திங்கள், 29 அக்டோபர், 2018

ஈரோட்டு மறியலில் இரண்டு மகளிர்!



பாப்ரியா 1921 ம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்டம்  புரட்சிகரமாக அஹிம்சை வழியில் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த தருணம்.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகப் பெரியார் பதவியேற்று, காந்தியடிகளின் அனைத்துப் போராட்டங்களையும் முன்னிருந்து நடத்திக் கொண்டிருந்தார்.
இந்தச் சமயத்தில் காந்தியடிகளின் கவலைக்குரிய - போராட்டமாக 'கள்ளுக்கடை மறியல்' போராட்டமும் இருந்தது. அல்லும் பகலும் வியர்வை  சிந்தி கூலியாகப் பெறும் பணத்தைக் கொண்டு உழைப்பாளிகள் கள்ளைக் குடித்து உடல் நலத்தை இழந்து போவதையும், அவர்களது குடும்பம் சீரழிவதையும் கவனத்தில் கொண்டு, இதை ஒழிக்க 'கள்ளுக்கடை மறியல்' போராட்டம் நடத்தும் படி தொண்டர்களுக்கு அறிவுரை கூறினார்; அறைகூவல் விடுத்தார்  காந்தி.
பெரியாரின் மனதில் மகாத்மாவின் அறைகூவல் சாதாரண ஒன்றாகப்படவில்லை. சடசட வென்று யாகத்தீயில் கொழுந்து  விட்டு எரியும் வேள்வித் தீயாக மாறியது. இப்போராட்டம் வரலாற்றில் பதித்து வைக்க வேண்டிய ஆவணமாக அமையவேண்டும் என்று ஆசைப்பட்ட பெரியார், கள்ளுக்கடை மறியலில் தாமே தலைமை தாங்கி அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினார்.
போராட்டத்தின் தலைமையிடமாக ஈரோடு - இருந்தது. அப்போது சேலத்தில், பெரியார் குடும்பத்திற்குச் சொந்தமாக 500 தென்னை மரங்கள் கள் இறக்குவதற்கு, குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த தால், தோப்பில் கள் இறக்கும் அனுமதியை ரத்து செய்து குத்தகைதாரருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட எண்ணினார். ஆனால், குத்தகைதாரர்கள் அதற்கு ஒத்துழைப்புத் தர மறுத்ததால், மரத்தை வெட்டும் முயற்சியில் கட்டாயமாக இறங்க வேண்டிய சூழ் நிலைக்குப் பெரியார் ஆளாக வேண்டியதாயிற்று.
போராட்டத்தை நடத்தும் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய், ஆட்களை வரவழைத்து 500 மரங்களையும் வெட்டினார். இந்தப் போராட்டத்தின் உண்மைத்தன்மை எதிரொலியாகத் தமிழகமெங்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
காந்தியடிகள் ஈரோட்டிற்கு வருகை தந்தார். பெரியாரின் இல்லத்திற்கு வந்து மேற்கொண்டு போராட்டத்தைத் தீவிரமாக்க அவருடன் ஆலோசனை நடத்தினார். இதனால் இப்போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.
இந்தப் போராட்டம் ஆங்கிலேய அரசுக்குப் பெரிய சவாலாக அமைந்தது. பெரியாரையும், தொண்டர்களை யும் சிறையில் அடைத்தது. பெரியாரின் வாழ்க்கையில் அவர் அனுபவித்த முதல் சிறைச்சாலை அனுபவமாயிற்று கள்ளுக்கடை போராட்டம்.


பெரியாரைச் சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஆங்கிலேய அரசு பெருமூச்சு விட்ட நிலையில்தான் மற்றொரு சம்பவம் நடந்தது. யாரும் எதிர்பாராத நிலையில் பெண்கள் வீதியில் நடந்து செல்வது குற்றம் என்று பெண்ணடிமைத்தன காலகட்டத்தில், ஆங்கிலேய அரசு விடுத்த 144 தடை உத்தரவை மீறி, பெரியார் வீட்டிலிருந்து நாகம்மையாரும் கண்ணம்மாளும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களுமாய்ச் சேர்ந்து பின்பு பத்தாயிரம் எண்ணிக் கையில் போராட்டம் தீவிரமடைந்தது. ஆங்கிலேய அரசு செய்வதறியாமல் திகைத்தது.
நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் சிறையிலடைத்தால் போராட்டம் தீவிரமடைவதோடு, தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும்  என்று ஈரோட்டில் இயங்கிய ஆங்கிலேய நிர்வாகம் தெளிவாகவே உணர்ந்திருந்தது. வேறு வழியில்லாமல் 144 தடை உத்தரவை நீக்கியாக வேண்டும் என்ற தகவலையும் சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய தலைமைக்குத் தெரியப்படுத்தியது. நிலைமையை உணர்ந்த நிர்வாகம் 144 தடையை நீக்கியது. இவ்வாறு ஆங்கிலேய அரசின் தடை உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தவர்கள் ஈரோட்டுப் பெண்கள்.
இந்தச் சூழ்நிலையில் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக காங்கிரசுக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. இதற்காக மும்பையில், ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் தலைவர்களாக பண்டிட்  மாளவியா, சங்கரன் நாயர் இருந்தனர்.
அந்தக் கால கட்டத்தில் ஈரோட்டில் மட்டும் தான் கள்ளுக் கடை மறியல் போராட்டம் தீவிரமாக இருந்தது. எனவே மாநாட்டில் பேசுவதற்கு முன்பு மாநாட்டுத் தலைவர்கள் காந்தியடிகளிடம், கள்ளுக் கடை போராட்டத்தை நிறுத்திவிடச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள்.
அதற்குப் பதில் அளித்த காந்தியடிகள், ''மறியலை நிறுத்துவது என் கைகளில் இல்லை . அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கின்றன. அவர் களைத்தான் கேட்க வேண்டும்'' என்று பதில் அளித்தார்.
இது வரலாற்றுச் சம்பவமாக நடந்த காலம் 1922ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி.
1921-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய போராட்டத்தை சுமார் ஒரு மாத காலம் நடத்தி வெற்றி பெற்று ஈரோட்டிற்கு வரலாற்றில் பெருமை சேர்த்தவர்கள் தான் நாகம்மையாரும் கண்ணம் மாளும். இவர்கள் 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் போராடியதும் வரலாறாகப் போனது.
நன்றி:  'கல்கி' 4.11.2018
- விடுதலை நாளேடு, 27.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக