வெள்ளி, 18 நவம்பர், 2016

தியாகச் செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள்: நவ. 18 (1936)

இன்று (18.11.2016) நவம்பர் 18, செக்கிழுத்த செம்மல் என அறியப்பட்ட வ.உ.சி. அவர்களின் 80 ஆம் ஆண்டு நினைவு நாள்.

இன்றைய இளைய தலைமுறைக்கு, வ.உ.சி. யார் என்று அறிய வாய்ப்பில்லை. அய்ம்பது வயது கடந்தவர்களுக்கு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. என்றால், சிவாஜி நடித்த திரைப்படம் ஞாபகம் வரும்.

அந்த அளவிற்குத்தான் தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாத தலைவர்களின் தியாகங்களை மக்கள் நினைவு கொண்டுள்ளார்கள்.

வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கிய வ.உ.சி அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆங்கிலேயரை எதிர்க்கும் பணியில், அவர்களோடு வணிகப் போரை தொடங்கும் முகத்தான், தனியாக கப்பலை தூத்துக்குடிக்கும், சிலோனுக்கும் (இலங்கை) போக்குவரத்தை நடத்திக்காட்டினார். பின்னர் அவ ருக்கே தெரியாமல், அந்த நிறுவனக் கூட்டாளிகள், கப் பலை ஆங்கிலேயருக்கு விற்றார்கள் என்பது சோக வரலாறு.

கோரல் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்த தோழர்களை சுதேசி இயக்கப் போராட்ட வாதிகளாக ஆக்கினார் வ.உ.சி.

ஆங்கிலேயர்க்கு எதிரான நடவடிக்கைகளுக்காகவும், பேசியதற்காகவும், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - அதாவது நாற்பது ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில், எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் விதிக்கப்படாத தண்டனையை வ.உ.சி.மீது ஆங்கிலேய அரசு விதித்தது.

கோவை சிறையில் (1908 முதல் 1910 வரை) சுட்டெரிக்கும் வெயிலில் இயங்கும் எண்ணெய்ச் செக்கினை எருதுக்குப் பதிலாக இழுக்குமாறு வ.உ.சி. வற்புறுத்தப்பட்டார். ஒரு சிறந்த வழக்குரைஞரும், தேசிய இயக்கத்தலைவருமான வ.உ.சி. கைகளிலும், கால்களிலும் விலங்குகளோடு ஒரு விலங்கினைப் போல் எண்ணெய்ச் செக்கை இழுக்குமாறு கட்டாயப்படுத்தப் பெற்றார்.

1908 மார்ச் 12 இல் சிறை சென்றவர், தனது நன்னடத் தைக் காரணமாக, 24.12.1912 இல் விடுதலையானார்.

விடுதலையாகி வெளிவந்த வ.உ.சி.யை வரவேற்க ஒருவரும் இல்லை. வறுமையில் இறுதிவரை உழன்றுதான் இறந்தார்.

முதுமையிலும் தளராது தமிழ்ப்பணியில் மனம் மகிழ்ந்த வ.உ.சி.யின் பெருவாழ்வு 18.11.1936 இல் நிறை வுற்றது.

சிறந்த தேசபக்தரான வ.உ.சி. அவர்கள் தந்தை பெரியாரிடம் பெருமதிப்பும், அன்பும் கொண்டிருந்தார்.

“திரு இராமசாமி நாயக்கரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப்பற்றி அய் ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது?

...நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர் களையும்விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்”  என தந்தை பெரியாரைப் பற்றி, வ.உ.சி. அவர்கள் கூறியுள்ளார்.

மனுஸ்மிரிதியின் சுலோகங்களை மக்கள் மன்றத்தில் தோலுரித்த சுவாமி சிவானந்த சரசுவதியின் “ஞான சூரியன்” எனும் நூலுக்கு, 7.10.1927 இல் சிறப் புரை எழுதியுள்ளார் வ.உ.சி அவர்கள். அதில், “மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும், அநீதியென்றும் நிலை நாட்டுகின்றான் ‘ஞானசூரியன்’ - தமிழ் மக்கள் துணிவும் அதுவே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.''

(ஞான சூரியன் - சிறப்புரை வ.உ.சி. 7.10.1927)

வ.உ.சி. அவர்கள் சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தாலும், இறுதி நாட்களில், நாத்திகக் கோட்பாட்டை நோக்கி நகர்ந்தார் என பழ.நெடுமாறன் தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“இவரது (வ.உ.சி.) சித்தாந்தக் கருத்தில் இருந்து அவர் உள்ளத்தில் நாத்திகக் கருத்துகள் துளிர்விட்டு இருந்ததை நாம் பார்க்க முடிகிறது. சைவ சமயத்தில் ஆழமான ஈடுபாடு கொண்ட அவர், தாம் இறக்கும் இறுதிக்கட்டத்தில் கூடத்தேவாரதிருவாசகங்களைப் பாடவில்லை. கேட்கவில்லை. தமது நெருங்கிய தோழரான பாரதியாரின் பாடல்களைப் பாடக் கேட்டுக் கொண்டே இறந்தார். இன்னும் சில ஆண்டுகள் அவர் வாழ்ந்திருப்பாரேயானால், முழு நாத்திகராய் ஆகியிருப்பார் என்று கருத இடம் உண்டு.''

(‘‘காலத்தை வென்ற காவிய நட்பு’’ - பாகம் 11- 1 - செக்கிழுத்த சிதம்பரானார் - பக்கம் 414 - பழ நெடுமாறன்)

வ.உ.சி. அவர்கள் மறைவுற்ற நிலையில், தந்தை பெரியார் அவர்கள், ‘குடிஅரசில்’ அவரது மறைவு குறித்து, எழுதிய துணைத் தலையங்கம், இன்றைய தலைமுறை அவசியம் அறிய வேண்டிய ஒன்றாகும்.

‘‘சிதம்பரம் சிதைவு” எனும் தலைப்பில் பெரியார் எழுதுகிறார்:

‘‘தோழர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்திவிட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்குச் சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு, ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையே ஆகும்.

மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொது நலமென்றால், மத சம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும், எப்படி எனில், தியாகச் செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள்: நவ. 18 (1936)

கூனோ-தியாகச் செம்மல் வ.உ.சி.யின் நினைவு நாள்: நவ. 18 (1936)

குருடோ, அயோக்கியனோ- கொள்ளைக்காரனோ, ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால், பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின் தூங்கிமுன் எழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும், அக்கூட்டு தெய்வீக சம்பந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வதுபோல், அரசன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும், ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அரசனை விஷ்ணுவாய் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில், தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து, அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து, துச்சமாய்க் கருதி, தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் முதன்மை வரிசையில், முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும், அவராலாயே அநேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும், சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப் பாரானால், லோகமானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டடம், சிதம்பரம் உருவச்சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கருத்து, சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும்படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை, அதுவும் சைவப்பிள்ளயானாலும், “சூத்திரப்பிள்ளை” ஆனதால், அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும், இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால், ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேச பக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது, வேஷத்துக்காகவாவது, அணைத்துத்தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

ஆகையால், சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரண மாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக!''

(‘குடிஅரசு’ - துணைத் தலையங்கம் - 22.11.1936)

நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், தனது வாழ் நாள் முழுவதும் துன்பத்தைத் தவிர எதையும் காணாத தியாகச் செம்மல் வ.உ.சியின் 80 ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரது தொண்டினை நினைவு கூர்வோம்.

- குடந்தை கருணா
-விடுதலை,18.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக