திங்கள், 29 அக்டோபர், 2018

ஈரோட்டு மறியலில் இரண்டு மகளிர்!



பாப்ரியா 1921 ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம்  புரட்சிகரமாக அஹிம்சை வழியில் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணம்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகப் பெரியார் பதவியேற்று, காந்தியடிகளின் அனைத்துப் போராட்டங்களையும் முன்னிருந்து நடத்திக் கொண்டிருந்தார்.
இந்தச் சமயத்தில் காந்தியடிகளின் கவலைக்குரிய - போராட்டமாக 'கள்ளுக்கடை மறியல்' போராட்டமும் இருந்தது. அல்லும் பகலும் வியர்வை  சிந்தி கூலியாகப் பெறும் பணத்தைக் கொண்டு உழைப்பாளிகள் கள்ளைக் குடித்து உடல் நலத்தை இழந்து போவதையும், அவர்களது குடும்பம் சீரழிவதையும் கவனத்தில் கொண்டு, இதை ஒழிக்க 'கள்ளுக்கடை மறியல்' போராட்டம் நடத்தும் படி தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்; அறைகூவல் விடுத்தார்  காந்தி.
பெரியாரின் மனதில் மகாத்மாவின் அறைகூவல் சாதாரண ஒன்றாகப்படவில்லை. சடசட வென்று யாகத்தீயில் கொழுந்து  விட்டு எரியும் வேள்வித் தீயாக மாறியது. இப்போராட்டம் வரலாற்றில் பதித்து வைக்க வேண்டிய ஆவணமாக அமையவேண்டும் என்று ஆசைப்பட்ட பெரியார், கள்ளுக்கடை மறியலில் தாமே தலைமை தாங்கி அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினார்.
போராட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு - இருந்தது. அப்போது சேலத்தில், பெரியார் குடும்பத்திற்குச் சொந்தமாக 500 தென்னை மரங்கள் கள் இறக்குவதற்கு, குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த தால், தோப்பில் கள் இறக்கும் அனுமதியை ரத்து செய்து குத்தகைதாரருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட எண்ணினார். ஆனால், குத்தகைதாரர்கள் அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்ததால், மரத்தை வெட்டும் முயற்சியில் கட்டாயமாக இறங்க வேண்டிய சூழ் நிலைக்குப் பெரியார் ஆளாக வேண்டியதாயிற்று.
போராட்டத்தை நடத்தும் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய், ஆட்களை வரவழைத்து 500 மரங்களையும் வெட்டினார். இந்தப் போராட்டத்தின் உண்மைத்தன்மை எதிரொலியாகத் தமிழகமெங்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
காந்தியடிகள் ஈரோட்டிற்கு வருகை தந்தார். பெரியாரின் இல்லத்திற்கு வந்து மேற்கொண்டு போராட்டத்தைத் தீவிரமாக்க அவருடன் ஆலோசனை நடத்தினார். இதனால் இப்போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.
இந்தப் போராட்டம் ஆங்கிலேய அரசுக்குப் பெரிய சவாலாக அமைந்தது. பெரியாரையும், தொண்டர்களை யும் சிறையில் அடைத்தது. பெரியாரின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த முதல் சிறைச்சாலை அனுபவமாயிற்று கள்ளுக்கடை போராட்டம்.


பெரியாரைச் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஆங்கிலேய அரசு பெருமூச்சு விட்ட நிலையில்தான் மற்றொரு சம்பவம் நடந்தது. யாரும் எதிர்பாராத நிலையில் பெண்கள் வீதியில் நடந்து செல்வது குற்றம் என்று பெண்ணடிமைத்தன காலகட்டத்தில், ஆங்கிலேய அரசு விடுத்த 144 தடை உத்தரவை மீறி, பெரியார் வீட்டிலிருந்து நாகம்மையாரும் கண்ணம்மாளும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாய்ச் சேர்ந்து பின்பு பத்தாயிரம் எண்ணிக் கையில் போராட்டம் தீவிரமடைந்தது. ஆங்கிலேய அரசு செய்வதறியாமல் திகைத்தது.
நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் சிறையிலடைத்தால் போராட்டம் தீவிரமடைவதோடு, தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும்  என்று ஈரோட்டில் இயங்கிய ஆங்கிலேய நிர்வாகம் தெளிவாகவே உணர்ந்திருந்தது. வேறு வழியில்லாமல் 144 தடை உத்தரவை நீக்கியாக வேண்டும் என்ற தகவலையும் சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய தலைமைக்குத் தெரியப்படுத்தியது. நிலைமையை உணர்ந்த நிர்வாகம் 144 தடையை நீக்கியது. இவ்வாறு ஆங்கிலேய அரசின் தடை உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தவர்கள் ஈரோட்டுப் பெண்கள்.
இந்தச் சூழ்நிலையில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக காங்கிரசுக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்காக மும்பையில், ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் தலைவர்களாக பண்டிட்  மாளவியா, சங்கரன் நாயர் இருந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் ஈரோட்டில் மட்டும் தான் கள்ளுக் கடை மறியல் போராட்டம் தீவிரமாக இருந்தது. எனவே மாநாட்டில் பேசுவதற்கு முன்பு மாநாட்டுத் தலைவர்கள் காந்தியடிகளிடம், கள்ளுக் கடை போராட்டத்தை நிறுத்திவிடச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள்.
அதற்குப் பதில் அளித்த காந்தியடிகள், ''மறியலை நிறுத்துவது என் கைகளில் இல்லை . அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கின்றன. அவர் களைத்தான் கேட்க வேண்டும்'' என்று பதில் அளித்தார்.
இது வரலாற்றுச் சம்பவமாக நடந்த காலம் 1922ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி.
1921-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டத்தை சுமார் ஒரு மாத காலம் நடத்தி வெற்றி பெற்று ஈரோட்டிற்கு வரலாற்றில் பெருமை சேர்த்தவர்கள் தான் நாகம்மையாரும் கண்ணம் மாளும். இவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் போராடியதும் வரலாறாகப் போனது.
நன்றி:  'கல்கி' 4.11.2018
- விடுதலை நாளேடு, 27.10.18

புதன், 24 அக்டோபர், 2018

ஆங்கிலேயர் ஆட்சியில் நலச் சட்டங்கள்

பெரியார் அறிவரசாட்சியில் ஆண்டவனே இல்லை”


மேயோ கூறுவது

சென்னை ராஜதானிதான் பார்ப்பனிய ஹிந்து மதத்தின் இருப்பிடமாகும்! பூர்வீக குடிகளான கருநிறமுள்ள திராவிட மக்க ளின் இருப்பிடமும் சென்னை ராஜதா னியே!! பார்ப்பனிய ஹிந்து மதம் திராவி டர்களை சின்னாபின்னப்படுத்தி, பறையர் கள் எனவும், கீழ் ஜாதியர்கள் எனவும் கூறி அடிமையாக ஒதுக்கி வைத்ததுடன், கல்வி இல்லாதவர்களாயும் செய்து நசுக்கி வைத்தது!!!

அந்தச் சமயத்தில்தான், பிரிட்டிஷார் வந்து இந்த தேசத்தின் ஆட்சியைக் கைப் பற்றி ஆளத் தொடங்கியதால், நாட்டில் ஆழ்த்தப்பட்ட மக்களின் அகத்தினில் சில புண்கள் ஆறுதல் எய்தின! பார்ப்பனிய ஹிந்து மதக் கொடுமைகள் அடங்கி, ஏழைத் திராவிடர்கள் சற்று அமைதி எய்தினர்!! பொதுமக்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாது காப்படையும் படியான சீர்திருத்தச் சட்டங்களைப் பெற்றனர்!!! உதாரணமாக, கீழ்கண்டவற்றைக் கூறலாம்:-

(1) கி.பி. 1802இல், குழந்தைகளை கடலில் எறியும் வழக்கம் தடைசெய்யப்பட்டது -Drowning of Children into sea prohibited by Regulation IV of 1802

(2) கி.பி. 1811இல், அடிமை முறை ஒழிக்கப்பட்டது - Abolition of Slavery by Regulation of 1811.

(3) கி.பி. 1817இல், கொலை செய்த பார்ப்பானுக்கு மரண தண்டனை இல்லை என்ற மனுநீதி நீக்கப்பட்டு, எல்லோருக்கும் மரண தண்டனை உண்டு என விதிக்கப் பட்டது - Criminal law made applicable to all Castes. Exemption of Brahmins done away with by Regulation XVII of 1817 Section XV.

(4) கி.பி. 1820இல், கடன் கொடுத்த பார்ப்பான் உண்மையான, அல்லது பொய் யான கடன்களை வசூலிப்பதற்காக, உண்ணா நோன்பிருந்து உயிர் விடுவது என்ற மிரட்டல் வழக்கம் தடை செய்யப்பட்டது - Brahmins prohibited by Regulation VII of 1820.

(5) கி.பி. 1829இல், கைம்பெண்களை உயிரோடு எரிக்கின்றதான ‘சதி’ அல்லது, உடன் கட்டை ஏறுதல் என்ற பழக்கம் தடை செய்யப்பட்டது -Burning of Widows alive prohibited by Regulation XVII of 1829.

(6) கி.பி. 1833இல், மதம் - நிறம் - பிறப்பு - இடம் காரணமாக, ஒருவருக்கு உள்ள உரிமைத்தடைகளை நீக்கும் வகையில் சட்டம் செய்யப்பட்டது - Disablities Removal Act - The Government of India Act 1833.

(7) கி.பி. 1840இல், அரசு உத்தியோகங்கள் ஒரே வகுப்பினரால் ஆக்கிரமிக்கப்படக் கூடாது. எல்லா ஜாதியினருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் - Collectors Should be able to see that the Subordinate appointments in their districts are not monopolised. Endeavour Should always be made to divide the principal appointments in each district among the Several Castes-Board Standing order No. 125 of 1840.

(8) கி.பி. 1858இல், முழுவதுமாக பிரிட் டிஷ் அரசாங்கத்தின் செலவில் நிர்வகிக் கப்பட்ட எல்லாப் பள்ளிகளிலும், எல்லா ஜாதியினரும் படிக்க உரிமை உண்டு. இவற் றில் யாரும் எவ்வித பேதமும் பாராட்டக் கூடாது -  British Press Note of 1858.--

(9) கி.பி. 1904இல், "இந்தியப் பல்கலை கழகச் சட்டம்” இயற்றப்பட்டு, பிற்படுத்தப் பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைக ளும், உயர்நிலைக் கல்வி வரையில் பயில் வதற்குரிய வாய்ப்பையும், வசதியையும் பெறும்படி செய்யப்பட்டது,

(10) கி.பி. 1926இல், பார்ப்பனிய ஹிந்து மதக் கொடிய கொலை பாதகச் சாஸ்திரச் செயலாகிய இளஞ் சிறுமிகளை-முதற் பூப்புக்கூட ஆகாத முன்னரே-திருமணம் செய்து கொடுத்து விடும் கொடுமையைத் தடை செய்யும் படியானச் ‘சாரதாச் சட்டம்' இயற்றப்பட்டது.

(11) கி.பி. 1926 முதல், 1930 வரையில், சென்னை ராஜதானியில், பிரிட்டிஷ் -இந்திய அரச பிரதிநிதியின் கீழ் ஆளுன ராக இருந்தவரின் தலைமையில், நடை பெற்ற சுயேச்சை மந்திரி சபை, கோவில் களுக்குப் பெண்களை பொட்டுக் கட்டி விட்டுத் தாசிகளாக - விபசாரிகளாக -வளர்த்து வந்தப் பார்ப்பனிய ஹிந்து மதத்தின் அசிங்கமான ஒழுக்கக்கேட்டை ஒழித்துக் கட்டும்படியான ‘தேவதாசி தடை' சட்டம் இயற்றப்பட்டது.]

இவற்றால், திராவிட (தமிழ்) மக்களும் காலக் கிரமத்தில், விழிப்புணர்ச்சி பெறத் தொடங்கினர்...”

மேற்கூறியவற்றால், பார்ப்பனச் சாயம் முற்றிலும் வெளியாகவில்லை. இன்னும் சொல்ல வேண்டியவை எத்தனையோ உள்ளன. இவற்றை எல்லாம் சொல்லப் புகின் மிகவும் விரியும். ஆதலால் அதைப் பற்றி நன்றாக அறியவேண்டியவர்கள், தோழர் அய்யாமுத்துவால் எழுதி வெளி யிடப்பட்டுள்ள 'மேயோ கூற்று மெய்யா-பொய்யா?" என்னும் புத்தகத்தில் காணலாம்...

இந்நாட்டில், உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த கல்வி அறிவு பெற்று, உயர்ந்த நிலையில் இருப்பவர் முதல், சாமான்ய ஏழைகள் வரையில் உள்ள பல குடும்பத்தின் பெண்களைப் ... தாசிகளாக இருக்க, இந்து மதம் செய்து விட்டது! நாற்பது- ஐம்பது லட்சம் ஜனத்தொகை கொண்ட தேசத்தைக் கட்டியாளும்... பார்ப் பானேதான் சம்மந்தமாகக் கொள்ள வேண் டும் என்று ஹிந்து மதம் இன்னும் இடங் கொடுத்துக்கொண்டிருக்கிறது!! பெரிய பூபாகத்தை கட்டியாண்டிடினும், மேல்நாடு, பல சென்று கல்வி கற்றிடினும், பாமரரின் பணத்தைத் தன் எடைக்கு எடையாகத் தராசிலிட்டுப் பார்ப்பானுக்கு வழங்கி ராஜ ரிஷி பட்டம் பெறும் ஆள்வார் மகாராஜாக் களையும் ஹிந்து மதம் வைத்துக் கொண் டிருக்கிறது!!! என்னே இம்மதப் பெருமை? என்னே இம் மதத்தால், பார்ப்பனர்க்கு இருக்கும் ஏக போக உரிமை?? என்னே இருபதுகோடி மக்களை, இருபதாம் நூற்றாண்டிலும், இப்பார்ப்பனர் ஏமாற்றி வரும் திறமை???

...பார்ப்பனருடைய திறமைக்குக் காரணமே, திராவிட (தமிழ)ர்களுடைய மூடபக்தியேதான்! உண்மையிலேயே, பார்ப்பனிய ஹிந்து மதம், திராவிடர் (தமிழர்) களுடைய மதம் அன்று. இதை தக்க ஆராய்ச்சிகளுடன் தெளிவாகத் தோழர் விவேகி அவர்கள் இந்நூலில் விளக்கி யுள்ளார்... எனவே, தோழர் விவேகி அவர் களால், இனியும் இப்படிப்பட்ட பல நூல்கள் வெளியாக வேண்டும் என்று ஆசைப்படு கிறோம்.

1946-ஜூலை    1.ஈ.வெ.ராமசாமி

ஈரோடு

குறிப்பு: 1. எல்லா ஜாதியினரும், கல்வி கற்கும் உரிமை, அக்காலத்தில், பார்ப்பனிய ஹிந்து மதத் திமிரால் பாதிக்கப்பட்டிருந்ததால், இந்தச் சீர்திருத்த உத்திரவு பயன்படாது போயிருந்தது.

2. இந்நூலின் பெரும் பகுதிகள், “பெரியார் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் கையெழுத்துப் பிரதியாக இருந்தபோதே, பெரியாரிடம் கொடுத்துப் பெற்ற முகவுரையின் சில பகுதிகளாம்.

- எஸ்.டி.விவேகி, பதிப்பு: 1983

- விடுதலை ஞாயிறு மலர், 7.10.17

இத்தகைய கோவில்கள் ஏன்?

10. 04. 1932  - குடிஅரசிலிருந்து...




தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்ப னரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹை கோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசார ணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்ப னரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமை யுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்;  ஜஸ்டிஸ் வாலர், பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பி ராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக  விசாரித்து, பார்ப்பன ரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.

இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்களும் நிலைத்திருக்க முடி யாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம் மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பன ரல்லாதார்களே செய்து வருகின்றார்கள். இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல் லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத் தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல் லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.

ஆகையால் உண்மையில், பார்ப்பனர் களின் சுயநலத்தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவை களைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும் படி விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்யமில்லை.

ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்றவர்கள். கோயில்களை ஒழிக்கப்பாடுபடுவார்களா னால், அதனால் அதிக நலனும், பொருளாதாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.

யோகியின் ஆசை


10. 04. 1932 - குடிஅரசிலிருந்து...


ஹடயோகி என்று புகழப்பட்டவரும், கடைசியில் இரங்கூனில் விஷமுண்டு இறந்தவருமான, நரசிம்ம சுவாமி என்பவர், இறந்த விதத்தைப் பற்றியும், அவருடைய கடைசி, ஆசையைப் பற்றியும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

அவர் இறக்குந்தருவாயில் கடைசி ஆசையாக, தன்னுடைய உடம்பை 24 மணி நேரம் சும்மா வைத்திருக்க வேண்டுமென்றும், தன்னுடைய உடம்பைப் புதைத்த இடத்தில் புத்தர் கோயில் ஒன்று கட்ட வேண்டுமென்றும் கூறினாராம். அதற்கிணங்கி அவரை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று புதைத்தார்களாம். இனி, அவருடைய சகோதரர் வந்து பணவசூல் செய்து இறந்து போன ஹடயோகியின் அவாவைப் பூர்த்தி செய்யப் போகின்றாராம்.

யோகிகளின் ஏமாற்றுந் தன்மைக்கும், இந்துக்களின் மூடத்தன்மைக்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டுவதில்லையென்றே நாம் அபிப் பிராயப்படுகின்றோம்.

ஜால வேடிக்கை போல ஏதோ சாதுரியத்தினால் விஷந்தின்று மாண்ட ஒரு மனிதருக்குக் கோயில் எதற்காக என்று கேட்கின்றோம். உண்மையிலேயே இவர் சுயநலங்கருதாத - உலக நன்மையை விரும்புகின்ற ஒரு யோகியாயிருந்தால் ஏன் தன்னுடைய புதை குழியின் மேல் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்படவேண்டும்? பிற்காலத்தில் தன்னை ஒரு மகானென்று நினைத்துக் கொண்டு மூட மக்கள் தன்னுடைய புகழைப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் பேராசையேயன்றோ?

நம்முடைய மக்களும் மதவேஷம் போட்டவர்களையும் ஜாலவேடிக் கைக்காரர்களையும், மகான்களென்றும், யோகிகளென்றும், மகாத்மாக்க ளென்றும் நம்பியே மோசம் போய்க்கொண்டே வருகின்றார்கள். நமது மக்களின் இத்தகைய மூடத்தனத்தினால் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்களும் சமாதிகளும் ஏற்பட்டுள்ளன. இந்தக் கோயில்களுக்கும் புதை குழிகளுக்கும் நமது மக்கள் அழுகின்ற பொருளுக்கு அளவேயில்லை, இந்நிலையில் இப்படி ஒரு புதுக் கோயில் கட்டவும் முயற்சி செய்ய வேண்டுமா?

ஆகவே பர்மாவில் உள்ள இந்தியர்கள் இந்தப் பயனற்ற காரியத்திற்காக ஏழை மக்களிடம் பொருளைச் சேகரித்து புதை குழியில் மேல் கோயில் கட்டி அதன் மூலம் மக்களுக்கு மூடத்தனத்தை வளர்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

- விடுதலை நாளேடு, 19.10.18

திங்கள், 22 அக்டோபர், 2018

வீரத்தாய்

பொறியாளர்  என்.எஸ்.ஏகாம்பரம்


1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம்தேதி அண்ணா போன்றவர்கள் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேற முயற்சித்த தருணம். அய்யா அவர்களை சந்திக்க மீரான் சாயபு தெரு வீட்டுக்குச் சென்றேன். அய்யா ஊஞ்சலில் அமர்ந்து அந்தவார திராவிட நாடு இதழில் வந்துள்ள கண்ணீர் துளிகள், கண்டனக் கணைகள் என்று பிரசுரித்த தொண்டர்களின் பெயர்களை படித்துவிட்டு அருகில் தரையில் அமர்ந்திருந்த மணியம்மையிடம் இவரும் அவர்களோடு சென்றுவிட்டாரா என்று ஓரிருமுறை கூறியபின் என்னை அருகில் அழைத்து வந்த விஷயம் என்னவென்று கேட்டார்கள். நான் சம்பந்தத்தின் தம்பி என்றும் அவரது திருமணத்தை நடத்திக்கொடுக்க அனுமதியும், வசதிப்பட்ட தேதியைக் குறித்துச் செல்லவும் வந்தேன் என்றேன்.



மொத்த தமிழகமே எதிர்த்து நிற்கிறது என்ற மாயை உலவிய நேரத்தில் அய்யா அவர்களிடம் நான் கண்ட துணிவை விட, எவ்வித சலனமும் இன்றி அம்மாவிடம் காணப்பட்ட அமைதி என்னை பெரிதும் கவர்ந்தது.

நான் அய்யா, அம்மா அவர்களை சந்தித்த அன்று தான் தியாகராய நகரில் உள்ள சி.டி.நாயகம் வீட்டில் அய்யா - அம்மா பதிவுத் திருமணம் நடந்தது என்று பின்பு அறிந்தேன்.

சம்பந்தத்தின் திருமணம் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நாகரசம்பட்டி என்ற குக்கிராமத்தில் நடந்தது. அய்யாவிடம் நெருக்கமாக இருந்த தலைவர்கள் பிரிந்து திராவிட முன்னேற்ற கழகம்' தொடங்க முடிவு எடுத்த நேரத்தில் அய்யா அவர்கள் கலந்து கொண்ட முதல் பிரைவேட் ஃபங்சன் (Private function) அது. உடன் வந்த அம்மா முதல் சந்திப்பிலேயே நெடுநாட்கள் பழகியவர் போல் எங்கள் குடும்பத்தாருடன் நடந்து கொண்டதை இன்னும் என் குடும்பத்தினர் நினைவு கூறுகிறார்கள்.

கடமை உணர்வு


1955ஆம் ஆண்டு நான் கல்லூரி விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்தபோது இளம்வயதில் வேலையின்றி சோம் பேறியாய் இருக்கக்கூடாது. ஏறு வண்டியில்! என்றதோடு, இரண்டு வாரங்கள் என்னுடன் இருக்க வேண்டுமென்று கூறி அய்யா அவர்கள் என்னை அழைத்துக் கொண்டார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்


அப்போது திருவிடை மருதூரில் அய்யா தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஊருக்கு அருகிலிருந்த மாந்தோப்பில் வேனை நிறுத்தி அதிலேயே அய்யா ஓய்வெடுத்தார்கள். நாங்கள் அக்கால பிரபல நாதஸ்வர வித்வான் வீராசாமி பிள்ளை வீட்டு திண்ணையில் அவர் கொடுத்த பாயில் சுகமாக தூங்கினோம். மாலை 4 மணிக்கு மாந்தோப்புக்கு சென்றபோது அம்மா வேனுக்கு அருகில் ஒரு நாற்காலியில் நாள் முழுவதும் உட்கார்ந்து இருந்ததை கண்ட நான் அவர்களின் எல்லையற்ற கடமை உணர்வுக்கு தலை வணங்கினேன்.

அய்யா அவர்களின் பொதுக்கூட்டங்களின் போது புத்தகங்களை விற்கச்சொல்லி அம்மா என்னை உட்கார வைத்து விடுவார்கள். கும்பகோணத்தில் நடந்த கூட்டத்தின் போது புத்தகங்கள் மிகவும் குறைவாக விற்கப்பட்டன. "என்னய்யா இவ்வளவு பெரிய நகரில் இவ்வளவு குறைவாக விற்றுள்ளாய்" என்று அம்மா கேட்டபோது, "புத்தகங்கள் விற்க கமிஷன் கொடுங்கள் அதிகம் விற்று காண்பிக்கிறேன்" என்று விளையாட்டாக சொன்னதை அய்யாவிடம் கூறிவிட்டார்கள். அய்யாவும் சிரித்துக்கொண்டே, தான் காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தபோது ஜெமினி வாசனுக்கு அட்வர்டைஸ்மெண்ட் வாங்கிவர ரூபாய்க்கு ஒன்றறை அணா கமிஷனாக கொடுத்தேன் என்றும், குறைந்தது 100 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றுக் கொடுத்தான் என்றால் ரூபாய்க்கு 10 பைசா கமிஷனாக கொடுக்கிறேன். அப்படி இல்லை என்றால் அவன் நமக்கு கமிஷன் தரவேண்டுமென்று கூறி சிரித்தார்.

எளிமை


படித்து முடித்தவுடன் எனக்கு கோவை நகர் நெடுஞ்சாலைத் துறையில் உத்தியோகம்  - எனக்கு கொடுக்கப்பட்ட  Quarters - ஓடு வேய்ந்த வீடு. இரண்டாம் உலகப்போரின் போது பாதுகாப்புக்காக அமைத்த தண்ணீர் தொட்டியின் சுற்றுச் சுவர்களை உயர்த்தி வீடாக மாற்றம் செய்யப்பட்டது. மாதவாடகை 2 ரூபாய் 50 காசுகள். கரண்ட் வசதி இல்லை. என் தாயார் என்னோடு தங்கி இருந்தார். மணியம்மை அவர்கள் கோவை வரும்போதெல்லாம் அய்யாவை ஜி.டி.நாயுடு பங்களாவில் இறக்கிவிட்டு என்னுடைய குடியிருப்பிடத்துக்கு வந்து விடுவார்கள். தரையில் பாயை விரித்து ஓய்வெடுத்துக் கொள்வார். மாலை 5 மணிக்கு அய்யாவின் வேன் டிரைவர் அம்மாவை அழைத்துச் செல்வார். ஒரு ஒப்பற்ற தலைவரின் மனைவி தரையில் பாயில் படுத்து உறங்குவதை என்னால் நம்ப முடியவில்லை.

நான் உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாற்றப்பட்டேன். என் மாதச்சம்பளம் 350 ரூபாய். தனிப்பட்டவரின் வீட்டுக்கு குறைந்த வாடகை ரூபாய் 250 மீதமுள்ள 100 ரூபாயில் எப்படி மற்ற செலவினங்களை சமாளிப்பது என்ற கவலை. அம்மாவிடம் என் நிலைமையை சொன்னவுடன் மேல் மாடியில் இருந்த அய்யாவின் அறைக்கு இழுத்துச்சென்று இவன் சென்னையில் வீடுகிடைக்கும் வரை  நம்ம வீட்டில் தங்க உங்களிடம் எப்படி கேட்பது என்று தயங்குகிறான் என்று கூறிய அடுத்த வினாடியே அவனுக்கு வசதியான வீடு கிடைக்கும் வரை இங்கேயே தங்கட்டும் என்ற அனுமதியை அம்மா பெற்றுத் தந்தார்கள். சுமார் 2 மாதங்கள் அய்யா வீட்டில் அம்மாவின் தயவால் வாடகை இன்றி எல்லா வசதிகளுடன் தங்கி இருந்தேன்.

ஒருமுறை பெரியார் வீட்டிலிருந்து போன் வந்தது என்று எனது அலுவலக ஊழியர் கூறினார். நான் அய்யா வீட்டை அடைந்தபோது மாலை 4 மணி. அய்யா அவர்கள் படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். பச்சையப்பன் கல்லூரி தமிழ்ச்சங்கத்தில் சொற்பொழிவு. உன்னைத்தான் அம்மா நம்பியுள்ளார் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள் என்று என்னிடம் சொன்னதோடு அம்மாவை தன்னோடு வரவேண்டாமென்று கூறிவிட்டு வேனில் ஏறிவிட்டார்கள்.

விடுதலை அலுவலக கட்டடத்துக்காக பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை தன் செலவுக்காக பெரியார் எடுத்துக் கொண்டார் என்று முன்னாள் விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி பார்த்தவர்களிடம் பிரச்சாரம் செய்வதாகவும், கட்டடத்தை எப்படியும் ஆறுமாதங்களுக்குள் முடித்துவிட வேண்டுமென்றும் அம்மா கூறினார்கள். நானும் ஒத்துக் கொண்டேன்.

கட்டட வேலை நான் எதிர்ப்பார்த்ததை விட சற்று விரைவாகவே முன்னேறியது. அப்போது வெளிப்புற சுவர்களுக்கான Snowcem Paint பிரபலம். முதல் சிஷீணீ பெயிண்ட் அடித்து முடிக்கும் தருவாயில் முன்னாள் அமைச்சர் க.ராஜாராம் திடலுக்கு வந்தவர், ஏண்டா பெரியார் கட்டடத்துக்கு பெய்ண்ட் அடித்துவிட்டு நீ திடலுக்குள் நுழைய ஆசைப்படுகிறாயா? பெரியார் உன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வேகத்தில் உன் அண்ணன் சம்பந்தத்தையும் இழுத்துக்கொண்டு ஓடப் போகிறாய், என மிரட்டி விட்டு சென்று விட்டார். அய்யாவின் வெறுப்பை சம்பாதித்து விடுவேனா என்ற பயம். கட்டட வேலை முடிந்துவிட்டது. அய்யா சென்னை வருகையை விடுதலை யில் படித்து தெரிந்து கொண்டேன். அம்மா என்னை போனில் அழைத்து இன்னும் இரண்டு நாட்களுக்கு அய்யாவை சந்திக்க வரவேண்டாம் என உத்தரவிட்டார்கள். அதனால் மேலும் கலங்கினேன்.

இரண்டு நாட்கள் கழித்து அய்யாவை மதியம் 2 மணிக்கு சந்தித்தேன். முதலில் சாப்பிட்டு வா என்றார்கள். அம்மா அவர்கள் பரிமாறும்போது அய்யாவுக்கு பணவிரயம் செய்து விட்டேன் என்று என்மீது கோபமா என்று நான் கேட்டபோது, நீயே அய்யாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்! என்று எவ்வித முகபாவமும் காட்டாது சொல்லிவிட்டார்கள். தனக்கு நெருக்கமானவர்களுக்கு சற்று டென்சன் கொடுத்து சோதிப்பதில் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம். நான் அய்யா வின் வீட்டைவிட்டு வெளியேறியபோதுதான், 'அய்யா அந்த கட்டடத்தை கண்டவுடன் நாற்காலி ஒன்றை கொண்டு வரச் சொல்லி வெளியிலே உட்கார்ந்து கட்டடத்தைப் பார்த்த வண்ணம் இருந்தார் என்றும், கட்டடம் அழகாக இருப்பதாக பெருமைப்பட்டார் என்றும் அம்மா சொன்னார்கள்.

தன்னுடன் இருப்பவர்களின் திருமணத்தை பருவத்தில் முடித்து வைப்பதில் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம். ஈரோடு சுப்பையா, தியாகராஜன் ஆகியோரின் திருமணங்களை அம்மாதான் நடத்தினார்கள். என்னுடைய திருமணத்தையும் முடிக்கவேண்டுமென்ற அவா எனக்கு இருந்தது. பெண்ணை அம்மா - அய்யா இருவருமே நிச்சயித்தனர். இருவருக்கும் பெண்ணை பிடித்துவிட்டது. பெண் தாலிகட்ட வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார். அப்பெண்ணே வேண்டாமென்று ஒதுங்கிவிட்டேன். இழுபறியில் ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் காலை அம்மாவை காண சென்றபோது நீ ஆணழகன் என்ற நினைப்பா உனக்கு' என்று போட்ட சத்தத்தில் அதிர்ந்துவிட்டேன். அய்யாவிடம் இழுத்துச்சென்று இவன் வேண்டுமென்றே திருமணத்தை தள்ளிப்போடுகிறான்? என்றார். அய்யா என்னை அருகில் அழைத்து திருமணத்தை ஏன் முடிக்கவில்லை என்றபோது பெண் தாலி கட்டவேண்டு மென்று பிடிவாதமாய் இருப்பதாகக் கூறினேன். உன் உருவம் பதித்த டாலர் ஒன்றை தன் கழுத்திலுள்ள செயினில் அணிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள் என்ற அறிவு ரையை நானும், மணப் பெண்ணும் ஏற்றுக்கொண்டோம் - தாலி தவிர்க்கப்பட்டது.

நான் என்றும் பெருமையுடன் மதித்துப்போற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தில் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ராகுகாலத்தில் அய்யா தலைமையில் நண்பர்கள்  முன்னிலையில் திருமணம் நடந்தது.

கல்யாண விருந்து ஆசிரியருடையது. அம்மா அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று என் திருமண பதிவேட்டில் சாட்சிக் கையெழுத்திட்டார்.

அய்யா இறந்து அடக்கம் செய்யும் வரை மவுனமாக இருந்த அம்மா அடக்கம் செய்த அடுத்த நிமிடம் கட்டிலில் படுத்து கதறிய காட்சி அங்குள்ள அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கியது. காரணம் தான் இறந்துவிட்டால் அழாமல் தைரியப் பெண்ணாக இருந்து காட்டவேண்டு மென்ற' அய்யாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தான் வெளியே தைரியமாய் காணப்பட்டாலும் அய்யா அவர்களைப் பற்றி பேசும்போதெல்லாம் அம்மாவின் கண்களில் கண்ணீர் கொட்டும்.

ஒரு முறை வேனில் சுமார் 11 மணியளவில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் அம்மா திருவள்ளூர் வந்தார்கள். நான் தெருவிற்கு ஓடி அவர்களை வரவேற்றபோது என் மனைவியிடம் உன் கணவன் திருடன். என்னிடம் பாசமும் பற்றும் இருப்பதைப் போன்று நடிக்கிறான். நான் அவனிடம் பேச விரும்பவில்லை' என்று பொறிந்து தள்ளினார்கள். கோபம் சற்று குறைந்தபின் அவரை அணுகி நான் தங்களிடம் மரியாதைக் குறைவாக இதுவரை நடந்து கொண்டதே இல்லை. உங்களை என் தாயாருக்கு சமமாக நினைத்து பழகியுள்ளேன்' என்று கூறியவுடன் கோபம் தணிந்த அம்மா அய்யா சிக்கனத்தை கடைபிடித்து பணமாக வைத்துச் சென்று விட்டார். எனக்கு இருமுறை மாரடைப்பு வந்து அவதியுற்றேன். அப்பணத்தை நிரந்தர வருவாய் வரும்படி ஒரு கட்டடம் கட்ட வேண்டும்' என்றார்கள்.

எல்.அய்.சி.கட்டடம் தீப்பற்றி எரிந்த தருணம். பலமாடி கட்டடங்கள் கட்ட அனுமதி நிறுத்தப்பட்ட நேரம். இரண்டு வாரங்களில் கட்டட வேலையை துவங்குவதாக உறுதி அளித்தால்தான் சாப்பிடுவேன் என்று கட்டிலில் படுத்துக் கொண்டார்கள். உடனே ஒத்துக்கொண்டேன். எனக்கு மிக வேண்டிய நண்பர் அட்சுத்' என்ற ஆர்கிடெக்ட் கட்டட பிளானை வரைந்து கொடுத்தார். என்னுடன் படித்த கார்ப்பரேசன் என்ஜினியர் அஸ்ஞானி' எனும் நண்பன் றிறீணீஸீ ஷிணீஸீநீவீஷீஸீ வாங்க பெரிதும் உதவினான். ஆசிரியர் அவர்களின் பெருமுயற்சியாலும் கலைஞர் உதவியாலும் கட்டட பிளான் அனுமதி கிடைக்கப்பெற்றது.

கட்டடம் கட்ட வேண்டிய இடத்தின் முன்பு ஒரு குட்டை இருந்தது தெரிய வந்தது.  Pile Foundation  தான் ஆறு மாடி கட்டடத்தை தாங்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. Pile Foundation போடும் Rig கள் சென்னையில் கோரமண்டல என்ஜினியரிங் கம்பெனி என்ற கட்டட கான்ட்ராக்டர்கள் வசம் தான் இருந்தன..

அக்கம்பெனியின் வயது முதிர்ந்த தலைமை என்ஜினியர் அய்யாவிடம் மிகுந்த மரியாதை வைத்திருந் தவர். நெல்லூருக்கு செல்லவிருந்த மூன்று ரிக்குகளில் ஒன்றை திடலுக்கு கொடுத்து உதவினார்.

- தொடரும்
- விடுதலை நாளேடு, 19.10.18

பொறியாளர் என்.எஸ்.ஏகாம்பரம்

எமர்ஜென்சியும் அம்மாவும்

கட்டடவேலை முடியும் தருவாயில் இந்திரா காந்தி அம்மையாரால் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது. திடலில் முக்கியஸ்தர்களாக இருந்த ஆசிரியர் அவர்களையும், மேனேஜர் சம்பந்தம் அவர்களையும் சிறையில் அடைத்து விட்டனர். எமர்ஜென்சி நேரத்தில்தான் அய்யா தலைமை வகித்த நடத்திய பேரியக்கத்தின் பொருத்தமான தலைவி என்பதை அம்மா பலமுறை நிரூபித்தார்கள்.

எமர்ஜென்சி கொண்டு வந்தவுடன் ராதாமன்றத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என்று தடை விதித்தார்கள். நாடுமுழுவதும் திராவிடர் கழக தொண்டர் களில் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எதிரில் கட்டப்பட்ட பெரியார் பில்டிங்கை யாரும் விலைக்கு வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்று நோட்டீஸ் ஒட்டி தண்டோரா போட்டனர். இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் பார்ப்பன ஊழியன் ஒருவன் இது கறுப்புப் பணத்தில் கட்டப்படும் கட்டடமா, இன்னும் எவ்வளவு கருப்புப்பணம் வைத்துள்ளீர் என்று நக்கலாக அம்மாவை கேட்டபோது, வந்தவருடன் காரசார விவாதம் ஏற்பட்டது. விவாதம் உச்சத்தை அடைந்தபோது வந்த ஊழியனை அடிக்க கை ஓங்கி விட்டேன். அம்மா அவர்கள் என்னை தடுத்ததோடு அய்யாவுடன் இத்தனை ஆண்டுகள் பழகியும் உனக்கு புத்தி வரவில்லை என்று கண்டித்ததுடன் வந்த இன்கம்டாக்ஸ் ஊழியனிடம் என் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

மாலையில்  திருவள்ளூருக்கு சென்று விடுவேன். அடுத்த நாள் காலை திடலுக்கு வருவதற்குள் திடலின் வரும்படியை பெருக்கவும், தொண்டர்களை ஜெயிலில் இருந்து விடுதலை பெறவும் வழி உண்டா என்று யோசித்து வைப்பார்கள்.

சென்னை கவர்னர் சுகாதியாவை சந்தித்து முறையிடலாம் என்ற அம்மாவின் யோசனை சரி என்று பட்டது. கவர்னர் தன்னை கவர்னர் மாளிகையில் சந்திக்க நேரம் ஒதுக்கினார். கவர்னர் Reception Hall-இல் அமர்ந்திருந்தார். உள்ளே நுழையும் போதே அம்மா 'வணக்கம்' என்று கவர்னரிடம் சொல்ல, கவர்னரும் நமஸ்தே Please sit down 
என்றார். நான் அம்மாவின் P.A. என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். You also can take a seat என்றார்.

"What can I do for you?" என்று கவர்னர் வினவியபோது "I have came here for a delegation. ours is not a political party - It is purely a social organization" என்று அம்மா பேசிக் கொண்டிருந்தபோது, கவர்னரின் உதவியாளர் நீங்கள் தமிழிலேயே பேசுங்கள் நான் கவர்னரிடம் மொழி பெயர்த்து சொல்லுகிறேன் என்றார். அம்மா அவர்கள் எங்கள் வேலையே மக்களின் மூடப்பழக்கத்தை ஒழித்து, சுயமரியாதையுடன் வாழ வைக்க வேண்டும் என்பது தான். நாங்கள் எப்போதும் அரசியலில் ஈடுபடுவதை வெறுப்ப வர்கள் என்று விளக்கியபோது கவர்னர் நீங்கள் ANTI BRAHMIN கொள்கையை விட்டு விட்டேன் என்று அறிக்கை விடுங்கள் - என்னால் ஆனதை செய்கிறேன்' என்றார். அதுவரை அமைதியாக இருந்த அம்மா அது எங்கள் லட்சியம் - அதை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது தாங்கள் என்னை சந்திக்க அனுமதி தந்ததற்கு மீண்டும் நன்றி' என்று கூறிவிட்டு விறுவிறு என்று வெளியேறினார்கள்.

மற்றொரு நாள் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தை பார்த்து முறையிடலாமென்று அம்மா கூறினார்கள். அவரை சந்திக்க அவரின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்குச் சென் றோம். பக்தவத்சலத்துக்கு கண் பார்வை இல்லாத நேரம். நான் திராவிடர் கழகத் தலைவர் மணியம்மை உங்களை சந்திக்க வந்துள்ளார் என்றேன். அம்மா அவர்கள் பக்தவத் சலத்திடம் நாங்கள் அரசியலில் ஈடுபடாதவர்கள் என்று தங்களுக்கே தெரியும். நேர்மையான எங்கள் தொண்டர்கள் நிறைய பேர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையிலேயே மிகவும் மலிவான வாடகைப் பெற்று மக்களுக்கு கொடுத்துவந்த மன்றத்துக்கு தடைவிதித்து விட்டார்கள். தாங்கள் அருள் கூர்ந்து ஆவண செய்ய வேண்டுகிறேன் என்றார். பக்தவத்சலம் அன்றைய Government Adviser ஆர்.வி.சுப்பிரமணியத்தை சந்திக்க சொன்னதோடு எங்கள் எதிரிலேயே திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையை உங்களை சந்திக்க அனுப்பியுள்ளேன். ஆவன செய்யுங்கள்' என்று போன் செய்தார்.

தலைமை அலுவலகத்துக்கு அங்கிருந்தே சென்றோம். அம்மா வந்ததை அறிந்த Adviser, தன்னோடு விவாதத்திலிருந்த இருவரை வெளியே அனுப்பிவிட்டு எங்களை உள்ளே அழைத்தார். அம்மா 'வணக்கம்' என்று சொல்லும் போதே நமஸ்காரம் என்று கை குவித்தார். அம்மா நாற் காலியில் அமர்ந்த பின்புதான் தானும் நாற்காலியில் உட் காருவேன் என்றார். என்னை யார் என்று வினவியபோது தன்னுடைய P.A. என்று அம்மா அறிமுகப்படுத்தினார்கள். எமர்ஜென்சியால் சமுதாய தொண்டினை மட்டும் மேற் கொண்ட தன் தொண்டர்கள் சிறையில் படும் கொடுமை களை விளக்கிவிட்டு சென்னையிலேயே நடுத்தர, ஏழை மக்களுக்காக குறைந்த வாடகை வாங்கும் மன்றத்தில் எந்த Function-னும் நடத்தக்கூடாது என்று தடை விதித்து விட்டார்கள். எங்கள் தொண்டர்களை விடுதலை செய்ய வும், மன்றம் மீண்டும் இயங்க தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றார்கள். தங்களை சந்திக்க அனுமதி வழங்கியதற்கு நன்றி என்றும் குறிப்பிட்டார். அம்மா அவர்கள் நாற்காலியில் அமர்ந்த பின்னரே அட்வைசரும் நாற்காலியில் அமர்ந்தார். உங்கள் கட்சியின் மேல் எடுத்த நடவடிக்கைகள் மேலிடத்து உத்தரவு. மன்ற விஷயத்தை உடனே கவனிக்கும்படி சென்னை காவல்துறை ஆணை யருக்கு உத்தரவிடுகிறேன் என்று சொல்லி அம்மாவை வாசல்வரை வந்து அனுப்பி வைத்தார்.

அப்போதைய காவல்துறை ஆணையர் செந்தாமரை அவரை அறையில் சந்தித்தபோது வாங்கம்மா பெரிய இடத்துக்கே சென்று விட்டீர்கள் போலும்' என்று சிறிதும் மரியாதை இன்றி பேசியதோடு அம்மா அவர்களை உட்காரச் சொல்லவுமில்லை. அருகிலிருந்த நாற்காலி ஒன்றை இழுத்து அம்மாவை உட்கார வைத்தேன். 'நீ யார்?' என்று என்னை காவல்துறை ஆணையர் கேட்க நான் அம்மாவின் P.A. என்று சற்று உரக்கவே பதிலளித்தேன். அம்மா அவர்கள் மன்ற விஷயத்தை மட்டும் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டார்கள். அன்று மாலை ஆணையர் அனுப்பியதாக இரு காவல்துறையினர் திடலுக்கு வந்தனர். நானும் உடன் சென்றேன். தண்ணீர்குழாயை திறந்தவுடன் புஸ் என்று காற்று வந்தபின் நீர் கொட்டியது. வந்தவர்கள் There is no running water in the water taps என்று எழுதியதுடன் மன்றம் மூன்று பக்கங்களில் சுவர் இன்றி திறந்த வெளியாக உள்ளது. கலவரம் ஏற்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வசதி இல்லை என்று எழுதிச் சென்றார்கள். காவல்துறை ஆணையர் அம்மாவிடம் நடந்து கொண்ட முறை என்னை மிகவும் உறுத்தியது. அம்மா அவர்கள் பொதுவாழ்வில் இது சகஜம் - அய்யாவுடன் பழகிய உனக்கு இந்தளவு பக்குவம் கூட இல்லை என்பது ஆச்சரியமாயிருக்கிறது என்றார்கள். என்னுடைய ஆதங்கத்தை அன்று மாலையே க.ராஜாராம் வீட்டுக்குச் சென்று காவல்துறை ஆணையர் அம்மாவை மிகவும் அவமதித்துவிட்டார் என்றேன். ராஜாராம் உடனே காவல்துறை ஆணையரை போனில் அழைத்து நீங்கள் மணி அம்மாவை நடத்தியவிதம் வெறுக்கத்தக்கது. உங்களுக்கு ஒரு கேடு நேர்ந்தால் முன்னின்று போராடுவது அவர் தலைமையில் உள்ள திராவிடர் கழகம் தான் என்று சொல்லி போனை வைத்து விட்டார்.  ராஜாராம், அய்யாவின் நாத்திக கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றாலும் அய்யாவிடமும் அம்மா விடமும் அளவற்ற பற்றையும் மரியாதையையும் அவர் இறக்கும்வரை இம்மி அளவும் குறையாமல் காத்தவர்.

இளகிய மனம்

அம்மா அவர்களுக்கு மிகவும் இளகிய மனம். சட்டென்று கோபம் வந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் சாந்தமடைந்து விடுவார்கள். நாகம்மையார் அனாதை விடுதியில் இருந்த சில குழந்தைகளிடம் அதிகம் அன்பு காட்டுவார். அக்குழந்தைகளை கொஞ்சுவார். என் நண்பர் சிண்டிகேட் பேங்க் மேனேஜரிடம் சொல்லி ஒரு LOCKER வாங்கிக் கொடுக்கும்படி பணித்தார். அதில் ஏழை குழந்தை கள் 5 அல்லது 6 பேர்களுக்கு தங்கசெயின், மோதிரம், வளையல், கம்மல் போன்ற நகைகளை தனித்தனி காகிதத் தில் வைத்து மடித்து அக்குழந்தைகளின் பெயர்களை அந்த பொட்டலங்கள் மீது தன் கைப்பட எழுதினார்கள். தன் மறைவுக்குப்பின் இந்த நகைகளை அந்தக் குழந்தைகளிடம் ஒப்படைத்துவிடும்படி பணித்தார்கள். அம்மாவின் மறை வுக்குப்பின் அந்த LOCKERஇல் இருந்த நகைகளை ஆசிரி யரிடம் ஒப்படைத்தேன்.

சிக்கனத்திலும் சிக்கனம்

பெரியார் கட்டடம் கட்டும்போது அம்மாவிடம் கட்டடத்தை சற்று செலவு செய்து அழகு படுத்தலாம் என்றேன். நான் ஒரு முறை திருச்சியில் ஒரு கட்டடத்தை அழகுபட கட்டி முடித்துவிட்டேன் என்று சென்னையிலிருந்த அய்யாவுக்கு கடிதம் எழுதினேன். அதை பாராட்டாமல் அழகு என்பது பணவிரயம் என்று பதில் கடிதம் எழுதினார். எந்த அழகும் வேண்டாம் - கட்டடத்தை சீக்கிரம் முடித்து வாடகை வருவதைப்பார்' என்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்கள். அய்யாவின் உருவம் Kent Tiles-களால் அமைத்து அக்கட்டடத்தில் பதிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கண்ணம்மை பில்டிங் என்ற கட்டடத்தில் காந்தியார் கடியை ஊன்றி நடப்பது போல் ரிமீஸீ ஜிவீறீமீ-களால் ஆன உருவம் இருப்பதை அம்மாவிடம் காண்பித்து, அய்யாவின் உருவத்தை அமைத்திட மன்றாடி அனுமதி பெற்றேன். எனது நண்பர் போட்டோகிராபர் குருசாமி மிகவும் உதவினார். வானகரத்தில உள்ள Kent Tiles Factory-இன் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி, அய்யாவிடம் அளவற்ற மதிப்பு வைத்திருந்தவர். அய்யாவின் படத்தை GRAPH பேப்பரில் LINE SKETCHஆக வரைந்து கொண்டு வரும்படி பணித்தார். பொன்னி' இதழ் ஆண்டு மலரில் அய்யாவின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது நினைவுக்கு வந்தது. டாக்டர் பொன்னியின் கணவர் என்னுடைய நெருங்கிய நண்பர். டாக்டர் பொன்னி வீட்டு அட்டத்திலிருந்த மலரை தேடி எடுத்தோம். ஒரு சதுர அங்குலத்தில் 100 கட்டடங்கள் உள்ள Tile பேப்பரில் அய்யாவின் படத்தை குருசாமி வரைந்து கொடுத்தார். கட்டம் ஒன்றுக்கு ஒரு ஜிவீறீமீ என்று பதித்தோம். அய்யாவின் உருவம் வந்தது எனக்கு திருப்தி அளித்தது. அக்கம்பெனியில் வேலை செய்யும் Senior Tile Layer திடலுக்கு வந்து இரண்டு நாட்களில் வேலையை முடித்துக் கொடுத்தார். உருவம் அழகாக அமைந்தாலும் அய்யா அவர்கள் நின்றவாறே தூங்குவதுபோல் இருந்தது. படத்தின் கண்களின் ஓரம் இரண்டு ஜிவீறீமீ-களை எடுத்து விட்டு வேறு நிறத்திலிருந்த இரண்டு ஜிவீறீமீ-களை பதித்து அழகாக்கினார் நண்பர் குருசாமி. அம்மாவிடம் அவரை அழைத்துச்சென்று அய்யாவுக்கு உயிர் கொடுத்தவர் என்று கிண்டலடித்தேன். அன்று முதல் அவரை அய்யாவுக்கு உயிர் கொடுத்த புண்ணியவான்' என்றே அழைப்பேன்.

மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி சென்னை வந்தபோது ராஜாராம், அம்மாவை சந்திக்க ஏற்பாடு செய்தார். அம்மாவுடன் சம்பந்தமும் நானும் அவரை சந்திக்க சென்றிருந்தோம். ராஜாராம் அம்மாவை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தினார். அம்மா ஆங்கிலத் தில் உரையை ஆரம்பித்த உடனே அமைச்சர் 'நான் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணாவுடன் படித்தவன். எனக்கு நன்றாக தமிழ்பேச வரும்' என்றார். கழகத் தொண் டர்கள் சிறையில் படும் இன்னல்களை குறிப்பிட்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு அம்மா வேண்டிக் கொண்டார். அப்போது அமைச்சர் 'இந்திரா காந்தி மேடம் ஒரு ஙிக்ஷீணீலீனீவீஸீ. நீங்கள் Anti Brahmin கொள் கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன் என்று அறிக்கை ஒன்றை கொடுங்கள். மேடத்திடம் சொல்லி ஒரு மாதத்துக்குள் உங்கள் தொண்டர்கள் அனைவரையும் விடுதலை செய்கிறேன்' என்று சொன்ன மறுநிமிடமே நான் உள்பட எங்கள் தொண்டர்கள் அவ்வளவு பேரும் இறந் தாலும் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை விடமாட்டேன்' என்று சொல்லி  நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார்கள். பிரமானந்த ரெட்டி அம்மாவை சமாதானப்படுத்தி என்னால் 'இயன்றதை செய்கிறேன்' என்று கூறி வாசல் வரை வந்து அனுப்பி வைத்தார்.

கட்டடம் முடிந்தபோது எமர்ஜென்சி அமலில் இருந்தது. எந்த அரசாங்க அதிகாரியும் வாடகைக்கு வர பயப்பட்டனர். ரித்தர்டன் ரோடில் வாடகைக்கு இருந்த எம்.எம்.டி.ஏ. அலுவலகத்தை காலி செய்யும்படி வீட்டுக்கு பொது நோட்டீசு கொடுத்துவிட்டதாக அறிந்து எம்.எம்.டி.ஏ. மேனேஜிங் டைரக்டரை சந்தித்தேன். அவர் கோவாவி லிருந்து வந்த அய்.ஏ.எஸ். அதிகாரி, ஆறு மாடி கட்டடம், அடுத்த ரண்டால்ஸ் ரோடில் புதிதாக கட்டப்பட்டு வாட கைக்கு விட தயாராக இருப்பதாகக் கூறினேன். பகல் 2 மணிக்கு கட்டடத்தை காண வருவதாகக் கூறினார்.

அம்மா பயந்ததை முதன் முறையாக, அதுவும் ஒரே முறைதான் நான் கண்டேன். அய்யா சேர்த்து வைத்த பணத்தை கட்டடத்தில் கொட்டி தீர்த்துவிட்டார் என்ற அவப்பெயர் தனக்கு வந்து விடுமோ என்ற அச்சம். என்ன வாடகை சொல்லலாமென்று கேட்டபோது, சதுர அடிக்கு இரண்டரை ரூபாய் என்று முடித்துவிடு. நடுவில் அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று காரியத்தை கெடுத்துவிடாதே என்றார்கள். சிறையிலிருந்து விடுதலை பெற்ற என் அண்ணன் விடுதலை மேனேஜர் வாடகையை நான் பேசி முடிக்கிறேன். நீ ஒதுங்கிக் கொள்' என்றார்.

எம்.டி. மதியம் சரியாக 2 மணிக்கு திடலுக்கு வந்து கட்டடம் முழுவதையும் சுற்றிப்பார்த்துவிட்டு வாடகையைக் கேட்டார். மேனேஜர் சம்பந்தம் சதுர அடி ஒன்றுக்கு மாதவாடகை ரூபாய் அய்ந்தரை என்றார். Lift operator-அய்யும் கொடுக்கிறேன் என்றபோது நான் எம்.டி., கவர்ன்மெண்ட்டுக்கு பேரம் பேசி 50 பைசா வாடகையை குறைத்து முடித்தேன் என்று சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார். Lift operator-அய் தங்கள் செலவி லேயே அமர்த்திக்கொள்வதாகவும் கூறிவிட்டு அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கட்டடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தார். அவரை அம்மாவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினோம். அம்மா அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அவர்கள் அந்த அளவு மகிழ்ச்சியுற்றதை நான் அதுவரை கண்ட தில்லை.

குழந்தைக்குணம்

நான் அம்மாவை அணுகி 40 ரூபாய் கொடுக்கும்படி கேட்டேன் என்னய்யா லஞ்சம் கேட்கிறாயா கொடுக்க மாட்டேன் என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்கள். இவ்வளவு பெரிய Dealing-அய் முடித்ததற்கு அய்யா இருந்திருந்தால் கண்டிப்பாக ஏதாவது கொடுத்திருப்பார் என்று வாதிட்டபோது எதற்கு பணம் என்று கேட்டார்கள். ஆளுக்கு ஒரு Ice Cream வாங்கி சாப்பிட என்றபோது, ரூபாய் 50அய் கொடுத்து விட்டு எனக்கும் ஒரு Ice Cream வாங்கித்தர வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். அம்மாவுக்கு சர்க்கரை வியாதி. தினமும் இன்சுலின் போட்டுக் கொள்ளுவார். இன்னொரு இன்சுலின் போட்டுக் கொண்டால் சரியாய்விடும் என்றார்கள்.

அம்மா அவர்களுக்கு மிகவும் பிடித்தது சீத்தாப்பழம். ஒருமுறை என் வீட்டுக்கு வாங்கிய பழங்களில் சுமார் அய்ந்து பழங்களை எடுத்துக் கொண்டார்கள். சர்க்கரை வியாதிக்கு ஆகாத பழம் என்று எவ்வளவு மன்றாடியும், எடுத்துக் கொண்ட பழங்களை திருப்பித்தர மறுத்து விட்டார்கள்.

நேர்மையின் சின்னம்

ஒரு நாள் என்னை அழைத்து தன் தங்கை மகள் சுனிதி சில ஆண்டுகளாக தன்னை கவனித்துக் கொள்கிறாள். என் பெயரில் உள்ள வீட்டுவாடகைப் பணத்தில் ரூபாய் இருபதாயிரத்தை அவளுக்கு அளிக்க யோசிக்கிறேன். அய்யா சார்பில் ஈ.வெ.கி.சம்பத்தின் மகளுக்கு அய்யாவின் பணத்திலிருந்து இருபதாயிரம் ரூபாயை அளிக்க உள்ளேன் என்றார்கள். நான் மிகவும் சாமன்யன். உங்கள் சொத்து - உங்களுக்கு எதுசரி என்று தோன்றுகிறதோ அதை செய் யுங்கள்' என்றேன். தாடையில் அடித்தால் பல் அத்தனையும் விழுந்து விடும். நான் சொல்வதைக் கேட்கக்கூட உனக்கு பொறுமை இல்லையா' என்று சத்தமிட்டார்கள்.

ஊரை அடித்து உலையில் போடும் தலைவர்கள் மலிந்து காணப்படும் இந்நாளில் இத்தகைய நேர்மையான பெண்மணி இருந்ததை என்னால் எண்ணிப்பார்க்கக்கூட இயலவில்லை.

ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு பொது மருத்துவ மனையில் (G.H)இல் அனுமதிக்கப்பட்டிருந்தார். என்னை அங்கு வரும்படி பலமுறை சொல்லி அனுப்பினார்கள். இரண்டு நாட்களுக்கு பின் ஆஸ்பிடலுக்கு சென்றேன். அங்குள்ள நர்ஸ் என்னை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார். சுமார் ஒன்றறை மணிநேரம் காத்திருந்தேன். என் பக்கம் திரும்பிய அம்மா உள்ளே வரும்படி கைய சைத்தார்கள். 5 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று சொல்லி நர்ஸ் உள்ளே செல்ல அனுமதி அளித்தார். அம்மா அவர்கள் மிகவும் தளர்ந்து காணப்பட்டார்கள். கை விரல்கள் வலுவிழந்து காணப்பட்டன. என் கைகளைப்பற்றி இனிநான் அதிக நாட்கள் உயிர் வாழமாட்டேன் என்று சொன்னபோது என்னை அறியாமல் கதறி அழுதுவிட்டேன். நர்ஸ் சட்டென்று என்னை வெளியே தள்ளிவிட்டு, மேடத்தை நீங்களே கொன்று விடுவீர்கள் என்று சத்த மிட்டார். மறுபடியும் அம்மா அவர்கள் என்னை அழைத்து தான் எழுதிய Will (உயில்) ஒன்றை படிக்கும்படி கொடுத் தார்கள். திடலுக்கு வந்த நான் அந்த  Will இல் இருந்த செய்தியை ஆசிரியர் அவர்களுக்கு என் அண்ணன் மூலம் தெரியப்படுத்தினேன். அந்தக்கடிதத்தின் சாரம்சம் நான், என் அண்ணன் சம்பந்தம், மதிப்பிற்குரிய ஆசிரியர் ஆகிய மூன்று பேர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியமாகும்.

மென்மை குணத்தில் தன்னோடு இருப்பவர்களின் நலத்தில் கொண்ட அக்கறையில் தொண்டர்களை வழி நடத்துவதில் பயம் என்பதையே அறியாது உடன் இருப்ப வர்களுக்கு தைரியமூட்டுதலில் கொள்கை கோட்பாட்டின் உறுதியில், போராட்டங்கள் அத்தனையிலும் வன்முறை சிறிதளவும் நுழைய விடாது தடுத்ததில் எல்லாவற்றுக்கும் மேலாக நாணயத்தை கடைப்பிடித்தலில் குன்றெனத் திகழ்ந்தவர் மணியம்மை.

- முற்றும் -

- விடுதலை நாளேடு, 20.10.18

வியாழன், 18 அக்டோபர், 2018

ராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு

மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம்




ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பில் ஆட்சி புரியும் முதல்வராக மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்ற வசுந்தரா ராஜே பொறுப்பில் உள்ளார். தொலைக்காட்சி பேட்டியில் மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசமைக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைக் கப்பட்டுள் மநு சிலைமீது  8.10.2018 அன்று கருப்பு நிற பெயிண்டை வீசி தங்களின் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்.

பெண்களின் ஆவேசம்!


அவுரங்காபாத் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் களான ஷீலாபாய், காந்தா ரமேஷ் அயாரி ஆகிய இருவரும் மநு தத்துவத்தை எதிர்த்தே கருப்பு மையை மநு வின் சிலைமீது தெளித்ததாகக் கூறியுள்ளனர். மநுஸ்மிருதியுடன் கூடிய மநுவின் சிலையை அகற்றவேண்டும் என்று உரத்த குரலில் முழக்கமிட்டனர்.

நீதிமன்றத்தில் மநுவின் சிலைமீது கருப்பு மை பூசியதை கண்டித்து வழக் குரைஞர்கள் சிலர் நீதிமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள்மீது வழக்கு - கைது


ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவின் சிலைமீது கருப்பு மை பூசிய பெண்கள்மீது பொதுச்சொத்துக்கு கேடு விளைவித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டு அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து ஷீலாபாய், காந்தா ரமேஷ் அயாரி இருவரையும் கைது செய்தது.

'மநு' சிலை அகற்றிட நீதிமன்ற உத்தரவு


ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத் தில் மநுவின் சிலை 28 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து, நீதிமன்ற வளாகப் பகுதியில் அமைக்கப்பட்ட மநுவின் சிலையை அகற்றிட நீதி மன்றம் உத்தரவிட்டது. விசுவ இந்து பரிஷத் தலைவர் ஆச் சார்யா தர்மேந்திரா நீதிமன்ற ஆணைக்கு இடைக்காலத் தடையைப் பெற்றார்.

வழக்குரைஞர் பஹ்லத் சர்மா


அதன்பிறகு, ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று சிலை நிறுவப்பட்டதாக வழக்குரைஞர் பஹ்லத் சர்மா கூறினார். அவர் கூறியதாவது: மநு சிலை அமைக்கப்பட்ட போது சமுதாயத்தின் சில சக்தியால் எதிர்ப்பு ஏற்பட்டது. மநு இந்துக்களுக்கு முக்கி யத்துவம் மிக்கவராக கருதப்படுகிறார். மனித குலத்தின் தந்தையாகவும் கருதப் படுகிறார். உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் நுழைந்து இதுபோன்று செயல்படுவது ஏற்கமுடியாதது. இனியும் அதுபோல் நடைபெறாமல் முடிவுக் கட்ட வேண்டும். முக்கியத்துவம் மிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக் குரியதாகிவிட்டது என்றார்.

பரத் மெக்வான்ஷி


தாழ்த்தப்பட்டவர்களின் உரிமை களுக்கான செயற்பாட்டாளர் பரத் மெக் வான்ஷி கூறியதாவது:

மநுவின் கொள்கை பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிரானது. வேத காலத்திலிருந்து இன்றுவரை சமு தாயத்தில் சமத்துவம் இல்லை. ஆகவே, அவற்றை நீக்குவதற்கான அவசரமான  நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த போராட்டத்துக்கு ஆதரவாக மிகப்பெரிய அளவு மக்கள் இயக்கம் திரட்டப்பட வேண்டும் என்றார்.

-  விடுதலை நாளேடு, 14.10.18