புதன், 30 நவம்பர், 2016

பெரியார் நடத்திய ஆங்கில ஏடு ரிவோல்ட் (Revolt) சில நினைவுகள்...

 

தமிழ்நாட்டைக் கடந்து வெளிமாநிலங்-களிலும், வெளிநாடுகளிலும் சுயமரியாதைக் கொள்கைகளை விதைக்க, ‘ரிவோல்ட்’ (Revolt) இதழ் ஆங்கிலத்தில் ‘குடிஅரசு’ ஏட்டின் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு வார ஏடாக கொண்டு வரப்பட்டது. இதன் கொள்கைகளாக தந்தை பெரியார் 11.11.1928 ‘குடிஅரசு’ இதழில்  எழுதியவை.

“ரிவோல்ட்’’ என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடிஅரசு’’ என்னும் தமிழ் வாரப் பத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு நாம் எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது, அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பதுமான கொள்கையை மனசாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.’’ 

‘ரிவோல்ட்’ வெளியிடுவோராகவும் பதிப்பாளராகவும் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பதிவு செய்துகொள்ள அன்னை நாகம்மாள் 19.04.1928 அன்று கோர்ட்டுக்குப் போனார். அப்போது போலீசாரிடம் ரிப்போர்ட் கேட்டிருப்பதாகவும், அது வந்ததும் பதிவு செய்து கொள்வதாகவும் கூறிவிட்டனர்.

07.11.1928ஆம் தேதியிட்ட இதழ் 06.11.1928 அன்று வெளியிடப்பட்டது. விழா கோவை ரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. WPA சவுந்தரபாண்டியன் அவர்கள் வெளியிட்டார்.

‘ரிவோல்ட்’ முதலில் புதன்கிழமைதோறும் வெளிவந்து, பின்னர் ஞாயிற்றுக்கிழமைதோறும் வெளிவந்தது. முதலில் ஈரோட்டிலிருந்தும், சில காலம் சென்னையில் இருந்தும் பின்னர் மீண்டும் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது.

இதன் ஆசிரியர்களாக ஈ.வெ.ராமசாமி அவர்களும் எஸ்.இராமநாதன் அவர்களும் விளங்கினர். பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளராக ஸ்ரீமதி நாகம்மாள் அவர்கள் விளங்கினார்.

ரிவோல்ட் இதழின் முகப்பு பக்கத்தில் இருந்த எழுத்துகளே கவர்ச்சியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்-திருந்தது. “REVOLT” என்று முழுமையாக பெருத்த எழுத்திலோ, அல்லது ‘Revolt’   என்று முதலெழுத்து பெரு எழுத்திலோ மற்றவை சிறு எழுத்திலோ இல்லாமல், முற்றிலும் சிற்றெழுத்துக்--களைக் கொண்ட கூட்டெழுத்-தாக ‘Revolt’ வரையப் பெற்றிருந்தது. அப்பெயர் மட்டும் சிவப்பு வண்ணத்தில் அச்சிடப்-பட்டிருந்தது.

தொடர்ந்து எழுதியவர்கள் பெரியார் ஈ.வெ.ரா., எஸ்.இராமநாதன், நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சிதம்பரம்பிள்ளை, செல்வி ஞானம். அடிக்கடி எழுதியவர்கள்: வழக்கறிஞர் லட்சுமிரதன்பாரதி, ஜி.சுமதிபாய், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி, இந்திராணி, ஆர்.கே.சண்முகம், கே.எம்.பாலசுப்பிரமணியம், விஸ்வநாதன்.

எப்போதாவது எழுதுபவர்கள்: எஸ்.கே. நாயர், எஸ்.எஸ்.பாரதி, செல்வி குஞ்சுதம், கே.சிவஞானம், ஏ.உத்தண்ட நாடார், நைனா, ரைட்டஸ், திரிகூட சுந்தரம், எஸ்.எம்.மைக்கேல். இதில் தொடராக நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளையால் எழுதப்பட்ட “The Right of Temple Entry” கட்டுரைத் தொடர் புகழ் பெற்றதாகும்.

டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் 01.09.1929 ஏட்டில் எழுதிய ‘A Heartrending Rape’  என்னும் கட்டுரை சாரதா சட்டம் விரைவாக அமலுக்கு வர காரணமாக இருந்தது.

‘Revolt’  இதழ் பற்றி லாகூர் ‘ஜட்பட் தோரட் மண்டல்’, ‘பாம்பே கிரானிக்கல்’, நியூயார்க் உண்மை நாடும் அமைப்பான ‘Truth Seeker’ போன்ற அமைப்புகள் வெகுவாகப் பாராட்டின.

- வை.கலையரசன்

-உண்மை இதழ்,1.15.11.16

திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்!

எத்தனை அம்புகள் நம்மை நோக்கி வந்தாலும்

திராவிட இயக்கத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!

தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

சென்னை, நவ.30- திராவிட இயக்கம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; இதனை எவராலும் வீழ்த்த முடியாது என்றார் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று மாலை (29.11.2016) நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் தி.மு.க  பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

திராவிடப் பேரியக்கத்திற்கு

நாம் எந்நாளும் காட்ட வேண்டிய நேசம்!

நம் தந்தையை எப்படி கொண்டாடு கிறோமோ, நமது தாயை எவ்வாறு போற் றுகிறோமோ, நம் நாட்டை எப்படி நேசிக் கிறோமோ, நம்முடைய மாநில மக்களை எப்படி மதிக்கிறோமோ, அந்த வகையில் நம்மை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கக்கூடிய திராவிடப் பேரியக்கத்திற்கு நம்முடையநேசத்தைதொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்த உணர் வோடுதான்திராவிடஇயக்கத்தின்நூற் றாண்டு விழாவை கொண்டாடிக் கொண் டிருக்கிறோம்.

திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்பதற்கு இந்த மேடையும், அரங்க மும்தான் அடையாளம். இந்த மேடையில் இருப்பவர்கள் நேரம் பார்க்காமல் எந்த குலத்தில் பிறந்திருக்கிறார்கள் என்ற பேதம் பார்க்காமல், மனித குலத்துக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் நாம் பார்க்கிறோம். அதுதான் இந்த நூற் றாண்டு விழாவின் சிறப்பு, தமிழகம் இன்று கண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய வெற்றி என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்த விழாவில் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்கள்என்னகுலத்தில்பிறந்தி ருக்கிறார்கள் என்ற பேதம் பார்க்காமல் அம்ர்ந்திருக்கிறீர்கள். இந்த அரங்கம் மட்டுமல்ல, அரங்கத்துக்கு வெளியே சென்றுபேருந்திலோ,ரயிலிலோ,சேர் ஆட்டோவிலோ பயணிக்க இருக்கிறீர் கள். அப்படிப் பயணிக்கின்ற நேரத் தில் யார் என்ன குலம் என்று பார்க் காமல் பயணிக்கிறீர்கள். இதுதான் நூற்றாண்டுக் கால திராவிடர் இயக்கத்தின் வெற்றி. இந்த தமிழகத்தில் மட்டுமல்ல, தென்னகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா முழு வதும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. திரா விட இயக்கத்தின் சாதனை இதுதான். நூறாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் நிலை என்ன?

அய்யாவுக்கு “தந்தை பெரியார்’’ எனப் பெண்கள் பெயர் சூட்டி மகிழ்ந்த நிகழ்வு!

உதாரணத்துக்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புவது,  வடசென்னை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒற்றை வாடை அரங்கத்தில் 1890- ஆம் ஆண்டு இந்து வினோத சபை சார்பாக ஒரு நாடகம் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட நாடகத்துக்கு ஒரு விளம்பரப்பலகை வைத்திருக்கிறார்கள். அந்த விளம்பரப் பலகையில்இருக்கக்கூடியஒருவாச கம் “பஞ்சமர்களுக்கு இந்த அரங்கில் இடமில்லை” என்று அதில் எழுதப்பட்டி ருந்தது. அதாவது கட்டணம் செலுத்தினா லும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் இடம்பெற முடியாத நிலை அன்றைக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஜாதிக் கொடுமை, தீண்டா மையை மாற்றிட பாடுபட்டு வெற்றி பெற்ற இயக்கம்தான் நம்முடைய திராவிட இயக்கம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. “பஞ்சமர்களுக்கு இந்த அரங்கில் இடமில்லை’’  என்று சொன்ன அதே ஒற்றை வாடை அரங்கத்தில் பஞ்சமர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்க ளும் பங்கேற்கக்கூடிய வகையில் பல நிகழ்ச்சிகள், பல நாடகங்களை நடத்திய இயக்கம்தான்நம்முடையதிராவிட இயக் கம். இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால்1938- ஆம் ஆண்டு. அதே அரங்கத்தில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில்தான் தந்தை பெரியார் அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத் தையே வழங்கிச் சிறப்பித்தார்கள். திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் இயக்கம்தான் நீதிக்கட்சி. அது 1917-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னரே 1912-ஆம் ஆண்டு டாக்டர் நடேசன் அவர்கள் ‘திராவிடர் சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கினார். அப்போது உயர்சாதி சார்ந்த மாணவர்களுக்கு கிடைத்த கல்வி வசதி மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. சென்னையில் அவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது.

இடஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த கம்யூனல் ஜி.ஓ.

அதைவிடக் கொடுமை என்னவென்று கேட்டால், அங்கிருக்கக் கூடிய உணவ கத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. அப்படி ஒரு கொடுமை. இப்படிப்பட்ட நிலையில் டாக்டர். நடேசனார் அவர்கள், திராவிடர் மாணவர் விடுதியை தொடங்கி, மாணவர்கள் உணவும், உறைவிடமும் கிடைக்க வழிவகை செய்தார்கள். 1920 ஆம் ஆண்டிலே, பிரிட்டிஷ் காலத்தில், இரட்டை ஆட்சி முறையில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. 1937 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்த நீதிக்கட்சி காலத்திலேதான் சமூகநீதிக்கு அடித்தளமாக இருக்கக் கூடிய வகுப்புவாரி உரிமைக்கான கம்யூனல்ஜி.ஓ.ஏற்படுத்தப்பட்டு,அதன் மூலமாகவேலைவாய்ப்பில்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தாழ்த்தப் பட்டவர்களை  இழிவான சொற்களால் அழைக்கக் கூடாதென அதற்கு மாற்றாக ஆதி திராவிடர் என்ற பெயரை பதிவேட்டில் ஏற்றியது நீதிக்கட்சிதான் என்பதை  நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுளின் பெயரால், வர்ணாஸ்ர மத்தின் பெயரால், தேவதாசி தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் குல வழக் கத்தை ஒழித்ததும் நீதிக்கட்சிதான். இங்கு எல்லோரும் பெருமையோடு சொல்வதுபோல,பெண்களுக்குவாக்குரி மையைஅளித்ததுமட்டுமல்லஅவர் களுக்கு கல்வி வாய்ப்பை உருவாக்கி யதும் நீதிக்கட்சிதான்.

‘மதிய உணவுத் திட்டம்’

முதன் முதலில் கண்டவர் வெள்ளுடை வேந்தர்!

மூத்த தலைவரான வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் சார்பிலே, அந்த மாநகராட்சியினுடைய பள்ளிகளிலே இலவச மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.  கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், அனைத்து சமூகத்தினரின் உரிமையை நிலைநாட்டவும் இந்து அறநிலைய சட்டத்தை பனகல் அரசர்தான் நிறை வேற்றினார். அப்போதெல்லாம், மருத் துவம் படிக்க வேண்டுமென்றால், சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு நிபந்தனை இருந்தது. அந்த நிலையை தகர்த்து அனைவரும் மருத்துவம்பயிலும் நிலையை ஏற் படுத்தியவர் பனகல் அரசர். 1937 ஆம் ஆண்டு வரை நீடித்த நீதிக்கட்சி ஆட்சியில் சமூகநீதி சார்ந்த சட்டங்கள் மூலமாகவும், திட்டங்கள் மூலவமாகவும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் நம்முடைய உரிமைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

1967 ஆ-ம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையிலே ஆட்சிக்கு வருகிறோம். முதன்முறையாக தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.

1969 இல் ஆட்சி அமைத்து - உரிமை மீட்புப் போர் நடத்தியவர் பேரறிஞர் அண்ணா

பொறுப்பேற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா? முப்பது ஆண்டுகளுக்குமுன் இருந்த ஆட்சியை மீட்டிருக்கிறோம் என்றுதான் அறிஞர் அண்ணா சொன்னார். ஆக, சொன்னது மட்டுமல்ல, தமிழகத்தின் உரிமை மீட்புப் போரையே அண்ணா அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். உதா ரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால்,இந்தமாநிலத்திற்குதமிழ் நாடு என்று பெயர் சூட்டி, இந்த மாநி லத்தின் பெருமையை மீட்டிருக்கிறார்.

இந்தி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டும் வகையில் இருமொழிக் கொள்கையை நிலைநிறுத்தி மொழி உரிமையை மீட்டெடுத்திருக்கிறார். சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தந்து, ‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை’’ என்று சொன்னவர் நம்மு டைய அறிஞர் அண்ணா அவர்கள்.

அப்படி அண்ணா வழியில், இன் றைக்கும் நம்மை வழி நடத்திக் கொண் டிருக்க கூடிய தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் மெட்ராஸ் என்று இருந்த பெயரை “சென்னை” என்று மாற்றினார்.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தவர் கலைஞர்!

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதிகிடைக்கவேண்டுமென்றுதான்பிற் படுத்தப்பட்டமக்களுக்கு,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தனியாக அமைச்சகத்தை உருவாக்கினார். அதுமட்டுமல்ல, பிற் படுத்தப்பட்டோருக்கு30சதவீதம்,மிக வும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சத வீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குள் சில ஏற்பாடுகளைச் செய்து வழிவகுத்து தந்தவர்தான் நம்முடைய தி.மு.க. தலை வர் கலைஞர் அவர்கள்.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்ன வென்றால், சிறுபான்மை பிரிவினரான இஸ்லாமியருக்கு 3.5 சதவீத தனி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினராக இருக்க கூடிய அருந்ததியினர் சமுதாயத்திற்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தந்து பெரியாரின் கனவை நிறைவேற்றினார் கலைஞர்!

இந்தியப் பிரதமராக இருந்த மதிப் பிற்குரியதிரு.வி.பி.சிங்அவர்கள் மண்டல் கமிஷனின்அறிக்கையைநடை முறைப்படுத்தி ’சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தையும் பெற்றார். அப்போது அவருக்கு துணையாக இருந்த ஒரே ஒரு மாநில முதலமைச்சர் யாரென்று கேட்டால், அது நம்முடைய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்தான். நீதிக்கட்சியின் ஆட்சியிலே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்று சொன்னால், அதை மனதிலே வைத்துக் கொண்டு தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்ற வேண்டும் என்று, சொத்திலே சம உரிமை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், விதவைப் பெண்கள் மறுமண உதவித் திட்டம், மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்காக மகளிர் சுய உதவிக் குழுஎன்றஅற்புதமானதிட்டம்,பெண் கள் அரசியலில் அதிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத் தில்தான் கொண்டுவரப்பட்டது.

நீதித்துறையிலும் அதிகார வர்க்கத்தி லும் இன்றைக்கு திராவிட இனத்தவர்கள் இருக்கிறார்கள் எனச் சொன்னால் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டது நம்முடைய திராவிட இயக்கம்தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அண்ணன்துரைமுருகன்அவர் கள்சொன்னதுபோலஇங்கேபல டாக்டர்களை பார்க்கிறோம், வழக்குரை ஞர்களை பார்க்கிறோம். ஆக இன்றைக்கு அவர்கள் திராவிட சமுதாயத்தில் இருக்கின்றவர்கள் டாக்டர்களாக, வழக் குரைஞர்களாக வரக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கின்றது எனச் சொன்னால் காரணம் பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுதான். அதை ரத்து செய்த தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர்

தலைவர் கலைஞர்

அறநிலைய சட்டத்தை நீதிக்கட்சி கொண்டுவந்தது எனச் சொன்னால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தை கொண்டுவந்து தந்தை பெரியார் நெஞ்சிலே தைத்த முள்ளை எடுத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

போக்குவரத்துக்கழகங்களைஅரசு டமையாக்கியது, தமிழை செம்மொழி யாக மாற்றி தந்தது, சேது சமுத்திர திட் டத்தை கொண்டு வந்தது, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழரின் உரிமைக்கும் என்றைக்கும் துணை நிற்பது திமுக தான். மனிதனை மனிதனே இழுக்கக்கூடிய கை ரிக்ஷாக்களை ஒழித்த தலைவர் நம்முடைய தலைவர் அவர்கள்.

தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ‘‘திருநங்கை’’ எனப் பெயர் சூட்டி அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது, உடல் உறுப்பு பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு மாற் றுத் திறனாளிகள் எனப் பெயர்சூட்டி அவர்களுக்கென தனி துறையை உரு வாக்கியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் குடிசை மாற்று வாரி யத்தில் “ஒன்றே குலம்’’ என்ற உணர் வோடு வாழ்ந்திட, நாடெங்கும் சமத் துவபுரங்களை அமைத்து தந்தை பெரியார் பெயரிலே அமைத்துத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். எல்லாவற்றிலும் சிறப்பாக சொல்ல வேண்டுமென சொன்னால், நம்முடையஇந்தியதிருநாட்டில் பலகுடியரசுத்தலைவர்களையும்,பல பிரதமர்களையும்உருவாக்கிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். அப்படிப்பட்ட இந்த திராவிட இயக்கத்தைத் தான் சிலர் நசுக்கிவிட வேண்டுமென பல செயல்களில் ஈடு பட்டுக் கொண்டிருக்கலாம். இதுவரை அது பலித்தது இல்லை. இனிமேலும் அது பலிக்கப் போவதும் இல்லை.

எத்தனை அம்புகள் நம்மை நம்மை நோக்கி பாய்ந்தாலும் திராவிட இயக்கத்தை எதனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், திராவிட இயக்கம் இயக்கம் என்பது அதனின் அடையாளமாக விளங்குவது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்ற கழக மும். இது ஆயிரங்காலத்துப் பயிர். யாரும் எளிதிலே அறுவடை செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தினுடைய நூற்றாண்டு விழாவில் அதனின் முக்கால் நூற்றாண்டில் பின்னிப் பிணைந்து இருக்ககூடியவர் 93 வயது நிரம்பிய நம் முடைய தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல் 94 வயது நிரம்பிய நம்முடைய பொதுச்செயலாளர் பேரா சிரியர் அவர்கள். அவர்கள் இந்த இயக் கத்தை வழிநடத்துகிறார்கள். நம்மை வழிநடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வரலாற்றைப்பெற்றிருக்கும்தலைவர் களை எந்த இயக்கமாவது பெற்றிருக் கிறதா? பார்க்க முடியுமா? வேறெந்த இயக்கத்திற்கும் இந்த பெருமை வந்து சேர கிடையாது. இன்றைக்கு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ், தமிழகத்தின் நலனுக்கு கழகம் முழு மூச்சோடு பாடுபடும்!

அந்த திராவிட இயக்கத்தின் பாதையில் ஒருவழித்தோன்றலாக இருக் கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகமும் நிச்சயம்,  உறுதியோடு சொல்கிறேன்  நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். பெண்ணுரிமைக்கு இலக்கணமாக, சமூக நீதிக்கு அடையாளமாக இருக்கும் தி.மு.கழகம் என்றைக்கும் தமிழ் மொழிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் முழு மூச்சோடு தொடர்ந்து செயல்படுவோம் என்ற உறுதிமொழியை எடுக்கும் விழா தான் இந்த விழா. அப்படிப்பட்ட விழாவில் அந்த உறுதியை உங்களோடு இணைந்து ஏற்று, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
-விடுதலை,30.11.16

பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி-3

1922 ஆம் ஆண்டில் திருப் பூரில் நடைபெற்ற 28ஆம் தமிழ் மாநில காங்கிரசு மாநாட்டில் தந்தைபெரியார்எதைப்பேசி னார்களோ,அதையேசுய மரியாதை இயக்கம் தொடங்கி -அதுவெற்றிபெற்று,பல போராட்டங்களை நடத்திய பொழுதுகூட-தொடர்ந்துசெய் தார்கள். அவரைப் போல அடிப்படைக் கொள்கைகளில், ஒரு ‘கன்சிஸ்டன்சி’ என்று சொல் லக்கூடிய  - மாறாமல் தொடர்ந்து அதற்காகவே போராடிக் கொண் டிருந்த ஒரு தலைவர், ஒரு இயக்கம் வேறு இருக்கவே முடியாது.

அந்த வகையில் நண்பர் களே, தோழர்களே!

நீங்கள் நினைத்துப் பாருங் கள் சட்ட எரிப்பு என்ற ஒரு அறிவிப்பினைக் கொடுத்தவுடன், இந்திய அரசாங்கம் ஆடிப் போயிற்று. இங்கே காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். மத்தியில் பிரதமராக நேரு அவர்கள் இருந்தார்.

மிரட்டிப் பார்த்தார்கள். மூன்றாண்டுகள் சிறைச்சாலை; ஆயிரம் ரூபாய் அபராதம் என்று பெரியாருக்காகவே அந் தச் சட்டம் வந்தது.

திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்பிற்காகநடத்தியபோராட் டங்களுக்காகவே - அதனைத் தடுப்பதற்காகவேஅந்தச்சட்டத் தைக் கொண்டு வந்தார்கள். மூன்றாண்டுகள் சிறைத் தண் டனை என்று சொன்ன நேரத்தில், தந்தை பெரியார் அவர்களும், அவருடைய தொண்டர்களும் நடந்தவிதம் இருக்கிறதே, யாரையும் மயிர்க்கூச்செறிய வைக்கக்கூடிய ஒன்று என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

பெரியார் எழுதினார்:

மூன்றாண்டுகள் என்ன? முப்பதுஆண்டுகள்தண்டனை கொடுத்தாலும்,எங்கள் உயிரை அதற்காகத் தியாகம் செய்வோமே தவிர, நாங்கள் எங்கள் கொள்கையில், லட்சி யத்தை அடையும் வரையில் பின்வாங்கமாட்டோம்; ஓயமாட் டோம் என்று அறிவித்து, பெயர்ப் பட்டியலைக் கொடுங்கள் என் றார்.

எங்களுக்கும்பெயர்ப்பட் டியலைஅனுப்புங்கள்,உங்கள் ஊரிலுள்ள காவல் நிலையத்திற் கும் அனுப்புங்கள் என்று சொன்னார் தந்தை பெரியார்.

இப்படி ஒழுங்கான முறை யில், சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொதுச் சொத்துக்கு நாசமில்லாமல் போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொது ஒழுங்குக்குப் பங்கம் இல்லாமல் போராட்டம் நடத்துகின்ற இயக்கம் - பொதுமக்களுக்கு சங்கடத்தைத் தராத இயக்கம் - தங்களை அந்தக் கொள்கைக்காக வருத்திக் கொள்கின்ற ஒரு இயக்கம் என்று சொன்னால், அது முழுக்க முழுக்க அன்றைய சுயமரியாதை இயக்கம் - பிறகு திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்ட - திராவிடர் கழக மான இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக அதனைச் செய்தார்கள்.

தோழர்கள்பயந்துபோனார் களா? காலையில் போய், மாலை யில் வருவோம் என்கிற அந்த உணர்வோடு இப்பொழுது பல போராட்டங்கள் நடக்கின்றனவே,  அது போலவா?  அப்பொழுது அப்படியில்லை.

பெரியார் சொன்னார்,

யாருக்குவாய்ப்புஇருக் குமோ, அவர்கள் சிறைச்சாலை யில் நீண்ட காலமாக இருக்க வேண்டியிருக்கும். அதற்கான வாய்ப்புஉள்ளவர்கள்மட்டுமே வாருங்கள் என்று தொடக்கத்தி லேயே கூறி விட்டார்.

அப்படி வருகின்ற நேரத் தில், 10 ஆயிரம் பேர் இந்திய அரசியல் சட்ட நகலைக் கொளுத்தினார்கள். மூன்றாண்டு சிறைத் தண்டனை என்று சட்டம் வந்த பிறகும்கூட கொளுத்தினார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பெரியார் சொன்னதை, ராணு வக் கட்டுப்பாடு போன்று, அவருடைய தொண்டர்கள் ஏற்றார்கள்  - சிறைப்பட்டார்கள்.

அன்றைய காவல்துறை 3 ஆயிரம் பேரை மட்டும் தான் கைது செய்தது. அதில் 6 மாதம் முதற்கொண்டு 3 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்தவர்கள் அந்த 3 ஆயிரம் பேரும் சிறையில் அவர்கள் நடத்தப்பட்டவிதம் - மிகக் கொடுமை, கேவலம்!

மலம் அள்ளுவதிலிருந்து, உலக்கைக்கொண்டுநெல் குத்துவது வரையில், அவர் கள் ஏதோ மிகப்பெரிய குற்ற வாளிகள் போன்ற அளவில்; ஜாதி ஒழிப்பிற்காகப் பாடுபட்ட அந்த மாபெரும் வீரர்கள் - தியாக மறவர்கள் அந்தத் தண்டனையை மகிழ்ச்சியோடு தான் ஏற்றுக்கொண்டார்கள்.

அப்படி அவர்கள் சிறைச் சாலையில் இருந்தபொழுது, உள்ளேயும், வெளியேயும் 18 உயிர்கள் ஆண்களும்- பெண் களுமாக இருபாலரும் இறந்து வரலாறு படைத்தார்கள்.

சிறைச்சாலையில் இறந்த வர்களின் உடலைப் பெற்று, அந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தக்கூடிய வாய்ப்பை, அன்னை மணியம் மையார் அவர்களும், நானும், தோழர்களும் பெற்றது  - எங்கள் வாழ்க்கையில், இந்தத் தியாக மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மிகப்பெரிய வாய்ப் பாகும்.

இறந்தவர்களின் குடும்பத்தி னருக்கு ஆறுதல் சொல்வதற்காக  சென்றபோது - லால்குடியைச் சேர்ந்த நாகமுத்து அவர்கள் இறந்தபோது, அவருடைய தாய் சொன்னார்,

எனக்கு இன்னொரு மகன் இருக்கிறான்; அய்யா அவர்கள் மீண்டும்போராட்டத்தைஅறி வித்தால், அவனை நான் அனுப்புவேன் என்றார்.

இப்படி ஒரு இயக்கத்தை - ஜாதி ஒழிப்பிற்காக தோழர் களைப்பார்த்ததுண்டா? கொண்ட லட்சியத்திற்காக இப் படி பாடுபட்டவர்களைத்தான் கண்டதுண்டா?

அதைவிட இன்னொரு மிக முக்கியமான செய்தி:

18 வயதுக்குட்பட்ட சிறுவர் கள் கூட சட்டத் தாளைக் கொளுத்தித் தண்டனைத் தழும்பை ஏற்றனர்.

வேலூர் சிறைச்சாலையில்  திருச்சி வாளாடியைச் சேர்ந்த சிறுவன் பெரியசாமி ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றி ருந்தான்.

அன்றைய தினம் வேலூர் சிறைச்சாலைக்குச் சென்ற  ஆளுநர் விஷ்ணுராவ் மேதி - அங்கே இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து,

இவன் என்ன குற்றம் செய்துவிட்டுவந்தான்?என்று அருகிலிருந்த சிறை மேலதிகாரி யைக் கேட்டார்.

அந்த சிறை மேலதிகாரி சொன்னார், இந்தப் பையன் அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி, ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று இருக்கிறான் என்றார்.

ஏன் இப்படியெல்லாம் செய்தாய்? சரி, நீ தெரியாமல் செய்திருப்பாய். நான் உனக்காகப் பரிந்துரை செய்து, விடுதலை செய்யச் சொல்லுகிறேன். நீ வெளியில் சென்று ஒழுங்காக இருப்பாயா? என்று ஆளுநர் மனிதநேயத்தோடு கேட்டபோது,

அந்த சிறுவன் சொன்ன பதில், ஆளுநரையும், அதிகாரி களையும், மற்றவர்களையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

காரணம் என்னவென்று சொன்னால்,

அந்த சிறுவன் சொன்னான்,

‘‘அய்யா நான் வேறு எந்தத் தவறும் செய்துவிட்டு சிறைச்சாலைக்குள் வரவில்லை. சமூகத்திற்காக, ஜாதி ஒழிப்பிற்காக எங்களுடைய தலைவர் தந்தை பெரியார் அழைப்பு விடுத்தார். அதனுடைய கருத்துப்படி நான் கொளுத்திவிட்டுவந்திருக்கி றேன். மீண்டும் பெரியார் போராட்டம்நடத்தினால்,அதில் கலந்துகொள்வேன்; சிறைத் தண்டனைக் கொடுத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற் பேன்’’ என்று சொன்னான்.

இதைக் கேட்டு, அசாமிலி ருந்து வந்த ஆளுநர் விஷ்ணு ராவ் மேதி அவர்கள் வியந்து போனார்.

இப்படி ஒரு இயக்கம், எத்த னையோ போராட்டங்களை நடத்தி, கடைசியாகத்தான் தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு காலத்தில், மிகத்தெளிவாக ஒரு பெரிய வாய்ப்பாக, ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  வேண்டும்‘’ என்று கரு வறைக்குள் நுழைந்து கொண்ட, ஜாதி தீண்டாமைப் பாம்பை அடிக்கவேண்டும் என்று முயற்சி செய்தார்கள்.

அதைப்பற்றி நாளைப் பார்ப்போம்...

-விடுதலை,30.11.16

செவ்வாய், 29 நவம்பர், 2016

பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி-2


வெளிநாட்டிலிருந்து கிறிஸ்தவ மதமோ, இஸ்லாமிய மதமோ வந்தது என்று சொன் னாலும், அவை இங்கே இறக் குமதி செய்யப்பட்டு,  மத முத் திரையோடு மக்கள் இங்கே கொண்டுவரப்படவில்லை.  அதனைப் பரப்புகின்றவர்கள், ஒருவர், இருவர் வந்திருக்கலாம். ஆனால், இங்கே இருக்கின்ற பழைய இந்துக்கள்தான், அவர்கள் மதம் மாறி இஸ்லாம் மதத்திற்குச் சென்றார்கள்; கிறிஸ் தவ மதத்திற்குப் போனார்கள். காரணம், பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய ஜாதி, அதைவிட மிக மோசமாக நடத்தப்படக்கூடிய, அதனுடைய அடிப்படையைக் கொண்டிருக்கக்கூடிய தீண் டாமையே!

ஜாதியை அடிப்படையாக வைத்துதான் தீண்டாமை உரு வாகியிருக்கிறது.

உலகத்திலேயே தொடக் கூடாத மனிதன், பார்க்கக்கூடாத மனிதன், நெருங்கக்கூடாத மனிதன்,

Untouchable, unapproa- chable, unseeable

என்றெல்லாம்  இங்கு இருக் கின்றன என்று சொன்னால், இதைவிட மிகப்பெரிய கொடுமை எங்கே இருக்க முடியும்? எங்கே தான் பார்க்கவும் முடியும்?

நாம் சொல்வதெல்லாம் ஏதோ பழைய காலத்துச் சங்கதி என்று யாரும் ஒதுக்கிவிட முடியாது.

பிரபலமான பிரச்சினைக் குரியதாக இருந்து பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டு, இன்றைக்கும் கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ் வளித்துக் கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பான மண்டல் கமிசன் அறிக்கையில் (இது, மத்திய அரசாங்கத்திற்குத் தெளிவாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது).  இது சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அந்த மண்டல் கமிசனைப்பற்றி ஒரு தீர்ப்பு - அதற்கு விவகாரம் ஏற்பட்டு - அதனுடைய பரிந் துரைகளை அரசு ஏற்றபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், வேலை வாய்ப்புகளில் மட்டும் முதற்கட்டமாக ஏற்ற போது, அங்கே என்ன பிரச்சினை என்று சொன்னால், நண்பர்களே!

அதற்கு எதிராக, உச்சநீதி மன்றத்திற்குச் சென்றார்கள். அங்கே 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது - 1991-1992 ஆம் ஆண்டுகளில்.

அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில், அந்தத் தீர்ப்பு  (இந்திரா - சகானி வழக்கு) முற்போக்கு ஜாதி என்று கருதப் படக்கூடிய ஒருவரால்தான் எழுதப்பட்டது.

அந்த நீதிபதிகள் அமர்வில் தலைமை நீதிபதியும் இருந்தார். அந்தப் பெரும்பான்மையான தீர்ப்பில்கூட, தெளிவாக - இந்தியாவில் ஏறத்தாழ 4 ஆயிரம் ஜாதிகள் இருக்கின்றன. இந்து மதம் என்பது இருக்கிறதே, அது வருண தருமத்தையும், அதேபோல, கருமா தத்துவத்தையும் அடிப் படையாகக் கொண்டிருக்கக் கூடியது.

அதன் காரணமாகத்தான், காலங்காலமாக படிக்காத மக்கள், படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பது பதிவாகியிருக்கிறது.

உலகத்தில் சுதந்திரமடைந்து இன்றைக்கு 70 ஆண்டுகள்  ஓடியிருக்கின்ற ஒரு நாட்டில், மனிதனுக்கு மற்ற சுதந்திரங்கள் எல்லாம் ஒருபுறம் கிடக்கட்டும்; தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்கள், சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பஞ்சமன் இருக்கலாமா? பார்ப்பான் இருக்கலாமா?  என்று கேட்டார்.

அவருக்கொன்றும் தனிப் பட்ட முறையில் எவர்மீதும் கோபம் கிடையாது. தனிப்பட்ட முறையில் எவர்மீதும் வெறுப்பை உண்டாக்கவேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. ஒரு மனிதனுக்குள்ள வாய்ப்பு, இன் னொரு மனிதனுக்கு மறுக்கப் படலாமா?

ஒரு மனிதன் பிறவியின் காரணமாக ஜாதியில் உயர்ந்தவன் என்று சொல்லி, அவனுக்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுப்பது, காலங்காலமாக உழைக்கின்ற மக்களுக்கு, இந்த மண்ணுக்குரிய மக்களுக்குப் பிறப்பின் காரண மாக அந்த வாய்ப்புகளை மறுத்திருக்கிறார்கள் என்று சொன் னால், அது எப்படி நியாயம்? எனவேதான், சமத்துவம் என் பதை அடிப்படையாகக் கொண்டு, அந்த சமத்துவத்தையே மய்யப் படுத்தித்தான் ஜாதி ஒழிப்பு என் றாக்கினார்கள்.

அப்படி வரும்பொழுது, பிறவி பேத ஒழிப்பு என்ற மிகப்பெரிய தத்துவத்தைக் கையில் எடுத் தார்கள். அதில் மனிதர்கள் என்று சொல்லும்பொழுது, ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்று தனியே பிரித்துப் பார்க்கவில்லை.  ஏனென்றால், ஜாதி என்ற தத்து வம் இருபாலருக்கும் பொருந் தக்கூடியதாகத்தான் அன்றைக் கும் இருந்தது; இன்றைக்கும் இருக்கிறது.

எனவே, அது வெறும் ஆண்களுக்கு மட்டும் பொருந்தக் கூடியதல்ல. எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் தன் னுடைய அறிவியல் போக்கை, சிந்தனையை இன்னும் தாராள மாக செலவிட்டு, பிறவி பேதம் என்பது இருக்கிறதே - அது உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்பதாக மட்டும் மய்யப்படுத்தப்படவில்லை. மாறாக, 'ஆண் பிறவியிலேயே உயர்ந்தவன்; பெண் பிறவி யிலேயே தாழ்ந்தவள்' என்று ஆக்கப்பட்டுள்ளது.

ஜாதி அடுக்கு முறைகள் மனுதர்மத்திலும்சரி, பகவத் கீதையிலும் சரி, இரா மாயணத்திலும், மகாபாரதத்திலும் சரி மிகத் தெளிவாக பல்வேறு கொடுமைகளான நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவை நடந்தனவா? இல்லையா?  என்பது பிறகு; ஆனால், மனுதர்மம் நாட்டில் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கக்கூடிய அதே அடிப்படையில்தான், இன்றைக்கும் 'தீண்டாமை' ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டத்தில் செய்தார்களே தவிர, இந்திய அரசியல் சட்டத்தின் மூலம், சுதந்திரம் வந்து 70 ஆண்டுகாலத்தில், இன்னமும் ஜாதி ஒழிக்கப்படவில்லையே!

ஜாதிதான் தீண்டாமையி னுடைய விஷ விருட்சம். ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டால், தீண்டாமை இருக்க முடியாது. ஆகவேதான், தந்தை பெரியார் அவர்கள், அரசமைப்புச் சட்டத் தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்ற இடத்தில், ஜாதி என்ற சொல்லைப் போடுங்கள் என்று சொன்னார்.

தெருவில் நடக்கின்ற உரி மைக்காகப் போராடினோம், படிக்க உரிமை - அதற்காகப் போராடினோம், வெற்றி பெற் றோம். அதுபோல, உண்ணு வதற் குரிய இடத்துக்கான உரிமை, அதற்காகப் போராடி னோம், அதிலே வெற்றியும் பெற்றோம்.

(நாய்களும், பறையர்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்று சென்னை மவுண்ட் ரோடு, ஜார்ஜ் டவுன் போன்ற இடங்களில் உணவு விடுதிகளில் போர்டுகள் மாட்டப்பட்டிருந்தன. இரயில் நிலையங்களில் உணவகங்களில் பிராமணாள், சூத்திராள் சாப்பிடும் இடம் என்று விளம்பரப் பலகைகள் மாட்டப்பட்டு இருந்த காலம் உண்டு. அவற்றை எல்லாம் மாற்றியமைத்தோம்).

இவை எல்லாவற்றையும்விட ஜாதிப் பாம்பை நாங்கள் இடையறாமல் அடித்து, அடித்து அதனை ஒழிக்கவேண்டும் என்கிற நேரத்தில், அந்தப் பாம்பு  பாதுகாப்பான ஓர் இடத்தில் நுழைந்து கொண்டது. அதுதான் கோவில் கருவறை!  தன்னுடைய 95 ஆம் வயதில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும்'' என்கிற மிகப்பெரிய போராட்டத்தினை பல கட்டங்களில் அறிவித்தார், அதனை நடைமுறைப்படுத் துவதற்காக நானே களத்தில் நிற்பேன் என்றார். அதற்காக மாநாடுகளை நடத்தி, அதன் முடிவுகளையெல்லாம் மக்களுக்கு அறிவித்தார். அதற்கிடையில், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாக, அரசியல் சட்டத்தினுடைய நகலை - ஜாதி ஒழிப்பிற்காக எரித் துக்கூட காட்டினார் (26.11.1957).

சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? பறையன் இருக் கலாமா? பள்ளன் இருக்கலாமா? சக்கிலியன் இருக்கலாமா? தொடக் கூடாதவன் இருக்கலாமா? என் றெல்லாம்  தந்தை பெரியார் கேள்வி எழுப்பி, மிகப்பெரிய போராட்டங்களை அடுக்கடுக்காக நடத்தியபொழுது, அதைப்பற்றி கவலைப்படாத ஆட்சி இருந்த நேரத்தில், தங்களுடைய உணர் வுகளைக் காட்டுவதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் நகலை எரித்து, நாங்கள் எங்களுடைய உணர்வுகளைக் காட்டுவோம் என்றார்.

இதுவரையில் இந்திய வரலாற் றில், ஏன் உலக வரலாற்றிலே கூட, நாம் தேடிப் பார்க்கும்பொழுது, அரசியல் சட்டத்தை - திட்டமிட்டு எரித்த ஒரு இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர வேறு ஏது மில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற சகோதரத்துவம், சமத்துவம் அதே போல, சுதந்திரம் என்பதைப்பற்றிநாம் வரவேற்றாலும், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை களாக இருந்தாலும் கூட, ஜாதியைப் பாதுகாக்கின்ற நிலையிலிருந்து அது மாறுபட வில்லையே! எனவே, அந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வாருங்கள் என்பதை வலியுறுத் துவதற்காகவும், அந்த ஜாதியைப் போக்கவேண்டும் என்ப தற்காகவும் மக்கள் மத்தி யில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று, எண்ணினார் பெரியார் - எண்ணியபடியும் தன் இறுதி மூச்சு அடங்கும் வரை செய்தும் கொண்டும் இருந்தார்.

சுவாசிப்போம் நாளை...
-விடுதலை,29.11.16

திங்கள், 28 நவம்பர், 2016

பெரியாரை (சு)வாசிப்போம் !

பெரியாரை (சு)வாசிப்போம் எனும் தலைப்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் இப்பகுதியில் எழுதப்படும் கருத்துச் செறிவும், தகவல்களும் மிகுந்த கட்டுரைகள் இளைஞர்களும், புதிய தலைமுறையினரும் அறிந்துகொள்ளவேண்டிய அரிய கருவூலமாகும்.

வாசியுங்கள் - சுவாசியுங்கள்!

அறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களை வாசிக்க வாருங்கள் தோழர்களே, சான்றோர்களே!

தோழர்களே என்று சொல்லும்பொழுது தோழியர்களை விட்டுவிட்டீர்களா? என்று கேட்காதீர்கள்.

பெரியார்,‘தோழர்களே’என்று அழைத்தபோதே, அது இருவருக்கும் சம வாய்ப்பு - சமத்துவம் என்ற  அந்த தத்துவத்திலேதான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். எனவே, இதில் முப்பாலரும் இணைந்திருக் கின்றனர். முப்பாலர் மட்டுமல்ல, எப்பாலரும் இதிலே இணைவார்கள். எப்பாலர் யார் என்று சிலருக்கு சங்கடங்கள் அல்லது சந்தேகங்கள் வரலாம்.

எப்பாலர் என்பவர் இந்தக் கோளில் மட்டுமல்ல, எங்கேயி ருந்தாலும் - எதிர்காலத்தில் எத்தனையோ மாறுதல்கள் வரும். அதையெல்லாம் உணர்ந்தவர்கள் அவர்கள். இனிவரும் உலகம் எப்படியிருக்கும்? என்றெல்லாம் சொல்லக்கூடியவர்கள்.

ஒரு பேச்சுக்காக மட்டும் என்பதல்லாமல், தனி மனிதர்களிடமிருந்து மாறுபட்டு உயர்ந்த வர்கள். தன்னுடைய அறிவின் தரத்தால் தனி இடத்தைப் பெற்றவர்கள் - அறிவியல் மேதைகள், விஞ்ஞானிகள்.ஆகவே,அவர் களுக்கும்கூடபெரியார்அவர்களுடைய கருத்துகள் வாசிக்கப்படவேண்டியவை-அவர்களும் கூட அதனை சுவா சிக்கக்கூடிய அவசியம் உண்டு என்பதை மிகத் தெளிவாக உணரவேண்டிய காலகட்டம் இது.

தந்தை பெரியார் அவர்கள் மனித குலத்துக்கு சமத்துவம் என்ற தத்துவத்தை முன்வைத்துத்தான், தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.

அந்த இயக்கத்திற்கு, உலகில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிப்பெருமை என்ன? மிகத் தெளிவாகவே அந்த கருத்துக்குரியது - சுயமரியாதை இயக்கம் என்று சொன்னார்கள். அப்படி சொல்லிவிட்டு, அதற்கு விளக்கமும் சொன்னார்கள்.

சுயமரியாதை இயக்கம் இருக்கிறதே, அந்தப் பெயரை திட்டமிட்டுத்தான் வைத்தோம். உலகில் உள்ள அத்தனை அகராதிகளையும் எடுத்துப் புரட்டிப் போட்டுப் பார்த்தாலும், சுயமரியாதை என்ற ஒரு சொல்லுக்கு இணையான சொல் மனிதகுலத்திற்கு வேறு இருக்கவே முடியாது.

அந்த வகையில்தான் மிகத் தெளிவாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சுயமரியாதை இயக்கம் என்று மனித உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும் அந்த இயக்கத்தை இந்தி யாவில் முதன்முதலாக, வேறு எவரும் சிந்திக்காத நிலையில் தோற்றுவித்தார்கள் - புதிய பாதையையும் உருவாக்கினார்கள்.

சமத்துவம் என்னும்போது, அதற்கு அடிப்படை என்ன வென்றால், மனித குலத்திலே பேதமிருக்கக்கூடாது என்பதுதான் மிக முக்கியம். அந்த சமத்துவம் என்பது ஒவ்வொரு துறையிலும் மிகத் தெளிவாக இருக்கவேண்டும் என்றஅவர்களுடையகருத்து இன்றைக்கு உலகத்திலுள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள் ளப்படக் கூடிய - உலகத் தத் துவங்களிலே ஒன்றாக அது அமைந்திருக்கின்றது.

‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்‘ (‘குடிஅரசு’, 11.11.1941) என்று குறள் போல் கூறுகிறார் - சமத்துவ சமதர்ம சீலராம் தந்தை பெரியார்.

அதுமட்டுமல்ல தோழர்களே! இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், சமத்துவத்திற்கு அடிப்படை பகுத்தறிவு! பகுத்தறிவு என்றாலே, அறிவியல் என்று பொருள். சிந்தித்து, சிந்தித்து நேற்று நடந்தவை மாற்றப்படவேண்டும் என்றால், இன்றைக்கு அது தவறு என்று சொல்லி, துணிச்சலாகப் போகக்கூடிய ஒரு சூழல் அவசியம்!

இங்கேதான் மதத்திற்கும், அறிவியலுக்கும் இருக்கின்ற மிகப்பெரிய தனித்தன்மைகள், வேறுபாடுகள் பளிச்சென்று விளங்கும்.

எதையுமே சிந்திக்கக்கூடாது, எதையுமே கேள்வி கேட்கக் கூடாது என்பது மதத்தின் அடிப்படை!

பகுத்தறிவின் அடிப்படை என்பது, எதையும் கேள்வி கேள்! எதையும் முழுமையாக நம்பிவிடாதே என்று தெளிவாக சொல்வதுதான் இந்தப் பகுத்தறிவினுடைய அடிப்படை! அதனை மய்யப்படுத்தித்தான் தந்தை பெரியார் முன்வந்தார். அவர்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் தன்னுடைய இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை.

பதவிக்குப் போவதற்கோ, பதவிகள் பெற்று புகழ் பெறுவதற்கோ, அல்லது பதவிகளினால் லாபம் அடைவதற்கோ தந்தை பெரியார் அவர்கள் ஒருபோதும் எண்ணியதில்லை. மாறாக, அவர் வகித்து வந்த 29 பதவிகளையும் ஒரே கடிதத்தில் எழுதி, ராஜினாமா செய்துவிட்டு, நான் சமூக இயக்கத்திற்கு வருகிறேன்; அதுவும் குறிப்பாக காங்கிரசு பேரியக்கம் அரசியல் கட்சியாக இருந்தாலும்,  அது ஆட்சிக்கு வந்தால், சமூக நோக்கமான ஜாதி ஒழிப்பு, அந்த ஜாதி ஒழிப் பிற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகுப்புரிமை, சமூகநீதி கைகூடும் என்கிற உணர்வை அவர்கள் பெற்றார்கள், நம்பினார்கள்.

காந்தியாரின் நிர்மாணத் திட்டங்கள் அவரைக் கவர்ந்தன.

சமூகநீதிக்கு இடமில்லை என்று சொல்கிறபோது, வெளிப்படையாகவே, இனிமேல் பதவிக்கோ, அரசியல் கட்சிக்கோ போகவேண்டிய அவசியமில்லை. எனவே, சமூக பணிதான் மிக முக்கியம், மனித சமத்துவம்தான் மிக முக்கியம். மானம்தான் மிக முக்கியம் என்று எண்ணி,  அவர்கள் சுயமரியாதை இயக்கம் என்ற அந்த இயக்கத்திற்குக் கால்கோள் விழா நடத்தி, இன்றைக்கு 90 ஆண்டுகளுக்கு மேலாக அவ்வியக்கம் வளர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்திலேயே பற்பலவிடங்களிலும் அது உருவாகியிருக்கிறது.

ஆகவே, சுயமரியாதை என்கிற சொல்லும், அது பரப்பிய கதிரொளியும் சாதாரணமானதல்ல. மனிதர்கள் என்பவர்களுக்கு என்ன அடையாளம் என்று பெரியார் கேட்கிறார்.

‘‘மானமும், அறிவும்தான் மனிதர்களுக்கு அழகு’’ என்ற ஒரு கருத்து  இருக்கிறதே, அது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். அறிவில்லாத மனிதன் என்று சொன்னால், இல்லாதவனுக்குக்கூட கோபம் வருகிறது. உனக்கு மானம் இல்லையா? என்று கேட்கும்பொழுது, சிந்திக்கத் தெரிந்தவன் கோபப்படுகிறான். உணருகிறான்.

அதுபோல, மனிதர்களுக்கு அடையாளமே,  மானமும், அறி வும்தான்.

இது பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒன்று. இதுவே பிராணிகளுக்கு, அய்ந்தறிவு உள்ள பிராணிகளுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

எனவேதான், இந்த சமத்துவத்திற்கு மிகப்பெரிய ஆபத்து - மற்ற நாடுகளில் இருப்பதைவிட, இந்தியாவில் மிக அதிகமாக தேவைப்படுகிறது.

காரணம் என்னவென்றால், உலகில் எங்குமில்லாத மிகப் பெரிய பிறவிக் கொடுமையாக இருக்கக்கூடிய வருணாசிரம தருமம் என்ற ஜாதி இங்கே புகுந்து, மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தி, ஒருவர் உண்ணும்போதுகூட இன்னொருவர் பார்க்கக்கூடாது; ஒருவர் நடக்கின்ற தெருவில் இன்னொருவர் நடக்கக்கூடாது. ஒருவர்படிக்கும்பொழுது,இன்னொருவர் படிக்கின்ற வாய்ப்பையே பெறக்கூடாது என்ற நிலையைப் பலமாக உருவாக்கிக் கட்டமைப்பும் செய்துவிட்டனர்.

மனித குலத்திற்கு எவையெல்லாம் அத்தியாவசியமோ, அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்திய பெருங்கொடுமை - சனாதன மதம், வேத மதம் என்ற பார்ப்பன மதமான ‘இந்து மதம்‘ இங்கு பெரும்பான்மையானதாக விளங்குகிறது.

இந்த நாட்டைப் பொறுத்த வரையில்,மற்றமதங்கள் வளர்ந்ததற்குக்கூட ஒரு பெரிய அடிப்படையான காரணம், மற்றவர்களை இழிவுபடுத்தும், ‘பிறர் உரிமை களைப் பறிக்கும்‘ இந்து மதத்தின் இந்த வருணாசிரம தரும முறை தான் என்பதை யாராலும் மறுக் கப்படவே முடியாத ஒன்றாகும்.

சுவாசிப்போம் நாளை...

-விடுதலை,28.11.16

பார்ப்பனர் கூடாது?


20.07.1930- குடிஅரசிலிருந்து....

பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனத்தில் பார்ப்பனர்களை ஏன் சேர்க்கக் கூடாது என்னும் விஷயம் தஞ்சாவூர் ஜில்லா பாபநாசம் தாலூகா போர்டு தேர்தலைப் பற்றிய இரக சியத்தைத் தெரிந்தால் அதன் உண்மை ஒருவாறு விளங்கும். பாபநாசம் தாலூகா போர்டுக்கு சுமார் 15 அங்கத் தினர்கள் உண்டு. இதில் பார்ப்பனர்கள் 3 பேர். பார்ப்பன ரல்லாதார்  12 பேர்கள். இந்தப் பன்னிரண்டு பேர்களில் 6 பேர் திரு. பன்னீர்செல்வம் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற ஆறு பேர் திரு. வீரய்யா வாண்டையாரைச் சேர்ந்தவர்கள்.

இதில் எந்தக் கட்சி ஜெயிக்க வேண்டுமானாலும் பார்ப்பனர் தயவில்லாமல் முடியாத நிலைமையாகிவிட்டது. ஆக திரு. பன்னீர் செல்வம் கட்சியார் எப்படியாவது திரு. வீரய்யா வாண்டையார் ஜில்லா போர்டுக்குள் நுழையாமல் இருந்தால் போதும் என்று கருதி பார்ப்பனர் இடம் ராஜி பேசப் புறப்பட்டு மூன்று பார்ப்பனரில் ஒருவருக்கு தாலூகா போர்டு தலைமை தானம் கொடுப்ப தாகவும் அதற்குப் பதிலாக தங்கள் கட்சியாருக்கே இரண்டு ஜில்லா போர்டு மெம்பர் பதவியையும் கொடுக்க வேண்டுமென்றும் பேசி முடிவு செய்துவிட்டார்கள்.

இந்தச் சங்கதி திரு. வாண் டையார் கட்சியார் அறிந்து எப்படியாவது திரு. பன்னீர் செல்வத்தை ஜில்லா போர்டில் தோற்கடிக்க வேண்டு மென்று கருதி அதே பார்ப்பனர்களிடம் போய் தாங்கள் அந்தப் பார்ப்பனரில் ஒருவருக்கு தாலுகா போர்டு தலைவர் பதவியும் மற்றொரு பார்ப்பனருக்கு ஒரு ஜில்லா போர்டு பதவியும் கொடுப்பதாகவும் தங்களுக்கு ஒரு ஜில்லா போர்டு மாத்திரம் கொடுத்தால் போதுமென்றும் ஒப்பந்தம் பேசி பழைய ஒப்பந்தத்தை அதாவது பன்னீர் செல்வம் கட்சியாரிடம் செய்து கொண்டிருந்த ஒப்பந் தத்தை இரகசியமாய் முறித்துவிட்டார்கள்.

இந்தச் சங்கதி திரு. பன்னீர்செல்வம் கட்சியாருக்குத் தெரியாது. இந்த நிலையில் தாலூகா போர்டு முதல் மீட்டிங்கி கூடினதும் ஒரு பார்ப்பனனைத் தலைவராக பிரேரபிக்க இரு கட்சியிலிருந்தும் பார்ப்பனரல்லாத இரு கனவான் எழுந்து பிரேரபித்தார்கள். இதிலிருந்தே முதல் ஒப்பந்தக்கார ரருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் சற்று இருந்து பார்த்ததில் விஷயம் விளங்கிவிட்டது.

பிறகு அந்தப் பார்ப்பனரே தலைவராய் தெரிந்தெடுக்கப் பட்டு விட்டார். இதோடு மறுபடியும் ஒரு பார்ப்பனரும் ஜில்லா போர்டு மெம்பராய் தெரிந்தெடுத்து விட்டார். பிறகு திரு. வாண்டையார் ஒரு ஜில்லா போர்டு மெம்பர் பதவியைப் பெற்றார்.

அன்றி இனியும் அந்த போர்டுக்கு இந்தக் காலாவதி வரையில் அந்த மூன்று பார்ப்பனர்களுக்கு இந்த 12 மெம்பர்களும் சதாகாலம் சலாம் போட்டுக் கொண்டு இருந்தால்தான் இவர்களது காரியம் பலிக்கும் இல்லா விட்டால் கஷ்டமான நிலையாகத் தான் போய் விடக்கூடும்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒன்று தோன்றி இருக்காமல் இருந்தால் இன்றையத் தினம் தஞ்சை ஜில்லாவில் திரு. பன்னீர்செல்வம் தலைவராயிருக்கவும் முடியாது; திரு. வாண்டையார் போட்டி போட்டிருக்கவும் முடியாது. இந்த நிலை அடைந்ததை அடியோடு மறந்து விட்டு தங்களுக் குள்ளாக போட்டி போட்டு பார்ப்பனர் அடியில் விழுந்து இருவரும் தவிக்கும் படியான காலம் இப்பொழுதே வந்து விட்டது. இனி பார்ப்பனர்களை உள்ளே சேர்ப்பதென்றாகிவிட்டால் என்ன கதியாகும் என்பதைத் திருவாளர்கள் பன்னீர் செல்வமும் வாண்டையாரும் கவனிக்க முடியாமல் போனாலும் தஞ்சாவூர் வாசிகளான மற்ற பார்ப்பனரல்லா தார்களாவது கவனிக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.

12 பார்ப்பனரல்லாதார்கள் போர்டில் இருந்தும் 3 பார்ப்பனர்கள் மாத்திரம் இருந்து கொண்டு ஒருவர் தலைவராகவும் ஒருவர் ஜில்லா போர்டு மெம்பராகவும் வந்து விட்டார்கள் என்றால் நம்மவர்களின் சுயமரியா தைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா? என்று கேட் கின்றோம் நிற்க, மேல்படி மூன்று பார்ப்பனரில் மீதி உள்ள ஒரு பார்ப்பனரும் வைஸ்பிரசிடெண்ட் வேலையை இது வரை வாங்கி இருப்பார் என்றோ, அல்லது வாங்கிவிடக் கூடுமென்றோ நினைக்கின்றோம்.
-விடுதலை,26.11.16

மறக்க முடியாத நவம்பர் 26!

ஜாதி ஒழிப்பு ‘‘மாவீரர்களுக்கு’’ வீர வணக்கம்! வீர வணக்கம்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை

1957 நவம்பர் 26 அன்று திராவிடர் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்புப் போராட்டம் குறித்து இந்நாளில்  திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நவம்பர் 26 - இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இன வரலாற்றிலும் மறக்கவொண்ணா நாள்! ஜாதி ஒழிப்பு ‘‘மாவீரர்கள் நாள்’.’

சட்டத்தைக் கொளுத்திய நாள்!

ஆம், அந்த நாளில்தான் (26.11.1957) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவினை (13(2), 25(1), 29(1), (2), 368) திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் ஆணையினை ஏற்று எரித்து 2 மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை  ஏற்றதை வரலாறு என்றைக்கும் பேசிக்கொண்டே இருக்கும்.

1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற - 4 லட்சம் பேர் கூடிய ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாட்டில் தந்தை பெரியார் போர்ப் பிரகடனம் செய்தார்.

அரசுக்கு 15 நாள் வாய்தா!

‘‘ஜாதி ஒழிய தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26 ஆம் தேதி அன்று மாலையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநில பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது’’ என்பதுதான் அந்தப் பிரகடனம்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?

இது  சுதந்திர நாடாம்; அதற்கென்று ஓர் அரச மைப்புச் சட்டமாம். அந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்புப் பிரிவுகளாம். ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா?

அன்றைக்கு மட்டுமல்ல - இன்றைக்காவது  இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா?

தந்தை பெரியார் இதனை அறிவித்தவுடன் அரசாங்கம் என்ன செய்திருக்கவேண்டும்? இலட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆயிற்றே - அரசு ஆய்வு செய்திருக்கவேண்டாமா?

மாறாக - சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண் டனை என்ற ஆராய்ச்சியில் தானே ஈடுபட்டார்கள்.

அவசரச் சட்டம் உதயம்!

உண்மை என்ன? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடம்பெற வில்லை. அவசர அவசரமாக திராவிடர் கழகத்தின்  இந்தப் போராட்டத்துக்காகவே ஒரு சட்டத்தை நிறை வேற்றினார்கள்!

தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா(Prevention of Insult to National Honour -1957)

இதன்படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சட்டமன்றத்தில் அன்று அண்ணா எதிர்த்தார். எந்தக் காரணத்துக்காகசட்டத்தைப்பெரியார்எரிக்கிறார் என் பதை யோசிக்க வேண்டாமா? என்றும் கேட்டார். கம் யூனிஸ்டுகள் உள்பட காங்கிரசார் அந்த சட்டத்தை ஆதரித் தார்கள்.

இலட்சிய வீரர்களான தந்தை பெரியாரின் கருஞ் சட்டைத் தோழர்கள் தண்டனையைக் கண்டு அஞ்சுப வர்களா? எந்த உரிமைக்கும் ஒரு விலை உண்டு என்ற நெருப்புக் குண்டத்தில் வார்த்து எடுக்கப்பட்ட மாவீரர்களாயிற்றே!

‘‘தூக்குத்தண்டனையும் ஏற்கத் தயார்!’’

மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ -

கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! பயந்து விட வேண்டியதில்லை - பயந்துவிடமாட்டீர்கள்!

ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்! என்று தஞ்சை மாநாட்டுக்கு முன்பே விடுதலைப் பெரும் படையின் தானைத் தலைவர் தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

‘விடுதலை’யில் பெயர்ப் பட்டியல்!

பெயர் பட்டியல் ‘விடுதலை’யில் வெளிவந்த வண்ணமே இருந்தது. மூன்றாண்டுத் தண்டனை என்று சட்டம் வந்த பிறகும், பெயர்ப் பட்டியல் பெருகிக்கொண்டேதானிருந்தது.

‘‘மிரட்டல் சட்டத்துக்குப் பயந்து அரசியல் சட்டத்தைக் கொளுத்தாமலிருக்க முடியாது.’’

‘‘பார்ப்பான் ஆட்சியில் நீதியைக் காண முடியுமா?’’

‘‘ஜாதியை ஒழிப்பது காட்டுமிராண்டித்தனமா? பார்ப் பான் கூக்குரலுக்குப் பயந்து சாவதா?’’

‘‘ஜாதியை ஒழிக்க வேறு வழிதான் சொல்லேன்’’

என்று ‘விடுதலை’ முழக்கக் குண்டுகளை நாளும் வீசிக் கொண்டிருந்தது!

பத்தாயிரம் பேர் எரித்தனர் -சாம்பலை அனுப்பினர்!

பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அந்தத் தாளைத் தீயிட்டுக் கொளுத்தி சாம்பலை மந்திரிமார்களுக்கு அனுப்பி வைத்தனர் (26.11.1957). குடும்பம் குடும்பமாகக் கொளுத்தினர். நிறைமாதக் கர்ப்பிணிகள் போராட்டத்தில் குதித்தனர்.

சிறையில் பிறந்த குழந்தைக்குச் ‘‘சிறைப்பறவை’’ என்று கூடப் பெயர் சூட்டினார்கள். இரு கண் பார்வையும் இழந்த சிறீரங்கம் தோழர் எம்.மகாமுனி என்பவரும் சிறைக் கொட்டடியில்!

அந்த 16 வயது பையன்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட சட்டத் தாளைக் கொளுத்தித் தண்டனைத் தழும்பை ஏற்றனர். வேலூர் சிறைச்சாலைக்குச் சென்ற  ஆளுநர் விஷ்ணுராவ் மேதி - அங்கே இருந்த சிறுவனை (திருச்சி வாளாடியைச் சேர்ந்த சிறுவனை வீட்டுக்கு ஒரே மகன் - வயது 16) மன்னித்து விடுவிக்கச் சொன்னார்.

கருஞ்சட்டை சிப்பாயாயிற்றே - சிரித்துக்கொண்டே சொன்னான், ‘‘எங்கள் அய்யா ஆணையிட்டால் சட்டத்தை மீண்டும் கொளுத்துவேன்’’ என்றானே பார்க்கலாம் -  ‘கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்‘ என்று கூறி  ஆளுநர் வந்த வழியே சென்றார் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

சில இடங்களில் தோழர்களுக்குக் கைவிலங்குக்கூடப் போடப்பட்டதுண்டு.

மும்பையிலும், ஆந்திராவிலும்கூடக் கொளுத்தினர்.

சிறையிலிருந்தபோது தன் துணைவியர் இறந்த போதும்கூட பிணையில் செல்ல மறுத்த கொள்கைச் சீலர்கள் பற்பலர்.

மலம் அள்ளவும் பணிக்கப்பட்டனர்

சோளச்சோறு, களி உருண்டையும்தான் உணவு! கடுங்காவல் தண்டனை! சில சிறைச்சாலைகளில் மலம் அள்ளவும், கால்வாய்க் கழுவவும்கூட பணிக் கப்பட்டனர். சிறை அதிகாரிகளும், மருத்துவர்களும் மனிதா பிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர் என்றாலும் இலட்சியத்துக்காக இந்தத் தண்டனையை ஏற்று இருக்கிறோம் என்ற உணர்வுதான் உணவைப்பற்றி யெல்லாம் நினைக்காமல் செய்தது!

நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

நீதிமன்றத்தில்கூட எதிர்த்து வழக்காடவில்லை.

‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்! இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அந்தச் சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப் படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான், எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்ற அறிக்கையை கொடுக்கு மாறு தந்தை பெரியார் வெளியிட (‘விடுதலை’, 21.11.1957)  அந்த அறிக்கையைத்தான் ஒவ்வொரு கருஞ் சட்டைத் தொண்டரும் நீதிமன்றத்தில் கொடுத்து, வழங்கப்பட்ட தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்று சிறைச்சாலையைத் தழுவிக் கொண்டனர்.

இதற்கு இணையான போராட்டம் உண்டா?

திராவிடர் கழகம் நடத்திய இந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்கு இணையாக இன்னொரு போராட்டத் தைச் சுட்டிக்காட்ட முடியாது. 59 ஆண்டுகள் ஓடிவிட் டன. ‘சுதந்திர’ இந்தியாவில் அரசியல் சட்டத்தில் இன்னும் ஜாதி - மதப் பாதுகாப்புக் கவசத்துடன் குடியிருக்கவே செய்கிறது என்பது வெட்கக்கேடாகும்.

ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனைக் களங்கள்

ஜாதி ஒழிப்புக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது  திராவிடர் கழகம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார் - கொள்கைக் கோமானாம் நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். அந்தப் போராட்டக் களத்தில்தான் தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்!

தந்தை பெரியார் அவர்கள் ஆணையை ஏற்று மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு முறை சட்டம் செய்தார். ஜாதி வீழ்ந்தால் தங்களின் ஆதிக்கம் வீழும் என்பதை முற்றாக அறிந்த பார்ப்பனர்கள் அவர்களின் குரு பீடமான உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு இப்பொழுது வந்த நிலையில்கூட, பெரியார் - அண்ணா பெயரைச் சொல்லும் இன்றைய தமிழக அரசு அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை. ஆனாலும், நமது பயணமும், பணியும் அழுத்தமாகவே தொடரும்!

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் அறுக்கப்பட்டதே!

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப் பட்டம் துறக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவு - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வது வெட்ககரமானது என்ற மனநிலை தமிழ்நாட்டில் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.

பிராமணாள் ஓட்டல் பெயர்கள் ஒழிக்கப்பட்டது யாரால் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்ற இணையினர் கொல்லப்படுவதைப் பெரிதுபடுத்தி, பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாக ஊடகங்கள் காற்றடித்துப் பறக்க விடுகின்றன.

ஜாதி மறுப்பு - மத மறுப்பு

திருமணங்கள் ஏராளம்

அதேநேரத்தில், ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள் நடப்பதுபற்றி ஒரு வரி எழுதுவது உண்டா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2013-2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத மறுப்புத் திருமணங்கள் (Special Marriage Act) 7235.

2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்றவைகளோ 19,475.

இரண்டரை மடங்கு பெருகிடவில்லையா? இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள், எழுதமாட்டார்கள்.

காரணம், பெரியார் கொள்கைக்கான வெற்றி அவை யல்லவா!

ஜாதிக்கலவரமும் -திராவிடர் கழகப் பணியும்!

திருமணங்களை மய்யப்படுத்தி ஜாதிக் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று திராவிடர் கழகம் தன் பங்களிப்பைச் செய்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இளவரசன் - திவ்யா திருமணத்தை மய்யப்படுத்தி தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கலவரம் செய்து வீடுகளைக் கொளுத்திய நிலையில், அந்தப் பகுதிக்கு உடனடியாகச் சென்று, சில நாள்களிலேயே அனைத்துக் கட்சியினரையும் அழைத்து ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது திராவிடர் கழகம்தானே. நாடெங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ‘மன்றல்’ விழாக்களை கழகம் நடத்திக் கொண்டு வருகிறதே!

சூளுரை மேற்கொள்வோம்!

ஜாதிப் பாம்பு பாதுகாப்பாக இருக்கும் கோவில் கருவறையிலிருந்து அதனை விரட்டியடிக்க உரிய பணிகளில் திராவிடர் கழகம் ஈடுபட உள்ளது.

ஜாதி ஒழிப்பில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றுவோம்!

1957 நவம்பர் இதே நாளில் ஜாதி ஒழிப்புக்காக சட்டத் தாளை எரித்துக் கடும் தண்டனையை அனுபவித்த அந்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்! ஜாதியை ஒழித்து சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி அவர்களுக்குக் காணிக்கையாக்குவோம் என்று இந்த நாளில் சூளுரை எடுப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

 

கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை 
26.11.2016

 

------------------

ஜாதி ஒழிப்புக்குக் களப்பலியான கருஞ்சட்டை மாவீரர்கள்

மணல்மேடு வெள்ளைச்சாமி

பட்டுக்கோட்டை இராமசாமி (ஆசிரியர், ஓய்வு)

வாளாடி பெரியசாமி

லால்குடி நன்னிமங்கலம் கணேசன்

திருச்சி சின்னசாமி

சிறையிலிருந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையாகி வெளிவந்த சில நாள்களிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

இடையாற்றுமங்கலம் நாகமுத்து,  தெய் வானையம்மாள், மாதிரிமங்கலம் இரத்தினம், கோவில் தேவராசன்பேட்டை, நடேசன், திருவை யாறு மஜீத், கவிக்கோட்டை இராமையன், புது மணக்குப்பம் கந்தசாமி, பொறையாறு தங்கவேலு, மணல்மேடு அப்பாதுரை, கண்டராதித்தம் சிங்கார வேலு, திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன், தாராநல்லூர் மஜீத், கீழவாளாடி பிச்சை. உயிரை மட்டும் சுமந்துகொண்டு நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டோர் எண்ணற்றோர்.

 

இதோ ஒரு  புறநானூற்று வீரத் தாய்!

 

ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடையாத்துமங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டதால் திடீரென்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டபொழுதே 24.5.1958 இரவு 1.45 மணிக்கு தமது 53-வது வயதில் மரணமுற்றார்.

5000 மக்கள் கலந்து கொண்ட சவ ஊர்வலம் நடை பெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு சவ அடக்கம் நடைபெற்றது. வழக்கு ஒன்றுக்காக மதுரை சென்றுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டிருந்த அன்னை மணியம்மையாரும், கடலூர் வீரமணியும் (அப்பொழுது அப்படிதான் அழைக்கப்படுவார்) இந்தச் செய்தியைக் கேட்டு, உடனே இடையாத்து மங்கலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அவ்வூருக்கு வந்தபோது நேரம் இரவு 7 மணி. மழைமிரட்டல் காரணமாக 6.30 மணிக்கெல்லாம் சவ அடக்கம் நடைபெற்றுவிட்டது.

மறைந்த தோழரின் வீட்டிற்கு அவர்கள் சென்று மறைந்த தோழர் நாகமுத்து அவர்களின் துணைவியார் சீனியம்மாளுக்கும் 18 வயது நிரம்பிய ஒரே மகனுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

அந்த நேரத்தில் அந்தத்தாய் சொன்ன பதில் அனை வரையும் மயிர்க்கூச்செறியச் செய்தது.

‘‘நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான். அய்யாவின் அடுத்த போராட்டத்திற்கு அவனையும் அனுப்பி நானும் வந்து பலியாகத் தயாராக உள்ளேன்'' என்று கூறினார்.

கருஞ்சட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த  அந்தப் புறநானூற்றுத் தாய்க்கு ஈடு இணை ஏது?
-விடுதலை,2611.16