வியாழன், 3 நவம்பர், 2016

தூதுவந்த சைவப் பண்டிதர்களுக்கு பெரியார் பதில்

புராண, இதிகாசங்களை கொளுத்துவது பற்றி
தூதுவந்த சைவப் பண்டிதர்களுக்கு பெரியார் பதில்
19.1.1943 - விடுதலையிலிருந்து....
சேலம், ஜன. 17 சேலம் ஜில்லா 4ஆவது சுயமரியாதை மாநாடு சென்ற நவம்பர் மாதம் சேலத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெரியார் அவர்கள் உடல்நிலை சரியில்லாது  ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததால் மேற்படி தேதியில் நடத்தாது ஒத்தி வைக்கப்பட்டது. பின் இன்றுநடத்துவதற்காக பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமான வேலைகள் நடைபெற்று வந்தன. மற்றும் இம்மாநாட்டில் திராவிடர்களை இழிவு செய்து அடிமைப் படுத்தும் நூல்களாகிய கம்பராமாயணம், பெரியபுராணம், மனுதர்ம சாஸ்திரம் ஆகியவைகளும் கொளுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது விஷயமாக சில சைவப்பண்டிதர்களும், சேலம் இந்து மகா சபையார் களும், பல பார்ப்பனர்களும், சென்னை பார்ப்பன பத்திரிகைகளுக்கு ஆட்சேபம் எழுத கிளர்ச்சி செய்து வந்தார்கள். மாநாடு நடத்தாமல் செய்வதற்காக சேலத்தில் சிலர் 144 கொடுக்க வேண்டுமென்று சேலம் கலெக்டருக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் பல கையெழுத்திட்ட விண்ணப்பங்கள் கொடுத்திருந்தார்கள்.
போலீஸ் அதிகாரிகளும் மாநாட்டு நிர்வாகிகளை தினம் அழைத்து கொளுத்துவதை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார்க்ள. நிர்வாகிகள் அதற்கு இணங்கவில்லை. அதன் மீது அதிகாரிகள் தாங்கள் மகாநாட்டையோ பொதுக் கூட்டங்களையோ தடுக்க முடியாதென்றும் கூட்டங்களை கலகமில்லாமல் நடத்திக்கொடுக்கக் கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்கள் ஆட்சேபிப்பது பயன்படாது என்றும் சொல்லி அனுப்பிவிட்டு மாநாட்டுக்கும் பொதுக் கூட்டத்திற்கும் 50 ரிசர்வ் போலீஸ்காரர்களையும் சில சார்ஜண்டுகளையும் ஆயுதம் சகிதம் ஆஜராகச் செய்து டிப்டி சூப்ரடெண்டு துரையவர்களே நேரில் இருந்து மாநாட்டை நடத்திக் கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி நடப்பதாகவே தெரிவித்துவிட்டார்கள்.
பெரியாரிடம் தூது: அதன்மீது சிலர் கூடி பெரியாரிடம் நேரில் போய் கேட்டுக்கொள்வதற்கு ஒரு தூது கோஷ்டியை நியமித்து அந்தப்படி சிலர் பெரியாரை வந்து கண்டு கொளுத்துவதை நிறுத்தும்படியும் மற்றபடி அவைகளைக் கண்டித்து எப்படி வேண்டுமானாலும் பேசுங்கள் என்று தாங்கள் மிகவும் கேட்டுக் கொள்ளுவதாகவும் அதிகாரிகளும் சில முக்கிஸ்தர்களும் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று சொல்லி அனுப்பினதாகவும், தாங்கள் அவர்கள் பிரதிநிதியாக வந்திருப்பதாகவும் கிராமத்திற்கு வந்து தெரிவித்தார்கள். அதன் மீது பெரியார் சொன்னதாவது:
அய்யா நீங்கள் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு என்னிடம் வந்ததற்கு நான் உங்களுக்கு மரியாதை செய்ய கடமைப் பட்டவன்.
ஆனால் நீங்கள் அதை கொளுத்துவதால் சாஸ்திரம் போய்விடுவதாகவும் சொல்லுகிறீர்கள். தமிழர்கள் மானம் போகிறதே அதைப்பற்றி கவலை இல்லையா? சூத்திரன், ராட்சசன் என்ற வாக்கியங்களை சகித்துக்கொண்டா கலையையும், மதத்தை யும் காப்பாற்றுவது உங்களை பார்ப்பான் கோவிலிலும் ஓட்டலிலும் சரிசமமாய் நடத்துவதில்லையே, கலைக்கும் மதத்துக்கும் அழும் நீங்கள் இதுவரை இதற்கு ஆக என்ன செய்தீர்கள்? என்றைக்கு ஆவது அவமானப்பட்டீர்களா?
ஆட்சேபனையைக் காட்டினீர்களா? கலைக்காக உயிரை விடுகிறவர்கள் இந்த கொடுமைக்கு அழுதீர்களா? ஜெயிலுக்குப் போனீர்களா? ஆட் சேபணையையாவது காட்டினீர்களா? இதுபோல் கொளுத்துவது இது முதல் தடவை அல்லவென்றும் 1928ஆம் வருடம் முதல் 3,4 தடவை மனுநீதி சாஸ்திரத்தைக் கொளுத்தி இருக்கிறோம் என்றும் பொது இயக்கங்களில் தாங்கள் வெறுப்பதை கொளுத்தி அதிருப்தி தெரிவிப்பது வழக்கம் தான் என்றும், உதாரணமாக பொது இயக்கங்களிலுள்ள தலைவர்களை கொடும்பாவி கட்டி எரித்து வருவதைப் பார்க்கலாம் என்றும் கூறினார்.  மேலும் எங்களை இழிவு செய்து அடிமைப்படுத்தும் புத்தகங் களை கொளுத்துவதற்குப் போகும் எங்களை வேண்டாம் என்று கிளர்ச்சி செய்கிறீர்கள்.
மேற்படி புத்தகங்களிலுள்ள இழிவை நீக்க நீங்கள் இதுவரை என்ன செய்தீர்கள்? சமுதாயத்திலுள்ள இழிவுகளை நீக்கவும் என்ன செய்தீர்கள் என்று மிக ஆத்திரத்துடனும் பல விஷயங்களை கேட்டார். அதற்கு மேற்படி வக்கீல்கள் இன்றிலிருந்து மேற்படி இழிவுகளை நீக்கப் பாடுபடுவதாகவும் மற்றபடி நீங்கள் சொல்லுவது சரிதான் உண்மைதான். இனி ஓட்டலுக்கும் கோவிலுக்கும் செய்யப்படும் கிளர்ச்சிக்கு நீங்கள் சொல்லுகிறபடி தொண்டாற்றுகிறோம் என்றும் சொன்னார்கள்.
அதற்கு பெரியார் அப்படியானால் நாளைக்கு மாநாட்டாரை கொளுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். அவர்கள் என் பேச்கை கேட்பதானால் காரியம் நின்றுவிடும். இல்லாவிட்டால் நான் உறுதி சொல்ல முடியாது என்றார். தாங்கள் சொன்னால் அவிசயம் கேட்டுக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வளவு நல்ல வார்த்தை கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
-விடுதலை,4.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக