புதன், 24 அக்டோபர், 2018

இத்தகைய கோவில்கள் ஏன்?

10. 04. 1932  - குடிஅரசிலிருந்து...




தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோவிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும்,, பார்ப்ப னரல்லாதார்களுக்கும் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹை கோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும் ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசார ணைக்கு வந்தபோது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.

ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்ப னரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமை யுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்;  ஜஸ்டிஸ் வாலர், பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பி ராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலர் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக  விசாரித்து, பார்ப்பன ரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.

இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பனரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்களும் நிலைத்திருக்க முடி யாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம் மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பன ரல்லாதார்களே செய்து வருகின்றார்கள். இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல் லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர்களின் சுய நலத்தையும் அகங்காரத் தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பனரல் லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன்வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.

ஆகையால் உண்மையில், பார்ப்பனர் களின் சுயநலத்தையும், அகங்காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில்களைப் பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமையில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவை களைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும் படி விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய்விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசிமூட நம்பிக்கைகள் ஒழிந்து போகுமென்பதில் அய்யமில்லை.

ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்றவர்கள். கோயில்களை ஒழிக்கப்பாடுபடுவார்களா னால், அதனால் அதிக நலனும், பொருளாதாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் அய்யமில்லை.

யோகியின் ஆசை


10. 04. 1932 - குடிஅரசிலிருந்து...


ஹடயோகி என்று புகழப்பட்டவரும், கடைசியில் இரங்கூனில் விஷமுண்டு இறந்தவருமான, நரசிம்ம சுவாமி என்பவர், இறந்த விதத்தைப் பற்றியும், அவருடைய கடைசி, ஆசையைப் பற்றியும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

அவர் இறக்குந்தருவாயில் கடைசி ஆசையாக, தன்னுடைய உடம்பை 24 மணி நேரம் சும்மா வைத்திருக்க வேண்டுமென்றும், தன்னுடைய உடம்பைப் புதைத்த இடத்தில் புத்தர் கோயில் ஒன்று கட்ட வேண்டுமென்றும் கூறினாராம். அதற்கிணங்கி அவரை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று புதைத்தார்களாம். இனி, அவருடைய சகோதரர் வந்து பணவசூல் செய்து இறந்து போன ஹடயோகியின் அவாவைப் பூர்த்தி செய்யப் போகின்றாராம்.

யோகிகளின் ஏமாற்றுந் தன்மைக்கும், இந்துக்களின் மூடத்தன்மைக்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டுவதில்லையென்றே நாம் அபிப் பிராயப்படுகின்றோம்.

ஜால வேடிக்கை போல ஏதோ சாதுரியத்தினால் விஷந்தின்று மாண்ட ஒரு மனிதருக்குக் கோயில் எதற்காக என்று கேட்கின்றோம். உண்மையிலேயே இவர் சுயநலங்கருதாத - உலக நன்மையை விரும்புகின்ற ஒரு யோகியாயிருந்தால் ஏன் தன்னுடைய புதை குழியின் மேல் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்படவேண்டும்? பிற்காலத்தில் தன்னை ஒரு மகானென்று நினைத்துக் கொண்டு மூட மக்கள் தன்னுடைய புகழைப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்னும் பேராசையேயன்றோ?

நம்முடைய மக்களும் மதவேஷம் போட்டவர்களையும் ஜாலவேடிக் கைக்காரர்களையும், மகான்களென்றும், யோகிகளென்றும், மகாத்மாக்க ளென்றும் நம்பியே மோசம் போய்க்கொண்டே வருகின்றார்கள். நமது மக்களின் இத்தகைய மூடத்தனத்தினால் தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்களும் சமாதிகளும் ஏற்பட்டுள்ளன. இந்தக் கோயில்களுக்கும் புதை குழிகளுக்கும் நமது மக்கள் அழுகின்ற பொருளுக்கு அளவேயில்லை, இந்நிலையில் இப்படி ஒரு புதுக் கோயில் கட்டவும் முயற்சி செய்ய வேண்டுமா?

ஆகவே பர்மாவில் உள்ள இந்தியர்கள் இந்தப் பயனற்ற காரியத்திற்காக ஏழை மக்களிடம் பொருளைச் சேகரித்து புதை குழியில் மேல் கோயில் கட்டி அதன் மூலம் மக்களுக்கு மூடத்தனத்தை வளர்க்க வேண்டாம் என எச்சரிக்கின்றோம்.

- விடுதலை நாளேடு, 19.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக