ஞாயிறு, 8 நவம்பர், 2020

சுயமரியாதை இயக்கத்தின் சாதனை என்ன?


பார்ப்பனர்களே இன்று இடஒதுக்கீடு கேட்கிறார்களே!

மனித குலத்தை ஒன்றாக்கும் இயக்கம் சுயமரியாதை இயக்கம்

மதுரை - வேன் அளிப்பு விழாவில் தமிழர் தலைவர் பேருரை

மதுரை, பிப். 17- இடஒதுக்கீட்டை எதிர்த்த பார்ப்பனர்களை, இடஒதுக்கீடு கேட்க வைத்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

4.2.2017 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழா - தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கக் கொள்கை களைப் பரப்புவதற்கு உதவக்கூடிய பரப்புரை பயண ஊர்தி வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஏண்டா, பட்டினி கிடக்கும்பொழுது எல்லோருக்கும் சோறு போடுவதுதான் முக்கியம்

பெரியார்தான் சொல்வார், ‘‘ஏண்டா, பட்டினி கிடக்கும் பொழுது எல்லோருக்கும் சோறு போடுவதுதான் முக்கியமே தவிர, அதில் தகுதி - திறமையை நீ பார்க்கலாமா? முதலில் எல்லோருடைய பட்டினியையும் தீர்க்கவேண்டும்’’ என்பார்.

அந்த அடிப்படையில், எங்களுடைய இனம் - கல்வி மறுக்கப்பட்ட இனம் - ஆண்டாண்டு காலமாக.

உலகத்திலேயே பார்ப்பனக் கொடுமைக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு என்றால், பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார்,

எந்த நாட்டிலும், உலகத்திலுள்ள எவ்வளவு பெரிய காட்டுமிராண்டி நாட்டிலும்கூட, கருப்பர்கள் ஒரு காலத்தில் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் என்று சொன்ன நாட் டிலே கூட, அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது கிடையாது. ஆனால், கல்வியை கொடுக்காதே என்று சொன்ன ஒரு மதம் இருக்கிறது என்று சொன்னால், அது ஆரிய - சனாதன - பார்ப்பன இந்து மதம் என்பதைத்தவிர வேறு கிடையாது. எனவே, அதனை அறவே தூக்கி எறிய வேண்டும் என்று சொன்னார். எனவேதான், சுயமரியாதை இயக்கம் பிறந்தது.

சுயமரியாதை என்றால், மனிதனுக்கு மட்டும்தான் - மாட்டுக்குக் கிடையாது

சுயமரியாதை இயக்கத்தின் சாதனை என்ன? ஏன் பெரியாருக்குக் கவலை? சுயமரியாதை என்றால், மனிதனுக்கு மட்டும்தான். மாட்டுக்குக் கிடையாது, விலங்குகளுக்குக் கிடையாது. மாடு கூட நமக்கு சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் ஏறு தழுவுதலில் நாம் பெற்றிருக்கின்ற வெற்றி. மனிதர்கள் மறந்ததை மாடு நினை வூட்டியிருக்கிறது. அதற்கு முன்னால், பல மாடுகள் வேறிடத்தில் போயிருக்கின்றன. ஆனால், இந்த ஏறுதழுவுதல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமாக இன்றைக்கு வந் திருக்கிறது என்றால், அதற்கு அடிப்படை சுயமரியாதை.

அலங்காநல்லூரில், அவனியாபுரத்தில்  ஏறுதழுவுதல் என்ற எங்களுடைய புராதன, கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சியை நாங்கள் நடத்துவதற்கு எதற்கு டில்லியிடம் அனுமதி வாங்குவது? நாம் இன்னும் அடிமைகள் என்பதைத் தவிர வேறு என்ன அதற்கு உதாரணம். அதனைப் போக்கு என்று சொல்வதுதான் தோழர்களே சுயமரியாதை! சுயமரியாதை!! என்றால், அது கசப்பு மருந்தல்ல.

சுயமரியாதைதான் உங்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய ஒரு வாய்ப்பு. தன்னுடைய சொந்தத் தாயைக்கூட, அவள் விதவை, எனவே முன்னாலே வராதே - நான் திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்லி, உன் மதம் சொல்கிறது என்பதற்காக, தன்னுடைய சொந்தத் தாய், தன்னை ஆளாக்கிய தாய், தன்னை வளர்த்த தாய், தன்னை உருவாக்கிய தாய் - அந்தத் தாயைக்கூட கிட்டே வராதே என்று சொல்லக்கூடிய மதம் இருக்கிறதே - அந்த மதத்தைத் தூக்கி வங்காள விரிகுடா கடலில் எறி என்று சொல்வதுதான் சுயமரியாதை இயக்கம்.

தனிப்பட்ட பார்ப்பனர்களை வெறுப்பதா சுயமரியாதை இயக்கம்?

சுயமரியாதை இயக்கம் என்பது சாதாரணமா? தனிப்பட்ட பார்ப்பனர்களை வெறுப்பதா சுயமரியாதை இயக்கம்? சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறான்? திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறான்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறான். தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டும், திராவிடத்தால் யாராவது வீழ்ந்தார்களா? என்னுடைய சகோதரர் சென்னை பெரியார் திடலில் முழங்கினார். திராவிடத்தால் ஒருபோதும் வீழ்ந்த தில்லை, எழுந்தோம்! எழுந்தோம்!! எழுந்தோம்!!! என்று தெளிவாகச் சொன்னார்.

அந்த வகையில், சுயமரியாதை இயக்கம் என்ன சாதித்திருக்கிறது? இதே மதுரையில், ஒரு வைத்தியநாதய்யர் நினைத்தால், அவர் அந்தக் காரியத்தைச் செய்துவிட முடியும் என்கிற அளவிற்கு, பந்தலைக் கொளுத்தி, கருப்புச் சட்டையே இருக்கக்கூடாது, சுருட்டி வைத்துக்கொண்டு ஓடுங்கள் என்று சொல்லி, அவதூறுகளைப் பரப்பினார்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இந்தக் கொள்கை தோற்றுவிட்டதா? இந்தக் கொள்கை விரட்டியடிக்கப்பட்டதா? இந்த மதுரை மாநகரில், தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு வந்து வைத்து, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் திறந்து வைத்த சிலை, கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது, அதனை யாராவது மறுக்க முடியுமா? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

விஞ்ஞானம் ஒருபோதும் தோற்றதில்லை

மதுரை சுயமரியாதை வீரர் முன்னாள் மேயர் முத்து அவர்கள் - அவர்கள் எல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். எதற்காக இதனைச் சொல்கிறோம் நண் பர்களே! இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது - காரணம் என்னவென்றால், விஞ்ஞானம் ஒருபோதும் தோற்றதில்லை. விஞ்ஞானத்தின் முன்னால் மற்றவைகள்தான் மண்டியிட்டு இருக்கின்றன.

வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி - மகளிர் எல்லாம் கூடி - மனுதர்மத்தில் பெண்கள் எவ்வளவு கொச்சைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் - கீதையில் எப்படி பெண்களைப் பாவ யோனி என்று சொல்லியிருக்கிறது என்பதை - சுயமரியாதை உணர்வு காரணமாக, அதனை எரித்துக் கொளுத்திக் காட்ட முன்வந்திருக்கிறார்கள் என்றால், இப்பொழுது வராத சுயமரி யாதை வேறு எப்பொழுது வருவது? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

மீண்டும் இந்தப் பழைய கதை திறக்கப்படவேண்டும் என்பதற்காகத்தானே முயலுகிறார்கள்.

‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?’’

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி சொல்கின்ற நேரத்தில், பெரியார் சொன்னார்,

‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?’’ என்று பெரியார் அவர்கள் சொல்லுகின்ற நேரத்தில்,

‘‘இன்றைக்கு நான் ஒரு சிறு கூட்டத்தை எதிர்த்துப் போராடக் கூடியதாக இந்த இயக்கம் தோன்றும். ஆனால், இது ஒரு சிறு கூட்டத்தை எதிர்த்துப் போராடக்கூடிய இயக் கமல்ல. உலகளாவிய மனிதநேய தத்துவத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய ஒரு அற்புதமான தத்துவம்’’ என்பதை தந்தை பெரியார் சொன்னார். எப்பொழுது? 1929 ஆம் ஆண்டு சுய மரியாதை மாகாண மாநாட்டினை செங்கல்பட்டில் அவர்கள் கூட்டுவதற்கு முன்பாகவே அவர் இதனை சொன்னார்கள். இப்படி எத்தனையோ சொல்ல முடியும்.

கழக மகளிரணியினர்

மனுதர்மத்தை கொளுத்த உள்ளனர்

எனவேதான், நாம் தாயோடு பிறக்கவில்லையா? நம் முடைய பிள்ளைகள் பெண்கள் இல்லையா? நம்முடைய சகோதரிகள் பெண்கள் இல்லையா? மகளிரே முன்வந்து தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் - முக்கியமான இடங் களில் - பெண்களைக் கொச்சைப்படுத்தக்கூடிய மனுதர் மத்தை கொளுத்த உள்ளனர். ஆகா! ஊகோ!! என்று யாராவது அதனை எதிர்த்துக் கிளம்பினால், அதனை நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் மிகமிக முக்கியமானது.

பார்ப்பனர்களின் நிலை என்ன? தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசு இயக்கத்தில் இருந்தபொழுது, திண்டுக்கல் பெரியகுளத்தில், பெரியார் அவர்கள் மதியம் சாப்பிட்ட இலையை மடித்து வைத்திருந்து, எறும்புகள் எல்லாம் ஊறக்கூடிய நிலையிலிருந்து, இரவு சாப்பாட்டிற்கும் அதே இலையில் சாப்பாடு போட்டார்கள் என்று அய்யா அவர்கள் எழுதியிருக்கிறார்.

இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்! சுயமரியாதை இயக்கத்தினுடைய 90 சாதனைகளில் ஒன்றிரண்டை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன், நேரத்தின் நெருக்கடி காரணத் தினால்.

காந்தியார் 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு சென்னைக்கு வருகிறார். மயிலாப்பூரில் உள்ள சீனிவாச அய்யங்கார் வீட்டில் தங்குகிறார். பிரபல அட்வகேட் ஜெனரல், பிரபல வக்கீல், காங்கிரசு தேசிய தலைவர்.

பிறகு 1927 ஆம் ஆண்டிலும் காந்தியார் அங்கு வந்து தங்குகிறார். அப்பொழுது இந்த இடைவெளியில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? காந்தியாரும் - பன்னீர் செல்வமும், அதேபோல, நம்முடைய கரந்தை தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த உமாமகேசுவர பிள்ளை போன்றவர்களும் சந்தித்து, அய்யா தமிழ்நாட்டில், பார்ப்பனர் - பார்ப்பனரல் லாதார் பிரச்சினை உச்சக்கட்டமாக இருக்கிறதே, நீங்கள் பெரியாரை அழைத்துப் பேசவேண்டாமா? சமாதானம் செய்ய வேண்டாமா? இந்தப் பிரச்சினையை பெரியார் தீர்க்கவேண்டும் என்று விரும்புகிறாரே, என்று அய்யாவின் சார்பில் காந்தியாரிடம் சொல்கிறார்கள்.

அதற்கு காந்தியார் என்ன சொல்கிறார் தெரியுமா? யாருக்காவது சந்தேகம் இருந்தால், காந்தி நிலையம் வெளியிட் டிருக்கிற, ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’ என்கிற நூல் ஆயிரம் பக்கம் இருக்கின்ற நூலில் இருக்கிறது, அதனை பாருங்கள்.

காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - சுயமரியாதை இயக்கம்

காந்தியார் சொல்கிறார்,

‘‘இல்லை, இல்லை, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இப்பொழுது குறைந்திருக்கிறது. 1926 ஆம் ஆண்டிற்கு முன்பு நான் இங்கு வந்தபொழுது, சீனிவாச அய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் நான் உட்கார வைக்கப்பட்டேன். வீட்டின் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. இன்றைக்கு அப்படியில்லை, என்னுடைய மனைவி சீனிவாச அய்யங்கார் வீட்டு சமையலறை வரையில் செல்கிறார்; நானும் உள்ளே செல்கிறேன்’’ என்றார்.

சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி

அதற்கு என்ன காரணம்? சுயமரியாதை இயக்கம் செய்த புரட்சி; சீனிவாச அய்யங்கார்களுக்கே மிரட்சி. அதனால் ஏற்பட்டது மிகப்பெரிய வாய்ப்பு. ஆகவேதான், இனிமேலும் காந்தியாரை திண்ணையில் உட்கார வைத்தால், நம்மை தோலை உரித்துவிடுவார்கள், வருணாசிரமத்தினுடைய உருவம் தெரிந்துவிடும் என்று.

காந்திக்கே வழி தந்த இயக்கம் - காந்தியினுடைய சுயமரியாதையை மீட்ட இயக்கம் - பெரியாருடைய இயக்கம் - சுயமரியாதை இயக்கம். அதுமட்டுமா நண்பர்களே! திராவிடர் இயக்கம் - தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மனிதர்கள் இல்லையா? எங்கள் உடன்பிறப்புகள் இல்லையா? அவர்கள் இல்லாவிட்டால், உங்களுடைய வாழ்வு நாறிவிடாதா?

இன்னுங்கேட்டால், நகர சுத்தித் தொழிலாளர்கள் என்று சொல்கிறீர்களே, அவர்கள் மட்டும் வேலை நிறுத்தம் செய்து விட்டால், உங்களுடைய யோக்கியதை என்னாகும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வேறு நாடாக இருந்தால், அவர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். திராவிடர் கழகமும் - அந்தத் துப்புரவுத் தொழி லாளிகளும் ஒன்றுதான். நாங்களும் சமுதாயத்தினுடைய துப்புரவுத் தொழி லாளிகள்தான். எது இழிவு என்று ஒதுங்கிப் போகிறார்களோ, அந்த இடத்தில் நாற்றத்தைப் பார்க்காமல் பணி செய்கிறவர்கள் நாங்கள்.

தெருவில் நடக்கக் கூட உரிமையில்லை என்று சொன்ன வர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது எந்த இயக்கம்? திராவிடர் இயக்கம். பனகல் அரசர். அதேபோல, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் சொன்ன நேரத்தில், அதற்கு உத்தரவு போட்டது - அரசாங்க ஆணை போட்டது நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் - திராவிடத்தால்தான் தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்லப்பட்ட ஒரு சமுதாயம் நடக்கக் கூடிய உரிமையைப் பெற்றது.

ஜாதி ஆணவத்தினுடைய முதுகெலும்பை முறிப்பதுதான் எங்களுடைய முற்றான பணி

ஆனால், இன்னமும் ஜாதி ஆணவம் அங்கொன்றும், இங்கொன்றுமாக தலைதூக்குகின்றன. பிணத்தைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வதற்குக்கூட அனுமதிக்கக் கூடாத ஜாதி ஆணவத்தினுடைய முதுகெலும்பை முறிப்பது தான் எங்களுடைய முற்றான பணி. இன்னமும் எங்களுக்குப் பணி இருக்கிறது. நாங்கள் முழு வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவில்லை. கடைசி மூடநம்பிக்கைக்காரன், கடைசி ஜாதி வெறியன், கடைசி ஆதிக்கவாதி இருக்கின்ற வரையில், சுயமரியாதை இயக்கத்திற்கு வேலை உண்டு, வேலை உண்டு!

அதுமட்டுமல்ல நண்பர்களே, மிகப்பெரிய சமுதாயம் - நான் ஜாதியைக் குறித்து சொல்லுகிறேன் என்று நினைக்கா தீர்கள். ஆனால், சமுதாயத்தில் இருக்கின்ற இன்றைய சூழல்கள்பற்றிதான் தெரியுமே தவிர, பழைய நிலைமைகள் பற்றி தெரியாது. இன்றைய தார் சாலையில் பயணம் செய்து தான் இன்றைய இளைஞர்களுக்குப் பழக்கமே தவிர, பழைய கரடு முரடான சாலைகளைப்பற்றி அவர்களுக்குத் தெரியாது. அதேபோன்றுதான் இந்த இயக்கத்தின் பணிகளும்.

‘மதுரை அரசியல்’ என்கிற தலைப்பில்...

நண்பர்களே, கடந்த சில நாள்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மணவிழாவில் ஒரு நண்பர் இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.

‘மதுரை அரசியல்’ என்கிற தலைப்பில், பா.திருமலை என்பவர் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தில்,

கோவில் நுழைவுகளைப்பற்றி சொல்லும்பொழுது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பாக, இதனை ஏற்கெனவே செய்தது சுயமரியாதை இயக்கம். பல இடங்களில், ஈரோட்டில், திருவண்ணாமலையில், கன்னியா குமரிக்குச் செல்கின்ற வழியில் இருக்கக்கூடிய சுசீந்திரத்தில் என்று வரிசையாக பல செய்திகளை அந்த நூலில் சொல்லியிருக்கிறார்.

அதில் மிக முக்கியமான ஒரு தகவல்:

நம்முடைய நாட்டில் நீண்ட காலமாக, மிகப்பெரிய ஒரு சமுதாயத்தை -  உழைக்கக்கூடிய சமுதாயத்தை - திருட்டுப் பட்டம் கட்டி அவர்களுக்கு ரேகைப் பதிவு சட்டம் என்று வைத்திருந்தார்கள்.

உழைக்கின்ற ஒரு சமுதாயத்தை தெருவில் நடக்கக்கூடாது என்றார்கள்; இன்னொரு சமுதாய மக்களைப் பார்த்து, நீங்கள் குற்றப்பரம்பரை - காவல் நிலையத்தில் கைரேகையைப் பதிவு செய்யவேண்டும் என்றனர். ஏனென்றால், அவர்களுக்குக் கையெழுத்துப் போடத் தெரியாது.

நண்பர்களே, அந்த ரேகைப் பதிவு சட்டம் - இந்த மாவட் டத்தில் இருக்கக்கூடிய பெருங்காமநல்லூரில் எப்படிப்பட்ட போராட்டம் நடந்தது என்று இந்த நூலில் அவர் எழுதி யிருக்கிறார்.

அப்படி எழுதிவிட்டு, கடைசியாக அவர் என்ன சொல்கிறார் தெரியுமா நண்பர்களே,

பொப்பிலி அரசர் என்ற ராமகிருஷ்ண ரங்காராவ்

மிகப்பெரிய அளவிற்கு அந்தக் காலத்தில் இந்தக் குற்றப்பரம்பரை சட்டத்தைத் தூக்கி எறியக் கூடிய வாய்ப்பு எப்படி நடந்தது  என்பதற்கு உதாரணம், மற்ற விவரங்கள் அந்த நூலில் உள்ளது. நேரத்தின் நெருக்கடியின் காரணமாக சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை என்ன? அவ்வியக்கத்தின் 90 ஆண்டுகால சாதனை எப்படி மக்கள் தழுவியதாக நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

1934 மே 12, 13 ஆகிய தேதிகளில், அதிராமத்தில் நடந்த மாநாட்டுத் தீர்மானப்படி, ஆப்ப நாட்டு மறவர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி, அரசை சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது.

அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு, உறுப்பினர்களாக முத்துராமலிங்கத் தேவர், நவநீதகிருஷ்ண தேவர், பிள்ளை யார்குலம் பெருமாள் தேவர், சசிவர்ண தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழு நீதிக்கட்சி அரசிடம் மனு அளித்தது.

அப்பொழுது நீதிக்கட்சியின் முதல்வராக இருந்தவர் பொப்பிலி அரசர்.  அவரிடம் அந்தக் குழு மனு அளித்தது.

மனு அளித்த உடனேயே, அந்தப் பிரிவு மக்களை பட்டிய லிலிருந்து நீக்கியது நீதிக்கட்சி அரசு.

இதுபோன்ற ஒரு சாதனை செய்த அரசு திராவிடர் இயக்க அரசு - பொப்பிலி அரசர் என்ற ராமகிருஷ்ண ரங்காராவ் முதலமைச்சராக இருந்தார்.

அதுமட்டுமல்ல, அதனுடைய தொடர்ச்சி அறவே 'கிரிமினல் டிரைப்ஸ் ஆக்ட்' என்ற சட்டம் நீக்கப்பட்டது. குற்றப்பரம்பரை என்கிற வார்த்தை நீக்கப்பட்டது. சீரமைப்பு திட்டம் என்பதைக் கொண்டு வந்தது நீதிக்கட்சி.

மனித குலத்தை ஒன்றாக்கிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்

ஆனால், அதையெல்லாம்விட இந்த செய்தியைப் பாருங்கள்,

1947 ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த - சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான பி.சுப்ப ராயன் அவர்கள்தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன்வடிவை ஆளுநரிடம் சமர்ப்பித்து, அவரின் ஒப்புதலுக்குப்பின், 1947 ஜூன் 5 ஆம் நாளில் இந்த சட்டத்தை ஒழித்தார்.

ஒவ்வொரு சமுதாயத்தையும் பிரித்து, பிரித்து எங்களுக்குள்ளேயே மிகப்பெரிய போராட்டத்தை, ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தில், மனித குலத்தை ஒன்றாக்கிய இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை - இன்றைக்குப் பார்ப்பனர்களே ஒப்புக்கொண்டார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது; கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். திடீரென்று ஒரு வியப்பான நிகழ்வு. பெரியார் திடலுக்கு எல்லோரும் வருவார்கள்; அவர்களை நாம் வரவேற்பது வழக்கம். எஸ்.வி.சேகர் என்கிற ஒரு நண்பர் வந்தார். அவரை வரவேற்றோம்.

அவர், உங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். என்னை பிராமணர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றார்.

அப்படியா, வாழ்த்துகள்! மிகவும் மகிழ்ச்சி என்றேன்.

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன் என்றார் அவர்.

உடனே நான், முதலமைச்சரை அல்லவா நீங்கள் பார்க்க வேண்டும்; என்னிடம் வந்து கேட்கிறீர்களே? என்றேன்.

முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பார்த்துதான் கேட்டோம்; நாங்கள் மாநாடு நடத்தி, எங்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கேட்டோம். கலைஞர் அவர்கள், ‘‘நான் செய்கிறேன், அதற்கு முன்பாக வீரமணியை சந்தித்துவிட்டு வாருங்கள்’’ என்றார். அதற்காகத்தான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றார் எஸ்.வி.சேகர்.

பெரியாருடைய வெற்றிகளில்

தலைசிறந்த வெற்றி

நான் சொன்னேன், ‘‘மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் பாருங்கள், அதுதான் பெரியாருடைய வெற்றிகளில் தலைசிறந்த வெற்றியாகும். உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித மறுப்பும் கிடையாது. நீங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறீர்களோ, அத்தனை சதவிகிதம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சுயமரியாதை இயக்கம்.

ஆகவே, அது சரியானதுதான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஏற்கெனவே வகுப்புவாரி உரிமையில் உங்களுக்கு 16 சதவிகிதம் கொடுத்திருந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்கூட அவ்வளவு சதவிகிதம் கொடுக்கவில்லை என்றேன்.

அப்படியா? எனக்குத் தெரியாது என்றார்.

அந்தப் 16 சதவிகிதத்தை எதிர்த்து வழக்குத் தொடுத்தது நீங்கள்தான் என்றேன்.

அப்படியா? எங்கள் ஆட்களே அதனை கெடுத்தார்களா? என்றார்.

உங்கள் ஆட்கள்தான் கெடுத்தார்கள். அதற்குப் பிறகுதான் 69 சதவிகிதம் வந்திருக்கிறது. இதனையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

மனித தர்மத்திற்கும்,

அவர்களுக்கும் சம்பந்தமில்லை

கடந்த ஜனவரி மாதத்தில் வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் வெளிவந்த செய்தியைப் பாருங்கள். துக்ளக் இதழில் ஆசிரியர் மாறியிருக்கலாம்; ஆனால், அந்தப் புத்தி மட்டும் மாறாவே மாறாது என்று இன்றைக்கு அவர்கள் எல்லா துறைகளிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. அது அவர்களின் தர்மம். மனுதர்மத்திற்காகவே இருக்கக் கூடியவர்கள்; மனித தர்மத்திற்கும், அவர்களுக்கும் சம்பந்தமில்லை.

அறிமுகம், வெப்சைட்

ஙிக்ஷீணீலீனீவீஸீ யீஷீக்ஷீ ஷிஷீநீவீமீtஹ்.நீஷீனீ ரீக்ஷீமீணீt நீஷீஸீtக்ஷீவீதீutஷீக்ஷீs

என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

தன் தியாகத்தால் நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள்; தன் திறமையால் தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு தமிழ்நாடு அரசு வேலையில், நம் பங்களிப்பு ஜீரோ சதவிகிதத்திற்கு அருகில் இருக்கிறது.

எனவே, 10 இல் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, தன் அடையாளத்தை இழக்கிறது. எனவே, டெக்னிக்கல் கூலிகளாக நொறுங்கி விட்டோமா என்று கூறி, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைப்பாடு என்னவாக இருக்க முடியும்?

இன்றைய நிலை! அதிலேயும் ஆபத்து வந்துவிட்டதே என்கிறார்.

ஆகவே, நண்பர்களே! பார்ப்பனர்கள் எந்த இடத்தில் பெரியார் தொடங்கினாரோ, அந்த இடத்தில் வெற்றி பெற்று இருக்கிறோமா? இல்லையா? என்பதற்கு இது ஒப்புதல் வாக்குமூலம்.

அவர்களே, ஒப்புதல் வாக்குமூலத்தினைக் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அனைவருடைய

கடமை! கடமை!! கடமை!!!

எனவே, இந்த இயக்கம், இந்தப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். ஏராளமான அளவிற்கு சமுதாயப் பணி இருக்கிறது. மத்தியில் மதவாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவை களையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபொழுது, திராவிடத்தினுடைய அடிப்படை கொள்கைகள் என்று சொன்னால், இங்கே சொன்னாரே, பெரியாரியம் என்றால் என்ன? சகோதரர் விளக்கிவிட்டார். ஆகவே, அப்படிப்பட்ட அந்தப் பெரியாரியம், மனிதநேயம், சுயமரியாதை இயக்கம் - அதனைத் தூக்கிப் பிடிக்கவேண்டியது கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அனைவருடைய கடமை! கடமை!! கடமை!!! என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன், வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க சுயமரியாதை இயக்கம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

 


தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள்

திராவிட இயக்கவுணர்வுடன்

பட்டுப் போகாமல் பாதுகாக்கும் திராவிடர் கழகம்

எந்தக் காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம், எந்தக் காலத்திலும் விடுதலை சிறுத்தைகள், எந்தக் காலத்திலும் திராவிட இயக்க உணர்வுகள்  - அது பட்டுப்போகாமல் பார்க்கவேண்டிய பொறுப்பு இந்தத் தாய்க்கழகத்திற்கு உண்டு! உண்டு!! உண்டு!!!

ஆகவே, அதனை அடிப்படையாகக் கொண்டுதான், மிகத்தெளிவாக இந்தக் கருத்தைச் சொல்கிறோம்.

மதவாதப் பாம்புகள் அவ்வப்பொழுது சீறிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்பொழுது புற்றிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள் கையாகக் கிளம்புகிறது; சமஸ்கிருதமாகக் கிளம்புகிறது, ஏன்? நீட் நுழைவுத் தேர்வாகக் கிளம்புகிறது. நுழைவுத் தேர்வை நாம் எதிர்த்த நேரத்தில், நாங்கள் அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறோம்.  நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்று சொல்லி, தேர்வு வாரியத்தை நாங்கள் எல்லாத் துறைகளிலும் கொண்டு வருகிறோம் என் கிறார்கள். இதுபற்றி  இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம்.

சென்சஸ் மக்கள் தொகைக் கணக்குப்படி, ஆறரை கோடி பேர் பள்ளிக்கூடத்தையே பார்க்காதவர்கள்; பள்ளிக்கூடத்தையே பார்க்காத ஒரு சமுதாயத்தில், இவன் தகுதி தேர்வு நடத்துகிறானாம்? அது என்ன தகுதி தேர்வு?

- விடுதலை நாளேடு.17.2.17

வைத்தியநாத அய்யர்


பொய்களையும், புரட்டுகளை யும் புனைந்து கொட்டுவதில் முதல் பரிசைத் தட்டிப் பறிக்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்.’

28.4.2017 நாளிட்ட அவ்விதழில் (பக்கம் 7) ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

‘‘ஈ.வெ.ராமசாமி வைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிப்பவர்கள், மதுரை வைத்திய நாத அய்யர் நடத்திய ஆலயப் பிரவேசத்தை மறைத்து விட்டார் கள்.வைத்தியநாத அய்யர்மது ரையின் ஒரு புகழ்பெற்ற வழக்கு ரைஞர். அரிஜனங்கள் இவரைத் தங்கள் தந்தை போல எண்ணிப் போற்றிவந்தனர்’’என்றுஎழுது கிறது ஆர்.எஸ்.எஸ்.சின் ‘விஜய பாரதம்.’

ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஈ.வெ.ராமசாமிவைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிக்கிறோமாம். இந்தக் கூட்டம் எத்தகைய அறிவு நாணயமற்ற கூட்டம் என்பதற்கு இந்த வாசகங்களே போதுமானது.

வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, ‘‘வைக்கம் வீரர்’’ஆனதுஎன்பதுவரலாற் றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. இதனைத்தம்பட்டம்அடித்துச் சொல்லவேண்டிய அவசிய மில்லை. அந்த வரலாற்று உண் மையைக்கூட ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் நேர்மை இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திடம் அறவேயில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

மதுரை வைத்தியநாத அய்யர் மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்தியதை மறைத்துவிட்டார்கள் என்று எழுதுகிறது.

இந்த மதுரை ஆலயப் பிர வேசம்பற்றி ராஜாஜி என்ன கூறு கிறார் என்பது முக்கியமானது.

மதுரை மீனாட்சிக் கோவி லில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த் தப்பட்டவர்களுக்குத் திறந்து விடப்பட்டது. ஆதிதிராவிடர்கள் அன்று காலை 8.50 மணிக்கு அக்கோவிலுனுள் நுழைந்தார்கள். அந்த நிகழ்ச்சியைப்பற்றி மதுரை யில் பேசிய மாண்புமிகு (கனம்) சி.இராசகோபாலாச்சாரியார்:

‘‘இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்தவெற்றியுமல்ல;இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றி யாகும். ஏனெனில், இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும்,சுயமரியா தைக்காரர்களும்இன்னும்இதரர் களும் சேவை செய்திருக்கின்றனர்’’ என்று குறிப்பிட்டார் (‘சுதேசமித் திரன்’ 31.7.1939, ‘விடுதலை’ 1.8.1939).

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாத அய்யர் மட்டும் தனியாகப்போராடிவெற்றிபெற் றதுபோல சித்தரிப்பது சரியானது தானா?

இன்னொரு மிகமிக முக்கிய மான உண்மை உண்டு. இதே மதுரை வைத்தியநாத அய்யர் 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது எப்படி நடந்துகொண்டார் - அதைப்பற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பு நூல் - 2 ஆம் தொகுதியில் (பக்கம் 274) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘‘திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோவில் நுழைவைப்பற்றி இராம சாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக் கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவார். பின்னே காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய் தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும், பின்னணிக்குப் போற் றலும் நிகழ்தல் இயல்பு போலும்!’’

1922 இல் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் 1939 இல் மனம் மாறினார் என்றால், அதற்கும் காரணம் சுயமரியாதை இயக்கம்தானே!

- மயிலாடன்

-விடுதலை நாளேடு,28.4.17