது வரும் என்றும் ஔ காரத்திற்கு அ, உ என்பது வரும் என்றுமே அவர் கருத்துக் கொண்டார் என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.

அகரத்திம்பர் தோன்றும் என்னும் சூத்திரத்தின் பொருள் அகர இகரமேயன்றி அவற்றோடு யகர மெய்யும் சேர்ந்து அய்காரமாகும். அகர உகரமே யன்றி அவற்றோடு வகர மெய் சேர்த்து ஔகாரமாகும் என்றும் சிவஞான முனிவர் கூறியுள்ளார். இதற்கு அடிப்படையாக அவருக்கு அமைந்தது, அய்காரத்தில் யுகரமும் ஔகாரத்தில் வகரமும்; கலந்துள்ளன என்பது வடமொழி இலக்கண மாபாடியக்காரரான பதஞ்சலியாருக்கு உடன்பாடு என்பதாகும்.

-  விடுதலை நாளேடு 7 11 19

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் - 23

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

ஒரு மொழியின் இலக்கணம் சமகாலத்திய இலக்கி யத்தின் அடிப்படையிலேயே தோன்றுவதாகும். தொல் காப்பியர் காலத்து இலக்கணம் அவர் காலத்து வழங்கிய இலக்கிய மொழியின் அடிப்படையிலே அமைந்தது. அது போலவேதான் நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கண நூல்களும். இக்கட்டுரையின் நோக்கம் வடமொழித் தாக்கம் தமிழிலக்கணத்தில் காலந்தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடும் என்று சிந்திப்ப தேயாகும். ஒரு சில இலக்கண நூல்களே, அவற்றுள்ளும் ஒரு சில இயல்புகளே இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றன.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தில் வடசொற்கள் ஓரளவு பயின்று வரப்பட்டன என்பதை அவர் கூறும் சொற்பாகுபாட்டில் "வடசொல்" (சூ. 401) என்ற பிரிவைக் கூறியதனின்றும் அச்சொற்களைத் தமிழில் எவ்வாறு ஆளவேண்டும் என்றும் (சூ. 402) அவர் சொல்லியதனின்றும் அறிகிறோம்.

"அ" "இ" முதலான ஒலிகளைக் குறிப்பதற்குப் பிராதிசாக்கியங்களில் அ என்ற விகுதியும் "காரம்" என்ற விகுதியும் சேர்க்கப்படுகின்றன. காரம் என்பது செய்யப்படுதல் என்று பொருள்படும். தைத்திரிய பிராதிசாக்கியம் (116, 21) இகரம் என்றால் இ என்ற ஒலியையும் "யகரம்" என்றால் "ய்" என்ற ஒலியையும் குறிக்கும். தொல்காப்பியர் ஞ ந ம வ இயையினும் உகர நிலையும் (எழு. 298) என்ற சூத்திரத்தில் "அ", "காரம்" என்று மேற்கூறப்பட்ட இரண்டையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

தொல்காப்பியர் காலத்தில் வேத நெறி நிற்போரும், சைனரும் பவுத்தரும் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் சமற்கிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற கராக்ருதத்தையும் அவர் அறிந்திருக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. தெய்வம், மாத்திரை, ஏது முதலான சொற்கள் இதற்குச் சான்று. ஆயினும் தொல்காப்பியர் தமிழ் மொழியின் சிறப்பியல்பைக் கருத்தில்கொண்டே சூத்திரங்களை இயற்றியிருக்கிறார் என்பதை மறுந்துவிடலாகாது. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் கூறியிருப்பதுபோல் தொல்காப்பியரின் பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு வடமொழி பிராதிசாக்கியங்களும் நிருக்தமும் கூறியுள்ள நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் என்ற நால்வகைப் பிரிவை ஒட்டியது என்பது ஏற்கத்தக்கதல்ல. இடையும் உரியும், உபசர்க்கமும் நிபாதமும் போல்வன அல்ல, இலக்கண நூலை யாக்கும் முறையில் தொல்காப்பியரும் வடமொழி இலக்கணக்காரர்களும் ஏறத்தாழ ஒரே நெறியைப் பொருத்தும் இடங்களில் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக வேற்றுமை இயலில் வேற்றுமை அமைப்பு முறையும் அதன் பொருள் விளக்கங்களும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய நிலையை புணர்ச்சி விதிகளில் காண இயலாது. புணர்ச்சியில் இரு மொழிகளும் வெவ்வேறு போக்குடை யவை, ஒலியின் இயல்பை உணர்த்தத் தொல்காப்பியர் ஒலிகளை உயிர், மெய் என்று பகுத்தார். அய்தரேய ஆரண்யகமும் (II-2-1) இப்படியே கூறுகிறது. இக்கருத்து ஒலி இயலாருக்குத் தனித்தனியே இயல்பாக எழக்கூடிய ஒன்று என்று கொள்ள வேண்டும்.

வீரசோழியம் : ஆசிரியர் புத்தமித்திரனார் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் என்பது இவர் நூலை ஆக்கியுள்ள பாங்கிலிருந்தே தெரிகிறது. இவர் வடமொழி மரபுகளையும் தழுவி தமிழிலக்கணத்தை ஆக்கி யிருக்கிறார் என்பதை அவரே தெளிவாகச் சொல்கிறார். வடநூல் மரபும் புகன்றுகொண்டே உரைப்பன்(3) சந்திப் படலம், காரகப்படலம், தாதுப்படலம், கிரியா பதப்படலம் போன்ற பாகுபாடுகள் வடமொழியில் காரகம் (வேற்றுமை), தாது (சொல்லின் வேர்ப்பகுதி) கிரியை (வினை) முதலிய வடமொழி மரபுச் சொற்களையொட்டி ஆளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தின் புணரியலும் மயங்கியலும் கூறியிருப்பனவற்றை வீர சோழியம் சந்திப்படலத்தில் அடக்குகிறது.

புணர்ச்சி நிலைகளைக் கூறும்போது வடமொழி இலக்கண குறியீடுகளான லோபம் (கெடுதல்) ஆகமம் (தோன்றல்) ஆதேசம் (ஒன்றினிடத்துப் பிறிதொன்று வருதல்) என்ற மூவகை விகாரங்கள் (மாற்றங்களை) குறிப்பிடப் படுகின்றன; குண சந்தியும் விருத்தி சந்தியும் வடமொழிக்கே உரியனவாயினும் அவையும் ஆரியத்துள் காணப்படுவன வாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு யாது காரணமாயிருக்கக் கூடும்?

தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் அருகி வழங்கிய வடசொற்கள் தமிழிலக்கியத்தில் 11ஆம் நூற்றாண்டில் குறிப்பாக சமண, பவுத்த காப்பியங்கள் மிகுதியாக வழங்கப் பெற்ற காரணத்தால் அத்தகைய தமிழிலக்கியங்களைப் பயிலுவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் வடமொழி இலக்கணக் கூறுகளையும் ஆசிரியர் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். வடமொழியில் நகரம் எதிர்மறைப் பொருளைத்தரும். கெய்யை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பதில் உள்ள நகர ஒற்று கெட்டு அகரம் எதிர்மறையை உணர்த்தும். எ-டு ந+சுரன்=அசுரன் உயிரை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பது "அந்" என மாறும். எ-டு ந+இஷ்டம்=அநிஷ்டம். இவை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வேற்றுமையில் "சு" என்னும் உருபு சேர்ந்து பின்  கெடுகிறது என்பது வடமொழி இலக்கண மரபு. தமிழுக்கு இது பொருந்தாது. எனினும் வடமொழிக்கு ஈடாகத் தமிழ்மொழி இலக்கணம் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தினால் அர், ஆர் முதலான உருபுகளோடு "அ" என்பதையும் இவர் சேர்த்துள்ளார்.

பவணந்தி : தமிழ் மொழிக்கே சிறப்பாக இலக்கணம் வரைந்தாரேனும் பவணந்தி வடமொழி மரபையும் கருத்தில் கொண்டவராதலால் எழுத்து அதிகாரத்தில் புறத்திலக்கண கூறப்புகுந்த நேரத்தில் சொல் இயல் என்று கூறாது பதவியல் என்று கூறினார்.

வடமொழிக்கு சிறப்பாக உள்ள "ரு" (R) முதலான எழுத்துக்கள் தமிழில் "இ" இரு என்றவாறு திரிகின்றன என்பதை ஏழாமுயிர் இய்யும் இருவும் என்று தொடங்கும் சூத்திரத்தில் (147) கூறுகிறார். வடமொழித் தொடர்கள் பல தமிழிலக்கியத்தில் அப்படியே பயிலப்பட்டு வந்ததால் அச்சொற்களில் காணப்படும் புணர்ச்சி முறையை உணர்ந்து கொள்வதன் பொருட்டுத் தமிழ்ப் புணரியல்களுக்குப் புறனடையாகப் பவணந்தி ஒரு சூத்திரம் அமைத்தார். அதில் வடசொலின் இயம்பிய கொளாதவும் - பொருந்தியவாற்றிற்கு இயையப்புணர்த்தல் யாவர்க்கும் நெறியே என்ற பகுதியில் வடமொழியில் பரம+ஆனந்தம்=பரமானந்தம் என்ற தீர்க்க (நெடில்) சந்தி, சூர்ய+உதயம் = சூர்யோதயம் என்ற குண சந்தி, சர்வ+அய்ச்வர்யம் - சர்வைச்வர்யம் என்ற விருத்தி சந்தி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் வழங்கிவரும் சொற்களுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டவை "தற்சமம்" எனப்படும் எ-டு காரணம். ஒருசில வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு சுகி. மற்றும் சில பொதுவும் சிறப்புமான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு அரன், பின் இரண்டு வகைகளும் தற்பவம் எனப்படுபவை, பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல் என்ற சூத்திரத்தில் (274) ஆசிரியர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.

நச்சினார்க்கினியர் சொல்லதிகார வேற்றுமை இயலில் மூன்றாம் வேற்றுமை வாய்ப்பாடுகளைக் கூறும்போது (சூ75) "முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது" - இதனுண் முயற்சியில் என்பது காரகவேது; பிறத்தலான் ஒலி நிலை யாது என்பது ஞாபகவேது என்கிறார். இங்கே வடநூலார் கூறும் ஏதுவின் இருநிலைகளை உரையாசிரியர் காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் செய்யுளில் பயிலப்பட்டு வந்துள்ளதை அவர் எச்சவியலில் கூறும் சூத்திரம் (401) தெளிவுபடுத்துகிறது. வடசொற்கிளவி வட வெழுத்தோரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்ற சூத்திரத்தால் வடசொற்களை எவ்வாறு தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இச்சொற்களுள் சான் றோர் செய்யுட் கண் வருவன, வாரி, மணி, காரணம், மீனம் போல்வன எனவும், ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன கமலம், ஞானம், தாரம் போல்வன எனவும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மேலே காட்டப்பட்ட "மீனம்" என்பது தமிழ்ச்சொல்லே என்பது இன்றைய மொழி ஆராய்ச்சியாளர் துணிபு, நச்சினார்க்கினியரின் இக்கூற்றை அக்காலத்து ஒப்பியல் ஆய்வு முறை இல்லாத நிலையை எண்ணி அமைதி கொள்ள வேண்டும்.

சேனாவரையர் (13நூ) தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் ஆங்காங்கு வடமொழி நூற்பொருளைத் துணையாகக் கொண்டு பொருள் கூறிச் செல்கிறார். எடுத்துக் காட்டாக பெயரியல் சூ. 182இன் உரையில் "இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலும் என விசேடித்தல் இரு வகைத்து" என்று குறிப்பிடுகிறார். இவற்றை வடநூலார் அயோக வியவச்சேதம், அந்யயோக வியவச்சேதம் என்பர்.

மூன்றாம் வேற்றுமை குறித்த சூத்திரத்திற்கு (சூ-74) உரை எழுதுகையில் சேனாவரையர் வடநூலுட் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான்; ஒரு வேற்று மையாக ஓதப்பட்டமையானும் என்று கூறுவது வடநூலுட் பல உருபுகள் உருவத்தில் மாறுபடினும் பொருளில் மாறுபடாவிடில், அவை ஒரு வேற்றுமையாகக் கொள்ளப்பட வில்லை என்பதை அவர் சுட்டுவதாக அமைகிறது.

வேற்றுமை இயலின் இரண்டாம் வேற்றுமை பற்றிய சூத்திர (சூ71) உரையில் செயப்படுபொருள் இயற்றப்படுவதும் வேறுபடுத்தப்படுவதும் எய்தப்படுவதும் என மூவகைப்படும் எனக் குறிக்கிறார். இவை பர்த்ருஹரியில் வாக்கியபதீயம் என்ற இலக்கணநூலில் நிர்வர்த்தியம், விகார்யம், பிராப்யம் என்று கூறப்படுகின்றன.

இது சேனாவரையரின் வடமொழி இலக்கணப் பயிற்சியைக் காட்டுகிறது. இவற்றினின்றும் சிவஞான முனிவர் கூறியதுபோல் சேனாவரையர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர் என்று கருத இடமளிக்கிறது.

தொடரும்

- விடுதலை நாளேடு 5 11 19

வெள்ளி, 8 நவம்பர், 2019

தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும் - 22

தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

29.10.2019 அன்றைய தொடர்ச்சி...

மழைகால் நீங்கிய மாக விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து

அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்

மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகதில் அம்ம

(அகம் - 141)

தெருவில் வரிசையாக விளக்கேற்றுவதை மறுகு விளக் குறுத்து என்கின்றார் நக்கீரர். இன்றும் தெருவில் முற்றம், வாசலிலும் மதிற்சுவர்கள் மேலும் தானே வரிசை வரிசையாக விளக்கேற்றிவைக்கிறோம். எல்லோரும் கொண்டாடும் மகிழ்ச்சி விழா என்பது இதிலும் சுட்டப்படுகிறது. பாலை வழியில் பொருள் வயிற்பிரிந்ததன் காதலர், நல்ல சகுனம் நேர்வதாலும் இனிய கனவுகள் தோன்றுவதாலும் கார்த்திகை விழாவைத் தன்னுடன் கொண்டாட விரைவில் வருவாராக! என்று தனது விழைவைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். கணவன், மனைவி இருவரும் உடனிருந்து கொண்டாடும் விழாவாக இது குறிக்கப்படுவது, இன்றும் தீபாவளியில் இளம் மணமக்களை உடனழைத்துக் கொண்டாடும் போக் கினை நினைவூட்டுகிறது.

இன்று நாம் காணும் விழாக்களில் இந்தியநாடு முழுவதும் பற்பல வகுப்பாரும் ஒருங்கு கொண்டாடும் விழாவாகத் தீபாவளி காணப்படுகிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோ பிறிதொரு பாடலில் திருக்கார்த்திகையைப் பெருவிழா என்றே குறிப்பிடுகின்றார்.

அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்

பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்

இலையில மலர்ந்த இலவமொடு

நிலையுயர் பிறங்கல் மலையிறந் தோரே

(அகம், 185)

இது முருகனுடன் தொடர்புடைய விழாவாக இருப்பது போலவே குறிஞ்சி நிலமலைகளுடனும் தொடர்புடைய விழாவாகத் திகழ்ந்தது என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள. திருவண்ணாமலைக் கார்த்திகைதீபம் இன்று ஓங்கிய சிறப்புடையது. முத்தொள்ளாயிரத்தில் ஆபுகு மாலை அணி மலையில் தீயேபோல் என்று சொக்கப்பனை கொளுத்தப் படும் சிறப்புச் சுட்டப்படும். குன்றின் மேலிட்ட விளக்கு என்ற பழமொழி இவ்விழாவினின்றும் பிறந்ததேயாகும். சமண சமயக் காப்பியமாகிய சீவக சிந்தாமணியிலும் இக் குன்றின் மேல் வைக்கும் திருக்கார்த்திகை விளக்கு உவமை யாகக் கூறப்படுகிறது.

தார்ப்பொலி தருமதத்தன் தக்கவாறுரைப்பக் குன்றில்

கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளைப் பைந்தார்....

கோங்கம்பூ, இலவம்பூக்களுடன் செங்குவளைப் பூக் களும் கார்த்திகை விளக்கு வரிசையுடன் பொருத்திப் பார்க் கப்படுகின்றன. களவழி நாற்பதிலும், கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றனவே என இவ்விளக்குவமை உளது (சாறு-விழா).

கொண்டாடும் கால ஒற்றுமை

திருக்கார்த்திகை, தீபாவளி இரண்டும் பெயரொற்றுமை வேறு சில ஒற்றுமைகளினாலேயே ஒன்றாகிவிடுமா?

தீபாவளி அய்ப்பசி மாத அமாவாசையை ஒட்டியும், திருக்கார்த்திகை அதைத் தொடர்ந்துவரும் கார்த்திகை மாதப் பவுர்ணமியை ஒட்டியும் கொண்டாடப்படுகின்றன.

தீபாவளியும் திருக்கார்த்திகையும் 1974, 1975 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் எவ்வெத் தேதிகளில் கொண்டா டப்பட்டன?

தீபாவளி 1974  13-11-74  ஆனந்த,    உவாநாள்

அய்ப்பசி  27  ஒட்டியது

திருக்கார்த்திகை  1974  28-11-74   ஆனந்த,  நிறைமதி நாள்

கார்த்திகை  13   ஒட்டியது

தீபாவளி  1975 2-11-75  இராட்சச,  உவாநாள்

அய்ப்பசி 16 ஒட்டியது

திருக்கார்த்திகை 1975 19-11-75  இராட்சச,  நிறைமதி

கார்த்திகை  13  ஒட்டியது

இரண்டு விழாக்களுக்கும் இடைவெளி பதினைந்து, பதினாறு நாட்களேயாதல் காண்க.

1984இல் 23-10-84-ரக்தாட்சி, அய்ப்பசி 7-உவாநாளை ஒட்டித் தீபாவளி கொண்டாடப்பட்டது. அடுத்த நிறைமதி அதே அய்ப்பசியில் வந்துவிட்டதால் திருக்கார்த்திகை 6-12-84 ரக்தாட்சி, கார்த்திகை 21இல் நிறைமதி நாளை ஒட்டிக் கொண்டாடப்பட்டது. அதனால் இடைவெளி ஒரு மாதமாகி விட்டது. மீண்டும் 1985இல் இவ்விரு விழாக்களும் கொண் டாடப்படப் போகின்ற நாட்கள் காண்க :

தீபாவளி 1985, 11-11-85 குரோத, அய்ப்பசி 26 உவாநாளை ஒட்டி

திருக்கார்த்திகை 1985, 26-11-85 குரோத, கார்த்திகை 11 நிறைமதியை ஒட்டி

இடைவெளி பதினைந்து நாட்களேயாதல் அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு முறையும் அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியும், தொடர்ந்து வரும் திருக்கார்த்திகைப் பவுர்ணமியில் திருக்கார்த்திகையும் ஏறத்தாழப் பதினைந்து, இருபது நாட்களுக்குள் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதல் உவாநாள், அடுத்த நிறைமதியை ஒட்டி இவை வருவதால், இவைகளிடை ஒற்றுமை ஏதும் இருக்குமோ என்ற அய்யம் எழுகிறது.

தமிழர்களின் மாதக்கணக்கு

தமிழர்கள் முழுமதியை வைத்தே மாதங்களைக் கணக் கிட்டனர். ஒவ்வொரு முழுமதியும் ஒருமாத நடுவாகக் கருதப்பட்டது. அற்றைத் திங்கள் என்றும், தொல்லைத் திங்கள் என்றும் கடந்த மாதம் குறிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையைக் கண்டதும் புதிய மாதம் பிறந்தமையையும் நாள் வளர்ச்சியையும் எண்ணத் தலைப் பட்டனர். எண்ணாள் பக்கத்துப் பிறை எனும்போது எட்டா வது வளர்பிறை நாள் குறிக்கப்பட்டது. இத்தகைய முறையில் மதியானது நட்சத்திரங்களைச் சாரும் முறையை வைத்து நாட்கள் குறிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில், வடநாட்டில் கங்கைக்கரையிலிருந்த காலத்தில், சேரன் செங்குட்டுன் ஒருமுறை வானத்தை நோக்கியபோது, அருகிலிருந்து கணிவஞ்சி நீங்கி எண்ணான்கு திங்கள் ஆயின என்றான். 32 மாதங்கள் கழிந்தமை அன்று அவ்வாறு உணர்த்தப்பட்டது.

கார்த்திகைக்கு முதலிடம்

இரண்டாம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) வராகமிகிரர் என்ற வானநூல் அறிஞர் தோன்றி இந்திய நாட்டுக் காலக் கணிப்பில் குறிப்பிடத்தக்க சில மாறுதல்களைச் செய்தார் என்பர்.

அதற்கு முன்பு 27 நட்சத்திரங்களையும் கொண்டு, கார்த் திகை முதலாக எண்ணுகிற பழக்கம் இருந்தது. மணிமேகலை யில்,

இருதிள வேனில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்

மீனத்து இடைநிலை மீனத்து அகவ யின்

போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்

(11:40-44)

என்று புத்தர் தோன்றிய வைகாசி விசாக நட்சத்திரம் கூறப்படுகிறது. புத்தர் வடநாட்டில் பிறந்தார், அவர் பற்றிய கதையும் அங்கிருந்து பெறப்பட்டதே. இதில் இருந்து இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்கள் அடங்கியது. இரு மாதங்கள் கொண்டது. இருது இருழூஇருது ழூருது. வடமொழியில் இது ருதுவென வழங்கும். இரண்டு-ரெண்டு ஆவதுபோல் இருது ருதுவாகியிருக்க வேண்டும். தமிழர் ஆண்டுக் கணக்கு மேட-இராசியில் தொடங்கிய தாதல் வேண்டும். மேடம் என்பது யாடு, ஆடு என்றெல்லாம் தமிழில் கூறப்படும். அதிலிருந்துதான் யாண்டு, ஆண்டு என்பன மூக்கொலி பெற்றுப் பிறந்தன என்பர். பன்னீராட் டைப் பருவத்தாள், ஏழரையாட்டைச் சனி என்ற வழக்காறு களும் காணலாம். வருடை என்பதும் மலையாடு என்றே பொருள்படுமென்றும் அதிலிருந்து பிறந்ததுதான் வருடம் என்றும் டாக்டர் தே.ஆண்டியப்பன் கருதுவார். மேற்கண்ட மணிமேகலை அடிகளில் எரிகதிர் இடபம் என்பது சூரியன் வந்து நின்ற இடபராசி. அது வைகாசி மாதத்தைச் சுட்டும். 27நட்சத்திரங்களில் முன் பதின்மூன்றுக்கும் பின் பதின்மூன் றுக்கும் இடைப்பட்டது விசாகம் என்பது அடுத்த இரண்டடி கட்கும் தரப்பட்டுள்ள பொருள். கார்த்திகை முதலாக எண்ணினால்தான் பதினான்காவதாக விசாகம் வரும். இன்றைய வராகமிகிரர் முறை அசுவனி முதலாக எண்ணு கிறது. அதன்படி, எண்ணினால் பதினாறாவதாகத்தான் விசாகம் வரும். எனவே, மணிமேகலை குறிப்பிடும் முறை வராகமிகிரருக்கு முற்பட்டது என்பது போதரும்.

தமிழர்களும் முன்பு கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதத்தை எண்ணினார்களோ என்ற அய்யத்தைக் கார் நாற்பது ஏற்படுத்துகிறது. அதில் கண்ணங்கூத்தனார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட

தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி

தூ தொடு வந்த மொழி

இதில் தோன்றிப் பூக்கள் எங்கும் பூத்துக் காட்சியளிப்ப தற்குக் கார்த்திகை விளக்குகள் உவமை கூறப்பட்டுள்ளன. மேலும், கார்த்திகை நாள் இதன்கண் தலைநாள் எனக் குறிக்கப்பட்டிருத்தலால் அதுவே மாதத் தொடக்க நாளாக இருந்தது போலும் என்பர்.

இன்று ஞாயிறு முதலாக வாரத்திற்கு ஏழுநாளாக எண்ணுகிறோம். முன்பு வாரக்கணக்கு இன்றி, மாதத்திற்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27நாட்கள் எனக் கொண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டது என்பர் திரு. ந.ரா. முருகவேள். இன்று திங்கள், செவ்வாய் என்று நாட்பெயர் களைக் குறிப்பிடுவதுபோல முன்பு மகம், ஆதிரை, கார்த் திகை என்று நாட்களைக் குறிப்பிட்டனர். தமிழில் நாள் என்பதே நட்சத்திரத்தைக் குறிக்கும். நம் உரையாசிரியர்கள் மகத்திற்கொண்டான். ஆதிரையில் வந்தான், கார்த்திகையில் பெற்றான் என்பது போலக் காட்டும் எடுத்துக்காட்டுகளால் இதை உணரலாம் என்பர் டாக்டர் இரா. சாரங்கபாணி. கார்த்திகை நட்சத்திரம் மாதத் தொடக்க நாளாக இருந்ததுபோலக் கார்த்திகை மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்ததும் உண்டு.

வராகமிகிரரின் புதிய கணக்கு

இவ்வாறு நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கப்படுகிற சூரிய மாத முறை மாற்றி, வராகமிகிரர் சாந்திரமாத முறை யைப் புகுத்தினார். அவர் சந்திரனை மய்யமாக்கிக் கொண்டு வளர்பிறை, தேய்பிறைத் திதிகளை ஆதாரமாக்கி மாதக் கணக்கை வகுத்தார். அவர் கணக்கிற்கும் பழைய கணக்கிற் கும் ஒப்பிட்டபோது பழைய கணக்கில் 15 நாட்கள் கூடுத லாவது புலனாகிறது. எனவே, அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டு அவர் கணக்கிட்டதால், அவருடைய மாத முறை 15 நாட்கள் முன்னே போய்விட்டன. வடநாட்டில் வராகமிகிரர் முறையே பின்பற்றப்படுகிறது. திரு. எல்.டி. சுவாமிக்கண்ணு இவ்வாறு பதினைந்து நாட்கள் ஏன் தள்ளப்பட்டன என்ற காரணத்தை விளக்கியுள்ளார் சாந்திர மாதமுறைக்குத் திதி அடிப்படை. திதியும், நாளும் 64 என்ற எல்லையில் சிறிது வேறுபட்டன. திதி 64 கொண்டதற்கு நாளும் 64 என அமையாமல் சிறிது குறைந்து 63.001412384 மட்டுமே வருவதால், இவ்வாறு ஏற்படும் குறைவு, பலநூறு ஆண்டுகள் கழித்து நோக்கினால், 15 நாட்கள் குறையு மென்றே, வராகமிகிரர் அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டார். வராகமிகிரருக்குப் பிறகு வடநாட்டில் சாலி வாகன சகாப்தம் என்ற புதியமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி நமக்கு ஆனந்த ஆண்டு (1974- 75) நடந்தபோது, அங்கு சகஆண்டு 1896 நடைபெற்றது; இப்போது நமக்கு ரக்தாட்சி ஆண்டு (1984-85) நடக்கும்போது, அங்கு சாலி வாகன ஆண்டு அல்லது சகஆண்டு 1906 நடக்கின்றது. இதுபோலவே மாதக்கணக்கிலும் நமக்கும் வடநாட்டவர் கட்கும் சுமார் 15 நாட்கள் வரை இடைவெளியுளது. அஃதா வது வடநாட்டில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது நாட்கள் முன்னதாகவே பிறந்து விடுகிறது.

மாதங்கள் மாறியமை

1974-1975 பிரமாதீச, ஆனந்த ஆண்டுகளில்

நமக்கு மார்கழி 7 நடக்கும்போது அங்கு புஷ்யம் (தை) என்ற அடுத்த மாதம் பிறந்து விட்டது. நமக்குப் பங்குனி 9 நடக்கும்போது அங்கு சைத்திரம் (சித்திரை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

நமக்கு அய்ப்பசி 6 நடக்கும்போது அங்கு கார்த்தீகம் (கார்த்திகை) என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

1984-ராட்சச ஆண்டு

நமக்கு அய்ப்பசி 7 நடக்கும் போது அங்கு கார்த்தீகம் என்ற அடுத்த மாதம் பிறந்துவிட்டது.

இவற்றிலிருந்து ஏறத்தாழ 22 அல்லது 23 நாட்கள் முன்னதாக அவர்களுக்கு மறுமாதம் பிறந்து விடுவது புலனாகிறது.

ஒருகணம் இப்போது சிந்தியுங்கள். நாம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் திருக்கார்த்திகையைத்தான் அவர் கள் இரண்டு, மூன்று வாரம் முன்னதாகத் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள்.

1984இல் அல்லது ராட்சச ஆண்டில் இங்கு அய்ப்பசி 7இல் (23-11-84) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார் கள். வடக்கேயும் அதே நாளில்தான் கொண்டாடினார்கள்.

ஆனால், அவர்கள் அவர்களுக்குரிய கார்த்தீகம் மாதத் தில் முதல்நாள் தீபாவளியைக் கொண்டாடினார்கள். 1985இல் அல்லது குரோத ஆண்டில் இங்கு அய்ப்பசி 26இல் (11-11-85) தீபாவளியைக் கொண்டாடும்போது, வடக்கேயும் கார்த்தீகம் 20ஆம் நாள் அதாவது அதே நாளில் - தீபாவளி யைக் கொண்டாடுவர்.

முடிவுகள் :

இவற்றிலிருந்து பல அடிப்படை உண்மைகள் புலனா கின்றன :

1. நாம் நம் கணக்குப்படி கார்த்திகை மாதத்தில் தான் (பவுர்ணமியை ஒட்டி) திருக்கார்த்திகையாகிய விளக்கீடு விழாவைக் கொண்டாடுகிறோம்.

2. வடக்கே அவர்களும் அவர்கள் கணக்குப்படி கார்த்தீகம் என்ற கார்த்திகை மாதத்தில்தான் (அமாவா சையை ஒட்டி) தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அஃ தாவது அவர்களுக்கும் இது திருக்கார்த்திகையே - விளக்கீட்டு விழாவேயாகும். கார்த்தீக மாதத்தில் கொண் டாடுவதை நினைவு கொள்க.

3.  இங்கு முழுநிலவு நாளை ஒட்டியும் அங்கு உவா நாளை ஒட்டியும் கொண்டாடப்படும் வேறுபாடு கருதத் தக்கது.

4. நாம் நம்முடைய திருக்கார்த்திகையையும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கொண்டாடி வருவ துடன், அவர்களைப் பின்பற்றி அவர்கள் கொண்டாடும் தீபாவளியையும் வேறெனக் கருதிப் பிற்காலந்தொட்டுக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். இதனால் பண்டிகை நமக்கு இரண்டாகிவிட்டது.

5. இதனால் நாம் ஒன்றைப் புத்தாடை பூண்டு, வெடி வைத்து, இனிப்புண்டு மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற் குரிய ஒன்றாகவும், மற்றதை விளக்கு வைத்துக் கொண்டா டும் விழாவாகவும் வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். முன் னதற்கு நரகாசுரன் கதையைக் கூறி திருமாலை வழிபடும் விழாவாகவும், பின்னதற்கு முருகன் கதையைக் கூறி அவனது பெருமையைப் போற்றி வழிபடும் விழாவாகவும் பின்னணி கூறியும் இவற்றை வேறுபடுத்த முயன் றிருக்கிறோம்.

6. முருகனுக்குரியது கார்த்திகை நட்சத்திரம். வடநாட் டவர்கள் கார்த்திகை மாதத்திலேயே இதைக் கொண் டாடுவதால், என்னதான் நரகாசுரன் கதையைக் கூறினாலும் அவர்களுக்கும் தொன்மை மிக்க காலத்தில் முருகன் தொடர்பாலேயே இவ்விழா தோன்றியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலை. மேலும் கார்த்திகை மாதத்தின் திருக்கார்த்திகை நாளை மாதத் தொடக்கமாகவும் ஆண்டுத் தொடக்கமாகவும் கருதிய காலம் ஒன்றுண்டு என்பதைக் கார் நாற்பதால் முன்பு கண்டோம். வடநாட்டவர் தீபாவ ளியை ஆண்டுப் பிறப்புப்போல் கொண்டாடி, கடைகளுக் குப் புதுக்கணக்கு எழுதி வருவதை அறிவோம். சித்திரை முதல்நாள் புதுக்கணக்கு எழுதும் தென்னாட்டு மரபை ஒத்தது இதுவாகும்.

7.  தெற்கே அய்ப்பசி அமாவாசையை ஒட்டித் தீபாவளியைக் கொண்டாடினாலும் தீபாவளிக்கு மறுநாள் அமாவாசைக்குப் பிறகு, முருகனுக்குரிய சஷ்டி விரதம் தொடங்கி விடுகிறது. இக்கடும் விரதம் ஆறாம் நாள் முடிகிறது. அய்ந்தாம் நாள் முருகன் கோயில்கள் அனைத் திலும் சூரசம்மாரம் திருவிழா நடக்கிறது. முருகன் சூரனை வென்றதைக் கொண்டாடும் மக்கள்-நோன்பிருந்து விரதம் செலுத்தும் இக்கந்தர் சஷ்டி விழா, தீபாவளியைத் தொடர்ந்து வருவதால் தீபாவளிக்கும் முருகனுக்கும்கூடத் தொடர்புண் மையைச் சிந்திக்க வேண்டும். திருக்கார்த்திகை முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) என்பர். சேர நாட்டில் மன்னர் களுக்கு அவர்கள் - பிறந்த நாளின் பெயரே பெயராதலும் சுவாதித் திருநாள், மூலந்திருநாள் என அழைக்கப்படுதலும் அப்பிறந்த நாட்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட மையும் கருதத்தக்கன. இவ்வகையில் முருகனின் பிறந்தநாள் விழாவாகவும் வெற்றி விழாவாகவும் இத்திருநாட்கள் கொண்டாடப்பட்டுப் பலநூறு ஆண்டுகளாக மாறியும் வேறுபட்டும் அடிப்படையில் ஒற்றுமைப்பட்டும் விளங்கி வருகின்றன.

8. முருகனின் பிறந்தநாள் (நட்சத்திரம்) ஆறு புள்ளியிட்ட கோலம்போல் அழகுற விளங்கும். அது விளக்கு வரிசைபோல் இருப்பதால், விளக்கு வரிசைகளை வைத்து வழிபடும் மரபு தோன்றியிருக்க வேண்டும். வடநாட்டவரும் விளக்கு வரிசையை வைத்தே வழிபடுவது, இதன் தொன்மை அடிப்படை முருக வழிபாடே என்பதை நிலை நிறுத்தும்.

9. கார்த்திகைத் தீபத்தன்று அல்லது அடுத்தநாள் சகல விஷ்ணுதலங்களிலும் கார்த்திகைத்தீபம் என்ற குறிப்பைப் பஞ்சாங்கம், நாட்காட்டிகளில் காணலாம். அதற்க டுத்த நாள் சிவாலயதீபம் எனவும் சுட்டப்படுகிறது. திருக் கார்த்திகை விழாவைத் திருமால் வழிபாட்டுடன் இணைத்து, நரகாசுரன் கதையைக் கொண்டுவந்ததற்கும் ஏதேனும் ஓர் அடிப்படை இருந்திருக்க வேண்டும். முல்லைக்குத் தெய்வம் மாயோன்; குறிஞ்சிக்குத் தெய்வம் சேயோன் முல்லையும் குறிஞ்சியும் ஒன்றையடுத்தொன்றாக அமைந்த நிலங்கள். இதனால் இவ்விரு வழிபாடுகளும் இணைய நேர்ந்த இடங்கள் பலவாகும். பரிபாடலிலும் இவ்விரு தெய்வங்கட்கே மிகுதியான பாடல்கள் காணப்படுகின்றன.

10. இவ்விழாவின் தோற்றம் வளர்ச்சியை உற்று நோக்கும்பொழுது, முதலில் தமிழ் மயப்படுத்துதல், திராவிட மயமாக்குதல்தான் நடந்துளது; பிறகுதான் சமற்கிருதமயமாக் கப்படுதல் நிகழ்ந்துளது. அங்ஙனம் சமற்கிருதமயமாக்கி னாலும் முன்னைய திராவிட மரபுகளை முற்றிலுமாக மறைக்க முடியவில்லை. இங்ஙனமிருக்கவும் உலக ஆய்வு கள் பலவும் மேற்பரப்பைக்கண்டு முடிவுகூறும் ஆய்வு களாகவே விளங்கி வருகின்றன.

இந்திய நாடு முழுமையும் சென்று, பல்வேறு மொழி களைப் பேசும் பல்வேறு மாநிலங்களிலும் ஊடுருவி ஆராய்ந்தால் இந்த ஒரு விழாவைப்பற்றி மேலும் பல உண்மைகள், தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கும் மெய்ம்மைகள்போல் கிடைக்கப்பெறும். சமற்கிருத மயமாக் கப்பட்டமை என்பது உள்ளீட்டிலன்று என்ற உண்மையும் உறுதிப்படும்.

- விடுதலை நாளேடு 31 10 19

வெள்ளி, 1 நவம்பர், 2019

தமிழர் திருவிழாக்கள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை திருக்கார்த்திகையும் தீபாவளியும்- 21

தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியகருப்பன் (தமிழியல்துறைத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக் கழகம்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்

(Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழண்ணல் டாக்டர் இராம.பெரியகருப்பன் உரை வருமாறு:

வெளிவண்ணம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியநாடு முழு மையும் பரவியிருந்த பண்பாடு, நெருங்கிய ஒற்றுமையு டையதாகும். பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படை யான அஃது, இன்னும் முழுமையாகக் கண்டறியப்பட்டிலது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகள் வீழ்ந்து கிடக்குமாயின் அடியிலுள்ளது அறியப்படாது. மேற்பரப்பே பலராலும் அறியப்பட்டுப் பேசப்படுமாறு போன்று நிலைமை உளது. அவ்வடிப்படை நாகரிகம் திராவிட நாகரிகமே என்ப தற்கு எட்டுணையும் அய்யமின்று. சமயம், மெய்ப்பொருள், சடங்குகள், மருத்துவம், நுண்கலை, இலக்கியம் போன்ற ஒவ்வொன்றிலும் சமற்கிருதப்படுத்துதல் (ஷிணீஸீsளீக்ஷீவீtவீக்ஷ்ணீtவீஷீஸீ) என்பது, மேற்பரப்பில் காணப்படும் மாற்றமேயாகும். பிறிதொரு வகையாகக் கூறினால் இவை பேரளவில் மட்டும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எனலாம். பேரளவில் என்பது மிகுதியையும் சுட்டும்; பேர் அளவில் என்று, பெயரளவில், கலைச் சொற்களின் அளவில், பெயர் மாற்றங்களின் அளவில், அவ்வத்துறை சார்ந்த நூல்களை ஆக்கிப் படைத்துக் கொண்ட அளவில் நிகழ்ந்தவற்றையும் சுட்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமயம், நுண்கலைகள், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலதன அடிப்படையின; அவை சமற்கிருத மொழியில் விளக்கப்பட்டுள்ளன-பெயர்த்தெழுதப் பட்டுள்ளன-பாதுகாக்கப்பட்டுள்ளன. அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடா. இன்று ஆங்கிலம் போலச் சமற்கிருதம் ஆள்பவரின் மொழியாகவும் அதனால் பொதுமொழி நிலையிலும் செயற்பட்ட கால கட்டங்கள் பலவாகும். எனவே, பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் முதல் தீபாவளித் திருநாள்வரை எந்த ஒரு விளைவுக்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழடிப் படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது வண்ணத்தைக் காட்டுகின்றன.

பெரும்பாலானவற்றில் திராவிட உள்மூலமும் சமற்கிருத வெளிவண்ணமும் உள. ஒரு சொல் முதல் பெரும் புராணங்கள் வரை, சமுதாயக் கலைத்துறைகள் அனைத் திலும் இவ்விருசார்புமிருப்பதால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்பிலே நின்று, தாம் கண்டதே காட்சி என வீண் வம்பில் காலந்தள்ள இடமேற்படுகிறது.

அறிவாளர் மனநிலை

நம் நாட்டில் கலைஞர்கள், கற்றறிந்தவர்கள், சமய வாதிகள், மருத்துவர்கள் எல்லோரும் தத்தமது கலை, கல்வி, சமய, மருத்துவ நுட்பங்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்துத் தமக்கும் தமக்கு வேண்டியவர்க்கும் மட்டும் உரிய மறைபொருளாக்கி-முதலீடாக்கிக் கொண்டு தமது வாழ்வினை உயர்த்திக் கொள்ளும் மனப்போக்கினராயிருந்தனர். அதற்காகத் தத்தமது அறிவுடைமைகளைப் பிறர் அறியா வண்ணம் முற்றிலும் மறைத்துக் காத்து, வேண்டும்போது மட்டும் வெளிப்படுத்திக் காசாக்கி வாழ்ந்து போயினர். இதனால் பற்பல நுட்பத் திறன்கள், அவ்வத்திற னுடையார் மறைந்தபோது, தாமும் மறைபொருளாயிருந்தே மறைந்தொழிந்தன. இத்தனியுடைமை மனப்போக்கிற்கு முன்பு சமற்கிருதம் கைகொடுத்தது; இப்போது ஆங்கிலம் உதவி செய்கிறது. அம்மொழிகளில் கலைச்சொற்கண்டு, எழுதி வைத்துப் பிறரறியாமல் மறைத்து அல்லது பேணிக் காத்து, வேண்டும்போது வெளியிடுவது, ஒருவர் தாம் திறனுடையவர் எனக் காட்டிக்கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. இதனாலும் இவை அறிவுடையோர் மொழிகளாக-கலைஞர்களின் கருவியாக-திறனுடையார் ஊடகமாக இந்நாட்டில் விளங்கின. இதனால் இவை அறிவுமொழி போலவும் தமிழ் அனைய தாய்மொழிகள் சாதாரணமாக-அன்றாட வாழ்வுக்கு மட்டும் பயன்படும் மொழிகள் போலவும் மொழிச்சாதிகள் உருவாயின. இதனை ஆரியச் சூழ்ச்சி என்பதை விட, அறிவுடையோர் அனைவரின் சூழ்ச்சி என்றால் மிகையாகாது.

கலை இங்கே; விளக்கம் அங்கே

பலவற்றில் நோக்குங்கால் வடிவம் தமிழாக இருக்கும்; வண்ணப்பூச்சு வடமொழியாக இருக்கும். அடித்தளம் திராவிடமாயிருக்கும்; மேற்பரப்பு வடமொழியாக இருக்கும் மேற்பூச்சைக் கண்டதும் எல்லாம் வடமொழியிலிருந்து வந்தன என்று தோன்றும்; மேற்பரப்பைப் பார்த்ததும் சர்வம் சமற்கிருதமயம் என்று கூறவே மனம் முந்தும். பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளுங்கள் தென்னாட்டில் தென்திசை நோக்கி வரவர அக்கலை வளர்ந்த வரலாறும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய உண்மைகள் புலனாகும். தமிழகக் கோயிற் சிற்பங்களில் நூற்று எட்டுக் காரணங்கள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தமிழகத்தே இதற் கெனத் தனி வகுப்பார் இருந்தமை, பொட்டுக் கட்டும் வழக்க மிருந்த அண்மைக்காலம் வரை நாடறிந்த செய்தியாகும். இந் நாட்டியம் எனப்படும் சதுர் தென்னாட்டுக் கலையாகும். தமிழர் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் நாட்டுப்புறவியல் ஆடல் வகைகளில் ஒன்றே அது. சதுர் ஆடுவதற்கென்றே ஒரு விரிப்புண்டு. அதைச் சதுர்ச்சமுக்காளம் என்பது ஒரு வட்டார வழக்கு. முன்பு சதுர் வைக்காமல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதே இல்லை. இறைவனையே ஆடற் கலை வல்லானாகக் கண்ட இக்கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுக்களிலும் சிற்பங்களிலும் குவிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பற்றி அய்ந்து, அறிந்து தொகுத்து, வகுத்துக் காட்டிக் காப்பார் இன்றைக்கு வரை எவருமிலர். ஆயின் இவற்றைக் காத்தருளிய பரதமுனிவர் காலத்திலேயே தமிழ் மூலங்கள் வடமொழிக் காப்புப் பெற்ற முயற்சிகள் தோன்றிவிட்டன. இதனால் அக்கலை வடமொழியிலிருந்து வந்தது என்றோ, வடவர்க்கு உரியது என்றோ விவாதிப்பது அறிவுடைமையாகாது. விந்தியத்திற்கு வடக்கே இக்கலை கால் கொண்டிருந்ததில்லை. காசுமீரத்திலிருந்து பரதர் இதை எழுதினாரெனில், அவர் எழுதிய வரலாறுதான் ஆராயப்பட வேண்டுமே தவிர, அக்கலை பல நூற்றாண்டுகளாக விளங்கி வருமிடத்திற்கு உரிமையு டையதாகாது என எழுதிவிடுதல் கூடாது. சங்க அக இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் ஆய்வேடுகள் பல தோன்றியுள்ளன. சில நூற்றாண்டுகட்குப் பிறகு இவ்வாங்கில ஏடுகளில் புகழ்பெற்ற ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருவர் அகத்திணை மரபு தமிழர் அய்ரோப்பியரிடமிருந்து கடன் பெற்றது என விவாதித்தால் எவ்வாறிருக்குமோ அவ்வாறே இதுவும் உளது. கலை ஓரிடத்தில் காலூன்றியிருக்க, அதற்கு விளக்கம் பிறிதொரு மொழியில் இருக்கு மானால், அவற்றிடையே ஏற்பட்ட உறவிற்குரிய காரணத்தை உண்மை காணும் மனப்போக்குடன் ஆராயவேண்டும். இதனை அறியாமல் ஒருவர் பரதக்கலை தமிழர்களுடை யதன்று என்று ஆய்வுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்றுவிட்டால், அதைக்கண்டு நோவது மட்டும் போதாது. எவரேனும் ஒருவர் தம் வாழ்நாளையே இதற்கென ஒப்படைத்து இக்கலையைக் கற்றும், இதனைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் தென்னாடு, வடநாடு எங்கும் அலைந்து தொகுத்தும் கல்வெட்டு, சிற்பம், சமூகம் அனைத் தையும் ஊடுருவி ஆராய்ந்தும் உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். இன்றைய டாக்டர் பட்டங்கள் நமக்கு உரிமங்களாக உதவுகின்றன. அது போதாது. பரதக் கலை எங்களுடையதே என உணர்ச்சிவயப்பட்டு வானதிர முழங்கினாலும் போதாது. தமிழுக்கு உயிரைக் கொடுப்பது என்றால் என்ன? இத்தகைய அடிப்படை ஆய்வுகட்கு வாழ்நாட்களையே துறக்கவும் துணியவேண்டும்.

கருதுகோள் யாது ?

தமிழ் வடிவங்கள் பல வடமொழி வண்ணப் புறப்பூச்சைப் பெற்றுள்ளன; தமிழ் மூலங்கள் பல வடமொழியில் வளர்ச்சி பெற்றுள்ளன என மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் காட்டலாம். இக்கருதுகோளை  (Hypothesis) நிறு விடும் அளவு சான்றுகள் இருப்பதால் நாம் உணர்ச்சி வயப்படத் தேவையில்லை. நமக்கு வடமொழியுடன் பகை இல்லை. எல்லாம் வடமொழியே; தமிழில் ஒன்றுமில்லை என்பார் நெஞ்சிற் போய் உறைக்குமளவு நாம் ஆய்வுரைகளை எழுதிக் குவிக்க வேண்டும்; ஆரவார உரைகளால் இனிப் பயனில்லை. உண்மையை இருசாராரும் ஒப்பும் வண்ணம் நம் ஆய்வுகள் காரண காரியத்துடன் அமைய வேண்டும்.

இந்தியப் பொதுப் பண்பாட்டிற்கும் தமிழ்ப் பண் பாட்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவரும் திருக்கார்த்திகை, தீபாவலி (தீப+ஆவலி - விளக்கு வரிசை) என்ற இருபெரு விழாக்களுக் குமிடையே உள்ள ஒற்றுமை இதை மெய்ப்பிக்கும். இவ்விரண்டு விழாக்களும் ஒரு காலத்தில் ஒரே விழாவாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்தன என முடிவு கூறுதற்குத் தக்க சான்றுகள் உள்ளன.

விழாக்களின் அடிப்படை என்ன ?

இந்தியநாடு முழுவதும் தீபாவலி கொண்டாடப்படுகிறது. நாம் அதைத் தீபாவளி எனத் தவறாக ஒலிக்கின்றோம். இது வடநாட்டவர்-ஆரியரால் நம்மிடம் புகுத்தப்பட்ட விழா என்றும், நரகாசுரனைத் திருமால் கொன்று உலகைக் காத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதென்றும் கருதப்படுகிறது. இதில் புத்தாடை பூண்டு, மத்தாப்பூக் கொளுத்தி வெடி வெடித்து, இனிப்புண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. வடநாட்டவர்கள் இதனைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கருது கின்றனர். வடநாட்டுத் தொழிலதிபர்கள் தீபாவளி பிறந்ததும் புதுக்கணக்கு எழுதுகின்றனர்.

நாம் இன்று சித்திரை வருடப்பிறப்பில் புதுக்கணக்கு எழுதுவது போன்றது இது. வடநாட்டவர்க்கே உரிய விழாவெனில் தென்னகமெங்கும்-தமிழக முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் இவ்விழா கொண்டாடப்படுவதேன்? ஒரு சமூகத்தின் பண்பாடு-சமயம்-உளவியல் இவற்றோடு தொடர்புடையன திரு விழாக்கள். ஒரு சமூகத்தின் மேல் ஒரு திருவிழாவை எளிதில் நுழைத்துவிட முடியாது. அங்கேயே நடைபெறும் விழாவைப் புறத்தாக்குரவால் சிறிது மாற்றியமைக்கலாம்.

அடிப்படையான சமய மாற்றத்தால் ஒருவர் புதிய விழாக்களை மேற்கொள்ளலாம். சமுதாயம் முழுவதும் கொண்டாடும் விழாவெனில், அது புறத்தேயிருந்து நுழைக்கப்பட்டதா என்பதைச் சற்றே தயங்கி ஆராய்ந்த பிறகுதான் சொல்ல வேண்டும்.

நவராத்திரி விழாவைத் திருமலை நாயக்கர் தமிழகத்தில் புகுத்தினார் எனக் கூறப்படுகிறது. அது முழு உண்மையன்று, முன்பு தொன்றுதொட்டு வழங்கி வந்த விழாவில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற உண்மையை இவ்வாய்வாளர் பிறிதொரு கட்டுரையில் விளக்கியுள்ளார். பிறந்தநாள் விழாக் கொண்டாடும் மரபு மிகப் பழமையானது தமிழர்களுக்கு. புறத்திணையில் ஒரு துறையாகக் குறிக்கப் பட்டு பல பாடல்களால் அறியவரும் அதனை, ஒருவர் மேனாட்டார் பிறந்தநாளைக் கொண்டாடும் மரபின் தாக் குரவால் இது வந்ததென எழுதிவிடுவாராயின் அது முழு உண்மையாகி விடுமா? பிறந்த நாளில் கேக்கு வெட்டுவது வேண்டுமானால் நாம் பிறரிடமிருந்து கற்றதாக இருக்கலாம்.

ஒன்று இரண்டானது

திருக்கார்த்திகை விழாதான் தீபாவலி விழாவென்று ஆயிற்று. தீப+ஆவலி என்றால் விளக்கு வரிசை என்றுதான் பொருள். இரண்டும் இந்திய நாடு முழுவதும் ஒரே பண்பாடாயிருந்த தொன்மை மிக்க காலத்தில் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்பு பல்வேறு காரணங் களால் இரண்டு விழாக்களாகப் பிரிந்தன. இவற்றுள் தீபா வலியை மட்டும் வடவர் கொண்டாட, தீபாவலி, திருக் கார்த்திகை இரண்டையும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்; இந்த உண்மையை உணர்த்துவதே இங்குக் கருத்தாகும்.

தொன்மை மிக்கது திருக்கார்த்திகை

தென்னாடு முழுவதும், சிறப்பாகத் தமிழகத்திலும் கேரளத்திலும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருமயிலைத் திருப்பதிகத்தில்,

வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மறுகில்

துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்

தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்

என்று குறிப்பிடுகிறார். இதில் விளக்கீடு என்பதே வடமொழியில் தீபாவளி எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இது தொல் கார்த்திகைத் திருநாள் எனப்படுமாயின், இது மிகப்பழங்காலந்தொட்டுக் கொண் டாடப்பட்டு வருவதென்பது தெள்ளிதிற் புலனாகும். இளம் பெண்களே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடும் விழாவென்ற குறிப்பும் உணரத்தக்கது.  இது மிகத் தொன்மையான விழா என்பதையும் இதில் விளக்குவரிசையே தீப ஆவலியே-இன்றியமையாச் சிறப்பு என்பதையும் சங்கப் பாடல்களி லேயே அறியலாம். அகநானூற்றில் அவ்வையார்,

இலையில மலர்ந்த முகையில் இலவம்

கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த

அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி

(அகம். 11)

என்று இலவம்பூ வரிசைக்குக் கார்த்திகை விளக்குகளை உவமையாக்குகிறார். ஆரவாரத்தோடு மகளிர் மிகமகிழ்ந்து நீண்ட வரிசைகளில் விளக்கேற்றுவதை இதிற் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோ கார்த்திகை நட்சத்திரத் திற்குரிய கார்த்திகை மாதத்தில் அழகிய நீண்ட விளக்கு வரிசைகளை வைப்பது போலக் கோங்கமலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கற்பனை செய்கிறார் :

அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்

செல்சுடர் நெடுங்கொடி போலப்

பல்பூங் கோங்கம் அணிந்த காடே

(நற். 202)

கார்த்திகை மாதம் அறஞ்செய் திங்கள் எனப்படுகிறது. அறுமீன்-கார்த்திகை நட்சத்திரம், செல்சுடர் நெடுங்கொடி, அஞ்சுடர் நெடுங்கொடி என்பன நீண்ட விளக்கு வரிசைகள் (கொடி - வரிசை) தீப ஆவலி இதன்மொழி பெயர்ப்பே என்பது வெள்ளிடைமலை. நக்கீரர் இவ்விழா முழுநிலவன்று - பவுர்ணமியில் கொண்டாடப்படும் என்ற கருத்தைத்

தருகிறார்.

- தொடரும்

- விடுதலை நாளேடு 29 10 19