வியாழன், 28 நவம்பர், 2019

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி"- 28

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை வருமாறு:

முன்னுரை :

இறையுணர்வு மிக்கோரைப் பத்தர், சித்தர் என இரு வகையினராகப் பிரிக்கலாம். முன்னவர் இறை உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர். கோயில்தோறும் சென்று பல்வகையாகப் பாடிப் பரவியவர். பின்னவர் அஃதொழிந்தவர். சுருங்கச் சொன்னால் முன்னவர் புறத்தவம் பயின்றவர். பின்னவர் அகத்தவம் பயின்றவர். இரு பிரிவினராலும் தமிழ்மொழி சிறந்துள்ளது. எனினும் தமிழ்ச் சித்தர்களால் வேறு ஒரு பயனும் விளைந்துள்ளது. அதுவே பல்துறைச் சமூக நலப்பணிகள்.

சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை மேல் நீர்போல வாழ்ந்த இவர்கள் யோகம் பயின்று விரிந்த காட்சியுற்றுப் பொருள்களின் உண்மையியல்புகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைமைகளையும் அறிந்து மந்திரம், மருந்து, யோகம், ஞானம், வேதியல் (ரசவாதம்) முதலிய பல துறைகளிலும் மிகப்பல நூற்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். இவர்களது நூற்களில் வடமொழியாக்கம் பற்றிச் சிறிது இக்கட்டுரையில் காணலாம்.

சித்தர்கள் இலக்கிய மரபு

தமிழ் இலக்கியங்களைக் காலமுறைப்படி வகைப்படுத்தினால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையானவை தோன்றின என்பது விளங்கும். ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமைப்போடும் பயனோடும் விளங்குவது பெரும்பாலான பழைய இலக்கியங்கள் அல்லது பாடல்கள் அவற்றுக்குரிய ஆசிரியரால் எழுதப்பெற்றனவாகவோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்த பிறரால் எழுதப்பெற்றனவாகவோ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்கள் என்று இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும்-எந்தத் துறை யைச் சார்ந்ததாக இருந்தாலும்-அந்தந்த ஆசிரியரால் எழுதப் பெற்றனவாயிராதென்பது உறுதி. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுதல் கூடும்.

முதலாவதாக இவர்கள் சமுதாயத்தை விட்டு மிக ஒதுங்கி வாழ்ந்தவர்கள்.

"பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே"

பற்றனைத்தும் விட்ட பட்டினத்தார் தரும் உண்மைச் சித்தருக்கான விளக்கம் இது. இவ்வளவு ஒதுங்கி வாழ்ந்த சித்தர்கள் உட்கார்ந்து கொண்டு நூற்களை எழுதினர் என்பது பொருந்துமாறில்லை. இரண்டாவது காரணம் இதற்குத் துணையாய் அமைவது - மிகப் பல சித்தர்கள் பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. மக்கட் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்றே பல அரிய செய்திகள் சித்தர் பாடல்களில் கூறப் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பலருக்கும் புரியாக் குறிப்பு மொழியாலும் குழூஉக் குறியாலும் பாடப் பெற்றவை. பண்படா மனத்தோர் பயிலக்கூடாது அல்லது அறிந்து கொள்ளக்கூடாது என்றே அவர்கள் அத்தகைய முறையைப் பயின்றனர் என்பதை அவர்கள் பாடல்கள் வாயிலாகவே அறிகின் றோம். எனவே, கருத்துக்குச் சித்தர்கள் சொந்தக்காரர்கள்; கவிதைக்கல்லர்.

"உண்டான மூலியைத்தான் குகையினுள்ளே

ஒளித்து வைத்தார் சித்தரெல்லாம் வெளியாமென்று

பண்டான சித்தருக்கு மூலியிட்டுப் பாவிகட்கும்

கர்மிகட்கும் கிட்டுமோ சொல்

செண்டான பூவுலகில் மானுட ரெல்லாம்

செத்தவர்க ளெழுந்திருப்பார் இடம்கொள்ளாது

கொண்டான விதியாளி வந்தானாகில்

கூப்பிட்டுத் தான்கொடுப்பார் சித்தர்தானே;"

- 167 புலிப்பாணி வைத்தியம் 300

"தாமிந்த சூத்திரத்தைக் கொளியா தீந்தால்

தலை தெறித்துப் போகுமடா சத்தியம் சொன்னேன்

நாமிந்தப் படிசொன்னோம் யோகிக் கீவாய்"

- 216 அகத்தியர் பூரண சூத்திரம்

"குணமாகப் பலபேர்க ளிடத்தில் வாதம்

கூக்குரலாய்ச் சொன்னாக்கால் குடி கெடுக்கும்

பணம்போகு மாக்கினைதான் மிகவுண்டாகும்

பதிவான தலைபோகும் பாரிலேதான்

உணவாக உனைநம்பார் உலுத்தமாடு

உற்றுமே பொருளறியார் ஒழுங்குமில்லை

பிணம்போல இருந்துமே வேலைபாரு

புத்ததனில் வைத்திருக்கும் பிரிதிதானே"

- 103, யாகோபு சுண்ணம், 300

மேலே காட்டப்பெற்ற பாடல்கள் முற்கூறிய கருத்துக்குத் துணைசெய்வதைக் காணலாம்:

காயகல்பம், ரசவாதம், பல்வகை மந்திரங்கள் - இன்னமும் இவை போன்ற அரிய முறைகளைப்பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டால் ஏற்படும் விளைவினை எண்ணிப் பார்க்கவும் முடியாதன்றோ? அவரவர்கள் தம்தம் விருப்பப்படி செயல்படத் தொடங்கின் இயற்கையின் கட்டுக்கோப்பு உடைபட்டுப் போகும். ஆகவே மறைவாகவே வைக்கப்பெற்றன.

இத்தகைய கருத்துக்களை "எழுதாக் கிளவியாக" குரு மாணவர் முறையிலே கற்றுத்தரப்பெற்றன. மறைவாக இருந்த இவ்வரிய கருத்துக்களை மறை என்று கூறும் மரபு உண்டாகியது. வடமொழியாளர் வேதம் என்ற சொல்லால் இத்தகைய மறைபொருட்களைக் குறித்தனர். வித் என்னும் சொல்லின் அடியாக இது பிறந்தது என்பர். ஆனால் மறைத்தல் அல்லது வேய்தல் என்னும் சொல்லின் அடியாக மறையும் வேதமும் தோன்றின என்பது பொருந்தும். "கூரை வேய்ந்தான்" என்பதும் காண்க.  நீண்ட காலமாக மறைவாக செவி வழியாகவே கூறப்பெற்று வந்த அரிய கருத்துக்களைப் பின்னர் தோன்றியவர்கள் குறிப்பாகவும் குழூஉக் குறியாகவும் வெளிப்படுத்தினர் ஆதலின் அப்பாடல் களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிக அதிக அளவிற்கு இடம் பெற்றன. எனவே, சித்தர் பாடல் களில் இடம்பெறும் சொற்களை வைத்துக் கொண்டு அவர்களது காலத்தைக் கணிப்பது தவறுடையதாக அமையும். ஆதலின் இவர்கள் பெயரில் கிடைக்கும் பாடல்கள் அவர்கள் காலத்தில் பாடப்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனலாம்.

இனி, இவர்கள் தொண்டாற்றிய துறைகளை மருத்துவம், வேதியியல் (ரசவாதம்) யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவினுள் அடக்கலாம். இந்த நான்கு துறைகளிலும் தமிழர் மிகுதொன்மைக் காலம் தொட்டே புலமை மிக்கவராய் விளங்கினர் என்பதற்கும் வேற்றுமொழியினர் அல்லது வேற்றுநாட்டினர் தொடர் பாலும் இவ்வறிவினைப் பெறவில்லை என்பதற்கும் சித்தர் பாடல்களே பெரும் சான்றாக விளங்குகின்றன.

வடமொழியாக்கம்

தமிழ்ச் சித்தர் பாடல்களில் மிகப் பரவலாகக் குறிப்பு மொழியும் குழூஉக் குறியும் இருப்பினும் வட சொல்லாக்கம் மிக அதிக அளவில்-எல்லாத்துறைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வியப்பாக உள்ளது. தமிழர்க்கான இயல்பான பெருமை குன்றும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

புகழ் பெற்ற பதினெண் சித்தர்களுக்குக் குருவாக இருந்தவர் அகத்தியர். ஆதலின் அவரைக் குருமுனி எனக் குறிக்கும் மரபு இருந்தது.

"ஆமென்றஎன் பேரகத்தியனாகும் அருளினோம்

என்னுடைய சீஷர் பதினெண்பேர்

தேமென்ற தென்பொதிகை தென்கயிலை

சீஷர்          தேறினாரிவர் பெருமை."

- 77 அகத்தியர் சவுமிய சாகரம் 1200

"சீரேதான் சங்கத்தார் எல்லாம் கூடி

சிறப்புடனே அரங்கேற்றம்

நீரேதான் அகத்தியர்க்குக் குருபட்டம்

திகழாகத் தான்கொடுத்தார் தானே."

- 699 - மிமி காண்டம், அகஸ்தியர் 12000

இப்பாடல் வரிகள் மேற்கூறிய கருத்துக்குத் துணை நிற்பன. இவர் குடக்குத் திசையில் உள்ள மலையை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர். ஆதலின் குடமுனி எனப் பெயர் பெற்றார்.

திசையைக் குறிக்கும் சொல்லாகிய "குடக்கு" என்பதைக் குடம் என ஆக்கி அதன் வட சொல்லாகிய கும்பம் என மொழிபெயர்த்து அதில் தோன்றியவர் என்று ஒரு கதையையும் கட்டிவிட்டுக் "கும்பமுனி" என்றும் குறுகிய வடிவுடைய குறுமுனி என்றும் விளக்கம் தந்து அவரது வடிவையும் புகழையும் குறைத்தனர் ஒரு சாரார் என்பதை நினைக்கும் தோறும் வேதனை மேலோங்கும்.

குடமூக்கு என்ற இனிய தமிழ்ப் பெயர் கும்பகோணம் என மாற்றப்பெற்றமை இணையான பிறிது ஒரு எடுத்துக்காட்டு. திருமறைக்காடு என்பதை வேதா ரண்யம் என்றும் பழமலை என்பதை விருத்தாசலம் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

மருத்துவத்தில் வடமொழி

நீர், நிலம் இவற்றில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரம் ஆகியவற்றின் இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பட்டை, வேர் ஆகிய அனைத்து உறுப்புக்களின் குணம் அறிந்து நோய்க்குத் தக்க மருந்தாக்கியுள்ளனர் நம் நாட்டு சித்தர்கள். இத்துடன் அமையாமல் உலோகங் களின் குணங்களையும் அறிந்து அவற்றை நீறாக்கி (பஸ்பம்), நோய்களுக்குத் தந்துள்ளனர். எந்தப் பொருளை எப்படித் தூய்மை செய்தல் வேண்டும், எப்படி எரித்தால் (புடமிடல்) நீறாகும் என்பனவற்றையும் அறிந்திருந்தனர். எந்தவித அறிவியல் கூடமோ, சாதனமோ இல்லாமல் இவற்றை அறிந்திருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எவராலும் வியவாதிருக்க முடியாது.

தமிழ் நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனு பவங்களின் விளைவே இம்மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் - அனைத்தும் வட சொற்களாகவே விளங்கு கின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கி வரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் கீழே சான்றுக்குச் சில தரப் பெற்றுள்ளன.

மூலிகை வகை :

சௌந்தர்யம்  -    வெள்ளாம்பல்

ப்ருந்தா    -    துளசி

சப்ஜா   -   திருநீற்றுப் பச்சை

கூஷ்பாண்டம்    -     பூசணி

சாயாவிருட்சம்    -   நிழல்காத்தான்

ரத்தபுஷ்பி   -   செம்பரத்தை

மருந்து வகை :

ஔஷதம்     -   அவிழ்தம்

லேஹியம்    -   இளக்கம்

பஸ்பம்   -   நீறு

கஷாயம்  -   குடிநீர்

ப்ரமாணம்    -   அளவு

சூரணம்   -   இடிதூள்

நோய் வகை :

திருஷ்டி  -  கண்ணேறு

க்ஷயம்    -    என்புருக்கி

ஆஸ்துமா    -  ஈளை இரைப்பு

அரோசகம்  -  சுவையின்மை

அஜீர்ணம்    -     செரியாமை

குஷ்டம்   -    தொழுநோய்

மருந்துப் பொருள் வகை :

சொர்ணமாட்சிகம்   -   பொன்னிமிளை

நேத்ரபூஷ்ணம்    -   அன்னபேதி

ப்ரவளம்  -  பவழம்

நவநீதம்  -   வெண்ணெய்

லவணம்   -   உப்பு

தசமூலம்  -   பத்துவேர்

த்ரிகடுகு  -     முக்கடுகு

த்ரிபலா     -   முப்பலா

தொடரும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக