செவ்வாய், 23 மார்ச், 2021

தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்


திங்கள், 22 மார்ச், 2021

குழந்தைத்_திருமண_தடுப்புச்_சட்டம்

#வைதிகர்களுக்கான_பதிவு

#குழந்தைத்_திருமண_தடுப்புச்_சட்டம்

1891 ல் சட்ட முன்வரைவு ஆரம்பிக்கப்பட்டு  1929 ஆம் ஆண்டு நிறைவேறியதுதான் ‘சார்தா சட்டம்’ எனும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் (The Child Marriage Restraint Act). இந்தச் சட்டம் இயற்றுவதற்கு கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆனது.இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன் பெண்ணுக்கு வயது 8ம் ஆணுக்கு வயது 12 ம் இருந்தால் போதும்.இதை மாற்றி பெண்ணுக்கு 14 என்றும் ஆணுக்கு 18 எனவும் மாற்றியது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம். 

வைதிக பிரமுகர்கள் முதல் மதவாதிகள் வரை இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புக் குரலை தொடர்ந்து முன் வைத்த காரணங்களால் பல முறை தள்ளிப் போனது. 

அன்றைய நாளேடுகள் வார மற்றும் மாதப் பத்திரிக்கை அனைத்தும் வைதிகர்களால் நடத்தப்பட்டு வந்தன.ஒட்டு மொத்த பத்திரிக்கைகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.இச்சட்ட முன் வரைவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில்  வ.உ.சி, விவேகானந்தர்,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றோர் முக்கியமானவர்கள். 
எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் முக்கியமானோர் எம்.கே.ஆச்சார்யா, காஞ்சி மடத்து சங்கராச்சாரியார், பால கங்காதர திலகர்,சுப்பரமண்ய சிவா என பட்டியல் நீள்கிறது.

1894 ஆம் ஆண்டு விவேகானந்தர் எழுதுகிறார்,

“...பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர். நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயது திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் எழுப்பிய கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்! நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவே செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது...10 வயது பெண்ணிற்கு, தொப்பை பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்து, பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள்.என்ன பயங்கரம்!..”

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை எதிர்த்து சென்னை மாகாண சட்ட சபையில் குரல் எழுப்புகிறார் எம்.கே.ஆச்சார்யா (MLA -South Arcot)எனும் 
சனாதனவாதி,

“பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது ஆங்கிலேய அரசு.பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை என்றால் நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?”

இது போன்ற எத்தனையோ எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கடந்துதான் The Child Marriage Restraint Act சட்டமாகப்பட்டது. 

இப்போது வைதிகர்களே திருமண வயது வரம்பை மதித்து அதன்படி வாழப் பழகிவிட்டனர்.வைதிக சாஸ்திரங்களில் உள்ள கர்ம அனுஷ்டானங்கள் காலத்திற்கு ஏற்றவை அல்ல என்பதை அவர்களே உணர்ந்தி்ருக்கிறார்கள்.பிடிவாதமாக இன்னும் சாஸ்திர சம்பிரதயங்களையும் கர்ம அனுஷ்டானங்களையும் பின்பற்றும் படி கூறும் உபன்யாஸகர்களும் தொழில் முறை வைதிக வாத்தியார்களும், மடாதிபதிகளும் உண்டு. 

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 1978 ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு ஆணுக்கு திருமண வயது 21 எனவும் பெண்ணிற்கு 18 எனவும் மாற்றப்பட்டது.இன்று வரை இதுவே தொடர்கிறது.

இன்றும் ஆப்பிரிக்க, தென் அமெரிக்க, ஆசிய நாடுகளில் பெண்களின் திருமண வயதை 16 வயதிற்கும் குறைவாக வைத்துள்ளன.இந்த நாடுகள் அனைத்திலும் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. 

அடுத்து வரும் பதிவுகளில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வைதிக பத்திரிக்கைகள் தெரிவித்த  காரணங்களைப் பார்ப்போம்.
- தினகரன் செல்லையா, முகநூல் பதிவு, 19.3.21

ஞாயிறு, 21 மார்ச், 2021

கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

* கீழ் வெண்மணி -தந்தை பெரியார் மீதும்-திராவிட இயக்கங்கள் மீது கூறப்படும் அவதூறுகளுக்கு-சில விளக்கங்கள்

1968-டிசம்பர் 25ஆம் நாள்-தாக்குதலுக்கு பயந்து
வீட்டை பூட்டி
 வீட்டுக்குள் ,உள்ளிருந்த ஆதி திராவிட விவசாயத் தொழிலாளத் தோழர்கள் -வீட்டு உயிர்கள் பெண்கள் 25-பேர்கள்,பிஞ்சுகள்-14-பேர்,ஆண்கள் 3பேர்
மொத்தம் 42-உயிர்கள் 

ஆதிக்க வெறியர்களின்,நிலப் பிரபுக்களின் ,கோரத் தாண்டவத்திற்கு உயிரோடு கொளுத்தப் பட்டு பலியானர்கள்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த
அண்ணா உடல் நலிவுற்றிருந்த நேரம். (அதன் பிறகு அண்ணா 35-நாட்களில் நம்மை விட்டு பிரிந்தார்)

வெண்மணிக்கு -கலைஞர் ,அமைச்சர் மாதவன்,சத்தியவாணிமுத்து,சாதிக்பாட்சா மற்றும்
ஓ.பி.இராமன் முதலியோரை அனுப்பி வைத்தார்.
கலைஞரும் அமைச்சர்களும் வரும் வரை அண்ணா
உணவருந்தவில்லை உறங்கவில்லை.

144-தடைஉத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவோம் என்றனர் கம்யூனிஸ்ட் மார்க்கிஸ்ட் அணியினர்.
முதல்வர் அண்ணாவே தலையிட்டு பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

எர்ணாகுளம் மாநாட்டிற்கு சென்றிருந்த மார்க்கிஸ்ட் தலைவர் இராமமூர்த்தியை ,அண்ணா
சென்னைக்கு வர அழைத்தார்.

அண்ணாவிடம் பி.இராமமூர்த்தி அங்குள்ள விசாரணை காவல் துறை அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகளை நியமித்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்
அண்ணா ஏற்றுக் கொண்டார்.

கணபதியாபிள்ளை தலைமையில் விசாரணை கமிஷனையும் அமைத்தார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண  நாயுடு (மிராசுதாரர்)மற்றும் 30-பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடங்கியது.சட்டமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடந்தது.கலைஞர் சட்டமன்றத்திலே
கோபாலகிருஷ்ண நாயுடுவை ‘கொடும்பாவி ‘என்று
விழித்து பேசினார்.

தலைவர் பெரியார்  சம்பவம் நடந்தபோது உடல் நலிவின்றி சென்னை மருத்துவமனையில் இருந்தார்.மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் அறிக்கை வெளியிட்டார்.

மத வெறியர்களால் காந்தி கொலை செய்யப்பட்டதும்,காமராசர் மீது டெல்லியில் நடந்த கொலைமுயற்சி எப்படி கொடுரமானதோ 
அதை விட கொடுரமானது கீழ் வெண்மணி நிகழ்வு என்றார்;தந்தை பெரியார்.

மேலும் இந்த ஆட்சியால்,இந்த சட்டங்களால் இந்த நீதிபதிகளால் இந்த நீதிமன்றத்தால் 
இக் கொடுமைகளை தடுக்க முடியாது;என்றார் பெரியார்.

தலைவர் பெரியாரின் இந்த உரை வீச்சின் வீரியம்தான் நிகழ்வில் சம்பந்தப்பட்ட
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்ட பின்னரும் -சம்பவம் நடந்த 12-ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் அழித்தொழிப்பில் முடிவுற்றது.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
சிறையில் இருத்து வெளிவந்து நாகை பயணியர்
விடுதியில்,தந்தை பெரியாரை சந்திக்க மூன்று மணி நேரம் காத்திருந்தார்.

அவர் ஏன் என்னைப் பார்க்க வேண்டும்?எனக்கு சம்மதமில்லை.அவரை நான் பார்க்க விரும்பவில்லை.வெளியே போகச்சொல்லு என்று நாகை எஸ் எஸ் பாட்சாவிடம் சொல்லியனுப்பினார்.

இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையுண்டார் என்பதிலிருந்து கீழ் வெண்மணி வெங்கொடுமைக்கு எப்படி பதில் கூறப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம் என்றார் கலைஞர்.

கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொலை சரியான ஒன்றே என்று துணிச்சலாக எழுதியவர் கலைஞர்.

இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுவின் கொலை வழக்கில் நேரடியாக பங்கேற்ற புரட்சிகர இடதுசாரி அமைப்பினைச் சார்ந்த ஏழு பேர் தலைமறைவாகினர்.

பிறகு இதில் தொடர்பில்லாத சந்தேகத்தின் பேரில்  என்று கைது செய்யப்பட்ட 11 பேரில் 9பேர் திராவிடர் கழகத் தோழர்கள்.வழக்கு
எண்254/80.

இவர்களில் திராவிடமணி அப்ரூவராக
மாறினார். ஒருவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்
பொழுதே மரணமடைந்தார்.

10-5-82-அன்று நாகை நீதிமன்றத்தில் திராவிடமணியைத்
தவிர்த்து மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கப் படுகிறது.

மேல் முறையீட்டில் உயர் நீதி மன்றம் மார்ச் மாதம் 1985-ஆம் ஆண்டு அனைவரையும் விடுதலை
செய்தது..
- பன்னீர்செல்வம் முகநூல் பதிவு, 22.3.21

வெள்ளி, 19 மார்ச், 2021

தந்தை பெரியாரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணிக்கு சூட்டப்பட்ட புகழ் மாலைகளில் சில....



சனி, 30 நவம்பர் 2019 12:16, விடுதலை நாளேடு

1) 1944 - திராவிட இயக்கத்தின் “திருஞானசம்பந்தர்” என அண்ணாவின் பாராட்டு

2) 1950 - ”இளம் பேச்சாளி” பொது மக்கள் பாராட்டு

3) 1960 - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார   முதுகலைப் பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார்

4) 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி” என்று தந்தை பெரியார் பாராட்டு

5) 10-04-1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் “இனமானப் போராளி” பட்டம் அளிக்கப்பட்டது

6) 26-02-1996 - தந்தை பெரியார் “சமூக நீதி விருது” தமிழக அரசு  (ஜெ. ஜெயலலிதா) வழங்கியது

7)  23-04-2000 - புதுடில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் “பாரத் ஜோதி” விருது வழங்கியது.

8) 2000 - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் பாராட்டி கனடா நாட்டின் பன்னாட்டு வளர்ச்சி நிறுவனம்(CIDA - AWARDS OF      EXECELLENCE)  வழங்கியது

9) 18-01-2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், “ஆக்சுபோர்டு தமிழ் விருது” வழங்கி பாராட்டியது

10) 26-01-2003 - மியான்மரில் “பேரளிவாளர் விருது” வழங்கியது

11) 04-04-2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் “கவுரவ       டாக்டர் பட்டம்” வழங்கியது

12) 2007 - பெரியார்” திரைப்படத்தை எடுத்து, தேசிய விருது

13) 31-03-2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை “2008”ஆம் ஆண்டுக்கான “கலைஞர் விருதினை” வழங்கியது

14) 26-09-2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு    விழாவில் “தந்தை பெரியார் விருது” வழங்கப்பட்டது

15) மலேசிய திராவிடர் கழகம் “கருத்துக்கனல்” என்ற பட்டத்தை   வழங்கியது

16) 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்   சென்னையில் “பெரியார் ஒளி” விருது

17)  2010 - கோவை கே.ஜி. அறக் கட்டளை சார்பில் “ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது”       வழங்கப்பட்டது

18) 24-07-2011 - ஆந்திர மாநிலத்தில் ”ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது” வழங்கப்பட்டது

19) 06-03-2012 - சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை    ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கியது

20) 2019 - அமெரிக்க தலைநகர் வாசிங்டனில்    பன்னாட்டு மனிதநேய மாநாட்டில் மனிதநேய ”வாழ் நாள்      சாதனையாளர் விருது” வழங்கியது

தொகுப்பு : நூலகர் கி. கோவிந்தன்


வியாழன், 4 மார்ச், 2021

பெரியாருக்கு வண்டி (வேன்) வழங்கும் நிகழ்ச்சி

14.8.1973- விடுதலையில் அய்யா அவர்களின் பிறந்தநாள் அழைப்பாக பக்கம் 2-இல் கழகத் தோழர்களுக்கு நான் அழைப்பு விடுத்தேன், அதில், தஞ்சை அழைக்கிறது என்ற தலைப்பில் வெளியான செய்தியினை அப்படியே தருகிறேன்:

தமிழர் இனத்தின் தனிப்பெரும் காவலரும், தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சி ஊட்டிய, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நமது ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு, தமிழர்கள் தங்கள் நன்றி உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளும் நாள், வர இருக்கிற ஆகஸ்ட் 19. தந்தை பெரியார் அவர்கள் நம் இனத்திற்கு மலையளவிற்குச் செய்த வரலாற்றுப் பெருமைமிகு நன்மைகளுக்காக, நாம் தினையளவு நன்றி காட்ட நல்லதோர் வாய்ப்புப் பெற்ற நாளாகும் ஆகஸ்ட் 19.
95-ஆவது வயது என்ற முதுமை நிலையிலும், 25 வயது இளைஞரைப் போல் என்றென்றும் சுழன்று சுழன்று சுயமரியாதைச் சூறாவளியைப் பரப்பிடும் சொக்கத் தங்கமாக உள்ள நம் தலைவருக்கு, தமிழ்ச் சமுதாயம், மிக்க பல்வகை வசதிகளை உள்ளடக்கிய ஒரு வேனை (Van)  அளித்து, அவர்கள் தொண்டிற்கு மேலும் வேகமும், விறுவிறுப்பும், முறுக்கும் ஏற்படுத்தும் புதிய காவியம் படைக்கும் பொன்னாள் அந்த ஆகஸ்ட் 19!

ஓய்வு என்பதே உழைப்புதான் என்று புதுப்பொருள்கூறி, பதவி நாடா - புகழ் தேடா, பொது வாழ்க்கைதான் தனது வழி என்று தனி வழி வகுத்து, இன்று தூய தொண்டின் அரும்பெரும் இமயமாய் உயர்ந்துள்ள நமது பெருமைக்குரிய அய்யா அவர்களுக்கு, நாம் ஒரு காரினை அளிக்கிறோம். நன்றிப் பெருக்குடன் நாட்டோர் அனைவரும், கட்சி வேறுபாடு, கருத்து மாறுபாடு, கொள்கை வேறுபாடு இன்றிக் குவித்த காணிக்கையால் உருவாக்கப்பட்ட காரினை, தஞ்சைத் தரணி மாபெரும் விழா நடத்தி, அதனை அளித்திட வெகுவாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளது!

தஞ்சை, தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டுமல்ல; தமிழர்களுக்கு அறிவுக் களஞ்சியமான கொள்கைகளை ஏற்றுச் செயல்படும் அறிவியக்கக் களஞ்சியமும் ஆகும். கருஞ்சட்டை அணிந்த கர்ம வீரர்களின் - கடமைச் செம்மல்களின் பாடி வீடும் ஆகும்!

தமிழகத்தில் எந்த மாவட்டம் அதிகமாக நிதி அளிக்கிறதோ, அந்த மாவட்டத்திலேயே அக்காரினை வழங்குவோம் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அறிவித்ததைக் கேட்டு, அதனைத் தட்டிச்சென்றது தஞ்சைத் தரணியேயாகும்!

முன்பு அய்யாவின் எடைக்கு எடை வெள்ளியைக் கொடுத்து, தஞ்சை மாவட்டம் பெருமை பெற்ற மண்ணாகும்! அம்மாவட்டம் இப்போது இதனையும் தட்டிச் செல்கிறது! தஞ்சை மாவட்டம் தந்த தனித்தமிழர்தான் இந்தத் தமிழ் மண்ணை இன்று ஆளும் தனிச் சிறப்புடைய முதல்வர்! தந்தை பெரியார்தம் பள்ளியில் தலைசிறந்த மாணவராகத் திகழ்ந்த அவர், இளமைத் துடிப்பின்போதே இயக்கத்திற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட செயல்வீரர்!

பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகனாம் பேரறிஞர் அண்ணா கட்டிக் கொடுத்த ஆட்சியைக் காத்துவரும் அவர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரியதொரு பொற்காலத்தை உருவாக்கி வரும்-வரலாறு படைக்கும் மாவீரராவார் நமது முதல்வர் டாக்டர் கலைஞர்! அவர் தமிழ்ப் பெருமக்களின் சார்பாக, அய்யா அவர்களுக்குக் காரினைப் பரிசாக அளிக்க இருக்கிறார்!

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் நல்முத்துகளில் ஒருவராக ஆற்றல் மிகு அமைச்சர் என்பதை எதிரிகளும் ஒப்புக்கொண்டு, இளைஞர்கள் சகாப்தம்- இனிய சகாப்தம் என்ற உண்மையினைக் கோடிட்டுக் காட்டிவரும் நமது போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்க, அய்யாவின் தொண்டர்கள், இயக்கத்தின் அடிவரலாற்றில் பங்குகொண்ட அமைச்சர் பெருமக்களும், பொதுப்பணி, உள்ளாட்சி, கூட்டுறவுத் துறை அமைச்சர்களும் பங்கு பெறுகிறார்கள். அய்யாவின் அரும்படையில் ஆங்காங்கு தளபதிகளாக இருந்து சோர்வற்ற தொண்டும், சுயநலம் துறந்த பண்பும், செயலும் கொண்ட நமது இயக்க முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் அவ்விழா ஒரு மாபெரும் தமிழர் விழாவாக அமையப்போகிறது!

பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ என்று எதிரிகளும் மருளும் வண்ணம், கடல் காணா தஞ்சை, கருஞ்சட்டைக் கடல் பொங்கும் காட்சியைக் காணும் வண்ணம், தஞ்சையில் ஒவ்வொருவரும் கூடவேண்டும்! நமது இயக்கத் தோழர்கள் கூட வேண்டும் குடும்பம் குடும்பமாக!  கோலாகலமான திருவிழாவாக தஞ்சைத் தரணி எடுக்கும் பெருவிழாக் காட்சியை - மாட்சியைக் காணக் கூடுவோம்! பகுத்தறிவாளர்களுக்கு விழா இல்லையே என்று ஏங்குபவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பாகும்! தஞ்சையில் நடைபெறும் மாபெரும் ஊர்வலம், காண முடியாத தனிச்சிறப்பு படைக்கும் மாபெரும் ஊர்வலமாகும்.

நம்மை மனிதனாக்கும் மாமேதை அய்யாவின் அறிவுரை கேட்டிட, அகிலமே திரண்டு வரட்டும் தஞ்சையை நோக்கி! பொன்னான வாய்ப்பு!  புதுமைச் சரிதம் படைத்திடும் வாய்ப்பு! புறப்படத் தயாராகிவிட்டீர்களா! என்று குறிப்பிட்டு இருந்தேன்.

கழக மாளிகையாம் பெரியார் மாளிகை நோக்கி (19_8_73)இல் தஞ்சையில் தந்தை பெரியாருக்கு வேன் வழங்குவதற்காக காலை முதலே மாவீரப் படை திரண்ட காட்சியைக் காணாத கண்கள் என்ன கண்களோ!  குமரி முதல் சென்னை வரை உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும் தனி பஸ், தனி கார், இரயில் போன்ற பல வசதிகளைப் பயன்படுத்தி, பல்லாயிரக்கணக்கில் சுயமரியாதை வீரர்கள் தஞ்சைத் தரணியில் திரண்டிருந்தனர்!

காலை 9.30 மணி அளவில், தஞ்சை மணிக் கூண்டு அருகில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு, என்னுடைய தலைமையில் ஏராளமான திராவிடர் கழகத் தோழர்கள்- பகுத்தறிவாளர்களுடன் வந்து மலர் மாலை அணிவித்தேன்!  ஒரத்தநாட்டில் காலை ஒரு திருமணத்தை முடித்துவிட்டு, தஞ்சை கழகக் கட்டிடமான பெரியார் மாளிகையில் வந்து தந்தை பெரியார் அவர்கள் தங்கினார்கள்!

வெளியூர்த் தோழர்களும், தாய்மார்களும், மாணவர்களும் அதிகாரிகளும், குடும்பம் குடும்பமாக அய்யா அவர்களை வந்து பார்த்து வணங்கிச் சென்ற வண்ணம் இருந்தனர்.

தந்தை பெரியார் தம் ஆயுள் நீடிப்பதற்கு,  அரிய காரணகர்த்தாக்களாக இருப்பவர்களான- அய்யாவின் டாக்டர்களான, வேலூர் டாக்டர் பட், சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியின் தலைமை அதிகாரி டாக்டர் இராமச்சந்திரா, வேலூர் டாக்டர் ஜான்சன் ஆகியோரும் வந்து அய்யாவின் உடல் நலம் விசாரித்தனர்!

மாலை 4.30 மணி அளவில், தஞ்சை கழகத் தலைவர் கா.மா. குப்புசாமி, செயலாளர் இரா. இராசகோபால், க.மா. கோவிந்தராசன், சாமி நாகராசன் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முதலிய தோழர்களுடன் சென்று கருந்தட்டாங்குடியில் உள்ள தளபதி அழகிரிசாமி, ஜாதி ஒழிப்பு வீராங்கனைகளான லட்சுமி அம்மாள், பரிபூரணத்தம்மையார், தஞ்சை முன்னாள் தலைவர் கோ. ஆளவந்தார் ஆகியவர்கள் சமாதியில் என்னுடைய தலை மையில் கழகத் தோழர்கள் படைசூழ மலர் வளையம் வைத்துத் திரும்பினோம்!

மாலை 6 மணி அளவில் தஞ்சை மோரீஸ் கார்னரிலிருந்து, தஞ்சை இதுவரை காணாத அளவுக்கு மாபெரும் ஊர்வலம் ஒன்று புறப்பட்டது!

யானை ஒன்று முன் செல்ல, அதில் தோழர் சாமிநாதன் கம்பீரமாக அமர்ந்து கழகக் கொடி பிடித்துச் செல்லும் காட்சியுடன் ஊர்வலம் தொடங்கியது!
தலைகள்! தலைகள்!! தலைகள்!!! எங்கு பார்த்தாலும் தலைகள், வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!

பஸ்களிலும், லாரிகளிலும், ஒலி பெருக்கியுடனும், ஓவியங்களுடனும், கொடி தோரணங்களுடனும் கணக்கே எடுக்க முடியாத வண்ணம் திரண்ட அவ்வூர்வலத்தில் ஏராளமான வெளியூர்த் தோழர்களும் அணிவகுத்து வந்தனர்!
பாண்டு வாத்தியம், நாதசுவரம், மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள், தீச்சட்டி ஏந்தல், பக்தி மூடநம்பிக்கைகளை மக்களிடம் புட்டுப் புட்டு வைக்கும் வேடங்கள்!  இவை எல்லாம் வந்தன!  சிம்மாசனம் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு முத்துப் பல்லக்கில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அய்யா அவர்களுடன் நானும் அமர்ந்து வந்தோம்.

வழி நெடுக மலர்மாலைகள் அளித்து, தாய்மார்களும், தமிழ் மக்களும் கைகூப்பி,  அய்யாவைக் கண்டு உவகை பூத்த காட்சி மெய்சிலிர்க்கக்கூடியதாக இருந்தது. தஞ்சை ரயில்வே ரோடு, மணிக்கூண்டு, கீழவாசல், தெற்கு வீதி போன்று பல முக்கிய வீதிகளைக் கடந்து ஊர்வலம் இரவு 8 மணி அளவில் திலகர் திடலை அடைந்தது! இடையே மழைத்தூறல் விழுந்தது என்றாலும், மக்கள் ஒரு சிறு அளவுகூட கலையவில்லை. ஊர்வலத்தில் புது வேனும் வந்தது. ஊர்வலம் திலகர் திடலை வந்தடைந்தபோது, அங்கு சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர்!  எவ்வளவு ஒழுங்கு, கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர் என்று, பார்த்தோர் அதிசயிக்கும் வண்ணம் அமர்ந்திருந்தனர் அவர்கள்!

கார் பரிசளிப்பு விழா சரியாக இரவு 9 மணி அளவில் தொடங்கியது! தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தலைவர், தோலி.  திரு. ஆர். சுப்ரமணியம் அவர்கள் அறிமுக உரை கூறி, இது மாநிலம் முழுவதற்கும் உரிமை உடைய பொது நிகழ்ச்சியானபடியால், நான் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தியபின், போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராமச்சந்திரன் அவர்களைத் தலைமைதாங்கி நடத்தித் தரும்படிக் கேட்டுக் கொண்டேன்.

அய்யாவின் தொண்டின் பெருமையை விவரித்து விழாத் தலைவர், போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிறப்புரை நிகழ்த்திவிட்டு, குழு சார்பாக அய்யா அவர்களுக்கு ஒரு கடிகாரத்தினைப் பரிசளித்தார்கள்.

அடுத்துப் பேசிய உணவு அமைச்சர் திரு. மன்னை நாராயணசாமி அவர்கள், தஞ்சை, கழகத்திற்குத் தந்து வரும் ஆதரவுபற்றியும் அய்யாவின் தொண்டுபற்றியும் குறிப்பிட்டார்!  குழு சார்பில் டேப் ரிக்கார்டர் ஒன்றினையும் அய்யாவுக்குப் பரிசளித்தார்!

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசுவதற்கு முன்பு, தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் டாக்டர் சின்ன துரை மூலம் அளித்த தங்கசாவியை அய்யா அவர்களுக்குத் தந்து பொன்னாடை போர்த்தினார்!

புதன், 3 மார்ச், 2021

தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் - சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஒற்றைப் பத்தி : ‘அறியப்படாத தமிழகம்!'


‘‘கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ‘மணிலா' எனப்படும் நிலக்கடலை பயிரிடப்பட்டு, எண்ணெய் வித்தாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கிறது.''

‘‘பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும், கோவில்களிலும் பாலிலிருந்து பெறப்பட்ட நெய் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் கூடப் பார்ப்பனர் வீடுகளில் மாதுளங்காயினை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்பட்டுள்ளது. பக்தி இயக்கக் காலத்தில் ஜாதியப் படி நிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது, செக்கினைத் தொழிற் கருவியாகக் கொண்டு எண்ணெய் எடுக்கும் ஜாதியார் கீழ் ஜாதியாகக் கருதப்பட்டனர். 13 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவர்களைச் சக்கரப்பாடியார், சங்கரப்பாடியார் என்று குறிக்கின்றன.''

‘‘இடைக்காலத்தில் எண்ணெய் அமங்கலப் பொருளாகக் கருதப்பட்டது. எண்ணெய் விற்போர் எதிரில் வருவது நல்ல சகுனம் இல்லை எனவும் கருதப்பட்டது. இக்காலத்தில் எண்ணெய் விற்கும் ஜாதியார் ‘செட்டியார்' என்ற ஜாதிப் பெயரை இட்டுக் கொள்கின்றனர். அக்காலத்தில் அவர்களுக்குச் ‘செக்கார்' என்றும் பெயருண்டு.''

'‘இன்று எல்லா ஊர்களிலும் உணவு விற்கும் கடைகள் உள்ளன. சில ஊர்களில் குடிநீரும் விற்பனைப் பொருளாகி விட்டது. தமிழர் பண்பாட்டில் ‘சோறும், நீரும் விற்பனைக்குரியவையல்ல' என்ற கருத்து இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்போது தெரிகிறது. வறியார்க்குச் சோறிடுதல் அறம் என்கிற கோட்பாடு மட்டுமே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.''

‘‘விசய நகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘ஹோட்டல்' எனும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட பிராமணரும், பிராமணரை அடுத்த மேல்ஜாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.

நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்த பின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே!'' (தொ.பரமசிவன் - ‘‘அறியப்படாத தமிழகம்'')

- மயிலாடன்