சனி, 11 ஜனவரி, 2020

சமய மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்(3) -40

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

வைணவர் தந்த தமிழ்ச் சொற்செல்வம்

வைணவ உரையாசிரியர்கள் தங்கள் கருத்துகளை விளக்குவதற்கு மிகுதியாக வடசொற்களைப் பயன்படுத்திய போதிலும் அவற்றில் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், வடசொற்கள் இடையே கலந்து கிடக்கும் அத்தனித் தமிழ்ச் சொற் களைச் சலித்தெடுக்க விடாமுயற்சியும் அயரா உழைப்பும் வேண்டும். தமிழுலகிற்குப் பல வடசொற்களுக்கு நிகரான செந்தமிழ்ச் சொற்களும் தொடர்களும் அவ்வுரை களில் இருக்கின்றன என்பதே தெரிந்தபாடில்லை. இவ்வுண்மை யினைத் திருப்பாவை யுரை, அருளிச் செயல் ரஹஸ்யம் என்னும் இருநூல் களில் வடசொற்களுக்கு நிகராக வழங்கப் பட்டுள்ள தமிழ் வழக்குகளைக் கொண்டு நன்கு தெளியலாம்.

இத்தகு தமிழ்ச் சொற்களைக் கையாளும் வைணவ சமயப் பெருமக்கள் வடமொழி விரவிய நடையினை மேற்கொண் டதற்குக் காரணம் முன்னர்ச் சொன்னது போல் தத்துவ உலகில் வடமொழிச் செங்கோல் ஓச்சியதே ஆகும். மேலும், வைணவ சைவ சமயச் சான்றோர்கள் தமிழையும் வடமொழியையும் உறவுமொழிகளாகக் கொண்டனரே தவிரப் பகை மொழி களாகக் கருதவில்லை. தத்துவம் பற்றித் தமிழில் வடமொழிச் சார்பின்றி நூல்கள் தோன்றவில்லை என்பதும் கருதத்தக்க ஒன்றாகும். ஆழ்வார்கள் பாசுரங்களின் துணையால் தெளிந்த மறைக் கருத்துகளைக்கூட இராமானுசர் வடமொழியிலேயே சொல்லவேண்டிய அளவுக்கு வடமொழியானது தத்துவ உலகில் தலைநிமிர்ந்து நின்றது என்பது கசப்பாக இருந்தாலும் வரலாறு சொல்லும் உண்மையாகும்.

இதுகாறும் கூறியவற்றால் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே ஆரிய நாகரிகம் தமிழ் நாகரிகத்தோடு கலந்தது என்பதும், அதன் விளைவாக ஆரியக் கூறுகள் மிகுந்த தெய்வங்கள் தமிழர் வழிபாட்டில் இடம்பெற்றன என்பதும், வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் விளக்கப்பட்டன; சைவத் திருமுறைகளிலும் ஆழ்வார்கள் பாசுரங்களிலும் சுட்டப்பெறும் ஊர், பெருமான், பெருமாட்டி ஆகியவர் களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழியாக மாற்றப் பெற்றன என்பது தெளிவாகிறது; தோத்திரங்களிலும் சாத்திரங்களிலேயே வடமொழிக் கலப்பு மிகுதி என்பதும், அதற்குக் காரணம் தத்துவ உலகில் வடமொழியின் செல்வாக்கு என்பதும் விளக்கப்பட்டன. வைணவ ஆசிரியர்கள் வடசொற்களுக்கு நிகரான நல்ல தமிழ்ச் சொற்களைத் தம் நூல்களில் வழங்கியுள்ளனர் என்பது தெரிய வருகின்றது. சைவத் திருமுறைகளிலும் திவ்வியப் பிரபந்தத்திலும் காணப்பெறும் தமிழ்ப் பெயர்களையும் பிற தமிழ் வழக்குகளையும் மக்களிடம் பரப்புவதே சமயத்துறையில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதாகும். அவ்வகையில் பணி மேற்கொள்வது பயன் விளைப்பதாகும்.

அடிக் குறிப்பு:

1.            வடசொற் கிளவி வடஎழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

தொல். எச்சவியல். சூ. 5.

2.            மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.

தொல்: அகத்திணையியல் சூ. 5.

3.            மருத நிலத் தெய்வமாகிய வேந்தன் அரச தெய்வ மாகிய சிவபெருமானோ அல்லது விண்ணவர் தெய்வமாகிய இந்திரனோ என்பது விளங்கவில்லை. நெய்தல் நிலத் தெய்வ மாகிய வருணன் ஆரியத் தெய்வமோ, தமிழ்த் தெய்வமோ என்னும் அய்யப்பாடு நிகழற்பாலது. வண்ணன் என்பது பாடமாயின் அது தமிழ்த் தெய்வத்தையே குறிப்பதாகும். இந்திரன் திராவிடக் கடவுளெனில் இன்றிறன் என்பது இந்திரனென மருவிற்றென்க.

கா.சு. பிள்ளை, தமிழர் சமயம், பக்கம்-58

தேவநேயன், தமிழர் மதம், பக்கம்-29-33

4.            வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்

கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி

சிலம்பு, இந்திரவிழவு ஊர் எடுத்த காதை அடி 141-142.

திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த

பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

மணிமேகலை, மலர்வனம் புக்க காதை, அடி 34-35.

5.            திருநாவுக்கரசர் தேவாரம் 6,

திருமறைக்காடு 5.

6.            பெருமாள் திருமொழி 1:4.

7.            பெரிய புராணம், தடுத்தாட் கொண்ட புராணம் 70..

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

-  விடுதலை நாளேடு, 9.1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக