வெள்ளி, 24 ஜனவரி, 2020

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை - 43

மதுரை ஆதீனகர்த்தர் லோககுரு திருப்பெருந்திரு மகாசந்நிதானம் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

தமிழர் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் அருணகிரிநாத திருஞான சம்பந்த தேசிக பர மாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய உரை வருமாறு:

 

உலகத்தில் உள்ள மொழிகள் இரண்டாயிரத்திற்கும் மேலாகப் புதிது புதிதாகத் தோன்றிவருவதை மொழி வரலாற்றாசிரியர்கள் ஆய்வரங்கங்களில் எடுத்துரைத்து வருகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு கருத்தில் உடன்பாடு உள்ளது. அதுவே முதன்முதலில் மனித இனம் பயின்ற இலெமூரியாக் கண்டத்தில் கடல்கோள் அழிவிலிருந்து விடுபட்டுத் தமிழகத்தில் இன்றும் விளங்கிவரும் வழக்கத்தில் இருந்துவரும் மொழி என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்கள்.

அந்த மொழியே, தொன்மை மொழி, முதன் மொழி, தென்மொழி, உலகத்தின் தாய்மொழி-தமிழ்மொழி என்று போற்றியுரைக்கப்படும் மொழி ஆகும்.

பிற இடங்களில் மனித நாகரிகம் தோன்றி மொழி வழக்கம் இருந்ததை ஆய்ந்திட்ட வல்லுநர்கள் வியக்கின்ற செய்தி ஒன்று உண்டு. மொழி வழக்கம் உருப்பெற்றிட இலக்கணம், இலக்கியம் வகுக்கப்படல் வேண்டும். முதலில், ஆனால், மற்ற சீன, கிரேக்க, அசிரிய நாகரிக வரலாற்றில் அவ்வாறு இலக்கணம், இலக்கியங்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் பிறக்கு முன்னரே, தமிழர்கள் அகத்தியம், தொல்காப்பியம் என்ற அரிய இலக்கண இலக்கியக் கருவூலங்கள் படைத்திருந்தனர்.

திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் ஒருவரைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். காலம் வழி ஆராய்ச்சியில் நமக்கு அண்மையில் இருக்கின்றவர் இந்தத் தெய்வப் புலவர்தாம்.

தொல்காப்பியத்திற்கு உரை வழங்கியவர்களிலும், திருக்குறள், நன்னூல் மற்றும் சங்க கால இலக்கியங்கள் முதலான படைப்புகளை ஆராய்ந்தவர்களில் சிலர் அவற்றிற்கு வடமொழிச் சாயத்தினை ஏற்றி இடைச்செருகல் வேலைகளைச் செய்தபோதுதான், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கும் மூத்த தமிழ்க் குடியினர் வஞ்சப் புகழ்ச்சி, பொய்யுரைத்தல், நன்றி மறத்தல், கயமை, களவு, பிளவு, மனக்கசப்பு, அழுக்காறு, அடுத்தவர் வாழப்பொறாமை ஆகிய தீய பண்புகளை - அவற்றின் மொத்த உருவமான ஆரிய இனத்தார்களிடம் அடையாளங் கண்டுகொள்ளத் தொடங்கினர்.

ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியே உருவாகக் கொண்டு தமிழர்களைப் பிரித்தாளும் முயற்சியில் முன்னேறி இன்று வரையிலும் இன் தமிழர்களின் இதய உணர்வுகளைச் சிதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் கட்டமாக தென்மொழி, வடமொழி என இரு வேறுமொழி, நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைத்தரம், இனம் அடிப்படையில் பிறக்கலாயின. சமய உணர்வுகள் சமற்கிருதம் என்னும் அந்த வடமொழியோடு பிறந்தன என்பதை மற்றவர்களும் நம்பினர். தென்புலத்தார் கடன்களைப் புரோகிதர்களே குத்தகை எடுத்துக்கொண்டதைச் சமய வரலாறு காட்டும்.

தூய தெளிந்த நீரைப் பாசம் மூடிக் கவர்ந்தாலும், சிறிது விலக்கினால் நீர் தெளிந்த நீர்தான் - பாசம் அழுக்குப் பாசம்தான் என்று தெரியவருவது போலத் தமிழ் செந்தமிழாகவே தனித்து நிற்கும் - ஆரியம் அழுக்கு மொழியாக அருவறுக்கப்படும் என்று காலத்தால் உணரமுடிந்தது.

புலவர்கள் உச்சிமேற்கொள்ளும் நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்களும் தமிழ் மொழியைச் சிதைக்கும் சதிக்கு உடன்பட்டார்களோ என்ற அய்யப்பாடு எழுந்தது. தந்தை பெரியார் இதை அஞ்சாமல் எடுத்துச் சொன்ன பெருந்தகை ஆவார். ஆரிய மாயை என்ற அழுக்குப் பாசத்தை அறவே அகற்றப் பாடுபட்டுச் சிறப்பெய்திய தமிழ்ப் பெரியார்களுள் முதலாக நின்றவர் மறைமலை அடிகள், அருட்பிரகாச வள்ளலார் அதற்கு முன்னரே மணிப்பிரவாள நடை, அதற்கு முன்னரேயும் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்க முயற்சிகள் மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டியவர், அந்தப் பெருமைக்கு உரியவர் யார் என்று வரலாற்றின் அடிச்சுவட்டில் பின்னோக்கிச் சென்றால், வடமொழிக் கொடுமைகளைக் களையெடுக்க வந்த ஒரு ஞானப் பெருமகனைப்பற்றி நன்கு அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அந்த ஞானப் பெருமகன் தமிழர் சமயமான சைவ சமயத்தினைப் பரப்பிட வந்தவர். சீர்காழியிலே ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு தோன்றியவர். தமிழர்கள் வழிபட்ட முருகக் கடவுளின் மறு தோற்றமே அருள் திருஞான சம்பந்தராவார். தமிழ் ஞானசம்பந்தப் பெருமான் என்று அடியவர்களால் வழிபடப் பெற்ற அந்த ஞானவள்ளல் தமிழ் மாலைகள்-திருமுறைகள்-தமிழில் மட்டுமே சூட்டி இறைவனை மகிழ்வித்தார். பிறப்பில் அந்தணராக இருந்த அவர் தன்னைத் தமிழோடு இணைத்து இறை மொழி-மறைமொழி தமிழே; சமற்கிருதம் அல்ல என்று நிலைநாட்ட நாற்பத்து அய்ந்து இடங்களில் தன்னைக்குறித்து தமிழ்ஞான சம்பந்தர் என்று எடுத்து இயம்பி, நாளும் நற்றமிழில் நமசிவாய நாதனின் திருநாமத்தைப் பாட வந்ததாக , தெய்வத் தமிழிசை ஓதுவதற்கு வந்ததாகக் கூறிக் கொள்ளுகின்றார். இதை அவரது பக்திரசமிக்க பாடல்,

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை மெய்நெறிக் குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

நாதன் நாமம் நமசி வாயமே

என்று தமிழ் முழக்கம் செய்கிறது.

வேதங்கள் நான்கு. ஆனால், அவை கூறும் மெய்ப்பொருளியல் உண்மை, தமிழில் திருவைந் தெழுத்தாகத் துதிக்கப் பெறுகின்ற நமசிவாய மந்திரமே. அன்பு செலுத்தி இறையருளால் ஆட்கொள்ளப் பெறவல்ல தகுதியை ஆரிய (அரு) மறைகளையும்விடத் தமிழ்த் திருமுறைகள்தாம் மிகுதியாகக் கொண்டு இலங்குகின்றன. மெய்விதிர்ந்து கண்ணில் நீர்சுரக்க வைக்கும் அருட்தன்மை வாய்ந்தது என்பதை அவர் விளக்குகின்றார். வடமொழியில் வழங்கிவந்த நான்முகக் கடவுளால் உண்டாக்கப் பெற்ற தாகக் கூறப்பெறும் நான்கு வேதங்களையுங்கூடச் சாடியதில் அவர் அஞ்சியதில்லை என நாம் அறிய முடிகிறது.

அந்தணர்கள் சிறுவயதில் உபநயனம் செய்து அதன் மூலம் தமது மொழிவளர்ச்சியினை நிலைநாட்டச் செவியறிவு மூலமாகவோ, ஏட்டில் எழுதியோ கண்ணுங் கருத்துமாக இருந்துவருவது இன்றும் நாம் கண்கூடாக அறியக் கிடப்பதாகும். தமிழ்ஞான சம்பந்தர் அதை வெறுத்து வடமொழி ஆதிக்கம் பரவினால் ஆபத்து என்று கருதினார் என்பது மட்டுமன்று, அவர் வேத முறைப்படி உபநயனமும் செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அந்த ஞானப் பெருமகனுக்கே தீங்கு விளைவிக்க முனைந்த சமணர்களைத் தமிழ் மந்திரங்களால் வென்ற வரலாறு நாடறிந்த ஒன்று.

தமிழர்கள் முன்னேற்றத்திற்குத் தடைக் கற்களாக ஆரியப் பார்ப்பனர்கள் இன்று இருபதாம் நூற்றாண்டிலும் தீவிரமாக எதிர்ப்புக் காட்டிப் பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்கின்றார்கள். சைவமும் தமிழும் தழைத்தினிதோங்குக என்ற கோட்பாட்டில் அருள் ஞானம் சுரக்கும் மதுரை ஆதீன பீடத்தில் எழுந்தருளி ஆட்சி செய்யும் நம்மை இக்கால அரசியல்வாதிகளில் ஒருசிலர் ஆரிய மாயையில் சிக்குண்டு தமிழ்த் திருஞானசம்பந்தர் வழிவந்த சமய நெறிகளுக்குக் கேடு விளைவித்து வருகின்ற செய்தி யினையும் நாடறியும். ஏன் உலகமே இந்தப் போராட்டத்தைக் கண்டு கொண்டுதான்  இருக்கிறது. ஒளிவுமறைவின்றிச் சொல்லப்போனால் இலங்கைத் தமிழர்களுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட ஒரு சமயத் தலைவர் மதுரை ஆதீனகர்த்தர் என்று உண்மையிலேயே பரந்த மனப்பான்மையுடன் பாராட்டுவதைவிட்டு மவுனம் சாதித்து வருகிறார்களே இந்துமதத் தலைவர்கள்-அதற்குக் காரணம் யார்? சமயநெறிகள் சமற்கிருத வெறியாளர்களிடம் புகுந்தமையால் தானே?

தமிழர் இறவா வரம் பெற்றவர்கள் என்று அதற்காகத் தற்புகழ்ச்சி பாட வரவில்லை. ஆனால், ஏமாந்து எல்லாவற்றையும் இழந்துவிட்ட இனம் என்று தமிழைப் பழித்து ஒருவன் சொல்வானேயானால், அவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்று புரட்சிக் கவிஞர் பறையறைந்தாற் போல நாமும் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற கருத்தை மய்யமாகக் கொண்டுதான் சமய நெறிகள் சமற்கிருத மயமாக்கப்படலாமா என்று ஆய்வு செய்ய நேர்ந்துள்ளது.

தமிழர் இனமான உணர்வைக் கட்டிக் காத்து இத்தலைமுறையில் தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தைச் சாடியதை யார் மறக்க முடியும்? யார் மறுக்க முடியும்?

ஆரியக் கொடுமைகளைத் தகர்க்க முன்வராவிட்டாலும் அதைத் தடுக்கக் களம் புகுந்த திராவிடர் கழகத்தவர்களுக்குத் தடையாக இருக்காதவர்கள் என்று குரல் கொடுத்து 1947ஆம் ஆண்டிலேயே திருவண்ணாமலை உரையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ் மொழியில் திருவள்ளுவர், கபிலர், அவ்வை முதலான சிறந்த அறிவாளிகளாகிய அவர்களையும் ஆதி என்ற சூத்திரச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பனருக்கும் பிறந்தார்கள் என்று சொன்னார்கள். அத்தகைய ஆரியர்களின் கையாளான விபீஷணர்களாகவோ, அநுமார்களாகவோ ஆகிவிடாதீர்கள்.

(திருவண்ணாமலை, 1947)

தமிழச்சிகளைத் தாசிகளாகவும் அவர்களுக்குப் பிறந்த மக்களை தாசர்களாகவும் வருணித்த வர்ணாசிரமக் கோலம், தர்மம் என்ற ஆரியக் கொள்கையைச் சாயம் வெளுக்க வைத்தவர் தந்தை பெரியார். தமிழ் மொழியிலிருந்தே அனைத்தும் பிறமொழியினர் களவாடிக் கொண்டனர் என்று குற்றம் சாட்டினார். சாதாரணமாக அரிசி என்று நாம் கூறும் தமிழ்ச் சொல் கிரேக்க மொழியில் அரிசோ என்று கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிலேயே மாறியதை ஆதாரமாக எடுத்து, இதுபோன்று எண்ணற்ற சான்றுகளை நம்மால் தரமுடியும்.

தந்தை பெரியார் சொன்னதுபோல இனமானப் பணிகளால் தமிழனது உயர்வை நிலைநாட்டி வரும் நம்மைப் போன்ற தலைமைப் பொறுப்பாளர்கட்கு முட்டுக்கட்டை போடாமல் இருந்தாலே போதும் என்பதுதான் நமது கருத்தாகும். துணிந்த துணிபு என்று உறுதிகூறி நிறைவு செய்கிறோம்.

- விடுதலை நாளேடு 23 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக