வியாழன், 2 ஜனவரி, 2020

‘பெரியார் விருது' - பெரியார் நூல்கள் வெளியீட்டு விழா (சென்னை, 24.12.2019)

சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் - டாக்டர் ஜெயராமன் - திருமுருகன் காந்தி ஆகியோருக்கு ‘பெரியார் விருதினை' திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார்.

தந்தை பெரியாரின் ‘‘பொதுவுடைமைச் சிந்தனைகள்'' (3 தொகுதிகள்) நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி, தோழர் முத்தரசன், மு.நாகநாதன், புலவர் வீரமணி, டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் ஜெயராமன், திருமுருகன் காந்தி, கலி.பூங்குன்றன், வீ.அன்புராஜ்.

மைத்ரி வெளியீட்டகத்தின் சார்பில் மலையாள மொழியில் லால்சலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட தந்தை பெரியார் நூல்கள் வெளியிடப்பட்டன.

பெரியார் விருது பெற்றவர்களின் ஏற்புரை - "பார்ப்பனீய நோய்களுக்கு மாமருந்து பெரியாரே!"

தந்தை பெரியார் 46ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் (அமெரிக்கா), புதுக்கோட்டை டாக்டர் நா.ஜெயராமன், மே 17 இயக்க திருமுருகன் காந்தி ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் விருது அளிக்கப்பட்டது (இவர்களைப் பற்றிய குறிப்புகள் தனியே காண்க)

இவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் சால்வை அணிவித்தும், விருது வழங்கியும், நூல்களை வழங்கியும் பாராட்டினையும், வாழ்த்தினையும் தெரிவித்தார். பெரியார் விருது பெற்றவர்கள் ஏற்புரையும் வழங்கினர்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நாங்கள் எல்லாம் வெளி நாடுகளில் பறவைகளாகப் பறந்து திரிந்து கொண்டுள் ளோம், எங்களுக்கான அடைக் கலம் தரும் அடையாறு ஆல மரம்தான் ஆசிரியர் அவர்கள்.

தந்தை பெரியாரின் மறை வுக்குப் பிறகும் உலகளாவிய அளவில் தந்தை பெரியார் அவர்களின் புகழும் கொள் கையும் விரிந்து பரவியதற்குக் காரணம் தமிழர் தலைவரின் ஓய்வறியாத தனி மனித உழைப்புதான்!

இந்நாள் என்னைப் பொருத்தவரை மிகவும் உணர்ச்சி கரமான நாள். என் சிறு வயது முதலே தந்தை பெரியாரை யும், திராவிடர் கழகத்தையும் சுற்றி சுற்றி வலம் வந்தவன்.

முரட்டுப் பெரியார் பெருந்தொண்டர் அய்யா சி.ஆள வந்தார், பி.வி.இராமச்சந்திரன், தருமராஜ் இவர்களுடன் தந்தை பெரியாரை சந்திக்கும் வாய்ப்பை அதிகம் பெற்ற வன். நான் அமெரிக்கா சென்ற புதிதில் சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது. சிகாகோ தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ஒன்றில் தந்தை பெரியார் போல வேடம் தரித்து பெரியார் போலப் பேசி முதல் பரிசைப் பெற்றேன்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் குரலில் பேசி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன் னேன். இவற்றின்மூலம் கொஞ்சம் பிரபலமானேன். தோழர்கள் விசுவநாதன், பாபு ஆகியோருடன் இணைந்து பெரியார் பிறந்த நாள் விழாவை சிகாகோவில் மட்டும் கொண்டாடி வந்தோம்.

இப்பொழுதோ பாஸ்டன், டெக்சாஸ், வாசிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, சிகாகோ, கலிஃபோர்னியா வரை தந்தை பெரியார் சிந்தனைகள் போயச் சேரும் அளவிற்கு விரிவடைந்திருக்கிறது.

என்னுடன் 45 ஆண்டுகள் வாழ்ந்த என் கொள்கைப் பயணத்திற்குப் பெருந் துணையாக இருந்து வரும் எனது அருமை வாழ்விணையர் சரோஜா மற்றும் எனது அமெரிக்க நண்பர்கள் அனைவருக்கும் இந்த விருதினைச் சமர்ப்பிக்கிறேன்.

என்னைப் போல பெரியார் விருது பெறும் தகுதியான வர்கள் பலரையும் உருவாக்கியிருப்பவர் நமது ஆசிரியர் அவர்கள் என்று  தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் டாக்டர் சோம.இளங்கோவன். (இவரது வாழ்விணையர் டாக்டர் சரோஜா அவர்களை மேடைக்கு அழைத்து இருவருக்கும் சேர்த்து சால்வை அணிவித்து தம் வாழ்த் துகளைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்).

புதுக்கோட்டை டாக்டர் நா.ஜெயராமன்

தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஓடிய பிறகும், அவரின் கொள்கைகளை சிரமேற்கொண்டு ஓயாது பரப்பி வருபவர் நமது ஆசிரியர் அவர்கள்.

இந்த நேரத்தில் என்னை ஆளாக்கிய பெற்றோர்கள், எனது அண்ணன் கே.ஆர்.ஆதிதிராவிடர் ஆகியோரை நினைத்து அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். என் அண்ணனும் கூட இங்கே வந்துள்ளார்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களை முன்னிறுத்தி அ.பெ.கா. என்ற பெயரில் பண்பாட்டு இயக்கத்தினை நடத்தி வருகிறேன். எனது நூலகத்தில் 6000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன். என் மகன் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு, தந்தை "பெரியாரின் தத்துவ விளக்கம்", "இனி வரும் உலகம்" ஆகிய நூல்க ளைத் தான் கொடுத்தேன். நான் அன்பளிப்பும் வாங்குவ தில்லை, அன்பளிப்புகளை பணமாகவும் அளிப்பதில்லை. நூல்களைத் தான் வழங்குவேன்.

என் கொள்கைப் பயணத்துக்குத் தோள் கொடுத்து வரும் குடும்பத்தினர் தொந்தரவு தராமல் ஒத்துழைத்துக் கொடுத்து வரும் சுற்றத்தார் அனைவருக்கும் என் நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பல நூல்களை எழுதியிருக்கிறேன். இப்பொழுது நான் கடைசியாக எழுதி வெளிவரவிருக்கும் நூல் "இந்துக்கள் மனம் புண்படட்டும்" என்பதாகும். அந்த நூலினை நமது தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்போடு இங்கு பெரியார் திடலிலேயே வெளியிடுவேன் என்றார்.

மே 17 இயக்க திருமுருகன் காந்தி

என் மீது 39 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளுக் கான விருதே இது.

நான் இதுவரை செய்த பணிகளுக்காக அல்ல, செய்ய விருக்கும் பணிகளுக் கான அங்கீகாரமாகவே இத னைக் கருதுகிறேன். இது தனி மனிதனான எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விருதாக நான் கருதவில்லை.

எனது தோழர்கள் அருள் முருகன், லெனா குமார், புருசோத்தமன், பிரவீன் குமார், இரா.செந்தில்குமார் ஆகி யோர்களுக்கும் சேர்த்துக் கொடுக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன்.

இந்துத்துவா சக்திகளால் கடும் எதிரியாகக் கருதப்படும் ஆசிரியர் அவர்களால் இந்த விருதைப் பெறுவதுதான் முக்கியமானது.

இது ஒரு நெருக்கடியான கால கட்டம். வேறு எந்த காலகட்டத்தையும் விட தந்தை பெரியார் மிகவும் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. பெரியாரின் சிந்தனைகள் தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆயுதம்!

இந்தியா முழுமைக்கும் தந்தை பெரியார் கொள்கை களைப் பரப்ப, நூல்கள் பரவ வேண்டும். அதன் அடை யாளமாக இந்த நிகழ்ச்சியில் மலையாள மொழியில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

பார்ப்பனீயம், பிரமம் என்னும் கருத்து முதல் வாத தத்துவம் ஒழிக்கப்பட்டாக வேண்டும். வேதிய மரபு என் னும் தேக்கமுற்ற சிந்தனையை உடைத்தாக வேண்டும்.

அதற்குத் தந்தை பெரியார் என்னும் புரட்சிப் போரா யுதம் இந்தியாவிற்கே தேவைப்படுகிறது. இப்படித்தான் தந்தை பெரியாரைப் பார்க்கிறோம். பிராக்டிகல் மார்க்சி யம்தான் தந்தை பெரியாரின் தத்துவம்.

பார்ப்பன ஆதிக்கத் தத்துவம் ஏகாதி பத்தியத்துடன் இணைக்கிறது. இவைகளை முறியடிக்க தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம் என்றார்.

புலவர் பா.வீரமணி

"தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்" (3 தொகுதிகள்) தொகுப்பாசிரியருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

புலவர் பா.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்தத் தொகுதிகள் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை உள்ளடக்கமாகக் கொண்டவை. மார்க்சியத்தைப் பற்றி மெத்தப் படித்தவர்கள் விமர்சனங்களை எழுதினார்கள். ஆனால் கல்லூரிப் பட்டங்களைப் பெறாத தந்தை பெரியார் சுய சிந்தனையின் அடிப்படையில் மார்க்சியத் தைப் பற்றிய தொகுப்புதான் இந்த மூன்று தொகுதிகளும்.

பொதுவுடைமையை மறுப்பவன் மனிதனே கிடை யாது என்று தந்தை பெரியார் கூறுகிறார்.

காந்தியார் பொதுவுடைமை கருத்துக்கு எதிரானவர், பொதுவுடைமை ஒழித்தே தீருவது என்பது இட்லரின் நடவடிக்கை.

மதத்தை வைத்து மனிதனை வெறுப்பவர்களின் முடிவு தற்கொலையில் தான் முடியும் என்று சொன்னவர் தந்தை பெரியார். இட்லரின் முடிவைத் தெரிந்தவர்களுக்கு பெரியார் கருத்தின் சிறப்பை அறிய முடியும்.

நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூரைப் பற்றியும் கூட பெரியார் விமர்ச்சித்துள்ளார்.

ருசியாவுக்குச் சென்ற தாகூர் அந்த நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பற்றிப் பாராட்டி விட்டு பணக்காரர்களிடத்தில் மென்மையாக நடந்து கொண்டிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கிறார். இது பற்றி தந்தை பெரியார் தம் கருத்தை சொல்லியிருக்கிறார்.

பணக்காரர்களை மென்மையால் திருத்தவே முடியாது என்று கூறுகிறார் தந்தை பெரியார். பெரியாருடைய சிறப்பு என்பது அறிவின் ஆளுமை என்று குறிப்பிட்டார் புலவர் பா.வீரமணி

பெரியார் விருது பெற்றவர்களின் தன் விவரக் குறிப்பு

டாக்டர் சோம.இளங்கோவன்

டாக்டர் சோம.இளங்கோவன் தந்தை பெரியார் அவர் களின் தொண்டன் என்றும், ஆசிரியர் அவர்களின் மாணவன் என்றும் தன்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்பவர் திரு. சோம. இளங்கோவன் அவர்கள்.

காரணம்?

சிறுவயது முதலே திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் தனது சித்தப்பா பி.வி.ஆர். எனப்படும் பிவே. இராமச்சந்திரன் அவர்களுடன் சென்று வந்ததுதான் என்கிறார் திரு. சோம.இளங்கோவன். ஆம்; வழிய வழிய பெரியாரியத் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளை இவர்! அதனால்தான், பள்ளி நாட்களிலேயே கையில் மெகாபோனை எடுத்துக் கொண்டு உள்ளூரில் நடைபெறும் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் பற்றித் தெருத்தெருவாகப்போய் அறிவிப்பு செய்வது, போராட்டங்களின்போது முழக்கங்கள் எழுப்புவது என்று வாழ்க்கைக்கு வனப்பு சேர்த்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் பெரியாரைச் சந்தித்துப் பெற்ற அறிவுரைகளோடு அமெரிக்கா சென்ற இவர், குடல் மருத்துவராகி சிகாகோவில் செயலாற்றினார்.

அத்துடன் சிகாகோ தமிழ்ச்சங்கம், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை ஆகியவற்றின் தலைமைப் பொறுப் பேற்று தமிழ்ப் பணியும் ஆற்றி வருகிறார்.

25 ஆண்டுகளுக்கு முன் பெரியார் பன்னாட்டு அமைப்பைத் தொடங்கி பெரியாரியலை பன்னாட்டு அளவில் பரப்பும் பணிகளில் ஒரு பாலமாக இருப்பவர்.

2017ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள கொல்லோன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய தில் இவரது பங்கு அளப்பரியது!

அதேபோல், 2019ஆம் ஆண்டு அமெரிக்க மேரிலாண்டில் நடைபெற்ற மனிதநேய சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டி லும் இவரது பங்கானது மிகச் சிறப்பானதாகும்!

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதை பெரியார் பன்னாட்டு அமைப்பின் மூலம் வழங்கி வருகிறார்.

நண்பர்களுடன் இணைந்து "வீரமணி சமூகநீதி விருது" நிறுவியதோடு, அந்த விருதை, அமெரிக்காவின் தலைசிறந்த மனிதநேயப் பற்றாளர் பேராசிரியர் பால்கர்ட்சுவை தமிழ்நாட் டிற்கு அழைத்து வந்து மாண்புமிகு கலைஞர் அவர்கட்கு சமூகநீதிக்கான வீரமணி விருதை வழங்கச் செய்து பெருமைச் சேர்த்தார்.

உலகிலுள்ள மற்ற நாடுகளும் நமது இயக்கத்திற்கும் பாலமாக இருந்து பெரியார் கொள்கைகளை பன்னாட்டு அளவில் பரப்புவதில் ஈடு இணையற்றவர் மருத்துவர் சோம.இளங்கோவன். அப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற சோம. இளங்கோவன் அவர்களின் பணிகளைப் பாராட்டி 2019ஆம் ஆண்டிற்கான "பெரியார் விருது" வழங்கப்படுகிறது.

மருத்துவர் நா.ஜெயராமன்

ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டிருப்பது புதுக்கோட்டை மண்

அது 24.6.1955ஆம் நாளன்று டாக்டர் நா.ஜெயராமன் பிறந்த போது தன்னை மீண்டும் புதுப்பித்துக்கொண்டது.

டாக்டர் நா.ஜெயராமனின் தந்தை நாகய்யா, குழந்தைப்ப ருவத்திலேயே தந்தை பெரியாரின் பகுத்தறிவுப்பாதையில் இவருக்கு நடக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

அந்தப்பயிற்சியின் பயனாக, பல் மருத்துவரான இவர் அடித்தட்டு மக்களின் மூளை மருத்துவராகவும் செயல்பட்டி ருக்கிறார்.

அ.மணிமேகலை அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் டாக்டர் நா.ஜெயராமன்

அது காதல் திருமணம் மட்டுமல்ல, ஜாதி மறுப்புத் திருமணமம் கூட.

கூடுதலாக  நம் திராவிட இன மாணவர்களையும் காதலித்த இவர், அவர்களுக்கு கல்வி அறிவு கிட்டும்வகையில், தம் கல்லூரி நாள்களிலேயே இசைக்கச்சேரி ஒன்றை நடத்தி, அதில் வசூலான நிதியின்மூலம் புத்தக வங்கி தொடங்கி சேவை புரிந்திருக்கிறார்.

1996ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் ஃபெலோஷிப் விருதும், பாரதிய தலித் சாகித்ய அகாடமி விருதும் பெற்ற இவர், காரல்மார்க்சின் கம்யூனிசக் கொள்கையிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.

தமிழ்மண்ணில் முத்தமிழ்போல் முகிழ்த்த அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை   மக்களுக்கு எடுத்துச்சென்று அவர்களை பண்படுத்தும் வகையில் அ.பெ.க. பன்னாட்டு நிறுவனம் ஒன்றை கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கி இன்றும நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் சங்கீத மும்மூர்த்திகள் போன்று வாழ்வியல் மும்மூரத்திகளான அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் ஆகியோரின் ஆறாயிரம் நூல்களைக் கொண்டு ஒரு நூலகம் உருவாகியிருக்கிறார்.

படித்துறைப் போல, மக்கள் தமது அக அழுக்கு போக குளிக்கும் படிப்புத்துறையாக அந்த நூலகம் செயல்பட்டு வருகிறது.

காந்தியின் தீண்டாமை, மகனுக்கு மடல், ஆஷ் படு கொலை, புனைவும் வரைவும், அம்பேத்கர் இந்துமயப்படுத்த முடியாத தத்துவம், மேட்டுக்குடி தலித்துகளுக்கு போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

டாக்டர் நா.ஜெயராமன் அவர்களின் இத்தகைய சமூகப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு 2019ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பிக் கப்படுகிறது.

திருமுருகன் காந்தி

2009இல் ஈழத்தில் நடந்த தமிழின அழிப்பு வேலையை உலகிற்கு உரக்கச் சொல்லியவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முக்கியமானவர் ஆவார்.

அய்.டி., ஆங்கிலம் என எனக்கென்னவென்று இருந்த ஏராளமான இளைஞர்களின் மத்தியில் ஈழத்தின் மீது ஆர்வம் ஏற்படச் செய்தவர். தமிழகத்தில் மீத்தேன் போராட்டம், நெடுவாசல், WTO ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டம் என இயங்கி வருபவர் திருமுருகன்காந்தி. உலக வல்லரசுகள் அரங்கேற்றிய இன அழிப்பைக் கண்டித்தும், ஈழத்திற்கு ஆதரவாகவும் ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தின் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

"ஏறினால் ரெயில்; இறங்கினால் ஜெயில்" என்ற விதி செய்து, ஆதிக்கவர்க்கம் தமது எதிர்ப்பாளர்களை முடக்க முயன்று வருகிற காலம் இது!

இந்த விதியால் வதைக்கப்படும் முக்கியமான போராளி தோழர் திருமுருகன் காந்தி.

ஈழத்தமிழர் இறுதிப்போரில், குரூரமாகவும், கொடூரமாக வும் கொன்று முடிக்கப்பட்ட தமிழ்ச் சகோதர, சகோதரிகளின் - போராளிகளின் நினைவு நாளான மே 29, 2017 அன்று அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி கண்டனம் தெரிவித்ததற்காக, இவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது.

பல்வேறு தரப்பினரும், அதன் உச்சகட்டமாக அய்.நா. மனித உரிமை மன்றமே கண்டித்ததையடுத்து 4 மாதங்கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து மே 17 இயக்கம் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறார் தோழர் திருமுருகன் காந்தி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் மிருகத்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரைக் கொன்றதை குறித்து அய்.நா. 38ஆவது மனித உரிமை கூட்டத்தொடரில் பேசிவிட்டுத் திரும்பிய தோழர் திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து, கைது செய்த காவல்துறையினர் பெங்களூருவிலி ருந்து சென்னைக்குக் கொண்டு வந்து நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். "கைது நடவடிக்கை தவறானது, உடனே அவரை விடுதலை செய்யுங்கள்" என்று நீதிபதி உத்தரவிட்டதையடுத்து வெளியில் வந்த இவரை அங்கேயே காரணம் சொல்லாமல் மீண்டும் கைது செய்து வழக்குத் தொடுத்தது காவல்துறை.

2009ஆம் ஆண்டு ஈழத் தமிழர் இன அழிப்பு நடந்தபோது களமிறங்கிய இளைய தலைமுறை போராளிகளில் தெரிந்த சிந்தனையும், தொடர் செயல்பாடுகளும் கொண்டவர்களுள் முக்கியமானவர் திருமுருகன் காந்தி!

2018ஆம் ஆண்டு பெரியாரியல் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணிக்கு முக்கிய பணியாற்றிவர்களில் முக்கியமானவர் திருமுகன் காந்தி!

2019ஆம் ஆண்டும் பெரியாரியக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதில் குறிப்பிடத் தக்கவர் திருமுருகன் காந்தி!

இப்படியாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், இதுவரை அவர்மீது 39 வழக்குகள் போட்டு ஜெயில் ஜெயிலாக அலைக்கழித்து வருகின்றது தமிழகக் காவல்துறை.

"குதிரை கீழே தள்ளியது போதாதென்று, குழியும் பறித்தது போல", கடந்த 2 ஆண்டுகளாக தோழர் திருமுருகன் காந்தி அவர்களை "தொடர் குற்றவாளிகள் பட்டியலில்" வைத்திருக் கிறது தமிழகக் காவல்துறை. ஆனால் திராவிடர் கழகம் அவரை, "தொடர் போராளிகள் பட்டியலில்" வைத்து, 2019 ஆம் ஆண்டுக்காள "பெரியர் விருது" வழங்கி பெருமைப் படுத்துகிறது.

‘‘எங்களது அறிவு ஆயுதம் தந்தை பெரியாரே!'' பெரியார் திடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

நமது சிறப்புச் செய்தியாளர்

பிஜேபி அதிகாரப்பூர்வமாகவே

தமது அநாகரிகப் புத்தியைக் காட்டிக் கொண்டு விட்டது

தந்தை பெரியார் நினைவுநாளில் அவரைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடு பிஜேபி தனது அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளது. இதுபோன்ற இழிவுகளை, எதிர்ப்புகளை எல்லாம் கடந்து வந்தவர்தான் தந்தை பெரியார். அதே நேரத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், அதுவும் தந்தை பெரியாரின் நினைவுநாளில் அநாகரிகமாகப் பதிவு செய்ததன் மூலம் அதிகாரப்பூர்வமாகவே தனது அநாகரிகப் புத்தியை,  பண்பாட்டை தனக்குத்தானே அறிவித்துக் கொண்டு விட்டது.... இதுவும் ஒரு வகையில் நல்லதே!

இதுகுறித்து திராவிடர் கழகம் கருத்து சொல்வதை விட கட்சிகளைக் கடந்து பிஜேபியின் கூட்டணி கட்சிகளே  கண்டிப்பதிலிருந்தே பிஜேபியும், சங் பரிவார்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது பெரியார் நாடா? என்று கேள்வி எழுப்பியவர்கள் - இதற்குப் பிறகாவது “ஆம் இது பெரியார் நாடே!” என்றே நாணயமாக ஏற்றுத் தீரவேண்டிய நிலையே!

கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நேற்று (24.12.2019) நடைபெற்ற தந்தை பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள், இந்தக் காலகட்டத்தில் தமிழ் மண்ணின் போர்க் குரலாக - பார்ப்பனீய, வருணாசிரம - சனாதன - மனுதர்மப் போக்கை முற்றிலும் முறியடிக்க மூண்ட பெருந்தீயாக - கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மண்ணில் ஒட்டுமொத்த உரிமைக் குரலாக வெடித்துக் கிளம்பியது என்றால், அது மிகையல்ல. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தந்தை பெரியாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் முத்தாய்ப்பாக அமைந்தன.

முற்பகல் அமைதிப் பேரணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலைகள், நினைவிடத்தில் மலர்வளையம், தொலைக்காட்சியில் பேட்டிகள், விவாதங்கள் என்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றுள்ளன. போதும் போதாதற்கு, பாரதீய ஜனதா கட்சி தனது அதிகாரப் பூர்வமான வலைதளத்தில் தந்தை பெரியார்பற்றி தெரிவித்த கருத்தினை எதிர்த்து தமிழ்நாடே எரிமலையாக வெடித்துச் சிதறியது.

தி.மு.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமன்றி, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. கூட பா.ஜ.க.வைக் கடுமையாகக் கண்டித்த நிலையில், பி.ஜே.பி. தனது பதிவை விலக்கிக் கொண்டு, ஓடிப்போய்ப் பதுங்கிவிட்டது.

தமிழ்நாடு பெரியார் மண்ணா? என்று ஏகடியம் பேசிய பா.ஜ.க.,  சிறுபிள்ளைத்தனமாக செய்த தனது பதிவு பூமாரங்காக திருப்பி அடித்து, பி.ஜே.பி., சங் பரிவார்க் கூட்டத்தை கதி கலங்கச் செய்துவிட்டது.

பெரியார் திடலில் நினைவு நாள் நிகழ்ச்சி

நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் ‘‘பொதுவுடைமைச் சிந்தனைகள்'' மூன்று தொகுப்பாக வெளிவந்துள்ளது முக்கியமானதாகும்.

மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கையினை இந்தியா விலேயே முதன்முதலாக மொழி பெயர்த்து தமிழில் ‘குடிஅரசு' இதழில் வெளியிட்டவர் தந்தை பெரியாரே! (1931, அக்டோபர்).

இதற்கு இரண்டு மாதங்கள் கழித்துதான் தந்தை பெரியார் சோவியத்துப் பயணத்தை மேற்கொண்டார். ருசியாவின் அய்ந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெயர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிட்டார்.

குழந்தைகளுக்கு லெனின் என்றும், ஸ்டாலின் என்றும், மாஸ்கோ என்றும் பெயரிட்டார் என்கிற தகவல்களை எல்லாம் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் உரை

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதாவது:

தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டுகள் ஆன பிறகும், அவரின் இலட்சியம், கொள்கைகள் உயிர்த் துடிப்புடன்தான் இருக்கின்றன. மனிதர்கள் சாகலாம் - இலட்சியங்கள் நிலைத்து நிற்கும். அதனால்தான் தந்தை பெரியார் ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம் - திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா.

இந்நிகழ்ச்சியில் முக்கியமாக மூவருக்குப் பெரியார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் பெரும்பாலான இடங்களில் விருதுகள் ஏற்பாடு செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன.

ஆனால், திராவிடர் கழகத்தில், பெரியார் திடலில் விருதுகள் வழங்குவதற்கு அடிப்படைக் கோட்பாடுகள் உண்டு.

விருது பெறுகிறவர்களுக்கே நாங்கள் வெளியிட்ட பிறகே தெரிய வரும்.

இங்கே பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களுக்குப் பெரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிறந்தாலும், படித்தாலும் அமெரிக்காவில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்பும் பணியில் முன்னணியில் இருந்து வருகிறார்.

என்னைப் பொருத்தவரையில் அவர் செய்துள்ள உதவி சாதாரணமானதல்ல; 1991 ஆம் ஆண்டில் எனக்கு முதன்முறையாக மாரடைப்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இதய அறுவை சிகிச்சை என்பது இங்கு எளிதானதாக இருக்கவில்லை.

அதனால், அமெரிக்காவிற்குச் செல்ல நேர்ந்தது. அந்த நேரத்தில் அருமைச் சகோதரர் டாக்டர் இளங்கோவன் அவர்கள் செய்திருக்கிற உதவி சாதாரணமானதல்ல.

அன்றைக்கு  அவர் அந்தப் பேருதவியைச் செய்யவில்லையென்றால், நான் இன்று இல்லை என்பதை நன்றியுணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 28 ஆண்டுகளாக இயக்கப் பணியைத் தொடர முடிகிறது.

நூல்களை தொகுக்கும் பணியை சிறப்பாக செய்த பாவலர் வீரமணிக்கு தமிழர் தலைவர் பயனாடை போர்த்தி பாராட்டு.

சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் - டாக்டர் சரோஜா இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

எனக்கென்று தனி வாழ்க்கை ஏதுமில்லை. தந்தை பெரியார் பணியை செய்வதே எனது ஒரே பணி - முழுப் பணியே!

டாக்டர் இளங்கோவன் அவர்களைப் பொருத்தவரை பெரியார் பன்னாட்டு அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். அவர் செய்துவரும் பெரியார் கொள்கைப் பணியைப் பாராட்டித்தான் பெரியார் விருது அளிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஜெயராமன்

அதுபோலவே புதுக்கோட்டை டாக்டர் ஜெயராமன் அவர்கள் சமூக ஆர்வலராக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,  மார்க்ஸ் சிந்தனைகளைப் பரப்புநராகப் பணியாற்றி வருகிறார். அத்தகையவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு பெரியார் விருது அளிக்கப்பட்டது.

மே 17 - திருமுருகன் காந்தி

திருமுருகன் காந்தி என்றால், மே 17 இயக்கம் மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு.

கோடைக் காலத்தில் தந்தை பெரியார் ஈரோட்டில் மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் நடத்துவார். அதில் தயாரிக்கப்பட்டவர்கள் பிரச்சாரத்துக்கு வெளியூர்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

1945-46 களில் புலவர் ஆறுமுகம் அந்தப் பயிற்சிப் பள்ளியில் தயாரிக்கப்பட்டவர். அவரோடு 15 வயது சிறுவனாக இணைந்து பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவரின் பேரன்தான் நமது திருமுருகன் காந்தியாவார். அவர் தாத்தா என்றால், எனக்கும் திருமுருகன் காந்தி பேரன்தான். (பலத்த கரவொலி).

எங்களுக்கு மட்டுமல்ல - தந்தை பெரியாருக்கும் அவர் பேரன்தான். குருதி ரீதியான உறவைவிட, கொள்கை ரீதியான உறவுதான் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில், திருமுருகன் காந்தி நமது கொள்கை உறவுக்காரரே!

அவர் ஏதோ ஒரு தனி மனிதர் என்று யாரும் கருதவேண்டாம். அவருக்குப் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருக்கிறோம். (பலத்த கைதட்டல்).

திருமுருகன் காந்தி என்ன குட்கா விற்றாரா? கள்ளக்கடத்தல் செய்தாரா? என்ன குற்றம் செய்தார் - சொல்லட்டுமே பார்க்கலாம்.

ஏறினால் ரயில் - இறங்கினால் ஜெயில் என்பது எங்கள் பொதுவாழ்க்கை. வெளியில் இருந்தால் பொதுத் தொண்டில் ஈடுபடும் நாங்கள் - குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஜெயிலுக்குப் போனால், நேரா நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும். சாப்பிடாவிட்டால் அதிகாரிகள் விட மாட்டார்கள்.

திருமுருகன் காந்தி அய்.நா. மன்றம்வரை சென்று வந்தவர். அவரின் பெரியார்ப் பணிக்குத் துணையாக இருப்போம். அதனால் எங்கள்மீது வழக்குப் பாய்ந்தால் அதையும் ஏற்கத் தயார்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இராமன், கிருஷ்ணன் சமாச்சாரங்கள் பலிக்காது. இராமனை, தந்தை பெரியார்போல் தோலுரித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வடக்கே வேண்டுமானால் பி.ஜே.பி. வகையறாக்களின் ஜம்பம் பலிக்கலாம். இப்பொழுது வடக்கேயும் தந்தை பெரியார் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

பெரியார் ஓர் அறிவாயுதம். பெரியார் அறிவு விருந்தாகவும் இருந்தார்; இப்பொழுது நோய்த் தீர்க்கும் மாமருந்தாகவும் ஆகியிருக்கிறார்.

நாங்கள் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள். எங்களிடம் இருக்கும் அறிவாயுதம் தந்தை பெரியாரே! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (மற்ற செய்திகள் 3 ஆம் பக்கம்)

தோழர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த நிலையில், அவர் நினைவைப் போற்றும் வகையில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் அன்றைய தமிழக பி.ஜே.பி. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசனும் பங்கேற்றார்.

அதில் பேசிய நான், பி.ஜே.பி.பற்றியும், அரசியல் ரீதியாக சில சொற்களைப் பேசினேன். யாரையும் கேலி செய்யவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

எனக்குப் பின் பேசிய தமிழிசை மிகக் கோபமாகப் பேசினார். சிவப்புக் கொடி எங்கும் பறக்கக் கூடாது என்றார்.

இறுதியாகப் பேசிய நமது ஆசிரியர் அவர்கள், ‘‘எனது அன்பு மகளுக்குச் சொல்லிக் கொள்கிறேன் (தமிழிசையை எப்பொழுதும் அப்படித்தான் குறிப்பிடுவார் ஆசிரியர்). ‘‘திராவிடர் கழகக் கொடியின் நடுவில் இருப்பது சிவப்பு. நாட்டில் புரட்சி வெடித்து மெல்ல மெல்ல கருப்பு மறைந்து சிவப்பு மலரும்'' என்று குறிப்பிட்டார்.

இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள். இன்று இந்திய அளவில் முதனிலை செய்தியாக (பிணீstணீநீ) இருப்பது தந்தை பெரியாரே!

யாரையோ நினைத்து நான் இதைச் சொல்ல வில்லை. பெரியாரைச் சீண்டிப் பார்க்கிறார்கள்; அது எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும்.

தந்தை பெரியாரைப் புறந்தள்ளி இங்கு எவரும் கட்சி நடத்த முடியாது - வெற்றி பெறவும் முடியாது. (பலத்த கரவொலி).

தந்தை பெரியார்பற்றி பி.ஜே.பி.யின் தரக் குறைவான பதிவினை  அதன் கூட்டணிக் கட்சிகளே கண்டித்துள்ளன. அவர்களுக்கு நன்றி! கண்டித்ததோடு மட்டும் போதாது - அந்தக் கூட்டணியிலிருந்தும் வெளியேறவும்வேண்டும்.

தந்தை பெரியார் கருத்தும், மார்க்ஸ் கருத்தும் அழிக்கப்படவே முடியாதவை. காரணம், அவை மக்களைச் சார்ந்தவை.

தோழர் திருமுருகன் காந்திக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ‘பெரியார் விருது' அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்.  திருமுருகன் காந்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? எந்தக் கொள்கைப் பலம் இருக்கிறது? என்பதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ளட்டும்!

பெரியார் சிலைக்குத் திருமுருகன் காந்தி மாலை அணிவித்தது கூடக் குற்றமாம் - அதன்மீதும் ஒரு வழக்கு. இப்படி 40 வழக்குகளைப் போட்டிருக்கிறது தமிழக அரசு. அவர் தனி மனிதரல்ல - அவருக்குப் பின்பலமாக நாங்கள் இருக்கிறோம் என்று குறிப்பிட்டார் தோழர் முத்தரசன்.

"பெரியாரே காரணம்"

பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன்

மேனாள் தட்டக் குழுத் துணைத் தலைவர் தன் உரையில் குறிப்பிட்டதாவது: இந்திய சூழலில் ஜாதிக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவுடைமை மலருவதற்குப் பெரும் தடையாக உள்ளது. இதனை தந்தை பெரியார் முன்னெடுத்தார்.

ஒரு கட்டத்தில் இதில் சற்றுத் தயக்கம் காட்டியது கம்யூனிஸ்டு கட்சி - இப்பொழுது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது நல்ல திருப்பம். தந்தை பெரியார் மறைந்தபோது, சென்னை பல்கலைக் கழகத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தபோது, எஸ்.எஃப்.ஏ. தோழர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுண்டு.

இப்பொழுதெல்லாம்  அதில் மாற்றம் காண முடிகிறது. தமிழ்நாட்டில் பிற்போக்குச் சக்திகள் காலூன்ற முடியாமைக்குக் காரணம், தந்தை பெரியார் கருத்துகள் இங்கு ஆழமாகப் பதிந்து இருப்பதுதான் என்றும் குறிப்பிட்டார் பேராசிரியர் நாகநாதன்.

 - விடுதலை நாளேடு 25 12 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக