திங்கள், 26 பிப்ரவரி, 2018

தெருவில் நடக்க ஆணை

மலையாளத்தை அடுத்த பாலக்காடு தாலுக்காவிலுள்ள "கல்பாத்தி" என்னுமோர் பாா்ப்பனச் சோியிருக்கிறது அதற்குள் பாா்ப்பனரல்லாயெவரும் போகக் கூடாதென்று ஐகோா்ட்டும் அதற்குமேலுள்ள பிாிவு கவுன்சில் மட்டும்போய் உத்தரவு பெற்றிருந்தாா்கள்.பாா்ப்பனரல்லாத டாக்டரும் வியாதியஸ்தரைக் காண வேண்டுமானால் குதிரைமேல் போய் வரவேண்டும்.அங்கு "இழிஞர்"என்னும் தீண்டபடாத சமூகத்தவரில் சிலர் சட்டசபையில் நான் கொண்டுபோன தீா்மானத்தின்படி சட்டமேற்பட்டிருப்பதை வாசித்தறிந்து மேற்படி பாா்ப்பனசோியில் "ஆலய உற்சவம்" நடந்த போது பிரவேசித்தாா்கள்.அவர்களை பாா்ப்பனர்கள் அடித்து துரத்தி மாஜிஸ்டிரேட் கோா்ட்டில் பிராது செய்தாா்கள்.விசாரித்து பிராது தள்ளிவிடப்பட்டது.பாா்ப்பனர் சென்னை ஐகோா்ட்டுக்கு அப்பீல் செய்தாாகள்.லோக்கல்போா்டு முனிசிபாலிடியால் பராமரித்துவரும் எல்லை,தெரு,பாதை முதலியவைகள் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றொரு உத்தரவும் பெற்றனர்.போர்ட் செயின்ட் ஜாா்ஜ் (2660 ஆம் நி:எல்.அண்ட்.எம்.கவர்மெண்ட் உத்தரவு (1924செப்டம்பர் மாதம் 25 ம் தேதி ): சட்டமாக்கி நம்மை நடமாடவைத்த வாழ வைத்த "திவான் பகதூா் இரட்டை மலை சீனிவாசன்" அவர்களை நினைவுகூா்வோம். நன்றியுடன் போற்றுவோம்.
குறிப்பு;ஆா்பாட்டம் போராட்டம் என்றொரு நிலையில் நில்லாமல் அரசால் ஆணையிட செய்தாா்....
- ராஜ போஸ் வேனு, முகநூல் பதிவு, 27.2.18

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

மணியம்மையை திருமணம் செய்து கொண்டதற்கான பெரியாரின் விளக்கம்

நான் வாரிசாகச் செய்து கொண்ட மணியம்மை 31 வயதினரும், படித்தவரும், என்னுடன் கூடவே ஆறு ஆண்டுகள் இயக்கப் பணி புரிபவரும், என் நம்பிக்கைக்கு ஆளாகப் பத்திரிக்கை உரிமை, நிர்வாக உரிமை ஏற்று நடத்துபவரும், பணம் காசு விஷயத்தில் நம்பிக்கையாகப் பொறுப்பாக நடப்பவருமான அப்பேர்பட்டவரை, நான் சட்டப்படியான வாரிசாக வாழ்க்கை துணையாக ஆக்கினால், இதில் யாருக்கு என்ன குறைவு, கெடுதி நட்டம், ஒழுக்கக் கேடு என்று யோசித்து பாருங்கள்.

இந்த காரியத்தால் ஏற்பட்டது இன்ன தவறென்று கூற, குற்றமென்று கூற ஏதேனும் காரணம் காட்ட வேண்டுமே, இந்த பகுத்தறிவு வாதிகள்! இயக்க நலனை - பொது தொண்டைக் கருதி எனக்கொரு துணை வேண்டுமென்று, என்னுடைய பாதுகாப்புக்காக, என்னுடைய வசதியை உத்தேசித்து, ஒரு ஸ்திரீயை சட்டப்படி எனக்கு உதவியாளராக, உற்ற நண்பராக இருக்க வசதி செய்து கொள்கிறேன். இதில் யாருக்குத்தான் தலையிட உரிமை இருக்க முடியும்? அப்படி நான் மணந்து கொண்ட பெண் 14 வயது சிறுமியா, அல்லது 15 வயதுச் சிறுமியா? ஏதுமறியா பெண்ணை ஏமாற்றி செய்த காரியமா? வேறு யாருக்காவது உரிமையா? யாருடைய பாதுகாப்பிலாவது இருந்தவரா? தன் நலத்தை, தனது நலத்தை, தனது வாழ்வைத் தெரிந்துகொள்ள முடியாத, தகுதியில்லாத சிறுபெண்ணா? அல்லது காசு பணம் காட்டி ஏமாற்றப்பட்டதா? என்னை அறியாததா? அல்லவே.

தம் வீட்டாராலேயே ஆறு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து ஒப்புவிக்கப்பட்ட பெண் ஆயிற்றே? சொந்த வீட்டிலேயே பூப்படைந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருமணம் செய்து கொள்ளாமல், திருமணம் செய்து கொள்வதில்லை என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்த பெண்; தன் இளமையிலேயே தன் தகப்பனாரோடு இயக்க மாநாடுகளுக்கெல்லாம் வந்து இயக்கம் - கொள்கைகளில் பற்றுதல் ஏற்படுத்திக் கொண்டு, தனது வீட்டிலும் இயக்கப் பணி செய்து கொண்டிருந்த பெண்; வேலூருக்கு நானும் இயக்க தோழர்களும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போதெல்லாம் இயக்க பற்றுதலால் யாவருக்கும் ஏற்ற பணிவிடை செய்து வந்த பெண்; 1938ஆம் ஆண்டு 'இந்தி எதிர்ப்பில்' வேலூர் சிறை சென்றவர்கெல்லாம் பணிவிடை செய்து வந்த பெண், தன் தகப்பனார் இறந்த பிறகு இறந்த மூன்றாவது மாதமே (1943 ல்) இருந்து, என்னோடு ஆறு வருட காலமாக பழகி சுற்று பயணத்தில் கூடவே இருந்து பிரச்சாரம், காரியதரிசி  வேலை, ரிப்போர்ட்டர் வேலை செய்துவரும் பெண்; என்னால் பலதடவை வற்புறுத்தப்பட்டும், அவர் பெற்றோரால் வற்புறுத்தப்பட்டும் திருமணம் வேண்டாம் என மறுத்து, தனது இயக்க தொண்டே பிரதானம் எனக் கருதி தொண்டாற்றி வந்த பெண்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணை - ஆறு வருடம் பழகி எனது முழு நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒரு பெண்ணை நான் துணைவியாக, நட்பாக, நம்பிக்கைக்கு ஏற்ற வாரிசாக ஏற்றுக்கொள்ளுகிறேன் என்றால், ஒரு கூட்டம் ஏன் ஆத்திரப்பட வேண்டும்? அதில் மற்றவர் பிரவேசிக்க உரிமைதான் ஏது?

திருவாரூர் மாநாட்டு சொற்பொழிவு (02-10-1949)
பெரியார் இன்றும் என்றும் பக் 817

#பெரியார்
#மணியம்மை

Via
Palanivel Manickam
Siva kumar pari tsf

வியாழன், 15 பிப்ரவரி, 2018

தேவாரத்திற்குத் தீண்டாமை



1926ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி சிவன் கோயிலில் வேதம் ஓதி அர்ச்சனை செய்தபின் தேவாரம் படிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பார்ப்பனர்கள் அந்தக் கோயில்களையே புறக்கணித்தனர். மேலும் சங்கரன்கோயிலில் தேவாரத்துக்கு தடையே வாங்கினர். அவை பற்றிய செய்திகள்:

இதுகூட வகுப்புத் துவேஷமா?

திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம். அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி  வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?

தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை. ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.

- ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 21.11.1926

தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)

நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழை யாமையும் பகிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக் கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி விட்டார்களாம். கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத  சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டு விட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயிருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்து மதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப்பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!

- ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 05.12.1926

ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்

தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த்தாக்களும் உத்தரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்த்ரீகள், புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக்கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக்கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷ மடைகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் பகிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதிகாரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.

- ‘குடிஅரசு’ செய்திக்குறிப்பு, 12.12.1926

- உண்மை இதழ், 1-15.12.17

தாழ்த்தப்பட்டோருக்காக தந்தை பெரியார் நடத்திய மாநாடுகள்!



ஆதித்திராவிடர் அனுபவித்த கொடுமைகள்:

ஆதிதிராவிடர்கள் பார்ப்பனத் தெருக்கள், முன்னேறியவர்கள் வாழும் தெருக்கள், கோயில்களைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆகிய எதிலும் நடந்துகூடச் செல்லமுடியாது.

*    ஆதிதிராவிடர்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது.

*    தாழ்த்தப்பட்டோர் தங்க நகைகள் அணியக்கூடாது.

*    மண் குடத்தில்தான் நீர் மொள்ள வேண்டும்.

*    ஆதிதிராவிடர் வீட்டுக் குழந்தைகள் படிக்கக்கூடாது.

*    அடிமையாக இருக்க வேண்டும்.

*    சொந்த நிலம் வைத்திருக்கக் கூடாது.

*    திருமணக் காலங்களில் மேளம் வாசிக்கக் கூடாது.

*    பூமி குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யக்கூடாது.

*    குதிரைமீது ஊர்வலம் செல்லக்கூடாது.

*    வண்டி ஏறிச் செல்லக் கூடாது.

*    பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது.

*    சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையே வேறு.

*    பறையன் சுடுகாடு என்றே தனி சுடுகாடு.

*    மேல் அங்கியோ,  துண்டு அணிந்துகொண்டோ செல்லக் கூடாது.

*    பெண்கள் ரவிக்கைகள் அணியக்கூடாது என்பதோடு மேல் ஜாதியினர் வரும்போது மேலே அணிந்திருக்கும் வேறு துணியையும் எடுத்து அக்குளில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தந்தை பெரியார் போராட்டங்கள்:

*    நீதிமன்றங்களில் சாட்சி சொல்ல நேர்ந்தால் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நின்றுதான் சாட்சி சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தது. இவற்றை மாற்றவே பெரியார் போராடினார். 
பஞ்சமனும் (தாழ்த்தப்பட்டவர்களும்) நாய்களும், பெருநோயாளிகளும் (தொழு நோயாளிகள்) நுழையக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பேருந்துகளிலும் எழுதி வைத்தனர். நாடக சபாவில் பஞ்சமர்களுக்கு இடமில்லை என்று எழுதி வைத்தனர்.

தாழ்த்தப்பட்டவன் வண்டியிலேறி வீதிக்கு வந்துவிட்டான் என்பதற்காக கட்டிவைத்து அடித்து அபராதம் போட்டனர். அதைப் பெரியார் வன்மையாகக் கண்டித்து, கொடுமை! கொடுமை! என்ற தலைப்பில் 24.11.1929 குடிஅரசில் எழுதினார். அந்தோணிராஜ் என்ற மாணவன் அக்கிரகார வீதியில் நடந்துவந்தான் என்பதற்காக, அவனை ரங்கசாமி அய்யர் செருப்பாலடித்தார். இதை வன்மையாக எதிர்த்து 24.4.1926 குடிஅரசில் பெரியார் எழுதினார். ஆதித்திராவிடர், தீயர், தீண்டாமை விலக்கு மாநாடுகளை பெரியார் நடத்தினார்.

21.07.1929இல் சென்னையிலும், 25.08.1929இல் இராமநாதபுரத்திலும், 10.06.1930இல் திருநெல்வேலியிலும், 16.05.1931இல் சேலத்திலும், 07.06.1931இல் லால்குடியிலும், 05.07.1931இல் கோவையிலும், 04.07.1931இல் தஞ்சையிலும், 07.12.1931இல் கோவையிலும், 07.02.1932இல் லால்குடியிலும், 28.08.1932இல் அருப்புக் கோட்டையிலும், 07.08.1933இல் சென்னையிலும், 1.07.1938இல் சீர்காழியிலும், 07.03.1936இல் திருச்செங்கோட்டிலும், 23.05.1936இல் கொச்சியிலும், 02.09.1936இல் சேலத்திலும், 06.05.1937இல் சிதம்பரத்திலும், 04.07.1937இல் ஆம்பூரிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மாநாடுகளை நடத்தி கண்டன தீர்மானங்களையும், உரிமைக்கான தீர்மானங்களையும் பெரியார் நிறைவேற்றினார்.

மனித உரிமை பெற அரசின் தடையை மீறுவோம். தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போரை திராவிடர் இயக்கத்தின் எதிரிகளாய் எண்ணி எதிர்போம் என்று திருமங்கலத்தில் பேசினார்.
ஜாதிகளை ஒழிப்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, திராவிடர் கழகமும் பழங்குடி மக்களும் (தாழ்த்தப்பட்டோர்) நகமும் சதையும்போல என்று திருச்சியில் பேசினார் பெரியார்.

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு!

தாழ்த்தப்பட்டோரை ஜனாதிபதியாக்கு! என்று 09.02.1982இல் விடுதலை தலையங்கம் தீட்டியது. இப்படி ஆயிரக்கணக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்துள்ளது. இவற்றை மேலும் விரிவாய் அறிய குடிஅரசு, விடுதலை, உண்மை, தலித்திய ஏடுகள் போன்றவற்றை படியுங்கள்.

பெரியார் பேசுகிறார்: நானோ திராவிடர் இயக்கமோ தாழ்த்தப்பட்டோருக்காக என்று இதுவரை தனியாக ஒதுக்கி வேலை செய்தது கிடையாது. வேண்டுமானால் திராவிடர் இயக்கத் திட்டமானது யார் யார் தாழ்த்தப்பட்டுள்ளார்களோஅவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்கும் முறையில் இருக்கிறது என்று கூறுங்கள். யான் தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாக உழைக்கிறேன் என்று உங்களிடையே பொய் கூற முடியாது. அவ்வித எண்ணம் எனக்கில்லை. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறேன்? நீங்கள் வேறுவிதமாக கருதவேண்டாம். ஆதிதிராவிடன்  திராவிடன் என்ற பிரிவையே நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது எல்லோரும் திராவிடர்கள் என்பதே எங்களது திட்டமாகும்.

திராவிடர்களில் ஜாதி ஆணவம் படைத்த உயர் ஜாதிக்காரர்களும் இல்லாமலில்லை. இனி அவர்களை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்பதும் எனக்குத் தெரியும்.

ஆகவே ஒரு இனத்தைச் சார்ந்த நாம் நமக்குள் பிரிவுகளாக சொல்லளவிலும் இருக்கக் கூடாதென்பதே எனது தீவிர எண்ணமாகும்.

இன்னும் விளக்கமாக கூறுகிறேன். திராவிடர் இயக்கத்திற்கு முக்கிய கொள்கை என்னவென்பதை இந்த நாட்டில் பறையன் என்றும், பார்ப்பனர் என்றும், உயர்ந்த ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன் என்றிருப்பதையும், சூத்திரன், பஞ்சமன் என்று மிருப்பதையும் அறவே ஒழித்து எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஒரே சமுதாய மக்கள், என்னும் கொள்கையை நடைமுறையில் செய்வதேயாகும். எனவே, நானோ, திராவிடர் கழகமோ நமக்குள்ளாக இருந்துவரும் ஜாதிகளுக்காக இதை செய்தோம் என்று வீண் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆரியரும் அவர்களின் ஸ்தாபனமாகிய காங்கிரசும் அம்மாதிரி வேண்டுமானால் சொல்லி ஏமாற்றிப் பெருமையடையலாம். காரணம் வேறு இனத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள், வேறு நாட்டினர் அவர்கள் நம்மைக் கடவுள் பேரால் அடிமைப்படுத்தி, நம் நாட்டில் நமக்கு வாழ்வில்லாமல் செய்து கறையான் போன்று அவர்கள் இங்கிருப்பதால் ஏதோ தானம் செய்வதுபோன்று அக்கூட்டம் ஆதிதிராவிடர்களுக்கு இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று கூறி ஆதிக்கத்தின் பித்தலாட்ட சூழ்ச்சியை மறைக்கச் செய்யலாம். நாம் ஏன் நமது திராவிடர் இயக்கம் அவ்வித கீழ்நிலையில் செல்லவேண்டும்?  எனவே, தோழர்களே, இனி நமக்குள் ஆதிதிராவிடர், திராவிடர் என்ற வித்தியாசங்கள் வேண்டாம். பறையன் என்று சொல்லாதே, சூத்திரன் என்று கூறாதே என்று உணர்ச்சியை அடையச் செய்யுங்கள். தவிர தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு என் அருமை நண்பரும் அறிஞருமான டாக்டர் அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர். நான் மிக எதிர்பார்த்திருந்தேன். அவரின் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க. தோழர்களே! திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்று இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் பெடரேஷனில் சேருவதை நான் இன்னும் வேண்டாமென்று கூறவில்லை. அதில் வரும் நன்மைகளையும் நீங்கள் அடையுங்கள். திராவிடர் கழகத்தில் தாழ்த்தப்பட்டோர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அதன் உழைப்பின் பலனைத் தாழ்த்தப்பட்ட தோழர்களுக்கு அனுபவிக்க உரிமையுண்டு என்றார் பெரியார். (விடுதலை 8.7.1947)

(தொடரும்...)


- உண்மை இதழ்,1-15.12.17

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பெரியார் வகித்த பதவிகள்

என் பதவிகள்!

70 ஆண்டு உலக அனுபவம், 30 ஆண்டு வியாபார அனுபவம்; 1915, 16, 17, 18, 19 வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன், தென் இந்திய வியாபாரச் சங்க நிர்வாக சபை அங்கத்தினனாக இருந்தவன், அய்ந்து ஜில்லாவுக்கு இன்கம்டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மென்டாரால் நியமிக்கப்பட்டவன், ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி; ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி, பிறகு தலைவர், 1914 ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10 ஆண்டு ஆனரரி மாஜிஸ்ட்ரேட், ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடென்ட், பல வருடங்கள் ஈரோடு முனிசிபல் சேர்மென், ஜில்லா போர்டு மெம்பர், வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி, பிளேக் கமிட்டி செக்ரட்டரி, கோவை ஜில்லா இரண்டாவது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு, பிறகு 1929 வரை வைஸ்பிரசிடென்ட், பிரசிடென்ட், 1918 ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கன்ட்ரோலில் கவர்ன்மென்டாரின் நிர்வாகி, அதாவது, அரிசி கன்ட்ரோலில் கவர்ன்மென்டாருக்கு வரும் அரிசி வாகன்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து, மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படி ஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் ஆஃபீசர், கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி, தலைவர், காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, அய்ந்து வருடம் தலைவராக இருந்த போது, எனக்குச் செயலாளராக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், எஸ்.ராமநாதன், கே.எம். தங்க பெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள். இவை ஒரு புறமிருக்க, 1940, 1942 இல் 2 வைஸ்ராய்கள், 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். ராஜாஜியும் வேண்டினார். நான் மறுத்துவிட்டேன்.

(யார் துரோகிகள்-  கையெழுத்துப்  பிரதி  - பெரியார் தஞ்சை சொற்பொழிவு 14.10.1956)

திங்கள், 5 பிப்ரவரி, 2018

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நுழைவு


அட அண்டப்புளுகே!


வாயில் சாக்கடையைத் தவிர வேறு எதுவும் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமாக தனிக்காட்டு ராஜாவாக இருக்கக்கூடிய பிஜேபி அம்பி ஒருவர். சேலம் பட்டிமன்றத்தில் ஓர் அண்டப்புளுகை - ஆகாசப் புளுகை அள்ளி விட்டாரே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப் பட்டவர்களை நுழையச் செய்தவர் மதுரை வைத்திய நாதய்யர்தானாம். தாழ்த்தப்பட்டவர்கள் அக்கோயிலில் நுழைவதற்கு எதிராக ஈ.வெ.ரா. இருந்தார் என்பதுதான் அந்த அம்பியின் ஆலாபனம்.

உண்மை என்னவென்றால் 1922 ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது என்ன? இதுபற்றி திரு.வி.க. அவர்கள் எழுதிய வாழ்க்கைக் குறிப்பு -2 பக்கம் 274இல் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாடு காங்கிரஸ் கூடிய போது நாடார் முதலியோர் கோயில் நுழைவைப் பற்றி இராமசாமி நாயக்கரால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக்கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாதய்யரும், கிருஷ்ணய்யங்காரும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளாரே. அவர்தான் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். ஈ.வெ.ரா எதிர்த்தார் என்று வாய் நிறைய பொய் புழுக்களை தேக்கி அப்படியே பொலபொலவென்று கொட்டியுள்ளாரே!.

இந்த இடத்திலும் பார்ப்பனக்கூட்டத்திற்கு ரொம்பவே இனிக்கும் திருவாளர் இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) கொண்டு வந்து நிறுத்துவோம்.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 8.7.1939 சனிக்கிழமை அன்று தாழ்த்தப்பட்ட வர்களுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி 30.7.1939 அன்று மதுரையில் பேசிய மாண்புமிகு முதல் அமைச்சர் (கனம்) சி.இராஜகோபாலாச்சாரியார்.

“இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றி யுமல்ல. இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றியாகும். ஏனெனில் இவ்விஷ யத்தில் காங்கிரஸ்காரர்களும், சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் “இன்னும் இதரர்களும் சேவை செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இச்செய்தி 31.7.1939 நாளிட்ட ‘சுதேசமித்தரன்’ ஏட்டில் வெளிவந்தது. (விடுதலை, 1.8.1939) பாவம் எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களுக்கு தோல்வி மயம்தான்.

மதுரை ஏ.வைத்தியநாதய்யர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அழைத்துச் சென்றார் என்று பிரச்சாரம் செய்கிறார்களே - சங்கதி என்ன தெரியுமா?

யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக இரவு நேர அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு சில தாழ்த்தப்பட்ட தோழர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார் என்பதுதான் உண்மை.

அதற்குக் கூட உதவி செய்தவர் நீதிக்கட்சிக்காரரான ஆர்.எஸ். நாயுடுதான்.  அவர்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாவார். அவரது அனுமதியின் காரணமாகத் தான் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக  சில தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துச் சென்ற வீராதி வீரர் தான் இந்த வைத்தியநாத அய்யர்.

இதில் ஒரு கூடுதல் தகவல் என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றதற்காகக் கோயில் கருவறையைப் பூட்டியும், மறுநாள் கோயிலுக்கு வராமல் இருந்த பட்டர்களை இடைநீக்கம் செய்தவரும், கோயில் நிருவாக அதிகாரியான அந்த நீதிக்கட்சிக்காரர்தான்!

- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18