சனி, 10 நவம்பர், 2018

தமிழ்நாடு மாகாண மகாநாடு

14.07.1929 - குடிஅரசிலிருந்து...
தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண் யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926-ல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக் கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படி யாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர் களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப் பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்ய மூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்தி ருக்கின்றார்கள்.
வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜூலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரசு தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசு களும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜு லுவே தெரிந்து எடுக்கப்பட்டி ருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந் தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டிய தாயிற்று.
இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவரு கின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்பு வாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.
- விடுதலை நாளேடு, 10.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக