திங்கள், 28 நவம்பர், 2016

மறக்க முடியாத நவம்பர் 26!

ஜாதி ஒழிப்பு ‘‘மாவீரர்களுக்கு’’ வீர வணக்கம்! வீர வணக்கம்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை

1957 நவம்பர் 26 அன்று திராவிடர் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்புப் போராட்டம் குறித்து இந்நாளில்  திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நவம்பர் 26 - இயக்க வரலாற்றில் மட்டுமல்ல; இன வரலாற்றிலும் மறக்கவொண்ணா நாள்! ஜாதி ஒழிப்பு ‘‘மாவீரர்கள் நாள்’.’

சட்டத்தைக் கொளுத்திய நாள்!

ஆம், அந்த நாளில்தான் (26.11.1957) ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவினை (13(2), 25(1), 29(1), (2), 368) திராவிடர் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் ஆணையினை ஏற்று எரித்து 2 மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை  ஏற்றதை வரலாறு என்றைக்கும் பேசிக்கொண்டே இருக்கும்.

1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற - 4 லட்சம் பேர் கூடிய ஜாதி ஒழிப்பு (ஸ்பெஷல்) மாநாட்டில் தந்தை பெரியார் போர்ப் பிரகடனம் செய்தார்.

அரசுக்கு 15 நாள் வாய்தா!

‘‘ஜாதி ஒழிய தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்றுமுதல் 15 நாள் வாய்தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1957 நவம்பர் 26 ஆம் தேதி அன்று மாலையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநில பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது’’ என்பதுதான் அந்தப் பிரகடனம்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா?

இது  சுதந்திர நாடாம்; அதற்கென்று ஓர் அரச மைப்புச் சட்டமாம். அந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்புப் பிரிவுகளாம். ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா?

அன்றைக்கு மட்டுமல்ல - இன்றைக்காவது  இந்தக் கேள்விக்குப் பதில் உண்டா?

தந்தை பெரியார் இதனை அறிவித்தவுடன் அரசாங்கம் என்ன செய்திருக்கவேண்டும்? இலட்சக்கணக்கான மக்கள் கூடிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆயிற்றே - அரசு ஆய்வு செய்திருக்கவேண்டாமா?

மாறாக - சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண் டனை என்ற ஆராய்ச்சியில் தானே ஈடுபட்டார்கள்.

அவசரச் சட்டம் உதயம்!

உண்மை என்ன? சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடம்பெற வில்லை. அவசர அவசரமாக திராவிடர் கழகத்தின்  இந்தப் போராட்டத்துக்காகவே ஒரு சட்டத்தை நிறை வேற்றினார்கள்!

தேசிய அவமதிப்புத் தடுப்பு மசோதா(Prevention of Insult to National Honour -1957)

இதன்படி 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சட்டமன்றத்தில் அன்று அண்ணா எதிர்த்தார். எந்தக் காரணத்துக்காகசட்டத்தைப்பெரியார்எரிக்கிறார் என் பதை யோசிக்க வேண்டாமா? என்றும் கேட்டார். கம் யூனிஸ்டுகள் உள்பட காங்கிரசார் அந்த சட்டத்தை ஆதரித் தார்கள்.

இலட்சிய வீரர்களான தந்தை பெரியாரின் கருஞ் சட்டைத் தோழர்கள் தண்டனையைக் கண்டு அஞ்சுப வர்களா? எந்த உரிமைக்கும் ஒரு விலை உண்டு என்ற நெருப்புக் குண்டத்தில் வார்த்து எடுக்கப்பட்ட மாவீரர்களாயிற்றே!

‘‘தூக்குத்தண்டனையும் ஏற்கத் தயார்!’’

மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ -

கழகத் தோழர்களே! தீவிர லட்சியவாதிகளே! பயந்து விட வேண்டியதில்லை - பயந்துவிடமாட்டீர்கள்!

ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்! என்று தஞ்சை மாநாட்டுக்கு முன்பே விடுதலைப் பெரும் படையின் தானைத் தலைவர் தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

‘விடுதலை’யில் பெயர்ப் பட்டியல்!

பெயர் பட்டியல் ‘விடுதலை’யில் வெளிவந்த வண்ணமே இருந்தது. மூன்றாண்டுத் தண்டனை என்று சட்டம் வந்த பிறகும், பெயர்ப் பட்டியல் பெருகிக்கொண்டேதானிருந்தது.

‘‘மிரட்டல் சட்டத்துக்குப் பயந்து அரசியல் சட்டத்தைக் கொளுத்தாமலிருக்க முடியாது.’’

‘‘பார்ப்பான் ஆட்சியில் நீதியைக் காண முடியுமா?’’

‘‘ஜாதியை ஒழிப்பது காட்டுமிராண்டித்தனமா? பார்ப் பான் கூக்குரலுக்குப் பயந்து சாவதா?’’

‘‘ஜாதியை ஒழிக்க வேறு வழிதான் சொல்லேன்’’

என்று ‘விடுதலை’ முழக்கக் குண்டுகளை நாளும் வீசிக் கொண்டிருந்தது!

பத்தாயிரம் பேர் எரித்தனர் -சாம்பலை அனுப்பினர்!

பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அந்தத் தாளைத் தீயிட்டுக் கொளுத்தி சாம்பலை மந்திரிமார்களுக்கு அனுப்பி வைத்தனர் (26.11.1957). குடும்பம் குடும்பமாகக் கொளுத்தினர். நிறைமாதக் கர்ப்பிணிகள் போராட்டத்தில் குதித்தனர்.

சிறையில் பிறந்த குழந்தைக்குச் ‘‘சிறைப்பறவை’’ என்று கூடப் பெயர் சூட்டினார்கள். இரு கண் பார்வையும் இழந்த சிறீரங்கம் தோழர் எம்.மகாமுனி என்பவரும் சிறைக் கொட்டடியில்!

அந்த 16 வயது பையன்

18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட சட்டத் தாளைக் கொளுத்தித் தண்டனைத் தழும்பை ஏற்றனர். வேலூர் சிறைச்சாலைக்குச் சென்ற  ஆளுநர் விஷ்ணுராவ் மேதி - அங்கே இருந்த சிறுவனை (திருச்சி வாளாடியைச் சேர்ந்த சிறுவனை வீட்டுக்கு ஒரே மகன் - வயது 16) மன்னித்து விடுவிக்கச் சொன்னார்.

கருஞ்சட்டை சிப்பாயாயிற்றே - சிரித்துக்கொண்டே சொன்னான், ‘‘எங்கள் அய்யா ஆணையிட்டால் சட்டத்தை மீண்டும் கொளுத்துவேன்’’ என்றானே பார்க்கலாம் -  ‘கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்‘ என்று கூறி  ஆளுநர் வந்த வழியே சென்றார் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

சில இடங்களில் தோழர்களுக்குக் கைவிலங்குக்கூடப் போடப்பட்டதுண்டு.

மும்பையிலும், ஆந்திராவிலும்கூடக் கொளுத்தினர்.

சிறையிலிருந்தபோது தன் துணைவியர் இறந்த போதும்கூட பிணையில் செல்ல மறுத்த கொள்கைச் சீலர்கள் பற்பலர்.

மலம் அள்ளவும் பணிக்கப்பட்டனர்

சோளச்சோறு, களி உருண்டையும்தான் உணவு! கடுங்காவல் தண்டனை! சில சிறைச்சாலைகளில் மலம் அள்ளவும், கால்வாய்க் கழுவவும்கூட பணிக் கப்பட்டனர். சிறை அதிகாரிகளும், மருத்துவர்களும் மனிதா பிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர் என்றாலும் இலட்சியத்துக்காக இந்தத் தண்டனையை ஏற்று இருக்கிறோம் என்ற உணர்வுதான் உணவைப்பற்றி யெல்லாம் நினைக்காமல் செய்தது!

நீதிமன்றத்தில் சொன்னது என்ன?

நீதிமன்றத்தில்கூட எதிர்த்து வழக்காடவில்லை.

‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்! இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. அந்தச் சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப் படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால், நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான், எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்ற அறிக்கையை கொடுக்கு மாறு தந்தை பெரியார் வெளியிட (‘விடுதலை’, 21.11.1957)  அந்த அறிக்கையைத்தான் ஒவ்வொரு கருஞ் சட்டைத் தொண்டரும் நீதிமன்றத்தில் கொடுத்து, வழங்கப்பட்ட தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்று சிறைச்சாலையைத் தழுவிக் கொண்டனர்.

இதற்கு இணையான போராட்டம் உண்டா?

திராவிடர் கழகம் நடத்திய இந்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்துக்கு இணையாக இன்னொரு போராட்டத் தைச் சுட்டிக்காட்ட முடியாது. 59 ஆண்டுகள் ஓடிவிட் டன. ‘சுதந்திர’ இந்தியாவில் அரசியல் சட்டத்தில் இன்னும் ஜாதி - மதப் பாதுகாப்புக் கவசத்துடன் குடியிருக்கவே செய்கிறது என்பது வெட்கக்கேடாகும்.

ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனைக் களங்கள்

ஜாதி ஒழிப்புக்காக எத்தனையோ போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது  திராவிடர் கழகம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார் - கொள்கைக் கோமானாம் நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தம் வாழ்நாளில் இறுதிப் போராட்டமாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். அந்தப் போராட்டக் களத்தில்தான் தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்!

தந்தை பெரியார் அவர்கள் ஆணையை ஏற்று மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு முறை சட்டம் செய்தார். ஜாதி வீழ்ந்தால் தங்களின் ஆதிக்கம் வீழும் என்பதை முற்றாக அறிந்த பார்ப்பனர்கள் அவர்களின் குரு பீடமான உச்சநீதிமன்றம் சென்று முடக்கினர்.

உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு இப்பொழுது வந்த நிலையில்கூட, பெரியார் - அண்ணா பெயரைச் சொல்லும் இன்றைய தமிழக அரசு அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை. ஆனாலும், நமது பயணமும், பணியும் அழுத்தமாகவே தொடரும்!

பெயருக்குப் பின்னால் ஜாதி வால் அறுக்கப்பட்டதே!

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப் பட்டம் துறக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவு - தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொள்வது வெட்ககரமானது என்ற மனநிலை தமிழ்நாட்டில் நிலவுவதைப் பார்க்க முடிகிறது.

பிராமணாள் ஓட்டல் பெயர்கள் ஒழிக்கப்பட்டது யாரால் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டாமா?

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்கின்ற இணையினர் கொல்லப்படுவதைப் பெரிதுபடுத்தி, பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாக ஊடகங்கள் காற்றடித்துப் பறக்க விடுகின்றன.

ஜாதி மறுப்பு - மத மறுப்பு

திருமணங்கள் ஏராளம்

அதேநேரத்தில், ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்புத் திருமணங்கள் நடப்பதுபற்றி ஒரு வரி எழுதுவது உண்டா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2013-2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மத மறுப்புத் திருமணங்கள் (Special Marriage Act) 7235.

2014-2015 ஆம் ஆண்டில் நடைபெற்றவைகளோ 19,475.

இரண்டரை மடங்கு பெருகிடவில்லையா? இதைப் பற்றியெல்லாம் பேசமாட்டார்கள், எழுதமாட்டார்கள்.

காரணம், பெரியார் கொள்கைக்கான வெற்றி அவை யல்லவா!

ஜாதிக்கலவரமும் -திராவிடர் கழகப் பணியும்!

திருமணங்களை மய்யப்படுத்தி ஜாதிக் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று திராவிடர் கழகம் தன் பங்களிப்பைச் செய்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இளவரசன் - திவ்யா திருமணத்தை மய்யப்படுத்தி தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் கலவரம் செய்து வீடுகளைக் கொளுத்திய நிலையில், அந்தப் பகுதிக்கு உடனடியாகச் சென்று, சில நாள்களிலேயே அனைத்துக் கட்சியினரையும் அழைத்து ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியது திராவிடர் கழகம்தானே. நாடெங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் ‘மன்றல்’ விழாக்களை கழகம் நடத்திக் கொண்டு வருகிறதே!

சூளுரை மேற்கொள்வோம்!

ஜாதிப் பாம்பு பாதுகாப்பாக இருக்கும் கோவில் கருவறையிலிருந்து அதனை விரட்டியடிக்க உரிய பணிகளில் திராவிடர் கழகம் ஈடுபட உள்ளது.

ஜாதி ஒழிப்பில் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றுவோம்!

1957 நவம்பர் இதே நாளில் ஜாதி ஒழிப்புக்காக சட்டத் தாளை எரித்துக் கடும் தண்டனையை அனுபவித்த அந்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்! ஜாதியை ஒழித்து சமத்துவ சமதர்ம சமுதாயத்தை உருவாக்கி அவர்களுக்குக் காணிக்கையாக்குவோம் என்று இந்த நாளில் சூளுரை எடுப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

 

கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை 
26.11.2016

 

------------------

ஜாதி ஒழிப்புக்குக் களப்பலியான கருஞ்சட்டை மாவீரர்கள்

மணல்மேடு வெள்ளைச்சாமி

பட்டுக்கோட்டை இராமசாமி (ஆசிரியர், ஓய்வு)

வாளாடி பெரியசாமி

லால்குடி நன்னிமங்கலம் கணேசன்

திருச்சி சின்னசாமி

சிறையிலிருந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலையாகி வெளிவந்த சில நாள்களிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

இடையாற்றுமங்கலம் நாகமுத்து,  தெய் வானையம்மாள், மாதிரிமங்கலம் இரத்தினம், கோவில் தேவராசன்பேட்டை, நடேசன், திருவை யாறு மஜீத், கவிக்கோட்டை இராமையன், புது மணக்குப்பம் கந்தசாமி, பொறையாறு தங்கவேலு, மணல்மேடு அப்பாதுரை, கண்டராதித்தம் சிங்கார வேலு, திருச்சி டி.ஆர்.எஸ்.வாசன், தாராநல்லூர் மஜீத், கீழவாளாடி பிச்சை. உயிரை மட்டும் சுமந்துகொண்டு நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டோர் எண்ணற்றோர்.

 

இதோ ஒரு  புறநானூற்று வீரத் தாய்!

 

ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடையாத்துமங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டதால் திடீரென்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டபொழுதே 24.5.1958 இரவு 1.45 மணிக்கு தமது 53-வது வயதில் மரணமுற்றார்.

5000 மக்கள் கலந்து கொண்ட சவ ஊர்வலம் நடை பெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு சவ அடக்கம் நடைபெற்றது. வழக்கு ஒன்றுக்காக மதுரை சென்றுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டிருந்த அன்னை மணியம்மையாரும், கடலூர் வீரமணியும் (அப்பொழுது அப்படிதான் அழைக்கப்படுவார்) இந்தச் செய்தியைக் கேட்டு, உடனே இடையாத்து மங்கலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அவ்வூருக்கு வந்தபோது நேரம் இரவு 7 மணி. மழைமிரட்டல் காரணமாக 6.30 மணிக்கெல்லாம் சவ அடக்கம் நடைபெற்றுவிட்டது.

மறைந்த தோழரின் வீட்டிற்கு அவர்கள் சென்று மறைந்த தோழர் நாகமுத்து அவர்களின் துணைவியார் சீனியம்மாளுக்கும் 18 வயது நிரம்பிய ஒரே மகனுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

அந்த நேரத்தில் அந்தத்தாய் சொன்ன பதில் அனை வரையும் மயிர்க்கூச்செறியச் செய்தது.

‘‘நான் கலங்கவில்லை. என் மகன் இருக்கிறான். அய்யாவின் அடுத்த போராட்டத்திற்கு அவனையும் அனுப்பி நானும் வந்து பலியாகத் தயாராக உள்ளேன்'' என்று கூறினார்.

கருஞ்சட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த  அந்தப் புறநானூற்றுத் தாய்க்கு ஈடு இணை ஏது?
-விடுதலை,2611.16

1 கருத்து: