வியாழன், 29 நவம்பர், 2018

சட்ட எரிப்பு -ஒரு சரித்திரக் காவியம் (2)

நேருவின் பேச்சும் - தந்தை பெரியாரின் பதிலும்


கலி.பூங்குன்றன்


ஜாதி - தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய போராட்டம்தான் 1957 நவம்பர் 26 இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டமாகும்.

பேரா.சுப.வீரபாண்டியன்




அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

அரசமைப்புச் சட்டத்தை எரிக்கலாமா என்று தந்தை பெரியாரை நோக்கி எழுப்பிய வினாக்களுக்குத் தந்தை பெரியார் சுடச் சுட அளித்த பதில்களைக் கோடிட்டுக் காட்டினார்.

நீங்கள் கதர்த் துணியை எரிக்கவில்லையா? ஆண்டுதோறும் ராம் லீலா என்ற பெயரில் திராவிட வீரன் இராவணனைக் கொளுத்துவதில்லையா?

கொளுத்துவது ஒரு போராட்ட வடிவம் - அவ்வளவுதான் என்று சொன்ன தந்தை பெரியாரின் பதிலை யாரே மறுக்க முடியும்?

அரசமைப்புச் சட்டத்தில் சிற்பி அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1953 செப்டம்பர் 3 ஆம் தேதி பேசியதை நினைவூட்டினார் பேரா.சுப.வீ.

அண்ணல்  அம்பேத்கர் என்ன பேசினார்? இதோ:

‘Sir my friends tell me that I made the constitution. But I am quiet prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit any body.

எனது நண்பர்கள், நான்தான் அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்று சொல் கிறார்கள்.

நான்தான் அதை நெருப்பிலிட்டுப் பொசுக் குவதிலும் முதன்மையானவனாக இருப்பேன்.

நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்.  அது யாருக்கும் பொருத்தமானதும் அல்ல" என ஆந்திர மசோதாபற்றிய விவாதம் மாநிலங் களவையில் நடந்தபோது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முழங்கினார் (3.9.1953 இல்).

இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தகவலும் சுப.வீ. அவர்களின் உரையில் இருக்கிறது. அந்தத் தகவல் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு பேசியது.

தந்தை பெரியார் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார் அல்லவா! திருச்சிக்கு வந்த பிரமதர் நேரு பேசிய பேச்சுதான் அது.

திராவிடர் கழகத் தலைவரானாலும், திராவிடர் கழகத்தவர் களானாலும் சரி, எங்களுடைய அரசியல் சட்டம் பிடிக்காவிட்டால், அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் இந்நாட்டை விட்டு வெளியேறி எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போகட்டும்; அதைத் தாராளமாக வரவேற்கிறேன்'' என்று பேசினார்.

நேருவின் பேச்சு குறித்து தந்தை பெரியார் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

நேருவின் இந்தப் பேச்சுக்கு கெட்டிக்காரத்தனத் தையோ, துணிவையோ, வீரத்தையோ பொருத்த வேண்டியதில்லை. தமிழனின் மானமற்ற தன்னல ஈனப் பிழைப்பும், கோழைத்தனமும், நாட்டைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையும்தான் காரணமாகும்'' என்றார் தந்தை பெரியார்.

இதன் பொருள் - தமிழனிடம் தன்மான உணர்வும், துணிவும் இருந்திருக்குமேயானால், நேருவுக்கு இப்படியெல்லாம் பேசத் துணிவு வராது என்பதே! அப்பொழுதுகூட நேருவின்மீது சீற்றம் கொள் வதைவிட, தமிழனின் ஈனத்தன்மையை எண்ணிதான் வேதனைப்படுகிறார். தமிழனுக்குத் தன்மான உணர் வையும், துணிவையும் ஊட்ட வேண்டும் என்ற உணர்வும் இதனுள் இருப்பதை அறிய முடிகிறது.

சட்டமன்றத்தில் அண்ணாவின் விவாதங்கள்!


ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்துவிட்டார். அவசர அவசரமாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த விவாதத்திலே அண்ணா அவர்கள் பங்கு கொண்டு தெரிவித்த கருத்துகளைப் பேராசிரியர் சுப.வீ. எடுத்துச் சொன்னார்.

விவாதம் என்றால் சாதாரணமானதல்ல. அனல் பறக்கக் கூடியவை அவை. அந்த நேரத்திலே அண்ணா என்ன பேசினார்?

அது தேவையற்ற சட்டம் என்று அண்ணா விவாதம் செய்கிறார். (இவ்வளவுக்கும் அந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகமும் - தி.மு.க.வும் எதிர்நிலையில் இருந்த சூழல்).

"பாட்னா நகரத்தில் கிளர்ச்சி செய்யப்பட்ட நேரத்தில் காந்தியார் படத்தைக் கொளுத்தியிருக் கிறார்கள். நேருவுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்திருக் கிறார்கள். அரசியல் சட்டத்தைக் கிழித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நீங்களே அரசியல் சட்டத்தை ஏழு ஆண்டுகளுக்குள்ளாக பத்துத் தடவை கொளுத்தியிருக்கிறீர்கள்."

"அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் காரியத்தைத் தான் ரொம்ப நாகரிகமாகப் பத்துத் தடவை திருத்தியிருக்கிறீர்கள். ரொம்பப் புனிதமானது என்று போற்றப்படுகிற அந்தச் சட்டம் உங்களாலேயே திருத்தப்படுகிறது என்றால் என்ன? கொளுத்தப்பட்டது என்றுதான் ஆகிறது'' என்று அவையிலே எடுத்து வைத்தார் அண்ணா.

அதோடு நிறுத்தவில்லை அண்ணா அவர்கள்.

நீங்கள் சட்டத்தை நிறைவேற்றவிட்டாலும், 10 ஆயிரம் பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்றாண்டு அல்ல முப்பதாண்டல்ல சிறையில் இருக்கத் தயங்கமாட்டார்கள். நான் உங்களைப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.''

(தந்தை பெரியார் பற்றியும் திராவிடர் கழகத் தோழர்கள் பற்றியும் அண்ணாவின் உயர் மதிப்பீடு இது.)

பெரியார் அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தை தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழைய கால நடவடிக்கைகளை, உங்களுக்குள்ள தொடர்புகளையும் ஒருகணம் எண்ணிப் பாருங்கள்'' என்று ஜாதி ஒழிப்புக் கொள்கை நோக்கில் விவாதங்களை அடுக்கிச் சென்றார் அண்ணா.

மேலும் அண்ணா கேட்டார், 'காமராசரை எப்படி யெல்லாம் பாராட்டுகிறார் பெரியார்?

காமராசரின் அருங்குணங்களையெல்லாம் எடுத்துக் கூறுகிறார் பெரியார். சாதனைகளையெல்லாம் விளக்கிக் கூறுகிறார். அப்படிப்பட்ட பெரியாரை காமராஜர் ஏன் நேரில் சந்திக்கக் கூடாது? என்றும் கூடக் கேட்டுப் பார்த்தார் அண்ணா.

புதிய சட்டம் இப்பொழுது தேவையில்லை - தேவையெல்லாம் காமராஜர் - பெரியார் சந்திப்புதான் என்று ஆலோசனையையும் தந்தார் சட்டப் பேரவையில் அறிஞர் அண்ணா.

உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்து அறிஞர் அண்ணா சொன்னார்,

சட்டத்தைக் கொளுத்தினால் மக்கள் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் சொன்னார். பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவு செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

பேராசிரியர் சுப.வீ. அவர்களின் உரையில் ஒளி தரும் இந்த வரலாற்றுப் பரல்களை கோடிட்டு காட்டினார். சுப.வீ. அவர்களின் உரையில் முத்தாய்ப்பான ஒன்று - தந்தை பெரியார் அறிவித்த போராட்டம், அது தொடர்பான சட்டம்பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோது முதலமைச்சர் காமராஜ் அவையில் இருந்தார், ஆனாலும் எதுவும் பேசவில்லை. அண்ணா விவாதித்தார். இதில்  பெரியார், அண்ணா, காமராஜ் ஆகியோரை எந்தப் பார்வையில் பார்க்கவேண்டும். அவர்களின் உள்ளக்கிடங்கு எத்தகையது  என்ப தையும் நுட்பமாகக் கோடிட்டுக் காட்டினார் பேரா. சுப.வீ. அவர்கள்.

(நாளையும் தொடரும்)
-  விடுதலை நாளேடு, 28.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக