செவ்வாய், 12 நவம்பர், 2019

சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம் - 23

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

ஒரு மொழியின் இலக்கணம் சமகாலத்திய இலக்கி யத்தின் அடிப்படையிலேயே தோன்றுவதாகும். தொல் காப்பியர் காலத்து இலக்கணம் அவர் காலத்து வழங்கிய இலக்கிய மொழியின் அடிப்படையிலே அமைந்தது. அது போலவேதான் நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கண நூல்களும். இக்கட்டுரையின் நோக்கம் வடமொழித் தாக்கம் தமிழிலக்கணத்தில் காலந்தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடும் என்று சிந்திப்ப தேயாகும். ஒரு சில இலக்கண நூல்களே, அவற்றுள்ளும் ஒரு சில இயல்புகளே இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றன.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தில் வடசொற்கள் ஓரளவு பயின்று வரப்பட்டன என்பதை அவர் கூறும் சொற்பாகுபாட்டில் "வடசொல்" (சூ. 401) என்ற பிரிவைக் கூறியதனின்றும் அச்சொற்களைத் தமிழில் எவ்வாறு ஆளவேண்டும் என்றும் (சூ. 402) அவர் சொல்லியதனின்றும் அறிகிறோம்.

"அ" "இ" முதலான ஒலிகளைக் குறிப்பதற்குப் பிராதிசாக்கியங்களில் அ என்ற விகுதியும் "காரம்" என்ற விகுதியும் சேர்க்கப்படுகின்றன. காரம் என்பது செய்யப்படுதல் என்று பொருள்படும். தைத்திரிய பிராதிசாக்கியம் (116, 21) இகரம் என்றால் இ என்ற ஒலியையும் "யகரம்" என்றால் "ய்" என்ற ஒலியையும் குறிக்கும். தொல்காப்பியர் ஞ ந ம வ இயையினும் உகர நிலையும் (எழு. 298) என்ற சூத்திரத்தில் "அ", "காரம்" என்று மேற்கூறப்பட்ட இரண்டையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

தொல்காப்பியர் காலத்தில் வேத நெறி நிற்போரும், சைனரும் பவுத்தரும் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் சமற்கிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற கராக்ருதத்தையும் அவர் அறிந்திருக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. தெய்வம், மாத்திரை, ஏது முதலான சொற்கள் இதற்குச் சான்று. ஆயினும் தொல்காப்பியர் தமிழ் மொழியின் சிறப்பியல்பைக் கருத்தில்கொண்டே சூத்திரங்களை இயற்றியிருக்கிறார் என்பதை மறுந்துவிடலாகாது. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் கூறியிருப்பதுபோல் தொல்காப்பியரின் பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு வடமொழி பிராதிசாக்கியங்களும் நிருக்தமும் கூறியுள்ள நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் என்ற நால்வகைப் பிரிவை ஒட்டியது என்பது ஏற்கத்தக்கதல்ல. இடையும் உரியும், உபசர்க்கமும் நிபாதமும் போல்வன அல்ல, இலக்கண நூலை யாக்கும் முறையில் தொல்காப்பியரும் வடமொழி இலக்கணக்காரர்களும் ஏறத்தாழ ஒரே நெறியைப் பொருத்தும் இடங்களில் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக வேற்றுமை இயலில் வேற்றுமை அமைப்பு முறையும் அதன் பொருள் விளக்கங்களும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய நிலையை புணர்ச்சி விதிகளில் காண இயலாது. புணர்ச்சியில் இரு மொழிகளும் வெவ்வேறு போக்குடை யவை, ஒலியின் இயல்பை உணர்த்தத் தொல்காப்பியர் ஒலிகளை உயிர், மெய் என்று பகுத்தார். அய்தரேய ஆரண்யகமும் (II-2-1) இப்படியே கூறுகிறது. இக்கருத்து ஒலி இயலாருக்குத் தனித்தனியே இயல்பாக எழக்கூடிய ஒன்று என்று கொள்ள வேண்டும்.

வீரசோழியம் : ஆசிரியர் புத்தமித்திரனார் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் என்பது இவர் நூலை ஆக்கியுள்ள பாங்கிலிருந்தே தெரிகிறது. இவர் வடமொழி மரபுகளையும் தழுவி தமிழிலக்கணத்தை ஆக்கி யிருக்கிறார் என்பதை அவரே தெளிவாகச் சொல்கிறார். வடநூல் மரபும் புகன்றுகொண்டே உரைப்பன்(3) சந்திப் படலம், காரகப்படலம், தாதுப்படலம், கிரியா பதப்படலம் போன்ற பாகுபாடுகள் வடமொழியில் காரகம் (வேற்றுமை), தாது (சொல்லின் வேர்ப்பகுதி) கிரியை (வினை) முதலிய வடமொழி மரபுச் சொற்களையொட்டி ஆளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தின் புணரியலும் மயங்கியலும் கூறியிருப்பனவற்றை வீர சோழியம் சந்திப்படலத்தில் அடக்குகிறது.

புணர்ச்சி நிலைகளைக் கூறும்போது வடமொழி இலக்கண குறியீடுகளான லோபம் (கெடுதல்) ஆகமம் (தோன்றல்) ஆதேசம் (ஒன்றினிடத்துப் பிறிதொன்று வருதல்) என்ற மூவகை விகாரங்கள் (மாற்றங்களை) குறிப்பிடப் படுகின்றன; குண சந்தியும் விருத்தி சந்தியும் வடமொழிக்கே உரியனவாயினும் அவையும் ஆரியத்துள் காணப்படுவன வாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு யாது காரணமாயிருக்கக் கூடும்?

தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் அருகி வழங்கிய வடசொற்கள் தமிழிலக்கியத்தில் 11ஆம் நூற்றாண்டில் குறிப்பாக சமண, பவுத்த காப்பியங்கள் மிகுதியாக வழங்கப் பெற்ற காரணத்தால் அத்தகைய தமிழிலக்கியங்களைப் பயிலுவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் வடமொழி இலக்கணக் கூறுகளையும் ஆசிரியர் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். வடமொழியில் நகரம் எதிர்மறைப் பொருளைத்தரும். கெய்யை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பதில் உள்ள நகர ஒற்று கெட்டு அகரம் எதிர்மறையை உணர்த்தும். எ-டு ந+சுரன்=அசுரன் உயிரை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பது "அந்" என மாறும். எ-டு ந+இஷ்டம்=அநிஷ்டம். இவை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வேற்றுமையில் "சு" என்னும் உருபு சேர்ந்து பின்  கெடுகிறது என்பது வடமொழி இலக்கண மரபு. தமிழுக்கு இது பொருந்தாது. எனினும் வடமொழிக்கு ஈடாகத் தமிழ்மொழி இலக்கணம் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தினால் அர், ஆர் முதலான உருபுகளோடு "அ" என்பதையும் இவர் சேர்த்துள்ளார்.

பவணந்தி : தமிழ் மொழிக்கே சிறப்பாக இலக்கணம் வரைந்தாரேனும் பவணந்தி வடமொழி மரபையும் கருத்தில் கொண்டவராதலால் எழுத்து அதிகாரத்தில் புறத்திலக்கண கூறப்புகுந்த நேரத்தில் சொல் இயல் என்று கூறாது பதவியல் என்று கூறினார்.

வடமொழிக்கு சிறப்பாக உள்ள "ரு" (R) முதலான எழுத்துக்கள் தமிழில் "இ" இரு என்றவாறு திரிகின்றன என்பதை ஏழாமுயிர் இய்யும் இருவும் என்று தொடங்கும் சூத்திரத்தில் (147) கூறுகிறார். வடமொழித் தொடர்கள் பல தமிழிலக்கியத்தில் அப்படியே பயிலப்பட்டு வந்ததால் அச்சொற்களில் காணப்படும் புணர்ச்சி முறையை உணர்ந்து கொள்வதன் பொருட்டுத் தமிழ்ப் புணரியல்களுக்குப் புறனடையாகப் பவணந்தி ஒரு சூத்திரம் அமைத்தார். அதில் வடசொலின் இயம்பிய கொளாதவும் - பொருந்தியவாற்றிற்கு இயையப்புணர்த்தல் யாவர்க்கும் நெறியே என்ற பகுதியில் வடமொழியில் பரம+ஆனந்தம்=பரமானந்தம் என்ற தீர்க்க (நெடில்) சந்தி, சூர்ய+உதயம் = சூர்யோதயம் என்ற குண சந்தி, சர்வ+அய்ச்வர்யம் - சர்வைச்வர்யம் என்ற விருத்தி சந்தி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் வழங்கிவரும் சொற்களுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டவை "தற்சமம்" எனப்படும் எ-டு காரணம். ஒருசில வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு சுகி. மற்றும் சில பொதுவும் சிறப்புமான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு அரன், பின் இரண்டு வகைகளும் தற்பவம் எனப்படுபவை, பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல் என்ற சூத்திரத்தில் (274) ஆசிரியர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.

நச்சினார்க்கினியர் சொல்லதிகார வேற்றுமை இயலில் மூன்றாம் வேற்றுமை வாய்ப்பாடுகளைக் கூறும்போது (சூ75) "முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது" - இதனுண் முயற்சியில் என்பது காரகவேது; பிறத்தலான் ஒலி நிலை யாது என்பது ஞாபகவேது என்கிறார். இங்கே வடநூலார் கூறும் ஏதுவின் இருநிலைகளை உரையாசிரியர் காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் செய்யுளில் பயிலப்பட்டு வந்துள்ளதை அவர் எச்சவியலில் கூறும் சூத்திரம் (401) தெளிவுபடுத்துகிறது. வடசொற்கிளவி வட வெழுத்தோரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்ற சூத்திரத்தால் வடசொற்களை எவ்வாறு தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இச்சொற்களுள் சான் றோர் செய்யுட் கண் வருவன, வாரி, மணி, காரணம், மீனம் போல்வன எனவும், ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன கமலம், ஞானம், தாரம் போல்வன எனவும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மேலே காட்டப்பட்ட "மீனம்" என்பது தமிழ்ச்சொல்லே என்பது இன்றைய மொழி ஆராய்ச்சியாளர் துணிபு, நச்சினார்க்கினியரின் இக்கூற்றை அக்காலத்து ஒப்பியல் ஆய்வு முறை இல்லாத நிலையை எண்ணி அமைதி கொள்ள வேண்டும்.

சேனாவரையர் (13நூ) தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் ஆங்காங்கு வடமொழி நூற்பொருளைத் துணையாகக் கொண்டு பொருள் கூறிச் செல்கிறார். எடுத்துக் காட்டாக பெயரியல் சூ. 182இன் உரையில் "இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலும் என விசேடித்தல் இரு வகைத்து" என்று குறிப்பிடுகிறார். இவற்றை வடநூலார் அயோக வியவச்சேதம், அந்யயோக வியவச்சேதம் என்பர்.

மூன்றாம் வேற்றுமை குறித்த சூத்திரத்திற்கு (சூ-74) உரை எழுதுகையில் சேனாவரையர் வடநூலுட் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான்; ஒரு வேற்று மையாக ஓதப்பட்டமையானும் என்று கூறுவது வடநூலுட் பல உருபுகள் உருவத்தில் மாறுபடினும் பொருளில் மாறுபடாவிடில், அவை ஒரு வேற்றுமையாகக் கொள்ளப்பட வில்லை என்பதை அவர் சுட்டுவதாக அமைகிறது.

வேற்றுமை இயலின் இரண்டாம் வேற்றுமை பற்றிய சூத்திர (சூ71) உரையில் செயப்படுபொருள் இயற்றப்படுவதும் வேறுபடுத்தப்படுவதும் எய்தப்படுவதும் என மூவகைப்படும் எனக் குறிக்கிறார். இவை பர்த்ருஹரியில் வாக்கியபதீயம் என்ற இலக்கணநூலில் நிர்வர்த்தியம், விகார்யம், பிராப்யம் என்று கூறப்படுகின்றன.

இது சேனாவரையரின் வடமொழி இலக்கணப் பயிற்சியைக் காட்டுகிறது. இவற்றினின்றும் சிவஞான முனிவர் கூறியதுபோல் சேனாவரையர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர் என்று கருத இடமளிக்கிறது.

தொடரும்

- விடுதலை நாளேடு 5 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக