வெள்ளி, 10 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(2) - 39

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

இப்பெயர் மாற்றங்கள் நிகழ்வதற்குத் திருக்கோயில் ஆட்சிமுறையில் ஆரியர்கள் இடம்பெற்றமையும், ஆட்சியாளர்கள் வடமொழியை மதித்து வளர்ப்பவர்களாக இருந்தமையும் முக்கியமான காரணங்கள் எனலாம். காலப்போக்கில் பாமர மக்களிடையே வடமொழியே தெய்வத்தோடு பேசுவதற்கு ஏற்ற மொழி என்னும் தவறான எண்ணம் எப்படியோ வேர்கொண்டது. அதனால், தங்களுக்குப் புரியாத மொழியில் திருக்கோயில்களில் வழிபாடு நிகழ்த்துவதைப் பெருமையாகக் கருதினர்.

தோத்திரமும் சாத்திரமும்

சமய நூல்களில் தோத்திரங்களாக இருப்பவற்றில் நல்ல தமிழ் காணப்படுகிறது. ஆனால், சமய முடிவுகளை விளக்கும் சாத்திரங்களில்தாம் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலையினைக் காணலாம். சைவத் திருமுறைகள் இனிய எளிய இசைத்தமிழில் அமைந்துள்ளன. ஆனால், சமய முடிவுகளைப் பேசும் பதினெண் சாத்திரங்களும் அவற்றின் உரைகளும் வடமொழிக் கலப்பு மிக்கன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் தேனாய்ப் பாலாய்த் தித்திக்கும் தமிழில் அமைந்திருக்க அதன் உரைகளும், விசிட்டாத்துவைத முடிவுகளைக் கூறும் சாத்திரங்களும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன.

தோத்திரங்கள் நல்ல தமிழிலும் சாத்திரங்கள் வடமொழி விரவிய நடையிலும் அமைந்துள்ளமைக்குக் காரணம் உண்டு. தோத்திரங்கள் இறைவனை நினைந்து கசிந்து உருகிய உருக்கத்தைத் தெரிவிப்பன; உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்துவன. அப்பாடல்கள் மற்றச் சமயத்தவர்களோடு வாதிடுவதற்கும் இறைவனின் தலைமைத் தன்மையினை நிலைநாட்டுவதற்கும் துணைக் கருவிகளாக அமையலாம். ஆனால், அவை அந்நோக்கத்திற்காக எழுந்தவை அல்ல, சாத்திர நூல்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவை. அவை தங்கள் சமய முடிவுகள் பிற சமய முடிவுகளினும் மேம்பட்டவை என அறிவார்ந்த திறத்தால் நிலைநாட்ட முயலுபவை.

தத்துவ உலகில் வடமொழியின் மேலாண்மை

இந்திய தத்துவ உலகின் பொதுமொழியாக வடமொழியே நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. அத்துவைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் தங்கள் கருத்துக்களை விளக்குவதற்கு முதல்நூலாகக் கொண்டது வடமொழியில் உள்ள வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்தைத்தான். இம் மூவகைக் கோட்பாட்டினரும் தங்கள் கருத்துக்கேற்பப் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் கண்டனர், அத்துவைதப் போக்கில் ஆதிசங்கரரும், துவைதப் போக்கில் மத்வரும், விசிட்டாத்துவைதப் போக்கில் இராமானுசரும் பேருரை வரைந்தனர். இம்மூன்று கோட்பாடுகளையும் மறுத்துச் சிவாகமங்களின் துணைகொண்டு பிறிதொரு கோட்பாட்டை வலியுறுத்துவது சைவ சித்தாந்தம். வேதக் கருத்துகளை விளக்குவதற்கு கருவிகளாக அமைந்துள்ள சிக்கை, வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் முதலியவற்றைப் பற்றிய நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. ஆதலின் சாத்திரக் கருத்துகளை விளக்கும்போது வடமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது எளிமையாகவும் வசதியாகவும் அமைந்தது.

மேலும், சாங்கியர், புத்தர், சமணர் முதலானோரின் சமயக் கருத்துகளும் வடமொழியில் இருந்தமையால் அவர்களோடு கட்சியாடவும் அது பொதுமொழியாக இருந்தது. இக்காரணங்களால் சாத்திரங்களில் வடசொற்கள் மிகுந்த அளவில் கலப்பது தவிர்க்க இயலாத ஒன்றாயிற்று. பொதுமக்களுக்கு அரிய சாத்திர உண்மைகளை விளக்கும்போது வடமொழி கலந்து சொல்லும் போக்கே மேற்கொள்ளப்பட்டது. நல்ல தமிழில் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விசிட்டாத்துவைத வெளிச்சத்தில் விளக்க முற்பட்ட உரையாசிரியர்கள் வடமொழி கலந்த நடையினை மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம் அவர்கள் வேதத்தில் முங்கிக் குளித்து மணலெடுத்தவர்களாய்த் திகழ்ந்தமையாகும். சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்த சிவஞான முனிவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறைபோயவராய் இருந்தபோதிலும், தூய தமிழில் உரை வரையாமல் வடசொற்களைத் தற்சம விதிப்படி தமிழாக்கி வழங்குவதனைக் காணலாம்.

சமயக் கணக்கர்கள் தங்கள் கொள்கைகளை நிலைநாட்டுவதில் முனைந்து நின்றார்களே தவிர, மொழித் தூய்மையில் கருத்துச் செலுத்தினார்கள் அல்லர். இதனால் இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்களையும் கூட விடுத்து வடசொற்களைப் பயன்படுத்தினர். இதனைக் கீழ்வரும் சான்றுகள் வலியுறுத்தும்.

தொடரும்....

- விடுதலை நாளேடு 7 1 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக