திங்கள், 23 டிசம்பர், 2019

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

புதையல்

இரயில் நிலையங்களின் உணவு விடுதிகளின் நிலை 1926ஆம் ஆண்டு எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது இந்த பதிவு. இன்று ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தந்தை பெரியாரும் சுயமரியாதைப் பிரச்சாரமும் காரணம்.

தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள். ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலி யவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத் துடன் கேட்கிறோம்.  -

குடிஅரசு, 06.06.1926

தகவல்: இறைவி

- விடுதலை ஞாயிறு மலர் 7 12 19

சனி, 21 டிசம்பர், 2019

இசையுலகில் வடமொழி ஆதிக்கம் -35

டாக்டர் சேலம் எஸ். ஜெயலட்சுமி

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9.3.1985,  10.3.1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் சேலம் எஸ்.ஜெயலட்சுமி  அவர்கள் உரை வருமாறு.

பொதுவாக உலகெங்கும் வடமொழியே இந்தியக் கலை கலாசாரங்கள் சமயம் முதலியவற்றிற்கு அடிப் படை என்ற கருத்துப் பரவியுள்ளது. இது எப்படி ஏற்பட்டது என்றால் சென்ற இரு நூற்றாண்டுகளாக பல அய்ரோப்பிய அறிஞர்கள் மாக்ஸ்முல்லர் உட்பட சமற்கிருத மொழியில் உள்ள அத்துணை நூல்களையும் ஆங்கிலத்திலும் ஜெர்மன் முதலிய அய்ரோப்பிய மொழிகளிலும் பெருவாரியாக மொழிபெயர்த்துள்ளார் கள். இதன் காரணமாக சமற்கிருத மொழியும் வேத நெறியும் ஆரியர் நாகரிகமுமே இந்தியாவின் சிறப்பான கலாச்சாரங்களுக்குக் காரணமாக நின்றன என்ற கருத் தும் இந்தியாவிலும் பிற உலக நாடுகளிலும் பரவியது.

ஆயினும், சிந்துச் சமவெளி நாகரிகம் போன்ற உண் மைகள் வெளிவந்ததும் இந்தியாவில் ஆரியர் வரு கைக்கு முன்னரே ஒரு பெரும் கலாச்சாரமும் நாகரிக மும் வளர்ந்திருந்தமை உலக அறிஞர்களுக்குத் தெரிய வந்தது. வடமொழி நூல்களைப் பயிலும்போதும் அவை மூல நூல்கள் அல்ல, முழு நூல்களும் அல்ல என்ற அய்யப்பாடுகள் தோன்றுவதும் ஆராய்ச்சியா ளர்களுக்கு ஏற்படும் பொதுவான அனுபவம். வட மொழியில் காணப்படும் வேதங்கள் முதல் பிற துறை களில் காணப்படும் அனைத்து நூல்களிலும் அவை வேறு எதையோ தழுவி வந்துள்ளன. முழு உண்மை களையும் வெளிப்படுத்தவும் இயலாத நிலையில் உள்ளன என்ற நிலை நமக்குப் புரிகிறது. வேதங்களே நமக்கு ஆதாரமான மூல நூல்கள் என்னும் கருத்து நமது தமிழ் வழக்கிலும் காணப்படும் ஒன்று. வேதங் களில் அடங்காத பொருளே இல்லை என்பது நமது கோட்பாடு. ஆனால், வடமொழி வேதங்களில் காணப் படுவது ஒரு பண்பாடற்ற ஆரம்ப நிலையில் உள்ள சமூகத்தின் நிலைதான். வடமொழி வல்லுநர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட, வேதங்கள் மனித நாகரிகத்தின் ஆரம்ப நிலையையே (Primitive) காண்பிக்கின்றன என்று கூறுகிறார்கள். அவற்றின் செய்யுள்நடை(Poetic Form)  குறையுள்ளதாகவே காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்கள்.

தமிழில் பிற்காலத்தில் வேதங்களின் புதிய உருவாய் விளங்கும் (Reversion of Vedas) தேவாரத்திருமுறை, திவ்ய பிரபந்தங்களில் நான்மறைகளைப் பற்றிக் குறிப் பிடும்போது தமிழ் நான்மறை நான்மறை ஆறங்கம், தமிழ் ஞானசம்பந்தன் என்று அந்த ஆசிரியர்கள் குறிப்பிடுவது தமிழில் நான்மறைகள் இருந்தன என் பதை உணர்த்துகின்றது. சாமவேதம்தான் இசைக்குப் பிறப்பிடம் என்ற பொதுவான கருத்து அன்றும் இன்றும் என்றும் நிலவுகிறது. சாமவேதம் என்பது இப்போது ரிக்வேதத்தின் அடிகளையே மேலும் இழுத்தாற்போல் இசைப்பதேயாகும். வடமொழி சாமவேதத்தில் எவ்வித இசைக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தியாவிற்கு ஆரியர்கள் முதன்முதலில் வந்த போது தங்களுடைய இசை மூலம் இந்நாட்டின் ஆதி குடிகளைத் தங்கள்பால் ஈர்க்க முயன்றபோது, தேசியம் என்று சொல்லப்பட்ட இந்நாட்டுப் பழங்குடியினரின் இசை ஆரியர்களின் இசையைக் காட்டிலும் மேம்பட்ட தாக இருந்தது என்று சொல்லப்படுகிறது.

வேத காலத்து இருடிகள் தங்கள் மந்திரங்களை இசை நயமில்லாமல் ஓதியது காதுக்கு நாராசமாகத் தவளை கத்துவதுபோல் இருந்தது என்று வேத ஆசிரி யர் ஒருவரே கூறுவதாக ரிக்வேதம் கூறுகிறது.

(ரிக்வேதம் VIII 10, 3, 5)

அதேபோன்று சாம வேத இசையும் அதன் இசையின்பம் இல்லாத தன்மைபற்றித் தாழ்வாக எண்ணப் பட்டது என்று மனு என்ற நீதி நூலாசிரியர் குறித்திருக் கின்றார்.

(மனு சம்ஹிதை, IV. 124)

வேதங்களைப்பற்றி தேவாரம் முதலிய தீஞ்சுவைத் தெய்வத் தமிழ்ப்பாக்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போம்.

சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவார்

என்று ஞானசம்பந்தரும்,

எடுத்தனன் எழிற்கைலை யிலங்கையர் மன்னன் தன்னை

அடுத்தொரு விரலாலூன்ற அலறிப்போயவனும் வீழ்ந்து

விடுத்தனன் கைந ரம்பால் வேதகீதங்கள் பாடக்

கொடுத்தனர் கொற்றவாணாள் குறுக்கைவீரட் டனாரே

என்று நாவுக்கரசும் பாடினார்கள்.

ஆயிரம் நரம்பிற்றே ஆதியாழ் என்றபடி இராவ ணன் பேரியாழை இசைத்த வரலாறு இங்ஙனம் நமக்குக் கூறப்படுகிறது.

இந்திய இசையின் வரலாறு (The Story of  Indian Music)  என்ற நூலை எழுதியுள்ள கோசுவாமி என்ற வங்காள ஆசிரியர் கூறுவது:

இந்திய இசையின் வரலாறு ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இந்நாட்டின் ஆதிகுடிகளின் (Indigenous) கலைப்பண்பாட்டின் வளர்ச்சியும் கலைக் கருவூலங்களின் சிறப்புமேயாகும்

“The history of Indian Music frame the earliest times to our own days has been the history of the evolution of an indigenous musical tradition and musical lore” p. 69 Goswami. The Story of Indian Music, Asia Publishing House, 1957.

இந்தியப் பண்பாட்டின் பிற துறைகளைப்போல் இசைத்துறையிலும் ஆரியரல்லாதாரின் கலைச் செல் வங்கள் நெசவில் உள்ள பாவுபோலவும் ஆரியருடைய அறிவுத் திறமை ஊடு போலவும் கலந்துள்ளது. ஆரியர் கள் இவ்விதம் பல வடிவங்களில் பூர்வீகக் குடிகளின் கலைகளைத் தம் வசமாக்கிக் கொண்டனர். பெரும் பாலும் தங்களுடைய சொந்தப் பண்பாடாகக் காட்டும் நோக்குடன் ஆரியர்கள் இக்கலைகளை உருமாற்றி அமைத்தனர். இவை முற்றிலும் ஆரியருடையதே என்பதை நிலைநாட்டும் பொருட்டு இக்கடன் வாங்கும் கலையை முற்றிலும் திறமையாகச் செய்தனர்.

“As in the case of other branches of Indian Culture in Music too non-Aryan threads have been interwomen with the woof of Aryan genius. This assimilation and hermonisation have taken different shapes and forms. Often the elements borrowed have been re-shaped beyond recognition to fit into the Aryan culture-pattern to make the usurpation complete Aryan colour was given to them in such a manner as to seem original Aryan contribution”    “Krivantu Vishvam Aryam” (Ibidm p. 69)

மேலும் அவர் கூறுவது: இவ்வாறு ஒரு பகுதியி னரான பிராமணர் அவ்வப்போது பண்டைய பெயர் வழக்குகளை வடமொழிமயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டதால் பல வழக்குகள் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.

“During the puritan i.e. Brahmanical, revivals from time to time, the urge for the sanskritization of names become a passion with a section of the Hindus and in this process many indigenous traces were wiped out” - p. 78. The Story of Indian Music by Goswami.

ஆரியர்கள் வடமொழி தமிழைவிடச் சிறந்தது என்றும், தமிழின் பெருமையை அடியோடு அழித்து விட்டோம் என்றும் பல நூல்களில் பறைசாற்றுகிறார்கள். இந்தப் பெருமை அவர்கள் தமிழ்மொழியை நன்கு ஆழ்ந்து ஆராயாத வரைதான் கொள்ள முடியும் என்பதையும் தமிழையும் வடமொழியையும் ஒத்திட் டுப் பார்த்த அறிஞர்களுக்குத் தெரியும். தமிழை மட் டுமோ அல்லது வடமொழியை மட்டுமோ படித்து ஆராய்ந்தவர் களுக்கு இவ்வுண்மை தெரிய வழியில்லை. இரண்டு மொழியையும் தக்கவாறு ஆராய்ந்து பார்த்த பல துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் இவ்வுண் மையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சான்றாக மொழியியலில் (Linguistics)  ஒலியியல் (Phonemes) என்ற துறையில் பல மொழிகளை ஆராய்ந்த பெரிய வல்லுநர்கள் சில பொதுவான முடிவு களைக் கண்டறிகிறார்கள். அம்முடிவுகளை ஒத்திட்டுப் பார்க்கும்போது தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம் அவர்களுடைய முடிவை ஒத்திருப்பதோடு மேலும் தெளிவான முறையில் ஒலியியலை விளக்குகின்றது. சி.ஆர். சங்கரன் என்ற பூனே ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த மொழி வல்லுநர், தொல்காப்பியரின் கொள்கை களைப் பார்க்கும்போது வடமொழி இலக்கண ஆசிரி யரான பாணினி மிகவும் பின்தங்கிவிடுகிறார் என்று கூறியிருக்கிறார்.

தமிழ்மொழி அன்றும் இன்றும் என்றும் இளமை குலையாமல் இறந்துபடாமல் இருப்பதற்கு அதன் அடிப்படையான மயங்கா மரபே காரணமாகும். வடமொழி இத்துணை ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னும் இன்று இறந்த மொழியாகவே காண்கிறது. செயற்கை ஒலிகளால் நிரப்பப்பட்டு மக்கள் இயல்பாகப் பேசுவ தற்கு ஒத்துவராததாகக் காண்கிறது. வடமொழி மற்ற இந்திய மொழிகளைத் தன் ஆதிக்கத்துள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், தமிழ் மொழியின் ஆணிவேர் திடமாக இருந்ததால் சொற்களை மட்டும் வடமொழி மயமாக்க முற்பட்டது. மேலும் பல பெயர்களை மாற்று ஒலியால் நாம் வடமொழி என்று கருதினாலும் உண்மை யில் அவை தமிழ்ச் சொற்களே என்பதை இப்போது சொற்பிறப்பியல் ஆய்வு மூலம் அறிஞர்கள் நிலை நாட்டி வருவது மகிழத்தக்க ஒன்று.

- தொடரும்

-  விடுதலை நாளேடு, 17.12.19

வியாழன், 12 டிசம்பர், 2019

இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை- 34

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இசை ஆராய்ச்சியாளர் ப.தண்டபாணி அவர்கள் உரை வருமாறு.

10.12.2019 அன்றைய தொடர்ச்சி...

இது குறித்து மேனாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் மிகவும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:

“There seems to have been no doubt that this name Vina or this word was applied to the arched harp represented on the bas-reliefs, contemporary with the texts that used the word... This arch harp disappears from the instrumental stock of India towards, the 8th century”.(9)

எனவே, ஆரியர் வீணை என்றழைத்தது தமிழரின் யாழையே என்பது தெளிவாகின்றது. இதே கருத்தி னைப் பெரும்புலவர் க. வெள்ளைவாரணர் தாம் எழுதி யுள்ள தேவாரத்திற் பயின்ற பண்களும் இசைக் கருவி களும் என்னும் நூலில் வலியுறுத்திச் செங்கோட்டி யாழினை அடியொற்றி அமைத்தது வீணை என்னும் இசைக் கருவியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.(10)

பெரும்பான்மையாய்ப் பழக்கத்திலுள்ள நால்வகை யாழ்களுள் கடைசியாகக் கூறப்பட்டதும், மிகச் சிறியதும், ஏழு நரம்புகளையுடையதுமான செங்கோட்டி யாழொன்றே முதற் சங்க காலந் தொடங்கி இன்று வரை வாழையடி வாழையாய் நம் தமிழகத்தில் நிலை பெற்றிருக்கின்றது. இச் செங்கோட்டி யாழையே தற் காலம் நாம் வீணையென வடமொழிப் பெயரால் வழங் குகிறோம் என யாழின் சிறப்பு என்னும் கட்டுரையில் (11) டாக்டர் வரகுணபாண்டியன் குறிப்பிட்டுள்ளதும் இவண் ஒப்பு நோக்கத்தக்கதாம்.

இனி, இன்று கருநாடகச் சங்கீதம் என்றழைக்கப்படும் இசை முறையில் முறைப்படி எழுதப்பட்ட அடிப்படை நூல் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சாரங்கதேவரால் எழு தப்பட்ட சங்கீத ரத்னாகரம் என்னும் நூல்தான் என்பது யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும் உண்மையாகும். அவர் தக்கணத்தில் தவ்லதாபாத்து என்னும் ஊரில் வாழ்ந்தவர். அவர் தமிழ்நாட்டில் சுற்றித் தேவாரப் பண் கள் முதலியவற்றின் இசை முறையைக் கேட்டறிந்து அன்று தென்னிந்தியாவில் பரவியிருந்த தமிழிசை இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த நூலை எழுதினார் என்பதற்கான ஆதாரமும் அந்த நூலிலேயே உள்ளது. ஏனெனில், அவர் தம் நூலில் தமிழ்ப் பண்களைப்பற்றியெல்லாம் எடுத்துக் கூறியுள்ளார். எனவேதான், தமிழில் திருஞான சம்பந் தருடைய பாடல்களுக்கு இசைக்கப்பட்டிருந்த 19 தமிழ்ப் பண்களுக்கும் சாரங்கதேவரின் 19 மேள கர்த் தாக்களுக்கும் ஏதோ இயைபு இருந்ததென்று நினைக்க இடமுண்டு. அப் பண்களே அம் மேளகர்த்தாக்களின் அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தமிழிசையும் கர்னாடக சங்கீதமும் என்னும் கட்டுரையில்(12) இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்கு மணப்பிள்ளை கூறுகின்றார். ஆகையால், தென்னிந்தியாவில் அக்காலத்தில் வழக்கி லிருந்த தமிழ்ப் பண்களைத்தாம் ஆரியர் மேளகர்த்தாக் களாக்கி உள்ளனர்.

பண், பண்ணியல் திறம், திறம், திறத்திறம் முதலிய தமிழ்ப் பெயர்களைத்தாம் சம்பூர்ணம், ஷாடவம், அவ் டவம், சதுர்த்தம் என வடமொழிப் பெயர்களாக்கினர். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து இது நமக்குத் தெரியவருகிறது. அதுபோலத்தான் ஆளத்தியையும் ஆலாபனையாக்கி விட்டனர்.

இது சம்பந்தமாக டி.கே. சிதம்பரநாத முதலியார் செய்துள்ள ஆராய்ச்சியும் நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. ஓதுவார் தனித் தமிழ்ப் பண்களை இயைத்துத் தேவாரம் முதலிய தோத்திரப் பாட்டுகளைப் பாடுவோர், நட்டுவர் நட்டுவாங்கமும் சங்கீதமும் கோயிற் பணி யிலும் மற்ற நடைமுறைகளிலும் தொழிலாக எடுத்துக் கொண்டவர். மேளக்காரரும் அப்படியே. வடமொழி யில் இயற்றப்பட்டிருக்கும் சைவாகமங்களைச் சரிவரப் பொருள் கூறிக் கோயிற் காரியங்களை நடத்துவதற்கு வடமொழி பயின்ற தீட்சிதர்களே (இவர்களும் தமிழ்ப் பிராமணரே யாவர்) ஏற்பட்டனர். இத்தீட்சிதர்களில் சங்கீத ஞானமுடைய சிலர் மேளக்காரரின் சங்கீதம், நட்டுவர் முகாந்திரம் சங்கீதம் கற்றும் கர்னாடக சங்கீத சாத்திரத்தை எழுதப் புகுந்தனர். அப்போது தனித் தமிழ்ப் பண்களுக்கு வட இந்திய இராகங்களோடு அவை பொருந்துமாறு வடமொழிப் பெயர்களைக் கொடுத்தார்கள். தமிழ்ப் பண்கள், கர்நாடக ராகங்கள் இவை தம்மிலுள்ள மிகுந்த ஒற்றுமைப் பாட்டுக்குக் காரணமும் இதுவே என்று உய்ந்துணர்ந்து கொள்ள லாம்(13) வேங்கடமகி என்பவர் தாம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் அவற்றையெல்லாம் வரிசைப்படுத்திச் சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலை எழுதினார். அதில் வரும் 72 மேளகர்த்தாக்களுக்கும் இராகமாலிகை பாடிய மகா வைத்தியநாதய்யரும் தமிழைத் தாய்மொழி யாகக் கொண்டிருந்தும் வடமொழியில்தான் அந்த இராகமாலிகைக்குப் பாட்டு இயற்றினார்.

பண்டைக்காலத்தில் கைகளினால் கொட்டினால் அது பாணி எனப்பட்டது. கால்களினால் தட்டினால் அது தாளம் எனப்பட்டது. முற்காலத்தில் குழல், யாழ்க் கருவிகளை இசைத்தவர்கள் முதலில் இயற்கையாகப் பாதங்களினால் தட்டினர். எனவே, பாதத்தின் ஒலி என்ற பொருளில் தாள் + அம் = தாளம் எனத் தமிழர் பெயர் வைத்தனர். ஆரியர் அதையும் வடமொழிச் சொல்லாகத் திரிக்க முயன்றுள்ளனர்.(14)

பதப்படுவது பதம் என்றும் அத்தகைய பாட்டுகளை நாட்டியக் கலையுடன் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்றும் டி.கே. சிதம்பரநாத முதலியார் கூறுகிறார். ஆனால், அந்தப் பதத்தையும் ஆரியச் சொல்லாகக் காட்ட  முற்பட்டுவிட்டனர்.

ஆரியரின் புரட்டுகளைக் குறித்து ஆபிரகாம் பண்டிதர் பின்வருமாறு   கூறுகின்றார்.

பூர்வம் தமிழ் மக்கள் சுரங்களையும் சுருதிகளையும் இராகமுண்டாக்கும் விதிகளையும் அனுசரித்துப் பாடி வந்த 12,000 ஆதி இசைகளும், அவற்றின் பரம்பரையி லுதித்த இராகங்களும் பாடப்பட்டும் வேறு பெயர் களால் அழைக்கப்பட்டும் அந்நிய பாஷைச் சொற் களால் உருவமைந்தும் நாளது வரையும் வழங்கி வரு கின்றன (15)

தமிழில் வழங்கும் அநேக வார்த்தைகளைத் தங்கள் பாஷையில் முதல் முதல் இருந்ததாக மற்றவர் நினைக் கும்படி காலாகாலங்களில் மாற்றி, மாற்றியதற்கிணங்க நூல்களும் புராணங்களும் கட்டுக் கதைகளும் செய்து பரப்பி வந்தார்கள்.... அவர்கள் சொன்னதையெல்லாம் நம்புகிறவர்கள் ஏற்பட்ட பின் சமற்கிருத பாஷையின் அநேக வார்த்தைகள் தமிழில் வந்து வழங்கத் தலைப் பட்டன. இதை விவேகிகள் அறிவார்கள். அதிகம் சொல்ல இங்கு அவசியமில்லை. இயல், இசை நாடக மென்னும் முத்தமிழிலுள்ள இசைத் தமிழாகிய சங்கீ தத்தைத் தென்னாட்டிலிருந்தே மற்றவர்கள் கொண்டு போனார்களென்பது பற்றியும், வடபாஷைக்காரரும் தமிழ்நாட்டினின்றே இசைத் தமிழைக் கொண்டு போயிருக்க வேண்டுமென்பதுபற்றியும் இங்கு எழுத நேரிட்டது.(16)

ஆபிரகாம் பண்டிதரின் நூலுக்குப் பாயிரம் எழுதிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்துச் சிவசண் முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகளும் கூறு கிறார்:

பண்டைத் தமிழர்களிடமிருந்துதான் இசையின் நுணுக்கங்களும் பாகுபாடுகளும் தோன்றி வளர்ந்து ஆரியர் கைப்படலாயின என்பது யான் நெடுநாட்க ளுக்கு முன்னரே ஆராய்ந்து கண்டமுடிவு. பல சிறந்த மேற்கோள்களோடும் அறிவு நுணுக்கத்தோடும் இந் நூலுள் விளக்கப்படுதல் கண்டு இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறத்திற்கு மிக மகிழ்ந்தேன்.(17)

சிலப்பதிகாரத்தில் பொழுதுபோக்குக்காக அல்லி யம் முதல் கொடுகொட்டி ஈறாக 11 வகையான ஆடல் கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒன்பது வகைச் சுவைகள் கூறப்பட்டுள்ளன. இருபத்து நான்கு வகையான அவிநயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பஞ்ச மரபு நூலில் அவிநய மரபு பகுதியில் 33 ஒற்றைக் கை முத்திரைகளும் 15 இரட்டைக் கை முத்திரைகளும் தரப்பட்டுள்ளன. அவ்வாறெல்லாம் சிலப்பதிகாரம், பஞ்சமரபு முதலிய நூல்களில் விவரிக்கப்படும் தமிழரின் ஆடலையும் அவிநயத்தையும்தாம் நாட்டிய சாத்திரம், அபிநயதர்ப் பணம் முதலான வடமொழி நூல்கள் கையாண்டுள்ளன. அவிநயம் என்னும் தமிழ்ச் சொல்லையே அபிநயம் என வடமொழியில் மாற்றிவிட்டனர். தமிழரின் ஆடற் கலையை இசை வேளாள மரபினர் தொடர்ந்து பயின்று வந்தனர். அதைத் தாசியாட்டம் என்று நாடு இழிவு படுத்தி வந்தது. ஆனால், இந்த நூற்றாண்டில் 1930ஆம் ஆண்டு வாக்கில்தான் அதற்குப் பரத நாட்டியம் என்று புதுப்பெயர் சூட்டிச் சமற்கிருதமயமாக்கி அதையும் ஆரியம் அபகரித்துக் கொண்டது. அது காசுமீரத்திலி ருந்து வந்த கலை என்று கூடக் கூறத்துணிந்தது.

எனினும், நாட்டியத்தைப்பற்றி நூலொன்று எழுதிய சி.ஆர். சீனுவாச அய்யங்கார் கூறுகிறார்:

இசை, நாட்டியம் முதலிய கலைகளெல்லாம் தமிழ் நூல்களிலிருந்துதான் வடமொழிக்குக் களவாடப் பட்டன என்று மறைந்த என் நண்பர் ஆபிரகாம் பண்டிதர் கூறுவதுண்டு. அது உண்மைதானோ என இன்று யானே கருதவேண்டியுள்ளது. ஏனெனில், இப் பொழுது நாட்டியத்தில் கையாளப்படும் பல சொற்கள் ஆரியச் சொற்கள் அல்ல. அவற்றின்மூலம் சந்தேகத்துக் கிடமின்றித் திராவிடமே(18)

பண்டைத் திராவிடரின் இசைக் கலையும் ஆடற் கலையும்தான் பின்னாள் ஆரியரால் சமற்கிருத மய மாக்கப்பட்டன என்பதற்கு இனியும் ஆதாரம் வேண் டுமோ?

- ப. தண்டபாணி,B.E., M.Sc., (Engg.)

இசை ஆராய்ச்சியாளர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

- விடுதலை நாளேடு 12 12 19

புதன், 11 டிசம்பர், 2019

இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை -33

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இசை ஆராய்ச்சியாளர் ப.தண்டபாணி அவர்கள் உரை வருமாறு.

வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங் களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற்பயிற்சி மிக்குடையாராயும் கலையுணர்ச்சி சான்றவ ராயுமிருந்தமைப்பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்க ளுக்குப் புராணங்கள் வகுத்தனர்........ இன்னும் அவர்தம் புத்திநலங் காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங் களையும் மொழிப்பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும் வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்.(1)) இப்படிக் கூறியவர் சமற்கிருத மொழியிலே மிகுந்த பற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் பண்டித ரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் என்னும் அறிஞர். அவ்வாறுதான் இசைக்கலையும் ஆடற்கலை யும் சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தன என்று எண்ணும்படியாகிவிட்டது.

ஆனால் உண்மை யாது ?

“The Indus people knew some sort of writing, and in art they had made considerable progress. The Rigvedic Age is, however, devoid   of  any tangible proof of Aryan achievement in this direction”(2) என்று ரமாசங்கர் திரிபாதி என்னும் வரலாற்றறிஞர் கூறுகிறார். ஆரியர், கலைத்துறையில் எவ்வளவு பின்தங்கியவர்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அதே நேரத்தில் சிந்துவெளி நாகரிக மக்களின் கலைவளத்தைப்பற்றி உலகப் பொதுக் கலைக்களஞ்சியம் கூறுவதாவது:

“Some musical instruments such as the arched or bow-shaped harp and more than one variety of drum have been identified from the small terra-cotta figures and among the pictographs on the seals that were probably used by the merchants. Further, it has been suggested that the bronze statuette of a dancing girl represents a class of temple dancers similar to those found much later in Hindu culture”(3) இதிலிருந்து 5000 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த சிந்துவெளி மக்கள் இசைக் கலையிலும் ஆடற் கலையிலும் எவ்வளவு மேம்பட்ட நிலையிலிருந்தனர் என்பதும் நன்கு புலனாகிறதல்லவா? இனி அந்த சிந்துவெளி மக்கள் யாரென்பதையும் காண்போம். “ The earliest inhabitants were apparently negroids or Dravidians, a short, dark people, who still inhabit the jungles and mountains and form the majority of  the inhabitants of  the province of  Madras, especially the rural areas. They were highly civilised and the remains of their great cities have been recently unearthed at places like Mohenjo - daro and Harappa on the banks of the river Indus.” ( 4 )இவ்வாறு உலக நூலொன்று அய்யந்திரிபறக் கூறுகின்றது. ஆகையால், சிந்துவெளி மக்கள் நாகரிகம் மிக்க திராவிடரே என்ப தும், அவர்கள் இசை, நடனம் முதலான நுண்கலைகளில் சிறந்து விளங்கினார்கள் என்பதும் நன்கு விளங்கு கின்றது.

அந்தத் திராவிடப் பெருங்குடி மக்களின் கலை வளத்தைப்பற்றி இனி ஆராய்வோம். திராவிடர் 25,000 ஆண்டுகளுக்கு முன்னரே இசைக்கலையிலும் ஆடற் கலையிலும் சிறந்து விளங்கினர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தலை, இடை, கடைச்சங்க காலங்களில் தமிழகத்தே இருந்த தனி இசை நூல்களில் பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம், நாடகத் தமிழ்நூல், பரூசபாரதீயம், பரதசேனாபதியம், கூத்த நூல், இந்திரகாளியம், பஞ்சமரபு என்பன சில, அவற்றுள் பஞ்சமரபு தவிர மற்ற இசை நூல்கள் யாவும் அழிந்து போயின.( 5 ) அந்த இசை நூல்களிலிருந்து சிற்சில பாடல்களைச் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடி யார்க்கு நல்லார் மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வகை நிலத்துக்கும் ஒரு பெரும் பண் உரியது என்று தொல்காப்பிய நூலுக்கும் முற்பட்ட காலத்திலேயே தமிழர் வகுத்திருந்தனர். அவை முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்பன. நிலத்துக்குரிய சிறுபண்களை யாழின் பகுதி என்றனர். எனவேதான் தொல்காப்பியர் தாம் எழுதிய இலக்கண நூலில் ஒவ்வொரு வகை நிலத்துக்கும் முதற் பொருளையும் கருப்பொருளையும் கூறப்புகுந்தவிடத் துக் கருப்பொருள்களின் வரிசையில் யாழையும் பறையையும் சேர்த்துள்ளனர். இசையை நாடெங்கும் பரப்பிவந்த பாணர்களைப் பற்றியும், ஆடலை வளர்த்த கூத்தர்களைப்பற்றியும், தொல்காப்பியம் கூறுகிறது. எனவே, சரித்திர காலத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் இசை, கூத்து முதலிய கலைகள் வளர்ந்தோங்கி இருந்தன என்பது பெறப்படுகின்றது. அதனாற்றான் தொல்காப்பி யம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய முதுபெரும் நூல்களில் பழந்தமிழிசை முளைத்துச் சிலப்பதிகாரத்தில் செழித்து வளர்ந்து நிழல்தரும் மரமாகி நிற்கிறது. எனவே, தென்னக இசை வரலாறு எழுதுங்கால் தொல் காப்பியத்திலிருந்து தொடங்குதல் வேண்டும் என டாக்டர் வீ. ப. கா. சுந்தரம் 23-12-1984 ஆம் நாளன்று சென்னையில் நடைபெற்ற தமிழிசைச் சங்கப் பண் ஆராய்ச்சிக் கூட்டத்தில் குறிப்பிட்டார். சங்க இலக்கி யத்துள் பரிபாடல் என்பது இசைக்காகவே இயற்றப்பட்ட இலக்கியமாகும்.

சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய பெரும் பண்ணும் சிறுபண்ணும்சிலப்பதிகாரத்தில் எந்தெந்தக் காதையில் எங்கெங்கு எவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று வரிசையாக நிறுத்தியும் காட்டியுள்ளார். குரவைக் கூத்து ஆடுதற்கு ஏழு ஆய்ச்சியர்கள் வரிசையாக ஒரு வட்டத்தில் நிற்கின்றனர். அவர்களுக்குக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நரம்பு (சுரங்) களின் பெயர்கள் இடப்பட்டுள்ளன. சிலப்பதி காரம் அரங்கேற்றுக் காதையிலும், கானல் வரியிலும், வேனிற் காதையிலும், ஆய்ச்சியர் குரவையிலும் அக்காலத் தமிழிசையின் இலக்கணத்தைப் பற்றியும் ஆடற்கலையைப்பற்றியும் விவரமாகக் கூறப்பட்டுள் ளன. இசைக்கு இயைய ஆக்கப்படும் பாடல்களைத் தமிழ்நூலார் வரிப்பாடல் என்பர். தமிழகத்தின் இசைக் கலையும் ஆடற்கலையும் அவ்வளவு பழைமையா னவை. (6)

ஆனால், இசையைப்பற்றியும் நாட்டியத்தைப் பற்றியும் சமற்கிருதத்தில் முதன்முதலாகக் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுந்த நாட்டிய சாத்திரம் என்னும் நூலில்தான் குறிப்புகள் காணப்படுகின்றன. முன்னாளில் இந்திய உபகண்டம் முழுவதும் தமிழ் மரபுப்படி நிலவி வந்த இசையையும் ஆடலையும் பார்த்தே நாட்டிய சாத்திரம் எனும் நூல் ஆரிய மரபில் இயற்றப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் அந்த நூலிலேயே உள்ளது. ஏனெனில், விந்திய மலைக்கும் தென்கடலுக்கும் இடை யிலுள்ள தென்னாட்டார் பாட்டிலும், பல இசைக் கருவிகளை வாசிப்பதிலும், கூத்திலும் மிக்க திறமை வாய்ந்தவர்கள் என்று அந்த நாட்டிய சாத்திரமே கூறுகிறது.(6) சிலப்பதிகாரத்தில் காணப்படும் இராகப் பாகுபாடுகள் பதினொன்றையும் நாட்டிய சாத்திரம் கூறும் இராக இலக்கணங்கள் பத்தையும் தஞ்சை கே. பொன்னையா பிள்ளையவர்கள் நன்கு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்திய இசையின் வரலாற்றைக் குறித்து அறிஞர் கோசுவாமி கூறியுள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாம்.

“All the developments that were taking place in the Aryan musical culture were not their own discovery. Others contributed much to this. They (Aryans) were innately gifted race eager to learn and appreciate the cultural achievements of  the pre-Aryan people. Some of them were the architects of a higher order of civilization”(7)

ஆயினும், இந்த உண்மையை மறைக்கவே ஆரியர் திட்டமிட்டு இன்றைய இந்தியாவில் நிலவும் இசை முறைகள் யாவும் சாமவேதத்திலிருந்து தோன்றியவை எனப் புரட்டுச் செய்தனர். ஆனால், சாமகானம் என்பது சரியான இசைக்கணக்கு முறையும் இடைவெளி அமைப்பும் இன்றித் தாறுமாறாகப் பாடப்பட்டதாகும். சாமவேதத்துக்கும் (நெடுங்காலத்துக்கு) முன்பே இசைத் தமிழில் வழங்கி வந்த ஏழு சுரங்களும் சாமவேதத்திலி ருந்து பிறந்தன என மக்களை ஏமாற்றி இந்த நாட்டின் இசையையே சமற்கிருதமயமாக்கத் தலைப்பட்டனர். அதன் பொருட்டுச் ச என்பதை ஸ என எழுதினர். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சாரங்கதேவர் தாம் இசைத்தமிழில் வழங்கிவந்த ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களை வலியக் கொடுத்து, அந்த ஏழு சுரங்களும் சமற்கிருதக் குறியீடுகள் எனும் பெரும்புரட்டை ஏற்படுத்தினார். இதனை மறைத்திரு நாராயண சாத்திரிகள் மிக அழகாக விளக்கியுள்ளார். அது மட்டுமன்று தமிழகத்தின் பாணர்கள் தம் செவ்வழி இசையை வடநாட்டிலும் பரப்பி வந்தனர். அதனைத்தான் ஆரியர் மார்க்க இசை என அழைத்தனர். யாழ்கொண்டு இசையைப் பரப்பிய தமிழ்ப் பாணர்களுக்கும் கந்தர்வர் என ஆரியர் பெயரைச் சூட்டினர். கந்தர்வர் தமிழினத்தவர் என்று தமிழ்ப் பேராசிரியர் இராகவய்யங்கார் தமிழ் வரலாறு என்னும் நூலில் கூறியுள்ளார். பாணர்கள் யாழைக் கொண்டு இசைப் பாடுவதையே தொழிலாகக் கொண்ட வர்கள். ஆகையால், பாணர்களுக்கு யாழோர் என்ற பெயரும் உண்டு. யாழோர் என்பதன் நேர் வடமொழி யாக்கம்தான் கந்தர்வர் என்பதாம். கந்தர்வ இசையின் தொடக்கம் வீணையில் என்று பரதர் கூறியுள்ளார். கந்தர்வர் கையாண்டதாகப் பரதர் கூறும் வீணையும் பாணரின் யாழே ஆகும்.(8)

- ப. தண்டபாணி,B.E., M.Sc., (Engg.)

இசை ஆராய்ச்சியாளர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி

- தொடரும்

-  விடுதலை நாளேடு, 10.12.19

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சமுதாய வாழ்வில் வடமொழி மேலாண்மை - 32

டாக்டர் பொற்கோ

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற் றிய கருத்தரங்கில், டாக்டர் பொற்கோ உரை வருமாறு.

மிகப் பழங்காலத்திலேயே தமிழ்ச் சொற்கள் வட மொழியிலும் வடமொழிச் சொற்கள் தமிழிலும் கலந் திருக்கின்றன என்ற உண்மையை ஆய்வாளர்கள் இந்த நூற்றாண்டில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். சங்கத் தமிழில் வடமொழிக் கலப்பு மிக அருகிய நிலையிலேயே காணப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் ஆளும்போது அவை தமிழ் இயல்புக்கேற்பத் திகிலடைய வேண்டும் என்பதில் தமிழுலகம் கருத்தாகவே இருந்திருக்கிறது.

நாளடைவில் வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதி யாகக் கலக்கத் தொடங்கின. தமிழ்ச் சொற்களும் வட மொழியில் கலந்துள்ளன என்ற உண்மை மறையத் தொடங்கியது. வடமொழி எந்த மொழியிலிருந்தும் கடன் கொள்ளாது என்றும் ஒரு தவறான கருத்து உருவானது. களப்பிரர் காலத்தில் பாலியும் பாகதமும் தமிழகத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கின. பல்லவர் காலத்தில் வடமொழிக் கல்வியும் வடமொழிச் செல்வாக்கும் வளர்ந்தன. சமயங்களின் செல்வாக்கு நிலைகள் அடிக்கடி மாறியபோதும், சமற்கிருதச் செல் வாக்கு மட்டும் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழிச் செல்வாக்கு மேலும் வலுப்பெற்று வளர்ந்து மணிப்பிர வாள நடை என்று ஒரு புதிய நடையையே உருவாக்கி விட்டது. தமிழில் சரிக்குச் சரியாகப் பாதிப் பங்கு வடசொற்கள் கலந்த நடையை மணிப்பிரவாள நடை என்பர். அருணகிரியாரின் திருப்புகழ், திவ்வியப் பிரபந்த உரைகள் முதலானவற்றை மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

கால்டுவெல் அவர்கள் திராவிட மொழி ஒப்பிலக் கணம் என்ற நூலை உருவாக்கிய பிறகு தமிழின் தனிச் சிறப்புகள் வெளிப்பட்டு ஒரு புதிய சூழல் உருவாயிற்று. பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை, பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகளார் முதலானோரின் தொண்டினால் படிப்படியாக வடமொழிக் கலப்பு குறைந்து தமிழ் புதுப்பொலிவு பெற்றது என்றால் மிகையாகாது. வட மொழிச் சொற்கள் தமிழில் கலந்த முறையை மேலும் சற்று விரிவாக எண்ணிப் பார்ப்பது தகும்.

வடமொழிச் செல்வாக்கு சமயங்களையும் அரசர் களையும் தன்னுள் அகப்படுத்திய பிறகு சமுதாய வாழ் விலும் ஊடுருவிப் பரவியது. சங்க காலத் தமிழரசர்களின் பெயர்களையும், பிற்காலச் சோழ பாண்டிய வேந்தர் களின் பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வட மொழிச் செல்வாக்கின் வளர்ச்சி தெளிவாகப் புலப் படும்.

ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத் துங்கன், விக்ரமன், ராஜகேசரி, பரகேசரி முதலான பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ்ப் பெயராக இல்லை. மாறவர்மன், சடையவர்மன், குலசேகரன் முதலான பெயர்களும் வடமொழிச் செல்வாக்கின் உச்சநிலையை நமக்கு உணர்த்துகின்றன. அரசர்களின் பெயர்களே இப்படி மாறிவிட்ட பிறகு அவர்கள் வழங்கும் பட்டங் களும் சிறப்புப் பெயர்களும் எப்படி இருக்கும்? அவை யும் வடமொழி மயமாயின. தமிழகத்தில் உள்ள ஊர்ப்  பெயர்கள், கோயிலின் பெயர்கள், தெய்வத்தின் பெயர் கள், மக்களின் பெயர்கள்-இப்படி எல்லாப் பெயர்களும் வடமொழி மயமாயின. வடமொழிச் செல்வாக்கினால் மயிலாடுதுறை மாயூரமாயிற்று; திருமுதுகுன்றம் விருத்தாசலமாயிற்று; மரைக்காடு மறைக்காடாகி அது திருமறைக்காடாகிப் பின் வேதாரண்யமாயிற்று.

தியாகேசர், நடராஜர், வைத்தீஸ்வரன், வெங்க டேஸ்வரன், லோகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, புவ னேஸ்வரி, பிரம்மபுரீஸ்வரர், பிரம்மவித்யாநாயகி, ஆபத்சகாயேஸ்வரர், கோகிலேஸ்வரர், சொர்ணபுரீஸ் வரர், சகல புவனேஸ்வரர், அருணாசலேஸ்வரர் என்று இவ்வாறு தெய்வப் பெயர்கள் வடமொழி மயமாக மாறின.

ஊர்ப் பெயர்களும் தெய்வப் பெயர்களும் வட மொழி மயமாக்கப்பட்ட நிலையில் வடமொழிச் செல் வாக்கு இங்கே வேரூன்றத் தொடங்குகிறது. படிப்படி யாக மக்களுக்கு இடும் பெயர்களும் வடமொழி மயமாகின்றன. லக்ஷ்மி, ஜானகி, ஷண்முகம், பார்வதி, சரஸ்வதி, சிறீதேவி, சிறீதர், சகஸ்ரநாமம், புருஷோத்த மன், புஷ்பவல்லி என்று இவ்வாறு மக்களின் பெயர் களிலும் வடமொழிச் செல்வாக்கு பரவியது.

வடமொழிச் சொற்கள் தமிழில் மிகுதியாகப் பரவிய தன் விளைவாக நல்ல தமிழ்ச் சொற்களும் அன்றாட வழக்கிலிருந்து மறையத் தொடங்கின. மக்கள் வாழ்க் கையில் நடைபெறும் திருமணம் முதலான சடங்கு களிலும் வடமொழி புகுந்து செல்வாக்கு செலுத்தும் நிலை உருவாயிற்று.

விவாஹம், கர்னபூஷணம், கிரஹப்பிரவேசம், புஷ்பவதியாதல், கன்னிகாதானம், சஷ்டியப்தபூர்த்தி, ஸ்ரார்த்தம், தீர்த்தயாத்திரை முதலான சொற்கள் வாழ்க் கைச் சடங்குகளில் புகுத்தப்பட்டன.

அன்றாட வாழ்வில் பயன்படும் பேச்சுவழக்கில் கூட வடமொழிச் செல்வாக்குப் பரவியதும், சவுகரியம், சேக்ஷமம், ஜலம், ஸ்நானம், யஜமான், புருஷன், உப யோகம், பிரயோஜனம், யோஜனை, விசேஷம், விசுவா சம், நமஸ்காரம், லக்ஷணம், அவலக்ஷணம் இப்படி ஏராளமான வடமொழிச் சொற்கள் வந்து குவிந்தன.

இப்படியெல்லாம் தமிழ்ச் சமுதாய வாழ்வில் எல்லா நிலையிலும் வடமொழிச் செல்வாக்கு ஓங்கிய நிலையில்தான் இங்கே வடமொழி மேலாண்மைக்கு எதிர்ப்பு உருவாயிற்று. நாம் முன்பே குறிப்பிட்டது போல இருபதாம் நூற்றாண்டில்தான் வடமொழி மேலாண்மை முறியடிக்கப்பட்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு உரிய சூழல் உருவாகியுள்ளது.

அரசியல், சமுதாயம், சமயம், மொழி இலக்கியம் போன்ற எல்லா எல்லைகளிலும் வடமொழிச் செல் வாக்கு ஓங்கியது. இதன் விளைவாகத் தமிழ்ச் சமுதா யமும் தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ஒடுக்கப் பட்டு இவற்றின் சீரும் சிறப்பும் புறக்கணிக்கப்பட்டு மறைக்கப்பட்டன. இந்த நிலை எல்லை மீறிப் போன போது தமிழகத்தில் வடமொழி மேலாண்மை கடுமை யான எதிர்ப்புக்குள்ளாயிற்று.

அரசியல், சமுதாயம் முதலான எல்லைகளில் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் ஏனைய திராவிட இயக்கத்தோழர்களும்  வடமொழி மேலாண் மையை முறியடித்தார்கள் சமயம், மொழி, இலக்கியம் முதலான எல்லைகளில் வள்ளலார், மறைமலையடிகள், ச. சோ. பாரதியார் முதலான பெருமக்கள் வடமொழி மேலாண்மையை எதிர்த்துப் போராடிப் பெரு வெற்றி பெற்றார்கள்.

வடமொழியில் அறிவு பெறுவது என்பது வேறு; வடமொழியின் மேலாண்மையை ஏற்றுக் கொள்வது என்பது வேறு. மறைமலையடிகளார் வடமொழியில் அறிவுபெற்றவர்; ஆனால் அவர் வடமொழி மேலாண் மையை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நின்றவர்.

வடமொழி மேலாண்மையை எதிர்ப்பது என்பது கடந்த நூற்றாண்டில் இங்கே வரலாற்று அடிப்படையில் உருவாகிவிட்ட ஒரு கட்டாய நிகழ்வு. தமிழ் வளர்ச்சிக்கு உரிய பல்வேறு ஆக்கப் பணிகளில் முழு மூச்சாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய கடமை இப்போது நம்முன் நிற்கிறது.

 - விடுதலை நாளேடு 5 12 19

திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழ் மொழியில் வடசொற்கள் புகுந்தமை - 31

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், தமிழ் மொழித் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் உரை வருமாறு.

28.11.2019 அன்றைய தொடர்ச்சி...

பிறமொழி கற்றவர்கள் தாம் கற்றமொழி உயர்ந்தது என்று உயர்வு மனப்பான்மை கொண்டு இல்லை என்று இரப்பவனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடைபோல் கருதிச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியில் புகுத்தத் தொடங்கினும் அம் முயற்சி எதிர்க்கப்படும். இத்தனை எதிர்ப்பும் இல்லாமலே சிலசொற்கள் ஒரு மொழியில் புகுந்த பின், அந்த மொழியின் உரிமையான சொற்களும் இவன் கடன் வாங்கப்பட்டவையே என்று யாரேனும் எடுத்துக் கூறித் தாழ்வுபடுத்த முனையினும் இம்முயற்சி ஏற்கப்படா மல் எதிர்க்கப்படும் என்றும் டாக்டர் மு.வ. அவர்கள் குறிப்பிடுவது தமிழ்மொழியில் வடமொழிச் சொற்கள் புகுந்ததனைச் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கான காரணத்தை டாக்டர் மு.வ. அவர்கள் மிகச் சிறப்பாகப் பின்வருமாறு புலப்படுத்தியிருக்கக் காணலாம்.

பழங்காலத்திலேயே வடமொழியிலிருந்து தமிழில் வரும் சொற்களைத் தடையின்றி ஏற்றுக்கொள்ள முடியாமற் போன நிலைமை இங்கு கருதத்தக்கது. தற்சமம், தற்பவம் என்று தமிழில் கலந்துள்ள வடசொற்களை இருவகையாகப் பிரித்த பிரிவிலும் இந்த உண்மையைக் காணலாம். வட மொழியிலிருந்தே தமிழ் கடன் வாங்கியது என்றும், தமிழனி டமிருந்து வடமொழி ஒன்றும் கடன் வாங்கியதில்லை என் றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என் றும், உண்மைக்கு மாறான கூற்றுக்களை வடமொழி கற்றவர் தொடர்ந்து கூறிவந்த காரணத்தால் வடசொற்கள் தமிழர் நெஞ்சில் அன்பான இடம்பெற முடியாமற் போயிற்று. ஒரு சிலர் தமிழும் வடமொழியிலிருந்து பிறந்தது என்று செருக் கோடு கூறிவந்தமை பகைமையையும் வளர்த்து வந்தன. நடுவுநிலைமை பிறழ்ந்து ஒரு சாரார் பரப்பிய கருத்துகள் அன்பான இசைவுக்கு இடம் இல்லாமற் செய்துவிட்டன. தமிழையும் வடமொழியையும் ஒப்பிட்டு அவற்றின் உரிமை யான வளர்ச்சியையும் சிறப்பியல்பையும் சீர்தூக்கி உணர முடியாத புலவர்கள் சிலர் வடமொழிச் சார்பாக நடுவுநிலை இல்லாமல் கூறிய கூற்றுகள் பகைமைக்கு வித்திட்டன. ற ன ழ எ ஒ இந்த அய்ந்தெழுத்துக்களே தமிழுக்கு உரிமை என்றும், அய்ந்தெழுத்துக்களை மட்டும் உடையது ஒரு மொழி என்று கூற நாணவேண்டும் என்றும் புலவர் ஒருவர் மயங்கிக் கூறியது இதற்கு எடுத்துக்காட்டாகும். அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? அன்றியும் அய்ந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே ஆகையால் யானும் அதுவே அறிக.

(இலக்கணக் கொத்துரை, பாயிரம் : 7)

இவ்வாறு ஒரு சிலர் மொழிகளின் சிறப்பியல்புக்கும் உடைமைக்கும் வேறுபாடு அறியாமல், மொழிகளின் இயல் பும் தனி வளர்ச்சியும் ஆராய்ந்து உணராமல் கூறி வட மொழிக்குப் பெருமை தேடித்தர முயன்ற தவறான முயற் சியே, இன்று தமிழ் கற்றவர் பலரும் வடமொழிக் கலப்பை அடியோடு வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தனித்தமிழ் உண்டோ என எழுப்பிய வினாவே பிற்காலத்தில் தனித்தமிழியக்கத்தை வளர்ப்பதற்கும் காரணம் ஆயிற்று. (மொழி வரலாறு; கடன் வாங்கல்; பக்கங்கள் : 104, 105)

தமிழ் வடமொழியிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி யது போன்றே, வடமொழியும் தமிழிலிருந்தும், பிறமொழிக ளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்கியிருப்பதனைக் கால்டுவெல் சுட்டிக்காட்டுவர். ஆங்கில மொழியில் எவ்வளவு பிரிட்டிஷ் சொற்கள் வடமொழியில் உண்டோ அவ்வளவு திராவிட சொற்கள் வடமொழியில் உண்டு என்றும் கூறுவர் கால்டுவெல். மேலும், தமிழ்ச் சொல்லா, வடச் சொல்லா என்று அய்யுறத்தக்க நிலையில் உள்ள சொற்களை எல்லாம் தயக்கமின்றி வடசொல் என்று கூறும் கண்மூடி முடிபும் நெடுங்காலம் இருந்து வந்து தீமையினை விளைவித்ததாகவும், வடமொழி நிகண்டு நூலாரும் இலக்கணிகளும் தமிழ்ப் புலவர்களைப் போல் நடுவு நிலைமைப் போக்குடன் சொற்களை ஆராய முற்படாமல், எல்லாவற்றையும் வடசொல் என்று குறிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார்.  (“But this probability has genererally remained unnoticed, and wherever any word was found to be the common property of  the Sanskrit and any of the Dravidian tongues, it was at once assumed to be a Sanskrit derivative -Sanskrit lexicographers and Grammarians were not always so discriminate as their Dravidian brethren” - Caldwell, A comparative Grammar of the Dravidian Languages, p. 453) மேலும் தமிழில் புகுந்த சொற்களை வகைப்படுத்தும் தொல்காப்பியனார் இலக்கண முறைப்படி சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகையாகப் பகுத் திருத்தலேயன்றி, சொற்கோவை முறைப்படி இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்றும் பிரித்துள்ள தனை, அவற்றுள்,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட சொல்லென்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

- தொல்; சொல்; 397

என்னும் நூற்பாவிற் குறிப்பிட்டுள்ளார்.

சங்க காலத்தில் நூற்றுக்கு இரண்டு மூன்று என்னும் அளவில் தமிழில் இடம் பெற்ற வடசொற்கள், சங்க மருவிய காலத்தில் - அதாவது பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதி காரம், மணிமேகலை எழுந்த காலத்தில் - நூற்றுக்கு நான்கு அய்ந்து என்னும் விழுக்காடளவில் பெருகின. ஆழ்வார், நாயன்மார் வாழ்ந்த பக்திக் காலமாம் பல்லவர் காலத்தில் நூற்றுக்குப் பத்துப் பதினைந்தாகப் பல்கிப் பெருகின. பக்திப் பதுவல்களுக்கு உரை எழுந்த காலத்தில் மணிப்பிரவாள நடை வழக்குக்கு வந்த காலத்தில் வடமொழிக் கலப்பு அள வின்றிப் பெருகியது.

தேவார காலத்தில் நாயன்மார்கள் தலங்கள்தோறும் சென்று இறைவனை வழிபட்ட காலத்தில், அத்தலங்களின் பெயரும் அத்தலத்தில் இறைவடிவில் எழுந்தருளியுள்ள இறைவன், இறைவி திருப்பெயர்களும் தனித்தமிழிலேயே இருந்தன.

முதலாவது தலங்கள் சிலவற்றின் பெயர்களையும் அவை பின்னாளில் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்ட நிலையினையும் காண்போம்.

நாயன்மார்கள் காலத்தில்:

முன்னாளில்     பின்னாளில்

மயிலாடுதுறை    மாயூரம்

திருமுதுகுன்றம்  விருத்தாசலம்

திருமறைக்காடு    வேதாரண்யம்

இறைவன் இறைவி திருப்பெயர்கள் :

முன்னாளில்      பின்னாளில்

அண்ணாமலை   அருணாசலேசுவரர்

உண்ணாமுலை   அபீதகுசாம்பாள்

இவ்வாறு பிற்காலத்தில் தமிழைச் சிதைத்து வடமொழி யைப் புகுத்தி ஓர் இயக்கமே நடாத்தி வெற்றிகண்டு இன்றளவும் அச்செல்வாக்கு குன்றாமல் திருக்கோயில்களில் வடமொழிப் பெயர்களே ஆட்சி ஒச்சி வருகின்றன.

நடுவு நிலைமை நெஞ்சமும் ஆராய்ச்சிப் போக்கும் நிறைந்த மேனாட்டு அறிஞர்களே அவ்வப்போது மறைந்து போன உண்மைகளை உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். சென்ற நூற்றாண்டில் டாக்டர் குண்டர்ட் என்பவர் வட மொழியில் திராவிடக் கூறுகள் என்னும் ஆராய்ச்சிக் கட்டு ரையினை வெளியிட்டார். இக்கட்டுரை கி.பி. 1869ஆம் ஆண்டு ஜெர்மன் கீழ்நாட்டுக் கலைக் கழகத்தின் பத்திரி கையில் வெளிவந்தது. கி.பி.1872இல் கிட்டல் என்பவர் வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள் என்னும் கட்டுரை எழுதினார். இதற்குப் பின்னரே இத்துறையில் டாக்டர் கால்டுவெல் விரிவாக ஈடுபட்டார்.

இருபதாம் நூற்றாண்டில் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளார் மும்மொழிப் புலமை வாய்ந்து, தனித் தமிழ் இயக்கம் கண்டார். வேதாசலம் என்னும் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தம்பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனத் தம் தமிழார்வத்தால் மாற்றிக் கொண்டார். தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகளார் தொடங்கித் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலராவது தனித்தமி ழிற் பேசவேண்டும், எழுதவேண்டும் என முனைந்திருப்ப தும், அரசாங்கம் மாயூரத்தை மயிலாடுதுறை எனப்பெயர் மாற்றம் செய்திருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு இடைக்காலத்தே தமிழ்க் கதிரவன் ஒளியினை மறைத்த வடமொழிக் காரிருள் இக்காலத்தே மெல்ல மெல்ல விலகி வருகிறது.

காரிருளால் கதிரவன்தான் மறைவதுண்டோ? கரைசேற் றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண் மைதான் இன்மையாமோ? என்று புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் புகலுவது போல, இனித் தனித்தமிழ் இயக்கம் தழைக்க வழிவகை காணுவோம் எனக் கூறி அமைகிறேன்.

 - விடுதலை நாளேடு 3 12 19

 

அய்யாவின் அடிச்சுவட்டில் கடந்துவந்த பாதை

அய்யாவின் பொய்யாத நம்பிக்கையாய் ஆரிய ஆதிக்கத்தை கலங்கவைக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வு புரட்சி மணம் வீசும் பொதுவாழ் வாகும். ஒரே இலட்சியம் ஒரே கொடி, ஒரே இயக்கம், ஒரே தலைவர் என்று 87 ஆண்டு வாழ்நாளில் 77 ஆண்டு பொதுவாழ்க்கை இவரது சிறப்பாகும். பவள விழா காணும் திராவிடர் கழகத்தில் பவளவிழா கண்ட தொண்டர் இவர்.

10 வயதில் மேடையேறி பேசிய கொள்கைகளை 86 வயதிலும் பட்டிதொட்டியெல்லாம், பாரெங்கும் பரப்பி வருகிறார். இவரது தன்வரலாறு (Auto Biography) தான் அய்யாவின் அடிச்சுவட்டில். இது தன் வரலாறானாலும் இயக்க வரலாறு, 75 ஆண்டுகால தமிழக அரசியல் சமூக வரலாற்றின் முக்கிய கூறுக ளைப் பதிவு செய்வதாகும்.

புதிய பார்வை ஏட்டில் அதன் ஆசிரியரான தோழர் முனைவர் மா.நடராசன் அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு 1995 செப்டம்பர் முதல் தொடராக வெளிவந்தது. அது தொகுக்கப்பட்டு முதல் பாகம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்பாகத்தில் ஆசிரி யர் அவர்களின் பிறப்பு, இளமைக்கால கல்வி, தந்தை பெரியாருடன் இணைந்து பயணித்த தொடக்க கால கொள்கை பயணம் அவரது திருமணம், வழக்குரைஞர் பணி ஆகியவையும் இயக்க வரலாற்றின் முக்கிய கூறு களான இயக்க மாநாடுகள், பெரியார் மணியம்மை திருமணம், ஜாதி ஒழிப்புப் போராட்டம், இந்திய யூனியன் பட எரிப்பு போன்ற இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன. அறிஞர் அண்ணா மீண்டும் பெரியாருடன் இணைந்து பங்கேற்ற நிகழ்வு களும் அண்ணா மறைவு வரையிலான திராவிடர் கழக முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

பின்னர் ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் உண்மை ஏட்டில் தோழர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் எழுதத் தொடங்கினார் தமிழர் தலை வர். இவை முழுமையாக தொகுக்கப்பட்டு இதுவரை 6 பாகங்கள் வெளிவந்துள்ளன.

இரண்டாம் பாகத்தில் அண்ணா மறைவிற்குப் பின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராகவும், தி.மு.கழ கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார். அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகளில், பகுத்தறிவாளர் கழக தொடக்கம், 1971 சேலம் மாநாடு, பொதுத் தேர்தல் மற் றும் இயக்க முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

மூன்றாம் பாகத்தில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் சிலைத் திறப்புகள், தி.மு.க.விலிருந்து எம்.ஜி. ஆர். நீக்கம் போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளும் இயக்க மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் போன்றவையும் தந்தை பெரியார் மறைவு வரையிலான இயக்க முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.

நான்காம் பாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் மறைவுக்கு பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப் பேற்று வீறுநடைபோட்ட வீராங்கனை அன்னை மணியம்மையார் அவர்களுடன் பயணித்த கொள்கை பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, இயக்கத்தில் துரோகம், அவற்றை முறி யடித்த அன்னையாரின் துணிவு, இந்தியாவே மிரண்ட இராவண லீலா இருண்ட கால ஹிட்லரின் நாஜி கொடு மைகளை நினைவூட்டும் அவசர நிலை பிரகடனம் (மிசா), அதன் கொடுமை உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

அன்னையாரின் மறைவுடன் இப்பாகம் நிறை வடைந்தது.

பின்னர் அடுத்த அய்ந்தாம் பாகத்தில் அன்னை யாரின் மறைவுக்குப் பின் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொடக்க கால நிகழ்வுகளுடன் தொடங்கியது.

இதில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாக்கள், மத்திய மாநில அரசுகள் பெரியார் நூற்றாண்டையொட்டி செய்த பணிகள், அன்னை நாகம்மையாரை வரம்புமீறி விமர்சித்த கண்ணதாசனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், எம்.ஜி.ஆர். அரசின் நுழைவு தேர்வு திணிப்பு, சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பாணை அதனை எதிர்த்த போராட்டங்கள் இறுதியாக ஈட்டிய வெற்றி போன்றவை இடம்பெற்றிருந்தன.

அந்த வரிசையில் வந்த ஆறாம் பாகம் 1984 வரையிலான சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அளவு 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டதன் வெற்றி விழாவு டன் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு வரையிலான கொள்கை பயணச் சுவடுகள் இடம் பெற்றன.

மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்தக்கோரும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடுகள், ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள், இந்து ராஷ்டிர எதிர்ப்பு மாநாடு என்று பல்வேறு மாநாடுகள் மற்றும் திராவிடர் கழக மாநாடுகள் பற்றிய செய்திகளும் உயிருக்கு குறிவைத்து மம்சாபுரத்தில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதலும் இடம்பெற்றன. தமிழர் தலைவர் ஆசிரியரின் அமெ ரிக்கா, இங்கிலாந்து பயணத்துடன் நிறைவடைந்தது.

அந்த வரிசையில் இது ஏழாம் பாகமாகும். தந்தை பெரியாருக்கு பின் சமூகநீதி கொள்கைகள் மண்ணிற் குள் சென்றுவிடும் என்று எண்ணி மனப்பால் குடித்த ஆரிய ஆதிக்க மனப்பான்மைக்கு சாவு மணியாக வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை சாசனமாம் மண்டல் அறிக்கை அமலான காலக் கட்டம் இது என் பது குறிப்பிடத்தக்கதாகும். மண்டல் குழு பரிந்துரைகள் சட்டமாக்கப்பட ஆசிரியர் மேற்கொண்ட வடநாட்டுப் பயணங்கள், பிரதமர் இந்திராகாந்தி வீட்டின் முன் மறியல் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் வடநாட்டு தலைவர்களை தொடர்ந்து சந்தித்தும். குடியரசுத் தலைவரிடம் விளக்கியும் செய்த அளப்பரிய பணிகளும், வி.பி.சிங் பிரதமரானவுடன் அவரைச் சந்தித்து விளக்கி மண்டல் அறிக்கை அமலான வரலாற்றைக் கூறுகிறது.

ஈழத்தமிழர் இன்னல் துடைத்திட மேற்கொண்ட போராட்டங்கள், நிதியுதவி கூட்டங்கள், விடுதலை புலிகளுக்கு செய்த உதவிகள், மேற்கொண்ட அயல் நாட்டு பயணங்கள் ஆகியவற்றை விளக்கும் பாகமாக இது அமைந்துள்ளது.

மேலும் இந்தி எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், நீதித்துறையில் சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நடத்திய போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

பார்ப்பனர்களின் கொலை மிரட்டல்கள், பார்ப்பன கைகூலி, ஆர்.எஸ்.எஸ்சின் கொலை வெறித்தாக்குதல் கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

வாசகர்களும், ஆய்வாளர்களும் இப்பாகத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகளை ஊன்றிப்படித்து அன் றைய காலக்கட்ட அரசியல் சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். எத்துணை மிரட்டல்கள், இடஒதுக் கீட்டை ஒழிக்க எவ்வளவு சூழ்ச்சிகள் நடைபெற்றன என்பதை கவனத்தில் கொண்டு ஆசிரியரின் எதிர் வினை இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் என் பதை புரிந்துக் கொள்ளவேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடியலுக்காக தலைவரும் இயக்கமும் செய்த அளப்பரிய பணிகளை காலக் கட்டத்துடன் எண்ணிப்பார்க்க வேண்டும். ஈழத்திற்கும் திராவிடத்திற்கும் என்னத் தொடர்பு என்று கேட்பவர் களுக்கு பதில் சொல்கிறது இந்த ஏழாம்பாகம்.

- திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம்


- விடுதலை நாளேடு, 1 12 19

திங்கள், 2 டிசம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (32): அண்ணல் அம்பேத்கரை ஏற்றிப் போற்றி பெரியார் எழுதியவை!

நேயன்

உங்கள் மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும் இந்தியத் தலைவராக அம்பேத்கர் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள்.                    

(குடிஅரசு 10.2.1935)

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய டாக்டர் அம்பேத்கர், ராவ்பகதூர் சிவராஜ் போன்றவர்கள் எல்லோரும் நாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்லவென்றும் நாங்கள் இந்துக்கள் அல்லவென்றும் தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வண்டும் என்றும் 15 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள்.          

(குடிஅரசு 13.1.1945)

தோழர் அம்பேத்கர் இம் மாகாண தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் இன்று போர்க்களத்தில் நிற்கும் தளபதியாக விளங்குகிறார். அரசியல் எதிரி எது சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாது, தம் கருமமே கண்ணாகச் செய்கையில் இறங்கிவிட்ட அவரைக் கண்டு, காங்கிரஸ் மட்டுமல்ல... பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமென்ன?

(விடுதலை 27.7.1946)

ஜின்னாவும் டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காண முடியும்? டாக்டர் அம்பேத்கர், நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக்கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக்கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக்கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

(விடுதலை 23.11.1946)

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால், அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை மாத்திரமல்ல, அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது. அவர்கள்தான் தாங்கள் படிப்பதைத் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பெரிய அறிஞர். அதன் காரணமாகவே அவர் ஒரு நாஸ்திகர். அவர் தனது சொந்த அறிவை உபயோகித்துதான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லிவந்தார்.

(விடுதலை 7.12.1956)

இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்பொழுது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.                                                             

(விடுதலை 7.12.1956)

அம்பேத்கர் மக்களுக்கு வழிகாட்டுபவர். சாதி, மத குறைபாடுகளை மனதில் பட்டதைத் தைரியமாக எடுத்துக்கூறி வந்தார். சுயநலம் இல்லாமல் பாடுபட்டவர். இந்தியா முழுவதும் விளம்பரம் பெற்றவர். அவர் தம்முடைய மக்களுக்குப் பவுத்த மதத்திற்குப் போகும்படி வழிகாட்டியிருக்கிறார். இங்கும் பலபேர் மாறக்கூடிய நிலை ஏற்படும். தன் சமுதாயத்திற்குப் படிப்பு, உத்தியோகம் முதலிய காரியங்களில் முயற்சி செய்து பல வசதிகளைச் செய்திருக்கிறார். உத்தியோகத்தில் 100க்கு 15 என்று வாங்கிக் கொடுத்தார். அவர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. அவர் சமதர்ம காலத்திற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற தலைவர் ஏற்பட முடியாது.

(விடுதலை 7.12.1956)

டாக்டர் அம்பேத்கர் புத்தமதத்தில் சேர்ந்து எவை எவைகளை நம்பவில்லை என்று சொன்னாரோ, எவை எவைகளையும் செய்யமாட்டேன் என்று சொன்னாரோ, அவைகளையெல்லாம் நாம் இப்போதே நம்புவதில்லை.

(விடுதலை 28.12.1956)

இந்த ஜாதி முறையைக் கண்டித்ததவர்கள் இரண்டொருவர். அவர்களில் புத்தர் ஒருவர். அவருடைய கொள்கையை இந்த நாட்டைவிட்டே ஒழித்துவிட்டார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் புத்தர்கள் என்பவர்கள் அந்தக் கொள்கை தோன்றிய நாட்டில் வாழ்கிறார்கள். புத்தக் கொள்கயில் மக்களைச் சேர்த்தார் அம்பேத்கர். உடனே, அரசாங்கம் புத்தக் கொள்கையில் சேர்ந்தவர்களுக்குச் சலுகையில்லை, வேலைக்கு இடம் ஒதுக்கி வைக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கொள்கைக்குப் போனவன் இரண்டொருவன் இப்பொழுது திரும்பி வரப் பார்க்கிறான். புத்தக் கொள்கையில் மக்களைச் சேர்த்த அம்பேத்கரைக் கொன்றுபோட்டு ஒழித்துவிட்டார்கள். அவர் எப்படிச் செத்தார் என்பதற்கு இன்றைய தினம் வரை தகவல் ஏதும் இல்லையே! ஏதோ இரவு பத்துமணிவரை படித்துக் கொண்டிருந்தார். படுக்கைக்குப் போனார். பொழுது விடிய படுக்கையில் பிணமாகக் கிடந்தார் என்பதைத் தவிர, எப்படிச் செத்தார் என்று யாரும் சொல்லவில்லையே? இந்து மதத்திற்கு விரோதமாக (பகையாக) இருந்த அவரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதானே இவர்களுடைய எண்ணம்? அதன்படி அவரைக் கொன்று போட்டு விட்டார்களே! இதைப்பற்றிக் கேட்கக்கூட இன்று நாதி இல்லையே!  

(விடுதலை 4.11.1957, 8.9.1961, 4.5.1963)

அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல, நீண்ட நாளாகவே நாஸ்திகர். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லோரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக்கூடிய மனிதராக ஆகமுடிகிறது.

மதம் ஒழியாதவரை, கடவுள் ஒழியாதவரை சாதியும் ஒழியாது என்றார் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.            

(விடுதலை 20.11.1958)

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர். அதற்காக உயிர் வாழ்ந்து தொண்டாற்றியவர் மற்றும் பலர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டார்கள் என்றால் அவர்கள் எல்லாரும் அதன் பெயரால் வயிற்றை வளர்த்தவர்களே ஆவர்.

(விடுதலை, 6.3.1961)

அம்பேத்கரின் தொண்டு என்ன, எப்படிப்பட்டது என்றால், இந்தியாவிலேயே சிறந்த மனுதர்மத்தைத் தீயிட்டுக் கொளுத்திக் காட்டியவர். நான் வாயால் கொளுத்த வேண்டும் என்றேன். அம்பேத்கர் எரித்தே காட்டினார்.

(விடுதலை 6.3.1961)

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை நீங்கள் திறந்து வைக்கும்படி பணித்துள்ளீர்கள். இது எனக்கு மிகவும் பிடித்தமான சங்கதியாகும். டாக்டர் அம்பேத்கர் நாட்டில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கும் வண்ணம் மேல்ஜாதியார் கொடுமையை எல்லாம் எடுத்து விளக்குபவர். காந்தியையும் காங்கிரஸையும் ஜாதி ஒழிப்புக்கு இடையூறாக இருப்பது கண்டு கண்டித்துப் பேசியவர் ஆவார். காந்தியார் எந்த விதத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தலைவர் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர் என்று கூறியவர். இந்து மதக் கொள்கையைக் கண்டு அதை நம்மால் ஒழிக்க முடியாவிட்டாலும் அந்த மதத்திற்கே முழுக்குப் போட்டுவிட்டு 3 லட்சம் மக்களுடன் புத்த மதத்தில் சேருவது என்று முடிவு பண்ணிக்கொண்டு சேர்ந்தவர். இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால், அவர் இன்னும் பல இலட்சம் மக்களைப் புத்த மார்க்கத்தில் சேரும்படி செய்து இருப்பார்.

(விடுதலை 4.5.1963) 

(தொடரும்...)

-  உண்மை இதழ், 16-31.3.19

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை Dravidian Manifesto

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, ‘‘பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்’’ என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை - சமத்துவம் - சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலையை உருவாக்குவதாகும்.

“ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள்; நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்...

சம தர்மம்

சம ஈவு

சம உடைமை

சம ஆட்சித் தன்மை

சம நோக்கு

சம நுகர்ச்சி

சம அனுபவம்

இருக்கவேண்டும்!

ஏற்படவேண்டும்!!

ஏற்படுத்தப்படவேண்டும்!!!

ஏற்பட்டாக வேண்டும்!!!!”

- தந்தை பெரியார்

 

இது ஒரு சுருக்கப் பிழிவாகும்.

திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -

1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே!

2. பாலின சமத்துவம்

3. சமுகநீதி

4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம்,  மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.

5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.

6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.

7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.

8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.

9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.

10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தியோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.

11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!

12.. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள்  எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின்  நுகர்வுக்கும் உரியவர்களே!

13. கிராம - நகர பேதம் கூடாது.

14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்.

15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில்

விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!

16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற  பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி’ எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.

17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை  நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.

18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.

19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.

21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.

22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.

23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.

24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.

25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.

திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.

வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!

குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.

26. மரண தண்டனையை ரத்து செய்தல்.

27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.

28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.

29. ‘அனைவருக்கும் அனைத்தும்’ அமைந்து, சமுகத்தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.

30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!

31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!

32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.

33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு

கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பரிணாம நிலை வளரட்டும்!

பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும்!

                                                                      (கி.வீரமணி)

                                           தலைவர்,

                                    திராவிடர் கழகம்.

தஞ்சாவூர்

23.2.2019

-  உண்மை இதழ், 1-15.3.19

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (31) : அம்பேத்கரை உயர்வாகப் பாராட்டிய தந்தை பெரியார்!

நேயன்

அண்ணல் அம்பேத்கரை தந்தை பெரியார் எந்த அளவிற்கு ஏற்றிப் போற்றி எழுதினார் என்பதற்கு கீழ்க்கண்டவற்றைப் படித்தாலே எவரும் எளிதில் அறியலாம்.

1925ஆம் வருஷத்திலே இந்த நாட்டில் ‘சுயமரியாதை இயக்கம்’ தோன்றியது. இந்த நாட்டிலே மதத்தை எதிர்த்து, மற்ற பேதங்களை எதிர்த்துக் காரியம் செய்வதென்றால், அவ்வளவு கஷ்டமல்ல; மக்களுக்குள் நீண்ட நாட்களாகவே அந்த உணர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்பதால். ஆனால், வடநாட்டில் அப்படியல்ல.

வடநாட்டில் இருக்கிற இந்த பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ‘சூத்திரன்’, ‘பஞ்சமன்’ என்றால் ஏதோ ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ பட்டம் என்பதாகக் கருதிக் கொண்டிருக்கிற மக்கள் வாழும் நாடு அது. அங்கு இந்த உணர்ச்சியைக் கிளப்புவதென்றால் கடினமான காரியமாகும். ஆனால், அங்கேயே 1927, 1928லேயே அம்பேத்கர் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசியிருக்கிறார். நாசிக்கில் கூடிய ஒரு மாநாட்டில் இராமாயணத்தைப் போட்டுக் கொளுத்தியிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)

1930லே என்று நினைக்கிறேன். ‘தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு. இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லீம் ஆகவேண்டும்; நானும் முஸ்லீம் ஆகப் போகிறேன்’ என்று அவர் சொன்னார்.

அப்போது, தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், ‘நீங்கள் ஒண்டியாகப் (தனியாக) போகக்கூடாது. குறைந்தது ஓர் இலட்சம் பேரோடு மதம் மாறவேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மதிப்பான். இல்லாவிட்டால் தனியாக அங்கு போனால் அவனும் நம்மைக் கவனிக்கமாட்டான். உங்கள் தாழ்த்தப்பட்ட இனம் நசுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். முஸ்லீம் ஆகிவிட்டால் இந்து மதத்தின் இழிவு பற்றி நீங்கள் பேசினால், ‘முஸ்லீம் இந்து மதத்தைப் பற்றிப் பேசுவதா?’ என்பதாகக் கிளப்பி விடுவார்கள். ஆகையால், ஒரு இலட்சம் பேரோடு தாங்கள் போகும்போது நானும் ஒரு 10, 20 ஆயிரம் பேர்கள் தருகிறேன்’ என்பதாகத் தந்தி கொடுத்தேன். (‘விடுதலை’ 16.5.1952)

உள்ளபடி சொல்லுகிறேன் இந்துக்கள் யாரிடமாவது வசமாக மாட்டினார்கள் என்றால், அது தோழர் ஜின்னா அவர்களிடமும், தோழர் அம்பேத்கர் அவர்களிடமும்தான். தோழர் ஜின்னாவிட மிருந்து விடுதலை பெற்று விட்டார்கள். ஆனால், அம்பேத்கரிடமிருந்து விடுதலை பெற முடியவில்லை. அவர் அடிக்கடி ஓங்கி அடித்துக் கொண்டேயிருக்கிறார். (‘விடுதலை’ 16.5.1952)

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது. இன்று மட்டுமல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இதை நான் கூறியிருக்கிறேன்.  1930 முதலே எனக்கு அவரைத் தெரியும். நமது ‘குடிஅரசு’ ஏட்டில் என்னென்ன கருத்துக்கள் வருமோ அவைகளை எல்லாம் அவர் பேசியிருக்கிறார். நமக்கு ஏற்ற நண்பர் என்பதை எண்ணி அவரை நான் பாராட்டி வந்தேன். நமது ‘குடிஅரசி’ல் அவரைப் பாராட்டி எழுதியதைப் பார்த்துத்தான் தாழ்த்தப்பட்டவர்களே அவரை உணர்ந்தார்கள். (‘விடுதலை’ 20.6.1972)

மறைந்த பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்த கருத்துடையவர்கள் என்பது அல்ல. இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றிய இந்து மதப் புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட எங்கள் இரண்டு பேர்களின் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது மட்டுமல்ல, அவைகளைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும் பலமாகவும் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறேனோ அவ்வாறுதான் அவரும் மிகவும் உறுதியாகவும் பலமாகவும் இலட்சியங்களைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, பார்ப்பனர் போற்றிப் பிரச்சாரம் செய்யும் ‘கீதை’ என்பதை ‘முட்டாள் உளறல்’ என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

இப்படிச் சில விஷயங்களில் மாத்திரமல்ல, பல விஷயங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாரோ, அதே அபிப்பிராயம்தான் எனக்கு இருந்து வந்தது. பல விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் கலந்து கொள்ளாமலேயே அந்தப்படி அபிப்பிராயம் கொண்டவர்களாக இருந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தபோது நானும் அவரும் எங்கள் இருவருடைய எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் உண்டு. (‘விடுதலை’ 22.02.1959)

பர்மாவில் நடந்த உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள நாங்கள் போயிருந்தபோது அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘என்ன இராமசாமி, நாம் இப்படிப் பேசிக்கொண்டே இருப்பதால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள், நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம்’ என்றார்.

நான் சொன்னேன், ‘ரொம்பச் சரி. இப்போது முதலில் நீங்கள் சேருங்கள். நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால், தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறேன். இந்துக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும், இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்துகொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும், ‘நீ அதைச் செய்யக் கூடாது’ என்று தடுக்க உரிமை  கிடையாது. ஆனால், நான் இன்னொரு மதக்காரனாக இருந்தால், அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. ஆகவே, நான் வெளியில் இருந்துகொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்’ என்பதாகச் சொன்னேன்.

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று மாத்திரம் சொல்லி வரவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான சாதி, மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லிவருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார். (‘விடுதலை’ 22.2.1959)

நான் பம்பாயில் சுற்றுப் பயணம் செய்தபோது ‘அகில இந்திய முஸ்லீம் லீக்’ தலைவர் ஜனாப் முகமது அலி ஜின்னாவையும், ஆதி திராவிட சமூகத் தலைவர் டாக்டர் அம்பேத்கரையும் சந்தித்து சில மணி நேரங்கள் அவர்களுடன் மனம் விட்டுத் தாராளமாகச் சம்பாஷித்தேன்.

நாங்கள் காங்கிரஸின் ஆரம்பம் முதல் அரசியல் நிர்வாகத் திறமையின்மை வரை பல்வேறு விஷயங்கள் பற்றிச் சம்பாஷித்தோம். ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரசைப் பற்றிக் கூறிய அபிப்பிராயங்கள் என் சொந்த அபிப்பிராயத்தை ஒத்தவையாக இருந்தன. நாங்கள் மூவரும் காங்கிரசின் செல்வாக்கினால் ஏற்படும் தீங்குகளை அகற்ற ஒன்றுகூடி முயற்சிப்பதென முடிவு செய்தோம். (‘குடிஅரசு’ 26.1.1940)

கட்டாய இந்தி சம்பந்தமாக என் கருத்துக்களை ஜனாப் ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் ஆதரித்தனர். கட்டாய இந்தித் திட்டம், நம் கலைகளுக்கு விரோதமாக, பிராமண மதத்தையும், கலைகளையும் பலப்படுத்தி விஸ்தரிக்கும் ஒரு குறுகிய நோக்குள்ள திட்டமென்று நான் அபிப்பிராயப்படுவது போன்றே, ஜனாப் -ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் அபிப்பிராயப்பட்டனர். நான் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்ட விஷயமாகப் பிரஸ்தாபித்தபோது ஜனாப் ஜின்னா அவர்கள், ‘நீங்கள் என் பூரண ஆதரவைப் பெறுவீர்கள்’ என்று கூறினார். இவ்விஷயத்தில் டாக்டர் அம்பேத்கரும் என் அபிப்பிராயத்தை ஆதரித்தார். (‘குடிஅரசு’ 26.1.1940)

(தொடரும்...)

- உண்மை இதழ், 1-15.3.19

சனி, 30 நவம்பர், 2019

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா?

நேயன்

அம்பேத்கர் உபநிஷத்துகளிலிருந்து தனது சீர்திருத்தங்களைப் பெற்றார். இந்த ஆழமான பகுத்தாய்வு ஈ.வெ.ரா.வுக்கு இல்லை என்பது எதிரிகளின் அடுத்தகுற்றச்சாட்டு.

அம்பேத்கர் அவர்கள், இந்து மத சாஸ்திரங்கள் பற்றி கூறியவற்றை சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். சாஸ்திரங்களையே அழிக்க வேண்டும். அதற்குப் பதில் புத்தக் கொள்கைகளைக் கொண்ட புதிய விதிகளை உருவாக்க வேண்டும். அது அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டும். அவை சட்டங்களாக இருக்க வேண்டுமே தவிர, மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்று கூறியே தனது தீர்வை முன்வைக்கிறார்.

‘பகவத் கீதை முட்டாளின் உளறல்’ என்றார் டாக்டர் அம்பேத்கர்.

அப்படியிருக்க அதற்கு முரணான செய்திகளை இவர் கூறுவது உண்மைக்கு மாறானது.

தந்தை பெரியாரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, ஏன் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரும் சரி, யார் எதைக் கூறினாலும் அதிலுள்ள உண்மையை அறிந்து சரியானதை ஏற்க வேண்டும், மற்றதைத் தள்ள வேண்டும் என்றே கூறியுள்ளனர். பிறர் கூறும் நல்லவற்றை ஏற்கக் கூடாது என்று பெரியார் என்றைக்கும் சொன்னதில்லை.

பெரியாரும் அம்பேத்கரும் பல்வேறு சூழலில், பல காரணங்களுக்காகக் கூறிய செய்திகளை கத்தரித்துக் காட்டி இந்த ஆள் மக்களைக் குழப்பி ஆதாயம் தேட முயல்வதே இதன்மூலம் வெளிப்படுகிறது. மாறாக, பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நோக்குடையவர்கள். அவர்களின் அணுகுமுறையில் சில வேறுபாடுகள் இருக்கலாம். இதை ஊதிப் பெரிதாக்கிக் காட்ட முயல்வது ஏமாற்று வேலையாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அயல்நாட்டுக் கருத்துகள் நமக்குத் தேவையில்லை. புத்தர் கூறியவற்றிலே எல்லாம் இருக்கிறது என்று கூறியவர் அம்பேத்கர். நம் நாட்டு சிந்தனைகளே நமக்குப் போதும். அதிலுள்ள அநீதிகளை ஒழித்தால் போதும் என்பதற்கு அம்பேத்கர் கூறியவற்றை இவர் எடுத்துக்காட்டி, இந்து மத சாஸ்திரங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டதுபோல் காட்ட முனைவது மோசடியாகும். இந்து மதத்தை இந்து சாஸ்திரங்களை ஒழிக்க இருவருமே தீவிரங் காட்டினார். இருவருக்கும் இதில் வேறுபாடு இல்லை.

“இரட்டைப் பேச்சுகளை அம்பேத்கர் பேசவில்லை. ஆனால், ஈ.வெ.ரா. பேசினார்.” என்பது இவர் கூறும் அடுத்த குற்றச்சாட்டு!

தந்தை பெரியார் பற்றிய உயர் மதிப்பீடுகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று அவர் எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். யார் என்ன நினைப்பார்கள், என்ன விமர்சனம் வரும் என்பதற்கு ஏற்ப பேசாதவர். மனதிற்குச் சரியென்று படுவதை ஒளிவுமறைவு இன்றி பேசுவார். போராட்ட முறையில்கூட வெளிப்படையாகவே நடப்பார். இவை அவரது இன எதிரிகளே ஒப்புக்கொண்ட உண்மை. அப்படியிருக்க, அவதூறாய்ப் பேசுவதே கொள்கையென செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியரான இந்த நபர் திட்டமிட்டு திசைதிருப்பவே ஆதாரமில்லாமல் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை பெரியார் மீது சொல்லியுள்ளார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது அம்பேத்கருக்கும் இயல்பு. ஆக கொள்கை, எழுத்து, பேச்சு, செயல்பாடு என்று இருவரும் ஒத்த இயல்புள்ளவர்கள். அப்படியிருக்க இருவருக்கும் நேர் எதிரியான இந்த ஆர்.எஸ்.எஸ். மதவாதக் கும்பல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அம்பேத்கருக்கும் பெருமை சேர்ப்பதாகக் காட்டிக்கொண்டு, ஒத்த நோக்குடையவர்களின் தொண்டர்களைப் பிரித்து பலமிழக்கச் செய்ய மேற்கொள்ளும் ஒரு மோசடி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டுகள்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி திராவிடர்களால் தாழ்த்தப்பட்ட மக்கள் கீழ்வெண்மணியில் கொளுத்திக் கொல்லப்பட்டதை ஈ.வெ.ரா. கண்டிக்கவே இல்லை. கூலி உயர்வு கேட்கும் போராட்டத்தை தாழ்த்தப்பட்டோர் செய்யக் காரணமானவர்களையே கண்டித்தார். இது நியாயத்திற்கு எதிரான அவரது மனநிலையைக் காட்டுகிறது என்று பெரியார் மீது குற்றஞ் சாட்டுகிறார் இந்த ஆள்.

ஆனால், இவர் கூறுவது போன்று பெரியார் கூலி உயர்வு கேட்கச் சொன்னவர்களைக் கண்டித்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

28.12.1968 விடுதலையில் அவர் எழுதிய தலையங்கத்தில்,

நேற்று முன்தினம் தற்காப்புக்கு ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொண்ட ஆண், பெண், குழந்தைகள் உள்பட 42 பேர்கள், பதுங்கிக்கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி 42 பேரும் கருகிச் சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்டிருக்கிறது.

இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டம் இல்லை.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படியிருக்க, பழிவாங்கும், ஜாதி உணர்ச்சிகொண்ட சுயநலத்தையே முக்கியமாய்க் கருதும் நீதிபதிகளே 100க்கு 90 பேர் இருக்கிறார்கள் என்று தலையங்கத்தில் கண்டித்துக் கவலைப்படுகிறார்.

‘விடுதலை’யிலும் அது பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் அவர் கூலி உயர்வு கோரிக்கையைக் கண்டித்ததாக இல்லை.

இச்சம்பவத்தையும், அது அரசாங்கத்தின் கையாலாகாத நிலையாலும், ஆதிக்கவாதிகளாலும் நடைபெறுவதையும் கண்டிக்கிறார். இதில் என்ன இரட்டை நிலை? இதில் என்ன தலித் விரோத நிலையுள்ளது? தாழ்த்தப்பட்டவர்களுக்காக பெரியார் போராடியதை அம்பேத்கர் பாராட்டுகிறார். தலித் மக்களும் பாராட்டுகிறார்கள். தலித் தகவல் ஒருங்கிணைப்பு அமைப்பு, பெரியாரும் அம்பேத்கரும் எந்த அளவிற்கு ஒருங்கிணைந்தவர்கள் என்பதைக் கூறியுள்ளனர். அப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ்.காரர் எதற்கு இதைப் பேசுகிறார்?

தலித்துகளை பஞ்சமர்களாக்கி, தீண்டத்தகாதவர்களாக்கி, கல்வியைப் பறித்து இன்றளவும் கொடுமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களுக்கு தலித் நலம் பற்றி பேச என்ன தகுதியிருக்கிறது?

(தொடரும்...)

 - உண்மை இதழ், 1-15.10.19

வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழ் மொழியில் வடசொற்கள் புகுந்தமை- 30

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் (தமிழ் மொழித் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம், சென்னை - 600 005)

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகம் தோன்றிப் பன்னெடுங் காலம் ஆகிவிட்டது. மனிதன்  தன் உள்ளக் கருத்தினை ஒருவரோடு ஒருவர்க்குத் தெரிவித்துக்கொள்ளத் தனக்கு வசதியாக மொழியினைப் படைத்துக் கொண்டான். வெண்டிரியே என்னும் மொழி நூலறிஞர் எண்ணத்தை ஏற்றிச் செல்லும் வண்டி மொழி (Language is a vehicle of thought)  என்பர். உலகில் இதுகாறும் பல்மொழிகள் தோன்றியிருந்தாலும், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றளவும் நிலைத்து நிற்பவை ஒரு சில மொழிகளே எனலாம். மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் திகழ்ந்து, இலக்கிய இலக்கணச் செல்வங்களைப் பெற்று, இன்றளவும் மாயாமல் நிலைத்து வாழும் மொழிகளாகத் தமிழ், சீனம் முதலிய மொழிகளைக் குறிப்பர். சுருங்கச் சொன்னால், தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்க் கருத்து வளமும் சிந்தனைச் செல்வமும் நிறைந்தமொழியாய் இலங்குகின்றது.

இத்தகு பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியில் காலப்போக்கில் வடமொழியிலிருந்து சில சொற்கள் புகுந்தன. எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த வகையில் கலப்புகள் நேர்ந்தன என்பதனை ஒருவாறு காண்போம்.

காலப்போக்கில் ஓர் இனத்தார் பிற இனத்தாருடன் கலந்து பழகும்பொழுது, ஒன்றிரண்டு சொற்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் செல்வது இயற்கை. இயல்பாகப் புகுவது என்பது வேறு; வற்புறுத்திப் புகுவிப்பது என்பது வேறு. இயல்பாகப் புகுவதாயின் அது காலப்போக்கில் நேரிடும் மாறுதல் எனக் கொள்ளலாம். வற்புறுத்திப் புகுத்தப்படுமாயின் முதற்கண் அது வெறுப்புடன் நோக்கப்படும்; எதிர்ப்பு எழும்; எதிர்ப்புகள் அடக்கப்பட்டாலுங்கூட, உள்ளத்தில் ஓர் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்; காலப்போக்கில் உறவு பகையாக வெடிக்க வாய்ப்புண்டு. எனவே தான் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த பவணந்தி முனிவர்,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே"

என்று குறிப்பிட்டார். அவரே புதியன புகுத்தலும் என்று சொல்லாமல் புகுதலும் என்று சொன்னார். புகுத்தல் என்பது வலிந்து மேற்கொள்ளும் முயற்சி; புகுதல் என்பது இயல்பாக நிகழும் மாறுதல்.

தமிழ் இலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பிய ஆசிரியர் தொல்காப்பியனார் பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்குங் காலையில் ஒருமொழியினர் என்றும் நினைவில் இறுத்திப் போற்றத்தக்க நெறியினைப் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளார்.

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

- தொல்காப்பியம், சொல், 401

இதனால் பிறமொழிச் சொற்கள் எந்த மொழியில் புகுகின்றனவோ அந்த மொழியின் ஒலியமைப்புக்கு ஏற்றவாறு மாறி அமையவேண்டும் என்பது தொல் காப்பியனார் கருத்து என்று புலப்படுகின்றது. இவ்வாறு மாறியமைந்த வடசொற்களே ஆணை, விண்ணப்பம், ஞானம், அனுபவம், அமாவாசை முதலிய சொற்கள்; ஆங்கிலத்திலிருந்து தமிழில் புகுந்த சொற்கள் சில இவ்வாறு சிறு மாறுதல் பெற்றுத் தமிழுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. அய்ரோப்பா, இங்கிலாந்து, ஆங்கி லேயர், உயில், கிறிஸ்து, யோவான், உவிவிலியம் முத லான சொற்கள் எடுத்துக்காட்டு ஆகும் என்று டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் குறிப்பிடுவதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அவர் குறிப்பிடுகின்றார்: "தேவையும் பயனும் நோக்கி ஒரு சில சொற்களை கடன் வாங்கும்போது எதிர்ப்புணர்ச்சி எழுவதில்லை. அழகுக்காக, அலங்காரத்திற்காக என்று பிற மொழிச் சொற்களைக் கடன் வாங்கும்போது எதிர்ப்பு எழுகிறது (மொழி வரலாறு; கடன் வாங்கல்; பக்கம் 102)."

தொடரும்

- விடுதலை நாளேடு 28 11 19

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி" (2) - 29

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை

வருமாறு:

வேதியலில் வடமொழியாக்கம் :

"வாதி கெட்டு வைத்தியன்" என்பது தமிழில் வழங்கும் ஒரு பழந்தொடர். பல்வகை மருந்துப் பொருள்கள், மூலிகைகள், உலோகங்கள் முதலியன வற்றோடு பயின்று பயின்று வேதையில் வெற்றி காணமுடியாமல் இறுதியில் மூலிகையின் குணம் முதலியன அறிந்தமையால் மருத்துவராவர் என்பது இத்தொடரின் பொருள். ரசவாதம் எனத் தற்போது குறிக்கப்பெறும் சொல்லுக்குப் பண்டைய இலக்கியங் களில் வேதித்தல் என்ற சொல்லே காணப்படுகின்றது. வேதை என்ற சொல்லும் காணப்படுகின்றது.

பரிசோதனைக் குழாய், மருந்துப் பொருட்கள், வாயு அடுப்பு போன்ற எந்தவிதத் துணைக் கருவிகளும் இல்லாமல், துருத்தி பச்சிலை முதலியன கொண்டே வேதித்தனர் என்பது அவர்தம் எல்லையில்லா அறிவாற்றலை விளக்கும். இதைக் காட்டிலும் வியக்கத் தக்க முறைகள் இருந்ததாகச் சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த சித்தராக விளங்கிய இராமலிங்க அடிகளாரது குறிப்புக்களால் அறியலாம். இவர் வேதை (ரசவாதம்) ஏழுவகையாகவும் துணை வேதை (உபரசவாதம்) ஏழுவகையாகவும் ஆற்றல் கூடும் என்கிறார்.

ரசவாதம் :

ஸ்பரிசவாதம்   -    தீண்டி வேதித்தல்

ரசவாதம்   -     மருந்தால் வேதித்தல்

தூமவாதம்    -    புகையால் வேதித்தல்

தாதுவாதம்   -     உலோகத்தால் வேதித்தல்

வாக்குவாதம்       -       சொல்லால் வேதித்தல்

அக்ஷவாதம் -              பார்வையால் வேதித்தல்

அங்கப்பவாதம்-        இறையுணர்வால் வேதித்தல்

எளிதில் புரிந்துகொள்ள முடியாத சொற்களால் இராமலிங்க அடிகளாரே எழுதியுள்ளது வியப்பு. வடசொற்களுக்கு இணையான தமிழ் அடுத்து எழுதப் பெற்றுள்ளது காண்க.

உபரசவாதம் :

மந்தரவாதம்     -        சிறுநீரால் வேதித்தல்

தூளனவாதம்        -      கால் தூசால் வேதித்தல்

வாயுபிரேரகவாதம்        -நச்சுக்காற்றால் வேதித்தல்

பிரவேச விசிரிம்பிதவாதம்- தாதுப்பொருட்களால்  வேதித்தல்

தேவாங்க வாதம்     -தியானத்தால் வேதித்தல்

தந்திர வாதம்        -      காரணமின்றி வேதித்தல்

வடசொற்களுக்கான பொருளும் உடன் தரப் பெற்றுள்ளன. இத்தகைய கருத்துக்களை ஊன்றிப்படித்து ஆழ்ந்து சிந்திக்கின் அறிவியலில் மிகப் பன்மடங்கு வளர்ந்துள்ள இக்காலத்தில் ஆராய்ச்சிப்பூர்வமாக மிகப்பெரும் அளவு பணம் செலவு செய்தாலும் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற முடியாத அரிய செயலை மிக எளிதாக மேற்காட்டிய வகைகளில் செய்தனர் நம் முன்னோர் என்பதை நினைத்துப் பார்த்துப் பெருமிதம் அடையாமல் இருக்கமுடியாது; வியவாமலும் இருக்க முடியாது. இதைவிட வியப்பு அத்துணை சொற்களும் இத்துறையில் வட சொற்களாக இருப்பதுவே.

ஞானத்தில் வடமொழி :

பண்டைத் தமிழகத்தில் பயின்று வந்துள்ள மிகு பழங்கடவுட் கோட்பாடு சிவன் தொடர்பானது ஆகும். பிற்காலத்தில் தோன்றிய பல்வகைப் புராணங்கள், தலக்கதைகள், சமய இலக்கியங்கள் ஆகியவை சிவனைப்பற்றித் திசை திருப்பும் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி இழிவுபடுத்தும் நிலைக்குக் காரணமாயின என்பது உண்மை. ஓர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவனாக விளங்கியவன் சிவன். அனைத்துச் சித்தர்களும் இக்கருத்தைக் கூறுவதைக் காணலாம். சிவன் அகத்தியர்க்கு உணர்த்த, அகத்தியர் பிறருக்கு உணர்த்த வந்த ஆன்மீக அறிவு என்பதைச் சித்தர்கள் மரபு ஆய்வாளர்கள் நன்கு அறிவர். இந்தச் சித்தர்கள் கண்ட கடவுட்கொள்கையே சித்தாந்தம் என்பது. சித்தர்கள் கண்ட முடிபு என்பது இச்சொல்லின் பொருளாகும்.

தமிழகத்தில் கி.பி. 11ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றிய சைவ சமய சாத்திரங்கள் பதினான்குக்கும் அடிப்படை சித்தர் பாடல்களே. காலம் கணித்துச் சொல்லமுடியாத வாழ்வினையுடைய சித்தர்களில் தொன்மையான அகத்தியர், தமிழில் முதல் தந்திர சாத்திரம் எழுதிய திருமூலர் முதலியோரின் நூல்களில் காணப்பெறும் கருத்துக்களின் ஒருபகுதியே சாத்திரங்களாக மலர்ந்தது என்பதை இரண்டும் பயின்றார் அறிவர். தத்துவங்களைச் சொன்ன அவர்கள் சமயம் என்னும் வட்டத்தை உருவாக்கவில்லை. பின்னர் வந்தவர்களே சைவ சித்தாந்தம் என்னும் எல்லையுடைய சொல்லைத் தோற்றுவித்தனர்.  தமிழ்ச் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் வந்த சாத்திர வல்லுநர்களால் வளர்க்கப்பெற்ற சித்தாந்தத்தில் காணப்பெறும் வடசொற்களின் விழுக்காடும் வியக்கத்தக்கதாகவே உள்ளது.

கீழே சில வடசொற்களும் இணையான தமிழ்ச் சொற்களும் சான்றாகத் தரப் பெற்றுள்ளன.

சர்வஞ் ஞன்   - முற்றுணர்வினன்

இச்சா சக்தி       - விழை வாற்றல்

கிரியாசக்தி      - செயலாற்றல்

ஞானசக்தி    - அறிவாற்றல்

திரோதானசக்தி         - மறைப்பாற்றல்

அனுக்கிரகசக்தி        - அருளாற்றல்

மலபரிபாகம்        - மலநீக்கம்

இந்திரியம்    - பொறி

கரணம்     - கருவி

சாலோகம்      - இறையுலகு பேறு

சாமீப்யம்     - இறையருகு பேறு

சாரூபம்       - இறையுரு பேறு

சாயுச்சியம்      - இறையாதல் பேறு

பஞ்சாட்சரம்     - அய்ந்தெழுத்து

சகமார்க்கம்   - தோழமை நெறி

தாசமார்க்கம்     - அடிமை நெறி

சற்புத்ரமார்க்கம்       - மகன்மை நெறி

இத்தகைய சொற்களின் பட்டியல் மிகப் பெரிதாகும் தன்மையது.  இடம் கருதி சில சான்றுகளே தரப்பெற்றன.

யோகத்தில் வடமொழி

இணைதல் என்னும் பொருளுடைய 'யுஜ்' என்னும் சொல்லில் இருந்து யோகம் என்னும் சொல் தோன்றியதாகச் சொல்வர். சிற்றணு பேரணுவுடன் (ஜீவன் - சிவனுடன்) இணைதற்கான முயற்சியே இது. இதுவும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு அறிமுகம் ஆன துறையே. இந்திய நாகரிகத்தின் தொன்மையான சிந்துவெளிப் பகுதியினர் யோகம் பயின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்பதையும், அந்த நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதையும் திராவிட நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதையும் ஆராய்ச்சி அறிஞர்கள் பலரும் ஏற்பர்.

இந்த இறையொன்றல்  ( யோகம் ) துறையிலும் வடசொற்கள் மிகுந்து காணப்பெறுகின்றன.

சான்றாகச் சில :

அஷ்டாங்க யோகம்       - எண்நிலையொன்றல்

அஷ்டமா சித்து     - எண்பெரும் பேறு

ரேசகம்      -   விடுதல் ( வளி )

பூரகம்     -   வாங்கல் ( வளி )

கும்பகம்      -   உள்ளடக்கல்

பிரமாந்திரம்    - பெருந்துளை

ஸ்தூல தேகம்   -   பருஉடல்

சூட்சும தேகம்     -   நுண்உடல்

சாக்கிரம்    -   நினைவு

சொப்னம்     -   கனவு

துரியம்      -   பேருறக்கம்

துரியாதீதம்     -   உயிர்ப்படங்கல்

காயப் பிரவேசம்   -   கூடுவிட்டுக் கூடுபாய்தல்

ஆகாயப் பிரவேசம் -   வெளிப்பயணம்

பிறதுறைகள் :

மேற்காட்டிய துறைகளில் மட்டுமல்லாமல் சோதிடம், மந்திரம் ஆகிய சித்தர்கள் கண்ட பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வட சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

முடிவுரை :

தமிழகத்தில் தோன்றிய இறையுணர்வு மிக்கச் சித்தர்கள் தமிழுக்கும் மக்கட் கூட்டத்திற்கும் மருத்துவம் முதலிய பல துறைகளினாலும் தொண்டாற்றியுள்ளனர் என்பதையும், அந்த நூல்களில் கூறப்பெற்றுள்ளவற்றில் பல மறைபொருட் கூற்றாகவே இருப்பினும் எவ்வாறோ வடசொல்லாகவும் விரைந்து நிகழ்ந்துள்ளன என்பதையும் சிற்சில சான்றுகளுடன் இக்கட்டுரையில் கூறப்பெற்றது.

தமிழ்ச் சித்தர்கள் கண்ட அனைத்துத் துறைகளும் இன்றைய தமிழகத்தில் உள்ளன. ஆனால் சொற்கள் இல்லை அவற்றை மீண்டும் தமிழாக்கி மக்கள் வழக்கில் கொண்டுவரச் செய்து தமிழும் தமிழனும் இழந்த புகழை நிலை நிறுத்துவதே அவை பயின்ற அறிஞர்தம் கடனாக இருத்தல் வேண்டும்..

-  விடுதலை நாளேடு 26 11 19

வியாழன், 28 நவம்பர், 2019

"தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி"- 28

டாக்டர் இரா. மாணிக்கவாசகம்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் டாக்டர் இரா.மாணிக்கவாசகம் உரை வருமாறு:

முன்னுரை :

இறையுணர்வு மிக்கோரைப் பத்தர், சித்தர் என இரு வகையினராகப் பிரிக்கலாம். முன்னவர் இறை உருவ வழிபாட்டில் நம்பிக்கையுடையவர். கோயில்தோறும் சென்று பல்வகையாகப் பாடிப் பரவியவர். பின்னவர் அஃதொழிந்தவர். சுருங்கச் சொன்னால் முன்னவர் புறத்தவம் பயின்றவர். பின்னவர் அகத்தவம் பயின்றவர். இரு பிரிவினராலும் தமிழ்மொழி சிறந்துள்ளது. எனினும் தமிழ்ச் சித்தர்களால் வேறு ஒரு பயனும் விளைந்துள்ளது. அதுவே பல்துறைச் சமூக நலப்பணிகள்.

சமுதாயத்துடன் சேர்ந்தும் சேராமலும் தாமரை இலை மேல் நீர்போல வாழ்ந்த இவர்கள் யோகம் பயின்று விரிந்த காட்சியுற்றுப் பொருள்களின் உண்மையியல்புகளையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைமைகளையும் அறிந்து மந்திரம், மருந்து, யோகம், ஞானம், வேதியல் (ரசவாதம்) முதலிய பல துறைகளிலும் மிகப்பல நூற்கள் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். இவர்களது நூற்களில் வடமொழியாக்கம் பற்றிச் சிறிது இக்கட்டுரையில் காணலாம்.

சித்தர்கள் இலக்கிய மரபு

தமிழ் இலக்கியங்களைக் காலமுறைப்படி வகைப்படுத்தினால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையானவை தோன்றின என்பது விளங்கும். ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமைப்போடும் பயனோடும் விளங்குவது பெரும்பாலான பழைய இலக்கியங்கள் அல்லது பாடல்கள் அவற்றுக்குரிய ஆசிரியரால் எழுதப்பெற்றனவாகவோ அல்லது அவர் காலத்தில் வாழ்ந்த பிறரால் எழுதப்பெற்றனவாகவோ இருக்கும். ஆனால், சித்தர் பாடல்கள் என்று இன்று நமக்குக் கிடைக்கும் இலக்கியங்கள் அனைத்தும்-எந்தத் துறை யைச் சார்ந்ததாக இருந்தாலும்-அந்தந்த ஆசிரியரால் எழுதப் பெற்றனவாயிராதென்பது உறுதி. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறுதல் கூடும்.

முதலாவதாக இவர்கள் சமுதாயத்தை விட்டு மிக ஒதுங்கி வாழ்ந்தவர்கள்.

"பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்

சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே"

பற்றனைத்தும் விட்ட பட்டினத்தார் தரும் உண்மைச் சித்தருக்கான விளக்கம் இது. இவ்வளவு ஒதுங்கி வாழ்ந்த சித்தர்கள் உட்கார்ந்து கொண்டு நூற்களை எழுதினர் என்பது பொருந்துமாறில்லை. இரண்டாவது காரணம் இதற்குத் துணையாய் அமைவது - மிகப் பல சித்தர்கள் பாடல்களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிகப் பரவலாகக் காணப்படுகின்றன. மக்கட் சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டுமென்றே பல அரிய செய்திகள் சித்தர் பாடல்களில் கூறப் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை பலருக்கும் புரியாக் குறிப்பு மொழியாலும் குழூஉக் குறியாலும் பாடப் பெற்றவை. பண்படா மனத்தோர் பயிலக்கூடாது அல்லது அறிந்து கொள்ளக்கூடாது என்றே அவர்கள் அத்தகைய முறையைப் பயின்றனர் என்பதை அவர்கள் பாடல்கள் வாயிலாகவே அறிகின் றோம். எனவே, கருத்துக்குச் சித்தர்கள் சொந்தக்காரர்கள்; கவிதைக்கல்லர்.

"உண்டான மூலியைத்தான் குகையினுள்ளே

ஒளித்து வைத்தார் சித்தரெல்லாம் வெளியாமென்று

பண்டான சித்தருக்கு மூலியிட்டுப் பாவிகட்கும்

கர்மிகட்கும் கிட்டுமோ சொல்

செண்டான பூவுலகில் மானுட ரெல்லாம்

செத்தவர்க ளெழுந்திருப்பார் இடம்கொள்ளாது

கொண்டான விதியாளி வந்தானாகில்

கூப்பிட்டுத் தான்கொடுப்பார் சித்தர்தானே;"

- 167 புலிப்பாணி வைத்தியம் 300

"தாமிந்த சூத்திரத்தைக் கொளியா தீந்தால்

தலை தெறித்துப் போகுமடா சத்தியம் சொன்னேன்

நாமிந்தப் படிசொன்னோம் யோகிக் கீவாய்"

- 216 அகத்தியர் பூரண சூத்திரம்

"குணமாகப் பலபேர்க ளிடத்தில் வாதம்

கூக்குரலாய்ச் சொன்னாக்கால் குடி கெடுக்கும்

பணம்போகு மாக்கினைதான் மிகவுண்டாகும்

பதிவான தலைபோகும் பாரிலேதான்

உணவாக உனைநம்பார் உலுத்தமாடு

உற்றுமே பொருளறியார் ஒழுங்குமில்லை

பிணம்போல இருந்துமே வேலைபாரு

புத்ததனில் வைத்திருக்கும் பிரிதிதானே"

- 103, யாகோபு சுண்ணம், 300

மேலே காட்டப்பெற்ற பாடல்கள் முற்கூறிய கருத்துக்குத் துணைசெய்வதைக் காணலாம்:

காயகல்பம், ரசவாதம், பல்வகை மந்திரங்கள் - இன்னமும் இவை போன்ற அரிய முறைகளைப்பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டால் ஏற்படும் விளைவினை எண்ணிப் பார்க்கவும் முடியாதன்றோ? அவரவர்கள் தம்தம் விருப்பப்படி செயல்படத் தொடங்கின் இயற்கையின் கட்டுக்கோப்பு உடைபட்டுப் போகும். ஆகவே மறைவாகவே வைக்கப்பெற்றன.

இத்தகைய கருத்துக்களை "எழுதாக் கிளவியாக" குரு மாணவர் முறையிலே கற்றுத்தரப்பெற்றன. மறைவாக இருந்த இவ்வரிய கருத்துக்களை மறை என்று கூறும் மரபு உண்டாகியது. வடமொழியாளர் வேதம் என்ற சொல்லால் இத்தகைய மறைபொருட்களைக் குறித்தனர். வித் என்னும் சொல்லின் அடியாக இது பிறந்தது என்பர். ஆனால் மறைத்தல் அல்லது வேய்தல் என்னும் சொல்லின் அடியாக மறையும் வேதமும் தோன்றின என்பது பொருந்தும். "கூரை வேய்ந்தான்" என்பதும் காண்க.  நீண்ட காலமாக மறைவாக செவி வழியாகவே கூறப்பெற்று வந்த அரிய கருத்துக்களைப் பின்னர் தோன்றியவர்கள் குறிப்பாகவும் குழூஉக் குறியாகவும் வெளிப்படுத்தினர் ஆதலின் அப்பாடல் களில் பேச்சு வழக்குச் சொற்களும் புதிய சொல்லாட்சிகளும் மிக அதிக அளவிற்கு இடம் பெற்றன. எனவே, சித்தர் பாடல் களில் இடம்பெறும் சொற்களை வைத்துக் கொண்டு அவர்களது காலத்தைக் கணிப்பது தவறுடையதாக அமையும். ஆதலின் இவர்கள் பெயரில் கிடைக்கும் பாடல்கள் அவர்கள் காலத்தில் பாடப்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனலாம்.

இனி, இவர்கள் தொண்டாற்றிய துறைகளை மருத்துவம், வேதியியல் (ரசவாதம்) யோகம், ஞானம் என்னும் நான்கு பெரும் பிரிவினுள் அடக்கலாம். இந்த நான்கு துறைகளிலும் தமிழர் மிகுதொன்மைக் காலம் தொட்டே புலமை மிக்கவராய் விளங்கினர் என்பதற்கும் வேற்றுமொழியினர் அல்லது வேற்றுநாட்டினர் தொடர் பாலும் இவ்வறிவினைப் பெறவில்லை என்பதற்கும் சித்தர் பாடல்களே பெரும் சான்றாக விளங்குகின்றன.

வடமொழியாக்கம்

தமிழ்ச் சித்தர் பாடல்களில் மிகப் பரவலாகக் குறிப்பு மொழியும் குழூஉக் குறியும் இருப்பினும் வட சொல்லாக்கம் மிக அதிக அளவில்-எல்லாத்துறைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வியப்பாக உள்ளது. தமிழர்க்கான இயல்பான பெருமை குன்றும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது.

புகழ் பெற்ற பதினெண் சித்தர்களுக்குக் குருவாக இருந்தவர் அகத்தியர். ஆதலின் அவரைக் குருமுனி எனக் குறிக்கும் மரபு இருந்தது.

"ஆமென்றஎன் பேரகத்தியனாகும் அருளினோம்

என்னுடைய சீஷர் பதினெண்பேர்

தேமென்ற தென்பொதிகை தென்கயிலை

சீஷர்          தேறினாரிவர் பெருமை."

- 77 அகத்தியர் சவுமிய சாகரம் 1200

"சீரேதான் சங்கத்தார் எல்லாம் கூடி

சிறப்புடனே அரங்கேற்றம்

நீரேதான் அகத்தியர்க்குக் குருபட்டம்

திகழாகத் தான்கொடுத்தார் தானே."

- 699 - மிமி காண்டம், அகஸ்தியர் 12000

இப்பாடல் வரிகள் மேற்கூறிய கருத்துக்குத் துணை நிற்பன. இவர் குடக்குத் திசையில் உள்ள மலையை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர். ஆதலின் குடமுனி எனப் பெயர் பெற்றார்.

திசையைக் குறிக்கும் சொல்லாகிய "குடக்கு" என்பதைக் குடம் என ஆக்கி அதன் வட சொல்லாகிய கும்பம் என மொழிபெயர்த்து அதில் தோன்றியவர் என்று ஒரு கதையையும் கட்டிவிட்டுக் "கும்பமுனி" என்றும் குறுகிய வடிவுடைய குறுமுனி என்றும் விளக்கம் தந்து அவரது வடிவையும் புகழையும் குறைத்தனர் ஒரு சாரார் என்பதை நினைக்கும் தோறும் வேதனை மேலோங்கும்.

குடமூக்கு என்ற இனிய தமிழ்ப் பெயர் கும்பகோணம் என மாற்றப்பெற்றமை இணையான பிறிது ஒரு எடுத்துக்காட்டு. திருமறைக்காடு என்பதை வேதா ரண்யம் என்றும் பழமலை என்பதை விருத்தாசலம் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

மருத்துவத்தில் வடமொழி

நீர், நிலம் இவற்றில் வளர்ந்துள்ள செடி, கொடி, மரம் ஆகியவற்றின் இலை, பூ, பிஞ்சு, காய், கனி, விதை, பட்டை, வேர் ஆகிய அனைத்து உறுப்புக்களின் குணம் அறிந்து நோய்க்குத் தக்க மருந்தாக்கியுள்ளனர் நம் நாட்டு சித்தர்கள். இத்துடன் அமையாமல் உலோகங் களின் குணங்களையும் அறிந்து அவற்றை நீறாக்கி (பஸ்பம்), நோய்களுக்குத் தந்துள்ளனர். எந்தப் பொருளை எப்படித் தூய்மை செய்தல் வேண்டும், எப்படி எரித்தால் (புடமிடல்) நீறாகும் என்பனவற்றையும் அறிந்திருந்தனர். எந்தவித அறிவியல் கூடமோ, சாதனமோ இல்லாமல் இவற்றை அறிந்திருந்தனர் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எவராலும் வியவாதிருக்க முடியாது.

தமிழ் நாட்டு மூலிகைகளையும், உலோகங்களையும் கொண்டு தமிழ் மருத்துவர் கண்டதே தமிழர் மருத்துவம். இத்தமிழ் மருத்துவம் தோன்றவும் வளரவும் காரணமாயிருந்தவர்கள் சித்தர்கள். தமிழ்நாட்டு மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்த இவர்களின் அனு பவங்களின் விளைவே இம்மருத்துவ முறை எனலாம். ஆனால், தற்போது கிடைக்கும் மருத்துவ நூல்களில் காணப்பெறும் சொற்களில் எழுபத்தைந்து விழுக்காடு நோய்ப் பெயர்கள், மருந்துப் பெயர்கள், பொருட் பெயர்கள் - அனைத்தும் வட சொற்களாகவே விளங்கு கின்றன. வடமொழி ஆதிக்கம் பெற்றிருந்தபோது இவை எழுதப் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழர் கண்ட மருத்துவத் துறையில் தற்போது வழங்கி வரும் சொற்களும், இணையான தமிழ்ச் சொற்களும் கீழே சான்றுக்குச் சில தரப் பெற்றுள்ளன.

மூலிகை வகை :

சௌந்தர்யம்  -    வெள்ளாம்பல்

ப்ருந்தா    -    துளசி

சப்ஜா   -   திருநீற்றுப் பச்சை

கூஷ்பாண்டம்    -     பூசணி

சாயாவிருட்சம்    -   நிழல்காத்தான்

ரத்தபுஷ்பி   -   செம்பரத்தை

மருந்து வகை :

ஔஷதம்     -   அவிழ்தம்

லேஹியம்    -   இளக்கம்

பஸ்பம்   -   நீறு

கஷாயம்  -   குடிநீர்

ப்ரமாணம்    -   அளவு

சூரணம்   -   இடிதூள்

நோய் வகை :

திருஷ்டி  -  கண்ணேறு

க்ஷயம்    -    என்புருக்கி

ஆஸ்துமா    -  ஈளை இரைப்பு

அரோசகம்  -  சுவையின்மை

அஜீர்ணம்    -     செரியாமை

குஷ்டம்   -    தொழுநோய்

மருந்துப் பொருள் வகை :

சொர்ணமாட்சிகம்   -   பொன்னிமிளை

நேத்ரபூஷ்ணம்    -   அன்னபேதி

ப்ரவளம்  -  பவழம்

நவநீதம்  -   வெண்ணெய்

லவணம்   -   உப்பு

தசமூலம்  -   பத்துவேர்

த்ரிகடுகு  -     முக்கடுகு

த்ரிபலா     -   முப்பலா

தொடரும்...


புதன், 27 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே? - 2 (27)

தந்தை பெரியார்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

சென்ற வாரத் தொடர்ச்சி

இந்நூற்பாவுக்குச் சான்று காட்டவந்த நன்னூலுரையா சிரியர்களுள் ஒருவரும் நான்கெழுத்திற்கு மேற்பட்ட தமிழ்ச் சொல்லினைச் சான்று காட்டிலர்.

அணி, அறம், அகலம், அருப்பம், தருப்பணம், உத்திரட்டாதி-பகாப்பதம்.

கூனி, கூனன், குழையன், பொருப்பன், அம்பலவன், அரங்கத்தான், உத்திராடத்தான், உத்திரட்டாதியான்-பகுபதம்.

இவை நன்னூலுக்குப் பேருரை (விருத்தியுரை) எழுதிய சிவஞான முனிவர் காட்டியவை. இவற்றுள் பகாப்பதத்துள் அகலம்வரை தமிழ், பகுபதத்துள் பொருப்பன்வரை தமிழ்.

அகலம் என்பது நான்கெழுத்தாலாயது; அகல்+அம் எனப் பிரித்துக் காணின் மூன்றெழுத்து, ஈரெழுத்தாய் நிற்கும்.

பொருப்பன் என்பது பொருப்பு+அன் எனும் இரு சொற்புணர்ச்சி; பொருப்பு நான்கெழுத்தாலாயது. ஏனைய உரையாசிரியர் சான்றுகளை விரிப்பின் பெருகும்.

பதம் என்பது வடசொல், மொழி, சொல், கிளவி என்பன தமிழ். இம்மூன்றனையும் இன்று பதம், பதம் பார்த்து வருகிறது.

தொல்காப்பியர் ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர்மொழி எனச் சுட்டுகிறார். ஈண்டுத் தொடர்மொழி என்பது மூவெழுத்து மொழியினையும், நான்கெழுத்து மொழியினையும் சுட்டும்.

ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி

இரண்டிறந் திசைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

என்பது தொல்காப்பியர் திருவாக்கு.

ஆ, கா, நா - ஓரெழுத்தொருமொழி

மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்தொருமொழி

கணவிரி (அலரி) - நாலெழுத்தொருமொழி

அகத்தியனார் - அய்யெழுத்தொருமொழி

திருச்சிற்றம்பலம் - ஆறெழுத்தொருமொழி

பெரும்பற்றப்புலியூர் - ஏழெழுத்தொருமொழி இவை உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் அந்நூற்பாவிற்குக் காட்டும் சான்றுகள். இவற்றுள் நாலெழுத்தொருமொழிவரை தமிழ் ஏனையவை பகுத்தற்குரியன.

ஆ, மணி, வரகு, கொற்றன் இவை உரையாசிரியர் இளம்பூரணர் காட்டும் சான்றுகள். நான்கெழுத்துச் சொல்லுக்கு மேற்காட்டாமை இவரது தமிழ் மரபை உணர்ந்து உரை எழுதும் திறத்தைக் காட்டுகிறது.

மேற்கண்ட விளக்கங்களால் நான்கெழுத்திற்கு மேம்பட்ட தமிழ்ச்சொல் இல்லை என்பது தெளிவாகப் புலனாகிறது.

இந்நிலையில் இலக்கியமும் இலக்கணமும் எவ்வாறு தமிழ்ச் சொற்களாக இருக்க முடியும்? அவை தமிழ்ச் சொற்கள் அல்லவே அல்ல; வடமொழிச் சொற்கள்.

லக்ஷியம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கியம்.

லக்ஷணம் எனும் வடமொழியின்

தற்பவம் இலக்கணம் ;

(தற்பவம் - தன்னிலிருந்து தோன்றியது) இவற் றைத் தமிழெனக் கொண்டு மனம் போன போக்கில் விளக்கம் காண்பது ஏற்புடைத்தன்று.

இலக்கணம் எனும் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு அது தமிழ்ச்சொல் என வாதிடுதல் பொருந்துவதன்று. தொல்காப்பியர் காலத் திற்கு முன்பே வடமொழி மயமாக்கும் பணி தொடங்கப்பட்டதன் விளைவு அது.

அவ்வாறாயின் இலக்கிய இலக்கணம் எனும் தொடருக்கு ஈடாய்த் தமிழ்த் தொடர் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?

அத்தொடர் யாது ?

கணக்கு வழக்கு என்பதே அத்தொடர்

அக்கணக்கு வழக்கு எங்கே? -

அன்னை மொழியின் அருமையை உணராது அயல்மொழிக்கு ஆக்கம் தேடக் கருதிய பண்டைக்கால உரையாசிரியர் சிலரால் அத்தொடர் தன்னிடத்தை இழந்து, பிளவுபட்டுத் தன் பொருளை மட்டும் விடாது, கரந்து நிலவுகிறது.

பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேற்கணக்கு எனும் தொடர்களின் கண்வரும் கணக்கு என்பதும்,

காணக்காயர் எனும் சொற்கண் நிற்கும் கணக்கு என்பதும்,

-"கணக்கினை

முற்றப்பகலும் முனியா(து) இனிதோதிக் கற்றலின்

கேட்டலே நன்று"

எனும் பழமொழிப் பாடல் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும்,

கணக்கறிந்தும் விடுவானோ கண்டாய் என் தோழி எனும் வள்ளலார் தொடர்க்கண் வரும் கணக்கு என்பதும் எப்பொருளைச் சுட்டுகின்றன?

கருதுதல்-கருத்து, கருதுதற்குரிய நூல் எனும் பொருளைச் சுட்டுகின்றன. இலக்கியத்தைச் சுட்டுகிறது என்றால் தெளிவாகப் புரியும். அந்த அளவிற்கு வடமொழி, நம்மைத் தன்மயமாக்கிவிட்டது.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழு முயிர்க்கு"

எனும் திருக்குறட்கண்ணும்

"எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்

எண்ணெழுத்திகழேல்"

எனும் முதுமொழிகளின் கண்ணும் இடம் பெற்றுள்ள எண் என்பதும் கணக்கையே உணர்த்தும்.

கண் என்பது கணக்கு என்பதன் வேர்ச்சொல்;

கண் - கருது

எண் - எண்ணுதல் - கருதுதல்

கருதுதற்கு-எண்ணுதற்கு-சிந்தித்தற்கு உரியதாய்த் திகழ்வது கணக்கு.

இலக்கியம் எனும் வடமொழி மயத்தால் கணக்கு இவ்வாறு கரந்து மறைந்து திரிந்து வருகிறது; என்னே தமிழ் நிலை ?

ஏவல் கண்ணிய (கண்ணிய - கருதிய)

கண்ணிய மரபு

கண்ணிய நிலைத்தே கண்படை கண்ணிய கண்படை

கபிலை கண்ணிய வேள்வி

காலம் கண்ணிய ஓம்படை

காமம் கண்ணிய நிலைமைத்து

கண்ணிய புறனே

முதலாய தொடர்களுள் கண்ணிய (கண்) எனும் சொல்லினைக் கருது-கருத்து எனும் பொருளில் தொல் காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க. மேலும் பல இடங்களிலும் இவ்வாறு கையாண்டுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.

வழக்கு - வழங்கு - வழங்குவது வழக்கு வழங்குதலால் அமையும் மொழியின் அமைதியே வழங்கு, வழக்கு, இயல், மரபு முதலாயவை ஒரு பொருட் சொற்கள்.

இயல் என்பது இலக்கணம் எனும் பொருளில் வழங்கி வந்த சொல்லாகும். எழுத்தியல், பிறப்பியல், புணரியல் முதலாய பல இடங்களில் இடம் பெற்றிருக்கும் இயல் என்பதற்கு இளம்பூரணர். நச்சினார்க்கினியர், பேராசிரியர், சங்கரநமச்சிவாயர் முதலாயவர்களை உள்ளிட்ட உரையாசிரியப் பெருமக்கள் அனைவரும் இலக்கணம் என்றே உரை காண்கின்றனர்.

இயல் (இயல்பு)-மொழியின் இயல்பு-மொழி இயல்பாய் அமைந்த நிலை.

வழங்கியல் மரபு

வழக்கத்தான

வழங்கியல் மாவென் கிளவி

வழக்கு வழிப்பட்டன

முதலாய தொடர்களுள் வழக்கு (வழங்கு) எனும் சொல்லினை இயல் (இலக்கணம்) எனும் பொருளில் தொல்காப்பியர் கையாண்டுள்ளமையைக் காண்க.

இக்கருத்துணராது இயல் என்பதற்கு சிறு பகுதி (ஊயயீவநச) என்று பொருள் காண்பது பொருந்து வதன்று. ஆறுமுக நாவலரும் தொல்காப்பிய நூற்பாக் களைக் குறிப்புரையுடன் வெளியிட்ட இளவழகனாரும். அப்பொருள் இருப்பதாகச் சுட்டுதல் ஏற்புடைத்தன்று. அதற்கு ஒத்து எனும் சொல்லொன்று இருப்பதை அவர்கள் அறியாதவர்களல்லர்.

கணக்கு வழக்கு எனும் தொடர் இலக்கிய இலக் கணம் எனும் வடமொழி மயத்தால் கரந்துறைந்து, கரைந்து வருதலைப் போல, படலம், பால் எனும் தமிழ்ச் சொற்கள் அதிகாரம் எனும் வடமொழி மயத்தில் கரைந் துறைகின்றன. இவைபோன்றே எத்துணையோ தூய தமிழ்ச்சொற்கள் தம்மிடத்தை வடமொழிச் சொற்கள் கைப்பற்றிக் கொள்ள, வாழவழியின்றி, ஏங்கிக் கரந்து நின்று தவிக்கின்றன. அவற்றையெல்லாம் வெளிக் கொணர்தல் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.

- விடுதலை நாளேடு 19 11 19

வியாழன், 21 நவம்பர், 2019

கணக்கு வழக்கு எங்கே ? - 26

பேரா.இராம.சுப்பிரமணியன்

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் இராம.சுப்பிரமணியன் உரை வருமாறு:

உலகுக்கெல்லாம் கணக்கு வழக்கு உண்மைகளை-அடிப்படைகளை வகுத்துத் தந்த தமிழன், தான் மட்டும் அவற்றினை உரியவகையில் வைத்துக் கொண்டா னில்லை; போற்றிப் பாதுகாத்தானில்லை. அதனால், கலாச்சாரம் எனும் பெயரால் தமிழகத்துப் புகுந்த கண்மூடிப் பழக்க வழக்கங்களுக்கு அவனது இயற்கையோடியைந்த-தூய பண்பாடும், ஒருநிலையின்றி முக்கல், கனைத்தல் முதலாய நான்கு நிலைகளான் நடந்துவந்த ஒருமொழிக்கு அவனது தூய, எளிய, இனிய மொழியும் இரையாகி, அதனதன் வண்ணமாயின. இன்றோ, தூய தமிழ்ப் பண்பாடு யாது? தூய தமிழ்மொழி யாது? எனத் துணியக் கூடாநிலை உருவாகி விட்டது.

தன்னிடம் தமிழனுக்குக் கணக்கு வழக்கு இல்லாம லில்லை. ஒருகாலத்திலிருந்தன; இன்றும் இருக்கின்றன. ஆனால், கரந்துறைகின்றன.

உலக அரங்கினுள் தமிழ்மொழி ஈடிணையற்ற ஒன்றெனின் அது மிகையன்று. அம்மொழிக்குள்ள இனிமையும், எளிமையும் வேறெம்மொழிக்குமில்லை. அவ்விரண்டனுக்கும் காரணம் தமிழ் ஒலியமைப்பும், மொழி (சொல்) அமைப்புமேயாகும்.

தமிழெழுத்துக்கள் அனைத்தும் பெரும்பாலும் மிடறு, பல், இதழ், நா, மூக்கு எனும் அய்ந்துறுப்புகளையே இடமாகக் கொண்டு இயல்பாகப் பிறக்கின்றன. எவ்வெ ழுத்திற்கும் வலிய முயற்சி தேவைப்படுவதில்லை. தமிழெழுத்துக்களோடு பிறமொழியெழுத்துக்களை ஒப்பிட்டொலித்துக் காண்போர்க்கு இது நன்கு புலனாகும்.

எழுத்து என்றால் எழச்செய்வது என்பது பொருள். எழு-வேர்ச்சொல், து-பிறவினை இறுதி (விகுதி), விழுத்து-விழச்செய் என்பதுபோல, எழுப்ப எழுவது ஒலி. ஆக, எழுத்தென்றால் ஒலி என்பது பொருளாயிற்று. எழுதப்படுவது எழுத்தெனக் கூறுதல் பொருந்துவதன்று. எழுத்தாகிய ஒலிகள் தமிழ்க்கண் முப்பத்தொன்று மட்டுமே உள்ளன. இம்முப்பத் தோரொலிக்குள் தமிழ்மொழி இயங்குகிறது.

உயிர் மெய்யென்பது தனியொலியன்று. உயிரு மெய்யும் இணைந்த ஈரொலி; அதனைத் தொல்காப்பியர் ஓரெழுத்தாகச் சுட்டவில்லை. பவணந்தியார் ஓரெழுத் தாகச் சுட்டினாலும், குற்றியலுகரங்களையும் நிலை மொழி, வருமொழிகளின் ஈறு, முதல்களையும் சுட்டும்போது அதனை ஈரொலியாகவே காண்கின்றார்.

எடுத்துக்காட்டு :

வரகு - உயிர்த்தொடர்

நாடு - நெடிற்றொடர்

ஈண்டு உயிர்மெய்த் தொடர் என்று கூறாது ஈற்றயலெழுத்துக்களை மெய்யும் உயிருமாய்ப் பிரித்து, ஈற்றயல் நின்ற எழுத்தாய உயிர்மேல் வைத்து, உயிர்தொடர், நெடிற்றொடர் எனச் சுட்டுகிறார்.

யானை + கால் = யானைக்கால்

உயிர் மெய்முன் உயிர்மெய் வந்தது எனக் கொள்ளாது, உயிர்முன் மெய்வந்தது எனக் கொள்ளு மாறு அவர்.,

"நின்ற நெறி யேயுயிர் மெய்முதல் ஈறே"

என விதி கூறுகின்றார். இதனால் உயிர் மெய் யெழுத்து ஓரொலியன்று; ஈரொலியேயென்பது பவணந்தியார் உள்ளக்கிடக்கை என்பதனை அறிகிறோம்.

உயிரெழுத்து-12; மெய்யெழுத்து-18; ஆய்தம்-1; உயிர்மெய்யெழுத்து-216; ஆக 247 எழுத்தெனச் சின்னஞ்சிறார் உள்ளத்தில் தவறான கருத்தினைப் புகுத்துதல் ஏற்றதன்று.

ஆங்கிலமொழி 26 எழுத்துக்களாலாய மொழி எனவும், உலக மொழிகளுள் அதுவே குறைந்த எழுத்துக்களாலாய மொழியெனவும் கூறுதலுண்டு; இஃது உண்மைக்குப் புறம்பாயது. ஆங்கில மொழி வரி வடிவால் 26 எழுத்துக்களையுடையதே தவிர ஒலி வடிவால் நூற்றுக்கு மேற்பட்ட ஒலிகளையுடையது என்பதனை அதன் ஒலி வேறுபாடுகளின் நுட்பங்களை நுனித்துணர்வார் பலரும் உணர்வர்.

ஏ (A), ஜி (G) இவ்வீரெழுத்துகளை எடுத்துக் கொண்டாலே ஒவ்வொன்றும் சொற்களில் இடம்பெறும் போது எத்துணை ஒலிகளாக ஒலிக்கின்றன என்பது புலனாகும்.

தமிழெழுத்துக்களின் நிலை அத்தகையதன்று. தனித்து ஒலிக்கும்பொழுதும், மொழியிடை ஒலிக்கும் பொழுதும் அதன் நிலை வேறுபடுவதில்லை; பல்வேறு நிலையாய் நின்று, பல்வேறு பொருளைத் தருவதில்லை.

தமிழ்மொழியின் எழுத்துகள் முப்பத்தொன்றே உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1.

தமிழ்க்கண் நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட மொழியே (சொல்லே) இல்லை. சிலருக்கு இது வியப் பாகத் தோன்றலாம்; இஃது உண்மை. தமிழ்ச் சொற்களை ஆய்தலைவிட அவற்றுக்கு அடிப்படையாய அசை களை ஆய்ந்தாலே அதன் உண்மை புலனாகும்.

நேர், நிரை, நேர்பு, நிரைபு இவை தொல்காப்பியர் சுட்டும் அசை நிலைகள். தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இவ்வசை நிலைகளின் கண் அடங்கிச் செய்யுளாகவும், உரைநடையாகவும் வெளிவருகின்றன. சான்றுக்கு உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டாலும், ஒரு மரத்தின் உறுப்புகளை எடுத்துக் கொண்டாலும் அவை இந்நான்கசைகளின் கண் அடங்கி நிற்றலைக் காணலாம்.

உடல் - நிரை

நா - நேர் (நாக்கு-நேர்பு)

கால் - நேர்

மார்பு - நேர்பு

கழுத்து, வயிறு - நிரைபு

மரம் - நிரை

வேர், காய் - நேர்

இலை, கனி, கிளை - நிரை

ஏனைய உறுப்புகளையும் பொருத்திக் காண்க.

தமிழ்மொழி அசைகளாகிய இவற்றை நுனித்து நோக்குவார்க்கு, தமிழ்மொழி அமைப்பினை இவை கொண்டு காட்டுதல் நன்கு புலனாகும். அஃதாவது நான்கெழுத்துகளுக்கு மேற்பட்ட தமிழ்ச் சொல் இல்லை என்பது புலனாகும். நான்கெழுத்துச் சொல் ஆயிரத்திற்கு ஒன்று கிடைத்தலே அரிது.

நேர்-ஓரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் ஈரெழுத்து.

நிரை - ஈரெழுத்து

நேர்பு - ஈரெழுத்து; ஒற்றினைக் கணக்கிட்டால் மூவெழுத்து

நிரைபு - மூவெழுத்து (கருத்து போன்றவை நான்கெழுத்து)

"தாமரை புரையும் காமர் சேவடி"

தாமரை - மூவெழுத்து

புரையும் - (புரை+உம்) ஈரெழுத்து; ஈரெழுத்து

காமர் - மூவெழுத்து

சேவடி - மூவெழுத்து (செம்மை+அடி)

எனப் பிரிப்பினும் மூவெழுத்து ஈரெழுத்தாய் நிற்றல் காண்க.

இத்தகைய சொற்களைத்தன்பால் கொண்ட தமிழ் என்பதும் மூவெழுத்தாலாயதே.

இத்தமிழ்க்கண் தோன்றிய நூல்களைத் தொகுத்துச் சுட்டும் சொற்கள் எத்துணை எழுத்துக்களால் இருக்க வேண்டும்? மேற்குறிப்பிட்ட நால்வகை அசை நிலைகளின் கண் அடங்கியல்லவா நிற்றல் வேண்டும்? அஃதல்லவா தமிழ் மரபு ?

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழ்க்கண் தோன்றிய நூல்களை எத்தொடரால் இன்று சுட்டுகிறோம்?

"இலக்கிய இலக்கணம்" என்னும் தொடராலல்லவா சுட்டுகிறோம் ?

இலக்கியம், இலக்கணம் இவை இரண்டும் எத்துணை எழுத்துகளானானவை? அவ்வாறெழுத்து களானானவையல்லவா?

இவைபோல ஆறெழுத்துகளானான ஒரு தமிழ்ச் சொல்லைச் சுட்ட முடியுமா?

அந்தணர் என்பதைச் சுட்டலாம்; அஃது ஒரு சுட்டுச் சொல்; அம்+தண்+அர் எனப்பிரிந்து நின்று அழகிய குளிர்ச்சியையுடையார் எனப் பொருள்தரும் (குளிர்ச்சி-அருள்)

அடுத்து "ஒட்டகம்" என்பதனைச் சுட்டலாம். அஃது இரு சொற் புணர்ச்சி; ஒட்டு+அகம் எனப்பிரிந்து நின்று பொருள்தரும்; அகத்தினுள்ளே நீர்பை ஒன்று ஒட்டி நிற்கும் விலங்கினை அச்சொல் சுட்டுகிறது என்பது நுனித்துணர்வார்க்குப் புலனாகும். வேறு ஏதேனும் ஒரு சொல்லினை-ஆறெழுத்துடைய ஒரு சொல்லினை - தமிழ்ச் சொல்லாக யாரேனும் சுட்டமுடியுமா?

பகாப்பதம் ஏழெழுத்து, பகுபதம் ஒன்பதெழுத்தெனப் பவணந்தியார் சுட்டுகிறார், தமிழ்மொழியை வடமொழியாக்கும் பெரும் பணியைத் தலைமைதாங்கிச் செய்தவர்களுள் குறிப்பிடத்தக்க அவர் அவ்வாறு சுட்டாது வேறு எவ்வாறு சுட்டுவார் ?

"பகாப்பக மேழும் பகுபத மொன்பது

மெழுத்தீ றாகத் தொடரு மென்ப" - 130

என்பது அவர் திருவாக்கு.

தொடரும்

- விடுதலை நாளேடு 14 11 19