திங்கள், 1 அக்டோபர், 2018

பெரியார் வென்ற பெண்ணுரிமைக் களங்கள்

1925 இறுதியில் காங்கிரசை விட்டு வெளியேறி, தேர்தல் - பதவி என்பவைகளைப் புறந்தள்ளி, சமூக விடுதலைதான் அடிப்படையான முன்னுரிமைப் பணி என்று தன்னை அதற்கே அர்ப்பணித்த மானிட நேயரான தந்தை பெரியார் இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்துக் கொண்டு, தனது சூறாவளிப் பயணத்தைத் துவக்கினார்; தொடர்ந்தார். வாழ் நாளின் இறுதி மூச்சடங்கும் வரை எதிர்நீச்சலும் தொடர்ந்து கொண்டே இருந்த அந்தப் போரில் - பல களங்களில் வென்றார் - நின்றார் தத்துவமாக!
பிறவி பேத ஒழிப்பு என்பதே அவரது முதல் இலக்கு - மற்ற பிரச்சாரங்கள் - போராட்டங்கள் எல்லாம் அதற்கான கருவிகள் - வழிமுறைகள்; கொள்கைகளை அவர் மாற்றிக் கொண்டதேயில்லை. அவைகளை அடையும், மேற்கொள் ளும் திட்டங்களை அவர் மாற்றிக் கொள்ளத் தயங்கியதும் இல்லை!
பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, சாஸ்திர சம்பிரதாய சனாதன எதிர்ப்பு, மத எதிப்பு, அரசு எதிர்ப்பு, புராண இதிகாச எதிர்ப்பு, ஏன் அரசியல் சட்ட எதிர்ப்பு, ‘சுதந்திரம் - விடுதலை’ என்று சொன்னபோதுகூட தனித்துக் குரல் எழுப்பி எவரும் சந்திக் காத சுனாமி போன்ற எதிர்ப்பையும் அவர் துணிவுடனும், நேர்மையுடனும் எதிர்க்கப் பின் வாங்கியதே இல்லை!
எதிர்நீச்சல் வெற்றிதான் அவர் அணிந்த முள்மகுடத்தில் பின்னாளில் பதிக்கப்பட்ட முத்து!
ஒரு விஞ்ஞானிஎப்படி எவர் எதிர்த்தாலும் தான் ஆய்வின் மூலம் கண்டறிந்ததை, எந்த சூழ்நிலையிலும், எதிர்ப்பிலும், ஏளனத்திலும், அடக்குமுறையிலும் மாற்றிக் கொள்ளாது, உறுதி படைத்த நெஞ்சத்தோடு, சமூகத்தில் தனித்தே உயர்ந்து நிற்கிறாரோ அது போன்றே தந்தை பெரியார் கூறிய கருத்துக்கள் பலருக்கும் - அதிர்ச்சியைத் தந்தன! - மகிழ்ச்சியைத் தரவில்லை - எதிர்ப்புகள் இமயமாய் எழுந்தன! ஆனாலும் பரவாயில்லை, என் கருத்தை எதிர்ப்பதன் மூலம் என்பக்கம் மக்கள் திரும்பத் தொடங்கி விட்டார்கள்; இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். எனக்கு வெற்றி - தோல்வி என்பது அளவு கோல் அல்ல, நான் துவக்கிய இப்பெரும்பணிக்கு.
மாறாக, எனது ஒரே அளவுகோல் இதைச் செய்ய வேண் டுமா? வேண்டாமா? என்பதுதான். செய்தே தீரவேண்டிய பணி என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிறகு, எதிர்ப்புக்கும், இழிபெயருக்கும் - கண்டன - தண்டனைகளுக்கும் அஞ்சலாமா? என்று உண்மைகளைத் தோலுரித்து உலகத்தலை வராய் இன்று உயர்ந்து நிற்கிறார்!
நிகழ்காலம் அவரைப் புரிந்து கொண்டதை விட வருங் காலம் அவரது காலமாகவே ஆவது காலத்தின் கட்டாயம் - வரலாற்றின் புதியதோர் இணைப்பாக மாறும்!
புதுமைகள் வாழ்வியலில் மலரும்போது, பழமை விரும்பிகளும் கூட மாறித்தானே ஆகவேண்டும்?
ரயிலும், விமானமும் கண்டுபிடிக்கப்பட்டு, பயணத்திற் குரிய பயன்பாடாக வந்துவிட்ட பிறகு, கட்டை வண்டிப் பயண கனதனவான்களும் மாறித்தானே ஆக வேண்டும்!
அதுபோலத்தான் பெரியாரின் "மண்டைச் சுரப்பைப்" பின்பற்றியே - (தொழுது என்பதன் சரியான பொருள் அது) - தீர வேண்டும்.
பின்பற்றாவிட்டால் நட்டம் பெரியாருக்கு அல்ல; பள்ளத்தில் வீழ்ந்து கிடந்து எழமுடியாதவர் என்பதை விட, எழ விரும்பாதவர், அல்லது முயலாதவர் என்பவர்களுக்கு தானே பெரு நட்டம்!
விஞ்ஞானிகள் எப்போதும் லாப-நட்டக் கணக்குப் பார்ப்பவர்கள் அல்லர்.
பயனாளிகள், வியாபாரிகள் - அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பால் லாபமடைவார்கள்!
நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு மருந்து விடுதலை தரும்; மருந்தை விற்பவர்கள் எது அதிகம் தேவைப்படுமோ அதுவே இருப்பாக ஆக்கி கொள்வார்கள்.
விஞ்ஞான விந்தைகளை - சாதனை - தத்துவக் கண்டுபிடிப்புகளை எப்படி துவக்கத்தில் சமூகம் ஏற்கத் தயங்குமோ, அதே நிலைதான் 'சுயமரியாதை' என்பதை நோக்கமாகக் கொண்ட இயக்கங்கள் - சுயமரியாதைச் சூரியனுக்கும் ஏற்பட்டது!
ஜாதி ஒழிப்பு மட்டும் பிறவி பேத ஒழிப்பல்ல;
பெண்ணடிமை ஒழிப்பும் பிறவி பேத ஒழிப்புதான் என்று தெளிவாகச் சிந்தித்தார்!
அவரது சிந்தனையும், செயலும், வெறும் நூலறிவால் ஏற்பட்டதல்ல,
வாழ்வியல் அனுபவங்களும், நுண்ணறிவு பகுத்தறிவுக்கு ஓய்வறியாத வேலை கொடுத்ததின் "விளைச்சல்" ஆகும்!
இன்று அந்த விளைச்சலை உலகம் அறுவடை செய்து, சமைத்து, சுவைத்து மகிழ்கிறது! அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்கிறது!
“பெண் வரலாறும், விடுதலைக்கான போராட்டமும்“ என்ற ஒரு அருமையான ஆய்வு நூலில் பேராசிரியர் ப.சு.சந்திரபாபு, முனைவர் இல.திலகவதி அவர்களும் மிக அருமையாக இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
அதனை சற்று விரிவாக இங்கே பதிவு செய்து சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
பக்கம் 303-308 ஆகிய பக்கங்களில் ஒரு “பருந்து பார்வையை' வாசகர்கள் படிக்கட்டும் (பருந்து எப்போதும் இரையை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கண்டுபிடிப்ப தைப் போல) அறிவுப்பசி வாசக நேயர்களாகிய நீங்கள் உண்மையை உணவாகக் கொள்ள இதனை முதலில் பரவலாகத் தெரிந்து, அறிந்து, புரிந்து கொள்ளுங்கள்.
பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும்
பெண் விடுதலை (1879 - 1973)
"பெண்கள் விடுதலை என்னும் கொள்கையின் வளர்ச் சிக்கு திராவிட இயக்கம் பெறும் உதவி புரிந்துள்ளது. 25 மற்றும் 26 டிசம்பர், 1926ல் மதுரையில் 10ஆவது பிராமண ரல்லாத மகாநாடு நடத்தப்பட்டது. அதில் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் திடப்படுத்தப்பட்டன. 1929ஆம் ஆண்டிலேயே செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அவை 16 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களுக்குத் திருமணம் நடத்தக் கூடாது, தங்கள் திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும், விதவை கள் மறுமணம் வரவேற்கப்பட வேண்டும். ஆண், பெண் இருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத்துணையை எந்த ஜாதி, மதக் கட்டுப்பாடுமில்லாமல் தாங்களே தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். மேலும் இதற்கெல்லாம் பொருந் தும் வகையில் திருமணச் சம்பிரதாயங்களும் மாற்றப்பட வேண்டும் என்பதாகும். இது மட்டுமல்லாமல் அதே மாநாட் டில் பெண்ணுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டும் மற்றும் தாங்கள் விரும்பும் எந்தத் தொழிற்துறையிலும் வேலை செய்யலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதுவே ஈ.வெ.ரா. அவர்களின் சமுதாய பெண்ணியத்தின் ஆரம்பமாகும்.
பெரியார், பெண்கள் விடுதலையைத் தன்னுடைய சுய மரியாதை இயக்கத் திட்டத்தின் ஒரு பாகமாகக் கருதினார். ஏனெனில் பிறப்பின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டு தலை ஒழிப்பதே இவர் கொள்கையாகும். இவர் "வர்ணா" என்னும் சாதி முறையை ஒழிக்க முயன்றார். ஏனெனில் அது ஒருவரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அவரு டைய உரிமை, கடமை மற்றும் அந்தஸ்தை நிர்ணயிக்கும் முறையாகும். பெண்ணாகிப் போனதால் அவளுடைய அந்தஸ்து தாழ்த்தப்படுவதை எதிர்த்துப் பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க முயன்றார்.
பெரியாரின் பெண்ணியத்தின் தனித்தன்மை
பெரியார், பெண்ணின் தாழ்த்தப்பட்ட அந்தஸ்து, அதற்குக் காரணமான அடிமைத்தனம் மற்றும் பெண் விடுதலைக்கான வழிகள் என்று பலவற்றை ஆராய்ந்தார். இவர் பிரச்சனைகளைச் சிறப்பான முறையில் ஆராய்ந்து பல தீர்வுகளையும் அளித்துள்ளார். பெண்ணை அடிமைப் படுத்தக் கூடிய பல சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகளைப் போக்க நினைத்தார். ஆனால் அனைத்துச் சமநிலை சிந்தனையாளர்களை அதிர்ச்சியடைய வைக்கும் விஷயம் என்னவென்றால், பெண் விடுதலை விரும்பிகள் மற்றும் பெண்ணியவாதிகள் யாரும் பெரியாரின் கருத்துக்களை வாசிக்கக் கூட நினைக்கவில்லை என்பதுதான். பெண்கள் விடுதலை இயக்கம் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் அறிவாளிகள் கூட பெரியாரின் கொள்கைகளுக்கு நல்ல இடமும் அந்தஸ்தும் கொடுக்கத் தவறிவிட்டனர். பெண் விடுதலை பற்றிய பெரியாரின் கண்ணோட்டத்தை முழுமையாக அறிந்துகொண்டால் கண்டிப்பாக அவருக்குச் சமூகத்தில் ஒரு சிறந்த இடம் அளிக்கப்படும். பிற சமூக சீர்திருத்தவாதிகள் சீர்திருத்தம் மூலம் பெண்ணுடைய துன்பங்களைப் போக்க நினைக்கும்போது, பெரியார் மட்டும் பெண்களை சமுதாய முறை என்ற கட்டுப்பாட்டிலிருந்தே விடுதலை அடையச் செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் ‘சமுதாயம் சார்ந்த பெண்ணியத்தை முதல் முறையாக அறிமுகம் செய்தவர் பெரியார்' அவர்களே.
எந்தச் சமுதாய சீர்திருத்தவாதியும் ஆண், பெண் எல்லா வகுப்பினர் மற்றும் எல்லா சாதியினரையும் சமமாக நடத்தும் சமூகமுறை வேண்டுமென்று நினைக்கவில்லை. இவர்கள் யாரும் பெரியார் அளவுக்குப் போராடவுமில்லை. 1942இல் பெண்களுக்கு விடுதலை என்பதைப் பற்றிய தன் கொள்கை களைப் ‘பெண் ஏன் அடிமையானாள்?' என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார். பெண் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட கற்பு என்னும் கொள்கை, பெண்ணை அடிமைப்படுத்துவதில் திருமணத்தின் பங்கு, விதவை மறுமணத்தின் முக்கியத்துவம், பெண் அடிமைத்தனத்தால் விளைந்த விபசார விடுதிகள், பெண்கள் குழந்தை பெற மறுக்கும் உரிமை மற்றும் சொத்துரிமை போன்றவற்றைப் பற்றி அந்தப் புத்தகத்தில் பேசியிருந்தார்.
பெரியார், பெண்ணடிமைத்தனத்திற்கான காரணங்களை மிகவும் ஆர்வத்துடன் ஆராய்ந்தார். அதற்குப் பல சமுதாய நிறுவனங்களும் பெரிதும் உதவின. ‘கற்பு‘ என்பதன் மீதான இவருடைய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது. கற்பு என்னும் தீய வடிவத்தைக் கொண்டே ஆண் பெண்ணை அடிமைப்படுத்திறான் என்கிறார். கற்பு என்பது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயமே அல்ல. மேலும், அது பெண்ணு டைய உடல் ஆரோக்கியம், உடல் பாதுகாப்பு மற்றும் பொது நடத்தை சம்பந்தப்பட்டதாகக் கொள்ளலாம். ஆனால் யாரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் இது பெண்கள் மீது மட்டுமே திணிக்கப்பட்டுள்ளதால் ஆண் இதை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்பது தான். உதாரணமாகக் கற்பு என்பது ஆண் கடவுளிடம் கூட எதிர்பார்க்கப்படாத ஒன்று. அதாவது சட்டம், நீதி என்பது ஒருவர் பிறப்பின் அடிப்படையில் (ஆணா, பெண்ணா என்ற) இடப்படுவதாகும். மேலும் கற்பு என்னும் கொள்கையும் இந்த வேறுபாட்டினால் உருவானதே. இது அறவே ஒழிக்கப்பட வேண்டும். “கற்பு என்னும் கொள்கை பெண்ணுக்கு , மட்டுமே உரித்தானதாகும். அது ஆணுக்குத் தேவை இல்லாதது. ஏனெனில் பெண்ணை ஆண்கள் தங்கள் சொத்தாகக் கருதி அதன் மேல் தாங்கள் நினைக்கும் எல்லா நம்பிக்கையையும் அதிகாரத்தையும் திணிக்கின்றனர்”
அனைத்துப் பெண்ணியவாதிகளும் பெண்கள் சுதந் திரம் பற்றி ஒரே மாதிரியாகச் சிந்திப்பதில்லை. ஆணும் கற்புடையவனாக இருக்க வேண்டும். அவர்களும் அவ்வாறு இருக்க முயல வேண்டுமென்று வாதிடுகிறார்கள் பெண்கள் விடுதலையாளர்கள். சில சீர்திருத்தவாதிகள் ஆண், பெண் இருவருக்கும் இடப்பட்ட பரம்பரைக் கோட்பாடுகள் மிகவும் வித்தியாசமானவை. அடக்கம், தூய்மை மற்றும் பாதுகாப்பு போன்றவை பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டவை. ஆனால் இதையெல்லாம் பெரியார் ஏற்கவில்லை. பெண், ஆண் இருவரையும் வழி நடத்திச் செல்ல ஒரே வழிதான் - அதாவது ஒரே சட்டம்தான் வேண்டும் என்றார்.
பெண் ‘நிர்பந்தக் கற்பு’ என்பதிலிருந்து வெளிவந்தால் தான் அவளுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். சுயேச்சைக் கற்பு அதாவது ஆண், பெண் இருவருக்கும் சமமான கோட்பாட்டையே பெண்கள் விரும்ப வேண்டும் என்கிறார். பெண்களை நிரந்தர அடிமைகளாக வைத்துக் கொள்வதையே பழக்கமாகக் கொண்ட சமுதாய நிறுவனங் களைப் பெரியார் பெரிதும் தாக்கினார். அவர் வெறுக்கும் மற்றொரு வார்த்தை விபசாரம். இதில் பெண்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். விபசாரி என்ற வார்த்தைதான் இருக்கிறதே தவிர, விபசாரத்திற்குக் காரணமான ஆணைக் குறிக்க ‘விபசாரன்’ என்று எந்த வார்த்தையும் இல்லை என்கிறார். விபசாரத்தின் காரணமாகப் பெண்களை மட்டும் தண்டிப்பது தவறு என்கிறார். கற்பு என்பது பெண்களை அடிமையாக்கப் பயன்படுத்தப்படும் பொய்யான வார்த்தை யாகும். அதேபோல் விபசாரம் என்ற வார்த்தையும் பெண் களை அடிமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் தந்திர மாகும் என்கிறார். இயற்கையிலேயே இந்த இரு வார்த்தை களும் வேறுபட்டவையே. இரண்டுமே பெண்கள் மேல் மட்டுமே திணிக்கப்படுகின்றன. மேலும் இவை இரண்டுமே ஆண்களால் அமைக்கப்பட்டவையே.
வைப்பாட்டிகளை வைத்துக்கொள்ளும் முறையைப் பெரியார் எதிர்த்தார். ஆண்களைப் போல் பெண்களும் இதைச் செய்ய நேர்ந்தால்,  என்னாகும்? ஆண் இரண்டு பேரை வைத்துக்கொண்டால் பிறகு பெண் மூன்று பேரை வைத்துக் கொள்ள முயற்சித்தால்! அப்பொழுது தான் இந்த மோசமான முறை ஒழிக்கப்படும், உண்மையான உடன் படிக்கை ஏற்படும். இது பெரிய தவறு மற்றும் இதனால் சமுதாயமே அழிக்கப்பட்டு விடும் என்று கருதி ஆணுக்குத் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள சமுதாயம் அறிவுரை கூறும். ஆனால் ஆண்டாண்டு காலமாக அவர்கள் அறி வுரை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பெரியார் விதவைத் திருமணத்தைப் பெரிதும் ஆதரித் தார். விதவை நிலை ‘சதி'யை விட மிகவும் மோசமானது. மேலும் சாஸ்திரங்கள் ஏன் விதவை மறுமணத்தை ஒதுக்கு கின்றன என்றும் கேள்வி எழுப்புகிறார். ஒரு பெண் கணவன் இறந்தபின் ஏன் விதவையாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறார். விதவையாக வாழ்வதைவிட சாகும் வரை பட்டினி கிடந்து சாவதே மேல் என்கிறார். பெண் ஏன் விதவையாக வாழ வேண்டும் என்பதற்கு யாரேனும் ஏதேனும் காரணம் கூறியிருக்கிறார்களா? அல்லது சாதி, மதம் ஏதேனும் காரணம் கற்பிக்கிறதா? விதவை என்னும் கொடுமையைக் காரணமேயில்லாமல் மேற்கொள்ளும் சமுதாயத்தை முட்டாள்களுடைய சமுதாயம் என்று கூறுவதை யாராவது ஆட்சேபிக்கிறீர்களா? என்று பெரியார் பல கேள்விகளை எழுப்புகிறார். ஆண், பெண் திருமண வயதை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை சாஸ்திரங்கள் என்னும் பெயரில் சிலர் எதிர்ப்பதை இவர் பெரிதும் கண்டித்தார். சாஸ்திரத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பெண் பருவம் எய்தியபின் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாது என்பதில் அவர்கள் சத்யாக்கிரகம் செய்யக்கூடத் தயாராக இருந்தனர். நியாயம் என்று பட்டதைச் செய்துவிட வேண் டும். சாஸ்திரம் சரியானதா, தவறானதா என்று ஆராய்ச்சி செய்வது முட்டாள்தனமாகும். புனிதர்களாகிய சீதா, ருக்குமணி, சத்யபாமா, பார்வதி, வள்ளி, தெய்வானை மற்றும் மீனாட்சி, ஆண்டாள், நாச்சியார் மற்றும் சரசுவதி திருமணம் செய்து கொண்டது பருவமடைவதற்கு முன்னரா? பின்னரா? என்று கேட்கிறார் பெரியார். விதவைகள் சட்ட விரோதமாகத் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் கோயில் குளத்திலோ, புதர்களிளோ தூக்கி எறியும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஏனென்றால் முறையான மறுமணம் அவர்களுக்கு மறுக்கப் படுகிறது.
பெண்கள் தங்கள் சுதந்திரத்தைத் தாங்களே போராடி முயற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் மேல் உள்ள அடக்குமுறையை எதிர்த்துப் போர் தொடுக்க அழைக்கிறார். பெண் சுதந்திரத்திற்காக நான் பாடுபடுகிறேன் என்று ஆண் போராட முன் வந்தால் அது பெண்ணடிமையை மேலும் பல சங்கிலிகளால் கட்டி பலப்படுத்துமே ஒழியே எந்த வகையிலும் பெண் தன் போராட்டத்தில் வெற்றியடைய வழி செய்யாது. ஆண்களின் இத்தகைய முயற்சியெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்கே ஆகும். எங்காவது பூனை எலிக்குச் சுதந்திரமளிக்குமா? குள்ளநரிகள் ஆட்டுக்கும் கோழிக்கும் சுதந்திரம் அளிக் குமா? என்று கேட்கிறார். இவர் ஆண், பெண் உறவை முதலாளி மற்றும் தொழிலாளிக்கும் இடையே ஆன உறவு என்றும் அரசாளும் ஆங்கில மக்களுக்கும் அங்கு அடிமையாக இருக்கும் இந்தியக் குடிமகனுக்கும் இடையே உள்ள உறவு என்றும் ஒப்புமைப்படுத்துகிறார்.
பெண்கள் விடுதலைக்கு வழிகள்
பெண்களே தங்கள் விடுதலைக்குத் தடையாவார்கள். தாங்கள் சுதந்திரம் பெறத் தகுதியானவர்களென்று அவர் களே முதலில் உணர வேண்டும். இயற்கை மற்றும் இறைவன் ஆகிய இருவரும் தங்களை அடிமைகளாகவே படைத்து விட்டதாகப் பெண்கள் நம்புகின்றனர். பெரியார், பெண்கள் குழந்தை பெற்றுக் கொடுப்பதைக் கூட பெண்கள் மறுக்க வேண்டுமென்கிறார். குழந்தையைச் சுமக்கும் சுமையானது ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என்ற எண்ணத்தை அவர்களிடம் தோற்றுவிக்கிறது. ஆண்கள் பிள்ளையைச் சுமக்கும் சுமை அவர்களுக்கு இல்லாததால் பெண்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியும் என்று சுலபமாகக் கூறி விடுகின்றனர். தாய்மையடைவதைக் கூட பெண் தவிர்க்கத் தயாராக இருக்க வேண்டுமென்று கூறுகிறார். ஆண்மை என்னும் வார்த்தையே பெண்மையை இழிவுபடுத்துகிறது. ஆண்மை என்ற வார்த்தை இருக்கும் வரை பெண் அடிமையாகத்தான் வாழ வேண்டும். சுதந்திரம் மற்றும் வீரம் என்பது ஆணுக்கே உரித்தானது. பெண் அடிமை என்பது ஆண்களால் படைக்கப்பட்ட இரு வேறுபட்ட பொருள்கள். இதையும் பெண்கள் பழங்காலத்திலிருந்தே நம்புகின்றனர். உண்மையாகவே பெண்கள் சுதந்திரம் அடைய வேண்டு மென்றால், அவர்களுடைய இறை நம்பிக்கையை அவர்கள் கைவிட வேண்டும். ஏனெனில் இறைவனின் படைப்பில் நம்பிக்கை வரும்பொழுது ஆண், பெண் இருவருக்கும் இடையே வேற்றுமை அதிகரித்துவிடும் என்கிறார் பெரியார்.
குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், மறுப்பதற்கும் பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் மனித இனத்தைக் காப்பதற்காக ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? மனித இனத்தின் நாளைய வளர்ச் சிக்காக, இன்று ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறாள். ஒரு பெண் அவளுடைய அடிமைத்தனத்தைக் களைய தான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று போராடலாம் என்கிறார். இந்த இடத்தில் பெரியார் திருமணமே ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்கிறார்.
பெண்ணுக்கு உயர்கல்வியே அவள் சுதந்திரத்திற்குப் பெரிதாக உதவும் என்கிறார். பெண்ணுக்குத் தன் திருமணத் திற்குப் பின் தன் திறமைகளைக் காட்டுவதற்கு எந்த வாய்ப் புகளும் அளிக்கப்பட மாட்டாது. அப்படி இருக்க அவள் ஏன் வீணை, சங்கீதம் இவற்றையெல்லாம் கற்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார். இங்ஙனம் கற்றதெல்லாம் “மணமகனைக் கவர்வதற்கான விளம்பரமாகும். பட்டதாரிப் பெண்ணை அடுப்படியிலும், குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலும் அடைத்து வைப்பது தேசியக் குற்றமாகும். உயர்ந்த, சிறந்த அலுவலகங்களில் பெண்கள் வேலைவாய்ப்புப் பெற வேண்டும். அந்த நேரத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கு ஆண்களை நியமிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார். பெண் அழகாகத் தோற்றம் அளிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர்கள் நகையை மாட்டி வைக்கும் மரச்சட்டமாக இருக்கக்கூடாது என்கிறார். ஆண், பெண் இருவரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும். ஒரே மாதிரியான பெயர்களையே இருவருக்கும் வைக்க வேண்டும். அதுவே மக்களின் மனதில் பதிந்து பழைய கருத்தைப் போக்கும். பெண்களுக்கு அவர்கள் பெண்கள் என்ற எண்ணமே மறந்துவிட வேண்டும். இவர் பெண்களுக்கு விவாகரத்து உரிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார். பெண்ணா னவள், இவள் இன்னாருடைய மனைவி என்று கூறுவதை விட இவளுடைய கணவன் என்று கூறும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.
பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட ‘சுயமரியாதைத் திரு மணம்', திருமணம் நடத்துவதற்கு புரோகிதர் தேவையில்லை என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் திருமணத்தை ஒப்புக் கொள் ளவோ அல்லது மறுக்கவோ உரிமை அளிக்கப்பட வேண்டு மென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் விடுதலையில் ‘சுயமரியாதைத் திருமணம்' என்பது ஒரு சிறந்த முன் னேற்றமாகும். பெரியார் மேலும் மணப்பெண்ணை ‘வாழ்க் கைத்துணை’ என்று அழைக்காமல் வாழ்க்கை இணை யென்றே அழைக்க விரும்பினார்."
- இந்த முன்னுரையோடு அடுத்து வென்ற களங்களுக்குச் செல்வோம்!
(தொடரும்)
- விடுதலை நாளேடு,1.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக