ஞாயிறு, 20 நவம்பர், 2016

தாத்தா இரட்டைமலை சீனிவாசன்!


செங்கற்பட்டு மாவட்டம், மதுராந் தகம் அருகில் உள்ள கோழியாளம் என்னும் சிற்றூரில் 07.07.1859 அன்று, இரட்டைமலை---ஆதிஅம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார் இரட்டைமலை சீனிவாசன். சீனி வாசனின் குழந்தைப் பருவத்திலேயே இவரது குடும்பம் விவசாயக் கூலியாக தஞ்சை மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தது.
தஞ்சை மாவட்டத்தில் திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வி யையும், உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தும் படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார்.அதன் பிறகு கோயம் புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே தாழ்த்தப்பட்டோரில் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.
நீலகிரியில் கிழக்கிந்தியக் கம்பெனியில் 1882 ஆம் ஆண்டு எழுத்தர் பணியில் சேர்ந்தார். ரெங்கநாயகி என்பவரை 1888 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனை யாளராக, -சீர்திருத்தவாதியாக,- போராட் டக்காரராக -உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனு பவித்த கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன், தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.
இரட்டைமலை சீனிவாசன் 1904 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு நேட்டால் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இடக்காரண மாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன். தென்னாப்பிரிக்காவில் 1920 ஆம் ஆண்டுவரை பணி புரிந்தார்.
இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1938 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராகச் செயல்பட்டார். தாழ்த் தப்பட்ட மக்கள் மற்றவர்களுக்குச் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங் களிலும், கட்டடங்களிலும் நுழையவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார்.
தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்க தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார். சென்னை மாகாணம் தழுவிய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்க அதிகமான விடுதிகளும், கல்வி உதவிப் பணமும், மற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆரம்பக் கல்வி, இல வசமாகவும் கட்டாயமாகவும் தாழ்த் தப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டுமெனில், தனிப் பள்ளிகள் திறக்கப்பட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை முன் வைத்து முனைப்போடு செயல்பட்டார்.
சென்னை விக்டோரியா மண்ட பத்தில் 07.-10-.1895- அன்று ஓர் மாநாட் டைக் கூட்டினார். அம்மாநாட்டின் மூலம், அரசுத் துறைகளில் தாழ்த்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். மேலும், அரசியல் உரிமைகளை அனுபவிக்கவும், சட்டமன்றங்களில் உரிய பிரதிநிதித்துவம் பெற்றிடவும், அரசாங்க அலுவலகங்களில் இடம் பெறவும், விமானம், கடற்படை, இராணுவம், காவல்துறை, நீதிமன்றம் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றிட வும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வேண்டும் என்று கூறினார்.
சென்னை-- மயிலாப்பூரில் நீதிபதி வசிக்கும் வீட்டிற்கு அருகில் பிராமணர் தெருவில் தாழ்த்தப்பட்டோர் உள்ளே வரக்கூடாது- என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதை உடனடியாக அகற்ற வும், சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் சேர்க்கப்படாத கொடுமையை கண் டித்தும் இரட்டைமலை சீனிவாசன் பிரிட்டிஷ் ஆளுநரிடம் கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். பிறகு அந்த அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப் பட்ட ஜாதி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
கிருஷ்ணா மாவட்டத்தில் 28.04.1894 ஆம் நாள், தமது தலைமையில் நிலப் போராட்டத்தை இரட்டை மலை சீனிவாசன் துவக்கினார். இப்போராட் டத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கிலேய அரசு நிலம் அளித்தது. இந்நிலத்திற்கு பஞ்சமி நிலம் என்ற பெயரும் வைத்தது! தாழ்த்தப் பட்ட மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி பயில அரசு உதவித்தொகை வழங்கவேண்டும். ஒடுக்கப்பட்ட சாதி இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் வயதை ஏனைய, வேறு ஜாதியினர் வயதுடன் ஒப்பிடக்கூடாது; வறுமை, ஏழ்மை ஆகிய காரணங்களால் ஒடுக்கப்பட்ட மாணவர்கள், குறிப் பிட்ட வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்க இயலாத காரணத்தால், வயது வரம்பை தளர்த்திட வேண்டும் என்று அப்போதைய பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
தீண்டாமையை அடியோடு ஒழிப் பதற்கு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தார். தீண்டாமைக் கொடுமை புரிபவர் எவராக இருந்தா லும் அவர்களுக்கு அபராதம் விதிப்ப தோடு, தண்டனை அளித்து அவர் களைச் சிறையில் அடைக்கவேண்டும் என்று கடுமையாக சட்டமன்றத்தில் பேசினார். சிறையிலும் ஜாதிப் பாகுபாடு நிலவியதை கண்டித்ததுடன், குற்றவாளிகளில் உயர்ந்தவன், தாழ்ந் தவன் என்று பார்க்காமல் அனைவ ரையும் சமமாக நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
தமிழக சட்டமன்ற மேலவையில், பல ஏழை மக்களின் உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்  என்ற தீர்மானத்தை இரட்டைமலை சீனி வாசன் கொண்டுவந்தார். மேலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விழா நாள் களிலும், அரசு விடுமுறையின் போதும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றச் செய்தார். ஏழை எளிய மக்கள் மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனரே என மனம் வருந் தினார்.
இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட அரும்பாடுபட்டார்.
இங்கிலாந்தின் இலண்டன் மாநக ரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியா விலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.
வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிற போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டா மைக் கொடுமை ஒழியும். சட்ட மன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும் -என்று வலியுறுத்தினார்.
லண்டனில் நடைபெற்ற இரண்டா வது வட்டமேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்கரும், இரட்டைமலை சீனி வாசனும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கொண்டு வந்த தனித் தொகுதி முறையை காந் தியார் கடுமையாக எதிர்த்து புனேவில் பட்டினிப் போராட்டம் மேற்கொண் டார். இறுதியில் காந்தியாரின் உயிரைக் காப்பாற்ற வேண்டி, காந்தியாரின் விருப்பத்துக்கு விட்டுவிட்டார் அம் பேத்கர். அது பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. டாக்டர் அம் பேத்கரும், இரட்டைமலை சீனிவாச னும் புனே ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு இராவ்சாகிப், திவான் பதூர், இராவ் பகதூர் ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது. இரட்டை மலை சீனிவாசனின் பணி யைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், திராவிடமணி எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் காகப் போராடிய  இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 அன்று தனது எண்பத்து ஆறாம் வயதில் இயற்கை எய்தினார். இந்திய நடுவண் அரசு, 15.08.2000 அன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு சிறப்பு அஞ்சல் வில்லை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.
-விடுதலை ஞா.ம.,16.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக