புதன், 15 மார்ச், 2017

தியாகத்தின் வடிவான திராவிடத்தாய் - கி.வீரமணி



1957-இல் திருச்சியில் நம் அய்யா தந்தை பெரியார் மீது, பார்ப்பனர்களைக் கொல்லத் தூண்டிப் பேசியதாக ஒரு வழக்கு! அதற்கு அப்போது சென்றேன் _- கழகத் தொண்டன் என்ற முறையில் _- சட்டக் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த நிலையில்.

திருச்சி மாவட்ட (செஷன்ஸ்) குற்றவியல் நீதிபதி முன் நடைபெற்ற அவ்வழக்கில் அய்யா பெரியார் அவர்களுக்கு 6 மாதம் என மூன்று ஆறு மாதங்கள் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தண்டிக்கப்பட்ட நிலையில்தான் அய்யா என்னை அழைத்து, அம்மாவுக்குத் துணையாக இருங்கள் என்று பணித்தார்கள். அவர்களிடம் எனக்கு நெருக்கமாகப் பழகும் அரிய வாய்ப்பு அதன்மூலமே கிட்டியது!

அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்பதற்காக, கையகலக் கடுதாசியான சட்ட நகல்களைக் கொளுத்தியதாக 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை நமது தோழர்களும், தோழியர்களும் சுமார் 3,000 பேர் தண்டிக்கப்பட்டு, சென்னை, வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தனர்.

அம்மா அவர்களுக்குத் துணையாக, கூட்ட நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன். விடுதலை அலுவலகப் பணிகளிலும் சில எடுத்துக் கவனித்தேன்.

அம்மா அன்னை மணியம்மையார் பற்றி நான் புரிந்து கொள்ளவும், என்னைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவுமான வாய்ப்பு அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்பட்டது.

அம்மா அவர்கள் கழகப் பிரச்சாரகர்களை அறிவார்கள்; உபசரிப்பார்கள்.  அய்யா அவர்களுக்கு அம்மா, பணிவிடைக்காரராய், தோழியாய், செவிலியாய், சேவகியாய் எல்லா வகைகளிலும் பங்கு பணி யாற்றியவரானதால் மற்றவர்கள் நெருங்கும் வாய்ப்பில்லை. இதனால் அவரைப் புரிந்தவர்களும் வெகு சிலரே. இயக்கம் பிளவுபட்டபோது, அவர்கள் பெற்ற வசவுகள் போன்று உலகில் எந்த ஒரு பெண்மணியும் பெற்றிருக்கவே முடியாது. அவரது கொள்கைப் பயிர் என்ற வயலில் அவை உரங்களாகி விழுந்தன! அவரது உறுதியையும், தன்னலமற்றத் தொண்டூழிய மனப்பான்மை யையும் வளர்த்தன!

அம்மாவிடம் கழகத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் ஏற்பட்ட மரியாதை அதிகமாக அவர்களைத் தொலைதூரத்தில் வைத்துப் பழகவே செய்தது. அய்யாவின் விருப்பப்படி நான் அம்மா அவர்களுக்கு உதவியாக இருந்த வாய்ப்பினால் என்னைப் பற்றிய பல செய்திகளை - எனது தாயார் இளமையில் என்னை விட்டுப் பிரிந்தது; எங்கள் குடும்ப சூழ்நிலை; எப்படி நான் வளர்ந்தேன்; படித்தேன்; உழைத்தேன்; எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களால் நான் கழகக் கொள்கைப் பிரச்சாரத்திற்கு சிறு வயதிலேயே பயன்பட்டேன் என்ற பல்வேறு நிகழ்வுகள், செய்திகள் பற்றி அவர்கள் அறிந்தார்கள்.

அதுபோலவே என்னை ஒரு பெறாத பிள்ளையாகவே அவர்கள் மனதால் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ற வகையில் அளவற்ற பாசத்தை, தாயன்பைக் கொட்டித் தீர்த்து விட்டார்கள்!

பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் அய்யா தந்தை பெரியார் அவர்களது ஆணையே என்னை ஆளும் சட்ட திட்டமாக அமைந்து இருந்தது.

அது மேலும் விரிந்தது. அம்மாவின் அன்பு என்ற வளையத்தில் நான் அகப்பட்டேன்; ஆம், நான் அவர்களின் அகத்தில் இடம் பெற்ற பிள்ளையானேன்!

தாயன்பு - வாஞ்சையை இதற்கு முன்பு எவரிடத்திலும் அனுபவித்திராத அளவிற்கு அம்மாவிடம் - ஒரு குறுகிய காலத்தில் நான் பெற்றேன்.

தாயினும் சாலப் பரிந்து என்பதற்கு என்ன பொருள் என்பதை அம்மாவிடம் நான் உணர்ந்தேன்.

அய்யாகூட வேடிக்கையாக சில நேரங்களில் கூறியதுண்டு. “அவன் (வீரமணி) நான் சொல்வதைவிட அம்மா சொன்னால் உடனே கேட்பான்’’ என்று “சீண்டுவதற்கே’’ சொல்லி மகிழ்வதுண்டு!

அய்யா _- அம்மாவின் நம்பிக்கையைப் பெற்றேன் என்பதை விட பாசப் பொழிவிற்கு உரியவனானது நான் பெற்ற பெரும் பேறு!

இன்று அதுதான் என்னை எல்லையற்று உழைக்கச் செய்யும் ஊக்கச் சக்தியாக உயர்ந்து நிற்கிறது!

எத்தனைத் தடை என்றாலும் தாங்கும் இதயம், தாண்டும் கால்கள், அணைக்கும் அன்புக் கரங்கள் எல்லாம் கிடைக்கவே செய்தன!

அய்யாவுக்குச் செவிலியராக, அம்மா இறுதிவரை வாழ்ந்த வாழ்வு தியாக வாழ்வு!

ஒருவர் பொன்னையும், பொருளையும், பதவியையும், புகழையும் ‘தியாகம்’ செய்யலாம்; ஆனால், அம்மா அவர்கள் அய்யாவைக் காப்பாற்ற முதலில் தம் ‘இளமையையே’ தியாகம் செய்தார்கள்!

பிறகு ‘மானத்தையும்’ கூட தியாகம் செய்தார்! இனமானம் தன்மானத்திலும் பெரிது; பொதுவாழ்வுக்கு வருபவர் மானம் பாராது தொண்டு செய்ய வேண்டும் என்ற தந்தை பெரியார் வகுத்த இலக்கணத்தின் பேரிலக்கியமாகத் திகழ்ந்தார்!

அய்யாவின் திருமணத்தைக் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சர் ஆன பிறகு ஒரு நாள் அவர்களது இல்லத்தில்  சந்தித்தபோது சொன்னார்கள். ‘விடுதலை’ நிர்வாகி தோழர் சம்பந்தம் அவர்களும் உடன் இருந்தார்கள். “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது; மணியம்மையாரின் பத்திய உணவு, பாதுகாப்புதான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது மட்டுமல்ல; அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது’’ என்று சொன்னார்கள்!

இதை மனந்திறந்து அண்ணா அவர்களே கூறினார்கள் என்றால், இதைவிட அம்மாவின் தொண்டுக்கும், தியாகத்துக்கும் வேறு சான்று வேண்டுமா?

தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார் அன்னையார். அதில் நானும் ஒருவன்!

‘அனாதைகள்’ என்று எவரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப் பெற்ற குழந்தைகளைக் கூட, உடல் நலம் இடந்தராத நிலையிலும் அவர்கள் எடுத்து  வளர்த்து ஆளாக்கினார்கள்.

‘நன்றி பாராட்டாத தொண்டு’ என்ற தந்தையின் மற்றொரு இலக்கண விதிக்கும் இலக்கிய-மானார்கள்!

எளிமை, வீரம், அடக்கம், சிக்கனம் இவை, அவர்களிடம் ஒன்றுக்கு மற்றொன்று போட்டியிட்டு நின்றன!

உடல் சோர்வு உற்ற நிலையிலும் உள்ளச் சோர்வு என்றுமே அம்மா அவர்களிடம் கிடையாது!

ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தினை, தந்தை பெரியார் என்ற மாபெரும் இமயம் சாய்ந்த பிறகு தலைமை தாங்கி, கட்டிக் காத்தாரே அது வரலாறே பெருமை கொள்ள வேண்டிய அதிசயச் சாதனை!

அவர் வாழ அவருக்கும் ஒரு சில பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அம்மாவுக்குத் தெரியாது (பிறகே அவர்கட்குத் தெரிந்தது) அய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சொத்துகளையும் ஓர் அறக்கட்டளையாக்கி கல்வி அறப்பணிக்கே அதனை விட்டுச் சென்றார்கள்!

அந்த அறக்கட்டளையில் அம்மா ரத்தபாசத்தைக் காட்டவில்லை. அய்யா அவர்களைப் போலவே கொள்கைப் பாசத்தையே கொட்டினார்!

இதைவிட ஒப்பற்ற பெருமனம் வேறு இருக்க முடியுமா?

அய்யாவின் சிக்கனத்தைத் தோற்கடிக்கக் கூடியது அம்மாவின் சிக்கனம். ஆம் அய்யாவிடம் கற்றதுதானே அது!

அம்மா கண்ட களங்கள் பல _- புறநானூற்றுத் தாயாக அவர் வீறுகொண்டு கிளர்ச்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். திருச்சி சிறையில் 1958-இல் மாண்ட சாதி ஒழிப்பு வீரர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் தம் புதைக்கப்பட்ட சடலங்களை, முதல்வர் காமராஜருடன் வாதாடித் திரும்பப் பெற்றதும், திருவையாறு சாதி ஒழிப்பு வீரர் மஜித் மறைந்தபோது நடுநிசியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் தலைமை தாங்கியதும், 1974ஆம் ஆண்டு இராவண லீலா சென்னையில் நடத்தியதும் அவர் ஒரு தன்னிகரற்ற வீரத்தாய் என்பதற்கான காலப்பெட்டகங்கள்!

 -உண்மை இதழ்,1-15.3.17


திங்கள், 13 மார்ச், 2017

வீரர் தாலமுத்து

வீரர் தாலமுத்து (நாடார்) மறைவு

இடுகாட்டில் தலைவர்களின் துக்கம்



இந்தி எதிர்ப்பிலீடுபட்டுச் சிறையிலிருந்த தோழர் தாலமுத்து நாடாரின், பிரேத ஊர்வலம் நேற்று (12.03.1939) மாலை 5 மணிக்கு ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்டது. அலங்கரித்த பாடையில் தோழர் நாடார் கிடத்தப்பட்டிருந்தார். ஏராளமான மலர் மாலைகள் போடப்பட்டன.

தொடக்கத்தில் சர்வாதிகாரி எஸ். சம்பந்தமும், மற்றும் மூவரும் பாடையைத் தூக்கி வந்தனர். தோழர் நாடாரின் வயதான பெற்றோர்களும், இளம் மனைவியும் சவத்தின் மீது விழுந்து புரண்டு அரற்றிய காட்சி கல் மனதையும் கரைத்து விட்டது. வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், தோழர்களும் கண்ணீர் விட்டனர். 10000 பேர்கட்கு மேற்பட்ட மக்கள் கொண்ட மாபெரும் கறுப்புக் கொடிகளுடன் கூடிய பிரேத ஊர்வலம் தங்கசாலை வழியாக மெதுவாய்ப் புறப்பட்டு வந்தது. கறுப்புச் சட்டையணிந்த சிலர் முன்னே பாண்டு வாத்தியம் முழக்கிச் சென்றனர். ஊர்வலத்தின் இரண்டு பக்கங்களிலும் பல நூற்றுக்கணக்கான போலீஸ்களும், சார்ஜண்டுகளும், இன்ஸ்பெக்டர்களும், பந்தோபஸ்து செய்து வந்தனர். டிப்டி கமிஷனரும் வந்திருந்தார்.

-விடுதலை,11.3.17

செவ்வாய், 7 மார்ச், 2017

தலித் சுயமரியாதை யாத்திரை  ரோகித் வெமுலாவின் தாயார் அறிவிப்பு



அய்தராபாத், மார்ச் 5 கடந்தாண்டு ஜனவரி மாதம் அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவன் ரோகித் வெமுலா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தலித் என்பதால் பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் பாகுபாடு காட்டியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ரோகித் வெமுலாவின் மரணம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தாண்டு அவரது நினைவு தினம் பல்கலைக்கழக வளாகத்தில் கடைப்பிடிக்கப்படும் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவித்தனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளிக்க மறுத்து விட்டது. இதையடுத்து மீண்டும் மானவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,  ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலம் முழுவதும் தலித் சுயமரியாதை யாத்திரையை மார்ச் 14 அன்று மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

பல்கலைக் கழக துணை வேந்தர் மீது நடவடிக்கை தேவை மற்றும் நாடு முழுவதும் தலித்துகள் மீதான கருத்தியல் தாக்குதல் ஆகியவற்றை விளக்கி இந்த யாத்திரை இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், யாத்திரையில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று தலித் சுயமரியாதை யாத்திரை நிறைவு பெறும் என்று ராதிகா வெமுலா தெரிவித்தார்.

-விடுதலை,5.3.17

வியாழன், 2 மார்ச், 2017

கருஞ்சட்டை தோழர் வாழ்க, கர்ம வீரர் வாழ்க.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு. பெரியாரிடமும், காமராசரிடமும் பேரன்பும், பெரும் மதிப்பும் கொண்டவர். புதுடில்லி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்தபோது, காமராசரும் அங்கு வர, அவருடன் ஏராளமானவர்கள் வந்து மரியாதை தந்தனர்.

அந்தக் கூட்டத்திலும் தூரத்தில் நின்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி வந்து,

டில்லிக்கு எப்ப வந்தீங்க! என்று விசாரித்தார்.

நெ.து.சு. வணங்கிவிட்டு விவரம் சொன்னார். காமராசர் மீண்டும் கூட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.

விமானம் புறப்படத் தயாரானது. காமராசர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நெ.து.சு. விமானத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் காமராசர் பின்பகுதியில் கண்ணைச் செலுத்தித் தேடிவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நெ.து.சு. அமந்திருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

நெ.து.சு. எழுந்து நிற்க, அவரை அமரச் செய்து, அவர் அருகில் காமராசர் அமர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டின் கல்வித் துறைபற்றி அவரிடம் காமராசர் பேசத் தொடங்கினார்.

கிராமமக்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமாக கிடைக்கணும். அதுதான் முக்கியம்.

நகரத்திலிருக்கிறவன் எவ்வளவு செலவானாலும் படிச்சிடுவான். கிராமவாசி எங்கே போவான்! சாதாரண பள்ளிப் படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விற்கவேண்டியிருக்கு....! கிராமபுற ஏழைப்புள்ளைங்க மேல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்யணும்...! என்று பேசினார்.

நெ.து.சு. அவர்கள், உங்கள் முயற்சியால், இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 60% மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் என்றார்.

அதற்குக் காமராசர், அதைத் தானே நாம் விரும்பினோம்; அதுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒரு தலைமுறை படித்து மேல வந்துட்டா அப்புறம் அந்தத் தலைமுறையே, அந்த கிராமமே மேல வந்துடும்! என்றார்.

அய்யா பெரியார் கிட்ட இந்த விவரத்தைச் சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு, இவ்வளவுக்கும் காரணம் காமராசர் அய்யாதான். அவருக்குத்தான் தமிழன் கடன் பட்டிருக்கான். அவர் மட்டும் இல்லான்னா   1952லேயே நம்ம தலைமுறையையே இராஜகோபாலாச்சாரியார் குழிதோண்டி புதைத்திருப்பார் என்று பெரியார் சொன்னதைக் கூறினார் நெ.து.சு.

உடனே காமராசர், அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது! அவர் சொல்றார் நாம செய்றோம்...! காரணகர்த்தா அவர்தானே! 1952இல் வந்த பிரச்சினை அய்யாயிரம் வருஷமா இருக்கிற தாச்சே...! கடவுள் பேராலும், மதத்து பேராலும் நம்மை ஒடுக்கி வைச்சுட்டானே...! இதைப்பத்தி யாரு கவலைப்பட்டா...?

பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டிட்டு பண்ணிட்டிருக்கார். அவர் மட்டுமில்லன்னா நம்ம புள்ளைங்க கதி என்னாயிருக்கும்?

கோவணங்கட்டி ஏர் ஓட்டினவர்கள், கலெக்டரா, செக்ரட்டரியா. ஒக்காந்திருக்க யார் காரணம்! பெரியார் தானே...!

நம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரியார் சொல்றதை செய்யுறோம்...!

பெரியார் எந்த அதிகாரமும் இல்லாமலே எவ்வளவு பெரிய காரியத்தையெல்லாம் நம் மக்களுக்காகச் செய்கிறார்! என்று உணர்வு பொங்கக் கூறினார் காமராசர். தமிழன் வீடு என்றால் அங்கு பெரியார் படமும் காமராசர் படமும் இருக்க வேண்டும், என்றார் நெ.து.சு!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றி பா.வீரமணி


ஆசிரியர் அவர்களைப்பற்றி ஒன்றை நான் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கவிஞன் டென்னிசன் பாடினான்,

Made weak by time and fate but strong in will
to strive, to seek,  to fight

காலமும், விதியும் மனிதனை பலகீனமாக ஆக்கி விடும். ஆனால், மனத்தளவில் உறுதியாக இருக்க வேண்டும். தேடு தலிலும், சண்டையிடுதலிலும், போராடுதலிலும் தொடர்ந்து செல்லவேண்டும். அப்படி தொடர்ந்து செல்லுகின்ற முன்னணி வீரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு

அவர் ஒரு மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல, பேச்சாளர் மட்டுமல்ல, சிந்தனையாளர் மட்டுமல்ல, இவற்றைக் காட் டிலும் மிகச் சிறந்த நிர்வாகி. மிகமிகச் சிறந்த நிர்வாகி.

பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்கூட அவரிடத்தி லிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதனால் தான் அவர் ஆசிரியர். அவர் மிகச்சிறந்த சிந்தனையை நமக்குப் புகட்டுகிறார் என்பதல்ல - தந்தை பெரியார் அவர்களால், செடியாக இருந்த ஒரு திராவிடர் கழகத்தை மரமாக ஆக்கி, கனி தருகின்ற பெருமரமாக ஆக்கிய ஒரு பெரும் பெருமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத்தான் உண்டு.

இன்று பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின்பு, நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களை உருவாக்கி, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, முதியோர் இல்லம் இன்னும் பல்வேறு இல்லங்கள், நூலகங்கள், அரங்குகள், பொது விளையாட்டுத் திடல்கள், இப்படி பல்வேறு அறக்கட்டளை களை நிறுவி, ஒரு பெரிய மலர்ச்சியை உருவாக்கிக் கொண்டி ருக்கிறார்கள். இதுதான் அவரு டைய பெரிய சிறப்பு.

எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன; அந்த அரசியல் கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான சொத்துகள் இருக்கின்றன. எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத, ஒரு பெரும் சாதனையை, தந்தை பெரியார் அவர்கள், ஒரு ஒரு காசாக சேர்க்கப்பட்ட சொத்தை, அப்படியே காப்பாற்றி வைத்ததை, காப்பாற்றி - அதனை இன்னும் பன்மடங்காக - பெரியாருடைய சிந்தனைகளை, இந்தியா விற்கு மட்டுமல்ல - உலக நிலைக்கு எடுத்துச் செல்லுகின்ற ஒரு பெரும் பேராசிரியராக ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்கள்.

130-க்கும் மேற்பட்ட

நூல்களை எழுதியிருக்கிறார்

விடுதலை நாளிதழை நீங்கள் பார்த்தீர்களேயானால் புரிந்துகொள்ளலாம், எப்பொழுது பார்த்தாலும் அவர்க ளுக்கு நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும். இந்த சூறாவளிகளுக்கு இடையில், இந்த வயதில், 130-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

ஒரு பேராசிரியரால் கூட செய்ய முடியாத - ஏன் செய்ய முடியவில்லை என்று சொல்கிறேன் என்றால், பேராசிரியர்களுக்கு ஓய்வு இருக்கிறது - நேரமிருக்கிறது - பல நிலையில் சிந்தனையை ஒருமுகப்படுத்துகின்ற நேரம் அவர்களுக்குக் கிடைக்கும். எழுதுதல் என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஆனால், ஆசிரியர் அவர்கள், இவ்வளவு சிக்கல்க ளுக்கு இடையில், இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடை யில் 130 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தந்தை பெரியாரு டைய எழுத்துகளை மிகச் சிறந்த முறையில், தமிழகத்தில் எந்தப் பல்கலைக் கழகமும் கொண்டுவரப்பட முடியாத அளவில், அவருடைய சிந்தனைகளையும், எழுத்துகளையும் 49 தொகுதிகளாக, உயர்ந்த தாளில், மிகச் சிறந்த அச்சுடன், மிகச் சிறந்த பைண்டிங் செய்யப்பட்டிருக்கிறது அந்தப் புத்தகங்கள்.

வாழ்வியலைப்பற்றி 12 நூல்கள்

அதற்கடுத்த முறையில், அரசியல், சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு இவற்றை மட்டுமல்லாமல், வாழ்வியலைப் பற்றி 12 நூல்களை எழுதியிருக்கிறார்.

அவர் பல நூல்களை எழுதியிருந்தாலும்கூட, அதனு டைய தாக்கம் சமூகத்தில் ஏற்பட்டாலும்கூட, வாழ்வியல் சிந்தனைகளைப்பற்றி அவர் எழுதிய நூல்களில், தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய ஒரு பரபரப்பை, ஒரு கிளர்ச் சியை ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த அளவிற்கு அவர் எழுதிக் கொண்டே இருக் கிறார். அவர் நமக்கு ஒரு பெரிய முன்னோடியாக இருக் கிறார். அந்த முன்னோடி, தந்தை பெரியாரைப்பற்றியும், சிங்கார வேலரைப் பற்றியும் பேச வந்திருக்கிறார்கள்.

 -விடுதலை,1.3.17