சனி, 31 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தலைவர்களின் இன எழச்சிப் போர் முரசம்


பவள விழா மாட்சிகள்

- பேராசிரியர் நம்.சீனிவாசன் -

திராவிடர் கழகத்தின் பவளவிழா மாநாடு. நீதிக் கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது 1944ஆம் ஆண்டு. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு நடைபெற்றது சேலத்தில். உருண்டோடிவிட்டன 75 ஆண்டுகள். 1944ஆம் ஆண்டு மாநாட்டில் பங்கு பெற்ற சுயமரியாதை வீரர்கள் சிலர் 2019 பவளவிழா மாநாட்டிலும் கலந்து கொண்டமை மகிழ்ச்சியின் உச்சம். 1944 சேலம் மாநாட்டிலே உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி கழகத் தலைவராக, 86 வயது நிறைந்த முதுபெரும் தலைவராக, தமிழகத்தின் மூத்த தலைவராக மாநாட்டில் முழக்கம் நிகழ்த்தியது திராவிடர் இனத்திற்குக் கிடைத்தபேறு.

75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம் தமிழ் மண்ணில் நிகழ்ச்சிய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம்! ஏராளம்! சமுகநீதிப் பணியில், ஜாதி ஒழிப்பில், பெண்ணுரிமை காப்பதில், பகுத்தறிவு பரப்புவதில், தமிழர் நலம் பேணுவதில், தமிழக உரிமையினை நிலைநாட்டுவதில், மூடநம்பிக் கையினை ஒழிப்பதில், பார்ப்பன ஆதிக்கத்தைத் தடுப்பதில், பண்பாட்டுப் படையெடுப்பை ஒடுக்குவ தில் மகத்தான சாதனை படைத்திருக்கின்றது. வரலாற் றில் அழியாப் புகழ் படைத்த கழகம் - ரத்தம் சிந்தா புரட்சி நடத்திய கழகம் பவளவிழா மாநாடு நடத்து கிறது என்றால் அது மனிதநேயத் திருவிழா. மதச் சார்பற்ற பெருவிழா. நன்றி தெரிவிக்கும் நல் விழா. கூடிக் கொண்டாடும் கொள்கை விழா. சேலம் அம்மாபேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபம் கூட்டநெரிசலில் திணறுகிறது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தம் தலைமையுரையில் கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் பெரியாரின் தலைமை 29 ஆண்டுகள், மணியம்மையாரின் தலைமை 5 ஆண்டுகள், தமிழர் தலைவரின் தலைமை 41 ஆண்டு கள் என்று பட்டியலிட்டார். 9000 ரூபாய் வருமான வரம்பாணையை ஒழித்த வரலாற்றை விளக்கினார். மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்திட கழகத்தின் செயல்பாட்டை அடுக்கினார். வீடுதோறும் வீரமணி என்று பெயர் சூட்டுங்கள் என்று வேண்டு கோள் விடுத்தார்.

முத்தான 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. கழகத்தின் வெளியுறவுச் செயலர் கோ.கருணாநிதி அவர்கள் தீர்மானங்கள் குறித்து பேசும்போது இத்தீர்மானங்கள் எதிர்காலத்தில் சட்டமாகும் - நிறைவேற்றப்படும் என்றார். திராவிடர் கழக வரலாறு நூலினை வெளியிட்டு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது "இது யான் பெற்ற பேறு" என்றார். இது இயக்கத்தின் வரலாறு அல்ல; இனத்தின் வரலாறு என்றார். திராவிடர் என்ற பெயர் குறித்த வரலாற்றை விவரித்தார். இந்நூல் வரலாறு மட்டும் பேசவில்லை. கொள்கையையும் பேசுகிறது என்றார். காந்தியை மகாத்மா என்று புகழ்ந்ததற்கான காரணங்களையும், அதன்பின் அவரைக் கொன்ற தற்கான காரணங்களையும் சுருக்கமாய்ப் பட்டிய லிட்டார்.

மனிதநேயக் கட்சி நிறுவனத் தலைவர் பேராசிரி யர் எம்.எச்.ஜவாஹிருல்லா உரையாற்றும்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு மாணவனாக இருந்து தமிழர் தலைவர் உரை கேட்டு சிலிர்த்து நின்றதை விவரித் தார். முஸ்லிம்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவை தொகுத்துரைத்தார். கழகக் கொள்கை நாடு முழுவதும் தேவை என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தம் உரையில்:- பொதுவுடமை இயக் கத்தையும், திராவிடர் கழகத்தையும் பிரிக்க முடியாது என்றார். என்றும் தொடரும் உறவு என்றார். திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்றார். திராவிடர் கழகத்தில் தலைமுறை இடைவெளி இல்லை என்றார். கொள்கை வயப்பட்ட குடும்பங்கள் என்று பாராட் டினார்.பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பெற்ற வாக்கு 33 சதவீதம் மட்டுமே 'திராவிடர் கழக வரலாறு' நூலினை 50 பிரதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பணம் கொடுத்து வாங்கும் எனும் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தம் வாழ்த்துரையில், பெரியார் மேடையில் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழர் தலைவர் வீரமணி மேடையில் இருக்கும்போது என்றார். தமிழ் நாட்டில் மோடி மீது வெறுப்பு இல்லை. தத்துவத்தின் மீது வெறுப்பு. அதனால்தான் தேர்தல் தோல்வி என்றார். காஷ்மீர் பிரச்சினையை கால வரிசைப்படி அடுக்கினார். தேர்தல் வெற்றிக்கு தந்தை பெரியாரே காரணம். தியாகிகள் நிறைந்த கூட்டம் திராவிடர் கழகம் என்று மனம் திறந்து பாராட்டினார்.

'பவள விழாக் காணும் திராவிடர் கழகம்' எனும் கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். ஏராளமான வரலாற்றுச் செய்திகளை அடுக்கினார். 1925ஆம் ஆண்டு இந்திய அரசியலில் முக்கியமான ஆண்டு என்று தொடங்கி திராவிடர் கழகம் தொடக் கம், கறுப்புச் சட்டைப் படை உருவாக்கம், கழகக்கொடி உருவாக்கம், சமூக நீதிப் போராட்டம், ராமன் பட எரிப்பு, இராவண லீலா என்று பல்வேறு தகவல்களை விரைவாக பதிவு செய்தார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து 'வெள்ளி விழா 1944 - 1969' எனும் தலைப்பில் கருத்து மழை பொழிந் தார். அரிஸ்டாட்டில் பெருமையுடன் தொடங்கிய உரையில், கருப்புச்சட்டை மாநாடு, இந்திய விடுதலை நாள், காந்தியார் மறைவு, கருப்புக்கொடி காட்டும் போராட்டம், குடியரசு தினம் குறித்து பெரியாரின் கருத்து, இட ஒதுக்கீட்டுக்காக பெரியார் நடத்திய போராட்டம், அரசியலமைப்பு முதல் சட்டத்திருத்தம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு என்று மிகச்சிறப்பாக கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் 'பொன்விழா 1969 - 1994' எனும் தலைப்பில் வரலாற்றுச் செய்திகளை கணீர் என்று முழங்கினார். தந்தை பெரியார் - மணியம்மையார் - ஆசிரியர் வீரமணி முப்பெரும் தலைமை கண்ட காலம் தான் 1969 - 1994 என்று குறிப் பிட்டார். கழகம் நிகழ்த்திய சமூகநீதி சாதனைகளைப் பட்டியலிட்டார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 'பவள விழா 1994 - 2019' எனும் தலைப்பில் செய்திகளை - கருத்துக்களை வாரி வழங்கினார். தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் உயிருக்குக் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களைப் பட்டியலிட்டார். நேர நெருக்கடியின் காரணமாக கருத்தரங்க உரையாளர்கள் மிகமிகச் சுருக்கமாக உரை நிகழ்த்த அவர்களின் உரை "விடு தலை"யில் விரிவாக வெளிவரும் என்று உத்தரவாதம் அளித்தார் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுரை ஆற்றினார். வரலாறு படைக்கும் நிகழ்வு என்று நெகிழ்ந்த தலைவர் அவர்கள் 1944ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டை நினைவு கூர்ந்தார். பெரியார் இல்லை, மணியம்மை யார் இல்லை, ஆனால் இயக்கம் இருக்கிறது. காரணம் நானில்லை. கொள்கைக் குடும்பங்கள் நீங்களே என்று தோழர்களைப் பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் சந்தித்த அவமானங்களை எடுத்துரைத்தார். பெரியாருக்கு வாய்த்த எதிரிகள் நாணயமானவர்கள், நமக்கு வாய்த்த எதிரிகள் சூழ்ச்சிக்காரர்கள் என்ப தைப் புலப்படுத்தினார். கொள்கைக்காக சர்வபரித்தி யாகம் செய்ய தயாராக வேண்டும். பல தளங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

தோழர்களை தோள்மீது தூக்கி உலகிற்குக் காட் டிய தலைவர் பெரியார். தமிழர் என்பது மொழிப் பெயர்; திராவிடர் என்பது இனப்பெயர் என்று விளக்கம் அளித்தார் பெரியார். திராவிடர் என்பது பண்பாட்டு அடையாளம். திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக் காரணத்தை அழகுற விளக்கினார். பெரியாரின் கூற்றுக்களையே மேற்கோள் காட்டினார். அரசியல் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தாது. பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் பணியைச் செய்யும். ஆரியம் தான் எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது. ஆரியத்தையே ஏமாற்றியவர் அண்ணா. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியினை சேலத்தில் நடைபெற்ற ராமன் பிரச்சி னையை, வரலாற்றை நினைவு கூர்ந்தார். லட்சிய பயணம் தொடரும், எதிர்நீச்சல் தொடரும் ஜாதியை ஒழிப்போம்; புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் முத்தாய்ப்பாக.

மாலை சேலம் மாநகரில் பிரமாண்டமான பேரணி, கழக நிகழ்ச்சிகளில் ஊர்வலம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது தமிழர் தலைவரின் விருப்பம். பேரணி என்பது பிரச்சார உத்தி. கழகக் கொள்கையினைப் பொதுமக்களுக்குப் பறைசாற்றும் ஊடகம். உணர்ச்சியை ஊட்டும் கலை வடிவம். இயக்க வலிமையைக் காட்டும் ஏற்பாடு. சீருடை தரித்தோர், கருஞ்சட்டை அணிந்தோர், கழக ஆதர வாளர்கள் கட்டுக்கோப்புடன் பேரணியில் அணி வகுத்தனர். கழகத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப் பட்டு தலைமைக் கழகம் வழங்கிய முழக்கங்களை மட்டுமே உரத்து ஒலித்தனர். தோழர்களின் கரங்களில் கழகக் கொடி சாலையின் இருபுறங்களிலும் பொது மக்கள். கண்கொள்ளாக்காட்சி! திருவள்ளுவர் சிலை அருகே நின்று ஊர்வலத்தைப் பார்வையிட்டு மகிழ்ந் தார் தமிழர் தலைவர். தமிழர் தலைவர் அவர்களை வணங்கி பாசத்தினை வெளிப்படுத்தி ஊர்வலம் நடந்து கடந்தது. சிறு அசம்பாவிதம் இல்லை. காவல் துறையினர் கவலையின்றி கடமையாற்றினர்.

சேலம் கோட்டை மைதானத்தில் மாநாட்டு நிறைவு விழா. கண்கவர் பந்தல், வெண்பட்டு ஒத்த தூய விதானம். வெள்ளை ஒளி உமிழ்ந்த ஹாலோஜன் விளக்குகள், மைதானம் முழுவதும் இருக்கைகள். இருக்கைகளில் ஜனத்திரள். மேடையைச் சுற்றிலும் கூட்டம் மொய்த்தது. விழா களைகட்டியது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாகப் பெற்ற பெயர் மாற்றத்தினையும், பெரியார், மணியம்மையார், ஆசிரியர் தலைமையில் இயக்கம் போட்ட எதிர் நீச் சல்களையும், திராவிடர் கழகத்தின் சாதனைகளையும், 1929ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதலாவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டங்களாக வடிவம் பெற்றதையும் தொகுத்துரைத் தார். திராவிடர் கழகத்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டதை முதலாவது சட்ட திருத்தம், 76ஆவது சட்டத்திருத்தம், 93ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்டதை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றும்போது, தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழகத்தின் முகத்தோற்றம் மாறி இருக்கும் என்றார். பெரியாருக்குப் பின்னால் பகுத்தறிவுச் சுடரை அணையாமல் காத்த பெருமை தமிழர் தலைவரைச் சாரும் என்றார். இட ஒதுக்கீடு உரிமையை முழங்கினார். பெரியார் - ஜீவா - சிங்காரவேலர் இணைந்து பணியாற்றிய காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் கொள்கை பிரகடனத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தந்தை பெரியாரின் அருஞ்சாதனையைக் கொண்டாடி மகிழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம், ஆண் - பெண் சம உரிமை, வர்ணா சிரம தர்ம எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு. எழுத்துச் சீர்திருத்தம் என்று பெரியாரின் பெருஞ்சாதனைக ளைப் பட்டியலிட்டார். மார்க்சிஸ்ட்டும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பூரிப்புடன் வெளிப்படுத்தினார். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கேரள மாநிலம் நிறைவேற்றி இருப்பதை பெருமிதத்துடன் எடுத்து ரைத்தார்.

மதிமுக அவை தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் துரைசாமி அவர்கள் உரை நிகழ்த்தும் போது 75 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய ஜாதிக் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டினார். அண்ணா வின் சாதனைகளை அடுக்கினார். விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் தம் உரையில், தமிழ்நாடு தனித்துவமாக விளங்க பெரியாரே அடிப்படை என்றும், ஜாதி ஒழிப்புக் குரல், சமஸ்கிருத எதிர்ப்புக் குரல், இந்துத்துவ எதிர்ப்புக்குரல், நீட் வேண்டாம் எதிர்ப்புக்குரல் எல்லாவற்றிற்கும் வேர் பெரியாரே என்றார். ஜாதிக் கொடுமையை 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்து விட முடியாது. திராவிடர் கழகம் இல்லாமலிருந்தால் மான உணர்ச்சிமிக்க திருமாவள வன் இல்லை என்று முழங்கினார். ஆதிக்கத்தை ஒழிக்க வந்தவர் பெரியார். ஜாதி வெறுப்பு அரசியலை அவர் வளர்க்கவில்லை. சமுகநீதி தான் கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்த கையாண்ட போர்த் தந்திரம் கடவுள் மறுப்பு.

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் உரையாற்றும் போது, பெரியார் இறைமறுப்பாளர். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் பெரியாரை மறுப்பதில்லை என்றார். இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடி முஸ்லீம்லீக் என்றார்.

மாநாட்டு நிறைவு விழாவின் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரையில் தளபதி மு.க.ஸ்டா லினை நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழாரம் சூட்டினார். இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. தொண்டறச் செம்மல்களுக்கு வீரவணக்கம் என்று தமிழர் தலைவர் உரையைத் தொடங்கினார். திராவிடர் கழகமும், திமுகழகமும் அண்ணா சொன்னதைப் போல இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார். மாநாட்டுக் கூட்டத்தை கருங்கடல் என்று வருணித்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கக் காரணம் சமூகநீதி தான். பெரியார் இல்லாதபோதும் சமூகநீதி தத்துவம் வென்றிருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் முதல் திருத்தம் நடைபெறு வதற்கும், 76ஆவது திருத்தம் செய்யப்படுவதற்கும், 93ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும் திரா விடர் கழகமே காரணம் என்பதை தெளிவுபடுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீடு பற்றி விவாதம் செய்ய வேண்டுமென்று கூறியது சூழ்ச்சி என்று உணர்த்தினார்.

அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து மனுதருமச் சட்டத்தைக் கொண்டுவர இந்த ஆட்சி துடிக்கிறது. மனு தர்மத்திற்கும் - சம தர்மத்திற்கும் போராட்டம். கோல்வாக்கரின் சிந்தனையை ஞானகங்கை நூல் கொண்டு நிறுவினார். தந்தை பெரியாரின் உரையினை எழுச்சியாக எடுத்துரைத்து லட்சிய வாழ்வு வாழ்வோம் என்று முத்தாய்ப்பாக தலைமையுரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தள பதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்தினார்கள். தாய்க்கழகத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார். தமிழர் தலைவரின் உழைப்பை, செயல்பாட்டை வியந்து உரைத்தார். 90 வயதில் தந்தை பெரியார் எழுதிய உடல் நலம் குறித்து வடித்த சொல்லோவியத்தைப் படித்தார். அதன் பின் பெரியார் நடத்திய பிரச்சாரம் வேகத்தை புள்ளிவிவரம் மூலம் வெளிப்படுத்தினார். நியுயார்க் நகரிலிருந்து தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய அற்புதக்கடிதத்தை கூட்டத்திற்குத் தெரியப்படுத்தினார். திராவிட இயக்கம் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டார். கூட்டம் ஆரவாரித்தது. பெரியாரும், அண்ணாவும் பிரிந்தாலும் ஒரே கொள்கையைப் பேசினார்கள். ஒரு மரத்துக்கனிகள், ஒரு தாய் மக்கள், எல்லா இயக்கத் திற்கும் பொதுவானவர் பெரியார். ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால் தட்டிக் கேட்போம். அதனை தேசவிரோதம் என்பதா? என்று வினா எழுப்பினார். தந்தை பெரியாரின் பயணத்தை தொடர்வோம் என்றார்.

திராவிடர் கழகத்தின் பவளவிழா மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. கூட்டம் கலைந்தது. ஆனால் நினைவுகள் ஒவ்வொரு தோழர்களின் நெஞ்சிலும் நிழலாடியது என்பது மறுக்க இயலாது.

- விடுதலை நாளேடு, 28.8.19

திராவிடர் கழக பவள விழா மாநாடு (சேலம்-27.8.2019) மாட்சிகள்


சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.8.2019)

சேலம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.8.2019)



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பவள விழா மாநாடு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.



தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசுவும், அன்னை மணியம்மையார் படத்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை ஆத்தூர் ஏ.வி. தங்கவேலுவும் திறந்து வைத்தார்கள்.



பெரியார் சமூகக் காப்பணியினர்  தமிழர் தலைவருக்கு அணி வகுப்பு மரியாதை செலுத்தினர்.

சேலம் மாநகரெங்கும் கழகக் கொடிகள் தோரணங்களின் அணிவகுப்பு அனைவரையும் மாநாட்டுத்திடலை நோக்கி வரவேற்ற மாட்சி!

திராவிடர் கழக பவள விழா மாநாடு தொடங்கியது

சேலம்,ஆக.27, நீதிக்கட்சி 1944இல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்ற அதே சேலம் நகரில் இன்று (27.8.2019) திராவிடர் கழகத்தின் 75ஆம் ஆண்டு விழா, திராவிடர் கழக பவள விழா மாநாடு தொடங்கி நடைபெறுகிறது.

திராவிடர் கழக பவளவிழா மாநாடு இன்று (27.8.2019) நடைபெறுவதை சேலம் மாநகரின் எல்லை தொடங்கி மாநகரின் மூலை முடக்குகளிலெல்லாம் விளம்பரங்கள் பறை சாற்றின. பொதுமக்களே மாநாட்டு அரங்கிற்கு வழி சொல்லும் அளவிற்கு அனைத்து தரப்பினரின் பெரும் ஆதரவுடன் மாநாடு  எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

கருங்கடலானது சேலம் மாநகரம் எனும்வண்ணம் திராவிடர் கழக பவள விழா மாநாடு கருப்புடை தரித்தவர்கள் பெருந்திரளாக குடும்பம்குடும்பமாக திரண்ட எழுச்சியைக் கண்டுள்ளது. இந்நாள் சேலம் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

சேலம் மாநகரில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என கழகத் தோழர்கள் முழக்கமிட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்த பெரியார் சமூகக் காப்பு அணி தோழர்களின் கட்டுப்பாடான  பயிற்சி, கட்டளைகள் அனைத்தும் அழகுத் தமிழில். அடடா! கட்டுப்பாட்டின் இலக்கணமே கருஞ்சட்டைத் தோழர்கள். அவர்களில் இராணுவ மிடுக்குடன் சீருடையுடன்  அழகுத் தமிழ் கட்டளை யுடன் பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர்களின் பயிற்சியைக் கண்ட அப்பகுதி மக்கள்  மலைத்தனர் .

ஆரிய ஆதிக்கத்தின் ஆணிவேரை அகற்றும் பணியில் தன் இறுதி மூச்சு வரை அயராது தொண்டாற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்  காட்டிய வழியில் நூற்றாண்டு விழா காணும் அன்னை மணியம்மையாரைத் தொடர்ந்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைப் பட்டாளம் அன்றிலிருந்து சளைக்காமல் களம் கண்டு வருகிறது.

ஆரிய ஆதிக்கம், சுரண்டல் எந்த இடத்தில் தலை தூக்கினாலும் முன்னதாகவே, அதை அடையாளம்   கண்டு அதைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்கும் இன உரிமைப்போரில் தமிழர் தலைவர் தலைமையில் தமிழகம் அணிதிரண்டுள்ளது.

பகுத்தறிவு இசை - நிகழ்ச்சி

திராவிடர் கழக பவளவிழா  மாநாடு இன்று (27.8.2019)சேலம் அம்மாப்பேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபத்தில் எடப்பாடி இராமன் நினைவு முகப்பில் அன்னை மணியம் மையார்  நினைவரங்கத்தில் காலை 8.30 மணிக்கு கலைமாமணி டாக்டர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றது.  மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் ஒருங்கிணைப்பில் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு கலைநிகழ்ச்சியுடன் பா.மணியம்மை, புதுவை குமார் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் கலைநிகழ்ச்சியில் சிறப்பு சேர்த்தன.

கலைக்குழுவினருக்கு சிறப்பு

திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம், ரமேஷ், அன்வர், செல்வம் குழுவினருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்..

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பழநி.புள்ளையண்ணன் வரவேற் புரை ஆற்றினார்.

மாநாட்டின் தலைவரை கழகத் துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி முன்மொழிந்து உரையாற்றினார்.

மாநாட்டின் தலைவரை வழிமொழிந்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் வழிமொழிந்து உரையாற்றினர்.

தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, பவள விழா காணும் திராவிடர் கழகம் வாழ்க எனும் முழக்கங்களைத் தோழர்கள் முழங்க, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் மாநாட்டினை  திறந்துவைத்து உரையாற்றினார். 1944 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு உள்ளிட்ட பல்வேறு கழகச் செயல்பாடுகளில் தம் பங்களிப்பு குறித்தும், கழகத்தின் மாநில மாநாடுகள், மாநாட்டுப் பேரணிகளில் பரிசு பெற்ற மாவட்டம் மற்றும் மாநாடுகளுக்கான நன்கொடை வசூலிப்பில் பாராட்டு பெற்ற மாவட்டம் சேலம்  என்று குறிப்பிட்டார். கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க கட்டுப்பட்டு செயல்பட இலட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என்று பெருமிதத்துடன் கூறினார்.

படத்திறப்புகள்

தந்தை பெரியார் படத்தை பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு திறந்து வைத்து உரையாற்றினார்.

சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சிக்கு தலைவராக தந்தை பெரியார் நியமிக்கப்பட்டார். தேர்தலில் நிற்காத தந்தை பெரியாரை அரசியல் கட்சிக்கு தலைவராக்கிய போது, நீதிக்கட்சி 1944இல் திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் பெரியார் மண் இது என்றார்.

சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல்  திறந்தவைத்தபோது, மாநாட்டில் தோழர்களால் வீரவணக்கம் வீரவணக்கம், சுயமரியாதை சுடரொளிகளுக்கு வீரவணக்கம் என்று முழக்கமிடப்பட்டது.

ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் பக்தராக இருந்தபோது தந்தைபெரியார் உரையை முதல்முறையாக கேட்டதாகவும், அப்படி பெரியார் உரையைக் கேட்ட போது ஏற்பட்ட சிலிர்ப்பை உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார்.

கழகக் குடும்பத்தினரிடையே நீந்தி வந்தார் தமிழர் தலைவர்

கழகக் குடும்பத்தலைவர்  தமிழர் தலைவர்  முகத்தில் புன்னகை தவழ, கழகக் கொடியேந்தியபடி கழகக் குடும்பத்தினரிடம் நேரில் சென்று ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அனைவரையும் வரவேற்றார். அனைவரும் தமிழர் தலைவரின் அன்பைக் கண்டு பெருமகிழ்வு அடைந்தனர்.

தீர்மான அரங்கம்

தீர்மான அரங்கத்தின் தலைமையுரையை கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ஆற்றினார்.

தீர்மான அரங்கத்தில் மாநாட்டின் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு பார்வையாளர்களிடையே வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

முன்னதாக தீர்மான அரங்கில் கழக மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் வரவேற்புரையாற்றினார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர்  மஞ்சை வசந்தன்,  மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் ஆத்தூர் த.பிரபாகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  தென் மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர் சீ.டேவிட் செல்லதுரை, வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன், வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் அகிலா எழிலரசன்,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், சென்னை மண்டல மகளிரணி செயலாளர் ஓவியா அன்புமொழி, திருவாரூர் மாவட்ட தலைவர் மோகன், நாகை மாவட்ட செயலாளர் பூபேஷ்குப்தா,பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ், அரியலூர் மாவட்டத் தலைவர் சிந்தனைச் செல்வன், மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் முத்து.கதிரவன், கோவை மண்டலச் செயலாளர்  கோவை ம.சந்திரசேகரன், திருச்சி மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட் ஆகியோர் 25 தீர்மானங்களை வாசித்து முன்மொழிந்து உரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினர்களுக்கு மாநாட்டில் சிறப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்பயனாடை அணிவித்து பவள விழா மாநாடு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு

பொத்தனூர் க.சண்முகம், இராசகிரி கோ.தங்கராசு, ஆத்தூர் தங்கவேல்  ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நூற்றாண்டு விழா காணும் அன்னை மணியம்மையார் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்குறித்து கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி  கருத்துரை யாற்றினார்.

மாநாட்டுத் தலைவர் கழகத் துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று திராவிடர் கழகத்துடன் சேலம் மாநகர் கொண்டுள்ள வரலாற்று சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார்.

சமூக நீதித் தடத்தில் கழகம் கண்ட களங்களை விளக்கிப் பேசினார்.

நீதிக்கட்சி திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு மற்றும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டியதன்  அவசியம்குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

1944 மாநாட்டின் தீர்மானங்கள் இன்றைக்கும் பேசப்படு வதைப் போல இன்று திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று குறிப் பிட்டார்.

நூல் வெளியீடு

தமிழர் தலைவர் நூல் வெளியீட்டு விழாவில் உரையில் அனைவரும் புத்தகங்களுடன் வீடு திரும்ப வேண்டும் என்றார்.

-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள திராவிடர் கழக வரலாறு'' நூல் வெளியிடப்பட்டது. நூலின் நன்கொடை மதிப்பு ரூ.700. நூல் வெளியீட்டு விழாவில் மாநாட்டில் ரூ.100 கழிவு போக ரூ.600க்கு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் திராவிடர் கழக வரலாறு நூலின் 50 பிரதிகளை அதற்கான தொகையை அளித்து பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழக வரலாறு'' நூலை வெளியிட்டு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினார்.

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் இராயபுரம் இரா.கோபால், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் திண்டுக்கல் அ.மோகன் மற்றும் பலர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

வாழ்த்தரங்கம்-மாநாட்டில் தலைவர்கள் உரை

தமிழகத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தரங்கில் உரையாற்றினார்கள்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பெரியார் சமூகக் காப்பு அணி பொறுப்பாளர்கள் பெரியார் செல்வன், சோ.சுரேஷ், அண்ணா.சரவணன், திமுக மேனாள்சட்டமன்ற உறுப்பினர் குழந்தை.தமிழரசன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் காலை நேர அமர்வில் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றினார்.!

சேலம் பவள விழா மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு  தோழர்கள் புடைசூழ திருப்பத்தூர் கே.சி.எழிலரசன்  பயனாடை அணிவித்து வரவேற்றார்.

- விடுதலை நாளேடு, 27. 8 .19

சேலம் - திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில் போர்ப் பிரகடன தீர்மானங்கள்

சமூகநீதிக்கு எதிரான சக்திகளை - சட்டங்களை முறியடிக்க


அனைவரையும் ஒருங்கிணைத்து களம் இறங்குவோம்!


எந்த விலையையும் கொடுக்கத் தயார்! தயார்!!




* அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைவருக்கும் தமிழகக் கோவில்களில்


அர்ச்சகர் நியமனம் உடனே வழங்குக!


* தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக! நீட்டை நீக்குக!!


* சினிமா கவர்ச்சி அரசியலைப் புறந்தள்ளுக!




சேலம், ஆக.27 சமூகநீதிக்கெதிரான சக்திகளை, சட்டங்களை முறியடிக்க அனைவரையும் ஒருங்கிணைத்து களம் காண் போம் என்ற போர்ப் பிரகடனத் தீர்மானம் உள்பட 25 மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1 :

சுயமரியாதை சுடரொளிகளுக்கு

வீர வணக்கம்! வீர வணக்கம்!!

75 ஆண்டுகால திராவிடர் கழக வரலாற்றில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, இயக்கத் தொண்டாற்றி, போராட்டக் களங்கள் பல கண்டு வெஞ்சிறை ஏகி புது வரலாறு படைத்த வீரஞ்செறிந்த கருஞ்சட்டைத் தொண் டர்களாகக் குடும்பம் குடும்பமாக ஒப்புவமையில்லாத வகையில் சமூகப் புரட்சித் தொண்டில் ஈடுபட்ட தகத்தகாய சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு திராவிடர் கழக பவள விழா மாநாடு தன் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒப்புவமை இல்லாத அவர்கள் போட்டுத்தந்த தீரமிகு நன்றிபாராத தியாகப்பாட்டையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையில் அன்னை மணியம்மையாரின் தியாக உணர்வை நெஞ்சில் ஏற்று தந்தை பெரியாரின் பணி முடிப்போம் பணி முடிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

தீர்மானம் எண் 2 :

1944 சேலம் மாநாட்டுத் தீர்மானம்

இன்றைக்கும் தேவையே!

நீதிக்கட்சியின் பெயரை அதாவது தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று மாற்றப்பட வேண்டும் என்றும், பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்திருக்கும் பட்டம், பதவிகளை விட்டுவிட வேண்டும் என்றும், தேர்தல்களிலே நமது இயக்கம் கலந்து கொள்ளக்கூடாது என்றும், தந்தை பெரியார் அவர்களால் தயாரித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தம் பெயரில் கொண்டு வராமல், பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயரால் கொண்டு வரச் செய்து, அண்ணாவைப் பெருமைப்படுத்தினார் தந்தை பெரியார். அண்ணாதுரை தீர்மானங்கள் என அழைக்கப்படும் அத்தீர்மானங்கள் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27 ஆம் தேதி சேலத்தில் அறிவாசான் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், வருணாசிரமக் கொடுமை ஒழிப்பு, சமயம், கோவில், கல்வி குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமாக்கு வதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமே. இந்த கார ணங்கள் இன்றைக்கும் தேவைப்படுகின்றன என்பதை கவனத்தில் கொண்டு உரிய வகையில் செயல்படுவது என்று இம்மாநாடு தீர்க்கமாக முடிவு செய்கிறது.

தீர்மானம் எண் 3 :

அ) ஆணவப் படுகொலைகளை தடுக்க

சிறப்பு சட்டம் இயற்றுக!

ஜாதி மத மறுப்புத் திருமணங்களை செய்து வரும் இளைஞர்களை படுகொலை செய்யும் ஜாதி ஆணவக் கொலைகாரர்களுக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரி விக்கிறது. இத்தகைய ஜாதி ஆணவப் படுகொலைக்குக் காரணமான ஜாதியை,  தீண்டாமையை ஒழிக்கும் போராட் டத்தில், பெரும்பணியில் அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றுவது என்றும், பிரச்சாரம் செய்வது என்றும்  தீர்மானிப்பதோடுஅதே நேரத்தில் இத்தகைய கொலை களை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றி, அதனைத் தீவிரமாக செயல்படுத்த வேண்டுமாய் மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) மாணவர்களிடம் ஜாதி பாகுபாட்டை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

மாணவர்களிடையே ஜாதி அடையாளத்தைக் காட்டும் வகையில் வெவ்வேறு வண்ணங்களில் கைகளில் கயிறு கட்டும் கேவலமான செய்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய ஜாதீய வேற்றுமைகள் தடுக்கப்பட வேண்டும்; இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசு இதில் உறுதியுடன் செயல்பட்டு, பிஞ்சு உள்ளங்களில் ஜாதி நச்சு விதைகளை விதைக்கும் விபரீத போக்கு எந்த வகையிலும் தலையெடுக்க விடாமல் செய்வதில் உறுதியாக நிற்க வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இ) ஜாதிக்கென்று தனி சுடுகாடுகள், தேனீர்க் கடை களில் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி கிளாஸ் முறை உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4 :

அ) அனைத்து ஜாதியினர்க்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப் படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநில இடதுசாரி அரசு 60-க்கும் மேற்பட்ட கோவில்களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நிய மித்துள்ளது. தமிழ் நாட்டில் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்ற ஒருவர் மட்டுமே இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மேலும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினர்க்கும் உடனடியாக பணி நியமனம் செய்யுமாறு இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிப்பாட்டுச் சின்னங்களும் கூடாது  என்ற அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும் சில சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும். இதனை தடுத்து நிறுத்திட தமிழ் நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.



தீர்மானம் எண் 5 :

சமூகநீதிக்கு என்றுமே எதிரான

பார்ப்பன சக்திகளின் போக்கு

நீண்டகாலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்டமக்களுக்கு இடஒதுக்கீடு என்பது சமூக நீதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கக் கோட்பாடாகும். இந்த சமூகநீதிக்குத் தொடக்க முதலே பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளும் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளன.

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தக் கூடாது என்று பார்ப்பன சங்கத்தார் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அதனை எதிர்த்து திராவிடர் கழகம் உண்ணும் போராட்டத்தை நடத்தி, பார்ப்பனசங்கத்தின் நோக்கம் முறியடிக்கப்பட்டது.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் வேலைவாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் பிரகடனப் படுத்திய காரணத்தால், அதுவரை வெளியிலிருந்து வி.பி.சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த பி.ஜே.பி., தன் ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி.சிங் தலைமையிலான சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்தது என்பதைத் தெரிந்துகொண்டால், சமூகநீதியின் மீது இச்சக்திகளுக்குள்ள வெறுப்பு-எதிர்ப்பு வெளிப் படையாகவே தெரியவரும்.

ஆர்.எஸ்.எஸின் 'பஞ்சான்யா இதழுக்கு (20.9.2015) ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில், இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

திராவிடர் கழகம் உள்ளிட்டகட்சிகள், தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், அப்பொழுது பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நேரம் என்பதால், கடும் பாதிப்பு பி.ஜே.பி.க்கு ஏற்படும் என்ற நிலையில், தனது கருத்தினை விலக்கிக் கொண்டதாகப் பாசாங்கு செய்தார்.

இப்பொழுதும் அதே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மீண்டும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றுகூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப்பலம் இருக்கும் ஒரே காரணத்தால், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, அவர்களின் நிகழ்ச்சி நிரலை அவசர அவசரமாக நிறைவேற்றிடத் துடித்துக் கொண்டுள்ளனர். அதன் வெளிப்பாடே ஆர்.எஸ்.எஸ்.தலைவரின் கருத்தாகும்.

இடஒதுக்கீடு என்பது பேச்சுவார்த்தைகளுக்கோ விவாதப்பொருளுக்கோ (Not Negotiable) அப்பாற் பட்டது என்று 1981 ஆம் ஆண்டிலேயே மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டஒன்றாகும்.

இந்தநிலையில், உயர்ஜாதி ஆதிக்க எண்ணமுடைய மத்திய பி.ஜே.பி. அரசு, இடஒதுக்கீட்டில் கை வைக்கத் துணிந்தால், நாட்டில் மிகப்பெரிய கிளர்ச்சி எரிமலை வெடிக்கும் என்றுஇம்மாநாடு எச்சரிக்கிறது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலை உருவாகும் என்றும் மேலும் இம்மாநாடு அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

விரைவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து பிரச்சாரம், போராட்டம் என்ற வகையில் உரிய நடவடிக் கைகளை திராவிடர் கழகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்றும் இம்மாநாடு திட்டவட்டமாக பிரகடனப்படுத்துகிறது.

தீர்மானம் எண் 6 :

தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019

திரும்பப் பெறுக!

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதமயமான கல்வியை முழுமையாக வணிக மயமாக்குகின்ற இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.

இந்திய பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாடு கேட்டுக்கொள்கிறது.

1976 இல் எமர்ஜென்சி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, மறைமுகமாக கல்வியை முற்றிலும் மத்திய தொகுப்புக்குக் கொண்டு செல்ல எத்தனிக்கிறது.

இந்தியா போன்ற பன்மொழி, பல இனம், பல கலாச் சாரம், பல மதங்கள் கொண்ட நாட்டில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி சார்ந்த அறிவியல் அடிப்படையாகக் கொண்டு இயற்றப் பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதுதான் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் உரிமை சார்ந்த வாய்ப்புகள் கிடைக்க முடியும். இதற்கான முயற்சியை அனைத்துக் கட்சிகளும் எடுத்திட வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாடு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், வலியுறுத் தவும் செய்கிறது. திராவிடர் கழகம் இப்பணியில் உரிய பங்களிப்பையும் அளிக்கும் என்றும் இம்மாநாடு உறுதி கூறுகிறது.

தீர்மானம் எண் 7 :

மாநிலத்தில் உள்ள மத்திய அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு முழு உரிமை

அஞ்சல் துறை, வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில், குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு, அந்தந்த மாநில மொழி கட்டாயம்  தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை வேறு பொருள்படும்படியாக முன்னுரிமை என்று மாற்றியதைத் தொடர்ந்து, மாநில மொழி (தமிழ்) தெரியாத வட மாநிலத்தவர், இந்த பதவிகளிலும் வரக்கூடிய நிலையும், ஆபத்தும் தற்போது அதிகரித்துள்ளன. தமிழ் நாட்டில் படித்துப் பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்காக காத்தி ருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. இது மிக மோசமான சமுகக் கொந்தளிப்பை தென் மாநிலங்களில் உருவாக்கி வருகிறது. மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்வு அர சமைப்பின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும்  நடத்தப்பட வேண்டும். அதிகாரி பதவிகளுக்கான தேர்வுகள், அகில இந்திய அளவில் என்றில்லாமல், மண்டல வாரியாக (தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலம்) தேர்வுகள் இருப்பதுதான் அந்தந்த மாநிலத்தில் உள்ள கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்க முடியும். ஒரு மாநிலத்தில் பணியாற்றும் அனைவரும் அந்த மாநில அரசின் அலுவல் மொழியை தெரிந்திருப்பது கட்டாயம் என்பதையும் உறுதிப்படுத் துவது அவசியமும் தேவையும் ஆகும்.

இதற்கு ஏற்ற வகையில் உரிய சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பிற மாநிலத்தவரின் எல்லையற்ற ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆந்திரா போன்ற சில மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளது போல தமிழ் நாட் டிலும்  அத்தகைய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திராவிடர் கழக பவள விழா மாநாடு, தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8 :

தமிழகத்தில் உள்ளது போல்,

இட ஒதுக்கீட்டிற்கான சட்டம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவரின் முயற்சியால் தமிழ் நாட்டில் 69 இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

மத்தியிலும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீடு சட்டமாக இல்லாமல், வெறும் அரசாணையாகவே உள்ளது.

தமிழகத்தைப் போல், மத்திய அரசிலும் இட ஒதுக் கீட்டிற்கான தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புப் பெறும்வகை யில் அது அமைய வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9 :

அ) மண்டல் குழு பரிந்துரை அனைத்தையும் நிறைவேற்றிடுக!

அரசமைப்புச் சட்டம் 340 பிரிவின்படி அமைக்கப்பட்ட மண்டல் குழு பரிந்துரை முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. இரண்டு பரிந்துரைகள்  கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பரிந்துரைகள்  பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, நீதித் துறையில் இட ஒதுக்கீடு மற்றும் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு  இவை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் அனைத்துத் துறைகளிலும் உரிய பங்கீடு பெற வேண்டுமாயின், மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு மண்டல் குழு பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள 52 விழுக்காடு மக்கள்தொகை அடிப்படையில் உயர்த்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ)கிரீமிலேயர் எனும் கிருமி ஒழிக்கப்பட வேண்டும்:

அரசமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்திட எந்த பிரிவும் கூறிடவில்லை. உச்ச நீதிமன்றம் தேவையற்ற முறையில் இதனைப் புகுத்தியுள்ளது. சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என அரசமைப்புச் சட்டம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. ஆகவே, கிரிமி லேயர் எனும் பொருளாதார அளவுகோலை கொல்லைப் புறவழியாக திணிப்பதை உடனடியாக நீக்கிட மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர திராவிடர் கழக பவள விழா மாநாடு வலியுறுத்துகிறது.

இ) ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வேருக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து குறிப்பிட்ட விழுக்காட்டில் அவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10 :

தனியார்த் துறைகளிலும் தேவை இடஒதுக்கீடு:

தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல்பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், அரசமைப்புச் சட் டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி மற்றும் சமூகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இடஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவ சியமாகிவிட்டது. தற்போதைய ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இவற்றைக் கருத்தில் கொண்டு, தனியார்த் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை மத்திய / மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டுமாய் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11 :

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான உள் ஒதுக்கீடோடு இடஒதுக்கீடு  சட்டத் திருத்தம் தேவை

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் சரிபகுதியாக பெண்கள் உள்ள நிலையில், அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இல்லை. இது சமூக  நீதிக்கு முற்றிலும் எதிரான செயலாகும். நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், பெண் களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும். அந்த சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க்கு உள்ஒதுக்கீடு அளித்திடும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இல்லையேல், உயர்ஜாதி சமூகப் பெண்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கிட்டும் என்பதையும் கருத்தில் கொண்டு உள் ஒதுக்கீடுடன் கூடிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12 :

நீதித்துறையில் சமூக நீதி தேவை

அரசின் முதன்மைத் துறைகளுள் நிர்வாகம், சட்ட மன்றம் ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உள்ள நிலையில், மூன்றாவது துறையான நீதித்துறையில், உச்ச நீதிமன்றம் வரை, இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூக  நீதியாக இருக்க முடியும்.

உச்சநீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும், நீதிபதிகள் பெரும்பான்மையாக உயர்ஜாதியினராகவே உள்ளனர். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த ஒரு அமைப்பில் இத்தகைய போக்கு நிலவுவது சமூக  அநீதியே ஆகும்.

இதனை மத்திய அரசு உணர்ந்து உரிய சட்டம் இயற்றிட இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13 :

நீட் மற்றும் நெக்ஸ்ட் (Next) தேர்வை

நிரந்தரமாக நீக்குக!

திராவிடர் கழகம் எச்சரித்தபடியே, மருத்துவக் கல்லூரியில் சேர நீட் எனும் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களை குறிப்பாக அரசுப் பள்ளியில் படித்த ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதித்துவிட்டது.

வட நாட்டில், நீட் தேர்வு என்பது கண் துடைப்புக்கான தேர்வு, மோசடி என்பதை வட நாட்டுச் செய்தித்தாள்களே அம்பலப்படுத்தி வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா குறித்து, மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. தமிழ கத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வையும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்பதையும் இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 14 :

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி!

சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில் மத்திய அரசு முக்கியமாக பார்ப்பன  உயர் ஜாதியினர்க்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் மிக வேகமாக செயல்படுத்திவிட்டது.

மத்திய அரசின் அனைத்துத் துறைகளின் உயர் பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ள பார்ப்பன-உயர்ஜாதியினர்க்கு இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகளால் தொடரப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பினை விரைவில் வழங்கி, சமூக  நீதியைக் காத்திட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 15 :

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006-ல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எதனையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 16 :

மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும்

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒவ்வொரு மாநிலமும், 15 விழுக்காடு இடங்களை மத்திய அரசிற்கு ஆண்டுதோறும் தருகிறது. முதுநிலை மேல்படிப்பு  இடங்களில் 50 விழுக்காடு இடங் களையும் மத்திய அரசு பெறுகிறது. இந்த இடங்களுக்கு அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அகில இந்திய தொகுப்பிற்குப் பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை அறவே அளிக்காமல், அவை அனைத்தையும் பொதுப் போட்டி இடங்களாக மாற்றி, உயர்ஜாதியினர் பெறும் வகையில் மத்திய அரசு நிரப்பி வருவது வஞ்சகத்தன்மை கொண்டதேயாகும்.

குறிப்பாக தமிழ்நாட்டில், ஆண்டுதோறும் பிற் படுத்தப்பட்டோருக்கான சுமார் 900 இடங்கள், பொதுப் போட்டியாளருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சுகாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நமது மக்கள் வரிப்பணத்தில் உருவாகிடும் மருத்துவக் கல்லூரி களின் இடங்களை, மத்திய தொகுப்புக்கு வழங்குவதால், தமிழ் நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. நீட் தேர்வின் மூலமாக வெளி மாநில மாணவர்கள் அகில இந்திய தொகுப்பில் தமிழ் நாட்டில் பெரும் எண்ணிக்கையில் குவியும் நிலை ஏற்படுகிறது.

தமிழ் நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்லூரி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசுக்கு தரும் தொகுப்பை முற்றிலுமாக ரத்து செய்திட தமிழ் நாடு அரசு உரிய வகையில் முயற்சிக்க வேண்டுமாய் திராவிடர் கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 17 :

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை!

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினரின் கணக்கு மட்டும்தான் எடுக்கப்படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதிவாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், இந்த 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக்காடு தேவை என்று இட ஒதுக்கீடு கேட்டு  வலி யுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரண மாகத்தான், பிற்படுத்தப் பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள தந்திரமாகவே மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் ஜாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர் களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும். ஆதலால், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் சாமர்த்தியமாகத் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப் படையாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரமும் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன் றிணைந்து உரத்த குரல் கொடுக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்த் திடாமல் கண்டிப்பாக ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற் கொள்ள வேண்டுமாய்  மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 18 :

இந்தி  சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிர்ப்பு

மத்திய பாஜக அரசு, இந்தி  சமஸ்கிருதத் திணிப்பை கல்வி, நிர்வாகத் துறைகளில் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள நெடுஞ்சாலைப் பலகை கள், ரயில் பயணச் சீட்டுகள், வங்கிப் படிவங்கள் என அனைத்தும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளன. இதில் தமிழும் கட்டாயம் இடம் பெற வேண்டும்

என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தற்போது மத்திய அரசு கொண்டு வர விரும்பும் தேசியக் கல்விக் கொள்கை, இந்தி-சமஸ்கிருதப் படிப்பை கட்டாயமாக்கியுள்ளது.

தமிழகத்தைத் தாண்டி இன்று பிற மாநிலங்களும்  குறிப்பாக தென் மாநிலங்கள், மேற்கு வங்கம்  போன்ற மாநிலங்களும் இந்தித் திணிப்பை எதிர்க்கின்றன என்ப தைக் கருத்தில் கொண்டு, இந்தி  சமஸ்கிருதத் திணிப்பைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 19 :

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுக!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு நிறைவேற் றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமைத் தகவல் ஆணையருக்கு - தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தகவல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை சீர்குலைக் கும் என்பதில் அய்யமில்லை. எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 20 :

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!

காஷ்மீர் மாநிலத்திற்கு வரலாற்றுப் பின்னணியில் சிறப்பு அந்தஸ்து தரப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனை நீக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ காஷ்மீர் மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரமும் வழங்கப்பட்டது.

ஆனால் மத்திய பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள மிருக பலத்தைக் கொண்டு, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு, காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டாகப் பிரித்து, யூனியன் பிரதேச மாகவும் மாற்றியமைத்தது - சட்ட விரோத நியாய விரோத நடவடிக்கையேயாகும்.

சட்டசபை என்பது அம்மக்களின் கருத்துகளான ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அவையாகும். அதன் ஒப்புதல் இல்லாதது மட்டுமல்ல; முக்கிய முன்னாள் முதல்வர்கள் கருத்துக் கூறுமுன்பே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, 144 சட்டமும் அப்பகுதிகளில் அமல் படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போதைய மத்திய அரசின் பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை என அனைத்துத் துறை களிலும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்ற அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் இந்த முடிவு பார்க்கப் படுகிறது.

மாநில உரிமைகளைக் காத்திட அனைத்துக் கட்சி களும் ஒருங்கிணைந்து போராடிட இம்மா நாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 21 :

தேசியப் புலனாய்வு திருத்த மசோதாவைத்

திரும்பப் பெறுக!

தேசியப் புலனாய்வு திருத்த மசோதா நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் தற்போது மாநிலப் பட்டியலில் இருக் கும் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை அரசியல் சாசனத்துக்கு எதிராக மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளது. மாநிலங்களிலுள்ள முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கும் அதிகாரத்தையும் இந்த சட்டத் திருத்தம் மத்திய அரசுக்கு அளிக்கிறது.

இந்தச் சட்டத்தின்கீழ் அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்துக்கான நீதிபதி கள் நியமிப்பது, அந்த நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது அனைத்துமே மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கும்.

இந்த சிறப்பு நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டுமென்றால் உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குத்தான் செல்ல வேண்டும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானதே!

விருப்பு / வெறுப்பு அடிப்படையில் தனிமனி தரையும் கூட தீவிரவாத முத்திரை குத்தி சிறையில் தள்ளும் பேராபத்தும் உள்ள இச்சட்டத்தை மத்திய அரசு திரும் பப்பெற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 22 :

சினிமா கவர்ச்சி அரசியல்

தமிழ் நாட்டின் பொது வாழ்வில் ஈடுபட்டு, எள்முனை அளவுக்குக்கூட எந்தவிதப் பங்களிப்பும் தமிழ் நாட்டு மக்களுக்கு செய்யாத நிலையில், வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக்கி, அரசியலில் அடி எடுத்து வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்ப வர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழக பொதுமக்களையும், வாக்களர்களையும் இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 23 :

கையால் மலம் எடுக்கும் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வது என்ற பெயரால் மனித உயிர்கள் பலியாவதும் இவை தொடர் வதும் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கிட வேண்டும்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

அரசுத் துறைகளை தனியார்வசம் ஒப்படைக்கக் கூடாது என்று உறுதியான கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும்.

போராடி போராடிப் பெற்ற சேலம் இரும்பாலை பொதுத்துறையிலேயே தொடரப்பட வேண்டும். எக் காரணம் கொண்டும் சேலம் ஆலை தனியார் கைக்குப் போகக் கூடாது  அனுமதிக்கவும் முடியாது என்று இம்மாநாடு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 24 :

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுக!

தமிழன் வீட்டுக் குழந்தைகளுக்குக் கட்டாயமாக தமிழிலேயே பெயர் சூட்டுவது இன, மொழி, பண்பாட்டுத் தளத்தில் மிக மிக அவசியமானது என்பதை உணர்ந்து இதனை ஓர் உறுதி மொழியாகவே ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு செயல்படுத்திட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதனை ஒரு தன்மான அடிப்படை உணர்வாகவே உயிரினும் மேலாகக் கருத வேண்டும் என்றும் மேலும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 25 :

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்!

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மனித சமுதாயத்திற்கு உயிர் நாடியாகும். இயற்கை அழிவு என்பது மக்கள் சமூகத்தின் அழிவேயாகும். குறிப்பாக மரங்களை அழிப் பது என்பது நம்மையே நாம் அழிப்பது என்பதாகும். இந்நிலையில் ஒவ்வொரு குடிமகனும் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் போதிய கவனமும் மிகுந்த அக்கறையும் முக்கிய கடமையும் செலுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மரங்களை வளர்ப்போம்; மழையை அழைப்போம்  என்று ஒவ்வொரு குடி மகனும் உறுதி கொண்டு செயல்படுமாறு  இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 - விடுதலை நாளேடு, 27. 8 .19