செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

முதல் புரட்டு - சமஸ்கிருதம் ஆதி (பொது) மொழியா? - 1

குறிப்பு : இன்று "இந்தியா" தேசம் என்பதிலும் நமது நாட்டிலும் நடந்து வரும் புரட்டு நீண்ட நாளாகப் பார்ப்பனர் கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றிவரும் இமாலயப்புரட்டும் இந்து மதம், மத ஆதார நூல்கள், மதக்கடவுள்கள், சமஸ்கிருதம், இந்திமொழி அவை பற்றிய பெருமைகள் ஆகியவைகளுமாகும். நீண்ட நாளாகவே நமது நாட்டில் இவை பற்றிய உண்மையை உண்மையாய் அறிந்தவர்கள் மிக அருமை. "அறிந்துள்ள சிலரும் கோழைகள் - சுயநலத்திற்கு எதையும் விற்பவர்கள் ஆக இருந்து வருகிறார்கள்.

எந்த ஒரு நாட்டிலும் இப்படிப்பட்ட புரட்டுகள் இத்தனை நாட்கள் நின்றதில்லை. எந்த ஒரு நாட்டு மக்களும் இப்படிக் காட்டுமிராண்டிகள் போல் ஏமாற்றப்பட்டதில்லை.

ஆகையால், இவைகளைப் பற்றி அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் சிந்தித்து இந்த ஏமாற்றத்திலிருந்து மக்களை வெளியாக்க வேண்டியது இன்றைக்கு அவசியமாகும்.

அரசியலையே முக்கிய காரியமாகக் கொள்வதில் பயனில்லை . முட்டாள்கள் உள்ளவரை அயோக்கியர்கள்தான் எல்லாத் துறையிலும் ஆதிக்கமும் ஆட்சியும் செலுத்துவார்கள். அதுதான் ஜனநாயகமாகும்.

என்ன சொல்லுகிறீர்கள்?

- ஈ.வெ.ரா.

புரிந்துகொள்வீர்!


பழங்காலத்தில் சமஸ்கிருதம் என்பதாக ஒரு மொழி இருந்திருக்கவில்லை. சமஸ்கிருதம் பழங்காலத்தில், பலர் பலவிதமாகப் பேசி வந்த பல மொழிகளிலிருந்த சொற்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியாகும். சமஸ்த்த ம் + கிருதம் = சமஸ்கிருதம் சமஸ்த்த ம் = யாவும் கிருதம் - சேர்த்துச் செய்தது என்பது பொருள்.

* பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியைப் பேசுவ தில்லை.

* அவர்களது லவுகீக வாழ்க்கையில் உலக வழக் கில் எந்த காரியத்திற்கும் அவர்கள் சமஸ்கிருதத்தைக் காரியத்தில் பயன்படுத்துவதும் இல்லை.

* சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்கும், மற்றும் எவர்க்கும் எந்தக் காலத்திலும் தாய்மொழியாக, பேசும் மொழியாக இருந்ததும் இல்லை.

* இப்பார்ப்பனர்களின் மூதாதையர் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசித்தவர்கள் அல்ல; அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஏதாவது ஒரு மொழியையே பேசி வந்தவர்களும் அல்ல.

* அவர்கள் வாழ்ந்த நாடு பல நாடுகள்.

* அவர்கள் பேசிவந்த மொழிகள் பல மொழிகள்.

* இந்த உண்மைகளை ஒரு அளவுக்கு விளக் கவே சமஸ்கிருதம் பற்றிய கட்டுரையில் குறிப்பாகச் சிலவற்றை விளக்குவோம்.

* இதுபோலவேதான் அவர்கள் (பார்ப்பனர்) மத மான இந்துமதமும் ஆதாரமும் அடிப்படையும் இல்லா மல் எதை எதையோ சேர்த்து, கதம்பமாகக் கற்பித்துக் கொண்ட மதமாகும்.

* மற்றும் இது போலவேதான் அவர் (பார்ப்பனர்)களுடைய பல கடவுள்களும் பல நாட்டு மக்கள் காட்டுமிராண்டித் தன்மையில் அவரவர்கள் சவுகரி யத்திற்கு ஏற்ப சமயோசிதம்போல் கற்பித்துக் கொள்ளப் பட்டவைகளை, தாங்களும் அதே தன்மையில் தங்களுக்கும் ஏற்படுத்திக் கொண்டவை ஆகும். இவற்றைப் பற்றிப் பின்னால் விளக்குவோம்.

* பார்ப்பனர்களுக்கு அடிப்படை ஆதாரம் என்பது யாவற்றிற்கும் வேதமாகும். அந்த வேதம் ஒன்றல்ல; பல.

* அவை ஒருவரால் அல்ல; பல பேர்களால் சொல்லப்பட்டவை.

* அந்தப்படிச் சொல்லப்பட்டதும் ஒரு காலத்தில் அல்ல; பல காலங்களில்.

* அவை ஏதாவது ஒரு குறிப்பில் குறித்து வைக்கப்பட்டிருந்தவை அல்ல; வாய்ச் சொல்லில் வாக்கு ரூபமாக இருந்து, அடிக்கடிக் கூட்டியும் குறைத்தும் திருத்தியும் கூறிவந்தவையாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பப் பலரால், சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்பப் பொருள் கூறப்பட்டு வந்தும், பிறகு அப்பொருளுக்கு ஏற்ப மூலம் மாற்றப்பட்டு வந்தும், இன்றைக்கும் விவாதத்திற்கு நிற்காத முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

* வேதத்தின் துவக்கமானது செல்வம், பொருள், சுகபோகம் பற்றிய பேராசை இலட்சியமேயாகும்.

* பிறகு, இந்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்க்கை யைப் பார்த்து பொறாமையும் ஆத்திரமும், கொண்டு அவர்களை எதிரிகளாகக் கருதி வசவு கூறிச் சாபம் இடுவதேயாகும்.

* இவைகளுக்கு ஏற்பக் கற்பித்துக் கொண்ட வைதான் வேதத்தில் காணப்படும் தேவர்கள் என்பவர் களுமாகும்.

* அவைகளும் காலத்துக்கு ஏற்பக் கற்பனையும் முக்கியத்துவமும் கொண்டவைதான்.

இவைகளைப் பற்றியும் பின்னால் விளக்குவோம்.

சமஸ்கிருதம்


சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல;

அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி

அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்ப தாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkse) மொழி, ஈரானிய மொழி - பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீனியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரி யர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இருமுறை நுழைந் தனர். முதலாவது கி.மு.1400 வேதகாலம்: இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க - பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருத மொழி மேற்கண்ட பாரசீக - கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக்கணங்களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப்பெற்றது.

மற்றும், சமஸ்கிருத மொழி இந்தியாவின்... லத்தீன்... மொழி என்றும் அழைக்கப்பட்டது. ஆல்பன்கெல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படை யெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்.

மொழிகளின் பிரிவு


மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இருபெரும் பிரிவுகளைக் கொண்டு உள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப் படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவ கப்படுத்தப்பட்டது என்பதாகும்.

மேலும் விளக்க வேண்டுமானால், இது ஹிந்துஸ் தானியில் சான்ஸ் கி ரிட் என்று உச்சரிக்கப்படு கிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும், அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழியிலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண் டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்


வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர். சமஸ்த = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது

- என்பதே இதன் பொருள். "என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா" என்ற ஆங் கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு, டாக்டர் எச்.ஜுலி யஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

"சமஸ்கிருத மொழி ஆரிய மொழிகளுடன் கொண் டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும்" இவர் விளக்கி யுள்ளார்.

டாக்டர் பிரான்ஸ் பாப் என்பவர், கோதிக் மொழி யிலிருந்து பைபிளை வாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார்.

சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருத ஆங்கில அகராதியின் (அச்சிட்டது: காலண்டர் பிரஸ்; ஆக்ஸ்போர்டு - 1899) முகவுரையில், "சமஸ்கிருத மொழி; பாக்ட்ரியானா - சாக்டியானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டா ரத்திலோ தோன்றியதல்ல" என்று கருத்து வெளியிட் டிருக்கிறார்.

இந்தியாவினுள் நுழைந்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிதாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென் பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்த வர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவு படுகிறது.

பிறந்த விதம்


இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற் றங்கள் பெற்று சமஸ்கிருத மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திணித்தனர். வேத கால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருதத்திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று


எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும், இம்மொழியிலிருந்துதான், இந்தியா வின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற்றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந்தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நார்டிக் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ்விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோ னேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

- புரட்டு இமாலயப்புரட்டு நூல்
- வியாழக்கிழமை தொடரும்

-  விடுதலை நாளேடு, 13.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக