சனி, 31 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழகம் எனும் மாற்றம் வெறும் பெயர் மாற்றம் அல்ல!



செ.இளவேனில்


தமிழகத்தில் ஜாதி, மத பேதங்களைத் தாண்டி தொடங்கப்படுகிற எந்தவொரு மாநிலக் கட்சியும் திராவிடம், கழகம் ஆகிய வார்த்தைகளைத் தன் பெயரோடு சேர்த்துக்கொள்ள வேண்டியது இன்றைக்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. இவ்விரு வார்த்தைகளும் 75 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துக்கு மாற்றாக முன்வைக்கப்பட்டன. அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா என்பதால் அத்தீர்மானத்துக்கு ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்ற பெயரும் உண்டு.

அரசு அதிகாரங்களிலும் சமூகத்திலும் தங்கள் செல்வாக்கைக் கோலோச்சிவந்த பிராமணர் களுக்கு இணையாக பிராமணரல்லாதோரும் உரிய பிரதிநிதித்துவமும் அதிகாரப் பங்கும் பெறுவதைக் கனவாகக் கொண்டு இயங்கியது நீதிக் கட்சி. 1920-இல்  சென்னை மாகாணத்தில் ஆட்சியைப்  பிடித்து 1937-இல் ஆட்சியை இழந்த அக்கட்சியின் பாதை ஆட்சியதிகாரத்தை இழந்த பின் இருண்டு போனது. இது ஒருபுறம். இன்னொருபுறம் 1925-இல் தமிழ்ச் சமூகத்தின் சீர்திருத்த இயக்கமாக பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் ஆட்சியதிகாரத்தில் நம்பிக்கை கொண் டிராமல் சமூகச் சீர்திருத்தத்தில் கவனம் குவித்தது. எப்படியும் பிராமணரல்லாதோர் சம உரிமை பெறுவதை இலக்காகக் கொண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்துவந்த இந்த இரு அமைப் புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவையை நீதிக் கட்சி பலவீனமடைந்த சூழல் உருவாக்கியது. பெரியாரின் தலைமையின் கீழ் இவை இரண்டும் ஒன்றிணைந்து புது உருவம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானபோதுதான் ‘திராவிடர் கழகம்’ உருவானது.

வரலாற்றில், ‘நீதிக் கட்சி + சுயமரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்’ என்று எளிமையாக அது சுருக்கப்பட்டாலும் இந்த மாற்றமானது வெறும் பெயர் மாற்றம் மட்டுமே அல்ல. பெரியாரும் அண்ணாவும் இணைந்து புதிதாக உருவாகிவந்த உலக மாற்றங்களுக்கும் உள்ளூர் களத்துக்கும் ஏற்ப உள்ளும் புறமுமாக இரு போர்களுக்குப் புதிய இயக்கத்தைத் தயார் படுத்தினர். 1. பிராமணியத்துக்கு எதிரான இயக்கம் என்ற பெயரில் தொடங்கி காலப்போக்கில் பிராமணரல்லாதோரின் அதிகார வேட்கைக்கான களமாக எஞ்சிவிட்டிருந்த நீதிக் கட்சிக்கு உள்ளே இருந்த கரும்புள்ளிகளைத் துடைத்தெறிவது. துடைத்தெறிந்து சாமானியர்களின் அமைப்பாக அதை உருமாற்றுவது. 2.உலகப் போர்ச் சூழலில் மாறிக்கொண்டிருந்த புதிய அரசியல் பருவ நிலையில் தமிழர்களின் தனி நாடு, சம உரிமை, சம அதிகாரக் கனவுகளுக்கான இயக்கமாகப் புதிய அமைப்பைக் கட்டியெழுப்புவது!

இந்த மாநாட்டில், ‘பிரிட்டிஷாரால் அளிக்கப் பட்ட சர், திவான்பகதூர் போன்ற பட்டங்களை இயக்கத்தினர் விட்டொழிக்க வேண்டும்’ என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இங்கே சுட்டிக்காட்டலாம். சேலம் மாநாட்டுக்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் நடத்தப்பட்ட அடுத்த மாநாட்டில்தான் திராவிட நாடு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு முழு வீச்சில் அதற்கான திட்டங் களும் பயணங்களும் முன்னெடுக்கப்படலாயின என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

மாணவர்கள் முன்னெடுத்த பெயர்

திராவிடர் கழகம் தொடக்கம் முதலே இளை ஞர்கள் கை ஓங்கிய இயக்கம் என்பதை அதனு டைய பெயர் மாற்றத் தீர்மானமும் உணர்த்துகிறது. 1944-இல் ஆகஸ்ட் மாதத்தில் சேலத்தில் திராவிடர் கழக பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பிப்ரவரி மாதத்தில் கும்ப கோணத்தில் திராவிட மாணவர் முதல் மாநாடு நடத்தப்பட்டது. திராவிடர் மாணவர் கழகத் தலைவர்களான தவமணிராசனும் கருணானந்தமும்   அம்மா நாட்டினை முன்னின்று நடத்தினார்கள். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்கள். 1943-ஆம் ஆண்டிலேயே கும்ப கோணத் தில் திராவிடர் மாணவர் கழகத்தைத் தொடங் கியவர் தவமணிராசன். அம்மாநாட்டில் கலந்து கொண்ட நன்னன், ஏ.பி.ஜனார்த்தனம், க.அன்ப ழகன், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன் ஆகியோர் பின்னாட்களில் தமிழக அறிவுலகிலும் அரசியல் வெளியிலும் பெரும் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். அம்மாநாட் டில் பெரியார் கலந்துகொள்ளவில்லை. வாழ்த்துச் செய்தியை மட்டுமே அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை மாநாட்டில் வாசித்தவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த க.அன்பழகன்.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் பெரியார். மாணவர்களிடம் ஏற்பட்டிருந்த அரசியல் எழுச்சியைக் கவனித்த பெரியார், மிகுந்த உற்சாகத்தோடு ஈரோடு திரும் பினார். உடனே, தனது தனிச்செயலரை, கல்லூரி களுக்கு அனுப்பிவைத்தார். ஒவ்வொரு கல்லூரியி லும் இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்ட மாணவர் களைக் கண்டறிந்து வரச் சொன்னார். அவர்களை யெல்லாம் ஈரோட்டுக்கு அழைத்தார். ஏப்ரல் 17ல் ஈரோட்டில் திராவிட இளைஞர் மாநாடு நடந்தது.

திராவிட இளைஞர் மாநாடு

இளைஞர்களின் மாநாட்டுக்கு அண்ணா தலைமை வகித்தார். அம்மாநாட்டில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்டந்தோறும் பிரச்சாரங்களைத் தொடர்ந்தனர். இளைஞர்களும் மாணவர்களும் அரசியல் எழுச்சி பெற்றிருந்த சூழலில்தான் சேலத்தில் நீதிக் கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு நடைபெற்றது. ஏற்கெனவே, சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. பெரியாரின் விருப்பத் தின்படி, அந்தப் பெயர் மாற்றத்தை அண்ணா சேலத்தில் நிறைவேற்றினார்.

சேலம் மாநாட்டுக்குப் பிறகு திராவிடர் கழகத் துக்கான உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. 1945ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திராவிடர் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை  24,302 ஆக இருந்தது. அடுத்த ஆறேழு மாதங்களில் 33,867 ஆகக் கூடியது என்று பெரியாரின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார் கருணானந்தம். இது பெயர் மாற்றத்துக்குப் பிந்தைய பண்பு மாற் றத்துக்கு தமிழக மக்களிடம் இருந்த வரவேற்பைப் புரிந்துகொள்ள உதவும். திராவிடர் கழகத்தின் சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாநாடுகளில் எல்லாம் பாரதிதாசனும் ஆர்வமாக பங்கெடுத்துக்கொண்டார். கலை இலக்கிய வெளி யில் திராவிடர் கழகம் தனித் தமிழ் இயக்கத்தையும் தமிழிசை இயக்கத்தையும் முன்னெடுத்தது.

ஆக, சேலம் தீர்மானம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றால் அது மிகையில்லை. தமிழ்நாட்டின் சமூக தளத்திலும் அரசியல் தளத்திலும் பல தலைகீழ் மாற்றங்களுக்கு வித்திட்ட ஒன்று அது. தமிழ்ச் சமூகத்தின் மாற்றங்களுக்கு இளைஞர்கள் எப்படி முன்சக்தியாக இருந்தார்கள் என்பதுதான் இந்த வரலாற்றின் மிக முக்கியமான கண்ணியும் இங்கு நினைவுகூரத் தக்கதும் ஆகும்.

நன்றி: "இந்து தமிழ் திசை" 27.8.2019

 
- விடுதலை நாளேடு, 27.8.19
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக