வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே          அவர் பெரியாரா?

நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே


         அவர் பெரியாரா?


ஆசிரியர் : ப.திருமாவேலன்


வெளியீடு : நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,


                   திருவல்லிக்கேணி, சென்னனை - 600005.


 


ஜாக்கெட்டும் சாதியும்

பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலும், அவரைத் தலித் விரோதியாய்க் காட்டுவதிலும் அலாதியான இன்பம் தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொது விதியாய் சொல்லத்தக்க வகையில்தான் நிலைமை இருக்கிறது. இதைத் தொடங்கி வைத்த புண்ணியவாளன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தொட்டுத் தொடர்பவர்கள் சிலர். அவர்களுக்கு பெரியாரை விமர்சிப்பது பொழுதுபோக்காகவும் ஆகிவிட்டது. இவர்கள் திரும்பத்திரும்ப ஒரே குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லப்பட்டாலும் அதே குற்றச்சாட்டையே மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள் புதிதாகக் கண்டுபிடித்தது போல.

1. பெரியார் -_ பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவரே தவிர தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் அல்ல.

2. பெரியார் _ தலித் மக்களுக்கான எந்தப் போராட்டத்தையும் நடத்தியவர் அல்ல.

3.            பெரியார் _ இறுதிவரை பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாகத்தான் இருந்தார்.

4.            பெரியார் _ சாதி ஒழிப்பு வீரரே அல்ல.

5.            பெரியார் _ ஒரு அரசியல்வாதியே.

6.            பெரியார் _ பல்வேறு காலகட்டங்களில் தலித் விரோதியாக இருந்தார்.

7.            பெரியார் _ தமிழ்நாட்டு தலித் தலைவர்களை மதிக்கவில்லை.

8.            பெரியார் _ ஆளும் அரசாங்கத்தை எப்போதும் ஆதரித்தார்.

9.            பெரியார் _ ஆதிக்க சாதிகளை எந்தக் காலத்திலும் எதிர்த்தது இல்லை.

10.          பெரியார் _ பார்ப்பனர்களை எதிரியாகக் காட்டி மற்ற இடைநிலை சாதிகளின் சாதி வெறியைக் கண்டிக்கத் தவறினார்.

_ இவைதிரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொதுவான குற்றச் சாட்டுகள்.

1.            பெரியார் _ தலித் பெண்கள் ரவிக்கை அணிந்ததைக் கிண்டல் செய்தார்.

2.            பெரியார் _ அன்றைய காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்ததால், முதுகுளத்தூர் கலவரத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார்.

3.            பெரியார் _ கீழ்வெண்மணி கொடுமையைக் கண்டிக்கவில்லை.

4.            பெரியார் _ தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சையாகவே பேசினார்.

5.            பெரியார் _ பார்ப்பனரின் இடத்தில் பிற்படுத்தப்பட்டோரை கொண்டுவந்து நிறுத்தவே பாடுபட்டார்.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள், குறிப்பாகச் சொல்லப்படும். இவை அனைத்துமே அபத்தமானவை. பெரியாரை இவர்கள் ஒழுங்காகப் படிக்காததன் விளைவே இது.

பெரியார் எப்போதும் ஒடுக்கப்பட்டோர் குரலில்தான் பேசினார்.

மாடு தின்பது முதலியவைகளால் எப்படித் தீண்டாதவனாய் விடுவான்? அய்ரோப்பியர், முகமதியர் முதலானோர் தின்பதில்லையா? அவர்களை நாம் தீண்டாதோர் என்று சொல்லக்கூடுமா? அப்படியே சொல்வதானாலும் மாடு தின்பது என்ன ஆடு கோழி என்பதைவிட அவ்வளவு பாவமா? ஆடு, கோழி, பன்றி தின்பவர்களை நாம் தீண்டாதார் என்று நினைப்பதில்லை. கோழியும், பன்றியும் தின்னாத மலத்தையா மாடு தின்கின்றது?

செத்த மாடு தின்பது, உயிருள்ள ஜந்துவை உயிருடன் வதைத்துக் கொலை செய்து சாப்பிடுவதைவிட உயிரற்ற செத்துப்போன பிராணியின் மாமிசத்தை மண்ணில் புதைப்பதை வயிற்றுக்கில்லாத கொடுமையால் சாப்பிடுவது எப்படி அதிக பாவம் ஆகும்? மாடு அறுப்பது பாவமென்றால் ஆடு, கோழி அறுப்பதும் பாவம்தான். மனிதப் பிணத்தையும் கூட வைத்திய சாலைகளில் அறுக்கிறார்கள். அவரை நாம் தீண்டாதார் என்று சொல்லுகிறோமா?

கள் இறக்குவது குற்றம் என்றும் அது பாவமென்றும் அதனால் அவர்களைத் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று சொல்வதும் எவ்வளவு முட்டாள்தனமாகும். அந்தத் கள்ளைக் குடிப்பவனும் அதற்காக மரம் விடுபவனும் அந்த வியாபாரம் செய்பவனும் அதைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறவனும் தொடக்கூடியவன் தெருவில் நடக்கக் கூடியவன் என்றால், அதை ஜீவனத்தின் காரணமாய் இறக்குவது மாத்திரம் எப்படிக் குற்றமாகும்? உற்பத்தி செய்வது குற்றமென்றால் சாராயம், கஞ்சா, அபின், பிராந்தி இவைகளை உற்பத்தி செய்கிறவர்கள் எப்படித் தொடக்கூடியவர் ஆவார்கள்? இதில் பணம் சம்பாதிக்கும் நமது அரசாங்கத்தைஇன்னும் சம்பாதிக்க விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த உத்தியோகத்திற்கு நாம் விட்டுக் கொண்டிருக்கிறோம்.அந்த உத்தியோகத்திற்கு நாம் தொங்குகிறோம். இந்தப் பணத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கல்வியை நாம் கற்கிறோம். இவ்வளவு செய்பவர்கள் யோக்கியர்கள். ஆனால் மேல் சொன்னவர்கள் மாத்திரம் தீண்டவும் பார்க்கவும் தகாதவர்கள் என்றால் இது என்ன கொடுமை? இந்த ஜனங்களுக்கு சுயராஜ்யம் எப்படி வரும்? கடவுள் ஒருவர் இருப்பது உண்மையானால் இப்படிக் கொடுமைப்படுத்தும் சமூகத்தை ஆதரிப்பாரா? இவர்களுக்கு விடுதலை அளிப்பாரா? அல்லது இவர்களை அடியுடன் தொலைத்து அடிமைப்படுத்துவாரா என்பதை நினையுங்கள். (கு.அ.21.6.1925)

_ பெரியார் யாருடைய குரலில் பேசினார் என்பதை இதன் மூலம் உணரலாம். இப்படிப் பேசுவதை வைத்து தன்னைப் பட்டியலின மக்களுக்காகப் போராடுபவன் என்று பெரியார் பட்டம் கட்டிக் கொள்ளவில்லை.

நீங்கள் எனக்களித்த வரவேற்புப்  பத்திரத்தில் உஙகளுக்காக நான் அதிக வேலை செய்திருப்பதாகச் சொல்லி புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையில்லை. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும் ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிறவர்களுமாய் இருப்பார்களென்பது எனது அபிப்பிராயம். அதாவது இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத்தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவே இல்லை. ‘பறையர்’ என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால் தான் ‘சூத்திரர்’ என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. ‘பறையர்’ என்கிற ஜாதிப் பெயரை விட ‘சூத்திரர்’ என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்த சாஸ்திரப்படி பறைய ஸ்திரீகள் பதிவிரதைகளுக்கும் சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமாயிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி இருக்க இடமேயில்லை. ஏனென்றால் அப்படி சூத்திரச்சி என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். இதை ஒப்புக் கொள்ளாதவன் இந்து ஆக மாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால், என்போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன் பறையர்கள் என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் சூத்திரர்கள் என்ற தம்மை யாரும் கருதக் கூடாது என்பதற்காகத் தானேயில்லாமல் வேறல்ல. ஆகையால் எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்குப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறத.

7.4.1926 அன்று சிராவயல் காந்தி வாசக சாலை ‘காந்தி கிணறு திறப்பு விழா’ வில் பேசியது. (கு.அ.25.4.1926(

_ மிகவும் வெள்ளந்தியாகத்தான் இந்தக் கருத்துகளை பெரியார் சொல்லி வந்தார். தாழ்த்தப்பட்டவர்,பிற்படுத்தப்பட்டவர், மகவும் பிற்படுத்தப்பட்டவர் என்ற பேதம் இல்லாமல்தான் பேசினார், எழுதினார், செயல்பட்டார். தொடக்கம் முதல் இறுதிவரை இப்படித்தான் இருந்துள்ளார்.

‘பறையர்’ இனப் பெண்கள் ஜாக்கெட் போட ஆரம்பித்ததால்தான் துணி விலை ஏறிவிட்டது’ என்று சொன்னவர் பெரியார் என்பது இவர்களது அவதூறுகளில் ஒன்று. இப்படி எப்போது சொன்னார் என்ற ‘கண்டுபிடிப்பு’ இவர்களிடம் இருக்காது. யரோ சொல்லிவிட்டார்கள். உடனே எல்லோரும் இதை அப்படியே சொல்லி வருகிறார்கள். 1960களில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த பெரியாருக்கு எதிராக ‘முரசொலி’யில் வெளியிடப்பட்ட கருத்துப் படத்தில்தான் இந்த அவதூறான கருத்து முதன்முதலில் வந்தது என்று கொளத்தூர் மணி (பெரியாருக்கு எதிரான முனை மங்கும் வாதங்கள் _ திராவிடர் விடுதலைக் கழகம் வெளியீடு) மறுத்த பிறகும் அதையே சொல்கிறார்கள்.

1962 ‘முரசொலி’ பொங்கல் மலரில் இரண்டு கருத்துப் படங்கள் உள்ளன. ‘வேலையில்லாத் திண்டாட்டம் ஏன்?’ என்ற தலைப்புள்ள கருத்துப் படத்தில் பெரியார் சொல்வதாக, ‘பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சுட்டானுங்க! அதனாலேதான்’ என்ற எழுதப்பட்டுள்ளது.

‘துணிவிலை உயர்ந்தது ஏன்?’ என்ற தலைப்புள்ள கருத்துப் படத்தில் பெரியார் சொல்வதாக, ‘புலைச்சி எல்லாம் ஜம்பர் போட ஆரம்பிச்சுட்டா! அதனாலேதான்’ என்று எழுதப்பட்டுள்ளது.

1962 தேர்தல் என்பது காங்கிரசும் தி.மு.க.வும் நேருக்கு நேராக கூர்தீட்டி நின்ற காலகட்டம். காங்கிரஸ் கட்சியை தனது சொந்தக் கட்சியைப் போல பெரியார் நினைத்த காலகட்டம். 1957 தேர்தலில் 15 உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்குள் போய்விட்ட துடிப்போடு இருந்தது தி.மு.க.. அப்போதுதான் இந்த ‘ஜாக்கெட்’ அவதூறும். இதற்கு அப்போதே பெரியாரும், கி.வீரமணியும் பதில் தந்துவிட்டார்கள்.

பெரியாரவர்கள் பழங்குடி மக்களைப் பற்றித் தவறாகப் பேசியதாக இவர்கள் கயிறு திரித்துக் கொண்டிருக்கின்றனர். சென்னையில் பழங்குடி மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியாதென்ற அச்சத்தினால் தான் இந்தப் புதிய புரளியில் இவர்கள் இறங்கி இருக்க வேண்டும். அந்தோ! பரிதாபம்!....

சுயமரியாதை இயக்க ஆரம்ப காலத்தில் இயக்கத்தை எதிர்த்த ‘சாதி இந்துக்கள்’ அனைவரும் இந்த இயக்கத்தை ‘பறையன் கட்சி’ என்றே அழைத்து வந்தனர். இயக்கத்தில் ஈடுபட்டிருந்த திராவிடர்களை அவரவர் வீட்டில் அடுப்பங்கரையில் நழைய விடாமலிருந்ததும் நமக்குத் தெரியும். சுயமரியாதைக் கூட்டம் என்றாலே பெரும்பாலும் சேரிகளில்தான் நடக்கும். சுயமரியாதைத் திருமணங்களும் ஏறக்குறைய அனைத்துமே சேரியில்தான் நடைபெறும். சுயமரியாதைக் கூட்டம் நடந்து முடிகின்ற வரையில் அந்த ஊரிலுள்ள கோயில்கள் பூட்டப்பட்டிருப்பது வழக்கம். ஏனெனில் சுயமரியாதைக்காரர்கள் ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்ற அச்சம்!

முதன்முதலில் தமிழ்நாட்டில் சேரி மக்கள் வீட்டில் உணவருந்திய பொதுநலத் தொண்டர்கள் சுயமரியாதைக்காரர்களேயாவர். அப்போதெல்லாம் கோயில் நுழைவையும் உடன் உண்ணலையும் (சமபந்தி போஜனம்) காந்தியாரே எதிர்த்து வந்த காலம். அக்காலத்து ‘யங் இந்தியா’ ஏடுகளைப் படித்துப் பார்த்தால் இன்றும் விளங்கும்.

மதக் குறியீடு அணிந்த எவரும் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யலாம் என்ற தீர்மானத்தைத் தந்திரமாக நிறைவேற்றி வைத்துவிட்டு பனகல் அரசர் மரணத்தை முன்னிட்டுத் திடீரென்று சென்னைக்குச் சென்றுவிட்டார் பெரியார்.

மறுநாளே ஈரோடு ‘குடிஅரசு’ பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு திருவாளர்கள் சா.குருசாமி, அ.பொன்னம்பலனார், மாயூரம் சி.நடராஜன், ஈரோடு ஈஸ்வரன் ஆகியோர் ஈரோடு பெரிய கோயிலில் புகுந்து விட்டனர். உடனே கோபுரத்தின் கதவைப் பூட்டிவிட்டார்கள் கோயில் அதிகாரிகள். இரவு முழுவதும் வெளியிலிருந்து வந்து விழுந்த கல், குச்சி, பழத்தோல், எலும்புத் துண்டு முதலியவற்றின் அர்ச்சனைக்குள்ளானார்கள் உள்ளே இருந்த தோழர்கள். மறுநாள் காலையில் திரும்பி வந்த பெரியார் அவர்கள் கதவைத் திறக்கச் செய்து அவர்களை விடுவித்தார். பிறகு வழக்கு நடத்தி கீழ்க்கோர்ட்டில் ஈஸ்வரனும், ஆதி திராவிடத் தோழர்களும் தண்டிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் அத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.

நீதிக்கட்சியாரும் திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் (காலஞ்சென்ற ஜெ.என்.இராமநாதன் தலைமையில்) ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு கோயில் நுழைவுக் கிளர்ச்சி செய்து தண்டனை பெற்றனர்.

1929 செங்கல்பட்டு மாநாட்டின்போதுதான் தமிழ்நாட்டில் முதன்முதலில் நாடார்கள் சமைத்து மற்ற சாதிக்காரர்கள் அந்த உணவைச் சாப்பிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றுகூடத் திடீரென்று பலர் இலையை மூடிவிட்டுச் சாப்பிடாமல் எழுந்து சென்றதை நாமே கண்ணாரக் கண்டோம், கண்டவர் பலர் இன்றுமிருக்கிறார்கள்.

ஆதி திராவிடர் சமுதாயம் படிப்பிலும் உத்யோகத்திலும் உண்டியிலும் உடையிலும் இன்று முன்னேறியிருப்பதற்கு அடிப்படையான காரணம் பெரியாரவர்களின் இடைவிடாத சாதி ஒழிப்புப் பிரச்சாரந்தான்.

இன்று வோட்டுப் பிச்சைக்காக யாரோ சிலர் பெரியார் பேச்சைத் திரித்துக் கூறியும் புது வியாக்யானம் செய்தும் மனம் போன படி கயிறுதிரித்தும் விஷமப் பிரச்சாரம் செய்வதனால் பெரியாரவர்களின் நாற்பதாண்டு சாதி ஒழிப்புத் தொண்டு மறைந்துவிடப் போவதில்லை.

(‘விடுதலை’ 7.12.1961)

11.12.1968 அன்று வேலூர் நாராயணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய பெரியார், “எந்தச் சூழ்நிலையில் எந்தப் பொருளில் இது சொல்லப்பட்டது’’ என்ற விளக்கம் அளித்தார்.

‘ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள்’ என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார்’ என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள் என்று வால்போஸ்டர்கள் ஒட்டிஇருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து இப்படி எப்படிச் சொல்லலாம் என்று கேட்டார்கள். நான் சொன்னது உண்மைதான். ‘நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது. போட்டால் துணியே போடக் கூடாது. அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை’ என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும் நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்துகொண்டனர். (வி: 15.12.1968)

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடையாளமாக இன்றைக்கு கிராமத்தில் கூட செல்போன் இல்லாதவர் இல்லை என்று சொன்னால், இன்றைக்கு கிராமத்தான்கூட செல்போன் வாங்க ஆரம்பித்ததால் செல்போன் விலை அதிகமாகிவிட்டது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இல்லையா?

ரவிக்கையை உதாரணம் காட்டி பலமுறை பேசி இருக்கிறார் பெரியார்.

பழமைகளில் எது மாற்றமடையாமல் இருந்து வருகிறது! பண்டைக் காலத்தில் நமது பெண்களுக்கு எங்காவது ரவிக்கை உண்டா?

அவர்கள் மாருக்குச் சீலையாவது போட்டு மூடிக்கொள்ள முடியுமா? அப்படி மூடினால் தண்டிக்கப்பட்ட காலம் இன்று அப்படியேவா இருக்கு? (வி.27.2.1948)

50 வருடத்துக்கு முன்பாக யார் ரவிக்கை போட்டார்கள்?...  (வி. 5.9.1956)

இன்று 100க்க 90 பேர்கள் சட்டை அணிந்திருக்கிறீர்கள். இந்தப் பெரிய கூட்டத்தில் சட்டை இல்லாதவர்கள் 10 பேர்களைக் கூடப் பார்க்க முடியவில்லை. உங்கள் பெண்கள் எல்லாம் இடுப்பில் துண்டும் மேலே ஒரு துண்டும்தான் உடுத்த வேண்டும். இப்படித்தான் இருந்தது. இன்று அவைகள் எல்லாம் எங்கே?

(‘விடுதலை’ 19.4.1960)

அதாவது இழிவு துடைக்கப்பட்டு வளர்ந்துள்ளோம் என்பதற்கு உதாரணமாக பெரியார் பேச்சில் எப்போதும் இடம்பெறும் உதாரணம் இது.அதனால் துணி விலை கூடிவிட்டது என்பது மட்டமான ரசனை.

தனது சொல்லுக்கும் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வாழ நினைத்தவர் பெரியார். வாழ்ந்து காட்டியவர். வைக்கம் தொடங்கி மதுரையில்அவர் மீது இறுதியாகக் கல் வீசப்பட்டது வரை தனது மனசாட்சிக்கு உண்மையாக இருந்தவர் பெரியார். அவரது மனசாட்சி என்பது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், சிறுபான்மையினர் உள்ளடங்கிய தமிழர் நலனே தவிர வேறல்ல. காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு காரணமானது அரசியல் அல்ல. பெரியார் தனக்கு பதவி கேட்டு அது கிடைக்காமல் வெளியேறவில்லை. தான் பெரியவரா, திரு.வி.க. பெரியவரா அல்லது மற்றவர்கள பெரியவர்களா என்ற ஈகோ யுத்தத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறவில்லை. தீண்டாமை ஒழிப்புக்காகத்தான் வெளியேறினார்.

காஞ்சிபுரம் மாநாட்டை ஒட்டி பெரியார் வெளியிட்ட (15.11.1925) அறிக்கையை படித்துப் பார்த்துவிட்டு, தீண்டாதாருக்கு பெரியார் என்ன செய்தார் என்று கேளுங்கள்.

15.11.1925 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில் வெளியான அறிக்கையில்,

தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் பிராமணரல்லாதார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாய்த்தான் நாடு சுயராஜ்யமடையும். அதனால், தீண்டாமை விலக்கில் கவலையுள்ளவர்களும், தீண்டாதாரென்று சொல்லப்படுபவரும் அவசியம் காஞ்சிபுரத்திற்கு வந்து அதற்கென்று ஓர் மகாநாடு கூட்டி காரியத்தில் பலன்  தரத்தக்க திட்டங்களைக் காண வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

_ தீண்டாதாரின் முன்னேற்றம்தான் பி£மணரல்லாதாரின் முன்னேற்றமாகும் என்ற ஒரு வரி போதும். பெரியார் யாருடைய தலைவர் என்பதைச் சொல்லிவிடும்.

‘பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்று திருநெல்வேலியில் பேசியது ஒன்றுபோதும். பெரியார் யாருடைய தலைவர் என்பதைச் சொல்லிவிடும்.

பெரியாரின் கடவுள் மறுப்பு, சாஸ்திர மறுப்பு, வேத மறுப்பு, கோவில் மறுப்பு, பூஜை மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு அனைத்துக்கும் அடிப்படை சாதிய எதிர்ப்பே. சாதி என்ற ஒன்று இருக்கக் கூடாது. அப்படிஇருந்தால்அது ஒழிய வேண்டும். கடவுளால் உருவாக்கப்பட்டதாக சாதி இருக்க முடியாது. அப்படி சாதியை கடவுள் உருவாக்கினார் என்றால் அவர் கடவுளாக இருக்க முடியாது, தலையில் தோளில் தொடையில் காலில் மனிதன் பிறக்க முடியாது. பிராமணன் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது, பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதே பெரியாரியம். அதாவது அனைத்து நிலைப்பாடுகளுக்கும் காரணம் சாதி பேத ஒழிப்பு. இதில் எங்காவது பெரியார் நழுவிச் சென்றுள்ளாரா?

1. இந்தி எதிர்ப்பு

2. இந்திய அரசு எதிர்ப்பு

3. வடநாட்டுச் சுரண்டல் எதிர்ப்பு

4. காங்கிரஸ் ஆதரவு

5. தி.மு.க. எதிர்ப்பு

_ ஆகிய அரசியல்ரீதியான அய்ந்து நிலைப்பாடுகளை எடுத்துப் பிரச்சாரம் செய்து வந்த காலகட்டத்திலும் சாதி பேத எதிர்ப்புக் கருத்துகளை பெரியார் விடவில்லை. பேச மறுத்தது இல்லை. பேச மறந்தது இல்லை. காங்கிரஸ் ஆதரவு மேடையிலும் சாதி எதிர்ப்பு இருந்தது. தேர்தல் பிரச்சார மேடைகளிலும் தனது சமூக சீர்திருத்தக் கருத்துகளை பேச பெரியார் மறந்தது இல்லை. இப்படிப்பட்ட பெரியாரை விட பட்டியலின மக்களுக்கு நெருக்கமான சக்தி வேறு யார் இருக்க முடியும்? பெரியாரின் வெற்றி என்பது சாதி, தீண்டாமையை எதிர்த்து பேசியது மட்டுமல்ல. ஆதிக்க சாதியை சமரசம் இல்லாமல் எதிர்த்தது. பெரியாரியல் செயற்பாட்டாளர் வே.மதிமாறன் ஒரு கூட்டத்தில் சொன்னார்: “பெரியாரின் துணிச்சல் என்பது ஆதிக்க சாதியினர் மத்தியில் ஆதிக்க சாதியை விமர்சித்தது’’ என்றார். இவரைவிட பட்டியலின மக்களுக்கு நெருக்கமான சக்தியாக வேறு யார் இருக்க முடியும்?

யாரை நட்பு ரீதியாக கொள்வது, யாரை எதிர் சக்தியாக பார்ப்பது என்று புரியாததன் விளைவே தலித் எழுத்தாளர்களின் பெரியார் பற்றிய பார்வை. யார் எதிரி, யார் நண்பன் என்று அறியாத தன்மையே இதற்குக் காரணம். பெரியார் குறித்த பதிவுகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாததே இதற்குக் காரணம். யாரோ எழுதிப் போட்ட மேற்கோள்களை அப்படியே எடுத்துப் போடுவதே இதற்குக் காரணம்.

ஜாக்கெட் அவதூறு போன்றதுதான் தமிழக தலித் தலைவர்களைப் பெரியார் மறைத்தார் என்பதும். பெரியாரைச் சிறுமைப்படுத்துவதாக நினைத்து, டாக்டர் அம்பேத்கரை இவர்கள் சிறுமைப்படுத்துகிறார்கள். ‘தமிழக தலித் தலைவர்களை மறைப்பதற்காகத்தான் டாக்டர் அம்பேத்கரை  பெரியார் தூக்கிப் பிடித்தார்’ என்கிறார்கள். ஏன், அம்பேத்கருக்கு அந்தத் தகுதி இல்லையா? பெரியாரை விமர்சிக்கும் சிலர் சந்தடிசாக்கில் அம்பேத்கரை விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.

அம்பேத்கரை எவ்வளவு உயர்வாக பெரியார் பேசினாரோ அதைப் போலவே தமிழகத் தலைவர்களையும் பேசியிருக்கிறார். பாராட்டி எழுதி இருக்கிறார்.

தமிழகத் தலைவர்களையும் புகழ்ந்தே இருக்கிறார் பெரியார். இவர்கள் அதைத் தேடவில்லை என்பதற்காக இல்லை என்று ஆகிவிடுமா? ‘அயோத்திதாசர் மீது பொறாமைப்பட்டுத்தான் புத்தமதத்தில் பெரியார் சேரவில்லை’ என்று ‘எலெக்ஷன் பாலிடிக்ஸ்’ கிசுகிசுகளுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? பதில் சொல்லாமல் இருப்பதே சரியானது. புத்த மதத்தில்சேரச் சொன்ன டாக்டர் அம்பேத்கரிடம், மறுத்த பெரியார், ‘இங்கே இருந்தால்தான் வெளிப்படையாக விமர்சிக்க முடியும்’ என்று யதார்த்தமான பதிலைச் சொன்னார். அதற்காக அவர் ‘இந்துவாகவே’ வாழ்ந்தார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவரை இந்துவாக எந்த இந்துவும் ஏற்கமாட்டார் என்பது இருக்கட்டும். குற்றம் சாட்டுபவர்கள் அனைவருமே புத்தமதத்தில் சேர்ந்து விட்டார்களா? பெரியார் மீது வைக்கப்படும் ‘இந்து அளவுகோல்’ மற்ற தலைவர்களுக்குப் பொருந்தாதா? ‘இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னபோது, ‘இந்துவாகத்தான் சாவேன்’ என்றவர் எம்.சி.ராஜா. இதில் இவர்கள் யார் பக்கம்?

எல்லா நேரங்களிலும், விவகாரங்களிலும் பெரியாருக்கு எதிர்ப்பக்கம் என்பது எப்படி பகுத்தறிவின் பாற்பட்டதாக இருக்க முடியும்?    

- உண்மை இதழ், 1-15.9.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக