சனி, 31 ஆகஸ்ட், 2019

திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் தலைவர்களின் இன எழச்சிப் போர் முரசம்


பவள விழா மாட்சிகள்

- பேராசிரியர் நம்.சீனிவாசன் -

திராவிடர் கழகத்தின் பவளவிழா மாநாடு. நீதிக் கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது 1944ஆம் ஆண்டு. வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு நடைபெற்றது சேலத்தில். உருண்டோடிவிட்டன 75 ஆண்டுகள். 1944ஆம் ஆண்டு மாநாட்டில் பங்கு பெற்ற சுயமரியாதை வீரர்கள் சிலர் 2019 பவளவிழா மாநாட்டிலும் கலந்து கொண்டமை மகிழ்ச்சியின் உச்சம். 1944 சேலம் மாநாட்டிலே உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி கழகத் தலைவராக, 86 வயது நிறைந்த முதுபெரும் தலைவராக, தமிழகத்தின் மூத்த தலைவராக மாநாட்டில் முழக்கம் நிகழ்த்தியது திராவிடர் இனத்திற்குக் கிடைத்தபேறு.

75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம் தமிழ் மண்ணில் நிகழ்ச்சிய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம்! ஏராளம்! சமுகநீதிப் பணியில், ஜாதி ஒழிப்பில், பெண்ணுரிமை காப்பதில், பகுத்தறிவு பரப்புவதில், தமிழர் நலம் பேணுவதில், தமிழக உரிமையினை நிலைநாட்டுவதில், மூடநம்பிக் கையினை ஒழிப்பதில், பார்ப்பன ஆதிக்கத்தைத் தடுப்பதில், பண்பாட்டுப் படையெடுப்பை ஒடுக்குவ தில் மகத்தான சாதனை படைத்திருக்கின்றது. வரலாற் றில் அழியாப் புகழ் படைத்த கழகம் - ரத்தம் சிந்தா புரட்சி நடத்திய கழகம் பவளவிழா மாநாடு நடத்து கிறது என்றால் அது மனிதநேயத் திருவிழா. மதச் சார்பற்ற பெருவிழா. நன்றி தெரிவிக்கும் நல் விழா. கூடிக் கொண்டாடும் கொள்கை விழா. சேலம் அம்மாபேட்டை கொங்கு வெள்ளாள திருமண மண்டபம் கூட்டநெரிசலில் திணறுகிறது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தம் தலைமையுரையில் கழகத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் பெரியாரின் தலைமை 29 ஆண்டுகள், மணியம்மையாரின் தலைமை 5 ஆண்டுகள், தமிழர் தலைவரின் தலைமை 41 ஆண்டு கள் என்று பட்டியலிட்டார். 9000 ரூபாய் வருமான வரம்பாணையை ஒழித்த வரலாற்றை விளக்கினார். மண்டல் குழுப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்திட கழகத்தின் செயல்பாட்டை அடுக்கினார். வீடுதோறும் வீரமணி என்று பெயர் சூட்டுங்கள் என்று வேண்டு கோள் விடுத்தார்.

முத்தான 25 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. கழகத்தின் வெளியுறவுச் செயலர் கோ.கருணாநிதி அவர்கள் தீர்மானங்கள் குறித்து பேசும்போது இத்தீர்மானங்கள் எதிர்காலத்தில் சட்டமாகும் - நிறைவேற்றப்படும் என்றார். திராவிடர் கழக வரலாறு நூலினை வெளியிட்டு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது "இது யான் பெற்ற பேறு" என்றார். இது இயக்கத்தின் வரலாறு அல்ல; இனத்தின் வரலாறு என்றார். திராவிடர் என்ற பெயர் குறித்த வரலாற்றை விவரித்தார். இந்நூல் வரலாறு மட்டும் பேசவில்லை. கொள்கையையும் பேசுகிறது என்றார். காந்தியை மகாத்மா என்று புகழ்ந்ததற்கான காரணங்களையும், அதன்பின் அவரைக் கொன்ற தற்கான காரணங்களையும் சுருக்கமாய்ப் பட்டிய லிட்டார்.

மனிதநேயக் கட்சி நிறுவனத் தலைவர் பேராசிரி யர் எம்.எச்.ஜவாஹிருல்லா உரையாற்றும்போது 40 ஆண்டுகளுக்கு முன்பு மாணவனாக இருந்து தமிழர் தலைவர் உரை கேட்டு சிலிர்த்து நின்றதை விவரித் தார். முஸ்லிம்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவை தொகுத்துரைத்தார். கழகக் கொள்கை நாடு முழுவதும் தேவை என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தம் உரையில்:- பொதுவுடமை இயக் கத்தையும், திராவிடர் கழகத்தையும் பிரிக்க முடியாது என்றார். என்றும் தொடரும் உறவு என்றார். திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்றார். திராவிடர் கழகத்தில் தலைமுறை இடைவெளி இல்லை என்றார். கொள்கை வயப்பட்ட குடும்பங்கள் என்று பாராட் டினார்.பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் பெற்ற வாக்கு 33 சதவீதம் மட்டுமே 'திராவிடர் கழக வரலாறு' நூலினை 50 பிரதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பணம் கொடுத்து வாங்கும் எனும் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தம் வாழ்த்துரையில், பெரியார் மேடையில் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவோமோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழர் தலைவர் வீரமணி மேடையில் இருக்கும்போது என்றார். தமிழ் நாட்டில் மோடி மீது வெறுப்பு இல்லை. தத்துவத்தின் மீது வெறுப்பு. அதனால்தான் தேர்தல் தோல்வி என்றார். காஷ்மீர் பிரச்சினையை கால வரிசைப்படி அடுக்கினார். தேர்தல் வெற்றிக்கு தந்தை பெரியாரே காரணம். தியாகிகள் நிறைந்த கூட்டம் திராவிடர் கழகம் என்று மனம் திறந்து பாராட்டினார்.

'பவள விழாக் காணும் திராவிடர் கழகம்' எனும் கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை தாங்கினார். ஏராளமான வரலாற்றுச் செய்திகளை அடுக்கினார். 1925ஆம் ஆண்டு இந்திய அரசியலில் முக்கியமான ஆண்டு என்று தொடங்கி திராவிடர் கழகம் தொடக் கம், கறுப்புச் சட்டைப் படை உருவாக்கம், கழகக்கொடி உருவாக்கம், சமூக நீதிப் போராட்டம், ராமன் பட எரிப்பு, இராவண லீலா என்று பல்வேறு தகவல்களை விரைவாக பதிவு செய்தார்.

பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து 'வெள்ளி விழா 1944 - 1969' எனும் தலைப்பில் கருத்து மழை பொழிந் தார். அரிஸ்டாட்டில் பெருமையுடன் தொடங்கிய உரையில், கருப்புச்சட்டை மாநாடு, இந்திய விடுதலை நாள், காந்தியார் மறைவு, கருப்புக்கொடி காட்டும் போராட்டம், குடியரசு தினம் குறித்து பெரியாரின் கருத்து, இட ஒதுக்கீட்டுக்காக பெரியார் நடத்திய போராட்டம், அரசியலமைப்பு முதல் சட்டத்திருத்தம், குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு என்று மிகச்சிறப்பாக கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் 'பொன்விழா 1969 - 1994' எனும் தலைப்பில் வரலாற்றுச் செய்திகளை கணீர் என்று முழங்கினார். தந்தை பெரியார் - மணியம்மையார் - ஆசிரியர் வீரமணி முப்பெரும் தலைமை கண்ட காலம் தான் 1969 - 1994 என்று குறிப் பிட்டார். கழகம் நிகழ்த்திய சமூகநீதி சாதனைகளைப் பட்டியலிட்டார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் 'பவள விழா 1994 - 2019' எனும் தலைப்பில் செய்திகளை - கருத்துக்களை வாரி வழங்கினார். தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் உயிருக்குக் குறிவைத்து நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களைப் பட்டியலிட்டார். நேர நெருக்கடியின் காரணமாக கருத்தரங்க உரையாளர்கள் மிகமிகச் சுருக்கமாக உரை நிகழ்த்த அவர்களின் உரை "விடு தலை"யில் விரிவாக வெளிவரும் என்று உத்தரவாதம் அளித்தார் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் பிற்பகல் 2 மணிக்கு நிறைவுரை ஆற்றினார். வரலாறு படைக்கும் நிகழ்வு என்று நெகிழ்ந்த தலைவர் அவர்கள் 1944ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டை நினைவு கூர்ந்தார். பெரியார் இல்லை, மணியம்மை யார் இல்லை, ஆனால் இயக்கம் இருக்கிறது. காரணம் நானில்லை. கொள்கைக் குடும்பங்கள் நீங்களே என்று தோழர்களைப் பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் சந்தித்த அவமானங்களை எடுத்துரைத்தார். பெரியாருக்கு வாய்த்த எதிரிகள் நாணயமானவர்கள், நமக்கு வாய்த்த எதிரிகள் சூழ்ச்சிக்காரர்கள் என்ப தைப் புலப்படுத்தினார். கொள்கைக்காக சர்வபரித்தி யாகம் செய்ய தயாராக வேண்டும். பல தளங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

தோழர்களை தோள்மீது தூக்கி உலகிற்குக் காட் டிய தலைவர் பெரியார். தமிழர் என்பது மொழிப் பெயர்; திராவிடர் என்பது இனப்பெயர் என்று விளக்கம் அளித்தார் பெரியார். திராவிடர் என்பது பண்பாட்டு அடையாளம். திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டக் காரணத்தை அழகுற விளக்கினார். பெரியாரின் கூற்றுக்களையே மேற்கோள் காட்டினார். அரசியல் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தாது. பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்கும் பணியைச் செய்யும். ஆரியம் தான் எல்லோரையும் ஏமாற்றி இருக்கிறது. ஆரியத்தையே ஏமாற்றியவர் அண்ணா. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியினை சேலத்தில் நடைபெற்ற ராமன் பிரச்சி னையை, வரலாற்றை நினைவு கூர்ந்தார். லட்சிய பயணம் தொடரும், எதிர்நீச்சல் தொடரும் ஜாதியை ஒழிப்போம்; புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் முத்தாய்ப்பாக.

மாலை சேலம் மாநகரில் பிரமாண்டமான பேரணி, கழக நிகழ்ச்சிகளில் ஊர்வலம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பது தமிழர் தலைவரின் விருப்பம். பேரணி என்பது பிரச்சார உத்தி. கழகக் கொள்கையினைப் பொதுமக்களுக்குப் பறைசாற்றும் ஊடகம். உணர்ச்சியை ஊட்டும் கலை வடிவம். இயக்க வலிமையைக் காட்டும் ஏற்பாடு. சீருடை தரித்தோர், கருஞ்சட்டை அணிந்தோர், கழக ஆதர வாளர்கள் கட்டுக்கோப்புடன் பேரணியில் அணி வகுத்தனர். கழகத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப் பட்டு தலைமைக் கழகம் வழங்கிய முழக்கங்களை மட்டுமே உரத்து ஒலித்தனர். தோழர்களின் கரங்களில் கழகக் கொடி சாலையின் இருபுறங்களிலும் பொது மக்கள். கண்கொள்ளாக்காட்சி! திருவள்ளுவர் சிலை அருகே நின்று ஊர்வலத்தைப் பார்வையிட்டு மகிழ்ந் தார் தமிழர் தலைவர். தமிழர் தலைவர் அவர்களை வணங்கி பாசத்தினை வெளிப்படுத்தி ஊர்வலம் நடந்து கடந்தது. சிறு அசம்பாவிதம் இல்லை. காவல் துறையினர் கவலையின்றி கடமையாற்றினர்.

சேலம் கோட்டை மைதானத்தில் மாநாட்டு நிறைவு விழா. கண்கவர் பந்தல், வெண்பட்டு ஒத்த தூய விதானம். வெள்ளை ஒளி உமிழ்ந்த ஹாலோஜன் விளக்குகள், மைதானம் முழுவதும் இருக்கைகள். இருக்கைகளில் ஜனத்திரள். மேடையைச் சுற்றிலும் கூட்டம் மொய்த்தது. விழா களைகட்டியது.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். 1944ஆம் ஆண்டு நீதிக்கட்சியானது திராவிடர் கழகமாகப் பெற்ற பெயர் மாற்றத்தினையும், பெரியார், மணியம்மையார், ஆசிரியர் தலைமையில் இயக்கம் போட்ட எதிர் நீச் சல்களையும், திராவிடர் கழகத்தின் சாதனைகளையும், 1929ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்க முதலாவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டங்களாக வடிவம் பெற்றதையும் தொகுத்துரைத் தார். திராவிடர் கழகத்தால் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டதை முதலாவது சட்ட திருத்தம், 76ஆவது சட்டத்திருத்தம், 93ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்டதை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றும்போது, தந்தை பெரியார் இல்லை என்றால் தமிழகத்தின் முகத்தோற்றம் மாறி இருக்கும் என்றார். பெரியாருக்குப் பின்னால் பகுத்தறிவுச் சுடரை அணையாமல் காத்த பெருமை தமிழர் தலைவரைச் சாரும் என்றார். இட ஒதுக்கீடு உரிமையை முழங்கினார். பெரியார் - ஜீவா - சிங்காரவேலர் இணைந்து பணியாற்றிய காலத்தைக் கண்முன்னே கொண்டு வந்தார். கம்யூனிஸ்ட் கொள்கை பிரகடனத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட தந்தை பெரியாரின் அருஞ்சாதனையைக் கொண்டாடி மகிழ்ந்தார். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் திருத்தம், ஆண் - பெண் சம உரிமை, வர்ணா சிரம தர்ம எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு. எழுத்துச் சீர்திருத்தம் என்று பெரியாரின் பெருஞ்சாதனைக ளைப் பட்டியலிட்டார். மார்க்சிஸ்ட்டும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பூரிப்புடன் வெளிப்படுத்தினார். அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கேரள மாநிலம் நிறைவேற்றி இருப்பதை பெருமிதத்துடன் எடுத்து ரைத்தார்.

மதிமுக அவை தலைவர் வழக்குரைஞர் திருப்பூர் துரைசாமி அவர்கள் உரை நிகழ்த்தும் போது 75 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிலவிய ஜாதிக் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டினார். அண்ணா வின் சாதனைகளை அடுக்கினார். விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் தம் உரையில், தமிழ்நாடு தனித்துவமாக விளங்க பெரியாரே அடிப்படை என்றும், ஜாதி ஒழிப்புக் குரல், சமஸ்கிருத எதிர்ப்புக் குரல், இந்துத்துவ எதிர்ப்புக்குரல், நீட் வேண்டாம் எதிர்ப்புக்குரல் எல்லாவற்றிற்கும் வேர் பெரியாரே என்றார். ஜாதிக் கொடுமையை 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்து விட முடியாது. திராவிடர் கழகம் இல்லாமலிருந்தால் மான உணர்ச்சிமிக்க திருமாவள வன் இல்லை என்று முழங்கினார். ஆதிக்கத்தை ஒழிக்க வந்தவர் பெரியார். ஜாதி வெறுப்பு அரசியலை அவர் வளர்க்கவில்லை. சமுகநீதி தான் கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்த கையாண்ட போர்த் தந்திரம் கடவுள் மறுப்பு.

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் உரையாற்றும் போது, பெரியார் இறைமறுப்பாளர். ஆனால் இறை நம்பிக்கையாளர்கள் பெரியாரை மறுப்பதில்லை என்றார். இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடி முஸ்லீம்லீக் என்றார்.

மாநாட்டு நிறைவு விழாவின் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரையில் தளபதி மு.க.ஸ்டா லினை நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று புகழாரம் சூட்டினார். இயக்கத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. தொண்டறச் செம்மல்களுக்கு வீரவணக்கம் என்று தமிழர் தலைவர் உரையைத் தொடங்கினார். திராவிடர் கழகமும், திமுகழகமும் அண்ணா சொன்னதைப் போல இரட்டைக்குழல் துப்பாக்கி என்றார். மாநாட்டுக் கூட்டத்தை கருங்கடல் என்று வருணித்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கக் காரணம் சமூகநீதி தான். பெரியார் இல்லாதபோதும் சமூகநீதி தத்துவம் வென்றிருக்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டம் முதல் திருத்தம் நடைபெறு வதற்கும், 76ஆவது திருத்தம் செய்யப்படுவதற்கும், 93ஆவது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும் திரா விடர் கழகமே காரணம் என்பதை தெளிவுபடுத்தினார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் இட ஒதுக்கீடு பற்றி விவாதம் செய்ய வேண்டுமென்று கூறியது சூழ்ச்சி என்று உணர்த்தினார்.

அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்து மனுதருமச் சட்டத்தைக் கொண்டுவர இந்த ஆட்சி துடிக்கிறது. மனு தர்மத்திற்கும் - சம தர்மத்திற்கும் போராட்டம். கோல்வாக்கரின் சிந்தனையை ஞானகங்கை நூல் கொண்டு நிறுவினார். தந்தை பெரியாரின் உரையினை எழுச்சியாக எடுத்துரைத்து லட்சிய வாழ்வு வாழ்வோம் என்று முத்தாய்ப்பாக தலைமையுரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தள பதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்தினார்கள். தாய்க்கழகத்திற்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்றார். தமிழர் தலைவரின் உழைப்பை, செயல்பாட்டை வியந்து உரைத்தார். 90 வயதில் தந்தை பெரியார் எழுதிய உடல் நலம் குறித்து வடித்த சொல்லோவியத்தைப் படித்தார். அதன் பின் பெரியார் நடத்திய பிரச்சாரம் வேகத்தை புள்ளிவிவரம் மூலம் வெளிப்படுத்தினார். நியுயார்க் நகரிலிருந்து தந்தை பெரியாருக்கு அண்ணா எழுதிய அற்புதக்கடிதத்தை கூட்டத்திற்குத் தெரியப்படுத்தினார். திராவிட இயக்கம் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியலிட்டார். கூட்டம் ஆரவாரித்தது. பெரியாரும், அண்ணாவும் பிரிந்தாலும் ஒரே கொள்கையைப் பேசினார்கள். ஒரு மரத்துக்கனிகள், ஒரு தாய் மக்கள், எல்லா இயக்கத் திற்கும் பொதுவானவர் பெரியார். ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தால் தட்டிக் கேட்போம். அதனை தேசவிரோதம் என்பதா? என்று வினா எழுப்பினார். தந்தை பெரியாரின் பயணத்தை தொடர்வோம் என்றார்.

திராவிடர் கழகத்தின் பவளவிழா மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது. கூட்டம் கலைந்தது. ஆனால் நினைவுகள் ஒவ்வொரு தோழர்களின் நெஞ்சிலும் நிழலாடியது என்பது மறுக்க இயலாது.

- விடுதலை நாளேடு, 28.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக