செவ்வாய், 7 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம் - 38

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி)

தமிழ்த்துறைத் தலைவர், கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இரு நாகரிகக் கலப்பு

தமிழர் வாழ்வில் பிற துறைகளைக் காட்டிலும் சமயம், மெய்ப்பொருளியல் ஆகியவற்றிலேயே வடமொழியின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகின்றது. தொல்காப்பியனார் காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே தமிழினத்தோடு ஆரிய இனம் கலக்கத் தொடங்கிற்று. அக்கலப்பு மொழியிலும்கூடப் பரவத் தொடங்கித் தவிர்க்க இயலாத நிலையினை அடைந்தது. அதனா லேயே வடசொற்களை வட எழுத்துக்களை நீக்கித் தமிழெழுத்துக்களைப் பயன்படுத்தி ஆளலாம் என்று தொல்காப்பியனார் இலக்கணம் வகுத்துள்ளார்.(1) இவ்விரு நாகரிகங்களும் சில நூற்றாண்டுகள் ஒருசேர வழக்கத்திலிருந்து பின்பு மெல்ல மெல்லக் கலந்து தம்முள் சிலவற்றை இழந்தும் ஏற்றும் ஒரு புதுநெறி யாகவும் பொதுநெறியாகவும் உருவெடுத்தன. இம் மாற்றத்தின் தாக்கம், தமிழர்களின் அக-புற வாழ்க்கை களில் இருத்தலைவிடச் சமய மெய்ப்பொருளியல் வாழ்க்கையிலேயே மிகுந்த அளவில் இருத்தல் காணக்கிடக்கிறது.

ஆரியத் தெய்வங்கள்

இரு நாகரிகக் கலப்பின் விளைவாக, ஆரியர் வழிபட்ட தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம் பெறலாயின. பண்டைத் தமிழ்ப் பழங்குடி மக்களில் முல்லை நில மக்கள் மாயோனையும், குறிஞ்சிநில மக்கள் சேயோனையும், மருத நில மக்கள் இந்திரனையும், நெய்தல் நில மக்கள் வருணனையும் வணங்கினர் என்கிறது தொல்காப்பியம்.(2) இக்கடவுளர்களுள் மாயோனும், சேயோனுமே தமிழர்களால் வழிபடப்பட்ட தமிழ்க் கடவுளர்கள். இந்திரனும், வருணனும் ஆரியக் கடவுளர்கள் ஆவர். இந்திரன், வருணன்பற்றி வேறு பட்ட ஊகங்களை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.(3) எனினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரத்தைத் துணையாகக்கொண்டு ஆராய்ந் தால், வேந்தன் என்பது வேதங்களில் இடம் பெற்றுள்ள இந்திரனே என்பது வெளிச்சமாகும். பூம்புகாரில் இந்திரனுக்குக் கோட்டம் அமைத்திருந்ததனையும் இந்திர விழா பல நாட்டினரும் வந்து காணும் பெரு விழாவாகக் கொண்டாடப் பெற்றதனையும் சிலம்பும் மணிமேகலையும் தெரிவிக்கின்றன.(4) வேந்தன் ஆரியத் தெய்வம் என்று விளங்குவதால் வருணனையும் ஆரியத் தெய்வம் என்று கொள்வது பிழையாகாது. குறிஞ்சி நில மக்களால் வழிபடப்பட்ட மாயோன், சேயோன் ஆகியவர்களோடு முறையே ஆரியர்தம் கடவுளராகிய விட்டுணுவும் சுப்பிரமணியனும் ஒன் றாக்கப்பட்டனர். பண்டைத் தமிழரிடையே காணப் பெறாததும் வேதகாலத் தொடக்கத்தில் உருத்திரனாக முகிழ்த்துக் காலப்போக்கில் சிவனாக உருவெடுத்தது மாகிய சிவவழிபாடு தமிழர்களிடையே வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவ்வாறு தமிழ்க் கடவுளரோடு ஆரியக் கடவுளர்கள் ஒன்றுபடுத்தப்பட்டு ஆரியக் கூறுகள் மேலோங்கிய தெய்வங்கள் தமிழர் சமயத்தில் இடம்பெற்றன.

இறை வழிபாட்டில் ஆரியக் கூறுகள்

இறை வழிபாட்டிலும் ஆரியர்களின் வழிபாட்டு முறை இடம் பெறலாயிற்று. தமிழர் இறை வழிபாட்டில் மலர் தூவிப் போற்றுதல், நெல் தூவுதல், மணியடித்தல், இசைக்கருவிகள் முழங்குதல், கொம்பு ஊதுதல் முதலிய நிகழ்ச்சிகள் இருந்து உள்ளன. இதனை,

"யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு

நாழி கொண்ட நறுவீ முல்லை

அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது"

(முல்லைப் பாட்டு - 3-10)

"நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி

இமிழிசை அருவியொடு இன்னியங் கறங்க

உருவப் பல்பூத் தூஉய்"

(திருமுருகாற்றுப்படை 239-241)

"கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி"

(திருமுருகாற்றுப்படை-246)

என்னும் சங்கச் செய்யுட் பகுதிகள் தெரிவிக்கின்றன. தெய்வங்களுக்கு வேள்வி செய்யும் பழக்கமும், நெருப்பில் தெய்வத்தை வழிபடுதலும் தமிழர்க்குரிய வழிபாட்டு முறைகள் அல்ல; அவை ஆரியர்களால் தமிழரிடைப் புகுந்தவை. இவ்வழிபாட்டு மாற்றங்கள் சங்க காலத்துக்கு முன்பே தமிழர் வாழ்வில் நிகழ்ந்தன. சங்க கால மன்னர்களே இவ்வாறான வழிபாட்டு முறைகளை மேற்கொண்டு உள்ளனர். பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, சோழன் இராய சூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகியோர் பெயர்களே அவர்கள் வேள்விகள் பல எடுத்தமையைத் தெரிவிக் கின்றன.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

(குறள்-259)

என்னும் திருக்குறளும் வேள்விகள் பெருவழக்காக இருந்ததனைச் சுட்டுவது அறியலாம்.

இறைவன் முன்னே நின்று மந்திரங்களைச் சொல்லும் வழக்கமும் ஆரியர் வழிபாட்டு முறையே என்பதனைத் திருமுருகாற்றுப்படை கொண்டு உணரலாம். முருகன்பால் புலவன் ஒருவன் அவன் திருப்பெயர்களை அடுத்தடுத்துச் சொல்லி வழிபடும் நிலையினைப் பழமுதிர்சோலையில் காண்கிறோம். ஆனால், திருஏரகத்தில் வழிபாடு செய்யும் அந்தணர்கள் முருகனைக் குறித்த மந்திரத்தை அவன் திருமுற்றத்தில் முணுமுணுத்து நிற்பதனைப் பார்க்கிறோம்.

சமயச் சான்றோர்களின் மொழிக் கொள்கை

நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல இடங் களுக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள இறைவனை யும் இறைவியையும் தேமதூரத் தமிழில் நாவினிக்கப் பாடிப் பரவினர். அவர்கள் தமிழையும் வடமொழி யையும் ஒப்ப மதித்தவர்கள். அவர்கள் பாடிய இறை வனைக் குறித்த புராணச் செய்திகள் பல வடமொழி நூல்களில் இருந்தமையும், அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து பாடியமையும் இவ்வாறு இரு மொழி யையும் மதித்துப் போற்றும் போக்கினை அவர்களுக்கு அளித்தன.

இதனாலேயே,

"ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" (5)

என்று திருநாவுக்கரசரும்,

"அந்தமிழ் இன்பப் பாவினை

அவ்வட மொழியை" (6)

என்று குலசேகரப் பெருமாளும் இறைவனைப் பாடுகின்றனர். இவ்விரு மொழிகளையும் இறைவன் திருவருள் அரண்மனைக் கதவுகளைத் திறக்கும் பொற் சாவிகளாகக் கருதியவர் சேக்கிழார். ஆதலால் மறையினைப் பாடும் திருவாயினை உடைய சிவபெருமான் நம்பி ஆரூரரிடம் தன்னைத் தமிழால் பாடி வழிபடுமாறு பணிப்பதாகத் தெரிவிக்கிறார்.

"மற்றுநீ வன்மை பேசி

வன்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பின்

பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே ஆகும்;

ஆதலால் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார்

தூமறை பாடும் வாயார் (7)

என்பது பெரிய புராணம்.

இவ்வாறு சமயம் வளர்த்த சான்றோர்களால் இரு மொழிகளும் ஒத்த நிலையில் - ஒரு நிலையில் வைத்துப் போற்றப்பட்ட போதிலும் தமிழர்களின் செல்வாக்குத் தாழ்ந்து வடமொழியாளரின் செல்வாக்குத் திருக்கோயில்களில் மேலோங்கிய காலத்தில் தமிழின் நிலை தாழ்ந்தது. திருநாவுக்கரசர் போன்ற பெருமக்கள் திரு முற்றத்தில் நின்று செம்மேனியம்மானைக் கண்குளிரக் கண்டு கரைந்து உருகிப் போற்றிநின்ற தில்லையில் திருமுற்றத்தில் தமிழுக்கு இடமில்லாத நிலை உருவாயிற்று. வடமொழியில் இறைவனைப் போற்றி மலர் வணக்கம் செய்யும் வழிபாட்டு முறை நிலைகொண்டது. திருக்கோயில்களைச் சூழ்ந்திருந்த தமிழ் மணம் மெல்ல மெல்ல அகன்றது.

தமிழ்ப் பெயர் மாற்றங்கள்

திருமுறை ஆசிரியர்களும், ஆழ்வார்களும் தங்கள் பாடல்களில் திருத்தலங்களின் அருமையான தமிழ்ப் பெயர்களையும், இறைவன் இறைவியர்க்கு வழங்கிய தமிழ்ப் பெயர்களையும் குறித்துச் சென்றுள்ளனர். அவையெல்லாம் வடமொழியாக்கப்பட்டன. அவ்வட மொழிப் பெயர்கள் வடமொழிப் பற்று மிக்கவர்களால் பெருவழக்காக்கப்பட்டன. காலப்போக்கில் தமிழ்ப் பெயர்கள் ஏட்டளவில் நிற்க வடமொழிப் பெயர்கள் வழக்கில் நிற்கலாயின.

திருத்தலப் பெயர்கள் வடமொழியாக்கப்பட்ட மைக்குச் சான்றுகள் :

தமிழ்ப் பெயர்   வடமொழிப் பெயர்

ஆய்ப்பாடி -   கோகுலம்

குரங்காடுதுறை  -  கபிஸ்தலம்

குடமூக்கு  -  கும்பகோணம்

சிங்கவேள்குன்றம் -  அகோபிலம்

திருவெஃகா   -  யதோத்காரி சந்நிதி

(சொன்னவண்ணம் செய்த

பெருமாள் திருமுற்றம்

பெரும்புலியூர்    -    வியாக்ரபுரி

மயிலாடுதுறை   -   மாயூரம்

மறைக்காடு    -  வேதாரண்யம்

முதுகுன்றம் (பழமலை)-   விருத்தாசலம்

வேங்கடம்   -   வேங்கடாசலம்

இவ்வாறே இறைவன் பெயர்களும், இறைவி பெயர்களும் வடமொழியாக்கப்பட்டன.

தொடரும்

- விடுதலை நாளேடு 2 .1 .20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக