திங்கள், 9 டிசம்பர், 2019

தமிழ் மொழியில் வடசொற்கள் புகுந்தமை - 31

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன், தமிழ் மொழித் துறைத் தலைவர், சென்னை பல்கலைக் கழகம்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறைத் தலைவர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் உரை வருமாறு.

28.11.2019 அன்றைய தொடர்ச்சி...

பிறமொழி கற்றவர்கள் தாம் கற்றமொழி உயர்ந்தது என்று உயர்வு மனப்பான்மை கொண்டு இல்லை என்று இரப்பவனுக்குப் பெருமிதத்துடன் ஈபவன் கொடைபோல் கருதிச் சொற்கள் பலவற்றை ஒரு மொழியில் புகுத்தத் தொடங்கினும் அம் முயற்சி எதிர்க்கப்படும். இத்தனை எதிர்ப்பும் இல்லாமலே சிலசொற்கள் ஒரு மொழியில் புகுந்த பின், அந்த மொழியின் உரிமையான சொற்களும் இவன் கடன் வாங்கப்பட்டவையே என்று யாரேனும் எடுத்துக் கூறித் தாழ்வுபடுத்த முனையினும் இம்முயற்சி ஏற்கப்படா மல் எதிர்க்கப்படும் என்றும் டாக்டர் மு.வ. அவர்கள் குறிப்பிடுவது தமிழ்மொழியில் வடமொழிச் சொற்கள் புகுந்ததனைச் சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியதற்கான காரணத்தை டாக்டர் மு.வ. அவர்கள் மிகச் சிறப்பாகப் பின்வருமாறு புலப்படுத்தியிருக்கக் காணலாம்.

பழங்காலத்திலேயே வடமொழியிலிருந்து தமிழில் வரும் சொற்களைத் தடையின்றி ஏற்றுக்கொள்ள முடியாமற் போன நிலைமை இங்கு கருதத்தக்கது. தற்சமம், தற்பவம் என்று தமிழில் கலந்துள்ள வடசொற்களை இருவகையாகப் பிரித்த பிரிவிலும் இந்த உண்மையைக் காணலாம். வட மொழியிலிருந்தே தமிழ் கடன் வாங்கியது என்றும், தமிழனி டமிருந்து வடமொழி ஒன்றும் கடன் வாங்கியதில்லை என் றும், அதனால் தமிழைவிட வடமொழி உயர்வுடையது என் றும், உண்மைக்கு மாறான கூற்றுக்களை வடமொழி கற்றவர் தொடர்ந்து கூறிவந்த காரணத்தால் வடசொற்கள் தமிழர் நெஞ்சில் அன்பான இடம்பெற முடியாமற் போயிற்று. ஒரு சிலர் தமிழும் வடமொழியிலிருந்து பிறந்தது என்று செருக் கோடு கூறிவந்தமை பகைமையையும் வளர்த்து வந்தன. நடுவுநிலைமை பிறழ்ந்து ஒரு சாரார் பரப்பிய கருத்துகள் அன்பான இசைவுக்கு இடம் இல்லாமற் செய்துவிட்டன. தமிழையும் வடமொழியையும் ஒப்பிட்டு அவற்றின் உரிமை யான வளர்ச்சியையும் சிறப்பியல்பையும் சீர்தூக்கி உணர முடியாத புலவர்கள் சிலர் வடமொழிச் சார்பாக நடுவுநிலை இல்லாமல் கூறிய கூற்றுகள் பகைமைக்கு வித்திட்டன. ற ன ழ எ ஒ இந்த அய்ந்தெழுத்துக்களே தமிழுக்கு உரிமை என்றும், அய்ந்தெழுத்துக்களை மட்டும் உடையது ஒரு மொழி என்று கூற நாணவேண்டும் என்றும் புலவர் ஒருவர் மயங்கிக் கூறியது இதற்கு எடுத்துக்காட்டாகும். அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை அவற்றுள் ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? அன்றியும் அய்ந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே ஆகையால் யானும் அதுவே அறிக.

(இலக்கணக் கொத்துரை, பாயிரம் : 7)

இவ்வாறு ஒரு சிலர் மொழிகளின் சிறப்பியல்புக்கும் உடைமைக்கும் வேறுபாடு அறியாமல், மொழிகளின் இயல் பும் தனி வளர்ச்சியும் ஆராய்ந்து உணராமல் கூறி வட மொழிக்குப் பெருமை தேடித்தர முயன்ற தவறான முயற் சியே, இன்று தமிழ் கற்றவர் பலரும் வடமொழிக் கலப்பை அடியோடு வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தனித்தமிழ் உண்டோ என எழுப்பிய வினாவே பிற்காலத்தில் தனித்தமிழியக்கத்தை வளர்ப்பதற்கும் காரணம் ஆயிற்று. (மொழி வரலாறு; கடன் வாங்கல்; பக்கங்கள் : 104, 105)

தமிழ் வடமொழியிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி யது போன்றே, வடமொழியும் தமிழிலிருந்தும், பிறமொழிக ளிலிருந்தும் சொற்களைக் கடன் வாங்கியிருப்பதனைக் கால்டுவெல் சுட்டிக்காட்டுவர். ஆங்கில மொழியில் எவ்வளவு பிரிட்டிஷ் சொற்கள் வடமொழியில் உண்டோ அவ்வளவு திராவிட சொற்கள் வடமொழியில் உண்டு என்றும் கூறுவர் கால்டுவெல். மேலும், தமிழ்ச் சொல்லா, வடச் சொல்லா என்று அய்யுறத்தக்க நிலையில் உள்ள சொற்களை எல்லாம் தயக்கமின்றி வடசொல் என்று கூறும் கண்மூடி முடிபும் நெடுங்காலம் இருந்து வந்து தீமையினை விளைவித்ததாகவும், வடமொழி நிகண்டு நூலாரும் இலக்கணிகளும் தமிழ்ப் புலவர்களைப் போல் நடுவு நிலைமைப் போக்குடன் சொற்களை ஆராய முற்படாமல், எல்லாவற்றையும் வடசொல் என்று குறிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார்.  (“But this probability has genererally remained unnoticed, and wherever any word was found to be the common property of  the Sanskrit and any of the Dravidian tongues, it was at once assumed to be a Sanskrit derivative -Sanskrit lexicographers and Grammarians were not always so discriminate as their Dravidian brethren” - Caldwell, A comparative Grammar of the Dravidian Languages, p. 453) மேலும் தமிழில் புகுந்த சொற்களை வகைப்படுத்தும் தொல்காப்பியனார் இலக்கண முறைப்படி சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகையாகப் பகுத் திருத்தலேயன்றி, சொற்கோவை முறைப்படி இயற்சொல், திரிச்சொல், திசைச்சொல், வடசொல் என்றும் பிரித்துள்ள தனை, அவற்றுள்,

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட சொல்லென்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

- தொல்; சொல்; 397

என்னும் நூற்பாவிற் குறிப்பிட்டுள்ளார்.

சங்க காலத்தில் நூற்றுக்கு இரண்டு மூன்று என்னும் அளவில் தமிழில் இடம் பெற்ற வடசொற்கள், சங்க மருவிய காலத்தில் - அதாவது பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதி காரம், மணிமேகலை எழுந்த காலத்தில் - நூற்றுக்கு நான்கு அய்ந்து என்னும் விழுக்காடளவில் பெருகின. ஆழ்வார், நாயன்மார் வாழ்ந்த பக்திக் காலமாம் பல்லவர் காலத்தில் நூற்றுக்குப் பத்துப் பதினைந்தாகப் பல்கிப் பெருகின. பக்திப் பதுவல்களுக்கு உரை எழுந்த காலத்தில் மணிப்பிரவாள நடை வழக்குக்கு வந்த காலத்தில் வடமொழிக் கலப்பு அள வின்றிப் பெருகியது.

தேவார காலத்தில் நாயன்மார்கள் தலங்கள்தோறும் சென்று இறைவனை வழிபட்ட காலத்தில், அத்தலங்களின் பெயரும் அத்தலத்தில் இறைவடிவில் எழுந்தருளியுள்ள இறைவன், இறைவி திருப்பெயர்களும் தனித்தமிழிலேயே இருந்தன.

முதலாவது தலங்கள் சிலவற்றின் பெயர்களையும் அவை பின்னாளில் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்ட நிலையினையும் காண்போம்.

நாயன்மார்கள் காலத்தில்:

முன்னாளில்     பின்னாளில்

மயிலாடுதுறை    மாயூரம்

திருமுதுகுன்றம்  விருத்தாசலம்

திருமறைக்காடு    வேதாரண்யம்

இறைவன் இறைவி திருப்பெயர்கள் :

முன்னாளில்      பின்னாளில்

அண்ணாமலை   அருணாசலேசுவரர்

உண்ணாமுலை   அபீதகுசாம்பாள்

இவ்வாறு பிற்காலத்தில் தமிழைச் சிதைத்து வடமொழி யைப் புகுத்தி ஓர் இயக்கமே நடாத்தி வெற்றிகண்டு இன்றளவும் அச்செல்வாக்கு குன்றாமல் திருக்கோயில்களில் வடமொழிப் பெயர்களே ஆட்சி ஒச்சி வருகின்றன.

நடுவு நிலைமை நெஞ்சமும் ஆராய்ச்சிப் போக்கும் நிறைந்த மேனாட்டு அறிஞர்களே அவ்வப்போது மறைந்து போன உண்மைகளை உலகிற்கு உணர்த்தி வந்தார்கள். சென்ற நூற்றாண்டில் டாக்டர் குண்டர்ட் என்பவர் வட மொழியில் திராவிடக் கூறுகள் என்னும் ஆராய்ச்சிக் கட்டு ரையினை வெளியிட்டார். இக்கட்டுரை கி.பி. 1869ஆம் ஆண்டு ஜெர்மன் கீழ்நாட்டுக் கலைக் கழகத்தின் பத்திரி கையில் வெளிவந்தது. கி.பி.1872இல் கிட்டல் என்பவர் வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள் என்னும் கட்டுரை எழுதினார். இதற்குப் பின்னரே இத்துறையில் டாக்டர் கால்டுவெல் விரிவாக ஈடுபட்டார்.

இருபதாம் நூற்றாண்டில் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளார் மும்மொழிப் புலமை வாய்ந்து, தனித் தமிழ் இயக்கம் கண்டார். வேதாசலம் என்னும் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சென்னை கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் தம்பெயரைப் பரிதிமாற் கலைஞர் எனத் தம் தமிழார்வத்தால் மாற்றிக் கொண்டார். தனித் தமிழ் இயக்கத்தின் தந்தையான மறைமலையடிகளார் தொடங்கித் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சிலராவது தனித்தமி ழிற் பேசவேண்டும், எழுதவேண்டும் என முனைந்திருப்ப தும், அரசாங்கம் மாயூரத்தை மயிலாடுதுறை எனப்பெயர் மாற்றம் செய்திருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு இடைக்காலத்தே தமிழ்க் கதிரவன் ஒளியினை மறைத்த வடமொழிக் காரிருள் இக்காலத்தே மெல்ல மெல்ல விலகி வருகிறது.

காரிருளால் கதிரவன்தான் மறைவதுண்டோ? கரைசேற் றால் தாமரையின் வாசம் போமோ? பேரெதிர்ப்பால் உண் மைதான் இன்மையாமோ? என்று புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் புகலுவது போல, இனித் தனித்தமிழ் இயக்கம் தழைக்க வழிவகை காணுவோம் எனக் கூறி அமைகிறேன்.

 - விடுதலை நாளேடு 3 12 19

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக