செவ்வாய், 28 ஜனவரி, 2020

வைக்கம் போராட்டம் பெரியார் கலந்து கொள்ள காரணம் என்ன?

கேரளாவின் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டத்தில் அவரது முழுமையான பங்களிப்பு, காந்தியின் பங்கேற்பு, போராட்டத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் பழ. அதியமான். இந்தப் புத்தகம் குறித்தும், வைக்கம் போராட்டம் குறித்தும் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் பழ. அதியமான். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

கே. வைக்கம் போராட்டம் குறித்து ஆய்வுசெய்து எழுத வேண்டுமென ஏன் முடிவுசெய்தீர்கள்?

ப. தமிழகத்தின் சமூக வரலாறு இன்னும் முழு மையாக எழுதப்படவில்லை. ஆங்காங்கே செய்திகளாக எழுதப்படுகின்றன. அவ்வளவுதான். அந்த வகையில்தான் சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் குறித்து 2014இல் ஒரு புத்தகத்தை எழுதினேன். அந்தப் புத்தகம் குறித்து எழுதும் போதுதான் வைக்கம் போராட்டம் குறித்து முழு மையான நூல் ஏதும் இல்லை என உணர்ந்தேன். சுருக்கமாக சில நூல்கள் வந்திருக்கின்றன. அவ் வளவுதான். அந்தப் போராட்டத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள் வரவில்லை.

ஆகவே, வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை சமகால நாளிதழ்கள், திருவிதாங்கூர் அரசின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து வைக்கம் போராட்டத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். தவிர, வைக்கம் போராட்டம் குறித்து வந்த மலையாள இதழ்கள் எனக்கு இரண்டாம் நிலை ஆதாரமாகப் பயன்பட்டன. குறிப்பாக சுதேசமித்திரன் நாளிதழில் வந்த செய்திகள் பெரிதும் பயன்பட்டன. அந்த நாளிதழ் காங்கிரஸ் சார்பு நாளிதழ். அதில் 1924-25இல் வெளியான சுதேச மித்திரனின் ஒவ்வொரு நாளையும் பார்த்து, அதில் வைக்கம் பற்றி வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.

இந்த நூலின் முதல் பகுதி, ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை நாளிதழ்களின் செய்தியின் அடிப்படையில் எந்தவிதமான கருத்து கூறலும் இல்லாமல் நடந்ததை, நடந்தபடி எழுதியிருக்கிறேன். போராட்டம் துவங்கிய 1924 மார்ச் 30 முதல், போராட்டம் முடிந்த 1925 நவம்பர் 23ஆம் தேதிவரை நாளிதழ்களில் வந்தபடி கொடுத்திருக்கிறேன்.

அந்தப் பகுதியை வைத்துக்கொண்டு, இந்தப் போராட்டம் குறித்து வேறுவிதமான பார்வையோடு ஒரு கட்டுரையை எழுத முடியும்.

இந்தப் போராட்டத்திற்கு பின்னணியாக, தூண்டு தலாக எவையெல்லாம் அமைந்தன, முன்முயற்சிகள் என்ன என்பதை அடுத்த பகுதியாகக் கொடுத்திருக் கிறேன். இதனைப் பலர் கோவில் நுழைவுப் போராட்டம் என நினைக்கிறார்கள். இது கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடப்பதற்கு உரிமை வேண்டி நடத்திய போராட்டம். இது கேரளாவில் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற சிறிய ஊரில் இருந்த சிவன் கோவிலைச் சுற்றியிருந்த தெருவில் நடப்பதற்கான போராட்டம்தான் இது.

கேரளாவில் ஈழவர்கள் இந்த உரிமையை நாடிப் போராடினார்கள். ஈழவர்களை தமிழகத்தில் ஒப்பிட வேண்டுமென்றால் நாடார்களைச் சொல்லலாம். அந்தப் போராட்டம் நடந்தபோது, இங்கிருந்த பெரும் பான்மையான நாடார்கள் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் முதல் முறையாக தமிழில் பதிவாகியிருக்கின்றன. காமராஜர்கூட இந்தப் போராட்டத்திற்குப் போயிருக்கிறார். பத்திரிகைகளில் அவர் பெயர் வரவில்லை என்றாலும்கூட, போராட்டத் திற்குச் சென்றுவந்த டி.எஸ். சொக்கலிங்கம் இதனைக் குறிப்பிடுகிறார்.

மூன்றாவது பகுதியில், காந்தி என்ன பங்களிப்பைச் செய்தார் என்பதைக் கொடுத்திருக்கிறேன். காந்தி நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வில்லை. அவர் ஆலோசகராகத்தான் இருந்தார். போராட்டம் நின்றுவிடும் ஒரு சூழல் ஏற்பட்டபோது, 1925 மார்ச் மாதம் காந்தி அங்கு வந்தார். அதாவது போராட்டம் துவங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு வந்தார். அதன் பிறகு ராணியிடம் பேசினார், காவல்துறையினரிடம் பேசினார். அதைவிட முக்கியமாக அங்கிருந்த வைதீக பிராமணர்களிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த விவாதமெல்லாம் இந்த நூலின் பின்னிணைப்பில் இருக்கிறது. அந்த விவாதங்களைப் பார்த்தால், காந்தி ஒரு மாபெரும் அறிவாளி என்பதும் அவரிடம் எதிராளி ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பதும் புரியும்.

காந்தி இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் அறிவுரை சொன்னார். ஆனால், எல்லா அறிவுரைகளையும் அங்கிருந்த ஈழவத் தலைவர்கள் கேட்கவில்லை.

இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்பதுதான் நான்காவது பகுதி. பெரியார் எந்தச் சூழலில் போராட்டத்திற்குச் சென்றார், என்ன பங்களிப்பைச் செய்தார் என்பது இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு, வைக்கம் போராட்டம் குறித்து பிற்கால வரலாற்று ஆசிரியர்கள், அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்று நூலில் என்ன சொல்லியிருக்கிறார்கள், தமிழக, கேரள வரலாற்றாசிரியர்கள் என்னவிதமாகப் பார்த்தார்கள், இந்தியவின் பிற பகுதிகளில் இருந்தவர்கள் எப்படிப் பார்த்தார்கள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாள ரான மேரி எலிசபத் கிங் என்பவர் வைக்கம் போராட் டத்தை முன்வைத்து, அகிம்சாவழி போராட்டங்கள் குறித்து ஒரு ஆய்வை எழுதியிருக்கிறார். அதிலுள்ள கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பின்னிணைப்பில், ராஜாஜி எழுதிய அறிக்கை,

எஸ். சிறீநிவாச அய்யங்கார் எழுதிய அறிக்கை போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கே. அந்தத் தருணத்தில் பெரியார் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர். அவர் ஏன், கேரளாவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார்? அதன் பின்னணி என்ன?

ப. 1924 மார்ச் 30ஆம் தேதி துவங்கிய இந்தப் போராட்டம் எப்படி நடந்ததென்று முதலில் புரிந்துகொள்ளலாம். தினமும் மூன்று பேர், கோவிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட ஒரு பகுதியில் வந்து நின்று போராடுவார்கள். உடனே திருவாங்கூர் அரசு அவர்களைக் கைதுசெய்யும். இப்படி ஒரு வாரம் நடந்தது. அதன் பின் தலைவர்களைக் கைதுசெய்ய அரசாங்கம் முடிவுசெய்தது. அந்தப் போராட்டத்தை நடத்தத் துவங்கிய தலைவர்களான டி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோரைக் கைதுசெய்துவிட்டது. அதனால், போராட்டத்திற்கு தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து அழைக்க முடிவுசெய்கிறார்கள். ஏன் பெரியாரை அழைக்க வேண்டுமென்பது அடுத்த கேள்வி. பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர் களாக இருந்தார்கள். ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். அதில் பெரியார் தாழ்த்தப் பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்.

கே. கேரள தலைவர்கள் அழைத்து அங்கே பெரியார் சென்றாரா அல்லது காந்தி சொல்லி சென்றாரா?

ப. கேரளாவில் போராடிக்கொண்டிருந்த தலைவர்கள்தான் அழைத்தார்கள். சிறையில் இருந்து ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவமேனன் ஆகியோர் கடிதங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள். பெரியார் தன் வாழ்க்கை வரலாற்றில் சொல்லியிருக்கிறார். ஜார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவரது பேரனும் இதைச் சொல்லியிருக்கிறார். காந்தி சொல்லி செல்லவில்லை. நான் கட்டாயம் வரவேண்டுமா என்று இரண்டு முறை கேட்டு, நீங்கள் கட்டாயம் வந்தாக வேண்டும், நிலைமை மோசமாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நான் போனேன் என அந்த சமயத்திலேயே சொல்லியிருக்கிறார்.

கே. பெரியார் அங்கே சென்ற பிறகு வைக்கம் போராட்டம் எப்படி மாறியது?

ப. வைக்கம் போராட்டம் குறித்து முதன் முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியவர் டி.கே. ரவீந்திரன். "பெரியார் வந்த பிறகு, இயக்கத்திற்கு ஒரு புதிய உயிர் கிடைத்தது" என்று அவர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். பெரியாரின் சாமர்த்தியமான, கவர்ச்சிகரமான பேச்சு போராட்டத்தை உயிர்த்தன்மையோடு வைத்திருந்தது. மக்கள் போராட்டமாக மாற்றியது. சுதேசமித்திரனில் இது தொடர்பான செய்திகள் விரிவாக வந்திருக்கின்றன. இங்கிருந்து சென்ற டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள்.

கே. பெரியார் தமிழ்நாட்டிலிருந்து போராட்டத்திற்கு சென்று வந்தாரா அல்லது வைக்கத்திலேயே தங்கியிருந்து நடத்தினாரா?

ப. இந்தப் போராட்டம் 1924 மார்ச் முப்பதாம் தேதி துவங்கியது. பெரியார் முதன் முதலில் ஏப்ரல் 13ஆம் தேதி அங்கே போனார். அவர் அங்கே போய் இறங்கியவுடன் அவருக்கு அரச வரவேற்பு கிடைக்கிறது. காரணம், அந்த அரசர் பெரியாரின் நண்பர். ஆனால், தான் நண்பராக வரவில்லை; அரசுக்கு எதிராகப் போராட வந்திருக்கிறேன் என்று வரவேற்பை மறுத்துவிட்டார் பெரியார். முதலில், 10-15 நாள் தொடர்ந்து பேசுகிறார் பெரியார். பிறகு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. நுழைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், ஊருக்கு வருகிறார் பெரியார். பிறகு, மே மாதத்தில் மீண்டும் வைக்கத்திற்குப் போகிறார் பெரியார்.

இந்த முறை பெரியார் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்த பிறகு வீட்டிற்கு வராமல், மீண்டும் போராடச் செல்கிறார். மீண்டும் கைதுசெய்யப்படுகிறார். அப்போது நான்கு மாத தண்டனை விதிக்கப்படுகிறது. இப்படியாக ஏழு முறை வைக்கத்திற்குச் செல்கிறார் பெரியார். என் கணக்குப்படி சுமார் 140 நாட்கள் வைக்கத்தில் இருந்தார் அவர்.

கே. இந்தப் போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு என்ன?

ப. இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கலாமா, வேண்டாமா என்பதையெல்லாம் காந்தியிடம் ஆலோசித்தார் டி.கே. மாதவன். வைக்கம் போராட்டம் என்ற சொல்லாடல் துவங்குவதற்கு முன்பே காந்திக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. 1922-23இல் காந்தி திருநெல்வேலிக்கு வந்தார். அங்கே டி.கே. மாதவன் காந்தியிடம் இது குறித்து விவாதித்தார். நிச்சயமாக போராடலாம் என காந்தி சொன்னார். இதை நீங்கள் எழுத்து மூலமாகக் கொடுங்கள் என்கிறார் மாதவன். காந்தியும் எழுதிக் கொடுத்தார். இதை தன்னுடைய தேசாபிமானியில் பிரசுரித்தார் மாதவன். அது இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பில் இருக்கிறது.

கே. போராட்டம் நிறைவுக்கு வரும்வரை காந்தியின் பங்களிப்பு என்னவாக இருந்தது?

ப. ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியிடம் ஆலோசனை செய்துதான் இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். ஒரு முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாமா என்று கேட்டார்கள். காந்தி மறுத்துவிட்டார். தடையைத் தாண்டலாமா என்று கேட்டார்கள். அதற்கும் காந்தி மறுத்தார். கிறிஸ்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டபோது, அதுவும் கூடாது என்றார் காந்தி. சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வந்து இந்தப் போரட்டக்காரர்களுக்கு உணவளித்துவந்தார்கள். அதற்கும் தடை விதித்தார் காந்தி.

மற்ற மதத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்றார் அவர். இது இந்துக்களின் பிரச்சனை; அதற்கு அவர்கள்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமே தவிர வேறு மதத்தினர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்றார் காந்தி. அதனால்தான் ஜார்ஜ் ஜோசப் போராட்டத்திலிருந்து வெளியேறினார். இப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியின் ஆலோசனைப்படிதான் போராட்டம் நடைபெற்றது.

கே. பெரியாரை போராட்டத்திற்கு அழைப்பது குறித்து காந்தியிடம் கேட்கப்பட்டதா?

ப. அப்படிக் கேட்கப்பட்டதாக நம்மிடம் தகவல் இல்லை. போராட்டக் குழுதான் அதை முடிவுசெய்தது.

கே. இந்தப் போராட்ட காலகட்டத்தில் காந்தி எத்தனை முறை வைக்கத்திற்கு வந்தார்?

ப. 1924 மார்ச் துவங்கி 1925 நவம்பர் வரையிலான காலத்தில் ஒரே ஒரு தடவைதான் அதாவது 1925 மார்ச் மாதம் வந்தார். ஏறக்குறைய பத்து நாட்கள் தங்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் என்ன செய்தார் என்ற தகவல் புத்தகத்தில் இருக்கிறது.

கே. இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ப. ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்.

கே. போராட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது காந்தி ஏன் அழைக்கப்படுகிறார், பெரியாரை ஏன் அழைக்கவில்லை?

ப. இது குறித்து பிற்காலத்தில் பெரியார் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் தன்னிடம் கலந்துபேச விரும்பி ராஜாஜியிடம் சொன்னபோது, அவர் காந்தியை வைத்தே இதை முடித்துக்கொள்ளலாம் எனச் சொன்னதாகவும் பெரியார் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக வேறு ஆதாரங்கள் இல்லை.

கே. வைக்கம் போராட்டம் ஒரு முழுமையான வெற்றியை எட்டியதா?

ப. இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. போராட்டக்காரர்கள் நான்கு தெருக்களிலும் நடக்க அனுமதிக்க வேண்டுமென்றனர். ஆனால், மூன்று தெருக்களில் மட்டுமே நடக்க அனுமதி கிடைத்தது. அந்தப் போராட்டத்தின் செயலராக இருந்த கேளப்பன் என்பவர், தீண்டாமை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது; அது ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கே. போராட்ட காலத்தில் காந்திக்கும் பெரியாருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இருந்ததா?

ப. இந்தப் போராட்ட காலத்தில் இருந்ததற்கான தகவல்கள் இல்லை. ஆனால், காந்தி வைக்கத்திற்கு வந்தபோது, பெரியார் அவரை ஈரோட்டில் வரவேற்றார். அதற்குப் பிறகு, கேரளா சென்று இரண்டு நாட்களுக்குப் பின் இவர் காந்தியுடன் சென்று சேர்ந்துகொள்கிறார். அதற்குப் பிறகுதான் பெரியாரும் காந்தியும் நாராயண குருவைச் சந்தித்தார்கள். காந்தி ராணியிடம் பேசும்போது, தன்னிடம் கலந்துகொண்டு பேசியதாக பெரியார் சொல்கிறார்.

கே. இந்தப் போராட்டத்தில் நாராயண குருவின் பங்களிப்பு என்ன?

ப. துவக்கத்தில் இந்தப் போராட்டத்திலிருந்து நாராயண குரு சற்று விலகியே இருந்தார். ஆனால், போராட்டம் இன்னும் தீவிரமாக நடக்க வேண்டுமென அவர் நினைத்தார். அதற்காக ஒரு நேர்முகம்கூட அவர் அளித்தார். ஆனால், அந்த நேர்முகம் வெளியான பிறகு அவர் அதனை மறுத்தார்.

காந்தி வைக்கத்திற்குவந்து நாராயண குருவை சந்தித்தபோது, அவருக்கு போராட்டத்தில் விருப்ப மில்லை என்பதை மனதில் வைத்தே காந்தி பேசுவது போல அந்தச் சொற்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதற்குப் பிறகு நாராயண குரு போராட் டத்திற்கு ஆதரவளித்தார். அவர் முழுமையான ஆதரவைக் கொடுத்திருந்தால் போராட்டத்தை சீக்கிர மாக முடித்திருக்கலாம். ஆனால், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்தப் போராட்டம் முடிந்திருக்கவே முடியாது. போராட்டம் நடந்த இடம், நாராயண குருவுடையது.

ஒரு கட்டத்தில் நாராயண குரு நேரடியாகச் சென்று சத்யாகிரகிகளை ஆசிர்வதித்தார். ஆயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தார். போராட்டத்தை நடத்திய டி.கே. மாதவன், நாராயண குருவின் அத்யந்த சீடர்.

கே. இந்தப் போராட்டத்தின்போது தமிழக சனாதனிகள் எப்படி நடந்துகொண்டனர்?

ப. அது தொடர்பாக நாம் இன்னும் ஆராய வேண்டியிருக்கிறது.

கே. வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றது, பெரியாரின் எதிர்கால அரசியல் வாழ்வில் தாக்கம் ஏதும் செலுத்தியதா?

ப. இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவருடைய பிற்கால வாழ்வில் வைக்கம் போராட்டம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் கோவில் நுழைவு என்ற கருத்திலேயே அவர் மாறுபடுகிறார். அது முக்கியமல்ல என்று நினைக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம் என்ற கருத்துக்கே வந்து விடுகிறார் பெரியார். ஆனால், துவக்ககாலத்தில் இந்தப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தால்தான் ஈழவர்களுக்கும் பெரியாருக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

கே. பெரியார் இந்தப் போராட்டத்தை ஜாதி ஒழிப்புப் போராட்டமாக பார்த்தாரா?

ப. 1953வாக்கில் விடுதலையில் ஜாதி ஒழிப்பு குறித்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார் பெரியார். அதில், முதல் நிகழ்ச்சியாக வைக்கம் போராட்டத்தைத்தான் குறிப்பிடுகிறார். ஆகவே, அவர் இந்தப் போராட்டத்தை அப்படி நினைத்தார் என்று சொல்லலாம்.

கே. தமிழ்நாட்டில் அதற்குப் பிறகு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்களில் வைக்கம் போராட்டத்தின் தாக்கம் இருந்ததா?

ப. தமிழ்நாட்டில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்த கோவில் நுழைவு, தெரு நுழைவு போராட்டங்களில் வைக்கம் மிகப் பெரிய பங்களிப்பை, உத்வேகத்தை அளித்தது. அம்பேத்கர் 1936வாக்கில் ஒரு போராட்டத் தைத் துவங்கியபோது, வைக்கம் போராட்டம்தான் தனக்கு ஒரு உணர்ச்சியைக் கொடுத்தாக குறிப்பிடு கிறார். கேரளாவிலும் 1936இல் கோவில் நுழைவு பிரகடனம் செய்யப்பட்டபோது, வைக்கம்தான் அதற்கு முக்கியக் காரணம் என எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்.

- பழ. அதியமான்

பி.பி.சி.நேர்காணல்

(வைக்கம் போராட்டம்;

ஆசிரியர்: பழ. அதியமான்;

காலச்சுவடு வெளியீடு;

பக்கங்கள்: 646; விலை ரூ. 325/-)

-  விடுதலை நாளேடு 28 1 20

வேத மொழியும் பேத நிலையும் - 44 -கரூர் பி.ஆர்.குப்புசாமி பி.ஏ., பி.எல்.,

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

வேதமொழியும், பேத நிலையும் எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் கரூர் பி.ஆர்.குப்புசாமி (பி.ஏ., பி.எல்.,) ஆற்றிய உரை வருமாறு:

மனிதகுல வரலாற்றில் சமூக பேதநிலை ஒரு கட்டத்தில் ஏற்படுகிறது. ஏற்பட்ட பேதத்தால் ஏற்றம் பெற்றோர், ஏய்க்கப்பட்டு வாடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரை என்றும் தலைதூக்காவண்ணம் ஏற்பாடுகள் செய்வதும் காணக் கூடியதே.

ஆனால், பேத நிலையைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கானோரே இயல்பாக ஏற்று அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம் என்பதுபோல் இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சிகரமான சமுதாய அமைப்பைப் பிற நாடுகளில் காணுவது அரிது.

திட்டமிட்டு ஏற்படுத்திய இப் பேத நிலையை இயல்பு எனப் பாதிக்கப்பட்டோரே எண்ணி, அவ்வாறே செயல்பட்டு, அவர்கள் மேம்படச் செய்யப்படும் சமுதாய மாற்ற முயற்சிகட்கு, அவர்களே முட்டுக்கட்டையாகச் செயல்படும் விந்தை வேறு எங்கும் இவ்வளவு நீண்ட காலம் இருப்பதைக் காணமுடியாது.

இங்குள்ள பேதநிலை, மாந்தரின் சிந்தனைமுறை, சமுதாய வாழ்நிலைகள், அனைத்து கலாச்சார அம்சங்கள், ஆயிரம் படிப் பொருளாதார அமைப்புகள் என அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கச் செய்யப்பட்டுள்ளது.

இப்படி உள்ள அமைப்பை கவனித்தால், வடமொழி இப் பேத நிலையின் உச்சாணிக் கொம்பில் உள்ளோரின் பயன் கருவியாகப் பயன்பட்டு வந்ததை-வருவதை-காணலாம்.

அம்மொழி வேதமொழி எனப்பட்டது வேதம் எனில் மறைக்கப்பட்டது (மறை) என மறைமலை அடிகளார் விளக்கினார்.

ஏற்றத்தாழ்வான சமூகத்தை நடத்த மறைக்கப்பட வேண் டியவை-ஏற்றம் பெற்றோருக்கு-ஏராளமாகி விடுகின்றன.

அப்படி மறைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டு தங்களுக்கென மேல்தட்டார் வைத்துக்கொண்டு, கீழோர்க்கு மறுக்கப்பட்டு வந்துள்ளவற்றைப் பார்த்தால், வடமொழி எப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பேதநிலை சமூகத்தில் மேல்தட்டுக் கருவியாகவும் செயல்பட்டு வந்தன, வருகின்றன என்பது விளங்கும்.

மாந்தர் பெயரை எடுத்துக்கொண்டால் ரமேஷ், ஆர்த்தி, சத்யா, சிந்து, ஜலஜா, ஷைலஜா, பிந்து, ப்ரியா-இவை மேல்தட்டுப் பெயர்கள்.

மண்ணாங்கட்டி, வீரன், மாறன், கருப்பன், குப்பன் இவை சாமான்யருக்குள்ளவை.

ஆண்டைகளின் கடவுள் பெயர்களோ சுகுந்த குந்தாளம்பிகை, பாலகுஜாம்பாள், பர்வதவர்த்தினி, ரிஷபர், தக்ஷினேஷ்வரர் இப்படி.

அடிமைகளின் தேவதைகளோ பரட்டத் தலைச்சி, மாசடச்சி, கருப்புராயன், சூரக்கொம்புடையார், கத்தரிக்காய் சித்தன் இப்படி.

ஊரை எடுத்துக்கொண்டாலோ அக்ரஹாரமா, வசதிபுரியா, வறுமைப் பகுதியா எனப் பேரே கூறி நிற்குமே!

மகாதானபுரம், ஆண்டான்கோவில், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீரங்கம் இவை போன்றவை ஆண்டைகள்-அக்ரஹாரம்.

மேட்டுப்பட்டி, வெட்டுக்காடு, பூலாங்காடு, பெரும்பள்ளம் இப்படி வரும் பள்ளத்தில் வீழ்ந்தோர் குடி இருப்புகள் - சேரிகள் !

மேட்டுக்குடியினர் குலங்களோ, வாதுல, பரத்துவாஜ, நைத்ருவகாஷ்யப கவுண்டின்ய, சச்மர்ஷண, ஹரித, விஷ்வாமித்ர என வரும்.

நம்மவர் குலங்களோவெனில் பெருங்குடி, காடை, பண்ணை, அந்துவன், செங்கண்ணன் என்பதாக வரும்.

அவாள் பாடுவது ஸங்கீதம், நம்மவர் வேலைக்காட்டில் மகிழ்ந்திருக்கும் வேளையில் படிப்பதுகூட ஒப்பாரி.

வீட்டிற்குள்ளே அவர்கள் ஆடும் ஆட்டம் பரம பதஸோபனம் போன்றவை. தாழ்நிலை மக்கள் ஆடுவதோ பல்லாங்குழி, தாயக்கரம் போன்றவை.

வீட்டுக்கு வெளியில் மேலவர் ஆடுவது பரத நாட்டியம், பாகவத மேளம், நம்மவர் ஆடுவது சதிர், தட்டுக்கரம், ஒயில் கும்மி.

அவர்கள் பிரவசனம், கதாகாலஷேபம் நடத்துவர். பள்ளத்தில் வீழ்ந்தோரோ குன்னுடையான் பாட்டு, முத்துப்பட்டன் கதை, அதிகப்பட்சம் பவளக்கொடி !

பெருங்கோவில்களில் பட்டர்கள், புரோகிதர்கள், சிறு கோவில்களில் பண்டாரம், பூசாரி.

அவர்களுக்கு பஜகோவிந்தம், கீதகோவிந்தம்.

பிறருக்கு வாங்கலம்மன் தாலாட்டு மாரியம்மன் ஊஞ்சல் போன்றவை. அவர்கள் பாராட்டுவது தர்மிஷ்டன், பரோபகாரி, சுந்தரபுருஷன், நாரீமணி, அபிநய சுந்தரி இப்படி.

மற்றவரோ நல்லவன், வல்லவன், வீரன், தீரன் இப்படி.

மேட்டுக்குடித் திட்டலோ, கர்மி, லோபி, துஷ்டன் இப்படி.

தமிழ் குடிமக்களோ! திருட்டுப்பயல், குருட்டுப் பயல், முட்டாள், காட்டுப்பயல் இப்படி.

அங்கே நாடகம்

இங்கே கூத்து

அங்கே ஸபா

இங்கே மைதானம்

உயர் குடியினர்க்கு புண்யாஹவசனம், ஆயுஸ் ஹோமம், சத்ருஸங்கார யாகம், சஷ்டியப்தபூர்த்தி போன்ற சடங்குகள்.

தாழ்குடியினருக்கோ மிளகாய் சுற்றிப்போடல். நெய்விளக்கு வைத்தல், முடி கயிறு கட்டல், கம்பளி கட்டல் போன்ற சடங்குகள்.

வசதி வர்க்கமோ, க்ஷேத்திராடணம் போகின்றனர். வறிய மக்களோ குலக்கோயில் சென்று கும்பிட்டு மீள்கின்றனர்.

மேட்டுக்குடியினர்க்கு பிடிப்பது தோஷம். பள்ளத்து மக்களுக்கு அடிப்பது எசவடம்.

அசிங்கமான அர்த்தங்கள் இருப்பினும் கேசவன், லிங்கம் என வடமொழியில் பெயர் வைத்துவிட்டால் தெரிவதில்லை.

அழகன், முல்லை, வெண்ணிலா, அன்பழகன், வழுதி, அல்லி என்பவற்றிற்குத் தற்போது வரவேற்புக் குறைகிறது.

புதுக்கவிதை, பொங்கிவரும் மக்களது நியாய ஆவேசத்தை அள்ளி வந்தாலும், பொறுக்கமுடியாத அளவு வடமொழி மோகத்தில் மூழ்கிவிட்ட விபத்து எப்படி நடந்தது அங்கே? சுகயுகம், ஞானி, யாத்திரைகள், சுயாகம், யாகங்கள், தரிசனம், பிரிய்லங்கள், பரீட்சை, புஷ்பம் இப்படி ஆயிரம்!

சாமான்யரின் தமிழ் கவிதை சப்பிடும்போது, ஏற்றக்குடியினர் செல்வாக்கு விரியும் இடதுசாரி இயக்கம், வாய்ப்பை நழுவவிடாமல் வடமொழியைத் திணிக்க வகை செய்துவிட்டதுபோலும் !

குற்றம் தாழ்குடித் தமிழ்ப் பற்றாளரின் மீதே!!

இன்றைக்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களில், வெள்ளைச்சட்டை தரித்து வெளிச்சம் போட்டு வாழ வாய்ப்புக் கிடைத்தவரில் பெரும்பாலோர் (அவர் எந்த ரக சமதர்ம இயக்கத்தவராயினும்கூட) வடமொழி மோகிகளாக மாறி வருகின்றனர்.

மேட்டுக்குடியினர் நாகரிகமே மேற்கொள்ளத் தக்கது என எப்போதுமே தனம் படைத்தோர் நடந்துவந்தனர். இன்று புற்றீசல் போல் புறப்பட்ட புதுப்பணக்காரர்கள் அனைவரும் வடமொழி நேயராகத் தங்களை ஆக்கிக் கொண்டுள்ளார்கள். அதன்மூலம் அவர்கள் கல்ச்சர்டு  (Cultured) ஆகிறார்களாம்!

சினிமாக்காரர்கள் இந்த வடமொழி மோகம் மக்களிடையே வர அதிகம் காரணமாகி விட்டனர். அவர்களின் அழுகிய வாழ்வும் அழகிய வடமொழிப் பெயர்களால் மறைக்கப்படுகிறதோ! சினிமா தொடர்பான ஆண், பெண் அனைவரின் பெயர்களையும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டவும், உற்பத்தியாகும் பண்டங்கட்கு சூட்டவும் ஆன ஒரு திருக்கூத்து நடந்தேறி வருகிறது. பெரிதெல்லாம் வடமொழியே! சிறிதெல்லாம் தாய்மொழியே!

குறுக்குவழியில் பணம் சேர்த்துவிட்டவன், நமஸ்காரம் என்று கூற விழைகிறான்; வணக்கம் அவனுக்குக் கசக்கிறது.

கலப்படம் செய்துவந்த பணத்தால் கட்டப்படும் பெரிய உணவு விடுதிக்கும், தங்கும் விடுதிக்கும் பெயர்கள் ஸ்வர்க்கா, ஸ்வப்ணா, சொர்ணா, ஸ்வாகதம் முதலியன. அங்கு அதிகாலையில் வைக்கப்படும் இசை ஸுப்ரபாதம்.

கள்ளத்தால் விளைந்த காசைக்கொண்டு கட்டிய அரங்குக்குப் பெயர்கள் சவிதா, ஸ்ரீலேகா, அலங்கார், பிரீதா, ரம்யா, ரூபா.... இப்படி.

கொள்ளை அடிக்கும் குழுமங்கட்குப் பெயர்கள் கீதாலயா, அரவிந்த், ஸ்நேகா, சவும்யா, திவ்யா, ஸ்வரூப், பூமிகா, க்ரீயா இப்படி.

இது புதிதல்ல! அன்று பார்ப்பனரைப் பார்த்து மன்னர்களும், நிலப் பிரபுக்களும் கலாச்சாரம் பெற்றார்கள்.

இன்று பனியாக்கள் அதைச் செய்கிறார்கள்.

புதிய ஊரமைப்பில் பங்களா முகப்பில் உள்ள பெயர்களைப் பாருங்கள் - க்ரூபா, கீதா நித்யாலயா வகையறா.

என்றும் அக்கிரஹார இல்லங்களில் வடமொழிப் பெயர் தாங்கிய முகப்பைத்தாம் பார்க்கலாம்.

இன்று அதைப் புது வசதிப் பொதிவயிறர்கள் தம் போஷ் ஏரியாவில் (Posh area) உள்ள புதிய அரண்மனைகளுக்கு வைத்துக் கொள்கின்றனர்.

85, 90 விழுக்காடு சாமான்யர் குலங்கட்கு திருமணத்திற்கு வடமொழி மந்திரம் சொல்லும் புரோகிதர் கிடையாது. ஆனால் துட்டு சேர்ந்துவிட்ட காரணத்தினாலேயே புத்தி கெட்டு அய்யரை வைத்து விவாஹம் செய்துகொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

இதிலும் சினிமாத்தனம் போகவில்லை. எந்த சினிமாவிலும் அய்யரே திருமணத்தை நடத்தி வைக்கிறார் - வடமொழி மந்திரம் கூறி!

ஆதிக்கம் செலுத்தும், சுரண்டும் கூட்டத்தின் கருவியாக எப்படி வடமொழி வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் உள்ளது என்பதை இங்கு ஓடும் ஓட்டத்தில் மட்டுமே சுட்டிக் காட்டினோம்.

இன்று அந்த மேட்டுக்குடி மக்களால், வஞ்சிக்கப்பட்ட சாமான்யர் எப்படித் தங்கள் தாய்மொழிகளை மறக்கடிக்கப் பட்டு, வடமொழி மோகம் கொள்ளுமாறு, பார்ப்பன-பணக்காரக் கூட்டுச் செய்துவருகிறது என்பதையும் நாம் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

சமூக பேத நிலைமையை ஒழிப்பது என்பதில், சமற்கிருத ஆதிக்கத்தை ஒழிப்பதும் அடங்கும் என்பது மேற்கூறியவற்றால் தெற்றென விளங்கும்.

இந்த ஒழிப்புப்போர் நெடுங்காலம் நடந்துதான் வருகிறது.

தன்மான இயக்கம், தனித்தமிழ் இயக்கம் ஆகியவை வடமொழி மரபுகளையும், வடமொழிப் பெயர்களையும், வடமொழிமூலம் திணிக்கப்பட்ட வாழ்முறைக் கோட்பாடு களையும் எதிர்த்து அழிக்கப் போராடுகின்றன.

அதற்கு அப்பாற்பட்டாலும்கூட சாமான்யர், சமற்கிருத மயமாகும் தன்மைகளைப் பலமுறைகளில் தடுத்து நிறுத்த அல்லது ஒழித்துக்கட்டும் காரியங்களை எக்காலத்திலும் செய்தே வந்துள்ளனர். வடமொழிப் புராணங்கள் மூலம் ஏற்றம் பெறும் கடவுள்களைவிட மக்கள் தங்கள் குல தெய்வங்களைத்தாம் முதல்நிலைத் தெய்வங்களாக வைத்துள்ளனர்.

3000 ஆண்டுகளாக மன்னர்களும், பலரக பிரபுக்களும், தனவேந்தர்களும், எல்லா வகைக் கலை, இலக்கிய வடிவங்கள் மூலமும் முயன்று பெருமைப்படுத்தி வைத்துள்ள வடமொழி மதச் சொற்கள் மக்களால் எப்படிப் பரிகாசமாகப் பயன்படுத்தப்படுகின்றன பாருங்கள் !

நாமஞ்சாத்திவிட்டான் !

கோவிந்தா ! கோவிந்தா !!

பஜனை(!) செய்யப்போயிட்டான் !!!

அய்ந்தாம் வேதம் !

தலையணை மந்திரம்

இப்படிப் பலப்பல.

ஆனால், சாமான்யர் தம் குல தெய்வம் தொடர்பான சொற்களைக் கொச்சைப்படுத்தினால் பொறுப்பதில்லை.

எனவே, வடமொழி-அதன் தொடர்பான நம்பிக்கைகள் எதிர்ப்பு என்பது மக்களிடையே உள்ளார்ந்து இருக்கின்றன.

என்றும் பேதநிலையை நிலைநாட்டப் பயன்படும் வடமொழியை, இன்று இந்தியாவில் பார்ப்பன-பணக்கார ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு வளர்க்க முயல்கின்றன என்பதை நாம் அறிவோம்.

எனவே, மக்களின் மேலே காட்டிய வடமொழி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களைச் செயலில் இறங்கச் செய்வது நம் கடமை ஆகும்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 42

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (ஷிணீஸீsளீக்ஷீவீtவீsணீtவீஷீஸீ) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

 

14.1.2020 அன்றைய தொடர்ச்சி...

சமற்கிருதச் சொற்கள் தமிழில் வரும்போது அவற் றைத் தமிழ் மயமாக்கிச் சேர்த்துக்கொள்வதற்கு தற்சமம், தற்பவம் என்னும் நெறிகள் தமிழ்மொழியில் உள்ளன. இத்தகைய நெறிமுறைகள் பிறமொழிச் சொற்கள் சமற் கிருதத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்போது கையாளப்படு வதாகத் தெரியவில்லை. ஆகவே, பிறமொழிச் சொற்கள் சமற்கிருதத்தில் கலந்துள்ளமைபற்றித் தெளிவாக அறிய இயலாமல் போகிறது.

பழந்தமிழ்ச் சொற்கள் இருக்கவும் அதற்கு இணை யாகச் சமற்கிருதச் சொற்களைப் படைத்து புதியதாகப் படைக்கப்பட்ட சமற்கிருதச் சொற்கள் தாம் மூலமானவை எனக் காட்டும் முயற்சி கண்டிக்கத்தக்கது. பெரிய புராணத்தைப் பின்பற்றி உபமன்னிய பக்த விலாசம் என்னும் நூலைச் சமற்கிருதத்தில் இயற்றி, இதுதான் பெரிய புராணத்துக்கும் முற்பட்டது என்று கூறல் தவறு. இவ்வாறு செய்யும் முயற்சியில் தவறு ஏற்படும்போது இம்முயற்சிகளின் போலித் தன்மை வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிறுதொண்டர் என்னும் பக்தர் தப்ர பக்தா என மொழிபெயர்க்கப்படுகிறார்.  சிறுதொண்டர் என்பதன் கருத்து வயதில் குறைந்தவரானாலும் திறமை யில் பெரியவர் என்னும் கருத்தாகப் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. இக்கருத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்பம் என்னும் பொருள்பட தப்ர பக்தா என்னும் மொழி பெயர்ப்பு உள்ளது. சிறிய பெருந்தகையார் என்று ஞானசம்பந்தரைச் சேக்கிழார் கூறும் குறிப்பு இக்குற்றத் தைத் தவிர்ப்பதாக உள்ளது.

இவ்வாறே நெல்லையப்பர் செஞ்சாலிவாடி ஈசுவரர் என்றும், நெய்யாடியப்பர் கிருதபுரி ஈசுவரர் என்றும், மழபாடி வயிரத்தூண் வஜ்ர தம்பேசுவரர் என்றும் அழைக்கப்படும் வழக்கத்தை நோக்கலாம். அஞ்சொலாள் என்னும் பெயர் மாயூர திருப்பதிகத்தில் காணப் படுகிறது. இது அஞ்சல் என்று ஆகி பிறகு இச்சொல்லே அபயாம்பிகை (அபயம் தருபவள்) என வழங்குவதாயிற்று. இவ்வாறே வடிவுடை நாயகி காந்திமதியாகவும், ஏலவார் குழவி சுகந்த குந்தளாம்பாளாகவும், சொன்ன வாறு அறிவார் யுக்த வேதீஸ்வரராகவும், அறம் வளர்த்த நாயகி தர்ம சம்வர்த்தனியாகவும் வழங்கப்படுகிறார்கள். திருப்பழனம் எனப்படும் தலம் பயணம் என மருவி, இதற்கு இணையான சமற்கிருதச் சொல் (வயல் என்பதைக் குறிக்காமல்) பயணம் என்பதைக் குறிக்கும் பிரஸ்தானபுரம் என்று வழங்கப்படுகிறது.

இறைவனைக் குறிக்கும் சொற்களைப்போல மனித னைக் குறிக்கும் சொல்லும் இவ்வாறு சமற்கிருத மாற்றம் பெற்றது. கருணாகரன் என்னும் சொல் கருணாஹரன் என்று தவறாக எழுதும்போது கருணைக்குக் காரணமா னவன் என்னும் பொருள் மாறி கருணையைக் கொல் பவன் என்னும் பொருள் உண்டாகிறது. திருநெல்வேலிப் பேருந்து நிலையத்துக்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையேயுள்ள பாலத்தை ஒரு தனி மனிதரே ஆங்கில ஆட்சிக் காலத்தில் தம் தாயின் அறிவுரைப்படி, தமக்கு அப்போது கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுச் சீட்டுப் பணத்தைக் கொண்டு கட்டினார் என்னும் செய்தி சொல் லப்படுகிறது. தற்போதும் அங்குள்ள பாலம் சுலோசன முதலியார் பாலம் என அழைக்கப்படுகிறது. கல்வெட்டில் திருமண நல்லக்கண்ணு முதலியார் என்று அழைக்கப் படும் சுலோசன முதலியார் என்று உள்ளது என்னும் செய்தியை நெல்லை சைவப் பெரியார் சி.சு. மணி அவர் கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே, நல்லக்கண்ணு என்று அழைப்பதைவிட சுலோசனன் என்று அழைப்பதில் பெருமையிருப்பதாகக் கருதியிருப்பது தெரிகிறது.

சைவ சித்தாந்த தத்துவத்தைப் பொறுத்தமட்டில் தொல்காப்பியம் முதலிய சங்க இலக்கியங்களைக் கொண்டு மட்டுமே வளர்ந்தது என ஒருசாரார் நிறுவ முயன்றுள்ளனர். மெய்யின் அகரமொடு சிவணும் என்பது முதற்கொண்டு தொல்காப்பியச் சூத்திரங்களைக் கொண்டு மட்டும் விளக்க முயலலாம். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து என்று உள்ள பெயர் களே சைவ சித்தாந்த இறை, உயிர், தளை கருத்துகளை விளக்கும் முறையில் அமைந்துள்ளன. மெல்லெழுத்து களின் வகைகளான வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை உயிர்களின் வகைகளைக் குறிக்கின்றன.

எழுத்துகளை ஒலிக்கும்போது இலக்கணத்தால் குறிக் கப்படும் எடுத்தல், நலித்தல், படுத்தல் என்னும் முறைகள் உலகத் தோற்றல், நிலை, இறுதி என்பவற்றைக் குறிப்பன வாகக் கொள்ளலாம். வ, ய என்னும் எழுத்துகள் உடம் படுமெய் என குறிக்கப்படும். இது இரு உயிர்களை இணைப்பது, பிறப்பை அழிப்பது என்னும் பொருளில் ஆளப்படுகிறது. வ, ய என்னும் எழுத்துகள் தூல, சூக்கும பஞ்சாக்கரத்தில் அருளையும், உயிரையும் முறையே குறிப்பதை நாம் நோக்கலாம். வினை என்னும் சொல்லே சைவ சித்தாந்த இரு வினையை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. பா. வே. மாணிக்க நாயகர் எழுதிய “The mystical aspect of  Tamil alphabets” என்னும் நூலில் தமிழ் எழுத்துகளுக்கும் சைவ தத்துவத்துக்கும் இடையே உள்ள உறவு தெளிவாக்கப்படுகின்றது.

ஒன்றென்றது ஒன்றே காண் ஒன்றே பதி..... இக்கிரமத் தென்னும் இருக்கு என்னும் மெய்கண்டாரின் விளக்கம் ஏகம் சத், விப்ரா பஹீதா வதந்தி என்னும் இருக்குவேத மொழிக்கு விளக்கமாக உள்ளது. மேலும், மன்னுசிவன் சந்தியில் மற்றுலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் என்னும் பகுதியும் நோக்கத்தக்கது. இது போன்ற பகுதிகளுக்கு தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட இயலாது.

இந்நிலையில் நாம் செய்யவேண்டியது என்ன? ஏற்கெனவே கலந்துவிட்ட ஆரிய, திராவிடப் பண்புகள் சைவ, வைணவ மெய்ப்பொருளியலாகக் காணப்படு கின்றன. தற்போதைய நிலையில் இக்கலப்பை நீக்கவோ, மறுக்கவோ இயலாது. ஆனாலும், விழிப்பின்மையால் முன்பு ஏமாந்ததுபோல் ஏமாறாமல், நம் பண்பாட்டுக்கு உரிய நலத்தை நாம் பார்த்துக் கொள்ளவேண்டியது நம் கடமையாகும்.

- விடுதலை நாளேடு 21 1 20

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 43

மதுரை ஆதீனகர்த்தர் லோககுரு திருப்பெருந்திரு மகாசந்நிதானம் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பர மாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய உரை வருமாறு:

 

உலகத்தில் உள்ள மொழிகள் இரண்டாயிரத்திற்கும் மேலாகப் புதிது புதிதாகத் தோன்றிவருவதை மொழி வரலாற்றாசிரியர்கள் ஆய்வரங்கங்களில் எடுத்துரைத்து வருகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கருத்தில் உடன்பாடு உள்ளது. அதுவே முதன்முதலில் மனித இனம் பயின்ற இலெமூரியாக் கண்டத்தில் கடல்கோள் அழிவிலிருந்து விடுபட்டுத் தமிழகத்தில் இன்றும் விளங்கிவரும் வழக்கத்தில் இருந்துவரும் மொழி என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள்.

அந்த மொழியே, தொன்மை மொழி, முதன் மொழி, தென்மொழி, உலகத்தின் தாய்மொழி-தமிழ்மொழி என்று போற்றியுரைக்கப்படும் மொழி ஆகும்.

பிற இடங்களில் மனித நாகரிகம் தோன்றி மொழி வழக்கம் இருந்ததை ஆய்ந்திட்ட வல்லுநர்கள் வியக்கின்ற செய்தி ஒன்று உண்டு. மொழி வழக்கம் உருப்பெற்றிட இலக்கணம், இலக்கியம் வகுக்கப்படல் வேண்டும். முதலில், ஆனால், மற்ற சீன, கிரேக்க, அசிரிய நாகரிக வரலாற்றில் அவ்வாறு இலக்கணம், இலக்கியங்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் பிறக்கு முன்னரே, தமிழர்கள் அகத்தியம், தொல்காப்பியம் என்ற அரிய இலக்கண இலக்கியக் கருவூலங்கள் படைத்திருந்தனர்.

திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் ஒருவரைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். காலம் வழி ஆராய்ச்சியில் நமக்கு அண்மையில் இருக்கின்றவர் இந்தத் தெய்வப் புலவர்தாம்.

தொல்காப்பியத்திற்கு உரை வழங்கியவர்களிலும், திருக்குறள், நன்னூல் மற்றும் சங்க கால இலக்கியங்கள் முதலான படைப்புகளை ஆராய்ந்தவர்களில் சிலர் அவற்றிற்கு வடமொழிச் சாயத்தினை ஏற்றி இடைச்செருகல் வேலைகளைச் செய்தபோதுதான், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும் மூத்த தமிழ்க் குடியினர் வஞ்சப் புகழ்ச்சி, பொய்யுரைத்தல், நன்றி மறத்தல், கயமை, களவு, பிளவு, மனக்கசப்பு, அழுக்காறு, அடுத்தவர் வாழப்பொறாமை ஆகிய தீய பண்புகளை - அவற்றின் மொத்த உருவமான ஆரிய இனத்தார்களிடம் அடையாளங் கண்டுகொள்ளத் தொடங்கினர்.

ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியே உருவாகக் கொண்டு தமிழர்களைப் பிரித்தாளும் முயற்சியில் முன்னேறி இன்று வரையிலும் இன் தமிழர்களின் இதய உணர்வுகளைச் சிதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக தென்மொழி, வடமொழி என இரு வேறுமொழி, நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைத்தரம், இனம் அடிப்படையில் பிறக்கலாயின. சமய உணர்வுகள் சமற்கிருதம் என்னும் அந்த வடமொழியோடு பிறந்தன என்பதை மற்றவர்களும் நம்பினர். தென்புலத்தார் கடன்களைப் புரோகிதர்களே குத்தகை எடுத்துக்கொண்டதைச் சமய வரலாறு காட்டும்.

தூய தெளிந்த நீரைப் பாசம் மூடிக் கவர்ந்தாலும், சிறிது விலக்கினால் நீர் தெளிந்த நீர்தான் - பாசம் அழுக்குப் பாசம்தான் என்று தெரியவருவது போலத் தமிழ் செந்தமிழாகவே தனித்து நிற்கும் - ஆரியம் அழுக்கு மொழியாக அருவறுக்கப்படும் என்று காலத்தால் உணரமுடிந்தது.

புலவர்கள் உச்சிமேற்கொள்ளும் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் தமிழ் மொழியைச் சிதைக்கும் சதிக்கு உடன்பட்டார்களோ என்ற அய்யப்பாடு எழுந்தது. தந்தை பெரியார் இதை அஞ்சாமல் எடுத்துச் சொன்ன பெருந்தகை ஆவார். ஆரிய மாயை என்ற அழுக்குப் பாசத்தை அறவே அகற்றப் பாடுபட்டுச் சிறப்பெய்திய தமிழ்ப் பெரியார்களுள் முதலாக நின்றவர் மறைமலை அடிகள், அருட்பிரகாச வள்ளலார் அதற்கு முன்னரே மணிப்பிரவாள நடை, அதற்கு முன்னரேயும் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்க முயற்சிகள் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியவர், அந்தப் பெருமைக்கு உரியவர் யார் என்று வரலாற்றின் அடிச்சுவட்டில் பின்னோக்கிச் சென்றால், வடமொழிக் கொடுமைகளைக் களையெடுக்க வந்த ஒரு ஞானப் பெருமகனைப்பற்றி நன்கு அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அந்த ஞானப் பெருமகன் தமிழர் சமயமான சைவ சமயத்தினைப் பரப்பிட வந்தவர். சீர்காழியிலே ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு தோன்றியவர். தமிழர்கள் வழிபட்ட முருகக் கடவுளின் மறு தோற்றமே அருள் திருஞான சம்பந்தராவார். தமிழ் ஞானசம்பந்தப் பெருமான் என்று அடியவர்களால் வழிபடப் பெற்ற அந்த ஞானவள்ளல் தமிழ் மாலைகள்-திருமுறைகள்-தமிழில் மட்டுமே சூட்டி இறைவனை மகிழ்வித்தார். பிறப்பில் அந்தணராக இருந்த அவர் தன்னைத் தமிழோடு இணைத்து இறை மொழி-மறைமொழி தமிழே; சமற்கிருதம் அல்ல என்று நிலைநாட்ட நாற்பத்து அய்ந்து இடங்களில் தன்னைக்குறித்து தமிழ்ஞான சம்பந்தர் என்று எடுத்து இயம்பி, நாளும் நற்றமிழில் நமசிவாய நாதனின் திருநாமத்தைப் பாட வந்ததாக , தெய்வத் தமிழிசை ஓதுவதற்கு வந்ததாகக் கூறிக் கொள்ளுகின்றார். இதை அவரது பக்திரசமிக்க பாடல்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை மெய்நெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமசி வாயமே

என்று தமிழ் முழக்கம் செய்கிறது.

வேதங்கள் நான்கு. ஆனால், அவை கூறும் மெய்ப்பொருளியல் உண்மை, தமிழில் திருவைந் தெழுத்தாகத் துதிக்கப் பெறுகின்ற நமசிவாய மந்திரமே. அன்பு செலுத்தி இறையருளால் ஆட்கொள்ளப் பெறவல்ல தகுதியை ஆரிய (அரு) மறைகளையும்விடத் தமிழ்த் திருமுறைகள்தாம் மிகுதியாகக் கொண்டு இலங்குகின்றன. மெய்விதிர்ந்து கண்ணில் நீர்சுரக்க வைக்கும் அருட்தன்மை வாய்ந்தது என்பதை அவர் விளக்குகின்றார். வடமொழியில் வழங்கிவந்த நான்முகக் கடவுளால் உண்டாக்கப் பெற்ற தாகக் கூறப்பெறும் நான்கு வேதங்களையுங்கூடச் சாடியதில் அவர் அஞ்சியதில்லை என நாம் அறிய முடிகிறது.

அந்தணர்கள் சிறுவயதில் உபநயனம் செய்து அதன் மூலம் தமது மொழிவளர்ச்சியினை நிலைநாட்டச் செவியறிவு மூலமாகவோ, ஏட்டில் எழுதியோ கண்ணுங் கருத்துமாக இருந்துவருவது இன்றும் நாம் கண்கூடாக அறியக் கிடப்பதாகும். தமிழ்ஞான சம்பந்தர் அதை வெறுத்து வடமொழி ஆதிக்கம் பரவினால் ஆபத்து என்று கருதினார் என்பது மட்டுமன்று, அவர் வேத முறைப்படி உபநயனமும் செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அந்த ஞானப் பெருமகனுக்கே தீங்கு விளைவிக்க முனைந்த சமணர்களைத் தமிழ் மந்திரங்களால் வென்ற வரலாறு நாடறிந்த ஒன்று.

தமிழர்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாக ஆரியப் பார்ப்பனர்கள் இன்று இருபதாம் நூற்றாண்டிலும் தீவிரமாக எதிர்ப்புக் காட்டிப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்கின்றார்கள். சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக என்ற கோட்பாட்டில் அருள் ஞானம் சுரக்கும் மதுரை ஆதீன பீடத்தில் எழுந்தருளி ஆட்சி செய்யும் நம்மை இக்கால அரசியல்வாதிகளில் ஒருசிலர் ஆரிய மாயையில் சிக்குண்டு தமிழ்த் திருஞானசம்பந்தர் வழிவந்த சமய நெறிகளுக்குக் கேடு விளைவித்து வருகின்ற செய்தி யினையும் நாடறியும். ஏன் உலகமே இந்தப் போராட்டத்தைக் கண்டு கொண்டுதான்  இருக்கிறது. ஒளிவுமறைவின்றிச் சொல்லப்போனால் இலங்கைத் தமிழர்களுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட ஒரு சமயத் தலைவர் மதுரை ஆதீனகர்த்தர் என்று உண்மையிலேயே பரந்த மனப்பான்மையுடன் பாராட்டுவதைவிட்டு மவுனம் சாதித்து வருகிறார்களே இந்துமதத் தலைவர்கள்-அதற்குக் காரணம் யார்? சமயநெறிகள் சமற்கிருத வெறியாளர்களிடம் புகுந்தமையால் தானே?

தமிழர் இறவா வரம் பெற்றவர்கள் என்று அதற்காகத் தற்புகழ்ச்சி பாட வரவில்லை. ஆனால், ஏமாந்து எல்லாவற்றையும் இழந்துவிட்ட இனம் என்று தமிழைப் பழித்து ஒருவன் சொல்வானேயானால், அவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று புரட்சிக் கவிஞர் பறையறைந்தாற் போல நாமும் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற கருத்தை மய்யமாகக் கொண்டுதான் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்படலாமா என்று ஆய்வு செய்ய நேர்ந்துள்ளது.

தமிழர் இனமான உணர்வைக் கட்டிக் காத்து இத்தலைமுறையில் தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடியதை யார் மறக்க முடியும்? யார் மறுக்க முடியும்?

ஆரியக் கொடுமைகளைத் தகர்க்க முன்வராவிட்டாலும் அதைத் தடுக்கக் களம் புகுந்த திராவிடர் கழகத்தவர்களுக்குத் தடையாக இருக்காதவர்கள் என்று குரல் கொடுத்து 1947ஆம் ஆண்டிலேயே திருவண்ணாமலை உரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ் மொழியில் திருவள்ளுவர், கபிலர், அவ்வை முதலான சிறந்த அறிவாளிகளாகிய அவர்களையும் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனருக்கும் பிறந்தார்கள் என்று சொன்னார்கள். அத்தகைய ஆரியர்களின் கையாளான விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகிவிடாதீர்கள்.

(திருவண்ணாமலை, 1947)

தமிழச்சிகளைத் தாசிகளாகவும் அவர்களுக்குப் பிறந்த மக்களை தாசர்களாகவும் வருணித்த வர்ணாசிரமக் கோலம், தர்மம் என்ற ஆரியக் கொள்கையைச் சாயம் வெளுக்க வைத்தவர் தந்தை பெரியார். தமிழ் மொழியிலிருந்தே அனைத்தும் பிறமொழியினர் களவாடிக் கொண்டனர் என்று குற்றம் சாட்டினார். சாதாரணமாக அரிசி என்று நாம் கூறும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் அரிசோ என்று கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலேயே மாறியதை ஆதாரமாக எடுத்து, இதுபோன்று எண்ணற்ற சான்றுகளை நம்மால் தரமுடியும்.

தந்தை பெரியார் சொன்னதுபோல இனமானப் பணிகளால் தமிழனது உயர்வை நிலைநாட்டி வரும் நம்மைப் போன்ற தலைமைப் பொறுப்பாளர்கட்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதுதான் நமது கருத்தாகும். துணிந்த துணிபு என்று உறுதிகூறி நிறைவு செய்கிறோம்.

- விடுதலை நாளேடு 23 1 20

வியாழன், 23 ஜனவரி, 2020

பாப்பாத்தியான எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது?


என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார் என்றால் சூத்திரன், பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறிட நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றிலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.

பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லா விதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றிய சரியான புரிதலை கிடைக்கப் பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்து கொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.

பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள். குறிப்பாக பாப்பாத்திகள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதற்கான ஒரு முக்கியமான காரணம்.

அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார் ?

அந்தக் காலத்தில் மொட்டை பாப்பாத்தி என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உட்கார வைத்து விடுவார்கள்.

அது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்தது. பெரியாருடைய பெண் விடுதலை போராட்டத்தின் பின் இந்த வழக்கம் முழுவதுமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மனுஸ்மிருதியின் படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரக்கூடாது என்றும் அவர்களை மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கங்களை பார்ப்பன ஆண்கள் அவர்களுடைய வீட்டு பெண்களிடம் காண்பித்து வந்தனர்.

பின் பெரியார் இது எந்த அளவிற்கு முட்டாள் தனம் பெண்களுக்கு கண்டிப்பாக சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். பின் பெண்கள் அடக்கு முறையில் உள்ள காலகட்டத்தில் மறுமணம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது.

அதை மிக முற்போக்காக அன்றே மறுமணம் கண்டிப்பாக பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார். கருத்தடுப்பு, பெண்கள் கல்வி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை பார்ப்பனீயம் தனக்கு சாதகமாக உபயோகித்து கொண்டதை தடுத்து அவர்களுக்கு கண்டிப்பாக சம உரிமை தரவேண்டும் எனக் கூறியவர் பெரியார்.

தேவதாசி முறையை அடியோடு கிள்ளி எறிவதற்காக முத்துலட்சுமி ரெட்டி உடன் போராடியவர்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே சாஸ்திரத்தின் மூலம் பார்ப்பன பெண்களை ஒடுக்கி வைத்தனர். பின் பெரியாரின் பெண்கள் அடிமைத்தனத்திற்கெதிரான குரல் கண்டிப்பாக பார்ப்பன பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இன்றளவும் இருந்து வந்துள்ளது.

உதாரணத்திற்கு எல்லா பார்ப்பன வீடுகளிலுமே பெரியாரைவிட மஹாபெரியவாளுக்கு கூடுதல் மதிப்பு இன்றளவும் உள்ளது. பார்ப்பன பெண்கள் சந்திரசேகர ஸ்வாமிகளை தங்களுடைய உயிராகவும் வணங்குகின்றனர். ஆனால், பெண்களுக்கான சம சொத்து உரிமை சட்டம் இயற்றப்பட்ட பொழுது அதை எதிர்த்து பெண்களுக்கு எதற்கு சொத்தில் சமஉரிமை என டெல்லியில் போராட்டத்தையெல்லாம் முன்னெடுத்தவரே ஸ்வாமி சந்திரசேகரர்தான்.

ஆனால் பெரியார் கடைசி வரை பெண்களுக்கான மிக முற்போக்கான சிந்தனை மற்றும் செயல்களை முன்னெடுத்தார்.

உங்கள் தங்கையிடமோ, அக்காவிடமோ சென்று அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்டுப்பாருங்கள் அண்ணன் என்றும் பார்க்காமல் செருப்பு பிஞ்சிடும் என்று பதிலளிப்பார்கள். அங்கே வாழ்கிறார் பெரியார்.

தான் பார்ப்பனீயத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல் பெரியார் என்ன செய்தார் என்று கூட தெரியாமல் அவரை திட்டும் பார்ப்பன பெண்கள் ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களால் படிக்க முடிகிறது என்றால் அதற்கு பெரியாருடைய பங்கு கண்டிப்பாக உண்டு.

அதற்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுத்தான் உள்ளோம்.

அவர் கிழவர் அல்ல எல்லாருக்குமான கிழக்கு திசை.

- ராஜலட்சுமி அனுராதா (வாட்ஸ் அப்)

(நன்றி: வாய்ஸ் ஆப் ஓபிசி,

டிசம்பர் 2019

-  விடுதலை ஞாயிறு மலர், 21.12.19

புதன், 22 ஜனவரி, 2020

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

புதையல்

இரயில் நிலையங்களின் உணவு விடுதிகளின் நிலை 1926ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது இந்த பதிவு. இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தந்தை பெரியாரும் சுயமரியாதைப் பிரச்சாரமும் காரணம்.

தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள். ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலி யவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத் துடன் கேட்கிறோம்.  -

குடிஅரசு, 06.06.1926

தகவல்: இறைவி

- விடுதலை ஞாயிறு மலர் 7 12 19

செவ்வாய், 14 ஜனவரி, 2020

சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருத மயமாக்கப்பட்டமை (அல்லது) சைவத்தில் சமற்கிருதத்தின் செல்வாக்கு - 41

டாக்டர் ச.கெங்காதரன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் ச.கெங்காதரன் ஆற்றிய உரை வருமாறு:

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருளை அறியவேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது. சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவ சமய, மெய்ப்பொருள் இயலில் ஏன் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? சமற்கிருதத்தின் செல்வாக்கு சைவத்தில் ஏற்படுவதற்குக் காரணமானவர்கள் யார்? அதன் சூழ்நிலை யாது?

நம் நாட்டில் தற்போது காணப்படும் ருத்திர-சிவ வழிபாடு வேத காலத்தில் உள்ள ருத்திர வழிபாடும் அதற்கு முன்பே இங்குள்ள திராவிடர்களிடம் காணப்பட்ட சிவ வழிபாடும் சேர்ந்துள்ள வழிபாடு ஆகும். கோயிலோ, உருவ வணக்கமோ ரிக் வேதத்தில் இடம்பெறவில்லை. வேள்வியே ஆரிய வழிபாட்டின் மையமாக இருந்தது. சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மை கி.மு. 2500 முதல் கி.மு.1500 வரை எனக் கருதப்படுகிறது. அம்மை வழிபாடும் சிவ வழிபாடும் சிந்துவெளி மக்களை ஆட்கொண்டது. சிவபெருமானின் பண்டைய வடிவம் என்று ஆய்வாளரால் கருதப்பெறும் இலச்சினையில், அவர் விலங்குகள் சூழப் பதுமாசனத்தில் அமர்ந்திருக்கிறார். பசுபதியாகவும், மகா யோகியாகவும் பரமசிவனைக் கருதும் மரபு அந்நாளிலேயே நிலைபெற்றதற்கு இது சான்று. (பசுபதி-விலங்குகளின் தலைவன் - ஆன்மாக்களின் தலைவன் என்று பின்னாளைய சாத்திரம் பொருள் கண்டது.) சிவபிரானை மூன்று முக முடையோராக முத்திரையில் காண்கிறோம். இதிலிருந்து அவரை முக்கண்ணராகக் கருதும் கொள்கை வளர்ந்தது எனலாம். ரிக் வேத ருத்திரனும் சிந்துவெளிச் சிவனும் ஒன்று சேர்ந்தனர் என்பது எவ்வாறு புலனாகிறது?

ருத்திரன், சிவன் என்ற சொற்களின் வேர்ச் சொல்லில் ஒற்றுமை தெரிகிறது. ரிக் வேதம் ஐஐ 1.6.இல் சாயனர் ருத் என்னும் சொல்லுக்கு ருத்-துக்கம் துக்க ஹேது வா பாபாதிஹி தஸ்ய த்ராவயிதா ஏதான் நாமகோ தேவோசி என்று விளக்கம் தருகிறார். துன்பம் அல்லது அதற்குக் காரணமான பாவத்தை நீக்குபவர் என்பது இதன் பொருள். சித்தாந்த கௌ முதி என்னும் நூல் சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் மெலிதாக்குதல் என்று கூறுகிறது. சித்தாந்த கல்ப த்ருமா என்னும் நூல் இந்தச் சொல்லை மேலும் விளக்குகையில் பாவத்தை மெலிதாக்குபவர் என்று கூறுகிறது. ஆகவே ருத்திரவழிபாடும் சிவவழிபாடும் இணைந்து தற்போது உள்ள சிவ வழிபாடாக மலர்ந்தது எனக் கருதலாம்.

திராவிட-ஆரிய பண்பாட்டின் கலப்பினால் ருத்திர-சிவ வழிபாடு தோன்றியபோது, திராவிடரிடமிருந்து மூடநம்பிக் கைகள் ஆரியரிடம் சென்றிருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். தென்னிந்திய சைவத்தின் தோற்றமும் தொன்மை வரலாறும் என்னும் நூலில் சி.வி. நாராயண அய்யர் இவ்வாறுதான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்னும் நியதி இல்லை; ஏனெனில், ஆரியரிடமே போதிய மூடநம்பிக்கை ஏன் இருந்திருக்கக் கூடாது? என்று கேட்கிறார்.

“It is not necessary to suppose that the Aryan religion was in any manner influenced by non-Aryan superstitions for there was nothing to prevent the Aryan themselves from having superstitions.”

C.V. Narayana Ayyer, “Origin and early History of  Saivism in South India”. University of  Madras, 1974 p.9.

ஆகவே, இரு நாகரிகங்கள் பழகும்போது ஏற்படும் மாற்றத் தால் சமற்கிருதத்தின் செல்வாக்கு திராவிடப் பண்பாட்டில் ஏற்பட்டது.

இந்த இரு பண்பாடுகளின் கலப்பில் இரு நாகரிகங்களின் சிறந்த பண்புகளும் (ஒன்று சேர்த்தலின் மூலம்) பாதுகாக்கப்பட வேண்டும் என்று சில சான்றோர் எண்ணினர். அவர்களில் திருமூலர், திருஞான சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ்ச்சொல் வடசொல் லெனுமிவ் விரண்டும்

உணர்த்து மவனை யுணரலு மாமே

ஆரியமும் தமிழும் உடனல்கி காரிகையார்க்குங்

கருணை செய்தானே

என்பவை திருமூலர் திருமொழிகள், திருமூலர் தமிழ்ப் பண்பாட்டுடன் ஆகமப் பண்பாட்டை இணைத்து முதலில் இக்கலப்புக்கு வழிகோலியவர். இரண்டாவது மேற்கோளில் உடன் என்றதனால் ஆரியத்தினின்றே ஞானநூற் கொள்கைகள் தமிழிற்கு வந்தன என்று கொள்ளுதல் பொருத்தமில்லாதது என்பது புலனாகும். மேலும், தமிழ்ச் சொல்லும் வடச்சொல்லும் தாள்நிழற் சேர தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல முழவ மொந்தை மல்கு பாடல் செய்கையிட மோவார் என்று வரும் திருஞானசம்பந்தர் திருவாக்குகளையும் நோக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் திருமூலருக்கு அடுத்து இரு நாகரிகக் கலப்பை இறுக்கி, சைவ சமயத்தை நிலை நிறுத்தியவர். கவுணிய குலத்தில் தோன்றியவர் என்பதை விடாமல் கூறுவதோடு தன்னைத் தமிழ் ஞானசம்பந்தர் என்று பலமுறை தொடர்ந்து அழைத்துக் கொள்வதில் பெருமை கொண்டவர். தாம் அந்தணராகப் பிறந்து, சமற்கிருதம் நன்கு கைவரப் பெற்றவராக இருந்தும் தீந்தமிழிலே 383 பதிகங்கள் பாடியதிலே மட்டும் கருத்தைச் செலுத்தியவர். சமற்கிருத மொழியில் அவர் நூல் எழுதியதாகக் காணப்படவில்லை. மேலும், பதி, பசு, பாசம் என்னும் சொற்களைப் பயன்படுத்துவதுடன் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்த முயல்வதை தேவாரத்தில் கண்டுகளிக்கலாம்.

விளையாதது ஓர் பரிசில் வரு பசுபாச வேதனை ஒண் தளையாயின தவிரவ் வருள் தலைவன் என்னும் திருமுதுகுன்றப் பதிகத்தில் தலைவன், தளை, விளையாதது என்னும் சொற்களின் வழக்கத்தைக் காணலாம். மெய்கண்டாரால் சைவ சித்தாந்தத்தின் சிறப்புக் கொள்கையாகப் போற்றப்படும் அத்துவிதக் கொள்கையின் கருவை அழகு தமிழில் ஞானசம்பந்தர் கூறுவதை இங்கு நோக்கலாம்.

ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம்அவை அய்ந்தாய்

ஆறார்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய்

வேறாய்உடன் ஆனான்இடம் வீழிமிழ லையே

இறைவன் உயிர் உலகோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இருத்தலை இப்பாட்டு அழகாக விளக்குகிறது.

திருநாவுக்கரசர் எவ்வாறேனும் கயிலை சென்று இறைவனைக் காணவேண்டும் என்று முயல, அவருக்குத் திருவையாற்றுக் காட்சியையே கயிலைக் காட்சியாகத் தந்தருள்கிறார் இறைவன். திருஞான சம்பந்தர் தமிழ்நாட்டின் எல்லையாகிய திருக்காளத்தியிலிருந்தே திருக்கேதாரம் போன்ற தலங்களைப் பாடி, இருந்த இடத்திலிருந்தே இறைவனைப் பார்க்க வேண்டிய தன்மையை விளக்குகிறார். மேலும், அந்தண முறைப்படி உபநயனம் ஞான சம்பந்தருக்குச் செய்வித்து வேதம் ஓதும் உரிமையை உமக்குத் தந்தோம் என்று அந்தணர்கள் கூற, திருஞான சம்பந்தர்,

துஞ்சலும் துஞ்ச லிலாத போழ்திலும்

நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்

வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்று

அஞ்ச வுதைத்தன அஞ்செ ழுத்துமே

என அந்தணர் அந்தியில் ஓதும் மந்திரத்தைவிட அய்ந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை ஓதுகிறார். அப்பர் பெருமானும் சூரியனை வழிபடும் காயத்ரி மந்திரத்தைவிடச் சூரியனுக்கும் அடிப்படையாக கடவுள் வணக்கமே சிறந்தது என்பதை,

அருக்கன் பாதம் வணங்குவார் அந்தியில்

அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ

இருக்கு நான்மறை யீசனையே தொழும்

கருத்தினை நினையார் கன்ம னவரே

என்னும் தேவாரத்தால் தெரிவிக்கிறார். தமிழ் ஆரியப் பண்பாடுகள் கலந்த சைவ சமயத்தின் உயிர்க்கொள்கையான ஓர் இறைக் கொள்கை இரு பண்பாடுகளின் கலப்பினும் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

சேக்கிழார் அடிகளும் இவ்வாறு வைதிகச் சைவ சமயத்தின் கலப்புத் தன்மையை உறுதிப்படுத்தி சைவ சமயத்தின் பெருமையை நிலைப்படுத்துகிறார். அவ்வாறு செய்யும்போது வேதநூல் என்பது காலத்துக்கேற்ப மாறக்கூடிய உலகியல் நிலையைத் தெரிவிப்பது என்றும், என்றும் நின்று நிலவக் கூடியது நிலவு மெய்ந்நெறிச் சிவநெறி என்றும் கூறுகிறார்.

உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும்

நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்

என்பது சேக்கிழார் வாக்கு.

திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் பற்றிக் கூறும்போது வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க என்று அருள்வதுடன், திருஞான சம்பந்தரின் திருத்தோற்றம் அயல் வழக்கின் துறையைச் செழுந்தமிழுக்கு வெல்லும்படி அமைகிறது என்று அறைகின்றார்.

திசையனைத்தின் பெருமை எலாந் தென்றிசையே வென்றேற

மிசையுலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல

அயல்வழக்கின் துறைவெல்ல

அசைவினில் செழுந் தமிழ் வழக்கே

இசைமுழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நலைபெருக - என்பது சேக்கிழார் அருள்வாக்கு.

ஆரிய-திராவிடப் பண்பாட்டுக் கலப்பால் ஏற்பட்ட நன்மை பயக்கும் இந்நிலை ஒரு பகுதி. இதன் மற்றொரு பகுதி இரு பண்பாட்டுக் கலப்பினால் தமிழரின் விழிப்பின்மையால் தமிழுக்கு ஏற்பட்ட மதிப்புக் குறைவையும் குறிப்பிட வேண்டும். இதற்குச் சமற்கிருத மொழியாளரின் ஏமாற்றுதல் காரணம் என்று கூறினாலும் தமிழரின் ஏமாறும் தன்மையே முக்கியக் காரணம் என்று கூறலாம். ஏமாறுபவன் இல்லை யெனில், ஏமாற்றுபவனின் செயல் செல்லாதல்லவா? இப்பகுதி யைப் பார்க்கும்முன் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குழுக் களுக்கும் திராவிட மொழிக்கும் உள்ள உறவை நாம் நோக்கலாம்.

சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. கிரேக்கம், இலத்தீனம், அனலடோனியம் என்னும் மொழிகள் இக்கூட்டத்தைச் சேர்ந்த மொழிகள், ஆங்கிலம் ஹ, க்ஷ, ஊ எனவும், கிரேக்கம் ஆல்பா, பீட்டா, காமா எனவும், ஹீப்ரு மொழி ஆலெப், பேத், கிமெல் எனவும் ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளன. ஆனால், இதே இந்தோ-அய்ரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்த சமற்கிருதம் இவ்வாறு கொள்ளாமல் அ, ஆ, இ என்று தமிழ்மொழி போன்று ஆரம்ப எழுத்துகளைக் கொண்டுள்ளது. இதனால் சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பியக் குடும்ப மொழிகளைச் சேர்ந்தாலும் கிரேக்கம், இலத்தீனம் போன்ற மொழிகள் இந்தோ-அய்ரோப் பியக் குடும்ப அமைப்பில் அய்ரோப்பிய மொழிகளால் அதிகம் பாதிக்கப்பட, சமற்கிருதம் இந்தோ-அய்ரோப்பிய அமைப்பில் இந்திய (குறிப்பாக திராவிட) மொழிகளால் அதிகம் தாக்கம் பெற்றிருக்கிறது என்னும் உண்மை புலனாகும்.

இக்கூற்றை வலியுறுத்துவது போன்று Encyclopaedia Britanica 9-MtJ Volume-“Indo-European language”என்னும் தலைப்பில் பக்கம் 438இல் காணப்படும் கருத்தைக் குறிப்பிடலாம்.

In prehistoric times most branches of  Indo-European were carried into territories presumably or certainly occupied by speakers of non-Indo - European languages, and it is reasonable to suppose that these languages had some effect on the speech of the new comers. For the lexicon, that is indeed demonstrable in Hittite and Greek, at least.

It is much less clear, however, that these non-Indo-European languages affected significantly the sounds and grammer of the Indo-European languages that replaced them. Perhaps the best case is India, where certain grammatical features shared by Indo-European and Davidian languages appear to have spread from Dravidian to Indo-European rather than vice versa.

For most other branches of Indo-European languages any attempt to claim prehistoric influence of non-Indo-European languages on sounds and grammer is rendered almost impossible because of ignorance of the non-Indo-European languages with which they might have been in contact”

“Many or most of the desya words are indeed derivable from Sanskrit, but some are of  Dravidian origin e.g. akka (sister). atta (father’s sister), appa (father), Ura (Village) pulli (tiger)...... Whatever the judgement on any individual word, it is clear that Indo-Aryan did borrow from Dravidian and this phenomenon is important in considering  a group of sounds that sets Indo-Aryan apart from the rest of the Indo-European”.

இந்த நீண்ட ஆங்கில மேற்கோளை இங்கு கூறுவதற்குக் காரணம் எவ்வாறு சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு நன்மை கிடைத்திருக்கிறதோ, அதேபோன்று தமிழ்மொழியினால் சமற்கிருதம் நன்மை அடைந்துள்ளது என்று காட்டுவது தான்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 14 1 20

சனி, 11 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(3) -40

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

வைணவர் தந்த தமிழ்ச் சொற்செல்வம்

வைணவ உரையாசிரியர்கள் தங்கள் கருத்துகளை விளக்குவதற்கு மிகுதியாக வடசொற்களைப் பயன்படுத்திய போதிலும் அவற்றில் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், வடசொற்கள் இடையே கலந்து கிடக்கும் அத்தனித் தமிழ்ச் சொற் களைச் சலித்தெடுக்க விடாமுயற்சியும் அயரா உழைப்பும் வேண்டும். தமிழுலகிற்குப் பல வடசொற்களுக்கு நிகரான செந்தமிழ்ச் சொற்களும் தொடர்களும் அவ்வுரை களில் இருக்கின்றன என்பதே தெரிந்தபாடில்லை. இவ்வுண்மை யினைத் திருப்பாவை யுரை, அருளிச் செயல் ரஹஸ்யம் என்னும் இருநூல் களில் வடசொற்களுக்கு நிகராக வழங்கப் பட்டுள்ள தமிழ் வழக்குகளைக் கொண்டு நன்கு தெளியலாம்.

இத்தகு தமிழ்ச் சொற்களைக் கையாளும் வைணவ சமயப் பெருமக்கள் வடமொழி விரவிய நடையினை மேற்கொண் டதற்குக் காரணம் முன்னர்ச் சொன்னது போல் தத்துவ உலகில் வடமொழிச் செங்கோல் ஓச்சியதே ஆகும். மேலும், வைணவ சைவ சமயச் சான்றோர்கள் தமிழையும் வடமொழியையும் உறவுமொழிகளாகக் கொண்டனரே தவிரப் பகை மொழி களாகக் கருதவில்லை. தத்துவம் பற்றித் தமிழில் வடமொழிச் சார்பின்றி நூல்கள் தோன்றவில்லை என்பதும் கருதத்தக்க ஒன்றாகும். ஆழ்வார்கள் பாசுரங்களின் துணையால் தெளிந்த மறைக் கருத்துகளைக்கூட இராமானுசர் வடமொழியிலேயே சொல்லவேண்டிய அளவுக்கு வடமொழியானது தத்துவ உலகில் தலைநிமிர்ந்து நின்றது என்பது கசப்பாக இருந்தாலும் வரலாறு சொல்லும் உண்மையாகும்.

இதுகாறும் கூறியவற்றால் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே ஆரிய நாகரிகம் தமிழ் நாகரிகத்தோடு கலந்தது என்பதும், அதன் விளைவாக ஆரியக் கூறுகள் மிகுந்த தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றன என்பதும், வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் விளக்கப்பட்டன; சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார்கள் பாசுரங்களிலும் சுட்டப்பெறும் ஊர், பெருமான், பெருமாட்டி ஆகியவர் களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழியாக மாற்றப் பெற்றன என்பது தெளிவாகிறது; தோத்திரங்களிலும் சாத்திரங்களிலேயே வடமொழிக் கலப்பு மிகுதி என்பதும், அதற்குக் காரணம் தத்துவ உலகில் வடமொழியின் செல்வாக்கு என்பதும் விளக்கப்பட்டன. வைணவ ஆசிரியர்கள் வடசொற்களுக்கு நிகரான நல்ல தமிழ்ச் சொற்களைத் தம் நூல்களில் வழங்கியுள்ளனர் என்பது தெரிய வருகின்றது. சைவத் திருமுறைகளிலும் திவ்வியப் பிரபந்தத்திலும் காணப்பெறும் தமிழ்ப் பெயர்களையும் பிற தமிழ் வழக்குகளையும் மக்களிடம் பரப்புவதே சமயத்துறையில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதாகும். அவ்வகையில் பணி மேற்கொள்வது பயன் விளைப்பதாகும்.

அடிக் குறிப்பு:

1.            வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

தொல். எச்சவியல். சூ. 5.

2.            மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

தொல்: அகத்திணையியல் சூ. 5.

3.            மருத நிலத் தெய்வமாகிய வேந்தன் அரச தெய்வ மாகிய சிவபெருமானோ அல்லது விண்ணவர் தெய்வமாகிய இந்திரனோ என்பது விளங்கவில்லை. நெய்தல் நிலத் தெய்வ மாகிய வருணன் ஆரியத் தெய்வமோ, தமிழ்த் தெய்வமோ என்னும் அய்யப்பாடு நிகழற்பாலது. வண்ணன் என்பது பாடமாயின் அது தமிழ்த் தெய்வத்தையே குறிப்பதாகும். இந்திரன் திராவிடக் கடவுளெனில் இன்றிறன் என்பது இந்திரனென மருவிற்றென்க.

கா.சு. பிள்ளை, தமிழர் சமயம், பக்கம்-58

தேவநேயன், தமிழர் மதம், பக்கம்-29-33

4.            வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்

கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி

சிலம்பு, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை அடி 141-142.

திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த

பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, அடி 34-35.

5.            திருநாவுக்கரசர் தேவாரம் 6,

திருமறைக்காடு 5.

6.            பெருமாள் திருமொழி 1:4.

7.            பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட புராணம் 70..

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

-  விடுதலை நாளேடு, 9.1.20

வெள்ளி, 10 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(2) - 39

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இப்பெயர் மாற்றங்கள் நிகழ்வதற்குத் திருக்கோயில் ஆட்சிமுறையில் ஆரியர்கள் இடம்பெற்றமையும், ஆட்சியாளர்கள் வடமொழியை மதித்து வளர்ப்பவர்களாக இருந்தமையும் முக்கியமான காரணங்கள் எனலாம். காலப்போக்கில் பாமர மக்களிடையே வடமொழியே தெய்வத்தோடு பேசுவதற்கு ஏற்ற மொழி என்னும் தவறான எண்ணம் எப்படியோ வேர்கொண்டது. அதனால், தங்களுக்குப் புரியாத மொழியில் திருக்கோயில்களில் வழிபாடு நிகழ்த்துவதைப் பெருமையாகக் கருதினர்.

தோத்திரமும் சாத்திரமும்

சமய நூல்களில் தோத்திரங்களாக இருப்பவற்றில் நல்ல தமிழ் காணப்படுகிறது. ஆனால், சமய முடிவுகளை விளக்கும் சாத்திரங்களில்தாம் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலையினைக் காணலாம். சைவத் திருமுறைகள் இனிய எளிய இசைத்தமிழில் அமைந்துள்ளன. ஆனால், சமய முடிவுகளைப் பேசும் பதினெண் சாத்திரங்களும் அவற்றின் உரைகளும் வடமொழிக் கலப்பு மிக்கன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் தேனாய்ப் பாலாய்த் தித்திக்கும் தமிழில் அமைந்திருக்க அதன் உரைகளும், விசிட்டாத்துவைத முடிவுகளைக் கூறும் சாத்திரங்களும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன.

தோத்திரங்கள் நல்ல தமிழிலும் சாத்திரங்கள் வடமொழி விரவிய நடையிலும் அமைந்துள்ளமைக்குக் காரணம் உண்டு. தோத்திரங்கள் இறைவனை நினைந்து கசிந்து உருகிய உருக்கத்தைத் தெரிவிப்பன; உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்துவன. அப்பாடல்கள் மற்றச் சமயத்தவர்களோடு வாதிடுவதற்கும் இறைவனின் தலைமைத் தன்மையினை நிலைநாட்டுவதற்கும் துணைக் கருவிகளாக அமையலாம். ஆனால், அவை அந்நோக்கத்திற்காக எழுந்தவை அல்ல, சாத்திர நூல்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவை. அவை தங்கள் சமய முடிவுகள் பிற சமய முடிவுகளினும் மேம்பட்டவை என அறிவார்ந்த திறத்தால் நிலைநாட்ட முயலுபவை.

தத்துவ உலகில் வடமொழியின் மேலாண்மை

இந்திய தத்துவ உலகின் பொதுமொழியாக வடமொழியே நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. அத்துவைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் தங்கள் கருத்துக்களை விளக்குவதற்கு முதல்நூலாகக் கொண்டது வடமொழியில் உள்ள வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்தைத்தான். இம் மூவகைக் கோட்பாட்டினரும் தங்கள் கருத்துக்கேற்பப் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் கண்டனர், அத்துவைதப் போக்கில் ஆதிசங்கரரும், துவைதப் போக்கில் மத்வரும், விசிட்டாத்துவைதப் போக்கில் இராமானுசரும் பேருரை வரைந்தனர். இம்மூன்று கோட்பாடுகளையும் மறுத்துச் சிவாகமங்களின் துணைகொண்டு பிறிதொரு கோட்பாட்டை வலியுறுத்துவது சைவ சித்தாந்தம். வேதக் கருத்துகளை விளக்குவதற்கு கருவிகளாக அமைந்துள்ள சிக்கை, வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் முதலியவற்றைப் பற்றிய நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. ஆதலின் சாத்திரக் கருத்துகளை விளக்கும்போது வடமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது எளிமையாகவும் வசதியாகவும் அமைந்தது.

மேலும், சாங்கியர், புத்தர், சமணர் முதலானோரின் சமயக் கருத்துகளும் வடமொழியில் இருந்தமையால் அவர்களோடு கட்சியாடவும் அது பொதுமொழியாக இருந்தது. இக்காரணங்களால் சாத்திரங்களில் வடசொற்கள் மிகுந்த அளவில் கலப்பது தவிர்க்க இயலாத ஒன்றாயிற்று. பொதுமக்களுக்கு அரிய சாத்திர உண்மைகளை விளக்கும்போது வடமொழி கலந்து சொல்லும் போக்கே மேற்கொள்ளப்பட்டது. நல்ல தமிழில் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விசிட்டாத்துவைத வெளிச்சத்தில் விளக்க முற்பட்ட உரையாசிரியர்கள் வடமொழி கலந்த நடையினை மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம் அவர்கள் வேதத்தில் முங்கிக் குளித்து மணலெடுத்தவர்களாய்த் திகழ்ந்தமையாகும். சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்த சிவஞான முனிவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறைபோயவராய் இருந்தபோதிலும், தூய தமிழில் உரை வரையாமல் வடசொற்களைத் தற்சம விதிப்படி தமிழாக்கி வழங்குவதனைக் காணலாம்.

சமயக் கணக்கர்கள் தங்கள் கொள்கைகளை நிலைநாட்டுவதில் முனைந்து நின்றார்களே தவிர, மொழித் தூய்மையில் கருத்துச் செலுத்தினார்கள் அல்லர். இதனால் இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்களையும் கூட விடுத்து வடசொற்களைப் பயன்படுத்தினர். இதனைக் கீழ்வரும் சான்றுகள் வலியுறுத்தும்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 7 1 20

செவ்வாய், 7 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம் - 38

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி)

தமிழ்த்துறைத் தலைவர், கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இரு நாகரிகக் கலப்பு

தமிழர் வாழ்வில் பிற துறைகளைக் காட்டிலும் சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றிலேயே வடமொழியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது. தொல்காப்பியனார் காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே தமிழினத்தோடு ஆரிய இனம் கலக்கத் தொடங்கிற்று. அக்கலப்பு மொழியிலும்கூடப் பரவத் தொடங்கித் தவிர்க்க இயலாத நிலையினை அடைந்தது. அதனா லேயே வடசொற்களை வட எழுத்துக்களை நீக்கித் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்தி ஆளலாம் என்று தொல்காப்பியனார் இலக்கணம் வகுத்துள்ளார்.(1) இவ்விரு நாகரிகங்களும் சில நூற்றாண்டுகள் ஒருசேர வழக்கத்திலிருந்து பின்பு மெல்ல மெல்லக் கலந்து தம்முள் சிலவற்றை இழந்தும் ஏற்றும் ஒரு புதுநெறி யாகவும் பொதுநெறியாகவும் உருவெடுத்தன. இம் மாற்றத்தின் தாக்கம், தமிழர்களின் அக-புற வாழ்க்கை களில் இருத்தலைவிடச் சமய மெய்ப்பொருளியல் வாழ்க்கையிலேயே மிகுந்த அளவில் இருத்தல் காணக்கிடக்கிறது.

ஆரியத் தெய்வங்கள்

இரு நாகரிகக் கலப்பின் விளைவாக, ஆரியர் வழிபட்ட தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம் பெறலாயின. பண்டைத் தமிழ்ப் பழங்குடி மக்களில் முல்லை நில மக்கள் மாயோனையும், குறிஞ்சிநில மக்கள் சேயோனையும், மருத நில மக்கள் இந்திரனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும் வணங்கினர் என்கிறது தொல்காப்பியம்.(2) இக்கடவுளர்களுள் மாயோனும், சேயோனுமே தமிழர்களால் வழிபடப்பட்ட தமிழ்க் கடவுளர்கள். இந்திரனும், வருணனும் ஆரியக் கடவுளர்கள் ஆவர். இந்திரன், வருணன்பற்றி வேறு பட்ட ஊகங்களை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.(3) எனினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரத்தைத் துணையாகக்கொண்டு ஆராய்ந் தால், வேந்தன் என்பது வேதங்களில் இடம் பெற்றுள்ள இந்திரனே என்பது வெளிச்சமாகும். பூம்புகாரில் இந்திரனுக்குக் கோட்டம் அமைத்திருந்ததனையும் இந்திர விழா பல நாட்டினரும் வந்து காணும் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றதனையும் சிலம்பும் மணிமேகலையும் தெரிவிக்கின்றன.(4) வேந்தன் ஆரியத் தெய்வம் என்று விளங்குவதால் வருணனையும் ஆரியத் தெய்வம் என்று கொள்வது பிழையாகாது. குறிஞ்சி நில மக்களால் வழிபடப்பட்ட மாயோன், சேயோன் ஆகியவர்களோடு முறையே ஆரியர்தம் கடவுளராகிய விட்டுணுவும் சுப்பிரமணியனும் ஒன் றாக்கப்பட்டனர். பண்டைத் தமிழரிடையே காணப் பெறாததும் வேதகாலத் தொடக்கத்தில் உருத்திரனாக முகிழ்த்துக் காலப்போக்கில் சிவனாக உருவெடுத்தது மாகிய சிவவழிபாடு தமிழர்களிடையே வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவ்வாறு தமிழ்க் கடவுளரோடு ஆரியக் கடவுளர்கள் ஒன்றுபடுத்தப்பட்டு ஆரியக் கூறுகள் மேலோங்கிய தெய்வங்கள் தமிழர் சமயத்தில் இடம்பெற்றன.

இறை வழிபாட்டில் ஆரியக் கூறுகள்

இறை வழிபாட்டிலும் ஆரியர்களின் வழிபாட்டு முறை இடம் பெறலாயிற்று. தமிழர் இறை வழிபாட்டில் மலர் தூவிப் போற்றுதல், நெல் தூவுதல், மணியடித்தல், இசைக்கருவிகள் முழங்குதல், கொம்பு ஊதுதல் முதலிய நிகழ்ச்சிகள் இருந்து உள்ளன. இதனை,

"யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு

நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது"

(முல்லைப் பாட்டு - 3-10)

"நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

இமிழிசை அருவியொடு இன்னியங் கறங்க

உருவப் பல்பூத் தூஉய்"

(திருமுருகாற்றுப்படை 239-241)

"கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி"

(திருமுருகாற்றுப்படை-246)

என்னும் சங்கச் செய்யுட் பகுதிகள் தெரிவிக்கின்றன. தெய்வங்களுக்கு வேள்வி செய்யும் பழக்கமும், நெருப்பில் தெய்வத்தை வழிபடுதலும் தமிழர்க்குரிய வழிபாட்டு முறைகள் அல்ல; அவை ஆரியர்களால் தமிழரிடைப் புகுந்தவை. இவ்வழிபாட்டு மாற்றங்கள் சங்க காலத்துக்கு முன்பே தமிழர் வாழ்வில் நிகழ்ந்தன. சங்க கால மன்னர்களே இவ்வாறான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு உள்ளனர். பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோர் பெயர்களே அவர்கள் வேள்விகள் பல எடுத்தமையைத் தெரிவிக் கின்றன.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

(குறள்-259)

என்னும் திருக்குறளும் வேள்விகள் பெருவழக்காக இருந்ததனைச் சுட்டுவது அறியலாம்.

இறைவன் முன்னே நின்று மந்திரங்களைச் சொல்லும் வழக்கமும் ஆரியர் வழிபாட்டு முறையே என்பதனைத் திருமுருகாற்றுப்படை கொண்டு உணரலாம். முருகன்பால் புலவன் ஒருவன் அவன் திருப்பெயர்களை அடுத்தடுத்துச் சொல்லி வழிபடும் நிலையினைப் பழமுதிர்சோலையில் காண்கிறோம். ஆனால், திருஏரகத்தில் வழிபாடு செய்யும் அந்தணர்கள் முருகனைக் குறித்த மந்திரத்தை அவன் திருமுற்றத்தில் முணுமுணுத்து நிற்பதனைப் பார்க்கிறோம்.

சமயச் சான்றோர்களின் மொழிக் கொள்கை

நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல இடங் களுக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை யும் இறைவியையும் தேமதூரத் தமிழில் நாவினிக்கப் பாடிப் பரவினர். அவர்கள் தமிழையும் வடமொழி யையும் ஒப்ப மதித்தவர்கள். அவர்கள் பாடிய இறை வனைக் குறித்த புராணச் செய்திகள் பல வடமொழி நூல்களில் இருந்தமையும், அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பாடியமையும் இவ்வாறு இரு மொழி யையும் மதித்துப் போற்றும் போக்கினை அவர்களுக்கு அளித்தன.

இதனாலேயே,

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (5)

என்று திருநாவுக்கரசரும்,

"அந்தமிழ் இன்பப் பாவினை

அவ்வட மொழியை" (6)

என்று குலசேகரப் பெருமாளும் இறைவனைப் பாடுகின்றனர். இவ்விரு மொழிகளையும் இறைவன் திருவருள் அரண்மனைக் கதவுகளைத் திறக்கும் பொற் சாவிகளாகக் கருதியவர் சேக்கிழார். ஆதலால் மறையினைப் பாடும் திருவாயினை உடைய சிவபெருமான் நம்பி ஆரூரரிடம் தன்னைத் தமிழால் பாடி வழிபடுமாறு பணிப்பதாகத் தெரிவிக்கிறார்.

"மற்றுநீ வன்மை பேசி

வன்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பின்

பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்;

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார் (7)

என்பது பெரிய புராணம்.

இவ்வாறு சமயம் வளர்த்த சான்றோர்களால் இரு மொழிகளும் ஒத்த நிலையில் - ஒரு நிலையில் வைத்துப் போற்றப்பட்ட போதிலும் தமிழர்களின் செல்வாக்குத் தாழ்ந்து வடமொழியாளரின் செல்வாக்குத் திருக்கோயில்களில் மேலோங்கிய காலத்தில் தமிழின் நிலை தாழ்ந்தது. திருநாவுக்கரசர் போன்ற பெருமக்கள் திரு முற்றத்தில் நின்று செம்மேனியம்மானைக் கண்குளிரக் கண்டு கரைந்து உருகிப் போற்றிநின்ற தில்லையில் திருமுற்றத்தில் தமிழுக்கு இடமில்லாத நிலை உருவாயிற்று. வடமொழியில் இறைவனைப் போற்றி மலர் வணக்கம் செய்யும் வழிபாட்டு முறை நிலைகொண்டது. திருக்கோயில்களைச் சூழ்ந்திருந்த தமிழ் மணம் மெல்ல மெல்ல அகன்றது.

தமிழ்ப் பெயர் மாற்றங்கள்

திருமுறை ஆசிரியர்களும், ஆழ்வார்களும் தங்கள் பாடல்களில் திருத்தலங்களின் அருமையான தமிழ்ப் பெயர்களையும், இறைவன் இறைவியர்க்கு வழங்கிய தமிழ்ப் பெயர்களையும் குறித்துச் சென்றுள்ளனர். அவையெல்லாம் வடமொழியாக்கப்பட்டன. அவ்வட மொழிப் பெயர்கள் வடமொழிப் பற்று மிக்கவர்களால் பெருவழக்காக்கப்பட்டன. காலப்போக்கில் தமிழ்ப் பெயர்கள் ஏட்டளவில் நிற்க வடமொழிப் பெயர்கள் வழக்கில் நிற்கலாயின.

திருத்தலப் பெயர்கள் வடமொழியாக்கப்பட்ட மைக்குச் சான்றுகள் :

தமிழ்ப் பெயர்   வடமொழிப் பெயர்

ஆய்ப்பாடி -   கோகுலம்

குரங்காடுதுறை  -  கபிஸ்தலம்

குடமூக்கு  -  கும்பகோணம்

சிங்கவேள்குன்றம் -  அகோபிலம்

திருவெஃகா   -  யதோத்காரி சந்நிதி

(சொன்னவண்ணம் செய்த

பெருமாள் திருமுற்றம்

பெரும்புலியூர்    -    வியாக்ரபுரி

மயிலாடுதுறை   -   மாயூரம்

மறைக்காடு    -  வேதாரண்யம்

முதுகுன்றம் (பழமலை)-   விருத்தாசலம்

வேங்கடம்   -   வேங்கடாசலம்

இவ்வாறே இறைவன் பெயர்களும், இறைவி பெயர்களும் வடமொழியாக்கப்பட்டன.

தொடரும்

- விடுதலை நாளேடு 2 .1 .20

இசையுலகில் வடமொழி ஆதிக்கம்- 36

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் சேலம் எஸ்.ஜெயலட்சுமி  அவர்கள் உரை வருமாறு.

17.12.2019 அன்றைய தொடர்ச்சி...

இசையுலகில் முன்னரே கூறியபடி சாமவேதம் தான் ஆரம்பம் என்ற கொள்கை இருப்பினும் வடமொழியில் இன்று அகப்படும் சாமவேதத்தில் இசைக்கூறுகள் ஒன்றுமில்லை என்பதையும், இந்த வேதங்களுக்கு முன்பாகவே தமிழ் நான்மறைகள்   இருந்திருக்கக்கூடும் என்பதையும் பார்த்தோம். தமிழிசையில் ஆதியிசைகள் பதினோராயிரத்துத் தொள்ளாயிரம் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் யாவும் இசையைப் பற்றிய ஏராள மான குறிப்புகளைத் தருகின்றன. பரதம் என்ற தமிழ் நூல் ஒன்று இருந்து இறந்தமை தெரிகிறது என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தில் கூறுகின்றார். நாட்டிய நன்னூல் கடைபிடித்து என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் நாட்டிய நூல் வடமொழியில் உள்ள நாட் டிய சாத்திரமாக நிச்சயம் இராது என்று ஒரு அறிஞர் குறிப்பிட்டார். ஏனெனில் நாட்டிய சாத்திரத்தில் வட மொழி வல்லார் கூறிக்கொள்வதுபோல் அத்துணைச் செய்திகள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் சிலப்பதி காரத்தை எடுத்துக்கொண்டாலோ அதனுள் வரும் சிற்சில குறிப்புகளே ஒரு இசைக்களஞ்சியம் ஆகும் அளவுக்கு இருக்கின்றன என்பது நமக்குப் பெருமை யைக் கொடுக்கத்தக்கது.

சங்க இலக்கியங்களில் காணப்படும் பலதுறைச் செய்திகளைப் பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் நாம் தமிழின் உண்மையான உயர்வை உணர முடியும். முதலாவது, தமிழ் எவ்வளவு ஏற்றமு டையது என்பதைத் தமிழர்களாகிய நாமே புரிந்து கொள்ளவில்லை. அப்படியிருக்கப் பிறமொழியினர் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்! பிற மொழியினர் தமிழின் ஒப்பற்ற பெருமையைத் தெரிந்து கொள்வதற்கு நாம் தமிழில் உள்ள அரிய சொற்களை, செய்திகளை திறமையான ஆய்வுடன் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து ஆங்கிலத்திலும், அய்ரோப்பிய மொழிகளி லும், பிற இந்திய மொழிகளிலும் நூல்களை வெளியிட வேண்டியது மிகமிக அவசியம். இந்த நோக்கோடு முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்யும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி நூல்களை இயற்றினார்கள் என்றால் அது மிகவும் வரவேற்கத்தக்கது.

இசையுலகில் நமது இந்திய இசை அதுவும் தென் னாட்டிசை மிக நுட்பமானதாகவும் பண்பட்டதாகவும் விளங்கிவருகிறது. வடஇந்திய இசையும் பண் அல்லது இராகம் என்ற அடிப்படையில் (Malodic System)  ஆனதே என்றாலும் நுண் சுரங்களை நமது தமிழ்நாட்டு இசையைப்போல் இவ்வளவு அதிகமாகக் கையாள் வதில்லை. உலக இசைகளில் ஆர்மோனியத்தில் அமைந்துள்ளது போல் பன்னிரண்டு அரைச்சுரங்களே (Twelve Semi Tones) கையாளப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு இசையில் காற்சுரங்கள், அரைக்காற்சுரங்கள் என்று பல நுண்சுரங்கள் இராகங்களில் பொன்னில் பதித்த வைரங்கள் போல் மிளிர்ந்து காணப்படுகின்றன. இந்த ஒப்பற்ற இசையின் இலக்கணத்தை ஆராய்தல் பொருட்டு இந்தியாவிற்கு வரும் மேனாட்டு இசைப் பேராசிரியர்கள் இங்குள்ள வடமொழி நூல்களை ஆராய்கிறார்கள். இங்கு இசைக்கப்படும் இசைக்கும் இந்நூல்களில் காணப்படும் இலக்கணத்திற்கும் ஒரு விதச் சம்பந்தமுமில்லையே என்று திகைக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இசையின் அடிப்படை இலக் கணங்கள் தமிழிலேதான் இருக்கிறது. வடமொழி மய மாக்கும் முயற்சியில் பிற மொழியினரால் சொற்களைத் தான் வடமொழியாக்க முடிந்தது. ஆனால் அந்த சொல் லின் அடிப்படை மரபை, இலக்கணத்தை அவர்களால் அசைக்கமுடியவில்லை. இடபம் என்ற சொல்லை ரிஷபம் என்று ஆக்கினர். காந்தாரம் என்பதைக் காரந் தாரம் என்று ஆக்கினர். பண்பெயர்களை மாற்றியமைத் தார்கள். கலை என்பதை கலா என்றார்கள். பரதம் என்ற தமிழ்ச்சொல்லை வடசொல் என்றார்கள். நாட்டியம் என்பதை நாட்யம் என்று ஆக்கினார்கள். திருவிடம் என்பதை திராவிடம் என்றார்கள். தமிழில் மெய்யெ ழுத்து முதலாக வராது என்ற காரணத்தில் இச்சொற்கள் வடமொழிச் சொற்கள் என்று கூறினார்கள்.

கி.பி. 12 ஆவது நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தமிழிசை மரபும் பாணர் வரன்முறையும் சீராகவும் சிறப்பாகவும் இருந்துள்ளன.  பின்னர்த் தமிழ்நாட்டு முடிமன்னர்களின் வீழ்ச்சிக்குப்பின் ஒப்பற்ற பாணர் மரபும் தமிழிசையின் வடிவமும் பிறமொழிகளின் பெயர்வழியே வேரூன்ற ஆரம்பித்தன. தமிழ்நாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. திருமறைக்காடு - வேதாரண்யமாயிற்று: திருவெண்காடு சுவேதாரண்ய மாயிற்று. பெரியகோயில் பிருஹதீஸ்வரமாயிற்று.

தேவாரத் திருமுறைகளில் நூற்றிமூன்று பண்களைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.  தெய்வச் சந்நிதி களிலே இசையோடும் தாளத்தோடும் யாழ், குழல், வீணை, மொந்தை, முழவம் ஆகிய இன்னிசைக் கருவிகளோடு தெய்வீகப்பாக்கள் பாடப்பட்டன. பண் சுமந்த பாடல்கள், நாடெங்கும் மக்களை இசையிலும் பக்தியிலும் பிணைத்தது. நடனக்கலை கோயிலில் வழிபடும் தெய்வம் வீதியிலே புறப்பட்டபோது நவசந்தி நிருத்தங்களாக ஒப்பற்ற கலையழகோடு தெய்வத்தின் முன்னிலையிலும் மக்கள் கண்டுகளிக்கும்படியாகவும் ஆடப்பட்டன. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் சிற்பக் கலையையும் இசையையும் நடனத்தையும் மற்றும் பல கவின் கலைகளையும் ஈடு இணையற்ற முறையிலே பராமரித்துப் பாதுகாத்து வந்தன. நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என்று சுந்தரமூர்த்தி அடிகள் சம்பந்தரைப் போற்றிப் பாடினார். சமயத்தைப் பரப்புவதைக் காட்டிலும் தமிழைப் பரப்புவதே சிவ நெறிச் செல்வர்களின் நோக்காக இருந்தது. ஆகம சாத்திரம் திராவிடப் பண்பாடேயாகும் என்று சுநீதி குமார் சாட்டர்ஜி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் கூறி யுள்ளார்கள். இக்கலைகள் இன்றைக்கும் இங்கு தமிழ் நாட்டிலே சிறந்தோங்கி இருப்பதே நமக்குப் பெரும் சான்றாகும்.

எவ்விதமோ பலகுறுக்கு வழிகளிலே தமிழர்களை வஞ்சித்துத் தமிழ் மரபாகிய நம்முடைய பண்பாட்டை நம்முடையது அல்ல என்று நாமே நம்பும்படியாக ஒரு சாரார் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறார்கள். பல தமிழ்ச் சொற்களை நமது புலவர்களே நம்முடைய தில்லை என்றும் மறுத்துக் கூறும் நிலைக்கும் நாம் வந்துள்ளோம். கி.பி. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தெலுங்கு, கன்னடம், வடமொழி ஆகியவற்றில் இசை பற்றிய பல நூல்கள் பாடல்கள் வந்துள்ளன. அவை எதிலும் நமது பண்டைய இசை முறைக்கு உகந்த இலக்கணங்கள் காணப்படவில்லை. ஒவ்வொன்றும் தாறுமாறாகப் பல கொள்கைகளைக் கூறிக்கொண்டு, ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இன்று கர்நாடக இசை என்பது தமிழிசையே அன்றி வேறில்லை. இரா கங்களின் பெயர்களை மாற்றி எவருக்கும் ஒன்றும் புரியாதவாறு நிறையக் குழப்பங்களை உண்டு பண்ணி யுள்ளார்கள். ஆராய்ச்சியாளர்கள் செய்வதெல்லாம், இந்நூல்கள் சரியான, உண்மையான தகவல்களைத் தரவில்லையே என்று புலம்புவதுதான். கர்நாடக இசை அடிப்படை இலக்கணம் ஏதும் கூறாமல் சரிகமபதநிச என்றால் ஆரோகணம் சநிதபமகரிச என்றால் அவரோ கணம் என்று கூறிவிட்டு இசைப்பயிற்சியை ஆரம்பிக் கின்றன, சரிகம முதலிய ஏழிசை எப்படிப் பிறந்தன? இவற்றின் இயல்பு என்ன? எங்ஙனம் பண்கள் பிறந் தன? அதற்கு அடிப்படை இலக்கணம் என்ன என்பது பற்றி எவ்விதச் செய்தியும் இல்லை. சாரங்கதேவருடைய சங்கீத ரத்னாகரம் என்று நூலை மிகச் சிறப்பாகக் கூறுவர் வடமொழி ஆதரவாளர்கள். அந்தச் சாரங்க தேவர் தேவாரவர்த்தனீ என்ற தேவாரத்தில் காணப் படும் பண்களைக் குறிப்பிட்டுள்ளார். பன்னிரெண்டு சுரங்களுக்கு 22 சுருதிகள் (காற்சுரம் அல்லது அலகு என்று தமிழிசை கூறும்) என்ற ஒரு தவறான கொள்கை யைப் பரப்பி இசையுலகில் எல்லையற்ற குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளார் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கருணாமிருத சாகரம் என்ற அரிய சிலப்பதிகார ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் இந்த 22 சுருதி என்பது 12 அரைச்சுரங்கள் 24 அலகுகளாக ஆகின்றபடியால் இரண்டு சுரங்கள் இணை, கிளை முறையில் அமைந்துள்ளவற்றை ஒவ் வொரு அலகு குறைத்துப் பாடும் முறையால் இக்கருத்து ஏற்பட்டது என்று தெளிவாக விளக்கியுள்ளார். இந்த இலக்கணம் சிலப்பதிகாரத்தின் மூலம் நமக்கு கிடைக் கிறது. பல அரிய இசைத் தமிழ் நூல்கள் இறந்தமையால் நமக்கு இவ்விதம் பெரும் இடையூறு ஏற்பட்டது. தமிழிசையின் வளத்தையும் மேன்மையையும் பார்க் கும்போது கர்நாடக இசையெல்லாம் மிகவும் பிற்பட் டது; ஏன், தாழ்வுற்றது என்றும்கூடச் சொல்லலாம்.

பிழையா மரபின் ஈரேழ் கோவையை

உழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி

என்று இளங்கோவடிகள்  இசை இலக்கணத்தைச் சிலப்பதிகாரக் காவியத்தில் நாம் செய்த பெரும்பேற்றால் பொதிந்து வைத்தாரோ நாம் பிழைத்தோமோ; பன்னிரு சுரங்களைப் பன்னிரண்டு இராசி வீடுகளில் அமைத்து சுரங்களினூடே பகையும் நட்பும் உறவும் பின்னிப் பிணைக்க ஒன்பது சுவைகளையும் அள்ளிச் சொரியும் நமது இசையிலும் பண்களிலும் காணப்படும் பெருமித மும் ஆனந்தமும் நெகிழ்ச்சியும்தான் என்னே! உலகி லேயே இவ்வளவு வளம்பெற்ற இசைமரபு எங்கும் கிடையாது. பரதநாட்டியத்தின் காணங்கள் கூத்து வகை கள் யாவும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளன. சிலம்பில் காணப்படும் அளவு செய்திகள் வடமொழி பரதநாட்டிய சாத்திரத்தில் காணப்படவில்லை. ஆகவே யாரிடமிருந்து யார் கடன் வாங்கியிருக்கக்கூடும் என் பதை நாம் நன்கறியலாம்.

எந்த நூலை எடுத்தாலும் வடமொழியில் அந்நூலை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு வடமொழி நூல்தான் மூலம் என்று சொல்வது ஒரு வழக்காக இருக்கிறது. நல்ல காலம்! சிலப்பதிகாரத்தை எவரும் மொழிபெயர்க்கவில்லை. அதாவது மொழிபெயர்க்க இயலவில்லை என்று தெரிகிறது.

திரு உ.வே. சாமிநாதய்யர் அவர்கள், சிலப்பதிகாரக் காவியம் இளங்கோவடிகளால் அவர் காலத்திலேயே செய்யப்பட்டது. இது வேறு எந்த மொழியிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்டது என்று எவராலும் எவ் விதத் திலும் சொல்லமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறு கின்றார்.

ஆரியர் வருகை என்று சொல்லப்படும் காலத்திற்கு முன்பு திராவிட சம்பந்தமான ஒரு நாகரிகம் இந்தியா முழுவதும் பலுசிஸ்தானம், வங்காளம் வரை பரவியிருந்ததாக பானர்ஜி முதலிய வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். ஆகவேதான், நாம் இன்று காஷ் மீரத்திலும், இமயத்திலும், ஒரிஸ்ஸாவிலும், வங்காளத் திலும் நமது பண்பாட்டின் சுவடுகள் காணப்படுவதைக் காண்கிறோம். பல திராவிடச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் வங்காள மொழியில்கூடக்  காணப்படுகிறது என்று கூறுகிறார் பண்டர்கர் என்னும் அறிஞர்.

ஆரியர்களுடைய வருகைக்கு முன்னர் வட இந்தியாவிலே திராவிட மொழி பரவியிருந்தது என்ற உண்மை இங்ஙனம் உறுதியாயிற்று. வட இந்திய பிராந்திய மொழிகளை ஆராய்ந்து பார்க்கும்போது இவ்வுண்மை தெற்றெனப் புலனாகிறது. வடமொழிச் சொற்கள் தொடர்கள் நிரம்பியிருக்கும் வங்காள மொழிகூடப் பெருவாரியான திராவிடச் சொற்களைக் கொண்டதாகவும் மொழி ஒற்றுமை உடையதாகவும் இருக்கிறது. அதைவிட அதிசயமானது இந்தி மொழி யிலும் திராவிடச் சொற்களை நிறையக் காணமுடியும் என்ற உண்மைதான். ஒரு காலத்தில் வட இந்தியா முழு வதிலும் திராவிட மொழியே வழங்கிவந்தது என்பதைப் பற்றி எந்தவிதமான அய்யமும் கொள்வதற்கில்லை. பி.ஆர். பண்டர்கர் இந்தியாவின் பண்டைய வரலாறு என்ற சொற்பொழிவு (பக்கம்5) Quotation on Tamil and Tamil Culture compiled by R.Madhivanan Thainadu Pathipagam 1981).

இசைமூலமாகவும் இசைப் பண்பாட்டின் மூலமா கவும் தமிழிசைக்கும் தமிழிசை இலக்கணத்திற்கும் இணையான இசைக்கலை உலகில் வேறெங்குமில்லை என்பதை நிலைநாட்டலாம் என்பது எனது தாழ்ந்த கருத்து. தமிழ் நூல்களில் உள்ள ஒப்பற்ற உண்மைகளை அழியா மரபுகளைத் தமிழர் நன்கு அறிந்து உவக்கும் வண்ணம் தமிழிலும், பிற மொழியினர் உணர்ந்து கொள்ளும் வண்ணம் பிற மொழிகளிலும் நூல்களினை உருவாக்கித் தருவதே நமது தலையாய கடன் என்று எனது பணிவான கருத்தை தமிழறிஞர்கள் முன் விண்ணப்பம் செய்கிறேன்.

- டாக்டர் சேலம் எஸ். ஜெயலட்சுமி

- விடுதலை நாளேடு 19 12 19

சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு- 37

டாக்டர். ப. சிற்சபை

4. இராஜவீதி காஞ்சிபுரம் - 2

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் ப.சிற்சபை அவர்கள் உரை வருமாறு.

தமிழ் மக்கள், தமிழ் மொழியிலேயே பேச, எழுத வழக்கத்தில் இருந்தவர்கள், ஆரியர்கள் தமிழகத்திலே நுழைந்தபின்னர், அவர்கள் பேசுகின்ற வடமொழி என்னும் சமற்கிருத மொழியையும் கலந்துபேசுவதை ஒரு நவீன நாகரிகமாகவும், அழகாகவும் கருதிக் கொண்டுவிட்டனர். சமீப காலத்தில் ஆங்கிலேயன் தமிழகத்திலே புகுந்த பின்னர், வடமொழியைக் கலந்து பேசுவதிலே பெருமை கொண்டது போல் வெள்ளை யன் மொழியான ஆங்கிலத்தைப் பெருமளவு கலந்து பேசியே வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

தமிழர்கள் பிறமொழியைக் கலந்து பேசுவது தான் நாகரிகமெனத் தவறாக எண்ணிக்கொண்டுவிட்டனர். கடவுளை-ஈஸ்வரன் என்றும், தண்ணீரை-ஜலம் என்றும், சோற்றை-சாதம் என்றும், குழம்பை-சாம்பார் என்றும், மிளகுநீரை-ரசம் என்றும், தலை முழுக்கை-ஸ்நானம் என்றும், திருமணத்தை-விவாக முகூர்த்தம் என்றும், வீட்டை-கிரஹமென்றும் கூறுவதிலே மகிழ்ச் சியும் பெருமையும் கொண்டனர்.

அதுபோலவே சித்த மருத்துவத்தை-ஆயுர்வேத மெனவும், சித்த மருத்துவக் குடிநீரை-கிஷாயமென்றும், இளகலை-லேகியமென்றும், நீற்றை-பஸ்பம் என்றும், அமுக்கரா இளகலை-அஸ்வகந்தி லேகியம் என்றும், இலிங்கப் புளிப்பை-ஜாதி ஜம்பீரம் என்றும், தீநீரை-திராவகம் என்றும், மணப்பாகை-சர்பத்து என்றும், துணை மருந்து - அனுபானம் என்றும், காய்ச்சல்-சுரம் என்றும் கூறி வழக்கப்படுத்தி விட்டனர். மேலும் பல சொற்களை அடியில் குறிப்பிடுகின்றேன்.

சில மருத்துவக் கலைச்சொல் விளக்கம்:

- விடுதலை நாளேடு 31 12 19 

வியாழன், 2 ஜனவரி, 2020

‘பெரியார் விருது' - பெரியார் நூல்கள் வெளியீட்டு விழா (சென்னை, 24.12.2019)

சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் - டாக்டர் ஜெயராமன் - திருமுருகன் காந்தி ஆகியோருக்கு ‘பெரியார் விருதினை' திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார்.

தந்தை பெரியாரின் ‘‘பொதுவுடைமைச் சிந்தனைகள்'' (3 தொகுதிகள்) நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி, தோழர் முத்தரசன், மு.நாகநாதன், புலவர் வீரமணி, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் ஜெயராமன், திருமுருகன் காந்தி, கலி.பூங்குன்றன், வீ.அன்புராஜ்.

மைத்ரி வெளியீட்டகத்தின் சார்பில் மலையாள மொழியில் லால்சலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட தந்தை பெரியார் நூல்கள் வெளியிடப்பட்டன.

பெரியார் விருது பெற்றவர்களின் ஏற்புரை - "பார்ப்பனீய நோய்களுக்கு மாமருந்து பெரியாரே!"

தந்தை பெரியார் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா), புதுக்கோட்டை டாக்டர் நா.ஜெயராமன், மே 17 இயக்க திருமுருகன் காந்தி ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் விருது அளிக்கப்பட்டது (இவர்களைப் பற்றிய குறிப்புகள் தனியே காண்க)

இவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் சால்வை அணிவித்தும், விருது வழங்கியும், நூல்களை வழங்கியும் பாராட்டினையும், வாழ்த்தினையும் தெரிவித்தார். பெரியார் விருது பெற்றவர்கள் ஏற்புரையும் வழங்கினர்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நாங்கள் எல்லாம் வெளி நாடுகளில் பறவைகளாகப் பறந்து திரிந்து கொண்டுள் ளோம், எங்களுக்கான அடைக் கலம் தரும் அடையாறு ஆல மரம்தான் ஆசிரியர் அவர்கள்.

தந்தை பெரியாரின் மறை வுக்குப் பிறகும் உலகளாவிய அளவில் தந்தை பெரியார் அவர்களின் புகழும் கொள் கையும் விரிந்து பரவியதற்குக் காரணம் தமிழர் தலைவரின் ஓய்வறியாத தனி மனித உழைப்புதான்!

இந்நாள் என்னைப் பொருத்தவரை மிகவும் உணர்ச்சி கரமான நாள். என் சிறு வயது முதலே தந்தை பெரியாரை யும், திராவிடர் கழகத்தையும் சுற்றி சுற்றி வலம் வந்தவன்.

முரட்டுப் பெரியார் பெருந்தொண்டர் அய்யா சி.ஆள வந்தார், பி.வி.இராமச்சந்திரன், தருமராஜ் இவர்களுடன் தந்தை பெரியாரை சந்திக்கும் வாய்ப்பை அதிகம் பெற்ற வன். நான் அமெரிக்கா சென்ற புதிதில் சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது. சிகாகோ தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் போல வேடம் தரித்து பெரியார் போலப் பேசி முதல் பரிசைப் பெற்றேன்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் குரலில் பேசி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன் னேன். இவற்றின்மூலம் கொஞ்சம் பிரபலமானேன். தோழர்கள் விசுவநாதன், பாபு ஆகியோருடன் இணைந்து பெரியார் பிறந்த நாள் விழாவை சிகாகோவில் மட்டும் கொண்டாடி வந்தோம்.

இப்பொழுதோ பாஸ்டன், டெக்சாஸ், வாசிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, கலிஃபோர்னியா வரை தந்தை பெரியார் சிந்தனைகள் போயச் சேரும் அளவிற்கு விரிவடைந்திருக்கிறது.

என்னுடன் 45 ஆண்டுகள் வாழ்ந்த என் கொள்கைப் பயணத்திற்குப் பெருந் துணையாக இருந்து வரும் எனது அருமை வாழ்விணையர் சரோஜா மற்றும் எனது அமெரிக்க நண்பர்கள் அனைவருக்கும் இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்.

என்னைப் போல பெரியார் விருது பெறும் தகுதியான வர்கள் பலரையும் உருவாக்கியிருப்பவர் நமது ஆசிரியர் அவர்கள் என்று  தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் டாக்டர் சோம.இளங்கோவன். (இவரது வாழ்விணையர் டாக்டர் சரோஜா அவர்களை மேடைக்கு அழைத்து இருவருக்கும் சேர்த்து சால்வை அணிவித்து தம் வாழ்த் துகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்).

புதுக்கோட்டை டாக்டர் நா.ஜெயராமன்

தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஓடிய பிறகும், அவரின் கொள்கைகளை சிரமேற்கொண்டு ஓயாது பரப்பி வருபவர் நமது ஆசிரியர் அவர்கள்.

இந்த நேரத்தில் என்னை ஆளாக்கிய பெற்றோர்கள், எனது அண்ணன் கே.ஆர்.ஆதிதிராவிடர் ஆகியோரை நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். என் அண்ணனும் கூட இங்கே வந்துள்ளார்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களை முன்னிறுத்தி அ.பெ.கா. என்ற பெயரில் பண்பாட்டு இயக்கத்தினை நடத்தி வருகிறேன். எனது நூலகத்தில் 6000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன். என் மகன் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு, தந்தை "பெரியாரின் தத்துவ விளக்கம்", "இனி வரும் உலகம்" ஆகிய நூல்க ளைத் தான் கொடுத்தேன். நான் அன்பளிப்பும் வாங்குவ தில்லை, அன்பளிப்புகளை பணமாகவும் அளிப்பதில்லை. நூல்களைத் தான் வழங்குவேன்.

என் கொள்கைப் பயணத்துக்குத் தோள் கொடுத்து வரும் குடும்பத்தினர் தொந்தரவு தராமல் ஒத்துழைத்துக் கொடுத்து வரும் சுற்றத்தார் அனைவருக்கும் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல நூல்களை எழுதியிருக்கிறேன். இப்பொழுது நான் கடைசியாக எழுதி வெளிவரவிருக்கும் நூல் "இந்துக்கள் மனம் புண்படட்டும்" என்பதாகும். அந்த நூலினை நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்போடு இங்கு பெரியார் திடலிலேயே வெளியிடுவேன் என்றார்.

மே 17 இயக்க திருமுருகன் காந்தி

என் மீது 39 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக் கான விருதே இது.

நான் இதுவரை செய்த பணிகளுக்காக அல்ல, செய்ய விருக்கும் பணிகளுக் கான அங்கீகாரமாகவே இத னைக் கருதுகிறேன். இது தனி மனிதனான எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விருதாக நான் கருதவில்லை.

எனது தோழர்கள் அருள் முருகன், லெனா குமார், புருசோத்தமன், பிரவீன் குமார், இரா.செந்தில்குமார் ஆகி யோர்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன்.

இந்துத்துவா சக்திகளால் கடும் எதிரியாகக் கருதப்படும் ஆசிரியர் அவர்களால் இந்த விருதைப் பெறுவதுதான் முக்கியமானது.

இது ஒரு நெருக்கடியான கால கட்டம். வேறு எந்த காலகட்டத்தையும் விட தந்தை பெரியார் மிகவும் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. பெரியாரின் சிந்தனைகள் தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆயுதம்!

இந்தியா முழுமைக்கும் தந்தை பெரியார் கொள்கை களைப் பரப்ப, நூல்கள் பரவ வேண்டும். அதன் அடை யாளமாக இந்த நிகழ்ச்சியில் மலையாள மொழியில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பார்ப்பனீயம், பிரமம் என்னும் கருத்து முதல் வாத தத்துவம் ஒழிக்கப்பட்டாக வேண்டும். வேதிய மரபு என் னும் தேக்கமுற்ற சிந்தனையை உடைத்தாக வேண்டும்.

அதற்குத் தந்தை பெரியார் என்னும் புரட்சிப் போரா யுதம் இந்தியாவிற்கே தேவைப்படுகிறது. இப்படித்தான் தந்தை பெரியாரைப் பார்க்கிறோம். பிராக்டிகல் மார்க்சி யம்தான் தந்தை பெரியாரின் தத்துவம்.

பார்ப்பன ஆதிக்கத் தத்துவம் ஏகாதி பத்தியத்துடன் இணைக்கிறது. இவைகளை முறியடிக்க தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம் என்றார்.

புலவர் பா.வீரமணி

"தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்" (3 தொகுதிகள்) தொகுப்பாசிரியருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

புலவர் பா.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தத் தொகுதிகள் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டவை. மார்க்சியத்தைப் பற்றி மெத்தப் படித்தவர்கள் விமர்சனங்களை எழுதினார்கள். ஆனால் கல்லூரிப் பட்டங்களைப் பெறாத தந்தை பெரியார் சுய சிந்தனையின் அடிப்படையில் மார்க்சியத் தைப் பற்றிய தொகுப்புதான் இந்த மூன்று தொகுதிகளும்.

பொதுவுடைமையை மறுப்பவன் மனிதனே கிடை யாது என்று தந்தை பெரியார் கூறுகிறார்.

காந்தியார் பொதுவுடைமை கருத்துக்கு எதிரானவர், பொதுவுடைமை ஒழித்தே தீருவது என்பது இட்லரின் நடவடிக்கை.

மதத்தை வைத்து மனிதனை வெறுப்பவர்களின் முடிவு தற்கொலையில் தான் முடியும் என்று சொன்னவர் தந்தை பெரியார். இட்லரின் முடிவைத் தெரிந்தவர்களுக்கு பெரியார் கருத்தின் சிறப்பை அறிய முடியும்.

நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரைப் பற்றியும் கூட பெரியார் விமர்ச்சித்துள்ளார்.

ருசியாவுக்குச் சென்ற தாகூர் அந்த நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பாராட்டி விட்டு பணக்காரர்களிடத்தில் மென்மையாக நடந்து கொண்டிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கிறார். இது பற்றி தந்தை பெரியார் தம் கருத்தை சொல்லியிருக்கிறார்.

பணக்காரர்களை மென்மையால் திருத்தவே முடியாது என்று கூறுகிறார் தந்தை பெரியார். பெரியாருடைய சிறப்பு என்பது அறிவின் ஆளுமை என்று குறிப்பிட்டார் புலவர் பா.வீரமணி

பெரியார் விருது பெற்றவர்களின் தன் விவரக் குறிப்பு

டாக்டர் சோம.இளங்கோவன்

டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் அவர் களின் தொண்டன் என்றும், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்றும் தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்பவர் திரு. சோம. இளங்கோவன் அவர்கள்.

காரணம்?

சிறுவயது முதலே திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தனது சித்தப்பா பி.வி.ஆர். எனப்படும் பிவே. இராமச்சந்திரன் அவர்களுடன் சென்று வந்ததுதான் என்கிறார் திரு. சோம.இளங்கோவன். ஆம்; வழிய வழிய பெரியாரியத் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை இவர்! அதனால்தான், பள்ளி நாட்களிலேயே கையில் மெகாபோனை எடுத்துக் கொண்டு உள்ளூரில் நடைபெறும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் பற்றித் தெருத்தெருவாகப்போய் அறிவிப்பு செய்வது, போராட்டங்களின்போது முழக்கங்கள் எழுப்புவது என்று வாழ்க்கைக்கு வனப்பு சேர்த்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் பெரியாரைச் சந்தித்துப் பெற்ற அறிவுரைகளோடு அமெரிக்கா சென்ற இவர், குடல் மருத்துவராகி சிகாகோவில் செயலாற்றினார்.

அத்துடன் சிகாகோ தமிழ்ச்சங்கம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை ஆகியவற்றின் தலைமைப் பொறுப் பேற்று தமிழ்ப் பணியும் ஆற்றி வருகிறார்.

25 ஆண்டுகளுக்கு முன் பெரியார் பன்னாட்டு அமைப்பைத் தொடங்கி பெரியாரியலை பன்னாட்டு அளவில் பரப்பும் பணிகளில் ஒரு பாலமாக இருப்பவர்.

2017ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள கொல்லோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய தில் இவரது பங்கு அளப்பரியது!

அதேபோல், 2019ஆம் ஆண்டு அமெரிக்க மேரிலாண்டில் நடைபெற்ற மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டி லும் இவரது பங்கானது மிகச் சிறப்பானதாகும்!

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதை பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் வழங்கி வருகிறார்.

நண்பர்களுடன் இணைந்து "வீரமணி சமூகநீதி விருது" நிறுவியதோடு, அந்த விருதை, அமெரிக்காவின் தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர் பேராசிரியர் பால்கர்ட்சுவை தமிழ்நாட் டிற்கு அழைத்து வந்து மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு சமூகநீதிக்கான வீரமணி விருதை வழங்கச் செய்து பெருமைச் சேர்த்தார்.

உலகிலுள்ள மற்ற நாடுகளும் நமது இயக்கத்திற்கும் பாலமாக இருந்து பெரியார் கொள்கைகளை பன்னாட்டு அளவில் பரப்புவதில் ஈடு இணையற்றவர் மருத்துவர் சோம.இளங்கோவன். அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற சோம. இளங்கோவன் அவர்களின் பணிகளைப் பாராட்டி 2019ஆம் ஆண்டிற்கான "பெரியார் விருது" வழங்கப்படுகிறது.

மருத்துவர் நா.ஜெயராமன்

ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருப்பது புதுக்கோட்டை மண்

அது 24.6.1955ஆம் நாளன்று டாக்டர் நா.ஜெயராமன் பிறந்த போது தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டது.

டாக்டர் நா.ஜெயராமனின் தந்தை நாகய்யா, குழந்தைப்ப ருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுப்பாதையில் இவருக்கு நடக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அந்தப்பயிற்சியின் பயனாக, பல் மருத்துவரான இவர் அடித்தட்டு மக்களின் மூளை மருத்துவராகவும் செயல்பட்டி ருக்கிறார்.

அ.மணிமேகலை அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டாக்டர் நா.ஜெயராமன்

அது காதல் திருமணம் மட்டுமல்ல, ஜாதி மறுப்புத் திருமணமம் கூட.

கூடுதலாக  நம் திராவிட இன மாணவர்களையும் காதலித்த இவர், அவர்களுக்கு கல்வி அறிவு கிட்டும்வகையில், தம் கல்லூரி நாள்களிலேயே இசைக்கச்சேரி ஒன்றை நடத்தி, அதில் வசூலான நிதியின்மூலம் புத்தக வங்கி தொடங்கி சேவை புரிந்திருக்கிறார்.

1996ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் ஃபெலோஷிப் விருதும், பாரதிய தலித் சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவர், காரல்மார்க்சின் கம்யூனிசக் கொள்கையிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.

தமிழ்மண்ணில் முத்தமிழ்போல் முகிழ்த்த அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை   மக்களுக்கு எடுத்துச்சென்று அவர்களை பண்படுத்தும் வகையில் அ.பெ.க. பன்னாட்டு நிறுவனம் ஒன்றை கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கி இன்றும நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சங்கீத மும்மூர்த்திகள் போன்று வாழ்வியல் மும்மூரத்திகளான அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் ஆறாயிரம் நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் உருவாகியிருக்கிறார்.

படித்துறைப் போல, மக்கள் தமது அக அழுக்கு போக குளிக்கும் படிப்புத்துறையாக அந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.

காந்தியின் தீண்டாமை, மகனுக்கு மடல், ஆஷ் படு கொலை, புனைவும் வரைவும், அம்பேத்கர் இந்துமயப்படுத்த முடியாத தத்துவம், மேட்டுக்குடி தலித்துகளுக்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

டாக்டர் நா.ஜெயராமன் அவர்களின் இத்தகைய சமூகப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு 2019ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பிக் கப்படுகிறது.

திருமுருகன் காந்தி

2009இல் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பு வேலையை உலகிற்கு உரக்கச் சொல்லியவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முக்கியமானவர் ஆவார்.

அய்.டி., ஆங்கிலம் என எனக்கென்னவென்று இருந்த ஏராளமான இளைஞர்களின் மத்தியில் ஈழத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர். தமிழகத்தில் மீத்தேன் போராட்டம், நெடுவாசல், WTO ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் என இயங்கி வருபவர் திருமுருகன்காந்தி. உலக வல்லரசுகள் அரங்கேற்றிய இன அழிப்பைக் கண்டித்தும், ஈழத்திற்கு ஆதரவாகவும் ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தின் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

"ஏறினால் ரெயில்; இறங்கினால் ஜெயில்" என்ற விதி செய்து, ஆதிக்கவர்க்கம் தமது எதிர்ப்பாளர்களை முடக்க முயன்று வருகிற காலம் இது!

இந்த விதியால் வதைக்கப்படும் முக்கியமான போராளி தோழர் திருமுருகன் காந்தி.

ஈழத்தமிழர் இறுதிப்போரில், குரூரமாகவும், கொடூரமாக வும் கொன்று முடிக்கப்பட்ட தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் - போராளிகளின் நினைவு நாளான மே 29, 2017 அன்று அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவித்ததற்காக, இவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது.

பல்வேறு தரப்பினரும், அதன் உச்சகட்டமாக அய்.நா. மனித உரிமை மன்றமே கண்டித்ததையடுத்து 4 மாதங்கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து மே 17 இயக்கம் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார் தோழர் திருமுருகன் காந்தி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதை குறித்து அய்.நா. 38ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் பேசிவிட்டுத் திரும்பிய தோழர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து, கைது செய்த காவல்துறையினர் பெங்களூருவிலி ருந்து சென்னைக்குக் கொண்டு வந்து நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். "கைது நடவடிக்கை தவறானது, உடனே அவரை விடுதலை செய்யுங்கள்" என்று நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வெளியில் வந்த இவரை அங்கேயே காரணம் சொல்லாமல் மீண்டும் கைது செய்து வழக்குத் தொடுத்தது காவல்துறை.

2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இன அழிப்பு நடந்தபோது களமிறங்கிய இளைய தலைமுறை போராளிகளில் தெரிந்த சிந்தனையும், தொடர் செயல்பாடுகளும் கொண்டவர்களுள் முக்கியமானவர் திருமுருகன் காந்தி!

2018ஆம் ஆண்டு பெரியாரியல் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணிக்கு முக்கிய பணியாற்றிவர்களில் முக்கியமானவர் திருமுகன் காந்தி!

2019ஆம் ஆண்டும் பெரியாரியக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதில் குறிப்பிடத் தக்கவர் திருமுருகன் காந்தி!

இப்படியாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், இதுவரை அவர்மீது 39 வழக்குகள் போட்டு ஜெயில் ஜெயிலாக அலைக்கழித்து வருகின்றது தமிழகக் காவல்துறை.

"குதிரை கீழே தள்ளியது போதாதென்று, குழியும் பறித்தது போல", கடந்த 2 ஆண்டுகளாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களை "தொடர் குற்றவாளிகள் பட்டியலில்" வைத்திருக் கிறது தமிழகக் காவல்துறை. ஆனால் திராவிடர் கழகம் அவரை, "தொடர் போராளிகள் பட்டியலில்" வைத்து, 2019 ஆம் ஆண்டுக்காள "பெரியர் விருது" வழங்கி பெருமைப் படுத்துகிறது.

‘‘எங்களது அறிவு ஆயுதம் தந்தை பெரியாரே!'' பெரியார் திடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

நமது சிறப்புச் செய்தியாளர்

பிஜேபி அதிகாரப்பூர்வமாகவே

தமது அநாகரிகப் புத்தியைக் காட்டிக் கொண்டு விட்டது

தந்தை பெரியார் நினைவுநாளில் அவரைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு பிஜேபி தனது அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற இழிவுகளை, எதிர்ப்புகளை எல்லாம் கடந்து வந்தவர்தான் தந்தை பெரியார். அதே நேரத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், அதுவும் தந்தை பெரியாரின் நினைவுநாளில் அநாகரிகமாகப் பதிவு செய்ததன் மூலம் அதிகாரப்பூர்வமாகவே தனது அநாகரிகப் புத்தியை,  பண்பாட்டை தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டது.... இதுவும் ஒரு வகையில் நல்லதே!

இதுகுறித்து திராவிடர் கழகம் கருத்து சொல்வதை விட கட்சிகளைக் கடந்து பிஜேபியின் கூட்டணி கட்சிகளே  கண்டிப்பதிலிருந்தே பிஜேபியும், சங் பரிவார்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது பெரியார் நாடா? என்று கேள்வி எழுப்பியவர்கள் - இதற்குப் பிறகாவது “ஆம் இது பெரியார் நாடே!” என்றே நாணயமாக ஏற்றுத் தீரவேண்டிய நிலையே!

கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நேற்று (24.12.2019) நடைபெற்ற தந்தை பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள், இந்தக் காலகட்டத்தில் தமிழ் மண்ணின் போர்க் குரலாக - பார்ப்பனீய, வருணாசிரம - சனாதன - மனுதர்மப் போக்கை முற்றிலும் முறியடிக்க மூண்ட பெருந்தீயாக - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மண்ணில் ஒட்டுமொத்த உரிமைக் குரலாக வெடித்துக் கிளம்பியது என்றால், அது மிகையல்ல. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தந்தை பெரியாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் முத்தாய்ப்பாக அமைந்தன.

முற்பகல் அமைதிப் பேரணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலைகள், நினைவிடத்தில் மலர்வளையம், தொலைக்காட்சியில் பேட்டிகள், விவாதங்கள் என்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளன. போதும் போதாதற்கு, பாரதீய ஜனதா கட்சி தனது அதிகாரப் பூர்வமான வலைதளத்தில் தந்தை பெரியார்பற்றி தெரிவித்த கருத்தினை எதிர்த்து தமிழ்நாடே எரிமலையாக வெடித்துச் சிதறியது.

தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. கூட பா.ஜ.க.வைக் கடுமையாகக் கண்டித்த நிலையில், பி.ஜே.பி. தனது பதிவை விலக்கிக் கொண்டு, ஓடிப்போய்ப் பதுங்கிவிட்டது.

தமிழ்நாடு பெரியார் மண்ணா? என்று ஏகடியம் பேசிய பா.ஜ.க.,  சிறுபிள்ளைத்தனமாக செய்த தனது பதிவு பூமாரங்காக திருப்பி அடித்து, பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தை கதி கலங்கச் செய்துவிட்டது.

பெரியார் திடலில் நினைவு நாள் நிகழ்ச்சி

நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் ‘‘பொதுவுடைமைச் சிந்தனைகள்'' மூன்று தொகுப்பாக வெளிவந்துள்ளது முக்கியமானதாகும்.

மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையினை இந்தியா விலேயே முதன்முதலாக மொழி பெயர்த்து தமிழில் ‘குடிஅரசு' இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே! (1931, அக்டோபர்).

இதற்கு இரண்டு மாதங்கள் கழித்துதான் தந்தை பெரியார் சோவியத்துப் பயணத்தை மேற்கொண்டார். ருசியாவின் அய்ந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெயர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிட்டார்.

குழந்தைகளுக்கு லெனின் என்றும், ஸ்டாலின் என்றும், மாஸ்கோ என்றும் பெயரிட்டார் என்கிற தகவல்களை எல்லாம் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் உரை

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஆன பிறகும், அவரின் இலட்சியம், கொள்கைகள் உயிர்த் துடிப்புடன்தான் இருக்கின்றன. மனிதர்கள் சாகலாம் - இலட்சியங்கள் நிலைத்து நிற்கும். அதனால்தான் தந்தை பெரியார் ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம் - திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா.

இந்நிகழ்ச்சியில் முக்கியமாக மூவருக்குப் பெரியார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் பெரும்பாலான இடங்களில் விருதுகள் ஏற்பாடு செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

ஆனால், திராவிடர் கழகத்தில், பெரியார் திடலில் விருதுகள் வழங்குவதற்கு அடிப்படைக் கோட்பாடுகள் உண்டு.

விருது பெறுகிறவர்களுக்கே நாங்கள் வெளியிட்ட பிறகே தெரிய வரும்.

இங்கே பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்குப் பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்தாலும், படித்தாலும் அமெரிக்காவில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் பணியில் முன்னணியில் இருந்து வருகிறார்.

என்னைப் பொருத்தவரையில் அவர் செய்துள்ள உதவி சாதாரணமானதல்ல; 1991 ஆம் ஆண்டில் எனக்கு முதன்முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சை என்பது இங்கு எளிதானதாக இருக்கவில்லை.

அதனால், அமெரிக்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில் அருமைச் சகோதரர் டாக்டர் இளங்கோவன் அவர்கள் செய்திருக்கிற உதவி சாதாரணமானதல்ல.

அன்றைக்கு  அவர் அந்தப் பேருதவியைச் செய்யவில்லையென்றால், நான் இன்று இல்லை என்பதை நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 28 ஆண்டுகளாக இயக்கப் பணியைத் தொடர முடிகிறது.

நூல்களை தொகுக்கும் பணியை சிறப்பாக செய்த பாவலர் வீரமணிக்கு தமிழர் தலைவர் பயனாடை போர்த்தி பாராட்டு.

சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் - டாக்டர் சரோஜா இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

எனக்கென்று தனி வாழ்க்கை ஏதுமில்லை. தந்தை பெரியார் பணியை செய்வதே எனது ஒரே பணி - முழுப் பணியே!

டாக்டர் இளங்கோவன் அவர்களைப் பொருத்தவரை பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவர் செய்துவரும் பெரியார் கொள்கைப் பணியைப் பாராட்டித்தான் பெரியார் விருது அளிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஜெயராமன்

அதுபோலவே புதுக்கோட்டை டாக்டர் ஜெயராமன் அவர்கள் சமூக ஆர்வலராக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,  மார்க்ஸ் சிந்தனைகளைப் பரப்புநராகப் பணியாற்றி வருகிறார். அத்தகையவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு பெரியார் விருது அளிக்கப்பட்டது.

மே 17 - திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி என்றால், மே 17 இயக்கம் மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

கோடைக் காலத்தில் தந்தை பெரியார் ஈரோட்டில் மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் நடத்துவார். அதில் தயாரிக்கப்பட்டவர்கள் பிரச்சாரத்துக்கு வெளியூர்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

1945-46 களில் புலவர் ஆறுமுகம் அந்தப் பயிற்சிப் பள்ளியில் தயாரிக்கப்பட்டவர். அவரோடு 15 வயது சிறுவனாக இணைந்து பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவரின் பேரன்தான் நமது திருமுருகன் காந்தியாவார். அவர் தாத்தா என்றால், எனக்கும் திருமுருகன் காந்தி பேரன்தான். (பலத்த கரவொலி).

எங்களுக்கு மட்டுமல்ல - தந்தை பெரியாருக்கும் அவர் பேரன்தான். குருதி ரீதியான உறவைவிட, கொள்கை ரீதியான உறவுதான் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில், திருமுருகன் காந்தி நமது கொள்கை உறவுக்காரரே!

அவர் ஏதோ ஒரு தனி மனிதர் என்று யாரும் கருதவேண்டாம். அவருக்குப் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருக்கிறோம். (பலத்த கைதட்டல்).

திருமுருகன் காந்தி என்ன குட்கா விற்றாரா? கள்ளக்கடத்தல் செய்தாரா? என்ன குற்றம் செய்தார் - சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஏறினால் ரயில் - இறங்கினால் ஜெயில் என்பது எங்கள் பொதுவாழ்க்கை. வெளியில் இருந்தால் பொதுத் தொண்டில் ஈடுபடும் நாங்கள் - குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஜெயிலுக்குப் போனால், நேரா நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும். சாப்பிடாவிட்டால் அதிகாரிகள் விட மாட்டார்கள்.

திருமுருகன் காந்தி அய்.நா. மன்றம்வரை சென்று வந்தவர். அவரின் பெரியார்ப் பணிக்குத் துணையாக இருப்போம். அதனால் எங்கள்மீது வழக்குப் பாய்ந்தால் அதையும் ஏற்கத் தயார்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இராமன், கிருஷ்ணன் சமாச்சாரங்கள் பலிக்காது. இராமனை, தந்தை பெரியார்போல் தோலுரித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வடக்கே வேண்டுமானால் பி.ஜே.பி. வகையறாக்களின் ஜம்பம் பலிக்கலாம். இப்பொழுது வடக்கேயும் தந்தை பெரியார் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

பெரியார் ஓர் அறிவாயுதம். பெரியார் அறிவு விருந்தாகவும் இருந்தார்; இப்பொழுது நோய்த் தீர்க்கும் மாமருந்தாகவும் ஆகியிருக்கிறார்.

நாங்கள் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள். எங்களிடம் இருக்கும் அறிவாயுதம் தந்தை பெரியாரே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (மற்ற செய்திகள் 3 ஆம் பக்கம்)

தோழர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த நிலையில், அவர் நினைவைப் போற்றும் வகையில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அன்றைய தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசனும் பங்கேற்றார்.

அதில் பேசிய நான், பி.ஜே.பி.பற்றியும், அரசியல் ரீதியாக சில சொற்களைப் பேசினேன். யாரையும் கேலி செய்யவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

எனக்குப் பின் பேசிய தமிழிசை மிகக் கோபமாகப் பேசினார். சிவப்புக் கொடி எங்கும் பறக்கக் கூடாது என்றார்.

இறுதியாகப் பேசிய நமது ஆசிரியர் அவர்கள், ‘‘எனது அன்பு மகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன் (தமிழிசையை எப்பொழுதும் அப்படித்தான் குறிப்பிடுவார் ஆசிரியர்). ‘‘திராவிடர் கழகக் கொடியின் நடுவில் இருப்பது சிவப்பு. நாட்டில் புரட்சி வெடித்து மெல்ல மெல்ல கருப்பு மறைந்து சிவப்பு மலரும்'' என்று குறிப்பிட்டார்.

இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள். இன்று இந்திய அளவில் முதனிலை செய்தியாக (பிணீstணீநீ) இருப்பது தந்தை பெரியாரே!

யாரையோ நினைத்து நான் இதைச் சொல்ல வில்லை. பெரியாரைச் சீண்டிப் பார்க்கிறார்கள்; அது எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும்.

தந்தை பெரியாரைப் புறந்தள்ளி இங்கு எவரும் கட்சி நடத்த முடியாது - வெற்றி பெறவும் முடியாது. (பலத்த கரவொலி).

தந்தை பெரியார்பற்றி பி.ஜே.பி.யின் தரக் குறைவான பதிவினை  அதன் கூட்டணிக் கட்சிகளே கண்டித்துள்ளன. அவர்களுக்கு நன்றி! கண்டித்ததோடு மட்டும் போதாது - அந்தக் கூட்டணியிலிருந்தும் வெளியேறவும்வேண்டும்.

தந்தை பெரியார் கருத்தும், மார்க்ஸ் கருத்தும் அழிக்கப்படவே முடியாதவை. காரணம், அவை மக்களைச் சார்ந்தவை.

தோழர் திருமுருகன் காந்திக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ‘பெரியார் விருது' அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.  திருமுருகன் காந்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? எந்தக் கொள்கைப் பலம் இருக்கிறது? என்பதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ளட்டும்!

பெரியார் சிலைக்குத் திருமுருகன் காந்தி மாலை அணிவித்தது கூடக் குற்றமாம் - அதன்மீதும் ஒரு வழக்கு. இப்படி 40 வழக்குகளைப் போட்டிருக்கிறது தமிழக அரசு. அவர் தனி மனிதரல்ல - அவருக்குப் பின்பலமாக நாங்கள் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் தோழர் முத்தரசன்.

"பெரியாரே காரணம்"

பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன்

மேனாள் தட்டக் குழுத் துணைத் தலைவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது: இந்திய சூழலில் ஜாதிக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவுடைமை மலருவதற்குப் பெரும் தடையாக உள்ளது. இதனை தந்தை பெரியார் முன்னெடுத்தார்.

ஒரு கட்டத்தில் இதில் சற்றுத் தயக்கம் காட்டியது கம்யூனிஸ்டு கட்சி - இப்பொழுது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது நல்ல திருப்பம். தந்தை பெரியார் மறைந்தபோது, சென்னை பல்கலைக் கழகத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தபோது, எஸ்.எஃப்.ஏ. தோழர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுண்டு.

இப்பொழுதெல்லாம்  அதில் மாற்றம் காண முடிகிறது. தமிழ்நாட்டில் பிற்போக்குச் சக்திகள் காலூன்ற முடியாமைக்குக் காரணம், தந்தை பெரியார் கருத்துகள் இங்கு ஆழமாகப் பதிந்து இருப்பதுதான் என்றும் குறிப்பிட்டார் பேராசிரியர் நாகநாதன்.

 - விடுதலை நாளேடு 25 12 19