வியாழன், 4 ஏப்ரல், 2019

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் வாழ்க்கைக் குறிப்புகள்



1920 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை - பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள்.

வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ். எஸ். எல். சி.,) வரை படித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கை யில் கல்வி தடைப்பட்டுவிட்டது.

1943 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியது.

1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள்  தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்து களால் கவரப்பட்டு அய்யாவின் தொண்ட ராகப் பணியாற்ற வந்தவர்.

1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி 'திராவிடர் கழக' மாக மாறிய மாநாட்டில் (27-8-1944) காந்திமதி என்ற கே.ஏ.மணி கே. அரசியல் மணி என்று மாற்றப்பட்டு மாநாட்டில் அறி முகம் செய்து வைக்கப்பட்டார்.

1948 டிசம்பர் 20-ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப்போரில் அரசு தடையை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டு, பாபநாசம் கிளைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

விசாரணைக்குப் பின் இரண்டு மாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்,

1949 பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணி யம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.

மார்ச் மாதம் 31-ஆம் நாள் சென்னையில் மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மறியல் போர் நடந்தது.

ஜூலை மாதம் 9-ஆம் நாள் பெரியார்-மணியம்மையார் பதிவுத் திருமணம், திருமண ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு கே.ஏ.மணியம்மை (கே. அரசியல் மணி) என்று இருந்து வந்த பெயரை ஈ.வெ.ரா. மணியம்மை என்று தமிழிலும் E.V.R.மணியம்மை என்று ஆங்கிலத் திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

1952 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டார்.

1958 மார்ச் மாதம் 8-ஆம் நாள், ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுக்கோட்டை ராமசாமியும், 10ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைத் தரச் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அந்த நேரத்தில் மணியம்மையார், முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்து மறைந்த தோழர்களின் உடல் களைத் திரும்பப் பெற்றார். மணியம் மையார் தலைமையில் சவ ஊர்வலம் நடந்தது.

19-1-1958 'விடுதலை'யில் வெளியான "இளந் தமிழா! புறப்படு போருக்கு என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமான ஈ.வெ.ரா. மணியம் மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும், கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1957-58 தந்தை பெரியார் அவர்களும், கழக முன்னணியினரும் சிறையில் இருந்த முக்கியக் காலகட்டத்தில் கழகம் சோர் வடையாமலும், கழகப் பணி, நிர்வாகப் பணிகளைத் திறமையாகக் கவனித்துக் கொண்டதற்காகவும் அன்னை மணியம் மையாருக்குத் திருச்சியில் நடைபெற்ற - திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு கூட்டத்தில் (19-7-1959) பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது.

1973 டிசம்பர் 24-ஆம் நாள் 'பகுத்தறிவு பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் மறைவுற்றபின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத் தலைவராகப் பொறுப் பேற்றுக் கழகத்தை வழி நடத்திச் சென்றார்.

1974 திருச்சி பெரியார் மாளிகையில் 6.1.1974-இல் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, கழகத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தது.

3-4-1974 அன்று அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகராக வகை செய்ய மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமை அஞ்சலகம் முன் மறியல் கிளர்ச்சி செய்தார்.

இப்போராட்டத்தின் 2ஆம் கட்டமாக 26-5-1974 அன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு கருப்புக்கொடி காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி அன்னை மணியம்மையார் அவர்களுக்கே கூடத் தெரியாத நிலையில் தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்து வைத்திருந்த சொத்துகளைத் தமக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களின் பொது நலனுக்கே அவை பயன்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உடல் நலமின்றி, தாம் சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்தபோது அன்னை மணியம்மையார் அவர்கள் 23-9-1974 அன்று பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம் தொடங்கப்படஏற்பாடு செய்தார்கள். அந்த அமைப்பு 24-9-1974 அன்று சென்னையில் பதிவு செய்யப்பட்டது. அந்த அறக்கட்டளைக்கு அன்னை மணியம் மையார் தலைவராகவும், கி.வீரமணி அவர்கள் செயலாளராகவும் இருந்தார்கள்.

1974 டிசம்பர் 25-ஆம் நாள் சென்னை - பெரியார் திடலில் 'இராவண லீலா' என்னும் இன உணர்வு வரலாற்றைப் படைத்துக் காட்டினார்.

சென்னை பெரியார் நூலகம் - ஆய்வகத்தை  நிறுவினார். பெரியார் மணி யம்மை பெண்கள் உயர் நிலைப் பள்ளி' யைத் திருச்சியில் ஏற்படுத்தினார்.

1975 ஏப்ரல் 26-இல் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் பொன்விழாவில் கலந்து கொண்டு பெண்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சென்னை அண்ணாசாலையில் 21-9-1975 அன்று கலைஞர் சிலையை அமைத்தார்.

1975 செப்டம்பர் 9-ஆம் நாள் 'இராவண லீலா'. வழக்கில் மணியம்மை மற்றும் தோழர் களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங் கப்பட்டது. வழக்கை எதிர்த்து மேல்முறை யீடு செய்யப்பட்டது..

'மிசா' காலத்தில் 16-9-1976 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாள் திடீரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப் பட்டார்.

1977 ஏப்ரல் 25-ஆம் நாள் 'இராவண லீலா' வழக்கில் மணியம்மையாரும் மற்றத் தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, தமது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலை யிலும் கருப்புக் கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

பெரியார்திடல் முகப்பில் 'பெரியார் பில்டிங்ஸ்' என்ற ஒரு பெரிய கட்டடத்தை உருவாக்கினார்.

1978 மார்ச் மாதம் 16-ஆம் நாள் மார டைப்பு ஏற்பட்டு சென்னை பொதுமருத்துவ மனையில் காலமானார்.

இன்று வரலாறாய் ஒளிர்கிறார்.

- விடுதலை ஞாயிறு மலர், 9 .3 .19

புதன், 3 ஏப்ரல், 2019

மனுதர்மம் எரிந்த வரலாறு



1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்கு பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனுஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்று தீர்மானத்தை முன்வைத்தார்.

4.12.1927 அன்று வடார்க்காடு மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

25.12.1927 அன்று அம்பேத்கர் தலைமையில் மராட்டிய மாநிலத்தில் மகத் நகரில் மனுதர்மம் எரிக்கப்பட்டது.

17.5.1981 அன்று திராவிடர் கழகம் சார்பில் நாடெங்கும் மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து சாம்பலாக்கியது.

10.3.2017 அன்று திராவிடர் கழக மகளிரணியினரே முற்றிலும் பங்கேற்று தமிழ் நாடெங்கும் மனுதர்ம எரிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

7.2.2019 அன்று மனுதர்ம எரிப்புப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையில் நடைபெற்றது.

“மனுநீதி போதிப்பது என்ன?” ஆய்வுச் சொற்பொழிவுகள் கி.வீரமணி, பக்கம் 122,

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி
- விடுதலை ஞாயிறு மலர், 23 .3. 2019